Return   Facebook   Zip File

I

பிரபுவே, எனதாண்டவரே, நீர், போற்றி மகிமைப் படுத்தப்படுவீராக! எந்த ஒரு நாவுமே, அதன் விவேகம் எத்துணை ஆழமானதாயினும், உம்மைப் பொருத்தமுற புகழ்ந்திட இயலாதென எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தும் எவ்வாறு யான் உம்மைக் குறித்துரைக்க இயலும்; அல்லது, மனித மனம் என்னும் பறவையின் பேராவல், எவ்வளவு மிகுதியாயிருப்பினும், எங்ஙனம் அது உமது மாட்சிமை, அறிவு என்னும் விண்ணுலகத்திற்கு உயர்ந்திடுவோம் என நம்பிக்கைக் கொண்டிட இயலும்.

என் இறைவா, சகலத்தையும் உணரக் கூடியவர் என உம்மை நான் வருணிப்பேனாயின், உணரும் சக்தியின் அதிசிறந்த உருவங்களானவர்களே உமது கட்டளையின் மூலமாகப் படைக்கப்பட்டோர் என ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படும் நிலையில் நான் என்னைக் காண்கின்றேன்.

நான் உம்மைச், சர்வ விவேகி எனப் புகழ்வேனாயின், விவேகத்தின் ஊற்றுகள் எனப்படுபவர்களே உமது விருப்பத்தின் இயக்கத்தினால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என உணர்கின்றேன்.

உம்மை நிகரற்ற ஒருவரென நான் பிரகடனஞ்செய்வேனாயின், விரைவில், ஒருமைத் தன்மையின் உள்ளார்ந்த சாராம்சங்களாகிய அவர்களே, உம்மால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எனவும், உமது கைவேலையின் அடையாளங்களே எனவும் கண்டு கொள்கின்றேன்.

உம்மை, சகலமும் அறிந்தவரென நான் ஆர்ப்பரிப்பேனாயின், அறிவின் சாரம் எனப்படுபவர்களே உமது படைப்பெனவும், உமது நோக்கத்தின் சாதனங்களெனவும், நான் ஒப்புக்கொள்ள வேண்டியவனாகின்றேன்.

மரணத்துக்குரிய மனிதன், உமது மர்மத்தினை வெளிப்படுத்தவோ, உமது மகிமையை வருணிக்கவோ, மேலும் கூறினால், உமது சாரத்தின் இயற் தன்மையினை அவன் மறைமுகமாகக்கூட குறிப்பிடவோ செய்திடும் முயற்சிகள் அனைத்திற்கும் அப்பால், அளவிடற்கரிய, அதி உயரிய நிலையில் நீர் இருந்து வருகின்றீர்.

எதனையெல்லாம் அத்தகைய முயற்சிகள் சாதிக்க இயன்றிடினும், அவை, உமது படைப்பினங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள வரம்புகளைக் கடந்திடுவோம் என்ற நம்பிக்கைக் கொண்டிடவே இயலாது; ஏனெனில் அம்முயற்சிகளே உமது கட்டளையினால் இயக்கப்பட்டும், உமது புதியது புனைதலெனும் ஆற்றலினாலுமே தோற்றுவிக்கப்படுகின்றன.

அதிபுனித மகான்கள், உம்மைப் புகழ்வதற்காக வெளிப்படுத்திடும் அதி உயரிய உணர்ச்சிகள், மனிதரிலேயே அதி புலமைவாய்ந்தோர் உமது இயல்பினைப் புரிந்து கொள்வதற்காகச் செய்யும் முயற்சியில் வெளிப்படுத்த முடிந்த அறிவுக் கூர்மை, ஆகியவை அனைத்துமே, உமது ஆட்சியுரிமைக்கே முழுமையாக உட்பட்டு, அம் மையத்தையே சுற்றிச் சுழல்கின்றவையாகும்; அவை உமது திருவழகினையே வழிபடுகின்றன.

அவை உமது எழுதுகோலின் அசைவினாலேயே இயக்கப்படுகின்றன.

இல்லை, என் இறைவா, உமது வெளிப்பாட்டின் எழுதுகோலானவருக்கும் படைப்புப் பொருள் அனைத்தின் சாராம்சத்திற்கும் இடையே, தேவையின் காரணமாக, எந்த நேரடித் தொடர்பும் இருக்கின்றதென எனது சொற்கள் பொருள்கொள்ளச் செய்திடுமாயின் அவற்றைத் தடைச் செய்திடுவீராக.

உம்முடன் தொடர்புடையோர் அத்தகையத் தொடர்புக் குறித்த புரியுந்திறனுக்கப்பால் கண்ணுக்கெட்டாத தொலைவில் உள்ளனர்! எல்லா ஒப்புவமைகளும் ஒத்தத் தோற்றங்களும் உமது வெளிப்பாடெனும் விருட்சத்தினைத் தகுதியுற வருணிக்கத் தவறிவிடுகின்றன; உமது மெய்ம்மையின் வெளிப்படுத்துதலையும், உமது பேரழகு என்னும் பகலூற்றினையும் புரிந்துகொள்வதற்கான ஒவ்வொரு வழியும் தடுக்கப்பட்டுள்ளது.

உமது பேரொளியானது, மரணத்துக்குரிய மனிதனானவன் உம்மைக் குறித்து ஒப்புதலளிப்பதற்கும் உம்மைச் சார்ந்துரைப்பதற்கும் உம்மை மகிமைப்படுத்துவதற்குமான அவனது புகழுரைக்கும் அப்பால் வெகு தொலைவில் உள்ளது! உமது மாட்சிமையையும், மகிமையையும் மேன்மைப்படுத்திட நீர் உமது ஊழியர்களுக்கு விதித்துள்ள கடமை எதுவாயினும், அது, அவர்கள்பால் உமது கருணையின் ஓர் அடையாளமேயாகும்; அதனால் அவர்கள் தங்களின் சொந்த, உள்ளார்ந்த மெய்ம்மைக்கு அளிக்கப்பட்ட ஸ்தானத்தின்பால் - தங்களின் சொந்த அகநிலையைக் குறித்த அறிவு என்னும் ஸ்தானத்தின்பால் - உயர்ந்தெழுந்திட உதவப்படக் கூடும்.

உமது மர்மங்களை ஆழங்காண்பதோ, உமது மேன்மையைப் பொருத்தமுற பாராட்டுவதோ, அது, உம் ஒருவரைத் தவிர வேறெவராலும் என்றுமே இயலாது.

தேடவியலாத நிலையிலும், மனிதர்களின் புகழ்ச்சிக்கு மேலான உயரிய நிலையிலும், நீர், என்றென்றும் இருந்து வருவீர்.

அணுகவியலாத, சர்வ வல்லவரான, சகலமும் அறிந்தவரான, புனிதருக்கெல்லாம் புனிதராகிய, உம்மைத் தவிர இறைவன் வேறெவருமிலர்.

II

அனைத்திற்கும் ஆரம்பம் ஆண்டவனின் அறிவு; யாவற்றின் நோக்கம், மண்ணுலகிலும், விண்ணுலகிலுமுள்ள அனைத்தையும் வியாபித்துள்ள தெய்வீக விருப்பம் என்னும் வானுலகிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டவை எவையோ, அவற்றை கண்டிப்பாகக் கடைப்பிடித்தல் வேண்டும்.

III

நினைவுக்கெட்டாத காலம் முதல் இறைவனின் தீர்க்கதரிசிகள் அனைவரின் நோக்கமாகவும், வாக்குறுதியாகவும், வரவேற்கப்பட்டுள்ள அவரது தூதர்களின் பேராவல்மிகு வெளிப்பாடு, எல்லாம்வல்லவரின் சர்வ வியாபகமான விருப்பம், அவரது கட்டுப்படுத்தவியலாத கட்டளை, ஆகியவற்றின் காரணமாக, இப்பொழுது மனிதரின்பால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகையதொரு வெளிப்பாட்டின் வருகை, எல்லாத் திருநூல்களிலும் முன்கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு முன்னறிவிக்கப்பட்டிருந்தும், எங்ஙனம் மனித இனம், அதன் பாதையிலிருந்து அப்பால் விலகிச் சென்றும் அதன் ஒளியிலிருந்து தன்னை மறைத்துக் கொண்டும் உள்ளது என்பதைப் பாருங்கள்.

கூறுவீராக: ஒரே உண்மைக் கடவுளின் நேசர்களே! கடுமுயற்சி செய்வீராக, அதனால், நீங்கள், அவரை உண்மையாக அடையாளங் கண்டு அறிந்து கொள்ளவும், அவர்தம் கட்டளைகளைப் பொருத்தமுறக் கடைப்பிடிக்கவும் கூடும்.

இவ்வெளிப்பாட்டின் கீழ்தான் ஒரு மனிதன், அதன்பொருட்டு ஒரே ஒரு துளி இரத்தம் சிந்துவானாகில், அவன் பெறும் கைம்மாறோ எண்ணற்ற சமுத்திரங்களாகும்.

நண்பர்களே, எச்சரிக்கையாய் இருங்கள்; அதனால், நீங்கள் அத்தகையதொரு மதிப்பிடவியலாத சலுகையினை இழந்திடவோ, அதன் விழுமிய நிலையினை அலட்சியப் படுத்திடவோ போகின்றீர்.

அதன் மக்களின் வீண் கற்பனைகள் புனைந்துள்ள வெறும் மாயையினால் ஏமாற்றப்பட்டுள்ள இவ்வுலகில் இதுகாறும் பலியிடப்பட்டும், இன்னும் தொடர்ந்து பலியிடப்பட்டும் வருகின்ற எண்ணற்ற உயிர்களை எண்ணிப் பாருங்கள்.

நீங்கள், உங்களின் இதயத்தின் ஆவலாகியவரை அடைந்து, நாடுகள் அனைத்தின் வாக்குறுதியான அவருடன் ஒன்றிணைந்ததற்காக இறைவனுக்கு நன்றி நவிலுங்கள்.

நீங்கள் அடைந்துள்ள ஸ்தானத்தின் நேர்மைத்தன்மையினை ஒரே உண்மைக் கடவுளின் உதவியைக் கொண்டு - அவரது மேன்மைப் போற்றப்படுமாக - பாதுகாத்து, அவரது சமயத்தை மேம்பாடடையச் செய்வது எதுவோ அதனைப் பற்றிக் கொள்ளுங்கள்.

மனிதனது ஸ்தானத்தின் மேம்பாட்டிற்கு எது சரியானதாகவும், உகந்ததாகவும் உள்ளதோ, மெய்யாகவே, அதனையே அவர், உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்.

இவ்வற்புதமிக்க நிருபத்தினை வெளியிட்ட, கருணையே மயமான அவர், மேன்மைப்படுத்தப் படுவாராக.

IV

இதுவே, இறைவனின் மிகச் சிறந்த சலுகைகள் மனிதர்மீது பொழியப்பட்டுள்ள நாள்; அவரது வலுமிக்கக் கிருபை எல்லாப் பொருட்களினுள்ளும் வியாபிக்கச் செய்யப்பட்டுள்ள நாள்.

தங்களிடையே உள்ள வேற்றுமைகளை அகற்றி மீண்டும் ஒன்றிணைந்து, பூரண ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் அவரது பாதுகாப்பு, அன்புப்பரிவு என்னும் விருட்சத்தின் நிழலின் கீழ் வாழ வேண்டியது உலக மக்கள் அனைவருக்கும் கடமையாக்கப் பட்டுள்ளது.

இந்நாளில் எவையெல்லாம் தங்கள் ஸ்தானங்களின் உயர்வுக்கு உகந்தவையோ, எவையெல்லாம் தங்களின் மிகச் சிறப்பான நலன்களை மேம்பாடுறச் செய்பவையோ அவற்றைப் பற்றிக்கொள்வது அவர்களுக்குப் பொருத்தமானது.

ஒளிமயமானவரின் எழுதுகோலினால் நினைவு கூரப்படுவோர் மகிழ்வெய்துவர்.

ஆராய்ந்து அறிந்திடவியலாத எமது கட்டளையின் பயனாக, எம் மனிதரின் பெயர்களை யாம் மறைத்திட விரும்பியுள்ளோமோ அம் மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டோர் ஆவர்.

எமது பார்வையில் ஏற்றுக்கொள்ளத்தக்கது எதுவோ அதனை நிறைவேற்றுவதற்காக மனிதர் அனைவரும் கிருபையுடன் உதவப்பட ஒரே மெய்ம்மைக் கடவுளை இறைஞ்சுவீராக.

விரைவில், தற்போதைய அமைப்புமுறை சுருட்டப்பட்டு, அதற்குப் பதிலாகப் புதியதொன்று விரிக்கப்படும்.

மெய்யாகவே, உங்களின் இறைவன் உண்மையே பேசுகின்றார்; கண்ணுக்குப் புலனாகாப் பொருள்களையெல்லாம் அறிந்தவர் அவரே.

V

இதுவே கடவுளின் கருணை என்னும் சமுத்திரம் மனிதர்பால் வெளிப்படுத்தப்பட்டுள்ள நாள்; அவரது அன்புக் கருணை என்னும் பகல் நட்சத்திரம் அவர்கள் மீது அதன் சுடரொளியினை வீசச் செய்துள்ள நாள்; அவரது வள்ளன்மைமிகு தயை என்னும் மேகங்கள், மனித இனம் முழுவதன் மீதும் அவற்றின் நிழலை விழச் செய்துள்ள நாள்; அன்பு, சகோதரத்துவம் என்னும் உற்சாகமூட்டும் தென்றல், மற்றும் நட்பு, ஈகை, என்னும் ஜீவநீரின் மூலம், மனம் தளர்ந்தோருக்கு மகிழ்வும் உற்சாகமும் ஊட்ட வேண்டிய நேரம் இதுவே.

கடவுளின் நேசர்கள் எங்கெல்லாம் ஒன்றுகூடினும், எவரையெல்லாம் சந்தித்திடினும், இறைவன்முன் அவர்களின் மனோபாவமும், அவரது புகழையும் மேன்மையையும் போற்றிப் பாடிடும் விதம், அவர்களின் பணிவையும் பவ்வியத்தையும் புலப்படுத்துவதாய் இருக்கவேண்டும்; அதனால், அவர்களின் பாதத்தினடியில் கிடக்கும் ஒவ்வோர் அணுத்துகளும் அவர்களின் பக்தியின் ஆழத்திற்கு ஆதாரமளிப்பதாய் இருத்தல் வேண்டும்.

இப்புனித ஆன்மாக்களிடையே நடத்தப்படும் உரையாடல் அத்துணை அறிவூட்டப்பெற்றச் சக்தியினைப் பெற்றிருக்கவேண்டும்; அதன் தாக்கத்தினால் அதே அணுத்துகள்கள் சிலிர்ப்புற்றிடும்.

இவ்வுலகினில் அவர்கள் நடந்து கொள்ளும் முறை, அவர்களின் காலடிபடும் தரையானது, “நான் உங்களிலும் மேலாக விரும்பவேண்டிய ஒன்று; ஏனெனில், விவசாயி என்மீது சுமத்தும் பாரத்தினை எத்துணைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்கின்றேன் என்பதைப் பாருங்கள்.

அருளுக்கெல்லாம் ஊற்றாகிய அவர் என்னிடம் ஒப்படைத்துள்ள அருள்பேற்றினை இடைவிடாது எல்லாப் படைப்பினங்களுக்கும் அளித்திடும் கருவியாகியுள்ளேன்.

எனக்கு இத்துணைப் பெருமை வழங்கப்பட்டிருந்தபோதும் படைப்பனைத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அச்செல்வத்திற்கான எண்ணற்ற ஆதாரங்கள் என்னிடம் இருந்தபோதும், - எனது பணிவின் அளவினையும், நான், மனிதர்களின் பாதங்களின் அடியில் என்னை மிதிபடுவதற்கு எந்தளவு பூரண தாழ்மையுடன் அனுமதிக்கின்றேன் என்பதையும் பாருங்கள்” என்ற வார்த்தைகளை அது தங்களை நோக்கிக் கூறிடாதவாறு அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருவர் மற்றவரிடத்தில் பொறுமையும் தர்ம சிந்தையும் அன்பும் காட்ட வேண்டும்.

உங்களிடையே ஒருவர் ஓர் உண்மையினைப் புரிந்துகொள்ளச் சக்தியற்றோ, அதனைப் புரிந்துகொள்ள முயன்றுகொண்டோ இருப்பாராயின், அவருடன் பேசும்பொழுது, மிகுந்த அன்புணர்ச்சியும் நல்லெண்ணமும் காட்ட வேண்டும்.

நீங்கள் அந் நபரைவிட சிறிதளவேனும் உயர்ந்தவர் என்றோ, அதிகமான இயற்கையாற்றல்களைப் பெற்றிருக்கின்றோம் என்றோ உங்களை உயர்வாகக் கருதிக்கொள்ளாது, உண்மையைக் கண்டு ஏற்றுக் கொள்ள அவருக்கு உதவுங்கள்.

இந்நாளில் இறைவன் மனிதனுக்காகப் பொழிந்திடும் அருள் வெள்ளத்தில் தனது பங்கை அடைய வேண்டியதே அவனது முழுக்கடமையாகும்.

ஆகவே, எவருமே கொள்கலன் பெரியதோ சிறியதோ என எண்ண வேண்டியதில்லை.

சிலரின் பங்கு ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்கக் கூடும்; வேறு சிலரின் பங்கு ஒரு கிண்ணத்தை நிரப்பக் கூடும்; மற்றும் சிலரின் பங்கு ஒரு “காலன்” அளவும் இருக்கக் கூடும்.

இந்நாளில், எது இறைவனின் சமயத்தினை நன்கு வளர்ச்சியடையச் செய்யுமோ, அதனையே ஒவ்வொருகண்ணும் தேட வேண்டும்.

நித்திய மெய்ம்மையான அவரே எனக்குச் சாட்சி பகர்கின்றார்! இந்நாளில், இறைவனின் நேசர்களிடையே கருத்து வேறுபாடு, பூசல், சச்சரவு, பகைமை, அக்கறையின்மை ஆகியவைப்போன்று, இச்சமயத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை வேறெதுவுமே இருக்க முடியாது.

இறைவனின் சக்தியையும் அவரது மாட்சிமையின் உதவியையும் கொண்டு அவற்றிலிருந்து தப்பி விரைந்தோடிடுங்கள்.

சர்வ விவேகியான, சகலத்தையும் அறிந்தவரான, ஒருமைப்படுத்துபவரும் சர்வஞானியும் சர்வவிவேகியுமான, அவரது திருநாமத்தினால் மனிதரின் உள்ளங்களை ஒன்றிணைக்கக் கடும் முயற்சி செய்யுங்கள்.

அவரது பாதையில் ஆற்றிடும் சேவையின் காரணமாக வெளிப்படும் சுவையினை அனுபவிக்கவும், அவர் பொருட்டுக் காட்டும் தாழ்வு, பணிவு ஆகியவற்றிலிருந்து தோன்றும் இனிமையினில் பங்குபெறவும் ஒரே மெய்க்கடவுளாகிய அவரிடம் இறைஞ்சுங்கள்.

நீங்கள் உங்களையே மறந்து, உங்கள் பார்¬வையை அடுத்தவர்பால் திருப்புங்கள்.

மனிதரின் கல்வியினைப் பேணி வளர்க்கக்கூடியவை எவையோ அவற்றில் உங்களது சக்தியைப் பயன்படுத்துங்கள்.

இறைவனிடமிருந்து எதுவும் என்றும் மறைக்கப்படவே முடியாது.

அவரது வழியினை நீங்கள் பின்பற்றுவீராயின் அவரது கணித்தற்கரிய, அழிவற்ற, அருள் உங்கள் மீது பொழியப்படும்.

உலகங்கள் அனைத்தின் பிரபுவானவரின் அசையும் எழுதுகோலிலிருந்து வெளிப்பட்டு வந்துள்ள வாசகங்களின் பிரகாசமிக்க நிருபம் இதுவே.

அதனை உங்கள் உள்ளத்தில் ஆழ்ந்து சிந்தித்து, அதன் கட்டளைகளைப் பின்பற்றுவீராக.

VI

இம்மண்ணுலகில் பல்வேறு மக்களும் இனங்களும் எவ்வாறு வாக்களிக்கப்பட்டவருக்காகக் காத்துக் கொண்டிருந்தனர் என்பதைப் பாருங்கள்.

மெய்ம்மைச் சூரியனான அவர் தம்மை வெளிப்படுத்திக்கொண்டவுடனே, எவருக்கு இறைவன் வழிகாட்ட விரும்பினாரோ, அவர்களைத் தவிர, மற்றனைவரும் அவரிடமிருந்து அப்பால் திரும்பிக் கொண்டனர்.

இந்நாளில், ஒவ்வோர் உண்மையான நம்பிக்கையாளரும் அடையக்கூடிய உயரிய ஸ்தானத்தினை மறைத்திருக்கும் திரையினை நீக்க யாம் துணியவில்லை; ஏனெனில், அத்தகையதொரு திரைநீக்கம் தூண்டிடும் பேரானந்தம் ஆன்மாக்கள் சிலரை மயக்கமுற்று மாளவும் செய்திடும்.

பாயானின் இதயமும் மையமுமாகிய அவர் எழுதியுள்ளார்: “வரவிருக்கும் வெளிப்பாட்டின் ஆற்றல்களைத் தன்னுள் வைத்திருக்கும் கருவானது என்னைப் பின்பற்றுவோர் அனைவரின் கூட்டுச் சக்தியைவிட அதி மேலான சக்தியைப் பெற்றுள்ளது.

” அவர் மேலும் கூறுகின்றார்: “எனக்குப்பின் வரவிருக்கும் அவருக்கு யான் வழங்கியுள்ள புகழுரைகள் அனைத்திலும் அதி உயர்வானது இதுவே: எனது வார்த்தைகள் எவையுமே அவரைப் பொருத்தமுற வருணிக்க இயலாது என்பது மட்டுமன்றி, பாயான் எனும் எனது திருநூலில் அவரைக் குறித்துரைக்கும் எதுவுமே அவரது சமயத்திற்கு நியாயமான மதிப்பீடாகாது என்பது எனது எழுத்துவடிவிலான ஒப்புக்கொள்ளலாகும் .

” எவரொருவர் இம் மேன்மைமிகு வார்த்தைகளினுள் புதைந்து கிடக்கும் அச் சமுத்திரங்களின் ஆழங்களை ஆராய்ந்து, அவற்றின் உட்பொருளினைப் புரிந்துகொண்டாரோ, அவர், இவ்வல்லமை பொருந்திய, இவ்வதிவிழுமிய, அதிபுனிதமான வெளிப்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள சொற்களால் வருணிக்கவும் இயலாத பேரொளியினின்று ஒரு மங்கிய ஒளியினை மட்டுமே கண்டு கொண்டவர் எனக் கூறப்படலாம்.

அத்துணை உயர்வான வெளிப்பாட்டின் சிறப்பிலிருந்து அதன் விசுவாசமிக்க நம்பிக்கையாளர்களுக்கு வழங்கப்படவிருக்கும் பெருமதிப்பினை நன்கு கற்பனைச் செய்திட இயலும்.

ஒரே உண்மைக் கடவுளின் நேர்மைத்தன்மை சாட்சியாக! இவ்வான்மாக்களின் மூச்சே உலகப் பொக்கிஷங்கள் அனைத்தையும்விட மிக்க மதிப்பு வாய்ந்ததாகும்.

அதனை அடைந்திட்ட மனிதர் மகிழ்வெய்துவர்; கேளாதோர் துன்பந்தான் அனுபவிப்பர்.

VII

மெய்யாகவே யான் கூறுகின்றேன், மனித இனம், வாக்களிக்கப்பட்டவரின் திருவதனத்தைக் கண்ணுற்று, அவரது குரலினைச் செவிமடுத்திடும் நாள் இதுவே.

இறைவனின் குரல் எழுப்பப்பட்டு விட்டது; அவரது திருவதனத்தின் பிரகாசம் மனிதர் மீது ஒளிரச் செய்யப்பட்டுவிட்டது.

ஒவ்வொரு மனிதனும், பயனற்ற வார்த்தை ஒவ்வொன்றையும் தனது இதயமெனும் ஏட்டிலிருந்து துடைத்தொழித்துவிட்டுப், பின், திறந்த, பாரபட்சமற்ற மனதுடன், அவரது திருவெளிப்பாட்டின் அடையாளங்களையும், அவரது தூதுப்பணியின் நிரூபணங்களையும், அவரது பேரொளியின் சின்னங்களையும் கூர்ந்து நோக்குவது ஏற்புடையதாகும்.

உண்மையாகவே, மேன்மைமிக்கது இந்நாள்! அதனை, ஆண்டவனின் நாள் என எல்லாத் திருமறைகளிலும் குறிப்பிட்டிருப்பதுவே அதன் பெருமைக்குச் சான்றாகும்.

ஒவ்வொரு தீர்க்கதரிசியின் ஆன்மாவும், ஒவ்வோர் இறைத்தூதரின் ஆன்மாவும் இவ்வற்புதமான நாளுக்காக ஆவலுடன் ஏங்கியிருந்திருக்கின்றது.

அவ்வாறே, உலகின் பல்வேறு இனங்களெல்லாம் அதனை அடைய ஆவலுற்றிருக்கின்றன.

எனினும், அவரது வெளிப்பாடெனும் பகல் நட்சத்திரமானது இறைவனின் நல்விருப்பமெனும் விண்ணுலகில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட உடனே, இறைவன், எவரை வழிநடத்த விரும்பினாரோ, அவர்களைத் தவிர, மற்றனைவரும், வாயடைத்துப்போயும் அக்கறையற்றும் காணப்பட்டனர்.

என்னை நினைவிற் கொண்டோரே! மிக்க வேதனை அளிக்கும் திரையானது உலக மக்களை அவரது பேரொளியிலிருந்து மறைத்துள்ளது; அவரது அழைப்பினைச் செவிமடுப்பதிலிருந்தும் தடுத்துள்ளது.

ஒற்றுமையெனும் ஒளி உலகமுழுவதையும் சூழவும், “அரசு ஆண்டவனுடையதே” எனும் முத்திரை அதன் மக்கள் அனைவரின் நெற்றியில் பொறிக்கப்படவும் இறைவன் அருள்புரிவாராக.

VIII

இறைவனின் நேர்மைத்தன்மை சாட்சியாக! இறைவன் தனது தூதர் படை, தீர்க்கதரிசிகள் படை, மற்றும் அதற்கும் அப்பால் அவர்தம் புனிதமிக்க, மீறத்தகாத சரணாலயத்தைக் காவல் புரிந்து கொண்டிருப்போர், தெய்வீகக் கூடாரவாசிகள் மற்றும் பேரொளி என்னும் தேவாலயத்தில் வசிப்போர் அனைவரின் இதயங்களையும் மெய்ப்பித்துள்ள நாள்கள் இவைதாம்.

எனவே, இறைவனுடன் பங்காளிகளாய்ச் சேர்ந்துள்ளோர் ஆட்படுத்தப்படவிருக்கும் சோதனையின் உக்கிரம் எத்துணைக் கடுமையானதோ!

IX

ஹ¨ஸேய்னே! குறிப்பிட்ட மனித இனங்கள் சிலவும் நாடுகளும் இமாம் ஹ§சேய்னின் மறுவருகையினைப் பேராவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்ததை எண்ணிப் பாரும்.

காயிம் அவர்களுக்குப் பின் அவரது வருகை, இறைவனின் - அவரது புகழ் மேன்மைப்படுத்தப் படுமாக - தேர்ந்தெடுக்கப்பட்டோரினால் கடந்த காலத்தில் தீர்க்கதரிசனமாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.

மேலும், இறைவனது எண்ணிறந்த கிருபையின் பகலூற்றானவர் அவதரிக்கும்போது, வாக்களிக்கப்பட்டவர் ஏற்றவிருக்கும் புனித விருதுக்கொடியின் கீழ், காயிம் உட்பட, அனைத்துத் தீர்க்கதரிசிகளும் திருத்தூதர்களும் ஒன்று கூடிடுவரென இப் புனிதர்கள் அறிவித்துள்ளனர்.

அந் நேரம் இப்பொழுது வந்து விட்டது.

இவ்வுலகம் அவரது வதனத்தின் பிரகாசமிக்க பேரொளியினால் ஒளிரச் செய்யப் பட்டுள்ளது.

இருந்தும், அதன் மக்கள் அப்பாதையிலிருந்து எத்துணைத் தூரம் விலகிச் சென்றுள்ளனர் என்பதைப் பாருங்கள்! திருநாமங்களின் பிரபுவானவரின் சக்தியின் வாயிலாகத் தங்களின் வீண் கற்பனைகள், இழிவான ஆசைகள் ஆகிய விக்கிரகங்களை உடைத்துச் சிதறடித்துப் பின்னர், மெய்யுறுதி என்னும் நகருக்குள் பிரவேசித்தோரைத் தவிர மற்றெவருமே அவரில் நம்பிக்கைக் கொண்டாரிலர்.

இந் நாளிலும், சுயஜீவியான அவரது திருநாமத்திலும் அவரது திருவெளிப்பாடெனும் நனிசிறந்த மதுரசத்தின் அடைப்புமுத்திரை உடைக்கப்பட்டுள்ளது.

அதன் அருள், மனிதரின் மீது பொழியப்படுகின்றது.

உனது கிண்ணத்தை நிரப்பி, அதிபுனிதரான, முற்றும் போற்றப்படுபவரான, அவர் பெயரில், பருகுவாயாக.

X

உலகத்தின் மக்களுக்கும் இனங்களுக்கும் முன்விதிக்கப்பட்ட அந் நேரம் இப்பொழுது வந்துவிட்டது.

வேத நூல்களில் குறிக்கப்பட்டுள்ளவற்றிற்கு இணங்க, இறைவனின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுவிட்டன.

சையோனிலிருந்து இறைவனின் சட்டம் அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஜெருசலமும் அதனைச் சூழ்ந்துள்ள மலைகளும் அவரது வெளிப்பாட்டின் ஒளியினால் நிரப்பப்பட்டுள்ளன.

ஆபத்தில் உதவுபவரும் சுயஜீவியுமான ஆண்டவனின் திருநூல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவற்றைத், தனது உள்ளத்தினில் வைத்து ஆழச்சிந்திக்கும் மனிதன் மகிழ்வெய்துவான்.

இறைவனின் அன்புக்குப் பாத்திரமானோரே, இதனைக் குறித்துத் தியானித்து, அவரது திருவாக்கின்பால் கவனஞ் செலுத்துவீராக.

அதனால் நீங்கள், அவரது கிருபை, கருணை ஆகியவற்றின் காரணமாகத் திடப்பற்றெனுந் தெளிவான நீரூற்றிலிருந்து நிரம்பப் பருகி அவரது சமயத்தில் நிலையான, அசைக்கவியலாத பருவதத்தைப் போல் ஆவீராக.

ஐசாயாவின் திருநூலில் எழுதப்பட்டுள்ளது: “பிரபுவின்பாலுள்ள அச்சத்தினாலும், அவரது மாட்சிமையின் புகழொளியின்பொருட்டும் பாறையினுள் நுழைந்து, உங்களைப் புழுதியினுள் மறைத்துக் கொள்ளுங்கள்.

” இத் திருவாசகப் பகுதியினைத் தியானிக்கும் எந்தவொரு மனிதனும் இச் சமயத்தின் உன்னத நிலையை அங்கீகரிக்கத் தவறவோ, இறைவனுக்கே சொந்தமான இந் நாளின் மேன்மைமிக்கத் தன்மையின்பால் சந்தேகங் கொள்ளவோ இயலாது.

அத் திருவாசகத்தைத் தொடர்ந்து இவ்வார்த்தைகள் வருகின்றன: “பிரபுவாகிய அவர் மட்டுமே அந் நாளில் மேன்மைப்படுத்தப்படுவார்.

” அதி உயரிய எழுதுகோல் எல்லாத் தெய்வீகத் திருநூல்களிலும் மேன்மைப்படுத்தியுள்ள நாள் இதுவே.

அவற்றுள் அவரது தெய்வீகத் திருநாமத்தின் மகிமையினைப் பிரகடனஞ் செய்யாத வாசகமே கிடையாது.

மேன்மைமிக்க இக் கருப்பொருளின் உயர்வுக்குச் சாட்சியமளிக்காத திருநூலே கிடையாது.

இத் தெய்வீக நூல்களிலும் திருவாசகங்களிலும் இவ் வெளிப்பாடு குறித்துக் கூறப்பட்டுள்ள அனைத்தையும் யாம் எடுத்துரைக்க முயல்வோமாயின், இந் நிருபம் பரிமாணத்தின் அசாத்திய அளவை எட்டிவிடும்.

இந்நாளில், ஒவ்வொரு மனிதனும், இறைவனின் எண்ணிறந்த வள்ளன்மைகளில் தனது முழு நம்பிக்கையையும் வைத்து, மிகுந்த விவேகத்துடன் எழுந்து, இச் சமயத்தின் மெய்க்கூற்றுகளைப் பரப்ப வேண்டியது கடமையாகின்றது.

அப்பொழுதுதான் அவரது வெளிப்பாடு எனும் காலை ஒளி, இவ்வுலகம் முழுவதையும் சூழ்ந்திடும்.

XI

கருணையின் நறுமணங்கள் படைப்புப் பொருட்கள் அனைத்தின் மீதும் வீசிட்ட அந் நாளுக்கே, கடந்த காலங்களும் நூற்றாண்டுகளும் போட்டியிடவியலாத அந்நாளுக்கே, நாள்களில் தொன்மையானவரது வதனம் அவர்தம் புனித ஆசனத்தின்பால் திரும்பியுள்ள அந்நாளுக்கே, எல்லா மகிமையும் உரியதாகுக.

அதன் விளைவாக, எல்லாப் படைப்பினங்களின் குரல்களும், அவற்றுக்கப்பாலும், உயர்விலுள்ள திருக்கூட்டத்தினரின் குரல்களும், உரக்கக் கூவியழைத்தது கேட்கப்பட்டது: “கார்மெலே, நீ விரைந்திடுவாயாக! ஏனெனில், அதோ, திருநாமங்கள் என்னும் இராஜ்யங்களின் ஆட்சியாளரும், விண்ணுலகங்களின் அமைப்பாளருமான இறைவனது வதனத்தின் ஒளி உன் மீது எழச்செய்யப் பட்டுள்ளது.

” “மகிழ்ச்சிப் பரவசத்தினால் ஆட்கொள்ளப்பட்டுத், தனது குரலை உயர்த்தி அவள் (கார்மெல்) இவ்வாறு வியப்புக் குரலெழுப்பினாள்: “உமது பார்வையை என் மீது பதித்துள்ளீர் என்பதனாலும், எனக்கு உமது அருட்கொடையினை அளித்துள்ளீர் என்பதனாலும், என்னை நோக்கி உமது திருப்பாதங்களை அடியெடுத்து வைக்கச் செய்துள்ளீர் என்பதனாலும் எனது வாழ்வே உமக்கு அர்ப்பணிக்கப்படுமாக.

நித்திய வாழ்விற்கு மூலமுதலானவரே, உம்மிடமிருந்து பிரிவு என்னை அழித்துள்ளது; உமது முன்னிலையிலிருந்து நெடுந் தொலைவு எனது ஆன்மாவைச் சுட்டெரித்துள்ளது.

என்னை உமது அழைப்பிற்குச் செவிசாய்க்க வைத்தமைக்காகவும், உமது காலடிகளால் என்னைச் சிறப்பித்தமைக்காகவும், உமது நாளின் ஜீவாதாரமான நறுமணத்தினாலும், உமது மக்களிடையே எக்காள அழைப்பாகக் கட்டளையிட்ட உமது எழுதுகோலின் கிரீச்சுக்குரலினாலும், என்னை உயிர்ப்புறச் செய்தமைக்காகப் புகழனைத்தும் உமக்கே உரியதாகுக.

தடுப்பதற்கியலாத உமது சமயம் வெளிப்படுத்தப்பட வேண்டிய நேரம் வந்தவுடனே, நீர், உமது திருஆவியின் சுவாசத்தின் மூச்சு ஒன்றினை உமது எழுதுகோலினுள் ஊதியருளினீர்.

அதோ பாருங்கள், படைப்பு முழுவதும் தனது அடித்தளம் வரை அதிர்ச்சியுற்றுப், படைப்புப்பொருள் அனைத்தின் உடைமையாளராகிய அவரது கருவூலங்களுள் மறைந்து கிடக்கும் மர்மங்களை அது மனிதகுலத்திற்கு வெளிப்படுத்தியது.

’ அவளது (கார்மெலினது) குரல் அவ் வதிவுயரிய ஸ்தலத்தினை அடைந்தவுடனே யாம் பதிலுரைத்தோம்: ‘கார்மெலே, உன் பிரபுவுக்கு நன்றி செலுத்துவாயாக.

எனது முன்னிலையெனும் சமுத்திரம் உனது முகத்திற்கு முன் அலைபொங்கி எழுந்து உனது கண்களையும், படைப்பனைத்தின் கண்களையும் மலர்ச்சியுறச்செய்து, கண்ணுக்குப் புலனாகும், புலனாகா அனைத்தையும் களிப்பூட்டிக் கொண்டிருக்கும் வேளையில், என்னிடமிருந்து பிரிவு என்னும் தீ உன்னை வேகமாக எரித்துக்கொண்டிருந்தது.

மகிழ்வுறுவாயாக; ஏனெனில், இந்நாளில் இறைவன், தனது அரியாசனத்தை உன்மீது எழுப்பியுள்ளார்.

உன்னைத் தனது அடையாளங்களின் உதய பீடமாகவும், தனது திருவெளிப்பாட்டிற்கான ஆதாரங்களின் பகலூற்றாகவும் ஆக்கியுள்ளார்.

உன்னை வலம் வருபவரும், உனது மகிமையின் வெளிப்பாட்டைப் பிரகடனம் செய்பவரும், உனது பிரபுவுமான இறைவன் உன்மீது பொழிந்துள்ள கொடையை எடுத்துரைப்பவரும் நலம் பெறுவராக.

ஒளிமயமான உனது தேவரின் பெயரில், இறவாமை என்னும் கிண்ணத்தைப் பற்றிக் கொண்டு, அவருக்கு நன்றி கூறுவாயாக.

உன் மீதுள்ள கருணையின் அடையாளமாக, அவர், உனது கவலையை மகிழ்ச்சியாக மாற்றி, உனது துயரத்தைப் பேரின்பக் களிப்பாக உருமாற்றம் செய்துள்ளார்.

எது தனது அரியாசனமாக ஆக்கப்பட்டுள்ளதோ, எதன் மீது தனது காலடிகள் பட்டுத் தனது இருத்தலினால் கௌரவிக்கப்பட்டுள்ளதோ, எதிலிருந்து அவர் தனது அழைப்பை விடுத்தாரோ, எதன் மீது தனது கண்ணீரைச் சிந்தினாரோ, அந்த ஸ்தலத்தை, மெய்யாகவே அவர், நேசிக்கின்றார்.

“கார்மெலே, ஸையோனை நோக்கி உரக்கக் கூவி, இம்மகிழ்ச்சிமிக்க செய்தியினை அறிவிப்பாயாக: அழிவுறும் தன்மையுடைய கண்களுக்கு மறைபொருளாய் இருந்த அவர் வந்து விட்டார்! அனைத்தையும் வெற்றிகொள்ளவல்ல அவரது அரசு வெளிப்படுத்தப்பட்டு விட்டது; யாவற்றையும் சூழ்ந்திடவல்ல அவரது புகழொளி தெளிவாகிவிட்டது.

கவனமாய் இரு, இல்லையெனில், தயங்கிடவோ நின்றிடவோ போகின்றாய்.

இறைவனின் அன்புக்குப் பாத்திரமானோர், தூய உள்ளங் கொண்டோர், அதி உயரிய வான்படையினர் ஆகியோர், விண்ணுலகினின்று இறங்கி வந்துள்ள இறைவனின் மாநகரை, பக்தியுடன் சுற்றி வரும் அத்தெய்வீகக் காபாவை, வலம் வந்திட விரைவாயாக.

எந்தத் திருவெளிப்பாட்டின்பால் ஸைனாயின் இதயம் ஈர்க்கப்பட்டதோ, எதன் பெயரில் எரியும் புதர் “மண்ணுலக, விண்ணுலக இராஜ்யங்கள், பிரபுகளுக்கெல்லாம் பிரபுவாகிய இறைவனுக்கே உரியதாகும்,” என அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றதோ, அவ் வெளிப்பாட்டின் மகிழ்ச்சிமிகு நற்செய்திகளைப் பூமியின் மேலுள்ள ஒவ்வோர் இடத்திலும் அறிவித்திடவும், அதன் நகரங்கள் ஒவ்வொன்றிற்கும் கொண்டு செல்லவும் எவ்வாறு நான் ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்.

மெய்யாகவே, இதுவே இவ்வறிவிப்பினால் தேசமும் கடலும் மகிழ்ச்சியுறும் நாள்; இறைவன், அழிவுக்குரிய மனதிற்கும் உள்ளத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு வள்ளன்மையின் வாயிலாக, வெளிப்படுத்தப்படுவதற்கென நியமிக்கப்பட்டுள்ள எந்த நாளுக்காக அப்பொருள்கள் தயார்ச்செய்து வைக்கப்பட்டிருந்தனவோ, அந்த நாள் இதுவே.

இன்னும் சிறிது காலத்திலேயே இறைவன் தனது மரக்கலத்தை உன் மீது செலுத்தி, திருநாமங்கள் என்னும் திருநூலில் மொழியப்பட்டுள்ள பஹாவின் மக்களைத் தோன்றச் செய்திடுவார்.

எவரது நாமத்தின் உச்சரிப்பின் போது மண்ணுலகின் அணுக்கள் எல்லாம் நடுக்கமுறச் செய்யப்பட்டனவோ, எவரது அறிவினுள் உறையிடப்பட்டும், வல்லமை என்னும் கருவூலத்தினில் மறைத்தும் வைக்கப்பட்டுள்ள அதனை வெளிப்படுத்திட உன்னதத்தின் நா உந்துதல் பெற்றதோ, அவர், மனித இனம் அனைத்தின் பிரபுவான அவர், புனிதப்படுத்தப்படுவாராக.

வல்லமைமிக்கவர், எல்லாம் வல்லவர், அதி உயர்வானவர் என்னும் தனது பெயரின் வலிமையின் வாயிலாக, மெய்யாகவே, அவர் விண்ணுலகங்களின் மீதும் மண்ணுலகத்தின் மீதும் உள்ள அனைத்திற்கும் ஆட்சியாளராவார்.

XII

மனிதர்களே, தெய்வீக நீதியின் நாள்களின் வருகையினை எதிர்ப்பார்க்கும் பொருட்டு நீங்கள் உங்களை எழுச்சிபெறச் செய்து கொள்வீராக; ஏனெனில், வாக்களிக்கப்பட்ட நேரம் வந்துவிட்டது.

கவனமாயிருங்கள், இல்லையெனில், அதன் முக்கியத்துவத்தினை உணரத் தவறி, தவறிழைப்போரின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டிடப் போகின்றீர்.

XIII

கடந்த காலத்தைக் கருத்தில் கொள்ளுங்கள்.

புனித உருவில் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைவனுடைய அவதாரங்களின் வருகைக்காக உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் உட்பட, எத்துணைப் பேர் ஏக்கத்தோடு காத்திருந்துள்ளனர்.

எத்துணை முறை அவரது வருகையை எதிர்ப்பார்த்திருந்தனர்.

இறைவனின் கருணை என்னும் தெய்வீகத் தென்றல் வீசி, வாக்குறுதியளிக்கப்பட்ட திருவழகு, தமது மறைவுநிலை என்னும் திரைக்குப் பின்னாலிருந்து வெளிவந்து உலகத்திற்கெல்லாம் காட்சியளிக்க வேண்டும் என்று எவ்வாறு அவர்கள் அடிக்கடி பிரார்த்தித்து வந்துள்ளனர்.

ஆனால், அருட்கதவு திறந்து, தெய்வீக வள்ளன்மை என்னும் மேகம் மனித இனத்தின்பால் பொழிந்து, பார்வைக்கப்பாற்பட்டவரின் ஒளி விண்ணுலகச் சக்தியெனும் அடிவானத்தில் ஒளிர்ந்தவுடனே, அவர்களனைவரும் அவரை மறுத்து, அவரது திருமுகத்திலிருந்து, அதாவது இறைவனின் திருமுகத்திலிருந்தே, அப்பால் திரும்பிக்கொண்டனர்.

சிந்திப்பீராக, அத்தகைய செயல்களுக்குரிய நோக்கம் எதுவாக இருந்திருக்கக் கூடும்? சர்வ மகிமையாளருடைய அழகின் வெளிப்பாட்டாளர்களின் மீது அத்தகைய நடத்தையை மேற்கொள்வதற்கு அவர்களைத் தூண்டியது எதுவாக இருந்திருக்கக் கூடும்? கடந்த காலங்களில் அம் மக்களது மறுப்புக்கும், எதிர்ப்புக்கும் எவையெல்லாம் காரணமாயிருந்தனவோ, அவையே, இப்பொழுது இக் காலத்திய மக்களின் நெறிபிறழ்வுக்கும் காரணமாக அமைந்துள்ளன.

கடவுளுக்கான சாட்சியம் பூரணமற்றது, எனவே மக்களின் மறுப்புக்கு அதுவே காரணமாக அமைந்தது என வாதிடுவது வெளிப்படையான தெய்வ நிந்தனையாகும்.

அவர், தனது படைப்பினங்களின் வழிகாட்டலுக்காக அனைத்து மனிதர்களின் மத்தியிலிருந்து ஓர் ஆன்மாவைத் தனித்துத் தேர்வுச்செய்து, ஒரு புறத்தில், அவரது தெய்வீகச்சாட்சியத்தினை அவருக்குப் பூரணமாக வழங்காது தடுத்துவிட்டு, மறுபுறத்தில் அவ்வாறு தேர்வுச்செய்யப்பட்டவரிடமிருந்து அப்பால் திரும்பியதற்காக அவரது மக்களைக் கடுமையாகத் தண்டிப்பதானது சகல வள்ளன்மையாளரின் கிருபையிலிருந்தும் அவரது அன்பான தெய்வீகம், மேன்மைமிகு கிருபை ஆகியவற்றிலிருந்தும் இச்செயல் எந்தளவு தூரமானது! இல்லை, அனைத்து உயிரினங்களின் பிரபுவானவரின் அளவிறந்த கொடைகள் எல்லாக் காலங்களிலும் அவரது தெய்வீகச் சாராம்சத்தின் அவதாரங்களின் வழி மண்ணுலகையும், அதில் வாழும் அனைத்தையும் சூழ்ந்தே வந்துள்ளன.

அவரது கிருபை மனிதகுலத்தின் மீது பொழிவதிலிருந்து ஒரு கணங்கூட நிறுத்தி வைக்கப்படாததுமன்றி, அவரது அன்புப் பரிவு என்னும் மழை அதன் மீது பொழிவதிலிருந்து தடுக்கப்படவுமில்லை.

முடிவாக, ஆணவம், செருக்கு என்னும் பாதையில் பயணஞ்செய்து, தொலைவு என்னும் வனாந்தரத்தில் அலைந்து, தங்களின் வீண் கற்பனையில் மூழ்கி, தங்களது சமயத் தலைவர்களின் அதிகாரத்திற்கிணங்க நடந்திடும் அற்பச்சிந்தனைப் படைத்த ஆன்மாக்களைத் தவிர வேறெவருக்கும் அத்தகைய நடத்தை உரியதாகாது.

வெறும் எதிர்ப்பே அவர்களது தலையாய நோக்கமாகும்; அவர்களின் ஒரே ஆவல் உண்மையை அலட்சியப்படுத்துவதே.

மெய்ம்மைச் சூரியனின் ஒவ்வோர் அவதாரங்களின் நாள்களிலும், இம் மனிதர்கள், தாங்கள் பார்த்தும் கேட்டும் உணர்ந்துமிருந்த சகலத்திலிருந்தும் தங்களின் கண்களையும், செவிகளையும் இதயங்களையும் தூய்மைப்படுத்தியிருப்பின், உண்மையாகவே அவர்கள் இறைவனது பேரழகைக் கண்ணுறும் பாக்கியத்தை இழந்திருக்கவும் மாட்டார்கள் என்பதுவும், மகிமை என்னும் மாளிகையிலிருந்து வெகுதூரம் சென்றிருக்கவும் மாட்டார்கள் என்பதுவும் பகுத்துணரக் கூடிய ஒவ்வொரு பார்வையாளருக்கும் தெளிவாய்த் தெரிவதுடன் நன்கு புலப்படவும் செய்யும்.

ஆனால், இறைவனுடைய சாட்சியத்தைத் தங்களது சமயத் தலைவர்களின் போதனைகளிலிருந்து பெற்றுள்ள அறிவின் துணைக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்து, அது அவர்களின் குறுகிய புரிந்துகொள்ளலிருந்து மாறுபட்டிருந்ததன் காரணமாக அத்தகைய கேடுநிறைந்த செயல்களைப் புரிந்திட முன்னெழுந்தனர்.

மோஸஸை எண்ணிப்பாருங்கள்! வானுலக இராஜ்யம் என்னும் செங்கோலின் துணையுடன் தெய்வீக அறிவு என்னும் தூய்மைமிக்கக் கரத்தினால் அலங்கரிக்கப்பட்டவராக, இறையன்பு என்னும் பாரானிலிருந்து புறப்பட்டு, சக்தியும் நித்தியமுமான மாட்சிமை என்னும் அரவத்தைப் பிரயோகித்து, ஒளிமிக்க ஸைனாயிலிருந்து உலகின் மீது ஒளி வீசினார்.

அவர், மண்ணுலகின் அனைத்து மக்களையும் இனங்களையும் நித்தியம் என்னும் அரசாட்சியின்பால் வந்திடுமாறு அழைத்து விசுவாசம் என்னும் விருட்சத்தின் கனியினைச் சுவைத்திடுமாறு வேண்டினார்.

பேரோ மற்றும் அவனுடைய மக்கள் ஆகியோரின் கடும் எதிர்ப்பினைக் குறித்தும், ஆசீர்வதிக்கப்பட்ட அவ் விருட்சத்தின் மீது இறை நம்பிக்கையற்றோர் விட்டெறிந்த வீண் கற்பனைகள் என்னும் கற்களைக் குறித்தும் நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.

அவ்வாறிருக்க, பேரோவும் அவனது மக்களும் இறுதியில் ஒருசேரத் திரண்டு எந்த மண்ணுலக நீரும் தெய்வீக விவேகம் என்னும் தீப் பிழம்பினைச் செயலற்றுப்போகவோ, எத்தகைய அநித்திய கடுங்காற்றும் நித்திய இராஜ்யத்தின் ஒளிவிளக்கை அணைத்திடவோ இயலாது என்னும் உண்மையை மறந்தவர்களாகப் பொய்ம்மை, மறுப்பு என்னும் நீரைக் கொண்டு, அப் புனித விருட்சத்தின் நெருப்பினை அணைத்திட தங்களாலானமட்டும் முயன்றனர்.

இல்லை, மாறாக, நீங்கள் பகுத்துணர்தல் என்னும் கண்ணைக் கொண்டு நோக்கி, இறைவனின் புனித நல்விருப்பம், அவரது மகிழ்ச்சி என்னும் வழியில் நடப்பீராயின், அத்தகைய மண்ணுலக நீரானது தீபத்தின் நெருப்பினை மேலும் கொழுந்துவிட்டு எரியச் செய்திடும் என்பதையும், அத்தகைய கடுங்காற்று விளக்கின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்திடவே செய்திடும் என்பதையும் புரிந்துகொள்வீர்.

மோஸஸின் நாள்கள் முடிவுற்று, இயேசுவின் ஒளியானது புனித ஆவியின் பகலூற்றிலிருந்து பிரகாசித்து உலகினைச் சூழ்ந்திட்டபோது, இஸ்ரேலிய மக்கள் அனைவரும் அவருக்கெதிராக எழுந்தனர்.

எவரது அவதரிப்பை பைபிள் முன்னறிவித்ததோ, அவர், மோஸஸின் சட்டங்களைப் பிரகடனம் செய்து அவற்றை நிறைவுச் செய்திட வேண்டும் என அவர்கள் ஆர்ப்பரித்தனர்.

மாறாக, தெய்வத் தூதரின் ஸ்தானத்திற்கு உரிமை கொண்டாடும் இந்த நஸரேத்து இளைஞரோ சட்டங்களிலேயே அதி முக்கிய சட்டங்களான விவாகரத்துச் சட்டத்தையும், ஸாபாத் சட்டத்தையும் ரத்துச் செய்துவிட்டாரே என ஆரவாரம் செய்தனர்.

மேலும், அடுத்து வரவிருக்கும் அவதாரத்தின் அடையாளங்கள் என்னவாயின எனவும் வினவினர்.

இந்த இஸ்ரேலிய மக்கள் இன்றுவரைக்கூட பைபிள் திருநூல் முன்னறிவித்த அந்த அவதாரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்! மோஸஸின் காலந்தொட்டு புனிதத்தின் அவதாரங்கள் எத்தனை பேர், நித்திய ஒளியின் வெளிப்பாட்டாளர்கள் எத்தனை பேர் தோன்றிவிட்டனர்! இவ்வாறிருந்தும், சாத்தானின் கனவுகள், வீண் கற்பனைகள் என்னும் அதி கனத்தத் திரைகளினால் இஸ்ரேல் தன்னை மூடிக் கொண்டு தன் சுயகற்பனையில் தானே புனைந்து கொண்ட அடையாளங்கள் கொண்ட உருவந்தான் தோன்றப் போகின்றது என எதிர்ப்பார்த்து இன்னும் காத்திருக்கின்றது! இதன் பயனாக அவர்கள் செய்த பாவங்களுக்காக இறைவன் அவர்களைப் பிடித்து அவர்களின் நம்பிக்கை விசுவாசத்தை அழித்து, அதி கொடூரமான அக்கினித் தீப்பிழம்புகளால் அவர்களை வதைத்து விட்டார்.

அடுத்து வரவிருக்கும் வெளிப்பாட்டின் அடையாளங்களைப்பற்றி பைபிளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சொற்களின் பொருளை இஸ்ரேல் புரிந்துகொள்ள மறுத்ததற்காகவன்றி வேறெந்த காரணத்திற்காகவும் இவ்வாறு செய்யப்படவில்லை.

அவற்றின் உண்மையான முக்கியத்துவத்தை இஸ்ரேல் புரிந்துகொள்ளத் தவறியதாலும், வெளித்தோற்றத்திற்கு அத்தகைய நிகழ்வுகள் நடந்தேறாததாலும் இயேசுவின் அழகினை அறிந்து ஏற்றுக்கொள்ளும் பாக்கியத்தையும் இறைவனது வதனத்தைக் கண்ணுறும் பாக்கியத்தையும் இஸ்ரேல் இழந்துவிட்டது.

மேலும், அவர்கள் இன்னமும் அவரின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்! நினைவுக்கெட்டாத காலம் முதல் இந்நாள் வரையிலுங்கூட இம் மண்ணுலகில் இனங்களும், மக்களும் அத்தகைய வீண் கனவுகளையும், தகாத எண்ணங்களையும் இறுகப் பற்றிக் கொண்டுள்ளனர்.

இவ்வாறாக, அவர்கள் தூய்மை, புனிதம் என்னும் நீரூற்றுகளிலிருந்து வழிந்தோடிடும் தெளிந்த நீரினைப் பருகுவதிலிருந்து தங்களைத் தடுத்துக்கொண்டுள்ளனர்.

புரிந்துகொள்ளல் வழங்கப்பட்டோருக்கு இயேசுவின் அன்பெனும் நெருப்பானது யூத கட்டுப்பாடுகள் என்னும் திரைகளை எரித்தபோது, அவரது அதிகாரம் தெளிவாக்கப்பட்டு, அதில் ஒரு பகுதி செயற்படுத்தப்பட்டது என்பது தெளிவானதும் தெரிந்ததுமான ஒன்று.

அவ் வேளையில் கண்ணுக்குப் புலனாகாத பேரழகரின் அவ் வெளிப்பாட்டாளர் தமது சீடர்களிடம் ஒரு நாள் தமது மறைவுக்குறித்துக் குறிப்பிட்டுச் சோகமெனும் நெருப்பினை அவர்களது இதயங்களில் மூட்டியவராக அவர்களிடம் மொழிந்ததாவது: “யாம் சென்று மீண்டும் உங்கள்பால் வருவோம்.

” மற்றுமோர் இடத்தில் அவர் மேலும் கூறியதாவது: “யாம் சென்றபின்னர், யாம் உங்களுக்கு உரைத்திராத அனைத்தையும் உங்களுக்கு எடுத்து இயம்பவும், யாம் உரைத்த அனைத்தையும் நிறைவுச் செய்யவும் இன்னொருவர் வருவார்.

” இறைவனது ஒற்றுமையின் அவதாரங்கள் மீது தெய்வீக அக நோக்குடன் நீங்கள் ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பீர்களாயின், இவ்விரு கூற்றுகளின் பொருள் ஒன்றேயாகும்.

இயேசுவின் திருநூலும், அவரது சமயமும் குர்-ஆனின் அருளாட்சியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பகுத்துணரவல்ல பார்வையாளர் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்வர்.

நாமங்கள் தொடர்பாக முஹம்மதுவே “யாமே இயேசு” எனப் பிரகடனப்படுத்தியுள்ளார்: இயேசுவின் அடையாளங்கள், தீர்க்கதரிசனங்கள், சொற்கள் முதலியவற்றை அவர் ஏற்றுக்கொண்டதுடன் அவை யாவும் இறைவனுடையவையே என்பதற்கு அத்தாட்சியும் அளித்துள்ளார்.

இக் கருத்துக்கொப்ப, இயேசுவோ, அவரது எழுத்தோவியங்களோ முஹம்மதுவிடமிருந்தும், அவரது திருநூலிலிருந்தும் வேறுபட்டிருக்கவில்லை.

ஏனெனில், இருவருமே இறைவனது சமயத்தை முன்மொழிந்து, அவரது புகழை இயம்பி, அவரது கட்டளைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதனால், இயேசுவே இவ்வாறு பிரகடனப் படுத்தியுள்ளார்: “யாம் சென்றுவிட்டு மீண்டும் உங்கள்பால் வருவோம்.

” சூரியனை எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்பொழுது அது, “நான் நேற்றைய சூரியன்” என்று கூறுமாகில், அது உண்மையே பேசுகின்றது.

நேரக்கணிப்பைக் கருத்திற்கொண்டு, தான் இன்னொரு சூரியன் என்று அது கூறுமாயின், அதுவும் உண்மையே ஆகும்.

அதே போன்று எல்லா நாள்களும் ஒன்றே எனவும், வேறுபாடற்றவை எனவும் கூறப்படுமாகில், அது சரியானதும் உண்மையானதுமாகும்.

அவற்றின் பிரத்தியேகப் பெயர்கள் சிறப்புக் குறிப்பீடுகளின் தொடர்பில் வெவ்வேறானவை எனக் கூறப்படுமாகில், அதுவும் சரியே.

ஏனெனில், அவை ஒன்றாக இருந்துங்கூட, அவற்றின் ஒவ்வொன்றிலும், வேறுபட்ட ஒரு சிறப்பியல்பு, குறிப்பிட்ட ஒரு தன்மை, தனித்தன்மை வாய்ந்த ஒரு குணாதிசயம் உள்ளதை ஒருவர் காண இயலும்.

புனிதத்தின் அவதாரங்களான பலரின் தனித்தன்மை, வேறுபாடு, ஒற்றுமை ஆகியவற்றை எண்ணிப்பாருங்கள்.

அதனால், நாமங்கள், அழகுகள் அனைத்தின் படைப்பாளரானவர் தனித்தன்மைக்கும், ஒற்றுமைக்குமான புதிர்களுக்குத் தோற்றுவித்த மறை குறிப்புகளை நீங்கள் புரிந்துகொள்ளக்கூடும் என்பதுடன், நித்திய அழகரானவர் ஏன் பல்வேறு காலங்களில் வெவ்வேறு பெயர்களாலும் பட்டங்களாலும் தம்மை அழைத்துக் கொண்டார் என்ற உங்களது கேள்விக்கான பதிலையும் நீங்கள் கண்டு கொள்ளக்கூடும்.

காணவியலாத, நித்தியமான, தெய்வீக சாராம்சமுமானவரான மோஸஸிற்குப் பின்னர் முஹம்மது எனும் பகல் நட்சத்திரத்தினை அறிவென்னும் தொடுவானத்திற்கு மேல் தோன்றச் செய்தபோது, அவருக்கு எதிராக யூத மதகுருமார்கள் கொணர்ந்த குற்றச்சாட்டுகளில் ஒன்று, மோஸஸிற்குப் பின்னர் இறைவனிடமிருந்து வேறெந்த தூதரும் அனுப்பப்படமாட்டார் என்பதாகும்.

மோஸஸின் சமயத்தையும், அவரது மக்களின் நலன்களையும் மேம்படுத்த வேண்டி ஒரு பேரான்மா அவதரிக்கச் செய்யப்பட்டு, அதன் பயனாக மோஸஸின் அருளாட்சிக் காலத்தின் சட்டம் உலகம் முழுவதையும் ஆட்கொள்ள இயலும் எனவும் சமய நூல்களில் குறிக்கப்பட்டுள்ளது உண்மை.

இவ்வாறாக, நித்திய மகிமையின் மன்னரானவர் தமது திருநூலில் தொலைவு, தவறு எனும் பள்ளத்தாக்கில் அலைந்து திரிவோர் கூறிய வார்த்தைகளைக் குறிப்பிட்டுள்ளார்: “இறைவனது கைகள் சங்கிலியால் கட்டுண்டிருக்கின்றன,’ என யூதர்கள் கூறுகின்றனர்.

அவர்களது சொந்தக் கைகளே சங்கிலியால் பிணைக்கப்படட்டுமாக! அவர்கள் கூறிய அவ் வார்த்தைகளுக்காக அவர்கள் சபிக்கப்பட்டனர்.

அல்லாமலும், இறைவனின் இரு கரங்களுமே விரித்து நீட்டப்பட்டுள்ளன!” “இறைவனது கை அவர்களது கைகளுக்கு மேலாக உள்ளது.

” இவ் வாசகம் வெளிப்பாடு செய்யப்பட்டதன் தொடர்பாகவுள்ள சூழ்நிலைகளைக் குர்-ஆனின் விளக்கவுரையாளர்கள் பல்வேறு கோணங்களில் விளக்கியுள்ளபோதிலும், அதன் நோக்கத்தை நீங்கள் நன்கு புரிந்துகொள்ள முயல வேண்டும்.

அவர் கூறுவதாவது: யூதர்களின் கற்பனை எவ்வளவு பொய்யானது! எவர் மெய்ம்மையின் அரசராகத் திகழ்கின்றாரோ, எவர் மோஸஸின் வதனத்தை அவதரிக்கச் செய்து அவர் மீது தீர்க்கதரிசி எனும் ஆடையை அணிவித்தாரோ, அத்தகையவரின் கரங்கள் எங்ஙனம் சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கட்டுண்டு இருக்கவியலும்? மோஸஸிற்குப் பின்னர் இன்னும் ஓர் இறைத்தூதரை அனுப்பிடச் சக்தியற்றவராக எங்ஙனம் அவரைக் கருதிட இயலும்? அவர்களது கூற்றின் அபத்தத்தைப் பாரீர்.

அறிவு, புரிந்துகொள்ளல் என்னும் பாதையை விட்டு எத்துணைத் தூரம் அது விலகிச் சென்றுள்ளது! இன்றும் இம் மக்கள் எங்ஙனம் அத்தகைய அறிவிலித்தனமான அபத்தங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்பதைப் பாருங்கள்.

ஓராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இவ் வாசகத்தை அவர்கள் ஓதிக்கொண்டிருப்பதுடன், யூதமக்களின் நம்பிக்கையினையும், இவர்கள் வெளிப்படையாகவும் தனிப்பட்ட முறையிலும் தாங்களே கூறிவிடுகின்றனர் என்பதை முற்றிலும் மறந்தவர்களாகத் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைச்சிறிதும் அறியாத நிலையில் யூதர்கள்பால் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்! வெளிப்பாடுகள் அனைத்தும் முடிவுற்று விட்டன என்றும், தெய்வீகக் கருணையின் கதவுகள் மூடப்பட்டு விட்டன என்றும், நித்திய புனிதம் எனும் பகலூற்றுகளிலிருந்து மீண்டும் எந்தவொரு சூரியனும் உதயமாகாது என்றும், நித்திய காலத்திற்கும் நீடித்திருக்கவல்ல அருட்கொடை என்னும் சமுத்திரம் முற்றாக ஓய்ந்து இயக்கமற்றுப் போய்விட்டது என்றும், தொன்மைப் புகழ்மிகு திருக்கூடாரத்திலிருந்து கடவுளின் தூதர்கள் அவதரிப்பது முற்றுப்பெற்று விட்டது என்றும் அவர்கள் புரியும் வீண் வாதங்களை நீங்கள் நிச்சயமாக அறிந்திருப்பீர்கள்.

இக் குறுகிய மனங்கொண்ட, இவ்விழிந்த மக்களின் புரிந்துகொள்ளலின் அளவு அத்தகையதானதுதான்.

எந்த மனமும் நினைத்துப் பார்க்கவியலாத அனைத்தையும் சூழ்ந்திடவல்ல இறைவனின் கிருபையும், அளப்பரிய அவரது கருணைகளின் பொழிவும் முடிவுற்று விட்டன என இம் மக்கள் தங்களுக்குள்ளாகக் கற்பனைச் செய்துள்ளனர்.

ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் அவர்கள் அவருக்கெதிராக எழுந்து கொடுங்கோன்மை என்னும் இடைத்துணியை வரிந்து கட்டிக்கொண்டு, இறைவனின் எரியும் புதரின் அனற் பிழம்பினைத் தங்களுடைய வீண் கற்பனை எனும் வெறுப்புணர்ச்சிகளினால் அணைத்திடத் தங்களாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், சக்தியெனும் பூமி தனது வலிமைமிகு அரணுக்குள் இறைவனின் திருவாக்கெனும் ஒளியைப் பாதுகாத்திடும் என்பதை முற்றாக மறந்து விட்டனர்.

எவ்வாறு இறைவனின் தூதரான முஹம்மது அவர்களின் இறைமை இன்று மனிதரிடையே தெளிவாகவும் வெளிப்படையாகவும் காணப்படுகிறதென்பதைப் பாருங்கள்.

அவரது அருளாட்சி காலத்தின் ஆரம்பத்தில் அவரது சமயத்திற்கு என்ன நேர்ந்ததென்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

சமயநம்பிக்கையற்றோரும் தவறிழைப்போரும், அக்காலத்தின் சமயத்துறை அறிஞர்களும் அவர்களுடன் இணைந்திருப்போரும், அவ்வான்மீக சாராம்சத்தின் மீது, அவ்வதித்தூய்மையான, புனிதமிகு மனிதர்மீது இழைத்திட்ட கடும் வேதனைமிகு துன்பங்கள் தாம் என்னே! அவரது பாதையில் அவர்கள் கொட்டியுள்ள முட்களும் காட்டுரோசாக் கொடிகளும் எவ்வளவு ஏராளம்! அந்த இழிவான தலைமுறை, தன் தீய மற்றும் கொடூரமான கற்பனையில், அவ்விறவா மனிதருக்கு இழைக்கும் ஒவ்வொரு தீங்கும் தங்களுக்குக் கிட்டும் நிலையான பாக்கியம் எனக் கருதினர்; அப்துல்லா-இ-உப்பய், அபு அமீர் என்னும் துறவி, காப்-இப்னி-அஷ்ராப் மற்றும் நாடர்-இப்னி-இ-ஹாரித் ஆகிய அக்காலத்தின் பிரபலமான சமயத்துறை அறிஞர்கள் ஆகியோர் ஒருமுகமாக அவரை ஓர் ஏமாற்றுக்காரர் என நடத்தியதோடு அவரைப் பைத்தியக்காரர் என்றும் அவதூறுரைப்பவர் என்றும் தீர்ப்புக் கூறினர்.

அத்தகையதானவைதாம் அவர்கள் அவர்மீது சுமத்திய கடுமையான குற்றச்சாட்டுகள்.

அவற்றை விவரிப்பதற்கு, எழுதும் மை வெளி வருவதையும், எழுதுகோல் நகர்வதையும், ஏடு அவற்றைத் தாங்குவதையும், இறைவன் தடைச்செய்திடுகின்றார்.

இக் கெடுநோக்குடைய அவதூறுகள், மக்களை, எழுந்து, அவருக்குத் துன்பம் விளைவிக்கத் தூண்டின.

அக்கால சமயத்துறை அறிஞர்களே அதற்கு முக்கிய தூண்டுதலாக இருந்து தங்களைப் பின்பற்றுபவர்களிடத்தில் அவருக்கெதிராகக் கண்டனம் தெரிவித்து, அவரைத் தங்களின் மத்தியிலிருந்து வெளியேற்றி, கொள்கையற்ற ஈனர் எனப் பிரகடனஞ் செய்வர் என்றால் எத்துணைக் கொடூரமானதாக இருந்திருக்கும் அத்துன்புறுத்தல்! அதுவே இவ்வூழியனுக்கும் நேரிட்டு, யாவராலும் நேரடியாகவே காணப் படவில்லையா? இக் காரணத்திற்காகவே முஹம்மது புலம்பினார்: “யாம் துன்புற்றது போன்று இறைவனின் வேறெந்த தீர்க்கதரிசியும் துன்புற்றிலர்”.

அவருக்கெதிராகக் கூறப்பட்ட அவதூறுகள், கடுமொழிகள், கண்டனங்கள் அனைத்துடன் அவர் உற்ற துன்பங்கள் யாவும் குர்-ஆனில் குறிக்கப்பட்டுள்ளன.

அவற்றைத் தேடி வாசிப்பீராக.

அதனால், அவரது வெளிப்பாட்டிற்கு நேர்ந்தவற்றை ஒருக்கால் நீங்கள் அறிந்திடக்கூடும்.

அவரது நிலைமை அந்தளவு நெருக்கடி மிகுந்ததாக இருந்ததன் காரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவருடனும், அவரது தோழர்களுடனும் தொடர்புக் கொள்வதை அனைவரும் நிறுத்திக்கொண்டனர்.

அதை மீறி அவருடன் தொடர்புக் கொண்டிருந்த எவரும் அவரது எதிரிகளின் இடைவிடாத கொடூரங்களுக்கு இலக்காகினர்.

இன்றுள்ள மாற்றம் எத்துணைப் பெரிது என்பதை எண்ணிப் பாருங்கள்! அவரது நாமத்தின்முன் மண்டியிடும் அரசர்கள்தாம் எத்தனைப் பேர்! அவரது சமயத்தின்பால் பற்றுறுதியுடன் இருந்து அதில் பெருமை கொண்டு அவரது நிழலின் புகலிடத்தைத் தேடிடும் இராஜ்யங்களும், நாடுகளுந்தாம் எத்துணை அதிகம்! பிரசங்க உரை மேடைகளிலிருந்து இன்று மிக்கப் பணிவோடு அவரது அருள்மிகு நாமத்தை மகிமைப்படுத்தும் போற்றுதல்மிகு வார்த்தைகள் உரைக்கப்படுகின்றன.

அவரைப் போற்றிப் புகழ்ந்திடுமாறு பள்ளிவாயில் ஸ்தூபிகளின் உச்சங்களிலிருந்து அவரது மக்களுக்கு விடுக்கப்படும் அழைப்பு ஒலிக்கின்றது.

அவரது சமயத்தை ஏற்க மறுத்து அவநம்பிக்கை என்னும் ஆடையைத் தரித்துக் கொண்ட மண்ணுலக அரசர்கள்கூட அந்த அன்புப் பரிவு என்னும் பகல் நட்சத்திரத்தின் உன்னதத்திற்கும், அதன் சக்திமிகு மாட்சிமைக்கும் அத்தாட்சிக் கூறி ஏற்றுக்கொள்கின்றனர்.

அத்தகைய சக்திமிக்கதுதான் அவரது மண்ணுலக அரசாட்சி.

அதன் ஆதாரங்களை எல்லாத் திசைகளிலும் நீங்கள் இன்று கண்கூடாகக் காண்கின்றீர்கள்.

இந்த அரசுரிமை ஒவ்வோர் இறைத்தூதரின் வாழ்நாளிலேயோ, மேலுலகங்களிலுள்ள அவரது மெய்யான உறைவிடத்தின்பால் அவர் விண்ணேற்றமடைந்து விட்ட பிறகோ நிலைநாட்டப்பட வேண்டும்.

ஒவ்வோர் அருளாட்சியிலும் கொண்டுவரப்படும் மாற்றங்கள் மனிதனின் புரிந்துகொள்ளல் என்னும் கண்ணுக்கு, தெய்வீக சாராம்சத்தினுடைய பகலூற்றிலிருந்து பிரகாசிக்கும் தெய்வீகப் பேரொளியானவருக்குமிடையே குறுக்கிடும் கருமேகங்களாக அமைகின்றன என்பது தெளிவு.

தலைமுறை தலைமுறைகளாக மனிதர்கள் எவ்வாறு தங்களின் முன்னோர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்துள்ளனர் என்பதையும், அவர்களது சமயத்தின் அதிகார ஆணைகளின் வழிவகைகளுக்கு ஏற்ப எவ்வாறு பழக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதையும் எண்ணிப் பாருங்கள்.

எனவே, மனித எல்லைகள் ஒவ்வொன்றைப் பொறுத்த வரையில் தங்களுக்குச் சமமாக இருந்து வந்தவரும், தங்கள் மத்தியில் வாழ்ந்தவருமான ஒருவர் தங்களது சமயம் விதித்துள்ள ஒவ்வொரு கோட்பாட்டினையும், அதாவது, எந்தக் கோட்பாடுகளின்வழி நூற்றாண்டுகள் காலமாக அவர்கள் நெறிமுறைப்படுத்தப்பட்டு வந்திருந்தனரோ, எந்தக் கோட்பாடுகளை எதிர்த்தவர்களும், மறுத்தவர்களும் இறைநம்பிக்கை அற்றவர்களாகவும், நெறிகெட்டவர்களாகவும், தீயவர்களாகவும் கருதப்பட்டு வந்தனரோ, அந்தக் கோட்பாடுகள் ஒவ்வொன்றையும் அழித்திட முன்வந்துள்ளார் என்பது இந்த மனிதர்களுக்கு எதிர்பாராத வகையில் தெரியவருமாயின், அவரது உண்மையினை ஏற்றுக் கொள்வதிலிருந்து அவர்களின் கண்கள் மறைக்கப்படுவதும், அவர்கள் தடுக்கப்படுவதும் உறுதி.

தங்களது உள்ளுருவானது பற்றின்மை என்னும் ஸல்சபீலை* சுவைத்திடாதவர்கள், இறைவனின் அறிவு என்னும் கவ்தாரிலிருந்து* பருகிடாதவர்கள் ஆகியோரின் கண்களை மறைக்கும் அத்தகைய விஷயங்களே “மேகங்களாகும்.

” அத்தகைய மனிதர்கள் இத்தகைய சூழ்நிலைகளைச் சந்திக்கும்போது, இறைத்தூதரை இறைநம்பிக்கையற்றவர் என எவ்வித விசாரணையுமின்றித் தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதித்து விடுகின்றனர்.

எல்லாக் காலங்களிலும் அத்தகைய விஷயங்கள் நடந்தேறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அவை இந் நாள்களில் நடந்தேறுவதையும் கண்கூடாகக் கண்டு வருகின்றீர்கள் எனவே, இக் கருந்திரைகளும், விண்ணுலக ஏற்பாட்டிலான சோதனைகள் என்னும் இம் மேகங்கள் ஒளிர்ந்திடும் அவரது வதனத்தின் அழகினைக் கண்ணுறுவதிலிருந்தும் அவர் ஒருவர் மூலமாகவே நாம் அவரை அறிந்துகொள்வதினின்றும் நம்மைத் தடுத்திடாதிருக்க நாம் இறைவனின் கண்ணுக்குப் புலப்படாத உதவியின் துணைக்கொண்டு கடுமுயற்சி செய்ய வேண்டியது நமது கடமையாகின்றது.

XIV

அதி மேன்மைப் படுத்தப்பட்ட எழுதுகோலே, தெய்வீக வசந்தகாலம் வந்துவிட்டது.

கருணைமயமானவரின் பண்டிகை விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

படைப்புப்பொருள்கள் அனைத்தும் மறுபிறப்பெய்தி புதிதாக்கப்படுமளவு உன்னை எழுச்சியுறச் செய்து கொண்டு, படைப்பு முழுமைக்கும் முன்பாக இறைவனது நாமத்தை மிகைப்படுத்தி, அவரது புகழைப் பாடுவாயாக.

பேசு, அமைதியாய் இருந்திடாதே.

இறைவனின் நாமம் எனும் இராஜ்யம் விண்ணுலகங்களின் படைப்பாளராகிய உனது பிரபுவின் நாமம் எனும் ஆபரணத்தினால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

ஆகையினால் பேரானந்தம் எனும் பகல் நட்சத்திரம் எமது நாமத்தின் தொடுவானத்திற்கு மேல் பிரகாசிக்கின்றது.

மண்ணுலகின் நாடுகளுக்கு முன்னே எழுந்து, இவ்வதி உயரிய நாமத்தின் சக்தியை ஆயுதமாகக் கொண்டிடுவாயாக.

தாமதிப்போர் கூட்டத்தில் சேர்ந்திடாதே.

நீ நின்றுவிட்டுள்ளாய் என்றும், எனது நிருபத்தின் மீது நகராமல் இருக்கின்றாய் என்றும் எண்ணுகின்றேன்.

தெய்வீக வதனத்தின் பிரகாசம் உன்னைத் திகைப்புறச் செய்திருக்குமோ, பணியாதோரின் வீண் பேச்சுகள் உன்னைச் சோகத்தினால் நிரப்பி, உனது இயக்கத்தைச் செயலற்றுப் போகச் செய்திருக்குமோ? கவனமாய் இரு, இல்லையெனில், நீ இந்நாளை - மாட்சிமை, சக்தி ஆகிய விரலானது மீண்டும் ஒன்றிணைதல் என்னும் அடைப்பு முத்திரையினைத் திறந்து, விண்ணுலகங்களிலும், மண்ணுலகிலும் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள இந்நாளை - உயர்வாகப் புகழ்வதிலிருந்து ஏதாவது தடுத்திடப் போகின்றது.

இறைவனது நாளை அறிவிக்கும் தென்றல் உன் மீது வீசிட்ட பிறகுங்கூட நீ நேரம் கடத்திட விரும்புகின்றாயா, அல்லது அவரிடமிருந்து ஒரு திரையினால் மறைக்கப் பட்டவர்களுள் நீயும் ஒருவனாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாயா?

நாமங்கள் அனைத்திற்கும் பிரபுவும், விண்ணுலகங்களைப் படைப்போனுமாகியவரே, உலகம் முழுமைக்கும் வழிகாட்டுதல் எனும் விளக்காகவும், அதனில் வாழும் யாவருக்கும் பண்டைய நாள்களின் அடையாளமுமாகிய, உமது நாளான, அந் நாளின் மகிமைகளை அறிந்து கொள்வதிலிருந்து எந்தத் திரையும் என்னைத் தடுத்திட நான் அனுமதித்ததில்லை.

உம்மிடமிருந்து உமது உயிரினங்களின் கண்களை மறைத்துள்ள திரைகள்தாம் என் மௌனத்திற்குக் காரணம்; உமது மக்களை உமது மெய்ம்மையைக் கண்டுகொள்வதிலிருந்து தடுத்திட்டுள்ள இடையூறுகளே எனது ஊமைநிலைக்குக் காரணம்.

என்னுள் இருப்பது யாதென நீர் அறிவீர், ஆனால் உம்முள் இருப்பது யாதென யான் அறியேன்.

நீரே சகலமும் அறிந்தவர், அனைத்தும் அறிவிக்கப்பட்டவர்.

நாமங்கள் அனைத்தையும் விஞ்சிடும் உமது நாமம் சாட்சியாக!

சகலத்தையும் நிர்ப்பந்திக்கவல்ல உமது மேலதிகாரக் கட்டளை என்னை வந்து சேருமாயின், அது, உமது சக்தியெனும் நாவினால் உமது பேரொளி என்னும் இராஜ்யத்தில் கூறக் கேட்கப்பட்ட உமது மேன்மைப்படுத்தப்பட்ட திருச்சொல்லின் மூலம், எனக்கு, மனிதர்களின் ஆன்மாக்களை மீண்டும் உயிர்பெறச்செய்திட அதிகாரமளித்திடும்.

மனிதர்களின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுக் கிடக்கும் அது, துலங்கிடும், ஒப்புயர்வற்ற பாதுகாவலரான, சுயஜீவியான உமது நாமத்தின் பெயரால் வெளிப்படுத்தப்பட்டுள்ள அதன் மூலம், எனக்கு, உமது சுடரொளி வீசும் வதனத்தின் வெளிப்பாட்டினை அறிவித்திட உதவிடும்.

எழுதுகோலே, இந் நாளில், நீர், என்னைத் தவிர வேறு எவரையுமே காண முடியவில்லையா? படைப்பும் அதன் வெளிப்படுத்துதல்களும் என்னவாயின? அவற்றின் பெயர்களும் அவற்றின் இராஜ்யமும் என்னவாயின? கண்களுக்குப் புலனாகும், புலனாகா, படைப்புப் பொருள்கள் அனைத்தும் எங்குப் போயின? பிரபஞ்சத்தின் மறைவான இரகசியங்களும் அவற்றின் வெளிப்பாடுகளும் என்னவாயின? ஐயகோ, படைப்பு முழுமையும் மறைந்து போயினவே! என்றும் நிலையான, பிரகாசமிக்க, ஒளிமயமான எமது வதனத்தைத் தவிர எஞ்சியிருப்பது வேறெதுவுமே கிடையாது.

இதுவே, அருள்மிக்கவரும், அதிவள்ளன்மைமிக்கவருமான உனது பிரபுவின் வதனத்தினின்று பிரகாசித்திடும் ஒளியின் சுடர்களைத் தவிர வேறெதுவுமே காணப்படவியலாத நாள்.

மெய்யாகவே, யாம், தடுக்கவியலாததும் யாவற்றையும் அடக்கி ஆட்கொண்டிடக் கூடியதுமான எமது இறைமையினால் ஒவ்வோர் ஆன்மாவையும் மாய்ந்திடச் செய்துள்ளோம்.

பிறகு, மனிதர்பால் எமக்குள்ள கருணையின் ஓர் அடையாளமாக ஒரு புதிய படைப்பினை உருவாக்கியுள்ளோம்.

மெய்யாகவே, வள்ளன்மையே உருவானவரும், நாள்களில் தொன்மை வாய்ந்தவரும் யாமே.

இதுவே, கண்ணுக்குப் புலனாகாத உலகம் இவ்வாறு கூக்குரலிடும் நாள்: “மண்ணுலகமே, உனது பாக்கியம் மிகப்பெரியது; ஏனெனில், நீ, உமது இறைவனின் பாதபீடமாக ஆக்கப்பட்டு, அவரது வலிமைமிகு அரியாசனத்தின் இருக்கையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாய்.

பேரொளி எனும் இராஜ்யம் வியந்துரைக்கின்றது: “எனது உயிர் உமக்காக அர்ப்பணிக்கப்படுமாக; ஏனெனில், அது கடந்த காலத்தவையாகவோ எதிர்காலத்தவையாகவோ இருப்பினும், பொருள்கள் அனைத்திற்கும் வாக்களிக்கப்பட்ட அவரது திருநாமத்தின் சக்தியின் மூலமாக, கருணைமயமானவரின் நேசரான அவர் தமது அரசினை உன் மீது ஸ்தாபித்துள்ளார்.

” இதுவே, இனிய மணங்கமழும் பொருள் ஒவ்வொன்றும் அதன் நறுமணத்தினை எனது அங்கியிலிருந்து - படைப்பனைத்தின் மீதும் அதன் நறுமணத்தை வீசச் செய்துள்ள அவ்வங்கியிலிருந்து - பெற்றுள்ள நாள்.

இதுவே, வேகமாய் வழிந்திடும் நித்திய வாழ்வெனும் நீர், கருணைமயமானவரின் விருப்பத்தினின் பீறிட்டொழுகிடும் நாள்.

மேலுலகவாசிகளே! இதயபூர்வமாகவும், ஆன்மப்பூர்வமாகவும் விரைந்து சென்று உங்களுக்கேற்ப நிரம்பப் பருகிடுங்கள்.

கூறுவீராக: நீங்கள் அதனை உணரக் கூடுமாயின், அவரே, அறிந்திடவியலாதவரும், கண்ணுக்குப் புலப்படாதவற்றுளெல்லாம் புலப்படாதவருமான அவரது திருவெளிப்பாடானவர்.

நீங்கள் அதனைத் தேடுவீராயின், மறைக்கப்பட்டும், செல்வமாகப் போற்றி வைக்கப்பட்டும் உள்ள இரத்தினக்கல், அவர்தாம்.

கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ, அனைத்துப் பொருள்களாலும் நேசிக்கப்படுபவர் அவர் ஒருவரே.

உங்கள் இதயங்களையும், நம்பிக்கைகளையும் நீங்கள், அவர் மீதே வைத்திடக் கூடுமாக! எழுதுகோலே, உமது மன்றாடலை யாம் செவிமடுத்திருக்கிறோம்.

உமது மௌனத்தை மன்னித்திடுகிறோம்.

அத்துணைக் கடுமையாக உம்மை மனக்குழப்பம் அடையச் செய்ததுதான் யாதோ? உலகங்கள் அனைத்தின் நல்லன்புக்குரியவரே, உமது முன்னிலை என்னும் மதுமயக்கம் என்னைப் பிடித்து உடைமையாக்கிக் கொண்டுள்ளது.

கருணைமயமான அவர் ரித்வானை நோக்கி அடியெடுத்து வைத்து, அதனுள் பிரவேசித்துள்ளார் என்னும் செய்தியினைப் படைப்பு முழுமைக்கும் பிரகடனஞ்செய்ய எழுவீராக.

பிறகு, இறைவன் தமது சுவர்க்கத்தின் அரியாசனமாக ஆக்கியுள்ள பேருவகை என்னும் பூங்காவின்பால் மக்களை வழிநடத்திச் செல்வீராக.

உம்மை யாம், எமது அதிவலிமைமிகு எக்காளமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

அதன் எக்காள ஒலி முழக்கம் மனிதகுலம் அனைத்தின் மறுவுயிர்த்தெழுதலுக்குச் சமிக்ஞை காட்டிடும்.

கூறுவீராக: எதன் பசுந்தழையின் மீது மொழி என்னும் மதுரசம் இவ்வாக்குமூலத்தைப் பதித்துள்ளதோ அச்சுவர்க்கம் இதுதான்: “மனிதர்களின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டிருந்தவர், இறைமையும் சக்தியும் அளிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுவிட்டார்!” எந்த இலைகளின் சலசலப்பு இவ்வாறு பிரகடனஞ் செய்கின்றதோ, அந்த சுவர்க்கம் இதுதான்: “விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும் வாசஞ் செய்வோரே! ஏற்கனவே தோன்றிடாத ஒன்று இப்பொழுது தோன்றியுள்ளது.

எப்பொழுதும் தனது வதனத்தினைப் படைப்பின் பார்வையிலிருந்து மறைத்து வைத்திருந்தவர் இப்போது வந்துவிட்டார்.

” அதன் கிளைகளிடையே மிதந்து வரும் இளங்காற்றின் சலசலப்பொலியின் இக் கூக்குரல் எழுகின்றது: “சகலத்திற்கும் மாட்சிமைமிகு பிரபுவானவர் வெளிப்படுத்தப் பட்டுவிட்டார்.

இராஜ்யம் இறைவனுடையதே.

” அதே வேளையில், அதன் வழிந்தோடிவரும் நீரிலிருந்து பின்வரும் மெல்லொலியினைக் கேட்க முடிகின்றது: “கண்கள் அனைத்தும் மகிழ்வுறுகின்றன; ஏனெனில், இதுவரை எவரை யாருமே கண்ணுற்றதில்லையோ, எவரது இரகசியத்தை இதுவரை எவருமே கண்டுபிடிக்கவில்லையோ, அவர் பேரொளி என்னும் திரையை அகற்றிப், பேரழகுமிக்க வதனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

” இச் சுவர்க்கத்திற்குள்ளும், அதன் அதி உயர்வான அறைகளிலிருந்தும் விண்ணுலகக் கன்னிகள் உரத்தக் குரலெழுப்பி இவ்வாறு கூச்சலிட்டனர் : “மேலுலகவாசிகளே, மகிழ்வுறுவீராக; ஏனெனில், நாள்களில் தொன்மையான அவரின் விரல்கள், பேரொளிமயமானவரது நாமத்தினால், வானுலகத்தின் மையத்திலுள்ள அதி உயர்வான மணியை அடிக்கின்றன.

வள்ளன்மையின் கரங்கள், நித்திய வாழ்வெனும் கிண்ணத்தை ஏந்தி வந்துள்ளன.

அதனை அணுகி உங்களுக்குத் தேவையான அளவு பருகிடுங்கள்.

ஆவலின் உண்மையான மறு அவதாரங்களே, மனவெழுச்சியின் உருவங்களே, உடல்நலத்திற்கு ஏற்றவாறு அதனைத் துய்த்துப் பருகுவீராக!” இறைவனது நாமங்களின் வெளிப்பாட்டாளர், பேரொளி என்னும் கூடாரத்தினின்று வெளிவந்து, விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலுமுள்ள அனைவரிடமும், இவ்வாறு பிரகடனஞ்செய்திட்ட நாள் இதுவே: “சுவர்க்கத்தின் கிண்ணங்களையும், அவை கொண்டுள்ள உயிரளிக்கும் நீர் முழுவதையும் அப்பால் வைத்துவிடுங்கள்; ஏனெனில், அதோ, பஹாவின் மக்கள், தெய்வீக முன்னிலை என்னும் பரவசமிக்க வாசஸ்தலத்தினுள் பிரவேசித்து, சகலத்தையும் கொண்டுள்ளவரும், அதி உயர்வானவருமாகிய தங்களது பிரபுவின் அழகெனும் கிண்ணத்திலிருந்து மீண்டும் ஒன்றிணைதல் என்னும் மதுரசத்தினைப் பருகிக் கொண்டிருக்கின்றனர்.

” எழுதுகோலே, படைப்புலகினை மறந்து, நாமங்களுக்கெல்லாம் பிரபுவாகிய, உமது பிரபுவின் முகத்தின்பால் திரும்புவீராக.

பிறகு, என்றும் நிலையான நாள்களின் அரசனான உமது பிரபுவானவரின் சலுகைகளெனும் ஆபரணத்தைக் கொண்டு உலகினை அலங்கரிப்பீராக.

ஏனெனில், எதன் மீது நாடுகள் அனைத்தின் ஆவலாகியவர், புலனாகாததும் புலனாகக்கூடியதுமான இராஜ்ஜியங்களின் மீது, தமது அதி உயரிய நாமங்களின் ஒளியின் பிரகாசத்தினை விழச் செய்துள்ள நாளின் நறுமணத்தினை யாம் உணர்கின்றோம்; மேலும், அவற்றைத் தமது அதி அருள்மிகு சலுகைகளது விண்சுடர்களின் பிரகாசத்தினால் சூழச் செய்துள்ளார்; அச்சலுகைகளைப் படைப்பனைத்தின் எல்லாம் வல்ல பாதுகாவலரான அவரைத் தவிர வேறெவராலும் கண்டறிந்திட இயலாது.

இறைவனது படைப்பினங்களை இரக்கம், கருணை ஆகியவற்றைக் கொண்டல்லாது மற்றெதனின் துணையைக் கொண்டும் கண்ணுறாதீர்; ஏனெனில், எமது அன்புமிகு அருள்பாலிப்பு படைப்புப்பொருள் அனைத்தையும் ஊடுருவியுள்ளது; எமது அருள், மண்ணுலகையும், விண்ணுலகங்களையும் சூழ்ந்துள்ளது.

இதுவே, இறைவனின் உண்மையான ஊழியர்கள் மீண்டும் ஒன்றிணைதல் எனும் ஜீவநீரினைப் பருகிடும் நாள்; அவரது அருகிலுள்ளோர் மென்மையாக வழிந்தோடிடும் இறவாமை என்னும் நதியிலிருந்து பருகிடும்நாள்; யாவற்றின் அதி உயரியதும், இறுதி முடிவுமான மாட்சிமை, மற்றும், பேரொளியாகிய அவரை அறிந்து கொள்வதன் வாயிலாக, அவரது முன்னிலை என்னும் மதுரசத்தினை அருந்திட இயலும் நாள்; மேலும், அவரே அவரது அதி உயர்வான, இறுதி நோக்கமான, அவரை அறிந்துகொள்வதன் வாயிலாக, அவர்கள், அவரது ஒருமையில் நம்பிக்கைக் கொண்டுள்ளோர், அவரது முன்னிலை என்னும் மதுரசத்தினை உட்கொண்டிடும் நாள்.

மாட்சிமை, பேரொளி, என்னும் நா, அவருள் இவ்வாறு குரலெழுப்புகின்றது: “இராஜ்ஜியம் என்னுடையதே; எனது சொந்த உரிமையின் பேரில், நானே அதன் ஆட்சியாளர்.

” ஏகநாயகரான அவ்வன்பரது அழைப்பின் மூலமாக மனிதரின் இதயங்களை ஈர்த்திடுங்கள்.

கூறுவீராக: நீங்கள் கவனிப்பீராயின், இதுவே இறைவனின் குரல்.

நீங்கள் அதனை அறிந்திடக் கூடுமாயின், இதுவே இறைவனது வெளிப்பாட்டின் பகலூற்று.

நீங்கள் இதனை அடையாளங் கண்டிடக் கூடுமாயின் இதுவே இறைவனது சமயத்தின் உதய பீடம்.

நீங்கள் நியாயமாகச் சீர்தூக்கிப் பார்ப்பீராயின், இதுவே இறைவனது கட்டளையின் தோற்றிடம்.

நீங்கள் அதனை உணர்ந்திடக் கூடுமாயின், இதுவே தெளிவான, மறைவான இரகசியமாகும்.

உலகத்தின் மனிதர்களே! மற்ற நாமங்களனைத்தையும் விஞ்சியுள்ள என் பெயரால், நீங்கள் கொண்டுள்ள சகலத்தையும் அப்பால் வீசியெறிந்து விட்டு, எச் சமுத்திரத்தின் ஆழத்தினில் விவேகம், சொற்கள் என்னும் முத்துக்கள் மறைந்து கிடக்கின்றனவோ, கருணை மயமான எனது நாமத்தினால் அலை பொங்கி எழுகின்றதோ, அச்சமுத்திரத்தினில் உங்களை மூழ்குவிப்பீராக.

இவ்வாறுதான், எவரிடம் தாய்நூல் எனப்படுவது இருக்கின்றதோ அவர், கட்டளையிடுகின்றார்.

அதி அன்புக்குரியவர் வந்துவிட்டார்.

அவரது வலது கரத்தினில் அவரின் நாமம் எனும் அடைப்பு முத்திரையிடப்பட்டுள்ள மதுரசம் உள்ளது.

அவர்பால் திரும்பி, தனது அளவுக்கேற்பப் பருகி, “இறைவனது அடையாளங்களின் வெளிப்பாட்டாளரே, போற்றுதல் உமக்கே உரியதாகட்டும்,” என வியந்துரைத்திடும் மனிதன் மகிழ்வெய்துவான்.

எல்லாம் வல்லவரின் நேர்மைத் தன்மை சாட்சியாக! மறைவாயுள்ள ஒவ்வொரு பொருளும் மெய்ம்மைச் சக்தியின் வாயிலாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இறைவனின் சலுகைகள் அனைத்தும் அவரது அருளின் அடையாளமாகவே கீழே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நித்திய வாழ்வெனும் நீர், முற்றாக, ஒவ்வொரு மனிதர்பாலும் கொடுக்கப்படுகின்றது.

ஒவ்வொரு கோப்பையும் நல்லன்புக்குரியவரின் கரத்தினாலேயே ஏந்திவரப்படுகின்றது.

அருகில் வந்திடுவீராக, கணப்பொழுதும் தயங்கிடாதீர்.

பற்றின்மை எனும் சிறகுகளின் மீது மேலெழுந்து, இறைவனால் விதிக்கப்பட்டதற்கேற்ப, படைப்பு முழுவதற்கும் நிழல்தரும் ஸ்தானத்தை அடைந்திட்டோர் ஆசீர்வதிக்கப்படுவராக; அவர்களைக், கற்றோரின் வீண் கற்பனைகளோ, மண்ணுலகப் படையின் பெருங்கூட்டத்தினரோ, அவரது சமயத்திலிருந்து திசைத்திருப்புவதில் வெற்றிபெற்றாரிலர்.

மனிதர்களே, உங்களில், இவ்வுலகினைத் துறந்து, நாமங்களுக்கெல்லாம் பிரபுவாகிய இறைவனது அருகாமையை அடையக்கூடியவர் யார் இருக்கின்றார்? படைப்புப் பொருள் அனைத்தையும் விஞ்சிடும் எனது நாமத்தின் சக்தியின் மூலமாக, மனிதர்களுக்குச் சொந்தமான பொருள்களை அப்பால் வீசியெறிந்து விட்டு, கண்ணுக்குப் புலனாகும், புலனாகா பொருள்களை அறிந்துள்ளவரான இறைவன் அவனைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டுள்ளதனைத் தனது சக்தி முழுவதையும் கொண்டு இறுகப்பற்றிடும் ஒருவன் எங்குக் காணப்படுவான்? இவ்வாறுதான், அவரது வள்ளன்மை, மனிதர்பால் அனுப்பியருளப் பட்டுள்ளது, அவரது சான்று பூர்த்திச்செய்யப்பட்டு, அவரது நிரூபணமும் கருணையெனும் தொடுவானத்திற்கு மேல் பிரகாசித்துள்ளது.

நம்பிக்கைக்கொண்டு, “உலகங்கள் அனைத்தின் அன்புக்கும் உரியவரே, நீர் போற்றப்படுவீராக! ஒவ்வொன்றின் உணரும் உள்ளத்தின் ஆவலானவரே, உமது நாமம் உயர்வுறுமாக!” என வியப்புக்குரல் எழுப்பிடும் ஒருவன் பெற்றிடும் பரிசு அளப்பரியதாகும்.

எந்நாளில், கருணைமயமானவர், தன் இல்லம் நீங்கி, தனது நாமங்களின் பிரகாசங்களைப் படைப்புகள் அனைத்தின் மீதும் விழச் செய்த அந்த ஸ்தலத்தை நோக்கிச் செல்லும்போது, தொன்மையானவரது நா திருவாய் மொழிந்ததோ, அந் நாள் இதுதான்; பஹாவின் மக்களே, கழிபேருவகைமிக்க அவ்வொப்பற்ற நாளை நினைவுக்கூரும் இவ்வேளையில், அளப்பரிய ஆனந்தத்தினால் மகிழ்வுறுவீராக.

இறைவனே நமக்குச் சாட்சி.

மறைந்திருக்கும் அந் நாளின் இரகசியங்களை யாம் பகிரங்கப்படுத்துவோமாகில், எல்லாம்வல்லவரும், சர்வஞானியும், சர்வவிவேகியுமான இறைவனால் பாதுகாக்கப்பட்டோரைத் தவிர மண்ணுலகின் மீதும் விண்ணுலகங்களிலும் வாசம் செய்யும் மற்றனைவரும் மயக்கமுற்று மாள்வர்.

ஐயத்திற்கிடமற்ற அவரது நிரூபணங்களின் வெளிப்பாட்டாளரின் மீது இறைவனது வாசகங்களின் போதைதரும் பாதிப்பு அத்தகையதானது; ஏனெனில், அதனால், அவரது எழுதுகோல் மேலும் தொடர்ந்து நகர முடியவில்லை.

இவ் வார்த்தைகளைக் கொண்டு அவர் தமது நிருபத்தினை முடிக்கின்றார்: “அதிமேன்மையான, அதிசக்திமிக்க, அதிமிகுச்சிறந்த, சகலமும் அறிந்த, எம்மைத் தவிர இறைவன் வேறெவரும் இலர்.

XV

The Pen of Revelation exclaimeth: “On this Day the Kingdom is God’s!”

வெளிப்பாட்டின் எழுதுகோலானவர் வியந்துரைக்கின்றார்: “இந் நாளில் இராஜ்யம் இறைவனுடையதே!”

The Tongue of Power is calling: “On this Day all sovereignty is, in very deed, with God!”

சக்தி என்னும் நாவானவர் அழைப்பு விடுக்கின்றார்: “இந் நாளில் இறைமை அனைத்தும், உண்மையிலேயே, இறைவனிடமே உள்ளன!”

The Phoenix of the realms above crieth out from the immortal Branch: “The glory of all greatness belongeth to God, the Incomparable, the All-Compelling!”

மேலுலகங்களின் ஃபீனிக்ஸ் ஆனவர் நித்திய கிளையின் மீதிருந்து உரக்கக் குரலெழுப்புகின்றார்: “எல்லா மேன்மையின் மகிமையும், சகலத்தையும் நிர்ப்பந்திக்கவல்ல இறைவனுக்கே உரியதாகும்!”

மர்மப்புறாவானவர், என்றும் நிலையான சுவர்க்கத்தினில், தனது பேரின்பமிக்க உறைவிடத்தினின்று இவ்வாறு பிரகடனஞ் செய்கின்றார்: “இந்நாளில் அனைத்து வள்ளன்மையின் தோற்றிடம் தனி ஒருவரான, மன்னித்தருளும் இறைவனிடமிருந்தே உருவாகின்றது!” அரியாசனத்தின் பறவையானவர் புனிதமெனும் தனியிடத்தில் இன்னிசைக்குரல் எழுப்புகின்றார்:” அதி தலையாய மேம்பாட்டினை, இந் நாளில், ஈடிணையற்ற, அதி சக்திவாய்ந்த, அனைத்தையும் ஆட்கொள்ளும் இறைவனான அவரைத் தவிர வேறு எவருக்குமே சார்த்திக் கூற வியலாது!” “பொருள்கள் அனைத்தின் அதி உள்ளார்ந்த சாரமானது எல்லாப் பொருள்களினுள்ளும் சான்றுக்குரல் எழுப்புகின்றது; “இந்நாளில், எவருடன் யாருமே ஒப்பிடப்படாரோ, எவருடனும் யாருமே பங்காளியாகிட வியலாதோ, எவர் மனிதரனைவரின் ஒப்புயர்வற்ற பாதுகாப்பாளராகவும், அவர்களின் பாவங்களை மறைப்பவராகவும் உள்ளாரோ, அந்த இறைவனிடமிருந்தே, மன்னிப்பனைத்தும் பெருகி வருகின்றது!” பேரொளியின் சாரமானது எனது சிரசுக்கு மேல் அதன் குரலை எழுப்பியுள்ளது; அத்துடன், எந்த ஓர் எழுதுகோலோ, நாவோ விவரிக்க இயலாத அளவு அத்துணை உயர்விலிருந்து கூக்குரலெழுப்புகின்றது: “இறைவனே எனக்குச் சாட்சி! நாள்களின் நித்திய தொன்மை வாய்ந்த அவர், மாட்சிமை, சக்தி என்னும் இடைத்துணியை வரிந்து கட்டியவராய் வந்துள்ளார்.

பேரொளிமயமான, எல்லாம்வல்ல, அதி உயர்வான, சர்வஞானியான, சகலத்தையும் வியாபித்துள்ள, யாவற்றையும் கண்ணுறும், அனைத்தும் அறிவிக்கப்பட்ட, மாட்சிமைமிகு பாதுகாவலரும், நித்திய ஒளியின் தோற்றுவாயுமான அவரைத் தவிர இறைவன் வேறெவருமிலர்.

” அகநோக்கு வழங்கப்பட்ட சிலரைத் தவிர மற்றனைவரும் அவரிடமிருந்து விலகிப் போய்விட்டிருக்கும் இவ்வேளையில் இறைவனின் நல்விருப்பத்தினை நாடி, அவரது அன்பினைப் பற்றிக்கொண்டுள்ள எனது சேவகனே! கண்கள் குருடாகியுள்ள இந்நாளில் நீயோ அவரை நாடியிருப்பதன் காரணத்தால், இறைவன், தனது அருளினால், தாராளமான, மாசுபடுத்தவியலாத, என்றும் நிலையான பரிசினை உனக்கு வழங்கிடுவாராக.

இறைவனின் கட்டளையின்படியும், பொறாமைமிக்கோர், கெடுநோக்குடையோர் ஆகியோரின் கைகளிலிருந்தும் எம்மீது சொரிந்திட்ட பொழிவின் ஒரு தெளிப்பினை மட்டுமே யாம் உங்களுக்கு வெளிப்படுத்தினோமாயின், நீங்கள் கண்ணீர் விட்டுக் கதறியழுது, எமது அவல நிலைக்காக இரவு பகலாகத் துக்கத்தில் ஆழ்ந்திடுவீர் என்பதை அறிவீராக.

இவ்வெளிப்பாட்டின் அற்புதங்களைக் - கடவுளின் இறைமையையும், அதன் சக்தியின் மேன்மையையும் பிரகடனப்படுத்தும் அவ்வற்புதங்களை - உய்த்துணரவும் அடையாளங் கண்டிடவும் கூடிய நேர்மையுள்ளம் படைத்த ஓர் ஆன்மா கிடைப்பாரோ.

முற்றிலும் இறைவன் பொருட்டே, மக்களைத், தனிப்பட்ட முறையிலோ, வெளிப்படையாகவோ எச்சரித்திடும் அத்தகையதொரு மனிதர் எழுவாரோ.

அதனால், ஒருவேளை, அவர்கள் தங்களை எழுச்சியுறச்செய்துகொண்டு, அநீதியிழைப்போர் அத்துணைக் கொடுமையாகத் துன்புறுத்தியுள்ள இத்தவறிழைக்கப்பட்டோனுக்கு உதவிடக்கூடும்.

பரிசுத்த ஆவியின் குரலானது எனக்குப் பின்னாலிருந்து இவ்வாறு கூறி அழைப்பு விடுக்கின்றதென நினைக்கின்றேன்: உமது பேச்சின் மையக் கருத்தைப் பல்வகைப் படுத்துவீராக; உமது தொனியையும் மாற்றுவீராக; இல்லையெனில், உமது வதனத்தின்மீது தனது பார்வையை ஊன்றியுள்ள அவரது உள்ளம் சோகமுற்றிடும்.

கூறுவீராக: இறைவனின் கிருபை, வலிமை ஆகியவற்றின் மூலம், யான், கடந்த காலத்தில், எவரது உதவியையும் நாடினேனிலன், அவ்வாறே, வருங்காலத்திலும் எவரது உதவியையும் நாடப்போவதுமில்லை.

ஈராக் தேசத்திற்கு எமது நாடுகடத்தலின்போது, மெய்ம்மைச் சக்தியின் மூலம், எமக்கு உதவி புரிந்தவர் அவரே.

மண்ணுலக இனங்கள் எம்முடன் போராடிக்கொண்டிருந்த பொழுது தமது பாதுகாப்பினைக் கொண்டு எமக்கு நிழல் தந்தவரும் அவரே.

மறுப்போரையும் தீய எண்ணம் படைத்தோரையும் தவிர, மற்றெவரும் ஒப்புக் கொள்ளத் தவறாத அளவு, அரச கம்பீரத்துடன் யான் அந்நகரிலிருந்து வெளியேற வகை செய்தவரும் அவரே.

கூறுவீராக: இறைவனைச் சார்ந்திருத்தலே எனது சேனை; அவரில் எனது நம்பிக்கையே எனது மக்கள்.

எனதன்பே எனது அளவுகோல்; அதிசக்திமிக்க, ஒளிமயமான, நிபந்தனைக்குட்படாத, சகலத்திற்கும் மேலான இறைமைமிகு பிரபுவான ஆண்டவனின் நினைவே எனது தோழன்.

வழிப்போக்கரே, இறையன்பு என்னும் பாதையில் எழுந்து, அவரது சமயத்திற்கு உதவுவீராக.

கூறுவீராக: மனிதர்களே, இவ்வுலகின் வீண் தற்பெருமைகளுக்காகவோ, விண்ணுலக மகிழ்வுக்காகவோ, இவ்விளைஞனைப் பண்டமாற்று செய்திடாதீர்.

ஒரே மெய்க் கடவுளின் நேர்மைத்தன்மை சாட்சியாக! அவரது ஓர் உரோமம் விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலுமுள்ள அனைத்தையும் விஞ்சிடவல்லது.

மனிதர்களே, கவனமாயிருங்கள், இல்லையெனில், நீங்கள் கொண்டிருக்கும் தங்கத்திற்காகவும், வெள்ளிக்காகவும் அவரைப் பண்டமாற்றுச் செய்ய ஆசைக்கொண்டிடப் போகின்றீர்.

அவரைத் தவிர வேறெதுவுமே உங்களுக்குப் பலனளிக்காத நாளில், ஒவ்வொரு தூணும் நடுக்கமுற்றிடும் அந்நாளில், மனிதர்களின் உடல்களே புல்லரித்திடும்போது, கண்களெல்லாம் பீதியினால் மேலே நோக்கிடும் போது, அவரது நேசமே உங்கள் ஆன்மாக்களுக்கு அரும்பெருங் களஞ்சியமாகட்டும்.

கூறுவீராக: மனிதர்களே! இறைவனுக்கு அஞ்சுங்கள்.

அவரது வெளிப்பாட்டிலிருந்து ஆணவத்துடன் அப்பால் திரும்பிடாதீர்.

இறைவனின் முன்பாகத் தரையில் விழுந்து வணங்கி, பகல் வேளையிலும் இரவுக் காலங்களிலும் அவரது புகழைக் கொண்டாடுங்கள்.

பிரபஞ்சத்தின் பெரும் நீர்ப்பரப்புகளே அதன் சுடரினைத் தணிக்கச் சக்தியற்றுப் போகுமளவு, உனதான்மா, பூமியின் அதி மையத்தில் எரிந்திடும் இவ்வணையா தீச்சுடரினால் கொழுந்து விட்டெரியட்டும்.

ஆகவே, உனது பிரபுவின் நாமத்தை உச்சரிப்பாயாக; அதனால், ஒருவேளை, எமது சேவகர்களிடையே உள்ள கவனமற்றோர் உனது வார்த்தைகளால் எச்சரிக்கப்படக்கூடும்; நேர்மையாளரின் உள்ளங்களும் களிப்படையக்கூடும்.

XVI

கூறுவீராக: மனிதர்களே! இது ஓர் ஒப்பற்ற நாள்.

அவ்வாறே ஒப்பற்றதாய் இருக்க வேண்டும், நாடுகளின் ஆவலாகியவரின் புகழைப் பாடிடும் நா; அவ்வாறே ஒப்பற்றதாய் இருக்கவேண்டும் நாடுகளின்ஆவலாகிய அவரின் பார்வையில் ஏற்புடையதாய் இருக்க விரும்பும் செயல்.

மனித இனம் அனைத்துமே இந்நாளுக்காக ஏங்கி வந்துள்ளது.

அதனால், ஒருவேளை அது தனது ஸ்தானத்திற்கு உகந்ததனை நிறைவுச் செய்து, அதன் முன்விதிக்கப்பட்டதற்குத் தகுதியுடையதாகக்கூடும்.

அனைத்திற்கும் பிரபுவான அவரை அறிந்துகொள்வதிலிருந்து இவ்வுலகக் காரியங்கள், தன்னைத் தடைச் செய்ய விட்டுவிடாத மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவராவார்.

நகரத்தின் தகர்வோ, மலை துகளாக்கப்படுவதோ, மண்ணுலகமே இரண்டாகப் பிளக்கப்படுவதோ, எதுவுமே அதன் உணர்ச்சியற்ற நிலையினை உருக்குலையச் செய்யவியலாத அளவு மனித இதயம் அத்துணைக் குருடாகிவிட்டுள்ளது.

திருமறைகளில் கொடுக்கப்பட்டுள்ள மறைக்குறிப்புகள் தெளிவுப்படுத்தப்பட்டுவிட்டன.

அவற்றுள் குறிக்கப்பட்டுள்ள அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தீர்க்கதரிசனக் கூக்குரல் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றது.

இருந்தும், இறைவன் வழிநடத்த விரும்பியவர்களைத் தவிர, மற்றனைவரும் தங்களின் கவனமின்மை என்னும் போதையில் குழப்பமடைந்துள்ளனர்! எவ்வாறு இவ்வுலகம், ஒவ்வொரு நாளும், ஒரு புதிய பேராபத்தினால் வேதனைக்குள்ளாக்கப்படுகின்றது என்பதைப் பாருங்கள்.

அதன் இன்னல்கள் தொடர்ந்து ஆழமாகிக்கொண்டே போகின்றன.

சூரி-இ-ராய்ஸ் (ராய்ஸ் நிருபம்) வெளிப்படுத்தப்பட்ட கணத்திலிருந்து இந்நாள் வரை, இவ்வுலகம் அமைதி பெற்றதுமில்லை; அதன் மக்களது இதயங்கள் சாந்தம் அடைந்ததுமில்லை.

ஒரு சமயம் அது சச்சரவுகளாலும், சர்ச்சைகளாலும் கலக்கமுற்றிருந்தது.

வேறொரு சமயத்தில் அது போர்களால் கொந்தளிப்புக்குள்ளாகி, தீராத பிணிகளுக்கு இரையாகிக் கிடந்தது.

உண்மையான மருத்துவர் சிகிச்சையளிப்பதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளார்; அதேவேளையில், திறமையற்ற மருத்துவர்கள் சலுகை வழங்கப்பட்டுச், செயல்படுவதற்குப் பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதன் பிணி நம்பிக்கைக்கே சற்றும் இடமில்லாத நிலையை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

துரோகம் என்னும் தூசி மனிதரின் இதயங்களை இருள்சூழச் செய்து, அவர்களின் கண்களைக் குருடாக்கியுள்ளது.

இன்னும் சிறிது காலத்திற்குள், இறைவனது நாளில், அவர்களின் கைகள் ஆற்றியவற்றின் பலன்களை அவர்களே புரிந்துகொள்வர்.

இவ்வாறாகத்தான், அதி சக்திமிக்கவரும், எல்லாம் வல்லவருமான அவரால் இடப்பட்ட கட்டளைக்கேற்ப யாவும் அறிவிக்கப் பட்டவர் உங்களை எச்சரிக்கின்றார்.

XVII

உயர்வுமிக்க அறிவிப்பெனும் அவர் சாட்சியாக! கருணைமயமானவர், ஐயப்பாட்டிற்கிடமற்ற இறைமையுடன் வந்துள்ளார்.

துலாக்கோல் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.

; மண்ணுலகில் வாழ்வோர் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு விட்டனர்.

எக்காள ஒலி எழுப்பப்பட்டு விட்டது; அதோ, கண்கள் அனைத்தும் திகிலடைந்து மேலே உற்று நோக்குகின்றன, இறைவனது வாசகங்களின் மூச்சினால் எழுச்சியுறச் செய்யப்பட்டோரையும், பொருள்கள் அனைத்தினின்றும் பற்றுகளை அறுத்திட்டோரையும் தவிர, விண்ணுலகங்களிலும், மண்ணுலகிலும் உள்ள அனைவரின் இதயங்களும் நடுக்கங் கொண்டுள்ளன.

பூமி, அதன் நற்செய்திகளை அறிவித்திடும் நாள் இதுவே.

நீங்கள் உணரக் கூடுமாயின், அநீதியிழைப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளவர்களே அவளது சுமைகள்.

வீண் கற்பனை எனும் சந்திரன் பிளவுறச் செய்யப்பட்டுள்ளது; வானமோ தெளிவாய்த் தோன்றிடும் புகைப்படலத்தைக் கிளப்பிவிட்டுள்ளது.

எல்லாம் வல்லவரும், அதிசக்திமிக்கவருமான உங்களின் ஆண்டவரிடம் அச்சத்தினால் திகிலடைந்து மனிதர்கள் வீழ்த்தப் பட்டுக் கிடப்பதை நாம் பார்க்கின்றோம்.

முரசறைபவர் முரசறைந்துவிட்டார்.

அதனால், மனிதர்கள் வெட்டிச் சிதைக்கப்பட்டுள்ளனர்; அத்துணைக் கடுமையானது அவரது சீற்றம்; இடப்பக்கத்தின் மக்கள் பெருமூச்சு விட்டு வருந்துகின்றனர்.

வலப் பக்கத்தின் மக்கள் விழுமிய வாழ்விடங்களில் உய்கின்றனர்: கருணைமயமானவரின் கரங்களிலிருந்து, உண்மையுயிர் எனும் மதுரசத்தினைப் பருகுகின்றனர்; மெய்யாகவே, அவர்களே பேரின்பத்தினில் திளைப்பவர்கள்.

பூமி ஆட்டங்கண்டுள்ளது; பருவதங்கள் அழிக்கப்பட்டுள்ளன; தேவகணங்கள், எமக்கு முன்னால் அணியணியாகத் தோன்றியுள்ளன.

பெரும்பாலான மக்கள் தங்களின் போதையில் குழப்பமுற்றுத் தங்களின் முகங்களில் சினத்தின் அறிகுறிகளை அணிந்து கொண்டுள்ளனர்.

அந்நிலையில்தான், யாம், நேர்மையற்ற மனிதர்களை ஒன்று திரட்டியுள்ளோம்.

அவர்கள் தங்களின் விக்கிரகத்தை நோக்கி விரைவதை யாம் காண்கின்றோம்.

கூறுவீராக: இந்நாளில், இறைவனின் கட்டளையிலிருந்து எவருமே பாதுகாப்புப் பெறவியலாது.

இது, உண்மையாகவே, வேதனை நிறைந்த நாள்.

அவர்களை வழி தவறிப்போகச் செய்தோரை யாம் அவர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றோம்.

அவர்களும் அவர்களைக் கண்ணுறுகின்றனர்; ஆனால், அவர்களை அடையாளங் கண்டுகொள்ளவில்லை.

அவர்களது கண்கள் போதையில் உள்ளன; உண்மையிலேயே, அவர்கள் குருடர்கள்.

அவர்கள் உதிர்த்திட்ட அவதூறுகளே அவர்களின் ஆதாரங்கள்; அவர்களின் அவதூறுகள் ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியுமான இறைவனின் கண்டனத்துக்குரியவை.

தீய உணர்வு அவர்களின் இதயங்களில் விஷமத்தனத்தைத் தூண்டிவிட்டிருக்கின்றது.

எவருமே தடுக்கவியலாத சித்ரவதையினால் அவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

அநீதியின் பணியாளர்களது பதிவுப்பட்டியலை ஏந்தியவாறு அவர்கள் துஷ்டர்களின்பால் விரைகின்றனர்.

அத்தகையவையே அவர்களின் செயல்கள்.

கூறுவீராக: வானுலகங்கள் ஒன்றாக மடிக்கப்பட்டு விட்டன.

மண்ணுலகமே அவரது பிடியில் இருக்கின்றது.

ஊழல்புரிவோர், அவர்களின் உச்சிக் குடுமியினால் பற்றப்பட்டுள்ளனர்.

ஆனால், அவர்கள் இன்னமும் அதனை உணர்ந்தாரிலர்.

அவர்கள், மாசுற்ற நீரைப் பருகுகின்றனர்; இருந்தும் அதனைத் தெரிந்துகொள்ளவில்லை.

கூறுவீராக: கூக்குரல் எழுப்பப்பட்டுவிட்டது.

மனிதர்கள் தங்களின் கல்லறையினின்று வெளிவந்துவிட்டனர்; கண்விழித்தெழுந்து, அங்குமிங்கும் வெறித்துப் பார்க்கின்றனர்.

சிலர் கருணைமிக்கக் கடவுளின் அரசவையை அடைய விரைந்திடுகின்றனர்; மற்றவர்கள் நரகத் தீயில் குப்புற வீழ்ந்து கிடக்கின்றனர்; அவ்வேளை, மேலும் சிலர், மனக்குழப்பத்தில் தங்களையே மறந்து விட்டுள்ளனர்.

இறைவனது வாசகங்கள் வெளிப்படுத்தப்பட்டு விட்டன, இருந்தும், அவர்கள் அவற்றிலிருந்து அப்பால் திரும்பி விட்டிருக்கின்றனர்.

அவரது நிரூபணம் தெளிவுப்படுத்தப்பட்டுவிட்டது; ஆயினும் அவர்கள், அதனை அறியாதிருக்கின்றனர்.

கருணைமயமானவரின் வதனத்தைக் கண்ணுறும் பொழுது, கேளிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவர்களின் சொந்த முகங்கள் சோகமுறுகின்றன.

நரகத் தீயின்பால் விரைகின்றனர்; தவறாக அதனை ஒளியெனப் பொருள் கொள்கின்றனர்.

அவர்கள் பாசத்துடன் கற்பனைச் செய்வது இறைவனிடமிருந்து எத்துணைத் தூரமானது! கூறுவீராக: நீங்கள் களிப்புறுகின்றீரோ, சீற்றத்தினால் வெடிக்கின்றீரோ; வானங்கள் பிளக்கப்பட்டுவிட்டன.

பேரொளிமிக்க இறைமையுடன், ஆண்டவன் கீழிறங்கி வந்துவிட்டார்.

படைக்கப்பட்ட பொருட்களெல்லாம் வியப்புக்குரல் எழுப்புவது கேட்கின்றது: “அரசு, எல்லாம் வல்ல, சகலமும் அறிந்த, சர்வவிவேகியான இறைவனுடையதே.

” மேலும், சமயநம்பிக்கையற்றோரின் கரங்கள் ஆற்றியுள்ளவற்றின் பயனாக, யாம், துன்பந்தரும் சிறையினில் அடைக்கப்பட்டும், எண்ணற்ற கொடுங்கோன்மைச் செயல்களினால் சூழப்பட்டும் இருப்பதை நீங்கள் அறிவீராக.

ஆயினும், இம்மண்ணுலக இன்பம் எதுவுமே, இவ்விளைஞன் அனுபவித்திட்ட மகிழ்ச்சியுடன் ஒப்பிடவியலாது.

இறைவன் சாட்சியாக! கொடுங்கோலரின் கைகளில் அவர் அனுபவித்தத் தீங்கு அவரது உள்ளத்தினை வருத்தமுறவோ, அவரது உண்மையை மறுத்திட்டோரின் உயர்வு அவரைச் சோகமுறவோ செய்திட இயலாது.

கூறுவீராக: கொடுந்துன்பங்களே எந்தன் வெளிப்பாட்டின் தொடுவானமாகும்.

அருள் என்னும் பகல் நட்சத்திரம் அதற்கு மேல் பிரகாசிக்கின்றது; மனிதர்களின் பயனற்றக் கனவுகள் என்னும் மேகங்களோ, ஆக்கிரமிப்பாளரின் வீண் கற்பனைகளோ அதனைத் தெளிவிழக்கச் செய்யவியலாத ஓர் ஒளியினைப் பாய்ச்சுகின்றது.

உங்கள் பிரபுவின் அடிச்சுவடுகளைப் பின்தொடருங்கள்; அவர் உங்களை நினைவுக்கூர்வதைப் போலவே நீங்களும் அவரது ஊழியர்களை நினைவுக்கூருங்கள்.

கவனமற்றோரின் ஆரவாரமோ பகைவரின் வாளோ உங்களை அச்சுறுத்தித் தடைச்செய்ய விட்டிடாது, உங்கள் பிரபுவின் இனிமையான சுவைகளை எங்கும் பரப்பிடுங்கள்; ஒரு கணத்துக்கும் குறைவான நேரமேனும் உங்கள் பிரபுவின் சேவையில் தயக்கங் காட்டாதீர்.

என்றும் மன்னித்திடும், அதி வள்ளன்மை மிகுந்த, உங்கள் பிரபுவின் வெற்றி பிரகடனம் செய்யப்படவிருக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

XVIII

கூறுவீராக: விவேகம், புரிந்துகொள்ளல் எனும் மென்மைமிகு மூலிகைகள் உங்களின் இதயங்களெனும் மண்ணில் துளிர்த்திடக் கூடும் என்பதற்காக யாம் எமது அரியாசனத்தினின்று தெய்வீக வசனங்களென்னும் நதிகளை வெளிப்படச் செய்துள்ளோம்.

நன்றியுடையோராக மாட்டீரா? தங்களின் பிரபுவை வழிபடுவதை அகந்தையுடன் மறுத்து இகழ்பவர்கள் ஒதுக்கித்தள்ளப்படுவர்.

எமது வாசகங்கள் பலமுறை அவர்களிடம் ஒப்புவிக்கப்பட்டபோதும், அவர்கள் அதனை அகந்தையுடன் இகழ்வதிலும், தங்களின் படுமோசமான மீறலிலும் பிடிவாதமாய் இருந்தனர்; இருந்தும், அதனை அவர்கள் அறிந்தாரிலர்.

அவரிடத்தில் நம்பிக்கை அற்றோரைப் பொறுத்த மட்டில், அவர்கள், ஒரு கரும் புகைப்படலத்தின் நிழலிலேயே இருந்திடுவர்.

அவர்கள், தங்களைக் கேளிக்கைகளில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையிலேயே, அவர்களுக்கு “நேரம்” வந்து விட்டது.

அவர்கள் தங்களின் உச்சிக் குடுமியால் பிடிக்கப்பட்டிருக்கின்றனர்; இருந்தும், அதனை அறிந்தாரிலர்.

நிச்சயமாக வரவேண்டியது, திடீரென வந்து விட்டது; அதனிடமிருந்து அவர்கள் எவ்வாறு அஞ்சி ஓடுகின்றனர் என்பதைப் பாருங்கள்! தவிர்க்கவியலாதது நிகழ்ந்துவிட்டது; எவ்வாறு அதனைத் தங்களுக்குப் பின்னால் வீசியெறிந்துவிட்டுள்ளனர் என்பதைப் பாருங்கள்! இதுவே, ஒவ்வொரு மனிதனும் தன்னிடமிருந்து தானே பறந்தோடிடும் நாள் என்றால், நீங்கள் அதனை உணரக்கூடியவராயின், அவன் தனது சுற்றத்தார்களிடம் எவ்வாறு நடந்து கொள்வான் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

கூறுவீராக: இறைவன் சாட்சியாக! எக்காளத்தில் இருந்து ஓசை எழுப்பப்பட்டுவிட்டது, அந்தோ, மனித இனமோ எம் முன்னால் மயங்கி வீழ்ந்து விட்டுள்ளது! முன்னறிவிப்பாளர் கூக்குரல் எழுப்பி விட்டார், அழைப்பாணையாளர் தனது குரலை உயர்த்தி இவ்வாறு கூறுகின்றார்: “இராச்சியம், அதி சக்திமிக்க, ஆபத்தில் உதவிடும், சுயஜீவியான இறைவனுடையதே.

” இதுவே, கண்களெல்லாம் பீதியினால் திகைப்புற்று மேலே நோக்கிடும் நாள்; சகலமும் அறிந்தவரும், சர்வ விவேகியுமான உங்களின் பிரபுவானவர் மீட்டிட விரும்பியவர்களைத் தவிர, மண்ணுலகில் வசிக்கும் மற்றவர்களின் உள்ளங்கள் நடுக்கமுற்றிடும் நாள்.

கருணை மயமான இறைவனால், ஒளிமிக்க உள்ளம் வழங்கப்பட்டவர்களைத் தவிர, மற்ற முகங்கள் அனைத்தும் இருளடைந்து விட்டிருக்கின்றன.

வெளிப்படையாகவே, எல்லாப் பேரொளிக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரான இறைவனின் வதனத்தைக் கண்ணுற மறுத்திட்ட மனிதர்களின் கண்கள், மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கின்றன.

கூறுவீராக: குர்-ஆனை நீங்கள் படித்ததில்லையா? அதனைப் படியுங்கள்; ஒருவேளை நீங்கள் உண்மையை அறிந்திடக் கூடும்; ஏனெனில், மெய்யாகவே, இத்திருநூலே நேரான வழி.

விண்ணுலகங்களிலும், மண்ணுலகிலும் உள்ள அனைவருக்கும் இதுவே இறைவனின் வழி.

குர்-ஆன் குறித்து நீங்கள் கவனக்குறைவாய் இருந்ததனால், பாயான் உங்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளது எனக் கருதப்படலாகாது.

உங்கள் கண்களுக்கு முன்னால் அது திறந்திருப்பதைப் பாருங்கள்.

அதன் வசனங்களைப் படியுங்கள், அதனால், நீங்கள் ஒருவேளை, இறைவனின் திருத்தூதர்களைத் துயரமடையவும் வருத்தமடையவும் செய்யக் கூடியதனைத் தவிர்த்திடக் கூடும்.

உங்களின் கல்லறைகளிலிருந்து விரைவாக வெளிவருவீராக.

எத்துணை காலந்தான் தூங்கிக் கொண்டிருப்பீர்கள்? எக்காளத்தின் முழக்கம் இரண்டாவது முறையாக எழுப்பப்பட்டு விட்டது.

யார்மீது உங்களின் பார்வையைச் செலுத்திக் கொண்டிருக்கின்றீர்கள்? உங்களின் கருணைக் கடவுளான பிரபு இவரே.

எவ்வாறு நீங்கள் அவரது அடையாளங்களை மறுக்கின்றீர்கள் என்பதைப் பாருங்கள்! ஒரு பெரும் நடுக்கத்தினால் பூமி அதிர்வடைந்துள்ளது; (அவள்) தனது சுமைகளை வீசியெறிந்து விட்டுள்ளாள்.

அதனை நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீரா? கூறுவீராக: மலைகள் எவ்வாறு கம்பளிப் பஞ்சு சிதைவைப் போன்று ஆகியுள்ளன என்பதையும், எவ்வாறு மக்கள், இறைவனது சமயத்தின் அச்சுறுத்தும் மாட்சிமையினால் மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர் என்பதையும் கண்டிடமாட்டீரா? அவர்களின் வீடுகள் எவ்வாறு பாழடைந்த, உறைவோரற்றக் கட்டடங்களாகவும், அவர்களே மூழ்கடிக்கப்பட்ட விருந்தோம்புவோராய் ஆகிவிட்டிருப்பதைப் பாருங்கள்.

இதுவே, கருணைமயமானவர், தெள்ளத்தெளிவான இறைமை என்னும் ஆடை அணிந்து, அறிவு என்னும் மேகத்தின்மீது கீழிறங்கி வந்துள்ள நாள்.

அவர் மனிதர்களின் செயல்களை நன்கு அறிந்திருக்கின்றார்.

நீங்கள் புரிந்துகொள்ள இயலுமாயின், எவரது பேரொளியினை யாருமே தவறாகப் புரிந்துகொள்ள வியலாதோ, அவரேதான் இவர்.

ஒவ்வொரு சமயத்தின் சுவர்க்கமும் பிளவுற்றுள்ளது; மானிடர்களின் புரிந்துகொள்ளல் எனும் பூமி வெடித்துள்ளது; இறைவனின் தூதகணங்கள் கீழிறங்கி வருவது தெரிகின்றது.

கூறுவீராக: இதுவே பரஸ்பர சூழ்ச்சிகாலம்; நீங்கள் தப்பி ஓடுவது எங்கே? மலைகள் மறைந்துவிட்டுள்ளன; விண்ணுலகங்கள் ஒன்றாக மடிக்கப்பட்டுள்ளன; நீங்கள் அதனைப் புரிந்திட இயலுமாயின், மண்ணுலகம் முழுவதுமே அவரது கைப்பிடிக்குள் அடக்கப்பட்டுள்ளது.

உங்களைப் பாதுகாக்கக் கூடியவர் யார்? கருணைமயமான அவர் மீது ஆணை, எவராலும் இயலாது! எலலாம்வல்லவரும், ஒளிமயமானவரும், உதவிடுபவருமான இறைவனைத் தவிர வேறு எவராலும் இயலாது.

ஒவ்வொரு மகளிரும் தனது கருப்பையினில் தாங்கியிருந்த சுமையினை இறக்கி விட்டுள்ளனர்.

மனிதரும் தூதகணங்களும் ஒன்றாய்த் திரட்டப்பட்டிருக்கும் நாளான இந் நாளில் மனிதர்கள் மயக்கத்தில் இருப்பதை யாம் காண்கிறோம்.

கூறுவீராக: இறைவனைக் குறித்துச் சந்தேகம் ஏதேனும் உள்ளதா? தனது அருள் என்னும் விண்ணுலகிலிருந்து, எவ்வாறு, அவர், சக்தி என்னும் இடைத்துணியை வரிந்துகட்டியவராக, இறைமை வழங்கப்பட்டு வந்துள்ளார் என்பதைப் பாருங்கள்?அவரது அடையாளங்கள் குறித்து சந்தேகம் ஏதேனும் உள்ளதா? உங்கள் கண்களைத் திறந்து அவரது தெளிவான ஆதாரத்தினைக் கண்ணுறுங்கள்.

நரகம் தீப்பற்றி எரியச் செய்யப்பட்டுள்ள அவ்வேளையில், சுவர்க்கம் உங்களது வலப்பக்கத்தில் இருக்கின்றது; அது உங்கள் அருகே கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன் விழுங்கிடும் தீக்கொழுந்தினைப் பாருங்கள்.

உங்கள்பால் எமது கருணையின் அடையாளமாக, சுவர்க்கத்தினுள் நுழைய விரைந்து, கருணைமயமானவரின் கரங்களிலிருந்து, உண்மையுயிர் என்னும் மதுரசத்தினைப் பருகுங்கள்.

பஹாவின் மக்களே, சுவைத்துப் பருகுவீராக.

உண்மையாகவே, அதுவே உங்களுக்கு நன்மைபயக்க வல்லது.

இதுதான் இறைவனின் அருகிலுள்ளோர் அடைந்துள்ளது.

குர்-ஆனிலும், பின்னர் பாயானிலும், உங்களின் பிரபுவிடமிருந்து உங்களுக்கு ஒரு பரிசாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ள வழிந்தோடிவரும் நீர் இதுவே.

அதனைப் பருகிடுவோர் ஆசி பெற்றோராவர்.

என்பால் முகத்தைத் திருப்பியுள்ள எனது ஊழியனே! உனக்கு, இந் நிருபம், இச் சிறைதனில் அனுப்பி வைக்கப்பட்டதற்காக, இறைவனுக்கு நன்றிச் செலுத்துவாயாக; அதனால் நீ, ஒளிமயமான, சகலமும் அறிந்த உனது பிரபுவின் நாள்களில் உள்ள மக்களை, நினைவூட்டக் கூடும்.

இவ்வாறாகத்தான், யாம், எமது விவேகம், உச்சரிப்பு என்னும் நீரைக் கொண்டு உனது நம்பிக்கையெனும் அடித்தளத்தினை அமைத்துள்ளோம்.

மெய்யாகவே, அந் நீரைக் கொண்டுதான் உனது பிரபுவின் அரியாசனம் எழுப்பப் பட்டுள்ளது.

“அந்நீரின் மீதுதான் அவரது அரியாசனம் நிலைத்து நின்றுவந்துள்ளது.

” உனது உள்ளத்தினில் நீ இதனைத் தியானிப்பாயாக, அதனால் நீ, அதன் பொருளைப் புரிந்து கொள்ளக்கூடும்.

கூறுவாயாக: உலகங்களுக்கெல்லாம் பிரபுவான இறைவனுக்கே போற்றுதல் உரியதாகட்டும்.

XIX

அறியவியலாத சாராம்சமும், தெய்வீக உருவுமானவரான இறைவன் சரீர வாழ்வு, உயர்தல், தாழ்தல், வெளியேற்றம், பின்னோக்கிச் செல்லல் முதலிய ஒவ்வொரு மானிட இயல்பையும்விட அதிமேன்மையானவர் என்பது பகுத்துணரவல்ல, தெளிவுப்பெற்றுள்ள ஒவ்வோர் ஆன்மாவுக்கும் வெளிப்படையானது.

மானிட நாவானது அவரது புகழினைப் போதுமான அளவு இயம்பிடுவதோ, மானிட இதயம் அவரது ஆழமறியவியலாத மர்மத்தினைப் புரிந்துகொள்வதோ என்பது அவரது ஒளியிலிருந்து வெகுதூரமானது.

தமது சாராம்சம் என்னும் தொன்மைமிகு நித்தியத்தினுள் அவர் இந்நாள்வரை மறைக்கப்பட்டே வந்துள்ளார், இனியும் அவ்வாறே இருந்தும் வருவார்.

தமது மெய்ம்மையில் அவர் என்றென்றும் மனிதர்கள் பார்வையிலிருந்து திரை மூடப்பட்டே இருப்பார்.

“காட்சி எதுவுமே அவரை உள்ளடக்குவதில்லை; ஆனால், அவரே காட்சியனைத்தையும் உள்ளடக்குகின்றார். அவர் அதிநுட்பமானவர்; சகலத்தையும் உணர்ந்தவர்.”

இவ்வாறு நாள்களுக்கெல்லாம் தொன்மையானவர் குறித்த அறிவின் கதவானது உயிரினங்கள் அனைத்திற்குமுன் அடைக்கப்பட்டபோது, எல்லையற்ற கிருபையின் மூலமானவர் “அவரது கிருபை எல்லாப் பொருள்களையும் கடந்துள்ளது; எனது கிருபை அவையனைத்தையும் சூழ்ந்துள்ளது,” என்னும் அவரது கூற்றுக்கொப்ப புனிதத்தின் அந்த ஒளிமிகு இரத்தினங்களை உன்னத உருவாகிய மனித மேனியின் அமைப்பில் செய்து மனிதர்களின் மத்தியில் அவதரிக்கச் செய்துள்ளார்.

அதனால், அவர்கள் என்றும் மாறாத திருவுருவானவரது மர்மங்களை உலகின்பால் இயம்பி அவரது என்றும் இறவாத சாராம்சத்தின் நுண்ணயங்களைக் கூறிடவியலும்.

பவித்திரமான இக்கண்ணாடிகள், தொல் புகழின் இப் பகலூற்றுகள் யாவரும் இம் மண்ணுலகில் பிரபஞ்சத்தின் மையக்கோளாகவும், அதன் சாராம்சமாகவும், இறுதிநோக்கமாகவும் விளங்கி வருபவரது விளக்கவுரையாளர்களே ஆவர்.

அவரிடமிருந்துதான் அவர்களது அறிவும் சக்தியும் பெறப்படுகின்றன; அவரிடமிருந்துதான் அவர்களது இறைமைப் பெறப்படுகின்றது.

அவர்களது வதனத்தின் அழகானது வேறெதுவுமின்றி அவரது உருவின் ஒரு பிரதிபலிப்பே.

அவர்களது வெளிப்பாடானது அவரது இறவாப் புகழின் ஓர் அடையாளமே.

அவர்களே தெய்வீக அறிவின் கருவூலங்கள்.

வானுலக விவேகத்தின் களஞ்சியங்களும் அவர்களே! அவர்கள் மூலமாகத்தான் எல்லையற்றதொரு கிருபை அனுப்பப்படுகின்றது.

அவர்களின் வாயிலாக என்றும் மங்காத அந்த ஒளி வெளிப்படுத்தப்படுகின்றது....

மங்காப் புகழின் ஒளியைப் பிரதிபலித்திடும் புனிதத்தின் இத் திருக்கூடாரங்கள், இப் பிரதான கண்ணாடிகள் கண்ணுக்குப் புலப்படாதவற்றிலெல்லாம் கண்ணுக்குப் புலனாகாதவராக விளங்கும் அவருடைய திவ்விய வெளிப்படுத்தல்களே ஆவர்.

தெய்வீகப் பண்பின் இம் மாணிக்கங்களின் வெளிப்பாட்டினால், அறிவு, சக்தி, அரசாட்சி, இராஜ்யம், கருணை, விவேகம், மகிமை, கொடை, கிருபை போன்ற இறைவனின் சகல நாமங்களும், நற்பண்புகளும் வெளிப்படுத்தப்பட்டன இறைவனின் இந் நற்பண்புகள், குறிப்பிட்ட இறைத்தூதர்கள் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு, மற்ற இறைத்தூதர்களுக்கு வழங்கப்படாமல் இருந்ததே இல்லை. இனியும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.

எவ்விதப் பாரபட்சமுமின்றி இறைவனது தூதர்கள் அனைவரும் அவரது விருப்பத்திற்குரியவர்களே; தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும், புனிதமானவர்களுமான அவரது தூதர்கள் யாவரும் எவ்வித வேறுபாடுமின்றி அவரது நாமங்களைத் தாங்கிச் செல்பவர்களும், அவரது நற்பண்புகளின் வடிவங்களுமாவர்.

அவர்கள் தங்களது வெளிப்பாடுகளின் அளவின் ஆழத்திலும், தங்களது ஒளியின் ஒப்பீட்டு ஆற்றலில் மட்டுமே வேறுபடுகின்றனர்.

அவர் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளதாவது: “அவதாரங்களுள் சிலரை மற்றவர்களை விஞ்சிடச் செய்துள்ளோம்.

” எனவே, ஒளிமிகு இத்திருக்கோயில்களுக்குள் இந்த நற்பண்புகள் சிலவற்றின் ஒளி மனிதர்களின் கண்களுக்கு வெளிப்படையாக வெளிப்படுத்தப்பட்டோ, வெளிப்படுத்தப் படாமலோ இருப்பினுங்கூட, இறைவனின் இந்த அவதாரங்கள், தேர்ந்தெடுக்கப்பட்டோர் ஆகியோரின் திருக்கூடாரங்களுக்குள் அவரது முடிவில்லா நாமங்களும், மேன்மைமிகு நற்பண்புகளும் பிரதிபலிக்கப்பட்டுள்ளன என்பது தீர்க்கமுடன் தெளிவாகியுள்ளது.

கடவுளது குறிப்பிட்ட ஒரு நற்பண்பு பற்றற்ற இச் சாராம்சங்களினால் வெளிப்படையாக வெளிப்படுத்தப்படவில்லை என்பதனால் அது கடவுளது நற்பண்புகளின் பகலூற்றுகளும், அவரது புனித நாமங்களின் கருவூலங்களும் அந்த நற்பண்பினை உண்மையில் பெற்றிருக்கவில்லை எனப் பொருள்படாது.

ஆதலின், ஒளிரப்பட்டுள்ள இவ்வான்மாக்கள், அழகுமிகு இவ் வதனங்கள் ஒவ்வொருவரும் வெளித்தோற்றத்திற்கு மண்ணுலக மாட்சிமைகள் அனைத்தையும் இழந்துவிட்டதுபோல் தோன்றிடினும், அவர்கள் அரசுரிமை, இராஜ்யம் போன்ற நற்பண்புகளுடன் இறைவனது மற்ற எல்லா நற்பண்புகளும் வழங்கப்பட்டுள்ளனர்.

XX

அரூபியானவர், தமது சாராம்சத்தினை, மானிட உருவெடுக்கச் செய்து, அதனை மனிதர்பால் வெளிப்படுத்திட எவ்வகையிலும் இயலாதென்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீராக.

விவரித்திடவோ, அறிந்திடவோ இயலாத, அனைத்திற்கும் அப்பால், அவர், அதி உயரிய நிலையில் இருக்கின்றார்; அவ்வாறே என்றென்றும் இருந்தும் வருவார்.

தனது பேரொளி என்னும் தனியிடத்திலிருந்து அவரது குரல் எப்பொழுதும் இவ்வாறு பிரகடனம் செய்து கொண்டிருக்கின்றது: “மெய்யாகவே, நானே கடவுள்; சகலமும் அறிந்த, சர்வ விவேகியான என்னைத் தவிர இறைவன் வேறெவருமிலர்.

என்னை மனிதர்பால் வெளிப்படுத்தி, எனது வெளிப்பாடெனும் பகலூற்றின் அடையாளங்களாகிய அவரையும் அனுப்பி வைத்துள்ளேன்.

அவர் மூலமாக, நான், ஒப்புயர்வற்ற, சகலமும் அறிவிக்கப் பட்ட, சர்வ ஞானியான அவரைத் தவிர இறைவன் வேறெவருமிலர் என படைப்பு முழுவதையும் சான்று பகரச் செய்துள்ளேன்.

” எக்காலத்தும் மனிதர்களின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுள்ள அவர் தனது அவதாரத்தின் மூலமல்லாது வேறெந்த வழியிலுமே அறியப்பட மாட்டார்; மேலும், அவரது அவதாரமானவர், தனது தூதுப்பணியின் மெய்ம்மைக்கு ஆதாரமாகத் தன்னையே சான்றாக அளிப்பதற்கு மேலாக வேறெதனையுமே நிரூபணமாக அளித்திடவியலாது.

XXI

ஸல்மானே! பண்டைய திருவுருவானவரின் அறிவுக்கான நுழைவாயில் மனிதரின் பார்வைக்கு எக்காலமும் மூடப்பட்டே இருந்து வந்திருக்கின்றது, தொடர்ந்தும் மூடப்பட்டே இருந்துவரும்.

எந்த மனிதனின் அறிவாற்றலும் அவரது புனித அரசவைக்குள் நுழைவுப்பெற இயலாது.

இருப்பினும், அவரது கருணையின் சான்றாகவும், அவரது அன்புப் பரிவுக்கு அத்தாட்சியாகவும், அவர், தனது தெய்வீக வழிகாட்டுதலின் பகல் நட்சத்திரங்களையும், அவரது தெய்வீக ஒருமையின் அடையாளங்களையும் வெளிப்படுத்தி, அப்புனித ஆன்மாக்களின் அறிவைத் தனது சொந்த அறிவுக்கு முழுதும் ஒத்ததாக விதித்துள்ளார்.

அவர்களை அறிந்து கொண்டோர் இறைவனையே அறிந்து கொண்டோராவர்.

அவர்களின் அழைப்பினைச் செவிமடுப்போர் இறைவனின் குரலைச் செவிமடுப்போராவர்; மேலும், எவரொருவர் அவரது வெளிப்பாட்டின் மெய்ம்மைக்குச் சாட்சி பகர்கின்றாரோ அவர் இறைவனின் மெய்ம்மைக்கே சாட்சிப்பகர்பவர் ஆவார்; யார் அவரிடமிருந்து அப்பால் திரும்புகின்றாரோ அவர் இறைவனிடமிருந்தே அப்பால் திரும்பியவர் ஆவார்; மேலும், அவர்களை நம்பாதவர் இறைவனையே நம்பாதவர் ஆவர்.

அவர்கள் ஒவ்வொருவரும், இவ்வுலகை மேலுலக ராஜ்ஜியத்துடன் தொடர்புப்படுத்தும் இறைவனின் வழியாகவும், மண்ணுலக, மற்றும் விண்ணுலக இராஜ்ஜியங்களிலுள்ள ஒவ்வொருவருக்கும் மெய்ம்மையை நிர்மாணிக்கும் அளவுகோலாகவும் ஆவர்.

அவர்களே மனிதரின் மத்தியில் இறைவனின் அவதாரங்கள், அவரது மெய்ம்மைக்குச் சான்றுகள், அவரது பேரொளியின் அடையாளங்கள்.

XXII

இறை நம்பிக்கைக்கான பொறுப்பை ஏந்திவருபவர்கள், உலக மக்களுக்கு ஒரு புதிய சமயத்தின் விரிவுரையாளர்களாகவும், ஒரு புதிய போதனையை வெளிப்படுத்துபவர்களாகவும் அவதரிக்கச் செய்யப்பட்டுள்ளனர்.

தெய்வீக அரியாசனத்தின் இத் திருப்பறவைகள் அனைவரும் இறைவனின் விருப்பம் என்னும் விண்ணுலகிலிருந்து அனுப்பிவைக்கப் பட்டிருப்பதனாலும், அவர்கள் அனைவருமே வென்றிடவியலாத சமயத்தினைப் பிரகடனம் செய்ய எழுவதனாலும், அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மாவாகவும், ஒரே மனிதராகவும் கருதப்படுகின்றனர்.

ஆகவே அவர்கள் அனைவரும் இறையன்பு என்னும் திருக்கிண்ணத்திலிருந்து பருகுகின்றனர்; அனைவரும் அதே திருவிருட்சத்தின் ஒருமைத் தன்மை எனும் கனியை உட்கொள்கின்றனர்.

இறைவனின் அவதாரங்களான இவர்கள் ஒவ்வொருவரும் இரட்டை ஸ்தானத்தைக் கொண்டுள்ளனர்.

ஒன்று, தூய கோட்பாடு, அடிப்படை ஒருமைத் தன்மை ஆகியவற்றைக் குறித்த ஸ்தானம்.

இவ்வகையில் நீங்கள், அவர்கள் அனைவரையும் ஒரே பெயரைக் கொண்டு அழைத்து, அவர்களுக்கு அதே பண்புகளைச் சார்த்திக் கூறிடினும், நீங்கள் உண்மையிலிருந்து விலகவில்லை.

அவரே வெளிப்படுத்தியுள்ளார்: “அவரது திருத்தூதர்களிடையே யாம் வேற்றுமை எதுவுமே கற்பிப்பதில்லை”; ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவருமே மண்ணுலக மக்களை இறைவனின் ஒருமைத் தன்மையை அங்கீகரிக்குமாறு அழைக்கின்றனர், எல்லையற்ற அருள், வள்ளன்மை, என்னும் விண்ணுலக ஜீவநதியின் (“கௌதார்”) வருகையினை அவர்கள்பால் முன்னறிவிக்கின்றனர்.

அவர்கள் அனைவருமே தீர்க்கதரிசி என்னும் அங்கி அணிவிக்கப்பட்டு, பேரொளி என்னும் போர்வையினால் கௌரவிக்கப்படுகின்றனர்.

அவ்வாறுதான் குர்ஆனின் மையமாகிய முஹம்மது வெளிப்படுத்தியுள்ளார்: “எல்லாத் தீர்க்கதரிசிகளும் நானே.

” மேலும் அவர் திருவாய்மொழிகின்றார்: “முதல் ஆதாம், நோவா, மோஸஸ், இயேசு, முதலிய அனைவருமே நான்தான்.

” இது போன்ற வாக்குமூலங்களும் இமாம் அலியினாலும் மொழியப் பட்டுள்ளன.

இவ்வாறான கூற்றுகள் ஒருமைத் தன்மையின் அவ்விரிவுரையாளர்களின் அடிப்படை ஒற்றுமையைச் சுட்டிக் காட்டிடும்; இத்தகையக் கூற்றுகள், இறைவனின் இறவா வசனங்களென்னும் கால்வாய்களிலிருந்தும், தெய்வீக அறிவு என்னும் இரத்தினங்களின் கருவூலங்களிலிருந்தும் வெளிப்பட்டு, திருமறைகளில் குறித்தும் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வதனங்களே தெய்வீகக் கட்டளையின் பெறுநர்களும் அவரது வெளிப்பாட்டின் பகலூற்றுகளும் ஆவர்.

இவ்வெளிப்பாடு, பன்மை என்னும் திரைகளுக்கு அப்பாலும், எண்ணிக்கைக்கு உட்படாத அளவும் மேன்மைப்படுத்தப்பட்டதாகும்.

ஆகவே அவர் திருவாய்மொழிகின்றார்: “எமது சமயம் ஒன்றேயாகும்.

” இந்தச் சமயம் ஒன்றேயாகவும் அதுவேயாகவும் இருப்பதனால் அதன் விரிவுரையாளர்களும் ஒருவரேயாகவும் அவரேயாகவும் இருத்தல் அவசியம்.

அதே போன்று, முஹம்மதியர்களது சமயத்தின் பற்றுறுதி என்னும் தீபங்களான இமாம்களும்: “முஹம்மதுவே நமது முதலும், முஹம்மதுவே நமது முடிவும், முஹம்மதுவே நமது சர்வமும்.

” எனக் கூறியுள்ளனர்.

வெளித்தோற்றத்தில் வெவ்வேறான ஆடைகளில் தோன்றியுள்ள போதிலும், தீர்க்கதரிசிகள் அனைவருமே இறைவனது திரு ஆலயங்களே என்பது உங்களுக்குத் தெளிவானதும் ஆதாரப் பூர்வமானதும் ஆகும்.

நீங்கள் உய்த்துணரும் கண்களைக் கொண்டு கூர்ந்து கவனிப்பீராயின், அவர்கள் அனைவருமே அதே கூடாரத்தினில் வசிப்பதையும், அதே வானத்தில் பறப்பதையும், அதே அரியாசனத்தின் மீது அமர்ந்திருப்பதையும், அதே சொற்பொழிவை ஆற்றிடுவதையும், அதே சமயத்தினைப் பிரகடனப் படுத்திடுவதையும் காண்பீர்.

அவ்வாறானதுதான், நித்திய, அளவிடற்கரிய பிரகாசமிக்க ஒளிப் பிம்பங்களாகிய உள்ளமையின் சாராம்சங்களாகிய அவர்களின் ஒருமைத் தன்மை! ஆகவே, அவதாரங்களாகிய இவர்களுள் ஒருவர் “நானே எல்லாத் தீர்க்கதரிசிகளின் மறுவருகையாகும்,” எனக் கூறிப் பிரகடனம் செய்வாராயின், மெய்யாகவே, அவர் உண்மையே பேசுகின்றார்.

அவ்வாறே, அடுத்தடுத்து வந்திட்ட ஒவ்வொரு வெளிப்பாட்டிலும், கடந்தகால வெளிப்பாட்டின் மறு வருகை எனப்படுவது உண்மையே; அதன் மெய்ம்மை உறுதியாக ஸ்தாபிக்கப் பட்ட ஒன்றாகும்.

இரண்டாம் ஸ்தானமானது, தனித் தன்மை ஸ்தானம்.

அது படைப்புலகுக்கும் அதன் கட்டுப்பாடுகளுக்கும் தொடர்புடையதாகும்.

இவ்வகையில், இறைவனின் ஒவ்வொரு திரு அவதாரமும் தெளிவான தனித்தன்மையையும், திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட தூதுப்பணியையும், முன்விதிக்கப்பட்டுள்ள வெளிப்பாட்டையும், பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் கொண்டிருப்பார்.

அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான பெயரைக் கொண்டு அறியப்படுவார், ஒரு தனித்தன்மைப் பெற்றிருப்பார், ஒரு குறிப்பிட்ட பணித்திட்டத்தை நிறைவேற்றுவார், ஒரு குறிப்பிட்ட வெளிப்பாட்டுக்கான பொறுப்பளிக்கப்படுவார்.

அவர் மேலும் கூறுகிறார்: “திருத்தூதர்கள் சிலரை யாம், மற்றவர்களை விஞ்சிடச் செய்துள்ளோம்.

” இறைவன், சிலருடன் உரையாடியிருக்கின்றார்; சிலரை உயர்த்தி மேம்பாடுறச் செய்திருக்கின்றார்.

மேரியின் மைந்தனான இயேசுவுக்கு யாம் தெளிவான அடையாளங்களைத் தந்திட்டோம்; அவரைப் பரிசுத்த ஆவியினால் வலுப்படுத்தினோம்.

அவர்களின் ஸ்தானத்திலும் பணித்திட்டத்திலுமுள்ள வேறுபாடுகளின் காரணத்தினால்தான் தெய்வீக அறிவுக்கிணற்றின் ஊற்றுகளாகிய அவர்களிடமிருந்து பெருக்கெடுத்திடும் வசனங்கள் வேறுபடுவதுபோல் தோன்றுகின்றன.

இல்லையெனில், தெய்வீக விவேகத்தின் மர்மங்கள் அறிமுகப்படுத்தப்பட்டோரின் கண்களுக்கு, அவர்கள் அனைவரின் வெளியிடுகைகளும், உண்மையாகவே, ஒரே மெய்ம்மையின் கூற்றுகளேயாகும்.

யாம் குறிப்பிட்ட அந்த ஸ்தானங்களைப் பெரும்பாலான மனிதர்கள் அங்கீகரிக்கத் தவறியதனால், திரு அவதாரங்களால் அறிவிக்கப்படும் மாறுபட்ட, ஆனால் அடிப்படையில் ஒன்றான, அறிவிப்புகளினால், அவர்கள் குழப்பமடைவதுடன் ஊக்கமும் இழக்கின்றனர்.

அவர்களின் கூற்றுகளில் உள்ள இவ்வேற்றுமைகள் அனைத்துக்கும் அவர்களின் ஸ்தானங்களின் வேறுபாடுகளே காரணம் என்பது என்றென்றும் வெளிப்படையானது.

ஆகவே, அவர்களைத் தங்களின் ஒருமைத் தன்மை, விழுமிய பற்றின்மை, இறைமைத் தன்மை, தெய்வத் தன்மை, அதி உயரிய தனித்தன்மை, அதி உள்ளார்ந்த சாராம்சம் ஆகிய நிலைகளின் வாயிலாக நோக்கின், அத்தன்மைகள் எல்லாம் மெய்ப்பொருளாகிய அச் சாராம்சங்கள் அனைவருக்குமே என்றென்றும் பொருந்தி வந்துள்ளன, இன்றும் பொருந்தும்; ஏனெனில், அவர்கள் எல்லாருமே புனித வெளிப்பாடெனும் அரியாசனத்தில் உறைகின்றனர்; புனித மறைவிடமென்னும் ஆசனத்தின் மீது ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றனர்.

அவர்களின் தோற்றத்தின் வாயிலாக இறைவனின் வெளிப்பாடு புலனாகின்றது; அவர்களின் வதனத்தினால் ஆண்டவனின் அழகு வெளிப்படுத்தப்படுகின்றது.

அவ்வாறு, இறைவனின் இசையழுத்தமே திருவுருவான பரம்பொருளின் இவ் வவதாரங்களின் வாயிலாகக் கூறக் கேட்கப் படுகின்றது.

அவர்களின் இரண்டாவதான தனித்தன்மை ஸ்தானம் - வேறுபாடுடைமை, இம்மைக்குரிய குறைபாடுகள், தனிச்சிறப்புப்பண்புகள், படிநிலைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு நோக்கின் - அந்நிலையில், அவர்கள், முழுமையான கீழ்ப்படிதல், மிகுந்த ஏழ்மை நிலை, தானெனுந் தன்மையின் பூரணமான துடைத்தழித்தல் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர்.

அவரே திருவாய் மொழிவது போல்: “நான் இறைவனின் சேவகன்.

உங்களைப் போலவே நானும், ஒரு மனிதனே.

”.

சகலத்தையும் உள்ளடக்கிடும் இறைவனின் திரு அவதாரங்களுள் ஒருவர்: “நானே கடவுள்,” எனப் பிரகடனம் செய்வாராயின், மெய்யாகவே அவர் உண்மையே உரைக்கின்றார்; அதில் சந்தேகம் எதுவமே கிடையாது.

ஆகவேதான், அவர்களின் வெளிப்பாடு, பண்புகள், நாமங்கள் ஆகியவையின் மூலமாக, இறைவனின் வெளிப்பாடு, அவரது நாமங்கள், அவரது பண்புகள் ஆகியவை, தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றனவென்பது உலகத்திற்கு மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

ஆகவேதான், “அக் கணைகள் இறைவனுடையவையே, உம்முடையவை அல்ல” என அவர் அறிவித்திருக்கின்றார்.

மேலும் அவர் கூறுகின்றார்: “மெய்யாகவே, உம்மிடம் விசுவாசம் காட்டிடும் அவர்கள், உண்மையிலேயே அவ்விசுவாசத்தை இறைவனிடமே காட்டுகின்றனர்.

” மேலும், அவர்களில் யாராவது “நான் இறைவனின் தூதன்,” எனக் குரலெழுப்புவாராயின், அவர் சொல்வது உண்மை; ஐயத்திற்கு இடமற்ற உண்மை.

அவர் கூறுவதுபோலவே: “முஹம்மது உங்களில் எந்த ஒரு மனிதனுக்கும் தந்தை இல்லை; ஆனால், அவர் இறைவனின் தூதர்.

” இக்கருத்தின்படி நோக்கின், அவர்கள் அனைவருமே சிறப்பு வாய்ந்த அவ்வேந்தரின், அம்மாறாத சாராம்சமாகியவரின், தூதர்களே.

அவர்கள் அனைவருமே, “நானே தீர்க்கதிரிசிகளின் முத்திரை,” எனப் பிரகடனம் செய்வராயின், அவர்கள் மெய்யாகவே, சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றி உண்மையே கூறுகின்றனர்; ஏனெனில், அவர்கள் அனைவருமே, ஒரே மனிதர் ஒரே ஆன்மா, ஒரே ஆவி, ஒரே உயிருரு, ஒரே வெளிப்பாடு.

அவர்கள் அனைவருமே “ஆரம்பமும், இறுதியும்”, “முதலும், முடிவும்”, “காணக் கூடியதும், மறைவானதும்” ஆகியவற்றின் வெளிப்படுத்தலேயாவர்; - அவையனைத்துமே, அதி உள்ளார்ந்த ஆவிகளுள் ஆவியான, நித்திய சாராம்சங்களுள் சாராம்சமான அவரையே சார்ந்தவையாகும்.

அவை யாவும், “நாங்கள் இறைவனின் சேவகர்களே” எனக் கூறுமாயின், இதுவும் தெளிவான, மறுக்கமுடியாத உண்மை.

ஏனெனில், அவர்கள் அதி தாழ்வான ஊழிய நிலையில் அவதரிக்கச் செய்யப்பட்டுள்ளனர்; அநேகமாக, அத்தகைய ஊழிய நிலையை, எந்த ஒரு மனிதனுமே அடைந்திடவியலாது.

ஆகவே, மெய்ப்பொருளானவரின் இச் சாராம்சங்கள், தொன்மைமிக்க, நித்திய புனிதத் தன்மை என்னும் சமுத்திரங்களின் ஆழத்தில் மூழ்கியிருந்த நேரங்களிலும், தெய்வீக மர்மங்கள் என்னும் அதி உயரிய சிகரத்தை நோக்கி உயர்ந்திடும் நேரங்களிலும், தங்களின் கூற்றுகள் இறைமையின் குரலே எனவும், அவை இறைவனின் அழைப்பே எனவும் கூறிக் கொண்டனர்.

உய்த்துணருங் கண் திறக்கப்படுமாயின், அது, அச்சிறந்த நிலையில், சகலத்தையும் வியாபித்துள்ள, ஒழுக்கங்கெடச் செய்யப்பட இயலாதவராகிய அவரது (இறைவனது) வதனத்தின் முன், அவர்கள், தங்களை முற்றுந்துறந்தவர்களாகவும், இன்மைநிலையில் உள்ளோராகவும் கருதிக்கொள்வர் என்பதைக் கண்டறிந்திடும்.

அவர்கள் தங்களை முற்றும் வெறுமையானோர் எனக் கருதிக்கொள்கின்றனர் என்றும், அவ்வரசவையினுள் தங்களைப் பெயர்க்குறித்திடுவதைத் தெய்வநிந்தனை எனவும் மதிக்கின்றனர் என்று நான் எண்ணுகின்றேன்.

அத்தகைய ஓர் அரசவைக்குள் ஒரு சிறிதளவேனும் தானெனுந்தன்மையை மூச்சு விடுதல், மனத்துணிவையும் சுயேச்சையான உள்ளமையையும் காட்டுகின்றது.

அவ்வரசவையினை அடைந்திட்டோரின் பார்வையில், அத்தகைய கருத்துத் தெரிவித்தல் கடும் வேதனைத் தரும் உடன்படிக்கை மீறுதலாகும்.

அத்திரு முன்னிலையில் வேறு ஏதேனும் கூறப்பட்டிருக்குமாயின், மனிதனின் உள்ளமும், அவனது நாவும், அவனது மனமும், அல்லது ஆன்மாவும், அதி நேசிக்கப் பட்ட அவரைத் தவிர மற்ற எவருடனாவது ஈடுபட்டிருக்குமாயின், அவனது கண்கள் அவரது அழகைத் தவிர வேறெந்த வதனத்தையாவது கண்ணுற்றிடுமாயின், அவனது காது அவரது குரலைத் தவிர வேறெந்தக் கீதத்திலாவது விருப்பம் கொண்டிடுமாயின், அவனது கால்கள் அவரது வழியைத் தவிர வேறெந்த வழியிலாவது அடி எடுத்து வைத்திடுமாயின், அது இன்னும் எந்தளவு மோசமானதாய் இருந்திடும்.

இந்த ஸ்தானத்தின் காரணத்தினால்தான் அவர்கள் இறைமையின் குரலையும், மற்றும் அதனைப் போன்றவைகளையும் கொண்டிருப்பதாகக் கூறிக் கொண்டனர்.

அதே வேளையில், தங்களின் தூதர் ஸ்தானத்தின் காரணமாக, அவர்கள், தங்களை இறைவனின் தூதன் எனவும் பிரகடனஞ் செய்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு தருணத்திலும், அவர்கள் அந்நேரத்திற்கு ஒத்த வசனமொன்றை வாய்மொழிந்துள்ளனர்; அப்பிரகடனங்கள் அனைத்தும் தங்களுடையவையே என அறிவித்துக்கொண்டனர்; அப்பிரகடனங்கள் தெய்வீக வெளிப்பாட்டுப் பகுதியிலிருந்து படைப்புப்பகுதி வரையில், இறைமைத் துறையிலிருந்து மண்ணுலக வாழ்வுத்துறை வரையிலுங்கூட ஆட்சிப்பரப்பெல்லையாகக் கொண்டுள்ளன.

ஆகவே, அவர்களின் வெளியிடுகைகள் எவையாயினும், அவை இறைமை நிலை, பிரபு நிலை, தீர்க்கதரிசன நிலை, தூதர் நிலை, பாதுகாவலர் நிலை, திருத்தூதர் நிலை, சேவாநிலை ஆகிய எவையாயினும், அவையனைத்துமே ஐயப்பாட்டிற்கு அப்பாற்பட்ட உண்மை.

ஆகவே, எமது வாதத்திற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டியுள்ள இக்கூற்றுகள் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்; அதனால், கண்களுக்குப் புலப்படாதவரது திரு அவதாரங்கள், புனிதத் தன்மையின் பகலூற்றுகள் ஆகியோரின் வேறுபட்டக் கூற்றுகள் ஆன்மாவைக் கிளர்ச்சியுறவும் மனதைக் குழப்பமுறவும் செய்யாதிருக்கக் கூடும்.

XXIII

முந்தைய தலைமுறைகளை எண்ணிப் பாருங்கள்.

எப்பொழுதெல்லாம் தெய்வீக வள்ளன்மையெனும் பகல் நட்சத்திரமானவர் தனது வெளிப்பாடெனும் ஒளியினை உலகின் மீது வீசச் செய்தாரோ, அப்பொழுதெல்லாம் அவரது காலத்திய மக்கள் அவருக்கெதிராக எழுந்து அவரது மெய்ம்மையினை ஏற்க மறுத்திருக்கின்றனர்.

மனிதர்களின் தலைவர்கள் எனக் கருதப்படுபவர்களே, அவரைப் பின்பற்றுபவர்களை, மாறாது, இறைவனின் எல்லையற்ற வள்ளன்மை என்னும் சமுத்திரமாகிய அவர்பால் திரும்புவதைத் தடைச்செய்ய கடுமுயற்சி செய்து வந்துள்ளனர்.

அவரது காலத்தின் மத குருமார்களால் அளிக்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக, எவ்வாறு, ஆண்டவனின் அன்பனாகிய அபிரஹாமை, மக்கள் தீயிலிட்டனர் என்பதையும், எவ்வாறு, எல்லாம் வல்லவருடன் சம்பாஷணை நடத்திய மோஸஸ், பொய்யர், தூஷகர் என வெளிப்படையாய்க் கண்டனம் செய்யப்பட்டார் என்பதையும் பாருங்கள்.

ஆண்டவனின் ஆவியாகிய இயேசுநாதர், அடக்கம் மிகுந்தவராகவும், முற்றும் இரக்கக் குணமுடையவராகவும் இருந்த போதிலும், பகைவர்களால் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

கண்ணுக்குப் புலனாகும், புலனாகா அனைத்திற்கும் பிரபுவான, உயிருருவின் சாரமாகிய அவர், தாங்க வேண்டியிருந்த எதிர்ப்பு அத்துணைக் கொடூரமானதாய் இருந்ததனால், அவர் தலைவைத்துப் படுப்பதற்குக் கூட இடமில்லாதிருந்தது.

நிரந்தரமான இருப்பிடம் எதுவுமின்றி, அவர், தொடர்ந்து, இடம் விட்டு இடம் அலைந்து திரிந்தார்.

தீர்க்கதரிசிகளின் முத்திரையாகிய முஹம்மதுவுக்கு - எனது உயிரும் மற்றனைத்தும் அவருக்காகத் தியாகம் செய்யப்படுமாக - நேர்ந்தவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்.

இறைவனின் ஒருமைத் தன்மையையும் தனது செய்தியின் மேன்மையையும் பிரகடனம் செய்ததன் காரணமாக, மாட்சிமை பொருந்திய பிரபுவாகிய அவர் மீது யூதமக்களின் தலைவர்களும், உருவ வழிப்பாட்டாளர்களும், பொழியச் செய்திட்ட கடுந்துன்பங்கள்தாம் என்னே! எனது சமயத்தின் நேர்மைத்தன்மைச் சாட்சியாக! தனது ஒப்பந்தத்தை மீறியவர்களின் கைகளிலிருந்தும், அவரது அடையாளங்களைக் குறித்து வாதிட்டவர்களிடமிருந்தும், அவர் பட்ட துன்பங்கள், துயரங்கள், ஆகியவையின் காரணமாக, எமது எழுதுகோலும் புலம்புகின்றது; படைப்புப் பொருள்கள் அனைத்துமே கண்ணீர் விட்டுக் கதறுகின்றன.

இவ்வாறுதான், யாம், கடந்த காலங்களில் நிகழ்ந்திட்டக் கதைகளை, நீங்கள் ஒரு வேளை அவற்றைப் புரிந்து கொள்ளக் கூடும் என்பதற்காக, உங்களுக்கு எடுத்துரைக்கின்றோம்.

இறைவனின் தீர்க்கதரிசிகளும், அவரது தூதர்களும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் எத்துணைக் கொடூரமான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள்.

இவ்விதத் துன்புறுத்தலின் நோக்கத்திற்கும் காரணத்திற்கும் பொறுப்பாய் இருந்தவை யாவை எனச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

எந்தகாலத்திலுமே, எந்த அருளாட்சிக்காலத்திலுமே, இறைவனின் தீர்க்கதரிசிகள், தங்களின் பகைவர்களின் தெய்வ நிந்தனைகளிலிருந்தும், கொடியோரின் கொடுமையிலிருந்தும், நேர்மை, பக்தி என்ற வேடத்தில் தோன்றிடும் அக்காலத்திய கற்றோர்களின் கண்டனங்களிலிருந்தும் தப்பியதே கிடையாது.

ஒரே மெய்ப்பொருளாகிய இறைவனாகிய -- அவரது ஒளி மேன்மைப் படுத்தப் படுமாக -- அவர் ஒருவரைத் தவிர வேறெவருமே அளவிட முடியாத வேதனைகளை அவர்கள் இரவு பகலாக அனுபவித்தனர்.

இத்தவறிழைக்கப்பட்டோனை எண்ணிப் பாருங்கள்.

அவரது சமயத்தின் மேன்மைக்கு மிகத் தெளிவான சாட்சியங்கள் ஆதாரமாக இருந்தும், ஐயத்திற்கிடமற்ற மொழியில் அவர் அளித்துள்ள தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப் பட்டிருந்தும், கற்றோர்களிடையே அவரும் ஒருவரென மதிக்கப்படாதிருந்தும், பள்ளிப் படிப்பு எதுவும் இல்லாதிருந்தும், மதகுருமார்களிடையே வழக்கமாக நிகழும் சர்ச்சைகளில் பங்கேற்கும் அனுபவமேதும் இல்லாதிருந்தும், அவர், தனது பல்வேறான தெய்வீக அகத் தூண்டலினின்று பெற்றிட்ட அறிவுப் பொழிவினை மனிதர்பால் பொழிந்துள்ளார்; எனினும், எவ்வாறு இக்காலச் சந்ததியினர் அவரது அதிகாரத்தினை நிராகரித்து, அவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்துள்ளனர் என்பதைப் பாருங்கள்! அவர், தமது வாழ்க்கையில் பெரும்பகுதி, தனது பகைவர்களின் கொடும்பிடியில் அகப்பட்டு அவதிபட்டுக் கொண்டிருந்தார்.

அவரைத் துன்புறுத்துவோர் அவரை அநீதியாக அடைத்து வைத்திருந்த அத்துன்பம் மிகுந்த சிறையில் அவரது வேதனைகள் உச்சத்தை அடைந்தன; நடந்து வந்துள்ளவற்றையும், இப்பொழுதும் நடந்து வருவனவற்றையும் நீங்கள் கூர்மையான பார்வையுடனும், பிரகாசமிக்க உள்ளத்துடனும் கவனித்து, அவற்றை உங்கள் மனதில் தியானித்து, பெரும்பான்மையான மனிதர்கள் இந்நாளில் கண்டறிந்துள்ளவற்றை நீங்கள் அறிந்துகொள்ள ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிவாராக.

இறைவா, புராதன மன்னரின் பெயரால் மாபெரும் சமுத்திரத்தில் இருந்து இந்நாளில் பொங்கி எழும் கிருபைமிக்கச் சலுகையின் மூலம், நீங்கள், அவரது தினத்தின் நறுமணத்தினை நுகரவும், அவரது கிருபையின் அளவற்றப் பொழிவிலிருந்து வேண்டிய அளவு பருகுவதற்கும், அவரது சமயத்தில் அசைக்கவியலா மலையைப்போன்று உறுதியாய் இருப்பதற்கும் உதவிட அருள்வீராக.

கூறுவீராக: புனிதர்கள் அனைவ¬ரையும் உமது பல்வேறான சக்தியின் முன்னால் தத்தம் ஆதரவற்ற நிலையினை ஒப்புக் கொள்ளச் செய்தும், உமது நித்திய பேரொளியின் பிரகாசத்தின் முன்னால் ஒவ்வொரு தீர்க்கதரிசியையும் தனது இன்மை நிலையினை ஏற்றுக் கொள்ளவும் செய்திட்ட உமக்கே ஒளி உரியதாகட்டும்.

சுவர்க்க வாசல்களின் நுழைவாயில்களைத் திறக்கச் செய்து, வான்படையினரை ஆனந்த பரவசத்தினால் நிரப்பி, உமது திருநாமத்தின் மூலமாக, என்னை, இந்நாளில் உமக்குச் சேவைச்செய்ய உதவுமாறும், நீர் உமது நூலில் வழங்கியுள்ள கட்டளைகளைப் பின்பற்ற பலம் அளிக்குமாறும் நான் உம்மை மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன்.

பிரபுவே, என்னுள் இருப்பது யாதென நீர் அறிவீர், ஆனால் உம்முள் இருப்பது யாதென யான் அறியேன்; யாவும் அறிந்தவரும், சகலத்தையும் அறிவிக்கப்பட்டவரும் நீரே ஆவீர்.

XXIV

இறைவனது ஒருமைத் தன்மையின் நம்பிக்கையாளர்களே, கவனமாய் இருங்கள்; இல்லையெனில், அவரது சமயத்தின் திருஅவதாரங்களிடையே வேறுபாடுகள் கற்பித்திடவோ, அவர்கள் வெளிப்பாட்டுடன் வந்தும் பிரகடனம் செய்துமுள்ள அடையாளங்களை மாறுபாடான வகையில் நடத்திடவோ போகின்றீர்.

நீங்கள் இவ்வுண்மையை உணர்ந்து நம்பக் கூடியோராயின், இதுவே தெய்வீக ஒருமைப் பாட்டின் உண்மைப் பொருளாகும்; அதுமட்டுமன்றி, அவர்களுடன் ஏதாவது தொடர்புடையவையோ, வருங்காலத்தில் அவர்கள் வெளிப்படுத்தவிருப்பவையோ, அவை அனைத்தும் இறைவனால் விதிக்கப்பட்டவையும் அவரது விருப்பம், நோக்கம் ஆகியவ¬ற்றின் பிரதிபலிப்புமேயாகும் என்பதை உறுதியாக நம்புவீராக.

எவரொருவர், அவர்களுக்கிடையேயும் அவர்களின் திருமொழிகளுக்கும் போதனைகளுக்கும் இடையேயும் அவர்களின் செயல்கள், நடத்தை ஆகியவற்றுக்கிடையேயும் சிறிதளவேனும் வேற்றுமை கற்பிக்கின்றாரோ, அவர், உண்மையாகவே ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இழந்து அவரது அடையாளங்களை மறுத்து, அவரது தூதர்களுக்கும் சமயத்திற்கும் துரோகம் இழைத்தவர் ஆவார்.

XXV

இறைவனின் அவதாரம் ஒருவர் வாழ்ந்திடும் காலம் ஒவ்வொன்றும் தெய்வீகமாக நியமிக்கப்பட்டதென்பது வெளிப்படை; ஒரு வகையில், அதனை இறைவனின் நியமிக்கப்பட்ட காலம் எனக் கூறலாம்.

இந்நாள் தனித்தன்மை வாய்ந்தது; அதற்கு முன் தோன்றிய காலங்களைவிடத் தனிச் சிறப்பு வாய்ந்தது.

“தீர்க்கதரிசிகளின் முத்திரை” என்னும் பட்டமே அதன் உயரிய ஸ்தானத்தை முழுமையாகத் தெளிவுப்படுத்துகின்றது.

தீர்க்கதரிசனத்தின் காலவட்டம் மெய்யாகவே, முற்றுப்பெற்றுவிட்டது.

நித்திய மெய்ம்மையாகியவர் இப்பொழுது தோன்றிவிட்டார்.

அவர், சக்தி என்னும் கொடியினை உயர்த்தியுள்ளார்; இப்பொழுது அது உலகின்மீது, அவரது வெளிப்பாட்டின் மந்தாரமற்றச் சுடரொளியினைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றது.

XXVI

சகலத்தையும் கொண்டுள்ள, ஒப்பற்றப் பேரொளியின் மன்னரான இறைவன் பாராட்டப்படுவாராக.

அப்பாராட்டு, படைப்புப் பொருள்கள் அனைத்தின் புரியுந் திறனுக்குமேல் அளவிடற்கரிய உயர்வில் இருக்கின்றது; மேலும் அது, மனித மனங்களின் புரிந்துணர்வுக்கப்பால் மேலான நிலையிலும் உள்ளது.

அவர் ஒருவரைத் தவிர வேறெவருமே அவரது புகழைப் பொருத்தமுறப் பாடிட முடிந்ததில்லை; அதுவுமன்றி, எந்த ஒரு மனிதனுமே அவரது புகழை முழுமையாக வருணிப்பதில் வெற்றி பெறவும் இயலாது.

அவரது மேம்படுத்தப்பட்ட சாராம்சத்தின் உச்சங்களை அடைந்துவிட்டதாக யாரால் கூறிக் கொள்ள இயலும்? மேலும், ஆழங்காணவியலாத அவரது மர்மத்தின் ஆழத்தினை எந்த ஒரு மனத்தினால் அளவிட முடியும்? அவரது பேரொளியின் பிறப்பிடத்திலிருந்து தோன்றிடும் ஒவ்வொரு வெளிப்பாட்டினின்றும், என்றுமே முடிவுறாத ஆதாரங்கள், கற்பனை செய்யவியலாத சுடரொளியிலிருந்து தோன்றிவந்துள்ளன; மேலும், அவரது ஒவ்வொரு வெளிப்படுத்துதலின் வென்றிடவியலாத வலிமையினின்று நித்திய ஒளியெனும் மாக்கடல்கள் பொழிந்துள்ளன.

எத்துணை உயர்வானது அவரது எல்லாம் வல்ல இறைமையின் வியத்தகு ஆதாரங்கள்; அவற்றின் ஒரு சிற்றொளி பட்டிடுமாயின், அது விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும் உள்ள அனைத்தையும் முற்றிலும் சுட்டெரித்துவிடும்! வருணிக்கவே இயலாத அளவு உயர்வானது அவரது நிறைவான ஆற்றல்; மேலும், அதன் ஒரே அடையாளம், அது எத்துணைச் சொற்பமானதாய் இருப்பினும், அது ஆரம்பமில்லா ஆரம்பத்திலிருந்து தோற்றுவிக்கப்பட்டுள்ளது; வருங்காலத்தில், அது முடிவில்லா முடிவுவரை படைக்கப்பட இருப்பவையாகிய அனைத்தின் புரியுந்திறனுக்கும் மேலான நிலையில் உள்ளதாகும்.

அவரது நாமங்களின் திருஅவதாரங்கள் அனைவருமே, தாகமுற்று, அவரது சாராம்சத்தினைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவலினால், தேடுதல் என்னும் வனாந்திரத்தில் அலைந்து திரிகின்றனர்; மேலும், அவரது பண்புகளின் தோற்றங்களாகிய அனைவரும், அவரது மர்மத்தினை வெளிப்படுத்துமாறு, புனிதத்தன்மை என்னும் உச்சத்திலிருந்து மன்றாடுகின்றனர்.

அவரது முடிவில்லாத கருணை என்னும் அலைபொங்கும் கடலிலிருந்து ஒரே துளியானது உள்ளமை என்னும் ஆபரணத்தைக் கொண்டு, படைப்பு முழுவதையும் அழகுபடுத்தியுள்ளது; மேலும், அவரது ஒப்பற்ற சுவர்க்கத்தினின்று மிதந்து வரும் ஒரு மூச்சானது, உயிரினங்கள் அனைத்திற்கும், அவரது புனிதத் தன்மை மற்றும் பேரொளி என்னும் ஆடையினை அணிவித்துள்ளது.

மாட்சிமை மிகுந்ததும், சகலத்தையும் சூழ்ந்துள்ளதுமான அவரது திருவிருப்பம் என்னும் அளவிடற்கரிய ஆழத்தினின்று ஒரு தூறல், முற்றான வெறுமையிலிருந்து, அளவில் எல்லையற்றதும், காலத்தில் முடிவற்றதுமான ஒரு படைப்பினையே உருவாக்கியுள்ளது.

அவரது வள்ளன்மையின் அற்புதங்கள் என்றுமே முடிவுறக் கூடியதல்ல; அவரது கருணைமிகு அருள் என்னும் ஓடையும் நிறுத்தப்பட வியலாது.

அவரது படைப்பின் இயல்வளர்ச்சிக்கு ஆரம்பமுமில்லை; முடிவும் இருக்க வியலாது.

ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு காலவட்டத்திலும், அவர், தனது வியத்தகு சாராம்சத்தின் அவதாரங்களினால் பரப்பப்பட்ட பிரகாசமிக்க ஒளியின் மூலமாக சகலத்தையும் மறுபிறப்பெய்திடச் செய்தார்; அதன் நோக்கமாவது, எவையெல்லாம் விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும் அவரது பேரொளியினைப் பிரதிபலிக்கின்றனவோ, அவை, அவரது கருணையின் பொழிவை இழந்திடாதிருக்கவோ, அவரது சலுகைகளின் பொழிவுகளைப் பெறுவதிலிருந்து ஏமாற்றமடைந்திடவோ கூடாது என்பதுதான்.

அவரது எல்லையிலா அருள்பாலிப்புகளின் அற்புதம் எந்தளவு சகலத்தையும் சூழ்ந்துள்ளது! படைப்பனைத்தையும் அவை எவ்வாறு ஊடுருவியுள்ளது என்பதைப் பாருங்கள்.

பிரபஞ்சம் முழுவதிலும், அவரது ஆற்றலின் ஆதாரங்களைப் பிரகடனப் படுத்திடாத, அவரது புனித நாமத்தைப் போற்றிப் புகழாத, அல்லது அவரது ஒருமைத் தன்மையின் சுடரொளி வீசிடும் பிரகாசத்தினை வெளிப்படுத்திடாத, அணு, ஒன்றையுமே காண முடியாத அளவு உள்ளது அவற்றின் நற்பயன்.

அத்துணைப் பூரணமானது, அத்துணை முழுநிறைவானது, அவரது படைப்பு.

அதனை மனமோ, உள்ளமோ, அவை எத்துணைக் கூர்மையாகவோ தூயதாகவோ இருந்திடினும், அவரது மிகு அற்பமான உயிரினங்களின் இயற்பண்பினைப் புரிந்து கொள்ளவே இயலாது.

அதைவிடக் கடினமானது கண்ணுக்குப் புலனாகாத, அறிந்துகொள்ளவும் இயலாத சாராம்சமாகிய மெய்ம்மை என்னும் பகல் நட்சத்திரமான அவரது மர்மத்தினை ஆழங் காண்பது.

ஆழ்ந்த சமயப்பற்றுள்ள மறைமெய்ஞ் ஞானிகளின் கருத்துக்கள், மனிதருள் முழுமைப் பெற்றோரின் சாதனைகள், மனித நாவோ, எழுதுகோலோ வழங்கக் கூடிய அதி உயர்வான புகழ்ச்சிகள் ஆகிய யாவுமே அநித்திய மனதின் உற்பத்திப் பொருள்களே, அதன் வரையறைகளுக்கு உட்பட்டவையே பதினாயிரம் தீர்க்கதரிசிகள், ஒவ்வொருவரும் மோஸஸ¨க்கு சமமானவர்கள், அவர்களின் தேடுதலின் உச்சத்தில் “நீங்கள் என்னைக் காணவே முடியாது!” எனும் இவ்வச்சுறுத்தும் குரலினால் திகைப்புற்றனர்; அதே வேளையில், எண்ணற்ற திருத் தூதர்கள், ஒவ்வொருவரும் இயேசுவைப் போல் நேர்த்திமிக்கவர்கள், தங்களின் விண்ணுலக அரியாசனத்தின் மீது, “எனது சாராம்சத்தினை நீங்கள் புரிந்துகொள்ளவே இயலாது!” என்னும் தடையுத்தரவினால் ஊக்கமிழந்து நின்றனர்.

நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து, அவர், தனது மேன்மைமிக்க மெய்ம்மையில், வார்த்தைகளால் வருணிக்கவியலாத புனித ஸ்தானத்தின் திரைமறைவிலிருந்து வந்திருக்கின்றார்; தொடர்ந்தும், தமது அறிந்திடவியலாத சாராம்சத்தினில் என்றென்றும் ஊடுருவ இயலாத மர்மத்தினில் சுற்றிப் போர்த்தப்பட்டும் இருந்தே வருவார்.

தமது அணுகவியலாத மெய்ம்மைத் தன்மையைப் புரிந்திடும் நிலையை அடைவதற்கான ஒவ்வொரு முயற்சியும் முற்றிலும் குழப்பத்தில்தான் முடிந்திருக்கின்றது; மேலும், அவரது அணுகவியலா மெய்ம்மையை அணுகுவதற்கும், அவரது சாராம்சத்தினைக் கற்பனைச் செய்து பார்ப்பதற்கும் செய்த ஒவ்வொரு முயற்சியும் நம்பிக்கை இன்மையிலும், தோல்வியிலுமே முடிவுற்றுள்ளது.

என்னைப் போன்ற ஓர் அற்பனுக்கு, உமது அறிவின் புனித ஆழங்களை அளவிடுவதற்காக எடுக்கும் முயற்சி எத்துணைக் குழப்பமூட்டுவதாய் இருக்கின்றது! உமது கைவேலையில் - உமது ஆக்கச்சக்தியின் வெளிப்படுத்துதலில் - இயற்கையாக அமைந்துள்ள சக்தியின் அளவினைக் கற்பனைச் செய்வதற்கான எனது முயற்சிகள்தாம் எத்துணை வீணானவை.

தன்னையே அறிந்து கொள்ளும் உணர்வுத் திறன் அற்றிருக்கும் எனது கண், எங்ஙனம் உமது சாராம்சத்தினைத் தெளிவாய் உய்த்துணர்ந்திருக்கின்றேன் எனக் கோரிக்கொள்ள இயலும்; மேலும், எவ்வாறு எனது இதயம், அதன் சொந்த இயற்கைத் திறனின் முக்கியத்துவத்தையே புரிந்துகொள்ளும் சக்தி இல்லாதிருக்கையில், எவ்வாறு அது உமது இயல்பினைப் புரிந்துகொண்டுள்ளதாக நடிக்க முடியும்? படைப்பு முழுமையுமே உமது மர்மத்தைக் கண்டு குழப்பமடைந்திருக்கும் பொழுது, எவ்வாறு, நான், உம்மை அறிந்திருப்பதாகக் கோரிக்கொள்ள இயலும்; இருந்தும், பிரபஞ்சமே உமது உள்ளமையைப் பிரகடனம் செய்து, உமது மெய்ம்மைக்குச் சாட்சியமளிக்கும் பொழுது, எவ்வாறு நான் உம்மை அறிந்திருக்கவில்லை எனக் கூறிக் கொள்வது? உமது அருள்பாலிப்புகளுக்கான நுழைவாயில்கள் நித்திய காலமும் திறந்தே இருந்து வந்திருக்கின்றன; உமது முன்னிலையை அடைவதற்கான வழிவகைகள் படைப்புப் பொருள்கள் அனைத்திற்கும் சாத்தியமாக்கப்பட்டுள்ளன; மேலும், உமது ஒப்பற்ற அழகின் வெளிப்பாடுகள், எல்லா வேளைகளிலும், கண்ணுக்குப் புலனாகும், புலனாகா எல்லா உயிரினங்களின் மெய்ம்மையின் மீதும் பதிக்கப் பட்டுள்ளன.

இருந்தும், இவ் வதியருள்மிகு சலுகையும், மிகச்சிறந்த, முழுநிறைவான, இவ்வருள்பாலிப்பும் அன்றி, உமது புனிதத் தன்மை, பேரொளி என்னும் அரசவை உம்மைத் தவிர மற்றனைவரின் அறிவுக்கு மேல் அளவிடற்கரிய நிலைக்கு உயர்த்தப் பட்டுள்ளது எனவும், உமது உள்ளமையின் மர்மம் உமது ஒருவரின் மனதைத் தவிர வேறெந்த மனமும் புரிந்திடவியலாதது எனவும் சாட்சியம் கூற நான் உந்துதல் அளிக்கப் படுகின்றேன்.

உம்மைத் தவிர வேறெவருமே உமது மர்மத்தின் இயல்பினைத் தெளிவுப்படுத்திட இயலாது; மேலும், உமது அறிவெல்லையைக் கடந்த சாராம்சத்தினை, உமது தேடவியலாத மெய்ம்மைத் தன்மை என்னும் உள்ளமையைத் தவிர வேறெதுவுமே அதனைப் புரிந்திடவியலாது! தேடுதல் என்னும் பாலைவனத்தினில் உமது வதனத்தைக் கண்ணுறுவதற்காகத் தேடி அலையும் போது, எத்துணைப் பெருந்தொகையானது, உம்மிடமிருந்து தங்களின் பிரிவு என்னும் வனாந்தரத்தில், தங்களின் வாழ்நாள் முழுவதும் அலைந்து திரிந்தும், இறுதியில் உம்மைக் காணுவதில் தோல்வியே அடைந்துள்ளனர்! எத்துணைப் பெரிதானது, உமது வதனத்தைக் கண்ணுறுவதற்காகத் தேடுதல் என்னும் பாலைவனத்தினில் தேடித் திரியும்பொழுது திசையிழந்து, குழப்பமடைந்துள்ள புனிதமிகு, என்றும் இறவா, எண்ணிறந்த ஆன்மாக்களின் கூட்டம்! எவரை, உம்மிடமிருந்து வெகுதொலைவெனும் சுட்டெரித்திடும் ஆர்வக்கனல் மூழ்கடித்து உயிரிழக்கச் செய்துள்ளதோ, உமது அவ் வார்வமிக்க நேசர்கள் எண்ணிக்கையோ கணக்கிடற்கரியது; உமது வதனத்தின் ஒளியினை உற்றுப் பார்த்திடும் நம்பிக்கையில் தங்களின் உயிர்களை முழுமனதாகத் தியாகம் செய்துள்ளோரான அவ்விசுவாசமிக்க ஆன்மாக்களோ எண்ணற்றோராவர்.

உமக்காக ஏங்கித் தவிப்போரின் பேராவல்மிக்க இவ்வுள்ளங்களின் பெருமூச்சுகளும், முணகல்களும், உமது புனித அரசவையினை அடையவே இயலாது; அதுவுமல்லாது, உமது திருமுகத்தின் முன்பாக வருவதற்காக ஆவலுற்றுள்ள வழிப்போக்கர்களின் புலம்பல்கள் உமது பேரொளி என்னும் இருக்கையினை அடைந்திடவே இயலாது.

XXVII

எவர் பூரண சூன்யத்திலிருந்து எல்லாப் பொருள்களின் மெய்ம்மையையும் படைத்துள்ளாரோ, எவர் வெறுமையிலிருந்து தனது படைப்பின் மிகப் பண்பட்ட, நுட்பமான படைப்பினங்களை ஆக்கியுள்ளாரோ, மேலும், எவர் தமது படைப்பினங்களை வெகு தொலைவு என்னும் தாழ்நிலையிலிருந்தும், இறுதி அழிவென்னும் பேராபத்திலிருந்தும் காப்பாற்றி அவர்களைத் தமது அழிவற்ற ஒளியெனும் இராச்சியத்தினுள் ஏற்றுக் கொண்டுள்ளாரோ அவருக்கே, பிரபஞ்சத்தின் ஒப்பற்ற, ஒளிமயமான மன்னராகிய, மாட்சிமை மிகு பிரபுவான அவருக்கே, எல்லா மேன்மையும், இறைவனின் ஒருமைத்தன்மையும், போற்றுதல்களும் உரியதாகுக.

சகலத்தையும் உள்ளடக்கும் அவரது அருள், யாவற்றிலும் வியாபித்துள்ள அவரது கருணை, ஆகியவற்றைத் தவிர வேறெதுவுமே இதனைச் சாதித்திருக்க வியலாது.

அவ்வாறின்றி எங்ஙனம் சூனியம், இன்மை நிலையிலிருந்து தானாகவே, உள்ளமை என்னும் அரசினைத் தோற்றுவிக்கக் கூடிய ஆற்றலையோ, தகுதியையோ பெற்றிருக்க முடியும்?

உலகையும் அதனுள் வாழ்வன, ஊர்வன ஆகிய அனைத்தையும் படைத்து, அவர், தமது கட்டுப் படுத்தவியலாத, மாட்சிமை பொருந்திய கட்டளையின் தெளிவான இயக்கத்தின் மூலமாக மனிதனை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவனுக்குத் தம்மை அறிந்துகொள்ளும், அன்பு கொள்ளும் தனிச்சிறப்பையும் ஆற்றலையும் வழங்கியுள்ளார்.

படைப்பு முழுமைக்கும் உயிரளிக்கும் உந்துதல் சக்தியாகவும் அடிப்படை நோக்கமாகவும் கருதப்பட வேண்டிய ஆற்றல் இதுவே.

ஒவ்வொரு தனிப்படைப்பின் மெய்ம்மையின் ஆழத்தினுள் அவர், தமது திருநாமம் ஒன்றின் பிரகாசத்தினைப் பாய்ச்சி, அதனைத் தமது தன்மைகளின் ஒளி ஒன்றினைப் பெறச் செய்துள்ளார்.

ஆனால், அவர், மனிதனின் மெய்ம்மையின் மீது மட்டும் தமது நாமங்கள், பண்புகள், ஆகிய பிரகாசத்தினை ஒரு கூறாக விழச் செய்து, அதனையே தம்மைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகவும் ஆக்கியுள்ளார்.

படைப்புப் பொருள்கள் மத்தியிலிருந்து மனிதனை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவனை இம்மாபெரும் சலுகைக்கும், இவ்வழியாத வள்ளன்மைக்கும் உடையவனாக ஆக்கியுள்ளார்.

இருப்பினும், தெய்வீக வள்ளன்மை என்னும் பகல் நட்சத்திரத்தினாலும், விண்ணுலக வழிகாட்டுதலின் தோற்றத்தினாலும், மனிதனின் மெய்ம்மைக்கு அளிக்கப்பட்டுள்ள இச்சக்திகள், மெழுகுவத்தியினுள் சுடரொளி மறைந்து கிடப்பது போலவும், ஒளியின் கதிர்கள் தீபத்தினுள் உள்ளார்ந்து இருப்பது போலவும், அவனுள்ளேயே இருக்கின்றன.

சூரியனின் ஒளியானது தூசிப் படலத்தினால் மறைக்கப் படுவது போலவே, களிம்பினால் மறைக்கப் பட்டிருக்கும் கண்ணாடியைப் போலவே, இச்சக்திகளின் பிரகாசங்களும் உலக ஆசைகளினால் மறைக்கப்படக் கூடும்.

மெழுகுவத்தியோ, தீபமோ, வெளிச் சக்தி எதனின் உதவியும் பெறாது, தானாகவே, தன்னைப் பற்றவைத்துக் கொள்ள முடியாது; அதே போன்று, கண்ணாடிக்கும் தானாகவே தன் கசடினை அகற்றிக் கொள்வது சாத்தியமன்று.

பற்ற வைக்கப்படாத வரையில், அத்தீபம், ஏற்றப்படவே மாட்டாது என்பதும், அக்கண்ணாடியின் மீதுள்ள கசடு துடைத்தழிக்கப் பட்டாலொழிய அது, சூரியனின் பிரகாசத்தையும் ஒளியையும் பிரதிபலிக்கவே இயலாது என்பது தெளிவானது, ஐயமற்றது.

ஒரே மெய்க் கடவுளாகிய அவரையும் அவரது படைப்பையும் இணைப்பதற்கான நேரடித் தொடர்புறவு எதுவும் இருக்க முடியாததனாலும், அநித்தியத்திற்கும் நித்தியத்திற்கும் இடையேயும், நிலையின்மைக்கும் பூரணத்துவத்திற்கும் இடையேயும் எவ்விதச் சாயல் ஒற்றுமையும் இருக்க வியலாததனாலும், அவர், ஒவோர் அருளாட்சிக் காலத்திலும், யுகத்திலும், தூய்மையானவரும், கறையற்றவருமான ஓர் ஆன்மாவை மண்ணுலகிலும் விண்ணுலுகிலும் தோன்றிடுமாறு விதித்துள்ளார்.

இவ்விழுமிய, மர்மமான, ஆன்மீக உயிருருவானவருக்கு, அவர், இரு அம்சங்களைக் கொண்ட ஓர் இயல்பினை நியமித்துள்ளார்; அது, உடலையும் பௌதிக உலகையும் சார்ந்ததும், இறைவனது சாராம்சம் என்னும் கருப்பொருளினின்று தோன்றிய ஆன்மீகத்தைச் சார்ந்ததுமாகும்.

மேலும், அவர், அவருக்கு இரட்டை நிலைகளையும் அருளியுள்ளார்.

முதலாவது நிலை, அவரது அதி உள்ளார்ந்த மெய்ம்மையுடன் தொடர்புடையது; அது, தனது குரலை இறைவனின் குரலாகக் குறித்துக் காட்டிடுகின்றது.

இதற்குப் பாரம்பரியமே சாட்சியமளிக்கின்றது: “இறைவனுடன் எனது தொடர்பு பல கூறானதும், மர்மமானதுமாகும்.

நானே அவர், அவரே நான்; அதையும் தவிர, நானெனப்படுபவர் நானே, அவரெனப்படுபவர் அவரே.

” அது போன்றவையே இச்சொற்கள்: “முஹம்மதுவே, எழுவீராக, ஏனெனில், நேசரும் அன்புக்குரியவரும் ஒன்றிணைக்கப்பட்டு, உம்முள் ஒருவராக்கப்பட்டுள்ளனர்.

” அவ்வாறே அவர் மேலும் கூறுகின்றார்: “அவர்கள் உமது சேவகர்கள் என்பதைத் தவிர, உமக்கும் அவர்களுக்கும் இடையே வேறெந்த வேறுபாடுமே கிடையாது.

இரண்டாவது நிலை மானிடர்க்குரிய நிலையாகும்; அது கீழ்க்காணும் செய்யுள்களால் எடுத்துக் காட்டப்படுகின்றது: “யான் உங்களைப் போன்ற மனிதனே.

” “கூறுவீராக, எந்தன் பிரபு போற்றப் படுவாராக! யான் ஒரு மனிதனை விட மேலானவரா, ஒரு திருத்தூதரா?” இப்பற்றின்மையெனும் சாராம்சங்கள், இப்பிரகாசமிகு மெய்ப்பொருளானோர், சகலத்தையும் வியாபித்துள்ள இறைவனின் அருள்பாலிப்பின் கால்வாய்களாவர்.

தவறாத வழிகாட்டல் என்னும் ஒளியினால் வழிநடத்தப்பட்டு, ஒப்புயர்வற்ற மாட்சிமை வழங்கப்பெற்று, அவர்கள், தங்களின் வாசகங்களின் அகத்தூண்டலையும், தங்களின் தவறாத அருள்பாலிப்பின் பீறிடுதலையும், தங்களது வெளிப்பாட்டின் புனிதப்படுத்தப்பட்ட இளங்காற்றி¬னையும் உபயோகித்து, ஏக்கமுற்றிடும் ஒவ்வோர் உள்ளத்தையும், ஏற்கவல்ல ஆன்மாவையும், உலகக் கவலைகள், கறைகள் ஆகிய கட்டுப்பாடுகளிலிருந்து தூய்மைப்படுத்துவதற்கு, அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பிறகு, மனிதனின் மெய்ம்மையில் உள்ளுறைந்துள்ள இறைவனின் பொறுப்பானது, தெய்வீக வெளிப்பாட்டின் உதித்திடும் பிரகாசமான கோளத்தைப் போல் மறைவிடம் என்னும் முகத்திரைக்குப் பின்னால் இருந்து வெளிப்பட்டு, அதன் வெளிப்படுத்தப் பட்ட பேரொளி என்னும் கொடியினை மனிதரின் உள்ளங்கள் என்னும் உச்சங்களின் மீது நாட்டிடும்.

முன்கூறப்பட்ட வாசகங்களிலிருந்தும் மறைக் குறிப்புகளிலிருந்தும் மண்ணுலக, விண்ணுலக இராஜ்ஜியங்களில், ஓர் ஆன்மா, ஒரு சாராம்சம், அவதரித்தாக வேண்டும் என்பது ஐயத்திற்கிடமின்றி தெளிவாக்கப்பட்டுவிட்டது; அவர், திருஅவதாரமாகவும், அனைத்திற்கும் மாட்சிமைமிகு பிரபுவான அவரது இறைமையின் அருள்பாலிப்பினையே பரப்பிடும் ஒரு சாதனமாகவும் செயல்படுவார்.

இப்பகல் நட்சத்திரமானவரின் போதனைகளின் மூலமாக, ஒவ்வொரு மனிதனும் முன்னேற்றமடைந்து, வளர்ச்சி பெறுவான்; அதன்வழி, அவன், தனது அதி உள்ளார்ந்த மெய்ப்பொருள் வழங்கப்பெற்றுள்ள ஆற்றல்மிக்க சக்திகள் அனைத்தும் வெளிப்படுத்தப்படக் கூடிய ஸ்தானத்தை அடைந்திடுவான்.

இதே நோக்கத்திற்காகத்தான், ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வோர் அருளாட்சிக்காலத்திலும், இறைவனின் தீர்க்கதரிசிகளும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டோரும், மனிதரிடையே தோன்றியுள்ளனர்; அவர்கள், இறைவனின்று உதித்திடும் அத்தகைய ஆற்றலையும் நித்தியமானவர் மட்டுமே வெளிப்படுத்திடவல்ல அத்தகைய வலிமையையும் புலப்படுத்துவர்.

நிதான புத்தியுடைய ஒருவர், தான் புரிந்துகொள்ளவியலாத சில வார்த்தைகளின் அர்த்தத்தின் காரணமாக, இறைவனின் அருள்பாலிப்பின் நுழைவாயில் மனிதரின் முன் நிரந்தரமாக அடைக்கப்பட்டு விடும் என மனப்பூர்வமாகக் கற்பனைச்செய்திட முடியுமா? அவர், இத்தெய்வீக ஒளிப்பிழம்புகளுக்கு, இப்பிரகாசமிக்க தீபங்களுக்கு, ஆரம்பமோ முடிவோ கற்பிக்க முடியுமா? ஊற்றெடுத்திடும் எந்த ஒரு வெள்ளப் பெருக்கு, சகலத்தையும் தழுவிடும் அவரது அருள் என்னும் நீரோடையுடன் ஒப்பிடப்பட இயலும்? எந்த ஓர் ஆசீர்வாதம், அத்துணை உயர்வான, அனைத்தையும் ஊடுருவவல்ல, கருணையின் ஆதாரங்களை விஞ்சிட இயலும்? ஒரு கண நேரமேனும் அவரது கருணை வெள்ளம், அருள் வெள்ளம் ஆகியவை உலகத்திற்குக் கிட்டாது செய்யப்படுமாயின், அது முழுதாக அழிந்து போய்விடும்.

இக்காரணத்தினால்தான், ஆரம்பமில்லாத ஆரம்பத்திலிருந்து, தெய்வீகக் கருணையின் நுழைவாயில், படைப்புப் பொருள்களுக்கு முன்பாக அகலத் திறக்கப்பட்டு, மெய்ம்மை என்னும் மேகங்கள் தொடர்ந்து, முடிவில்லாத முடிவு வரை மனித ஆற்றல் என்னும் தரை, மெய்ம்மை, தனிமனிதச் சிறப்பியல்பு ஆகியவற்றின் மீது தங்களின் வள்ளன்மைகளைத் தொடர்ந்து பொழிந்து வந்துள்ளன.

இறைவனின் செயல்முறை, தொடர்ச்சியாக, நித்தியம் முதல் நித்தியம் வரை, அவ்வாறாகத்தான் இருந்து வந்திருக்கின்றது.

XXVIII

எனது சமயத்திற்குச் சேவை செய்யவும், எனது அழகுமிக்க நாமத்தினைப் புகழ்ந்திடவும் எழும் ஒரு மனிதர் மகிழ்வெய்துவார்.

எனது சக்தியின் வலிமையைக் கொண்டு எனது திருநூலைக் கையிலெடுத்து, படைப்போனும் சர்வ விவேகியுமான உங்கள் பிரபுவானவர் அதனுள் வகுத்திருப்பவை எவையோ, அவற்றை, உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்.

முஹம்மதுவே, ஷியா இஸ்லாத்தைப் பின்பற்றுவோரின் சொற்களும் செயல்களும், எவ்வாறு, அதன் ஆரம்பகால மகிழ்ச்சியையும், உணர்ச்சியார்வத்தையும் மந்தமடையச் செய்து, அதன் ஒளியின் புராதன துலக்கத்தையும் மங்கச் செய்துள்ளன என்பதைப் பாருங்கள்.

அதன் பண்டையக் காலத்தில், மனித இனத்தின் தூதரான தங்களின் தீர்க்கதரிசியின் நாமத்துடன் தொடர்புள்ள தெய்வக் கட்டளைகளை, இன்னும் கடைப்பிடித்து வந்தனராதலால், அவர்களது வாழ்க்கைப் போக்கு, முறிவுறாத வெற்றிகளாலும், பெருஞ் சாதனைகளாலும் குறிக்கப்பட்டிருந்தன.

அவர்கள், தங்களின் மிகச் சிறந்த தலைவரும், குருவும் ஆகிய அவரது வழியிலிருந்து படிப்படியாகத் தவறவும், இறைவனின் ஒளியினின்று அப்பால் திரும்பி, தெய்வீக ஒருமைத் தன்மை என்னும் அவரது கொள்கையினைத் தூய்மை இழக்கச் செய்யவும், அவரது திருமொழிகளின் மகத்துவத்தை வெளிப்படுத்துவோரின்பால் மேன்மேலும் தங்களின் பெருமளவு கவனத்தை மையப் படுத்தத் தொடங்கவும் ஆரம்பித்ததனால், அவர்களின சக்தி பலவீனமாக மாறியது; அவர்களின் புகழ் அவமானமாக மாறியது; அவர்களின் துணிவு அச்சமாக மாறியது.

அவர்கள் இப்பொழுது அடைந்துள்ள நிலையை நீங்கள் பார்க்கின்றீர்கள்.

எவ்வாறு அவர்கள் தெய்வீக ஒருமைத் தன்மையின் மையக்குறியான அவருடன் இணைந்து கொண்டுள்ளனர் என்பதைப் பாருங்கள்.

மீண்டும் உயிர்த்தெழுதல் என்னும் இக்காலத்தில், எவ்வாறு, அவர்களின் தீயச்செயல்கள், அவர்களைத் திருவாக்கின் மெய்ம்மையினை - அவரது மகிமை மேன்மைப்படுத்தப்படுமாக - அறிந்து கொள்வதிலிருந்து தடுத்துள்ளன என்பதைப் பாருங்கள்.

இதுமுதற்கொண்டு, இம்மக்கள், வீண் ஆசைகளிலிருந்தும், பயனற்றக் கற்பனைகளிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தெய்வீக ஒருமைத் தன்மையின் அர்த்தத்திற்கான புரிந்து கொள்ளலைப் பெற்றிடவும் செய்திடுவர் என மனமார நம்புகின்றோம்.

அவதாரமானவர், என்றுமே, இறைவனின் பிரதிநிதியாகவும், பேச்சாளராகவும் இருந்து வந்திருக்கின்றார்.

உண்மையாகவே, அவர், இறைவனின் அதிசிறந்த பட்டங்களின் பகலூற்றும், அவரது மேன்மைமிகு பண்புகளின் தோற்றிடமும் ஆவார்.

எவராவது அவருக்குச் சமமானவர் எனக் கொள்ளப் படுவாராயின், அவருடன் முற்றிலும் ஒன்றானவர் எனக் கருதப்படுவாராயின், அத்தெய்வீக மனிதர் தனியருவர் என்றும் ஒப்பற்றவர் என்றும், அவரது சாராம்சம் பிரிக்கப்படவியலாதது, ஒப்பற்றது, எனவும் எவ்வாறு ஊர்ஜிதப்படுத்தப்பட முடியும்? மெய்ம்மையின் சக்தியின் மூலமாக, யாம், உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளதனைத் தியானியுங்கள்; அதனால் நீங்கள் அதன் பொருளினைப் புரிந்துகொள்ளக் கூடும்.

XXIX

கடவுள் மனிதனைப் படைத்ததன் நோக்கம், அவன், தனது படைப்போனை அறிந்து அவரது முன்னிலையை அடைய வேண்டும் என்பதாகவே இருந்து வந்திருக்கின்றது; என்றும் அவ்வாறே இருந்தும் வந்திடும்.

இவ்வதிசிறந்த நோக்கத்திற்கு, இவ்வதி மேன்மையான குறிக்கோளுக்கு, எல்லாத் திருநூல்களும், தெய்வீகமாக வெளிப்படுத்தப் பட்ட முக்கியமான திருமறைகளும், ஐயப்பாட்டுக்கு இடமின்றிச் சாட்சியம் பகர்கின்றன.

எவரொருவர் தெய்வீக வழிகாட்டுதல் என்னும் பகல் நட்சத்திரமான அவரை அறிந்து, புனித அரசவையினுள் பிரவேசிக்கின்றாரோ அவர், இறைவனின் அருகாமைக்கு ஈர்க்கப் பட்டு அவரது முன்னிலையை அடைந்தவராவார்; அம்முன்னிலையே உண்மையான சுவர்க்கமாகும்; விண்ணுலகின் அதி உயர்வான மாளிகைகள் எல்லாம் அதன் சின்னங்களேயாம்.

அத்தகைய மனிதர், “ஸட்ராத்-உல்-முந்தஹா”விற்கு அப்பால் “இரண்டு வில் தூரத்தில்,” நிற்பவரது அறிவின் ஸ்தானத்தை அடைந்தவராவார்.

யாரொருவர் அவரை அறிந்து கொள்ளத் தவறி விடுகின்றாரோ, அவர், வெகு தொலைவு என்னும் மனவேதனையைக் கொண்டு தன்னையே தண்டித்துக் கொண்டவராவார்; அத்தொலைவானது இன்மையும் அதித் தாழ்வான நரகத்தின் சாராம்சமும் அல்லாது வேறெதுவுமல்ல.

வெளித்தோற்றத்திற்கு அவர் உலகின் அதி உயரிய இருப்பிடத்தை நிரப்பி, அதி மேன்மைமிகு அரியாசனத்தின் மீது அமர்த்தப் பட்டிருப்பினும், அவரின் விதி அவ்வாறாகத்தான் இருந்திடும்.

மெய்ம்மையின் பகலூற்றாகிய அவர், வழிதவறிப் போன ஆன்மாக்களை, அவ்விதத் தொலைவினின்று மீட்டு, அவரது அரசவையின்பால் ஈர்த்து, அவரது முன்னிலையை அடையச் செய்யவல்ல ஆற்றலைப் படைத்துள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை.

“இறைவன் விரும்பி இருந்தால், நிச்சயமாக, அவர், மனிதர் அனைவரையும் ஒரே மக்களாக ஆக்கியிருப்பார்.

” இருப்பினும், அவரது நோக்கம், தூய ஆவியுடையோரையும், பற்றற்ற உள்ளம் கொண்டோரையும், தங்களின் சொந்த உள்ளார்ந்த சக்திகளைக் கொண்டு அதி மேன்மையான சமுத்திரத்தின் கரைகளின்பால் உயரவேண்டும் என்பதுதான்; அதன்வழி, ஒளிமயமானவரின் அழகைத் தேடுபவர்கள், கீழ்ப்படியாதோரிடம் இருந்தும் முறை கெட்டோரிடம் இருந்தும், வேறுபடுத்திக் கண்டறியப்படவும், வேறாக்கப்படவும் கூடும்.

அவ்வாறாகத்தான், ஒளிமயமானவரினாலும், பிரகாசமிகு எழுதுகோலினாலும் விதிக்கப்பட்டுள்ளது.

தெய்வீக நீதியின் திருஅவதாரங்களும் விண்ணுல அருள்பாலிப்புகளின் பகலூற்றுகளும் ஆகிய அவர்கள் மனிதரிடையே தோன்றிய போது, எப்பொழுதும், உலகியல் காரியங்கள் சம்பந்தமான வகையில் வறியோராகவும், உலகியல் வாழ்வின் உயர்வுகளெவையும் அற்றவர்களாகவும் இருப்பதற்குத் தெய்வீக நோக்கத்தின் கிளர்ச்சி உருவாக்கிடும் பிரித்தல், மாறுபட்ட தனிப்பண்பு, என்னும் அதே கொள்கையையே காரணமாகக் கூறலாம்.

நித்திய சாராம்சமான அவர் தம்முள் மறைந்து கிடக்கும் யாவற்றையும் வெளிப்படுத்துவாராயின், தமது உச்ச ஒளியினை முழுமையாகப் பிரகாசிப்பாராயின், அவரது அதிகாரத்தை எதிர்த்துக் கேட்பவர், அவரது மெய்ம்மையை மறுத்திடுபவர் யாரையுமே கண்டிட வியலாது.

இல்லை, அவரது பேரொளியின் அடையாளங்களினால் படைப்புப் பொருள்கள் அனைத்துமே, முற்றும் இன்மை நிலையை அடையுமளவு, திகைப்பும், அதிர்ச்சியும் அடைந்திடும்.

அத்தகைய சூழ்நிலையில், வேறெவ்வழியில் இறைப் பற்றுடையோரையும் பணிவற்றோரையும் வேறுபடுத்தி அடையாளங் கண்டிட இயலும்? முந்தைய அருளாட்சிக்காலங்கள் ஒவ்வொன்றிலும் இக்கொள்கையே இயங்கி வந்துள்ளதோடு, அது பூரணமாகத் தெளிவாக்கப்பட்டுமுள்ளது.

இக் காரணத்தினால்தான், ஒவ்வொரு யுகத்திலும், ஒரு புதிய திருஅவதாரமானவர் தோன்றினார்; இறைவனது உயர்வுமிகு ஆற்றலின் வெளிப்படுத்தல் மனிதருக்கு உறுதிப்படுத்தப்பட்டது.

உத்தரவாதம் அளிக்கப்பட்டது; ஆனால், அவரிடத்தில் நம்பிக்கைக் கொள்ளாதோர், ஒப்பற்ற, நித்திய அழகானவரின் மனித உருவிலான தோற்றத்தினால் ஏமாற்றமடைந்து, அவரை அறிந்துகொள்ளத் தவறிவிட்டுள்ளனர்.

அவர்கள், அவரது வழியிலிருந்து விலகிச் சென்று, அவரது தோழமையை - இறைவனது அருகாமையின் சின்னமான அவரது தோழமையையே தவிர்த்துவிட்டுள்ளனர்.

விசுவாசிகளின் பரிவாரத்தையே சிதறடிக்கவும், அவரிடத்தில் நம்பிக்கைக் கொண்டோரை நிர்மூலமாக்குவதற்கும் எழுந்துள்ளனர்.

இவ்வருளாட்சிக்காலத்தில், பயனற்றவர்களும், அறிவிலிகளும், எவ்வாறு, படுகொலை, சூறையாடுதல், நாடுகடத்தல் ஆகிய சாதனங்களைக் கொண்டு, தெய்வீகச்சக்தி என்னும் கரம் ஏற்றியுள்ள தீபத்தினை அணைத்திடவும், அதன் நித்தியப் புகழொளியினை மங்கச் செய்திடவும் தங்களால் முடியும் என்று ஆவலாகக் கற்பனைச்செய்கின்றனர் என்பதைப் பாருங்கள்.

அத்தகைய இன்னல்கள் இத்தீபத்தின் சுடருக்கு உணவாகும் எண்ணெய் என்பதை அவர்கள், எந்தளவு உணராதிருக்கின்றனர்! அவ்வாறானதுதான், இறைவனின் தன்மை மாற்றும் ஆற்றல்.

அவர் எதனை விரும்புகின்றாரோ, அதனை மாற்றுவார்; அவர், மெய்யாகவே, சகலத்தின் மீதும் சக்தி கொண்டுள்ளவர்.

எல்லா வேளைகளிலும், அதி சிறந்த மன்னர் பயன்படுத்திடும் இறைமையை எண்ணிப் பாருங்கள்; அவரது சக்தியின் ஆதாரங்களையும், ஒப்புயர்வற்ற தாக்கத்தினையும் கவனியுங்கள்.

மறுத்தலின் சின்னங்களும், வன்முறை, சினம், ஆகியவற்றில் நிபுணர்களுமான அவர்களின் பயனற்றப் பேச்சுக்களிலிருந்தும் உங்கள் காதுகளைத் தூய்மைப் படுத்திக் கொள்ளுங்கள்.

ஒரே மெய்க் கடவுளாகிய அவரின் சக்தி, படைப்புப் பொருள்கள் அனைத்தையும் வென்றிடுவதையும், அவரது மாட்சிமையின் அடையாளங்கள் படைப்பு முழுவதையும் சூழ்ந்திடுவதையும் நீங்கள் கண்ணுறவிருக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

அந்நாளில், எவ்வாறு அவரைத் தவிர மற்றனைத்தும் மறக்கப் பட்டு, முற்றும் இல்லாமை எனக் கருதப்படும் என்பதைக் கண்டிடுவீர்.

எனினும், எவ்விதச் சூழ்நிலைகளிலுமே இறைவனும் அவரது திரு அவதாரமும், தாங்கள் இயற்கையாகக் கொண்டுள்ள உயர்வு, உன்னதம் ஆகியவற்றிலிருந்து, தொடர்பு அறுக்கப்பட முடியாது என்பது நினைவில் கொள்ளப்படவேண்டும்.

அதுமட்டுமன்று; உங்கள் கண்ணைக் கொண்டல்லாது எனது கண்ணைக் கொண்டு நீங்கள் பார்க்க விரும்புவீராயின், உயர்வு, உன்னதம், ஆகியவை அவரது திருமொழியின் படைப்புகளேயாகும்.

XXX

அருள்மிகுந்தவரும், அதிநேசருமான தன்னைத் தவிர இறைவன் வேறிலர் என இறைவனே சாட்சியம் பகர்கின்றார்.

அருள், வள்ளன்மை ஆகிய அனைத்தும் அவருடையவையே.

எதனை யாருக்காக விரும்புகின்றாரோ, அதனை அவருக்கு வழங்கிடுவார்.

மெய்யாகவே, அவர், எல்லாம் வல்லவர், சர்வசக்தி வாய்ந்தவர், ஆபத்தில் உதவுபவர், சுயஜீவி.

மன்னருக்கெல்லாம் மன்னரான, போற்றுதலுக்கெல்லாம் உரியவரான, ஒரே உண்மைக் கடவுளாகிய அவரின் விருப்பத்திற்கிணங்க, மனித உருவில் அனுப்பி வைக்கப்பட்ட பாப் என்பவரை, யாம் மெய்யாகவே, நம்புகின்றோம்.

மேலும், நாம், “முஸ்தகாஸ்” அவர்களின் காலத்தில் அவதரிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள அவரிடமும், அவருக்குப் பின், முடிவில்லாத முடிவுவரை வரவிருப்பவர்களிடமும் பக்திவிசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறோம்.

நீங்கள் புரிந்துகொள்ளக் கூடியவராயின், வெளித் தோற்றத்திலோ, உள்ளார்ந்த நிலையிலோ, அவ் வொவ்வொருவரின் அவதரிப்பிலும், நாம், இறைவனின் அவதரிப்பையல்லாது வேறெதனையுமே காண்பதில்லை.

நீங்கள் உய்த்துணரக் கூடுமாயின், அவர்கள் ஒவ்வொருவரும், அவரது மெய்யுரு, அவரது அழகு, அவரது வலிமை, பேரொளி ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடியேயல்லாது வேறெதுவுமில்லை.

அவர்களைத் தவிர மற்றனைத்துமே, இத்திருஅவதாரங்களது பேரொளியைப் பிரதிபலிக்கவல்ல கண்ணாடிகளாகவே கருதப்படவேண்டும்; நீங்கள் சிந்திக்குந் திறனில்லாது இருப்போராய் இல்லையெனில், அவ் வவதாரங்களே, புனித உட்பொருளானவரின் மூலாதாரமான கண்ணாடிகளேயாவர்.

யாருமே அவர்களிடமிருந்து தப்புவதில்லை; அவர்கள், தங்களின் நோக்கத்தை அடைவதிலிருந்து தடுக்கப்படுவதுமில்லை.

இக்கண்ணாடியானவர்கள் என்றென்றும், ஒருவருக்குப் பின் மற்றொருவர் தொடர்ந்து வருவர்; பண்டைய அழகானவரின் ஒளியின் பிரகாசத்தினைத் தொடர்ந்து பிரதிபலிக்கவே செய்வர்.

அதே போன்று, அவரது பேரொளியைப் பிரதிபலிப்பவர்கள் நிரந்தரமாக வாழ்ந்திடுவர்; ஏனெனில், இறைவனின் அருள் தொடர்ந்து வெளிப்படுவது என்றுமே நின்றிடாது.

இது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

XXXI

ஆதாமின் அவதரிப்பை, பாப் அவர்களின் அவதரிப்புடன், சங்கிலியைப்போல் தொடர்ச்சியாகப் பிணைத்திடும் வெளிப்பாடுகளை, உங்களின் அகக் கண்ணைக் கொண்டு தியானியுங்கள்.

இவ்வொவ்வோர் அவதாரமும் தெய்வீக விருப்பம், நோக்கம் ஆகியவையின் இயக்கத்தின் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கும், அவ்வொவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட செய்தியினை ஏந்தி வருபவர் என்பதற்கும், ஒவ்வொருவரிடமும் தெய்வீகமாக வெளிப்படுத்தப்பட்டத் திருநூல் ஒன்றுக்கான பொறுப்பு அளிக்கப்பட்டு, ஒரு சக்திமிக்க நிருபத்தின் மர்மங்களைத் தெளிவுப்படுத்துவதற்கான அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கும், யான், ஆண்டவனின் முன் சாட்சியம் அளிக்கின்றேன்.

அவ்வொவ்வொருடனும் தொடர்புப்படுத்தப்பட்ட வெளிப்பாட்டின் அளவு, முன்னரே விதிக்கப்பட்டுவிட்டுள்ளது என்பது நிச்சயம்.

இவ்வுண்மையைப் புரிந்துகொள்ளக் கூடியோராயின், மெய்யாகவே, இதுவே, அவர்கள்பால் எமது தயையின் அடையாளம் என்பதாகும்.

படிப்படியாய் முன்னேறி வந்துள்ள வெளிப்பாட்டின் இவ்வியல்பான வளர்ச்சி, அவரது ஒப்புயர்வற்ற, அதிபுனிதமான, மேன்மையான வதனம் மனிதர்களின் கண்களுக்குத் திரைநீக்கம் செய்யப்படுவதற்கான உச்சக்கட்டத்தை அடைந்தபொழுது, அவர், தம்மை ஆயிரம் திரைகளுக்குப் பின்னால் மறைத்துக் கொள்ள முடிவெடுத்தார்; அவ்வாறின்றி, தெய்வத்தன்மையற்ற, அநித்திய கண்கள் அவரது ஒளியினை எவ்வாறு தெரிந்துகொள்ளக் கூடும்.

தெய்வீகமாக நியமிக்கப்பட்ட வெளிப்பாட்டின் அடையாளங்களும், சான்றுக் குறிப்புகளும் தன்மீது பொழிந்து கொண்டிருக்கும் காலத்திலேதான் அவர் அவ்வாறு செய்தார்; அவ்வடையாளங்களையும், சான்றுக் குறிப்புகளையும் உங்களின் கடவுளும், சகல உலகங்களின் எஜமானருமான பிரபுவைத் தவிர வேறெவராலும் கணித்திட வியலாது.

மறைவுக்காக நியமிக்கப்பட்ட நேரம் பூர்த்தியானதும், இன்னும் எண்ணற்ற திரைகளுக்குள் மூடப்பட்டிருந்த அவ்வேளையில் யாம் இவ்விளைஞனின் வதனத்தைச் சூழ்ந்திருந்த பிரகாசமிகு பேரொளியிலிருந்து ஒரு நுண்ணளவு மட்டுமே அனுப்பி வைத்ததுதான் தாமதம், மேலுலக வாசிகளின் படையினர் அனைவரையுமே கடுமையான கொந்தளிப்புப் பற்றிக் கொண்டது; இறைவனின் ஆதரவைப் பெற்றவர்கள் அவர்முன் வீழ்ந்து வழிபட்டனர்.

அவர், மெய்யாகவே, படைப்பு முழுவதிலுமே எவரும் கண்டிராத அத்தகையதொரு பேரொளியினை வெளிப்படுத்தினார்; ஏனெனில், விண்ணுலகங்கள், மண்ணுலகம் ஆகிய அனைத்திலும் உள்ள அனைவருக்கும் தனது வெளிப்பாட்டினைப் பிரகடனப் படுத்திட அவரே எழுந்துள்ளார்.

XXXII

கருணைமயமானவரின் நேசரான ஆபிரஹாமைப் பற்றித் தாங்கள் கேட்டிருப்பவை யாவும் உண்மையே; அது குறித்து ஐயம் எதுவுமே கிடையாது.

இறைவனின் சமயத்தில் தனது பற்றுறுதியையும், அவர் ஒருவரைத் தவிர மற்றனைத்தின்பாலும் தனது பற்றின்மையையும் மனிதர்களுக்கு எடுத்துக் காட்டப்படக் கூடும் என்பதற்காக, அவருக்கு, இறைவனின் குரல், இஸ்மாயிலை (மிsலீனீணீமீறீ) பலிகொடுக்குமாறு கட்டளையிட்டது; மேலும், உலக மனிதர்கள் அனைவரின் அநீதிகளுக்கும் பாவங்களுக்கும் பிணையமீட்பாக அவரைத் தியாகஞ் செய்ய வேண்டும் என்பதும் ஆண்டவனின் நோக்கமாகும்.

மேரியின் மகனான இயேசுவும் இதே கௌரவத்தினைத் தனக்கு அளிக்குமாறு -- ஒரே உண்மைக் கடவுளாகிய அவரது திருநாமமும், ஒளியும், உயர்வுப்பெறுமாக -- கெஞ்சி மன்றாடினார்.

அதே காரணத்திற்காகத்தான், ஹ§சேன், இறைவனின் தூதரான முஹம்மது நபி அவர்களினால் பலியாகக் கொடுக்கப்பட்டார்.

ஆண்டவனின் மறைபொருளானதும், பல்வேறானதுமாகிய இயல்பினை எந்த மனிதனுமே புரிந்து கொண்டதாகக் கூறிக்கொள்ள வியலாது; சகலத்தையும் தழுவியுள்ள அவரது கருணையினை ஆழங் கண்டிடவும் இயலாது.

மனிதர்களின் தவறான நடத்தை, அவர்களின் கட்டுமீறுதல் ஆகியவை அத்தகையானவை; இறைவனின் தீர்க்கதரிசிகளையும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் பாதித்த சோதனைகள் அத்துணைக் கொடூரமானவை, அதனால் மனித இனம் முழுவதுமே சித்திரவதைச் செய்யப்பட்டு, உயிரிழப்பது பொருத்தமே.

ஆனால் இறைவனின் மறைவானதும் அன்புமிக்கதுமான வள்ளன்மை, கண்களுக்குப் புலனாகும் வழிகளிலும், புலனாகா வழிகளின் மூலமாகவும், அதனை, அதன் துன்மார்க்கச் செயல்களின் தண்டனையிலிருந்து பாதுகாத்து வந்திருக்கின்றது; தொடர்ந்தும் பாதுகாத்துவரும்.

இதனை உங்கள் உள்ளத்தில் வைத்துச் சிந்தியுங்கள்.

அதனால் உண்மை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு, நீங்கள் அவரது பாதையில் உறுதிப்பெறக் கூடும்.

XXXIII

இறைவனின் திருமொழியும் அதன் உள்ளார்ந்த ஆற்றல்களனைத்தும் சர்வ ஞானியும், சர்வ விவேகியுமான அவரால் முன்விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குக் கண்டிப்பான இணக்கத்திற்கேற்பவே மனிதர்களுக்கு வெளிப்படுத்தப்படும்.

மேலும், அதன் மறைத்திடும் திரையானது, தன்னையே தவிர வேறெவரும் அன்று என யாம் விதித்திருக்கின்றோம்.

உண்மையாகவே, யாம், எமது நோக்கத்தை அடைவதற்கான சக்தி அவ்வாறானதுதான்.

இறைவனின் திருச்சொல், அதனுள் புதைந்து கிடக்கும் ஆற்றலைத் திடீரென வெளிப்படுத்திட அனுமதிக்கப்படுமாயின், எந்த ஒரு மனிதனுமே அவ்வலுமிக்க வெளிப்பாட்டின் பாரத்தினைத் தாங்கிக் கொள்ள இயலாது.

அல்லாமலும், விண்ணிலும் மண்ணிலுமுள்ள அனைத்துமே அதன்முன் பீதியுற்று ஓட்டமெடுத்திடும்.

கடவுளின் தூதர் முஹம்மதுவின்பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதனை எண்ணிப் பாருங்கள்.

அவரால் ஏந்திவரப்பட்ட தூதுப்பணியின் அளவு எல்லாம்வல்ல, சர்வசக்தி வாய்ந்த அவரால் முன்கூட்டியே விதிக்கப் பட்டிருந்தது.

இருப்பினும், அவர்பால் செவி சாய்த்தவர்கள், தங்களின் ஸ்தானம், அறிவுத்திறன் ஆகியவற்றின் அளவுக்கேற்பவே அவரது நோக்கத்தினைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அவரும், அதே போன்று, விவேகத்தின் வதனத்தை, அவர்கள் தாங்கிக் கொள்ளக் கூடிய அளவே அவரது வெளிப்பாட்டின் சுமையைப் படிப்படியாக வெளிப்படுத்தினார்.

மனித இனம் அதன் முதிர்ச்சி நிலையை அடைந்ததுதான் தாமதம், உடனே, திருச்சொல்லானது, அதனுள் வழங்கப்பட்டும், புதைந்தும், கிடந்த ஆற்றல் சக்திகளை -- ஆண்டு அறுபதில், புராதன அழகானவர், அலி முஹம்மது, பாப், என்ற உருவில் தோன்றியபொழுது முழுமையான பேரொளியுடன் வெளிப்படுத்திட்ட அவ்வாற்றல் சக்திகளை -- மனிதர்களின் கண்களுக்கு வெளிப்படுத்தியது.

XXXIV

தனது வலிமையின் ஆற்றலின் மூலம், சூனியம் என்னும் நிர்வாண நிலையிலிருந்து, தனது படைப்பினைத் தோற்றுவித்து, அதற்கு உயிர் என்னும் அங்கியினை அணிவித்துள்ள இறைவனுக்கே அனைத்துப் புகழ்ச்சியும் பேரொளியும், உரியதாகட்டும்.

படைப்புப் பொருள்கள் அனைத்தின் மத்தியிலிருந்து, அவர், தனது பிரத்தியேகச் சலுகைக்காக, மனிதன் என்னும் இரத்தினத்தைப் போன்ற மெய்ம்மையினைத் தேர்ந்தெடுத்து, அதற்கு, அவரை அறிந்து கொள்ளும் விசேஷ தன்மையையும் அவரது பேரொளியின் மகிமையினைத் தியானித்திடும் ஆற்றலையும் வழங்கியுள்ளார்.

அவனுக்கு அருளப்பட்ட இவ்விரட்டிப்பான தனித்தன்மை அவனது உள்ளத்திலிருந்து வீண் ஆசை என்னும் ஒவ்வொரு கறையையும் போக்கி, படைப்போன் அவனுக்கு அணிவித்தருளியுள்ள மேலாடைக்கு அவனை அருகதையுடையவனாக ஆக்கியுள்ளன.

அது, அவனது ஆன்மாவை, அறியாமை என்னும் இரங்கத்தக்க நிலையிலிருந்து மீட்பதற்கு உதவியுள்ளது.

எதனைக் கொண்டு மனிதனின் உடலையும் ஆன்மாவையும் அலங்கரித்துள்ளாரோ, அம்மேலங்கிதான், அவனது நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாகும்.

ஒரே மெய்க்கடவுளானவரின் அருளினாலும், வலிமையினாலும் உதவப்பட்டு, மனிதன், தன்னை உலகின் அடிமைத் தளைகளிலிருந்தும் ஒழுக்கக் கேட்டிலிருந்தும், மற்றும் அதிலுள்ள அனைத்திலிருந்தும் விடுவித்துக் கொண்டு, அறிவென்னும் விருட்சத்தின் நிழலின்கீழ் உண்மையான, நிலையான ஓய்வினைப் பெற்றிடும் அந்நாள் எத்துணை ஆசீர்வதிக்கப் பட்டதாகும்! உங்களின் உள்ளமெனும் பறவை, தனது நண்பர்களின்பால் அதன் மிகுந்த அன்பின் காரணமாக எழுப்பியிருந்த கீதங்கள், அவர்களின் காதுகளை எட்டின; என்னை உமது கேள்விகளுக்கு விடையளிக்கவும், எந்தளவு அனுமதிக்கப் பட்டதோ அந்தளவுள்ள இரகசியங்களை வெளிப்படுத்தவும், தூண்டியது.

உமது மதிக்கத்தக்க கடிதத்தில் தீர்க்கதரிசிகளிலே மற்றவர்களைவிடச் சிறந்தவர் எனக் கருதப்படக் கூடியவர் யார் என்று கேட்டிருந்தீர்.

இறைவனின் தீர்க்கதரிசிகள் அனைவரும் சாராம்சத்தில் ஒருவரே.

அவர்களின் ஒருமைத் தன்மை முடிவானது.

படைப்போனாகிய இறைவன் வாய்மொழிகின்றார்: எனது செய்தியினைக் கொண்டு வருபவர்களிடையே எவ்வித வேறுபாடும் கிடையாது.

அவர்கள் அனைவருமே ஒரே குறிக்கோளைக் கொண்டுள்ளனர்; அவர்களின் இரகசியம் அதே இரகசியம்தான்; ஒருவரை மற்றவருக்கு மேலாக மதிப்பதுவும், குறிப்பிட்ட ஒருவரை மற்றவர்களைவிட மேன்மைப் படுத்துவதும், எவ்வகையிலும் அனுமதிக்கப்படமாட்டாது.

உண்மையான தீர்க்கதரிசி ஒவ்வொருவரும் தனது போதனையை, அடிப்படையில், தனக்கு முன்னால் சென்ற தீர்க்கதரிசியின் வெளிப்பாட்டிற்குச் சமமானதெனவே கருதிடுவார்.

ஆகவே, எந்த மனிதனாவது, இவ்வுண்மையைப் புரிந்துகொள்ளத் தவறி, அதன் விளைவாக, மனம்போன போக்கில் வீணானதும், ஒவ்வாததுமான பேச்சில் ஈடுபடுவானாயின், கூரிய பார்வையுடையோரும், தெளிவாகப் புரிந்துகொள்ளும் ஆற்றலுடையோரும், அவ் வீண்வார்த்தைகள் தங்களைத், தங்களின் நம்பிக்கையில், தடுமாற்றமடையவே விடமாட்டார்.

இருப்பினும், இவ்வுலகில், இறைவனின் தீர்க்கதரிசிகளின் வெளிப்படுத்துதலின் அளவு, வேறுபட்டே ஆகவேண்டும்.

அவர்களுள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பிரத்தியேக போதனையைக் கொண்டுவருபவர்; மேலும், அவர், குறிப்பிட்ட செயல்களின் மூலமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள பொறுப்பளிக்கப்பட்டுள்ளார்.

இக்காரணத்தினால்தான், தங்களின் தகைமையில் அவர்கள் வேறுபட்டிருப்பதாகத் தோன்றுகின்றது.

அவர்களின் வெளிப்பாடு, பூமியின்மீது தனது பிரகாசத்தினைப் பாய்ச்சிடும் சந்திரனின் ஒளிக்கு ஒப்பிடலாம்.

ஒவ்வொரு முறையும், அது தோன்றும் பொழுது, புதிய அளவான பொலிவினை வெளிப்படுத்துகின்றது; இருந்தும், அதன் உள்ளார்ந்த சுடரொளி குறையவே முடியாது; அதன் ஒளி, அணைதலையும் அனுபவிக்காது.

ஆகவே, அவர்களது ஒளியின் உக்கிரத்தில் காணப்பெறும் வேறுபாடுகளுக்கு அவ்வொளியினுடைய உள்ளார்ந்த இயல்பு காரணமல்ல; ஆனால், அதனைத் தொடர்ச்சியாக மாற்றத்திற்குள்ளாகி வரும் உலகத்தின் ஏற்புத்திறனையே குறிப்பதாகும் என்பது தெளிவானதும், ஐயத்திற்கிடமற்றதுமாகும்.

எல்லாம்வல்ல, ஒப்பற்ற பரம்பொருளானவர், மண்ணுலகின் மனிதர்பால் அனுப்பத் திருவுளங் கொண்ட தீர்க்கதரிசி ஒவ்வொருவருக்கும் ஒரு போதனையை ஒப்படைத்து, அவர் தோன்றிய காலத்தின் தேவைக்கு மிகப் பொருத்தமான முறையில் நடக்க வேண்டியதையும் கடமையாக்கியுள்ளார்.

மனிதர்பால் தனது தீர்க்கதரிசிகளை அனுப்புவதற்கு இறைவன் இரட்டைக் குறிக்கோளைக் கொண்டுள்ளார்.

முதலாவது, மனிதரின் குழந்தைகளை அறியாமை என்னும் இருளிலிருந்து விடுவித்து, அவர்களை மெய்யறிவு என்னும் ஒளியின்பால் வழிநடத்துவது.

இரண்டாவது, மனித இனத்தின் சமாதானத்தையும் அமைதியையும் உறுதிப்படுத்தி, அதனை நிலைநாட்டுவதற்கான வழிவகைகளைக் கிடைக்கச் செய்வதுமேயாகும்.

இறைவனின் தூதர்கள் மருத்துவர்களாகக் கருதப்பட வேண்டும்.

அவர்களது வேலை உலகத்தின் நலனையும், அதன் மக்களின் நலனையும் பேணி வளர்ப்பதாகும்.

அதனால் அவர்கள், ஒற்றுமை உணர்ச்சியின் மூலமாகப் பிளவுற்ற மனித இனத்தின் நோயைக் குணப்படுத்தக் கூடும்.

அவர்களின் கூற்றினை எதிர்த்துக் கேட்கவோ, அவர்களின் நடத்தையை இழித்துக் கூறவோ எவருக்குமே உரிமை வழங்கப்பட்டதில்லை; ஏனெனில், அவர்கள் மட்டும்தான் நோயாளியைப் புரிந்துகொண்டு, நோய்களின் மூலகாரணத்தைச் சரியாக ஆராய்ந்துணரும் தகுதியுடையவர்களாகத் தங்களைக் கூறிக் கொள்ள அருகதை உடையவர்கள்.

எந்த ஒரு மனிதனும், தனது புலனாற்றல், அது எத்துணைக் கூரியதாக இருப்பினும், அத்தெய்வீக மருத்துவர் அடைந்துள்ள விவேகத்தையோ, புரிந்துணரும் தன்மையையோ பெற்றுவிட்டோம் என்ற நம்பிக்கைக் கொள்ளவே இயலாது.

ஆகவேதான் இந்நாளைய மருத்துவரின் சிகிச்சை முறை இதற்குமுன்னுள்ள சிகிச்சை முறையைப் போல் இல்லாதிருக்கின்றது என்றால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை.

துன்பப்படுபவரைப் பாதித்திடும் நோய்க்கு, அதன் ஒவ்வொரு கட்டத்திலும், ஒரு பிரத்தியேக மருந்து தேவைப்படுகையில், எங்ஙனம் அது வேறுபடாதிருக்க முடியும்? அவ்வாறே, ஒவ்வொரு முறையும் இறைவனின் தூதர்கள் தெய்வீக அறிவு என்னும் விடிவெள்ளியின் பிரகாசமிக்க ஒளியினைக் கொண்டு உலகினை ஒளிபெறச் செய்கையில், தவறாது, அதன் மக்களை, காலத்தின் தேவைக்கேற்ப தோன்றியுள்ள வழியினைப் பின் பற்றுவதன் மூலம் கடவுளின் ஒளியை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

இவ்வாறாகவே அவர்கள் அறியாமை என்னும் இருளைப் போக்கி, உலகின் மீது, தங்களின் சொந்த அறிவின் ஒளியினைப் பாய்ச்சிட முடிகின்றது.

ஆகவே, இத்தீர்க்கதரிசிகளின் அதி உள்ளார்ந்த சாராம்சத்தின்பால்தான் ஒவ்வொரு மனிதனும் தனது நுண்ணறிவுப் பார்வையைச் செலுத்த வேண்டும்.

ஆகையால், எப்பொழுதுமே, தவறியவர்களுக்கு வழிகாட்டுதலும், துன்புற்றோருக்கு அமைதியளித்தலும் அவர்களின் ஒரே நோக்கமாக இருந்து வந்துள்ளது.

இவை, வளமான வாழ்வுக்கும் வெற்றிவிழாவுக்குமான நாள்கள் அன்று.

மனித இனம் முழுமையுமே பல்வேறு துன்பங்களின் பிடியில் கிடக்கின்றது; எனவே, மருத்துவரின் தவறா கைகள் தயாரித்துள்ள முற்றும் குணமளித்திடும் மருந்தைக் கொண்டு அதன் உயிரைக் காப்பாற்ற முயற்சியுங்கள்.

இப்பொழுது, சமயத்தின் தன்மையினைக் குறித்த உமது கேள்வி சம்பந்தமாக: உண்மையிலேயே விவேகிகள் உலகத்தை மனித உடலுக்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.

மனிதனின் உடலுக்கு அணிய ஆடை தேவைப் படுவதுபோல், மனித இனத்தின் உடல் நீதி, விவேகம் என்னும் அங்கியினால் அலங்கரிக்கப்பட வேண்டும்.

இறைவனால் அதற்கு வாக்களிக்கப்பட்ட வெளிப்பாடே அதன் மேலங்கியாகும்.

அவ்வங்கி அதன் நோக்கத்தைப் பூர்த்திச் செய்தபின், எல்லாம் வல்லவர், நிச்சயமாக அதனைப் புதுப்பிக்கவே செய்திடுவார்.

ஏனெனில், ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு புதிய அளவு இறையளி தேவைப் படுகின்றது.

ஒவ்வொரு தெய்வீக வெளிப்பாடும், அது தோன்றிய காலத்தின் சூழ்நிலைக்கு உகந்ததாக இருக்கும் வகையில், அனுப்பி வைக்கப்பட்டு வந்திருக்கின்றது.

கடந்த கால மதத் தலைவர்களின் கூற்றுகள் சம்பந்தமாக: ஒவ்வொரு விவேகமான, போற்றுதலுக்குரிய மனிதரும் அத்தகைய வீணானதும் பயனற்றதுமான பேச்சினைச் சந்தேகமின்றித் தவிர்த்தொதுக்கிடுவார்.

ஒப்புவமையற்றப் படைப்போன், மனிதர் அனைவரையும், அவ்வொரே பொருளிலிருந்து படைத்து, அவர்களின் மெய்ம்மையினைத் தமது உயிரினங்களுக்கெல்லாம் மேலாக உயர்த்தியுள்ளார்.

வெற்றியோ தோல்வியோ, ஆதாயமோ நட்டமோ, யாவுமே மனிதனின் கடு முயற்சியைப் பொறுத்தே உள்ளன.

மேலும் கடுமையாக முயற்சித்தால், அவரது வெற்றி மேலும் அதிகரித்திடும்.

இறைவனின் வள்ளன்மை என்னும் இளவேனிற்காலப் பொழிவு உண்மையான புரிந்துணர்வு என்னும் மலர்களை மனிதனின் உள்ளங்கள் என்னும் நிலத்தினில் தோன்றச் செய்து, அவற்றை, எல்லா உலகியல் கறைகளிலிருந்தும் தூய்மைப் படுத்துமென யாம் மனப்பூர்வமாக நம்புகிறோம்.

XXXV

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஒவ்வொரு சகாப்தத்திலும், உலக மனிதர்களைக் கருணைமயமானவரின் திருஅவதாரங்களைத் தவிர்த்தொதுக்கத் தூண்டியது யாது? அவர்களைத் தம்மிடமிருந்து அப்பால் திரும்பிடவும், தமது அதிகாரத்தை எதிர்க்கவும் கட்டாயப் படுத்தியது எதுவாயிருக்கும்? தெய்வீக ஆணையாளரின் எழுதுகோலில் இருந்து வெளிப்பட்டிட்ட இத்திருச் சொற்களை மனிதர்கள் தியானிப்பராயின், அவர்கள் அனைவருமே, இறைவனால் அருளப்பட்ட, என்றும் நிலையான, அவரது வெளிப்பாட்டின் மெய்ம்மையினை ஏற்று, எதற்கு அவரே பயபக்தியுடன் ஒப்புதல் அளித்திட்டாரோ அதற்குச் சாட்சியம் அளித்திடுவர்.

இறைவனின் ஒருமைத் தன்மையின் திருஅவதாரங்களின் காலங்களிலும், என்றும் நிலையான அவரது பேரொளி என்னும் பகலூற்றுகளின் காலங்களிலும், வீண் கற்பனைகள் என்னும் திரைகளே அவர்களுக்கும் மனித இனம் முழுவதற்கும் இடையே குறுக்கிட்டு வந்துள்ளது; தொடர்ந்தும் குறுக்கிட்டே வந்திடும்.

ஏனெனில் அக்காலங்களில் நித்திய மெய்ம்மையாகிய அவர், தானே நிச்சயித்துள்ளதற்கு ஏற்பத் தன்னை அவதரிக்கச்செய்து கொள்கின்றாரேயல்லாது, மனிதரின் விருப்பத்திற்கும் எதிர்ப்பார்ப்புக்கும் ஏற்ப அல்ல.

அவரே அறிவித்திருப்பதுபோல்: “அப்பொழுதிருந்து, மீண்டும் மீண்டும், ஒரு திருத்தூதர், உங்களின் ஆன்மா விரும்பாதவற்றைக் கொண்டு உங்கள்பால் வரும் பொழுது, நீங்களோ ஆணவத்தினால் பெருமிதங் கொண்டு, சிலரை ஏமாற்றுக்காரர்களைப் போல் நடத்தி, வேறு சிலரைப் படுகொலைச் செய்திடுகின்றீர்.

கடந்த காலங்களிலும், கால வட்டங்களிலும், இத் திருத்தூதர்கள், மனிதர்களின் உள்ளங்கள் வடித்திட்ட வீண் கற்பனைகளுக்கேற்பத் தோன்றி இருந்தாரெனின் யாருமே இப்புனித உருவங்களின் மெய்ம்மையினை மறுத்திருக்க மாட்டார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமே இருந்திருக்க முடியாது.

அப்படிப்பட்ட மனிதர்கள், இரவுப் பகலாக, ஒரே மெய்க்கடவுளான அவரை நினைவிற்கொண்டு, தங்களின் வழிபாட்டில் தீவிரமாக ஈடுபட்டிருந்தும், இறுதியில், இறைவனின் சின்னங்களான பகலூற்றுகளை நட்சத்திரங்களை, அவரது மறுக்க வியலாத திரு அவதாரங்களின் சான்றுகளை, அறிந்து ஏற்பதிலும், அருளில் பங்கு பெறுவதிலும் தவறி விட்டுள்ளனர்.

இதற்கு, திருமறைகளே சாட்சியமளிக்கின்றன.

நீங்கள் அதனைக் கேட்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

இயேசு கிருஸ்துவின் அருளாட்சிக்காலத்தை எண்ணிப் பாருங்கள்.

எவ்வாறு, அக்காலத்தின் கற்றோர்கள் அனைவரும், வாக்களிக்கப்பட்டவரின் வருகைக்காக ஆவலுடன் எதிர்ப் பார்த்திருந்த போதிலும், அவரை நிராகரித்தனர் என்பதைப் பாருங்கள்.

அன்னாஸ், தனது காலத்தின் சமயத்துறை அறிஞர்களுள் முதன்மையானவரும், காய்பாஸ், முக்கியமான மதகுருவானவரும், கண்டனம் தெரிவித்து, அவரது மரண தண்டனையை அறிவித்தனர்.

அதே வேளையில், இறைவனின் தீர்க்கதிரிசியாகிய முஹம்மது - மனிதரெல்லாரும் அவர்பொருட்டுத் தியாகம் செய்யப் படுவராக - தோன்றிய உடனே, மெக்கா, மதீனா ஆகிய இடங்களின் கல்விமான்கள், அவரது வெளிப்பாட்டின் ஆரம்ப நாள்களிலேயே, அவருக்கெதிராக எழுந்து, அவரது போதனையை நிராகரித்தனர்; அதே வேளையில், கல்வியே அற்றவர்கள், அவரை அறிந்து அவரது சமயத்தை ஏற்றுக் கொண்டனர்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

எவ்வாறு, எழுத்தறிவில்லாதிருந்த போதிலும், பலால் என்ற ஓர் எதியோப்பியர், நம்பிக்கை, பற்றுறுதி ஆகிய சுவர்க்கத்தின்பால் உயர்ந்திட்டார் என்பதை எண்ணிப் பாருங்கள்; அதே வேளையில், கல்விமான்களிடையே ஒரு தலைவரான அப்துல்லா உபெய், பகைமை எண்ணத்துடன் அவரை எதிர்க்கக் கடுமுயற்சியில் ஈடுபட்டார்.

இறைவனின் திருச்சொற்களினால் அந்தளவு ஆனந்தபரவசமுற்றதன் பயனாக எவ்வாறு ஒரு சாதாரண ஆட்டிடையன் தனது அதி நேசரின் உறைவிடத்திற்குள் நுழைவு பெறவும், மனித இனத்தின் பிரபுவான அவருடன் ஒன்றிணையவும் முடிந்தது; அதே வேளை, தங்களின் அறிவாற்றலிலும், விவேகத்திலும் பெருமைப்பட்டுக்கொண்டோர் அவரது பாதையிலிருந்து வெகுதூரம் விலகிப் போய், அவரது அருளை இழந்து விட்டிருந்தனர்.

இக்காரணத்தினால்தான் அவர் எழுதி வைத்துள்ளார்: “உங்களிடையே உயர்த்தப்பட்டவர் தாழ்த்தப்படுவார்; தாழ்த்தப்பட்டவர் உயர்த்தப் படுவார்.

” இவ்விஷயம் குறித்த மேற்கோள் பெரும்பான்மையான தெய்வீக் நூல்களிலும் இறைவனின் தீர்க்கதிரிசிகள், தூதர்கள் ஆகியோரின் கூற்றுகளிலும் காணப்படுகின்றன.

மெய்யாகவே யான் கூறுகின்றேன், அத்தகையது இச் சமயத்தின் பெருமை -- தந்தை மகனை விட்டு ஓடுகிறார், மகன் தந்தையை விட்டு ஓடுகிறான்.

நொவா, கணான் ஆகியோரின் கதையை நினைவிற் கொள்ளுங்கள்.

தெய்வீக மகிழ்ச்சிமிகு இக்காலத்தில் நீங்கள், பேரொளி மயமான இறைவனின் இனிமையான நறுமணத்தினை இழந்திடாதிருக்கவும், இப் புனித வசந்த காலத்தில் அவரது அருளின் பொழிவினில் பங்குப்பெறவும் இறைவன் அனுமதிப்பாராக.

சகல அறிவுக்கும் நோக்கமான அவரது நாமத்தின் நிமித்தம் எழுந்து, மனிதரின் கல்வியினின்று முழுமையாகப் பற்றறுத்து, உங்களின் குரல்களை எழுப்பி அவரது சமயத்தைப் பிரகடனம் செய்வீராக.

தெய்வீக வெளிப்பாடு என்னும் பகல் நட்சத்திரம் சாட்சியாக! நீங்கள் எழுந்திடும் அத்தருணமே, எவ்வாறு தெய்வீக அறிவு என்னும் வெள்ளப்பெருக்கு உங்களின் உள்ளங்களிலிருந்து பீறிட்டு வெளிவருவதைக் கண்ணுற்று, தெய்வீக விவேகம் என்னும் அதிசயம், அவற்றின் பூரண ஒளியுடன், உங்களுக்கு முன்னால், காட்சியளிப்பதைக் கண்ணுறுவீர்.

கருணைமயமானவரின் திருவாக்குகளின் இனிமையினைச் சுவைத்திடுவீராயின், நீங்கள், தயக்கமின்றி, உங்களையே துறந்து, நல்லன்பரான அவருக்காக உங்கள் உயிர்களையே தியாகம் செய்திடுவீர்.

ஆண்டவனின் இவ்வூழியன், எப்பொழுதாவது, தனது உள்ளத்தினில், உலகியல் கீர்த்தியையோ அதன் பலனையோ விரும்பினார் என்று யாராவது நம்ப முடியுமா? அவரது திருநாமத்துடன் தொடர்புடைய இச் சமயமானது இவ்வுலகின் நிலையற்ற பொருள்களுக்கு மேலான அதி உயரிய நிலையில் உள்ளது.

நாடு கடத்தப்பட்டும், கொடுங்கோன்மைக்கு ஆளாக்கப்பட்டுமுள்ளவரான அவர் இவ்வதி மேன்மைமிக்க சிறையினில் கிடப்பதைப் பாருங்கள்.

அவரது பகைவர்கள் எல்லாப் பக்கங்களிலும் தாக்கி வந்துள்ளனர்; தொடர்ந்தும் அவரது வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்து வருவர்.

ஆகவே, அவர் உங்கள்பால் கூறுபவை எல்லாமே இறைவனின் பொருட்டேயாகும்; அதனால், ஒருவேளை, உலக மனிதரெல்லாம் தங்களின் உள்ளங்களைத் தீய ஆசை என்னும் கறையிலிருந்து தூய்மைப் படுத்தி, அதன் திரையைக் கிழித்தெறிந்து விட்டு, ஒரே மெய்க் கடவுளாகியவரின் அறிவினை அடையக் கூடும்; அதன்வழி யாருமே விழைய வியலாத அதி உயரிய ஸ்தானத்தை அடைந்திடக் கூடும்.

எமது சமயத்தில் அவர்களின் நம்பிக்கையோ நம்பிக்கையின்மையோ எமக்கு நன்மையோ தீமையோ விளைவிக்க முடியாது.

இறைவனின் பொருட்டே யாம் அவர்களை அழைக்கின்றோம்.

மெய்யாகவே, அவர், தனது உயிரினங்கள் அனைத்தையுமே தவிர்த்திட முடியும்.

XXXVI

மனிதனின் மைந்தர் (இயேசு நாதர்) இறைவன்பால் தனது ஆவியை ஈன்றிட்ட பொழுது படைப்பனைத்துமே கண்ணீர் விட்டுக் கதறி அழுதது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இருப்பினும், தன்னையே அவர் பலிகொடுத்துக் கொண்டதனால், படைப்புப் பொருள்கள் அனைத்தினுள்ளும் புதியதோர் ஆற்றல் புகட்டப்பட்டது.

உலக மனிதர்கள் அனைவருக்குள்ளும் கண்கூடாகக் காணப்படும் அதன் ஆதாரங்கள், உங்கள்முன் இப்பொழுது தெளிவாகப் புலனாகியுள்ளன.

ஞானிகள் இயம்பியுள்ள ஆழ்ந்த நுண்ணறிவு, மனங்கள் தெளிவுப்படுத்தியுள்ள அதி ஆழமிக்க ஞானம், அதி திறமை வாய்ந்த கைகள் தோற்றுவித்துள்ள கலைகள், அதி ஆற்றல்மிகு மன்னர்களின் இயக்கத் தூண்டல்கள் ஆகிய அனைத்துமே, அவரது உயரியதும் சகலத்தையும் வியாபித்துள்ளதுமான உற்சாகமிகுந்த கிளர்ச்சியினால் வெளிப்படுத்தப்படும் உயிர்ப்புச் சக்தியின் வெளிப்படுதலேயாகும்.

அவர் இவ்வுலகிற்கு வந்தபோது படைப்புப் பொருள்கள் அனைத்தின் மீதும் தனது ஒளியின் பிரகாசத்தினை விழச்செய்தார் என்பதற்கு யாமே சாட்சியம் அளிக்கின்றோம்.

அவர் மூலமாகக் குஷ்டரோகி, தனது அறியாமை, வக்கிரம் என்னும் குஷ்டரோகத்திலிருந்து குணமடைந்தான்.

அவர் மூலமாகத் தூய்மையற்றவர்களும், ஒழுங்கற்றவர்களும் திருந்தினர்.

எல்லாம் வல்ல ஆண்டவனிடமிருந்து தோன்றிய சக்தியின் மூலமாகக் குருடர்களின் கண்கள் திறக்கப் பட்டன; பாவியின் ஆன்மா புனிதமடைந்தது.

குஷ்ட ரோகத்தை, மனிதனுக்கும், அவன் தனது பிரபுவான இறைவனை அறிந்து கொள்வதற்கும் இடையே குறுக்கிடும் திரைகளில் ஒன்றாகப் பொருள் கொள்ளலாம்.

எவனொருவன், அவரிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்ள அனுமதிக்கின்றானோ அவன் உண்மையிலேயே ஒரு குஷ்டரோகியாவான்.

அவன், சக்திமிக்க, போற்றுதல் அனைத்திற்குமுரிய, ஆண்டவனின் இராஜ்ஜியத்தில் நினைவுக் கூரப்படமாட்டான்.

ஆண்டவனது திருமொழியின் சக்தியின் வாயிலாக ஒவ்வொரு குஷ்டரோகியும் தூய்மைப் படுத்தப் பட்டான், ஒவ்வொரு நோயும் குணப்படுத்தப்பட்டது, ஒவ்வொரு பலக்குறைவும் அகற்றப் பட்டது என்பதற்கு யாம் சாட்சியம் அளிக்கின்றோம்.

உலகினைத் தூய்மைப்படுத்தியவர் அவரே.

பிரகாசமிக்க முகத்துடன், அவர்பால் திரும்பிய மனிதன் அருட்பேறு பெற்றவனாவான்.

XXXVII

இறைவனது சமயத்தில் தனது நம்பிக்கையை ஒப்புக் கொண்டு, “அவரது செயல்களுக்குக் காரணங் கேட்கப் படார்,” என்பதையும் அறிந்திடும் மனிதன் ஆசீர்வதிக்கப் படுவான்.

அத்தகைய அங்கீகாரம் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் ஆபரணமாவது மட்டுமல்ல, அதன் அஸ்திவாரமாகவும் ஆக்கப் பட்டுள்ளது.

அதனைச் சார்ந்தே உள்ளது ஒவ்வொரு நற்செயலின் அங்கீகாரமும்.

உங்கள் பார்வையை அதனில் நிலைக்கச் செய்யுங்கள்; அதனால், ஒருவேளை, கிளர்ச்சியாளரின் குசுகுசுப்புகள் உங்களை வழுக்கிடச் செய்ய இயலாதிருக்கும்.

நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து அவர் தடைச்செய்யப்பட்டு வந்துள்ளதனைச் சட்டபூர்வமானது என விதித்து, எல்லாக்காலங்களிலும் சட்டப்பூர்வமானது எனக் கருதப்பட்டதனைத் தடைச்செய்திட்ட போதிலும் அவரது அதிகாரத்தைத் தட்டிக்கேட்க எவருக்குமே உரிமை வழங்கப்படவில்லை.

எவனாவது ஒரு கணத்திற்குக் குறைவான நேரமேனும் தயங்கிடுவானாயின் அவன் ஓர் ஆணை மீறுபவனாகக் கருதப்பட வேண்டும்.

இவ்விழுமிய, அடிப்படை மெய்ம்மையினை ஒருவன் அறிந்து கொள்ளாது இம்மிக்க உயரிய இந்நிலையை அடையத் தவறி விடுவானாகில், ஐயம் என்னும் காற்று அவனை அமைதி இழக்கச் செய்திடுவதுடன், இறை நம்பிக்கை அற்றோரின் கூற்றுகள் அவனது ஆன்மைவைத் திசை மாறவும் செய்திடும்.

இக்கொள்கையினை ஏற்றுக் கொள்பவன் பரிபூரண உறுதி வழங்கப்படுவான்.

இவ்வதி ஒளிமிக்க ஸ்தானத்திற்கே புகழெல்லாம் உரியதாகட்டும்; அதன் நினைவு மேன்மைமிகு நிருபம் ஒவ்வொன்றினையும் அலங்கரிக்கின்றது.

இவ்வாறானதுதான் உன்பால் அருளியுள்ள போதனை; இப் போதனை உன்னை எல்லாவித ஐயங்களிலிருந்தும், குழப்பத்திலிருந்தும் விடுவித்து இம்மையிலும் மறுமையிலும் உனக்கு மோட்சம் பெற்றுத் தந்திட உதவும்.

மெய்யாகவே, அவர், என்றென்றும் மன்னிப்பவர், அதி வள்ளன்மை வாய்ந்தவர்.

XXXVIII

ஒவ்வோர் அருளாட்சிக்காலத்திலும் மனிதருக்கு அவர்களின் ஆன்மீக ஆற்றலின் நேரடியான அளவிற்கேற்பவே அவர்களுக்குத் தெய்வீக வெளிப்பாடு எனும் ஒளி உத்தரவாதமளிக்கப் பட்டுள்ளது என்பதை நிச்சயமாக அறிவீராக.

சூரியனை எண்ணிப் பாருங்கள்.

அது அடிவானத்தில் தோன்றிடும் தருணத்தில் அதன் கதிர்கள் எத்துணை பலம் குறைந்தவையாக இருக்கின்றன.

எவ்வாறு, அது உச்சி நோக்கிச் செல்லச் செல்ல அதன் வெப்பமும் பலமும் சிறிது சிறிதாக அதிகரிக்கின்றன; அதன்வழி அது, படிப்படியாக வளர்ச்சியடைந்துவரும் அதன் ஒளியின் வெப்பத்தினைப் படைப்புப் பொருள்கள் அனைத்தும் தாங்கிக் கொள்ள உதவுகின்றது.

அது அஸ்தமிக்கும் கட்டத்தை அடையும் வரை எவ்வாறு, சிறுகச் சிறுகக் குறைந்து வருகின்றது.

அது, தன்னுள் மறைந்து கிடக்கும் உள்ளார்ந்த சக்தியினை திடீரெனப் புலப்படுத்திடுமாயின், சந்தேகமின்றி, அது, படைப்புப் பொருள்கள் அனைத்திற்கும் கேடு விளைவித்திடும்.

; அவ்வாறே, அதன் தோற்றத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே, மெய்ம்மைச் சூரியன், எல்லாம்வல்லவர் அதற்கு வழங்கியுள்ள அருளின் முழு அளவு ஆற்றலையும் திடீரென வெளிப்படுத்திடுமாயின், மனிதரின் புரிந்துணர்வு என்னும் வையம் வலிமைக் குன்றி அழிவுற்றிடும்; ஏனெனில், மனிதரின் உள்ளங்கள், அதன் வெளிப்பாட்டின் சக்தியினைத் தாங்கிக் கொள்ளவோ, அதன் ஒளியின் பிரகாசத்தினைப் பிரதிபலிக்கவோ இயலாது போய்விடும்.

கலக்கமுற்று, அவை அளவற்ற வலிமையின் தாக்குதலுக்கு ஆளாகி இல்லாதொழிந்து போய்விடும்.

XXXIX

பிரபுவே, எனதாண்டவரே, உமது புரிந்திடவியலாத கட்டளைகளின் வியத்தகு வெளிப்படுத்துதல்களுக்காகவும், நீர் எனக்காக விதித்துள்ள பல்வேறு துன்பங்களுக்காகவும், சோதனைகளுக்காகவும், நீர் போற்றப்படுவீராக.

ஒரு சமயத்தில் நீர் என்னை நிம்ரோட்டின் கைகளில் ஒப்படைத்தீர்; மற்றொரு சமயத்தில், நீர், பேரோவின் கோல் என்னைக் கொடுமைப் படுத்த அனுமதித்தீர்.

சகலத்தையும் உள்ளடக்கும் உமது ஞானத்தின் மூலமாகவும், உமது விருப்பத்தின் இயக்கத்தின் மூலமாகவும், நான் அவர்களின் கைகளில் அனுபவித்திட்ட கணித்திடவியலா வேதனைகளை நீர் ஒருவர் மட்டுமே மதிப்பிடவியலும்.

மேலும், உமது ஞானத்தின் மூலமாக, உமது சக்தியின் ஆற்றல் மூலமாக நீர், எனக்குத் தெய்வீக ஊக்கமளித்து, அதன் அர்த்தத்தினையும் எனக்குத் தெளிவுப்படுத்திட்ட அந்த அகக் காட்சியினை, நான், உமது நல்விருப்பத்திற்குரிய இராஜ்ய வாசிகளின் காதுகளில் இரகசியமாகக் கூறத் தூண்டப் பட்டதன் ஒரே காரணத்திற்காக, என்னைச் சமய நம்பிக்கையற்றோரின் சிறைக்குள் தள்ளினீர்.

மேலும், என்னைச் சமய நம்பிக்கையற்றோரின் வாளினால் சிரச்சேதம் செய்திடுமாறு நீர் விதித்திட்டீர்.

மேலும், நான், உமது மாட்சிமைமிகு, என்றும் நிலையான, சக்தியின் வியத்தகு அடையாளங்களை மனிதருக்கு வெளிப்படுத்தியதற்காகச் சிலுவையில் அறைந்தும் கொலைச் செய்யப்பட்டேன்.

எத்துணை வேதனைமிக்கதாய் இருந்தது பிந்திய ஒரு காலத்தில், கார்பிலா என்னும் சமவெளியில் என்மீது குவிக்கப்பட்ட அவமானம்! அவ்வித அவமதிப்பிலும் திருப்தியடையாது, என்னைத் துன்புறுத்துவோர், என் தலையைத் துண்டித்து, அதனைத் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு, இடம் விட்டு இடம், நம்பிக்கையற்றோரின் கூட்டத்தினர் முன்பாக ஊர்வலம் வந்து பின், அதனை முறைகேடானோர், விசுவாசமற்றோர் ஆகியோரின் இருக்கைகளின் மீது கிடத்தினர்.

பின்னொரு காலத்தில், நான், தொங்கவிடப் பட்டு, எனது மார்பு, எனது பகைவர்களின் குரோதம் மிக்கக் கொடூரமான ஏவுகணைகளுக்குக் குறியிலக்காக்கப் பட்டது.

எனது உடலுறுப்புகள் தோட்டாக்களினால் துளைக்கப்பட்டு, எனது உடலும் சிதைக்கப் பட்டது.

இறுதியாக, இந்நாளிலும், எனது நயவஞ்சகமான விரோதிகள், எனக்கெதிராகக் கூட்டுச்சேர்ந்து கொண்டு, உமது ஊழியர்களின் ஆன்மாக்களுள் வெறுப்பு என்னும் விஷத்தைப் புகட்ட எவ்வாறு தொடர்ந்து சதித்திட்டம் தீட்டி வருகின்றனர் என்பதைப் பாருங்கள்.

அவர்களின் முழு பலத்தையும் கொண்டு, தங்களின் நோக்கத்தை அடைய திட்டமிடுகின்றனர்.

எனது நிலைமை வேதனை மிக்கதாய் இருந்த போதிலும், இறைவா, எனது அதி நேசரே, நான் உம்பால் நன்றி செலுத்துகிறேன்; உமது நல்விருப்பம் என்னும் பாதையில் நேர்ந்துள்வை எவையாயினும், அவற்றுக்காக எனதான்மா நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

எனக்கு நீர் விதித்துள்ளவைக்காக மகிழ்ச்சியடைகின்றேன்; எனக்கான வேதனைக்காகவும், துன்பத்திற்காகவும், அவை எத்துணைப் பேரிடர் மிக்கதாய் இருந்திடினும், அவற்றை நான் வரவேற்கிறேன்.

XL

எனது நல்லன்புக்குக்குரியவரே! உமது மூச்சினை என்னுள் ஊதியருளி, நீர், என்னிடமிருந்தே எனது தொடர்பைத் துண்டித்துள்ளீர்.

அதற்குப்பின், நீர், முறைகேடானோர், பொறாமை மிக்கோர் ஆகியோரின் மத்தியில், என்னுள் இருக்கும் உமது மெய்ம்மை ஒளியின் மங்கலான பிரதிபிம்பத்தை, ஒரு வெறும் சின்னத்தைத் தவிர வேறெதுவுமே எஞ்சியிராதவாறு விதித்திட்டுள்ளீர்.

அவர்கள், இச்சின்னத்தினால் ஏமாற்றமுற்று, எவ்வாறு, எனக்கெதிராக எழுந்து, என்மீது தங்களின் மறுப்புக்களைக் குவித்துள்ளனர் என்பதைப் பாருங்கள்! ஆகவே, எனது அதியன்புக் குரியவரே, நீர், உம்மை வெளிப்படுத்திக் கொண்டு, என்னை இவ்விக்கட்டான நிலையிலிருந்து விடுவிப்பீராக.

அதன்பேரில், ஒரு குரல் பதிலளித்தது:” நான் நேசிக்கின்றேன், இச்சின்னத்தை நெஞ்சார நேசிக்கின்றேன்.

எவ்வாறு நான், இச்சின்னத்தை, எனது கண்கள் மட்டும் பார்த்திடவும், எனது உள்ளத்தைத் தவிர வேறெந்த உள்ளமும் அறியாமலிருக்கவும் செய்திட இயலும்? எனது அழகின் பெயரால், உமது அழகுக்குச் சமமான அவ்வழகின் பெயரால்! எனது பார்வையிலிருந்தே உம்மை மறைத்து வைப்பது எந்தன் விருப்பமாய் இருக்கும்போது, மனிதர்களின் பார்வையைப் பொறுத்து இன்னும் எவ்வாறானதாய் இருக்கும்!” நான் பதிலளிக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன்; அவ்வேளை, ஐயகோ, நிருபம், திடீரென முடிவுற்றது; அது, எனது கருப்பொருளை முற்றுப்பெறச் செய்ய விடாதும், எனது உரையின் அரும்பொருள் நாண் அறுக்கப் படவும் செய்துவிட்டது.

XLI

மனிதர்களே, எனக்குச் சாட்சி இறைவனே! நான் எனது மஞ்சத்தின் மீது உறங்கிக் கொண்டிருந்த பொழுது, அதோ, இறைவனின் இளந்தென்றல் மிதந்து வந்து, ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை எழச் செய்தது.

அவரது எழுச்சியூட்டும் ஆவி எனக்குப் புத்துயிர் அளித்தது; அவரது செய்தியை எடுத்தியம்ப எனது நா தளர்த்தப்பட்டது.

இறைவனுக்கெதிராக வரம்பு மீறிச் சென்று விட்டேன் எனப் பழிச் சுமத்திடாதீர்.

என்னை, உங்கள் கண்களைக் கொண்டல்ல, எனது கண்களைக் கொண்டு நோக்குங்கள்.

அவ்வாறாகத்தான் கருணைமிக்கவரும், சகலமும் அறிந்தவருமான அவர் உங்களை எச்சரிக்கின்றார்.

மனிதர்களே, இறைவனின் இறுதி விருப்பத்தையும் நோக்கத்தையும் நான் என் பிடியில் வைத்திருக்கின்றேன் என்று நினைக்கின்றீர்களா? அத்தகைய உரிமை கொண்டாடுவது எனது தகுதிக்கு மிகவும் அப்பாற்பட்டது.

எல்லாம் வல்ல, மேன்மைப்படுத்தப்பட்ட, சகலமும் அறிந்த, சர்வ ஞானியான இறைவன் முன், இதற்கு நான் சாட்சி பகர்கின்றேன்.

இறைவனது சமயத்தின் இறுதி விளைவு என் கைகளில் இருந்திருந்தால், ஒரு கண நேரமேனும் நான், என்னை, உங்களுக்கு வெளிப்படுத்திட உடன்பட்டிருக்கவே மாட்டேன்; என் உதடுகளிலிருந்து ஒரு வார்த்தையைக் கூட உதிர்ந்திட அனுமதித்திருக்க மாட்டேன்.

இதனில், மெய்யாகவே, இறைவனே எனக்குச் சாட்சி.

XLII

நீதியின் மைந்தனே! அழிவற்ற மெய்யுருவானவரின் அழகானவர், இராக்காலங்களில், விசுவாசம் என்னும் மரகத உச்சத்திலிருந்து வெளிவந்து, ஸட்ராத்-உல்-முந்தஹாவைச் சென்றடைந்தார்; அவரின் புலம்பல் அந்தளவு இருந்ததால், மேலுலகக் கூட்டத்தினரும் வானுலக வாசிகளும், கண்ணீர் விட்டுக்கதறினர்.

அதன்பேரில், அக் கதறலும் அழுகையும் எதற்காக? எனக் கேட்கப்பட்டது.

அவர் பதிலளித்தார்: கட்டளையிடப் பட்டதற்கேற்ப நான், விசுவாசமெனும் மலையின்மீது எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தேன்; இருந்தும், உலகில் வாழும் அவர்களிடமிருந்து, மெய்ப்பற்று என்னும் நறுமணத்தினை முகந்தேனில்லை.

பின்னர், திரும்பி வருமாறு ஆணையிடப்பட்டது, அப்பொழுது யான் பார்த்தது, அந்தோ! சில தெய்வீகப் புறாக்கள், உலக நாய்களின் பிடியில் சிக்கிச் சோர்வுற்றுக் கிடந்தன.

அதன் விளைவாக, விண்ணுலகக் கன்னி, மறைபொருளான தெய்வீக மாளிகையினின்று, திரையை விலக்கிக் கொண்டு, ஒளிமயமாக விரைந்து வெளிப்பட்டு, அவர்களின் பெயர்கள் யாவை என வினவினாள்; ஒரே ஒரு பெயரைத் தவிர மற்றவையனைத்தும் கூறப்பட்டன.

பிறகு, தூண்டப்பட்டபொழுது, அதன் முதல் எழுத்து உச்சரிக்கப்பட்டது; உடனே, தெய்வீக மண்டபத்தின் வாசிகள் தங்களின் ஒளிமயமான உறைவிடத்தைவிட்டு வேகமாய் வெளிவந்தனர்.

அதன் இரண்டாம் எழுத்து உச்சரிக்கப்படும் பொழுது, அவர்கள் அனைவரும், ஒருங்கே, மண்ணில் சாய்ந்தனர்.

அக் கணம், அதி உள்ளார்ந்த புனித ஸ்தலத்தினின்று இவ்வாறு குரல் கேட்டது: “அவ்வளவு தூரம் போதும், அதற்கு மேல் வேண்டாம்.

” அவர்கள் செய்ததற்கும் இப்பொழுது செய்வதற்கும், யாம், மெய்யாகவே, சாட்சியம் அளிக்கின்றோம்.

XLIII

அப்ணான் வம்சத்தினரே, எனது ஆதிவேரிலிருந்து கிளைத்து வந்துள்ளோரே! எனது பேரொளியும், எனது அன்புப்பரிவும் உங்கள்மீது இலயித்திடுமாக.

இறைவனது சமயத்தின் திருக்கூடாரம் எத்துணைப் பிரம்மாண்டமானது! அது உலகின் மக்கள், இனங்கள் ஆகியோர் அனைவருக்கும் நிழலளித்துள்ளது; மேலும், இன்னும் சிறிது காலத்தில், மனித இனம் முழுவதையும் அதன் நிழலின்கீழ் ஒன்று சேர்த்திடும்.

இப்பொழுது, சேவைக்கான நேரம் வந்து விட்டது.

எண்ணற்ற நிருபங்கள் உங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வள்ளன்மைகளுக்குச் சாட்சிப் பகர்கின்றன.

எனது சமயத்தின் வெற்றிக்காக எழுந்து, உங்களது சொற்களின் சக்தியைக் கொண்டு மனிதரின் உள்ளங்களை ஆட்கொள்ளுங்கள்.

நீங்கள், துயர்மிகுந்தோர், நசுக்கப்பட்டோர் ஆகியோரின் அமைதியையும், நல்வாழ்வையும் உறுதிப்படுத்தக் கூடியதனை எடுத்துக் காட்டுங்கள்.

கடும் முயற்சி என்னும் இடைத்துணியை வரிந்து கட்டுங்கள்; அதனால், ஒரு வேளை, நீங்கள், கட்டுண்டவரை அவரது சங்கிலியிலிருந்து விடுவித்து, அவரை உண்மைச் சுதந்திரம் பெற உதவக் கூடும்.

இந்நாளில் நீதி, அதன் அவலநிலைக்காக அழுது புலம்புகின்றது; நேர்மை, அநீதி என்னும் கடுந் தாக்குதலின்கீழ் வேதனையால் பொருமுகின்றது.

கொடுங்கோன்மை என்னும் அடர்ந்த மேகங்கள் உலகை இருளடையச் செய்து மனிதரைச் சூழ்ந்துகொண்டு விட்டது.

எமது ஒளி என்னும் எழுதுகோலின் அசைவின் மூலம், யாம், சர்வ வல்லவரான படைப்பாளரின் கட்டளையின்படி, ஒவ்வொரு மனிதக் கூட்டினுள்ளும் ஒரு புதிய உயிரினை ஊதியும், ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஒரு புதிய ஆற்றலைப் புகட்டியும் உள்ளோம்.

படைப்புப் பொருள்கள் அனைத்துமே இவ்வுலகளாவிய மறுமலர்ச்சியின் ஆதாரங்களைப் பிரகடனம் செய்கின்றன.

இதுவே, இத்தவறிழைக்கப்பட்டோனின் எழுதுகோலினால் மனித இனத்திற்கு அறிவிக்கப்பட்ட அதி உயரிய, மகிழ்ச்சி மிக்கச் செய்தியாகும்.

எனது அன்புக்குப் பாத்திரமானவர்களே, எதற்காக அஞ்சுகின்றீர்? உங்களுக்கு அச்சமூட்டக் கூடியவர் யார்? முறைகேடான இத்தலைமுறை வார்ப்படம் செய்யப்பட்டுள்ளதும் கெட்டியாய்ப் போனதுமான அக்களிமண்ணைக் கரைப்பதற்கு ஒரு சிறிதளவு ஈரப்பதமே போதுமானது.

பயனற்றதும், அற்பமானதுமான இம் மனிதர் படைகைளக் களைந்தோடச் செய்வதற்கு உங்களின் சாதாரண ஒன்றுகூடுதலே போதுமானது.

இந்நாளில், காணுந்திறனுள்ள ஒவ்வொரு மனிதனுமே, இத்தவறிழைக்கப்பட்டோனின் எழுதுகோல் வெளிப்படுத்தியுள்ள அறிவுரைகள், உலகின் முன்னேற்றத்திற்கும், அதன் மக்களின் மேம்பாட்டிற்கும், அதிசிறந்த உயிரூட்டும் சக்தியைக் கொண்டுள்ளனவென்று தயக்கமின்றி ஒப்புக் கொள்வர்.

மனிதர்களே, இறைவனது சக்தியின் மூலமாக உங்களையே வெற்றிக்கொண்டிட உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்; அதனால், ஒருவேளை, நீங்கள், வீண் கற்பனைகள் என்னும் தெய்வ உருவங்களின்பாலுள்ள அடிமை நிலையிலிருந்து விடுவிக்கப்படவும், தூய்மைப்படுத்தப்படவும் கூடும் - அத் தெய்வ உருவங்கள், அவற்றின் வழிபாட்டாளர்கள் மீது அத்துணை வேதனை நிறைந்த இழப்பை உண்டுபண்ணி, அவர்களின் அவக்கேடான நிலைக்குக் காரணமும் ஆகியுள்ளன.

இவ்விக்கிரகங்கள்தாம் மனிதன் முழுமைத்துவம் என்னும் பாதையில் முன்னேறுவதற்காகச் செய்திடும் முயற்சிகளைத் தடுத்திடும் முட்டுக்கட்டைகளாய் அமைந்து விடுகின்றன.

தெய்வீகச் சக்தி என்னும் கரங்கள் மனித இனத்திற்கு உதவ முன்வந்து அதனைக் கடும் இழிவு நிலையிலிருந்து விடுவித்திட வேண்டுமென யாம் மனப்பூர்வமாக விரும்புகின்றோம்.

நிருபங்கள் ஒன்றினில் இத் திருச்சொற்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன: இறைவனின் மக்களே! உங்களின் சொந்த காரியங்களிலிலேயே கருத்தாய் இராதீர்; எவை, மனித இனத்தின் நற்பேறினைச் சீர்ப்படுத்தி, மனிதரின் உள்ளங்களையும் ஆன்மாக்களையும் புனிதப்படுத்துகின்றனவோ அவற்றின் மீதே உங்கள் சிந்தனையை நிலைக்க விடுங்கள்.

இது, தூய்மையான, புனிதமான, செயல்களின் வாயிலாகவும், நல்லொழுக்கம் மிகுந்த வாழ்க்கை, நன்னடத்தை, ஆகியவற்றின் வாயிலாகவுமே...

பொருத்தமான வகையில் சாதிக்கவியலும்.

துணிவுமிக்கச் செயல்கள் இச் சமயத்தின் வெற்றியினை உறுதிப்படுத்தும்; தெய்வத்தன்மை வாய்ந்த பண்பு, அதன் சக்தியை மேலும் வலுப்படுத்திடும்.

பஹாவின் மக்களே, நேர்மைத் தன்மையைப் பற்றிக்கொள்ளுங்கள்! மெய்யாகவே, இதுவே, இத்தவறிழைக்கப்பட்டோன் உங்களுக்கு வழங்கியுள்ள கட்டளையும், உங்கள் ஒவ்வொருவருக்கும் அவரது கட்டுப்படுத்தவியலாத நல்விருப்பத்தின் முதன்மையான தேர்வுமாகும்.

நண்பர்களே! இத் தெய்வீக, ஆன்மாவைக் கிளர்ச்சியூட்டும் இவ் வசந்தகாலத்தில் உங்கள் மீது பொழியப்படும் அருள்மிகு தயையின் வாயிலாக, நீங்கள், உங்கள் ஆன்மாக்களைப் புத்துயிர்ப் பெறச் செய்துகொள்வது நன்று.

அவரது மேன்மைமிகு, பேரொளிமிகு, பகல் நட்சத்திரம் உங்கள் மீது அதன் பிரகாசத்தினை விழச் செய்துள்ளது; அவரது அளவற்ற அருள் மேகங்கள் உங்களைச் சூழ்ந்துள்ளது.

தன்னை, அத்துணை உயர்வான வள்ளன்மையை இழக்கச் செய்து கொள்ளாதிருக்கவோ, இப்புதிய உடையினில் தோன்றியிருக்கும் தனது அதி அன்புக்குரியவரின் அழகினை அறிந்துகொள்ளத் தவறாதிருக்கவோ செய்திடாத ஒருவரின் பரிசு எத்துணை உயர்வானது.

உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், ஏனெனில், தீயோன் உங்களைத் தனது வலையில் சிக்க வைப்பதற்குக் காத்துக் கொண்டிருக்கின்றான்.

அவனது தீய சதிக்கு எதிராகக் இடைத்துணியைக் கட்டிக் கொண்டு, அனைத்தையும் கண்ணுறும் இறைவனின் நாமத்தின் ஒளியினால் வழிநடத்தப்பட்டு, உங்களைச் சூழ்ந்து கொண்டுள்ள இருளிலிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

உங்களின் பார்வை உங்கள்மீது மட்டுமே ஊன்றியிராமல் அது உலகையே தழுவியதாக இருக்கட்டும்.

மனிதனின் குழந்தைகளின் முன்னேற்றத்தையும் ஆன்மீக வளர்ச்சியையும் தடைச்செய்பவனே தீயோன் எனப்படுபவன்.

இந்நாளில், எவையெல்லாம், நாடுகள், நீதியான அரசாங்கங்கள் ஆகியவற்றின் நலன்களை முன்னேற்றமடையச் செய்கின்றனவோ அவற்றை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாகின்றது.

அதி மேன்மை மிக்கோனின் எழுதுகோல் வெளிப்படுத்தியுள்ள வாசகம் ஒவ்வொன்றின் மூலமாக, அன்பு, ஒற்றுமை ஆகியவையின் கதவுகள் மனிதரின் முன் வேகமாகத் திறக்கப்பட்டுள்ளன.

அதற்கு முன்பாகவே, யாம், பிரகடனப்படுத்தியுள்ளோம் - எமது வார்த்தைகள் உண்மையானவை -: “சகல சமயங்களைப் பின்பற்றுபவர்களுடன் அன்புடனும் தோழமையுடனும் பழகுங்கள்.

” எவையெல்லாம் மனிதரின் குழந்தைகளை மற்றவர்களைத் தவிர்த்தொதுக்கச் செய்திடவும், அவர்களிடையே சச்சரவுகள், பிளவுகள் ஆகியவற்றை உண்டுபண்ணவும் செய்துள்ளனவோ, அவை, இத் திருவாசகங்களின் வெளிப்படுத்துதலின் மூலமாக, இரத்து செய்யப்பட்டு, நீக்கப்பட்டுள்ளன.

படைப்புயிர்களைக் கொண்ட உலகத்தினை மேம்பாடடையச் செய்து, மனிதரின் இதயங்களையும் ஆன்மாக்களையும் உயர்வுறச் செய்யும் பொருட்டு, மனித இனம் அனைத்தின் கல்விக்கும் அதிகப் பயனளிக்கக் கூடிய சாதனம், இறைவனின் திருவிருப்பம் என்னும் சுவர்க்கத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பழங்கால மனிதர்கள், கூறியோ எழுதியோ வைத்துள்ளவற்றின் அதி உயரிய சாராம்சமும், முழுநிறைவான வெளியிடுகைகளும், சகலத்தையும் கொண்டுள்ள, என்றும் நிலையான இறைவனின் திருவிருப்பம் என்னும் சுவர்க்கத்திலிருந்து, இவ்வாற்றல்மிகு வெளிப்பாட்டின் மூலமாக, அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இவ்வாறு வெளிப்படுத்தப் பட்டுள்ளது: “சொந்த நாட்டின்பால் பற்று, இறைவன்பாலுள்ள பற்றின் ஓர் அங்கமாகும்.

” இருப்பினும், அவரது அவதரிப்பின் காலத்தில், உன்னதத்தின் நா, இவ்வாறு பிரகடனம் செய்துள்ளது: “ஒருவர், சொந்த நாட்டின்பால் பற்றினைக் குறித்துப் பெருமையடித்துக் கொள்ளுதல் அவருக்குப் பொருத்தமன்று, மாறாக, உலகத்தின்பால் பற்றே அவருக்குப் பொருத்தமானதாகும்.

” இம்மேன்மை மிக்க வாசகங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஆற்றலின் வாயிலாக, அவர், மனித உள்ளங்களுக்கு ஒரு புதிய செயல்தூண்டலை வழங்கி, ஒரு புதிய வழியையும் காட்டியதோடு, இறைவனின் திருநூலிலிருந்து, கட்டுப்படுத்துதல்களையும் நிபந்தனைகளையும் அடிச்சுவடே இல்லாது துடைத்தழித்துள்ளார்.

நீதிமான்களே! பிரகாசமிகு ஒளியாகவும், எரியும் புதரின் கொழுந்து விட்டெரியும் சுடரொளி வீசும் நெருப்பைப் போன்றும் ஆவீராக.

உங்களது அன்பெனும் நெருப்பின் பிரகாசம், சந்தேகமின்றி, போராடிக் கொண்டிருக்கும் உலக மனிதர்களையும், இனங்களையும் உருக்கி ஒன்றாக்கிடும்; அதே வேளையில், பகைமை, வெறுப்பு, என்னும் தீச்சுடரின் சீற்றம் முரண்பாட்டிலும் அழிவிலுமே முடிவுறும்.

தமது உயிரினங்களை, அவற்றின் பகைவர்களின் சதித்திட்டங்களிலிருந்து பாதுகாக்குமாறு இறைவனை மன்றாடுகின்றோம்.

மெய்யாகவே, அவரே யாவற்றின் மீதும் சக்திக் கொண்டுள்ளவர்.

ஒரே மெய்க்கடவுளாகிய - அவரது பேரொளி மகிமைப்படுத்தப்படுமாக - அவருக்கே புகழ்ச்சியனைத்தும் உரியதாகட்டும்; ஏனெனில், அவர், அதி மேன்மை மிக்கவரின் எழுதுகோலின் மூலம், மனிதனது உள்ளக்கதவுகளின் பூட்டுகளைத் திறந்துள்ளார்.

இவ்வெழுதுகோல் வெளிப்படுத்தியுள்ள ஒவ்வொரு வாசகமும் ஒரு பிரகாசமிகு, ஒளிவிடும் நுழைவாயில்; அது தெய்வத் தன்மை வாய்ந்த, புனிதத் தன்மை மிக்க வாழ்க்கையையும், தூய, கறையற்ற செயல்களையும் வெளிப்படுத்துகின்றது.

யாம் வழங்கியுள்ள அழைப்பாணைகளும் போதனைகளும் ஒரு நாடு மட்டுமோ, அல்லது ஒரு மக்கள் மட்டுமோ பெறுதற்காகவோ, பயனடைவதற்காகவோ அல்ல.

அதன் நோக்கம், எவையெல்லாம் வெளிப்படுத்தப்பட்டும் நிச்சயிக்கப்பட்டும் உள்ளனவோ, அவற்றை மனித இனம் முழுமையுமே உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

அப்பொழுதுதான் அது உண்மையான சுதந்திரத்தைப் பெற முடியும்.

உலகம் முழுவதுமே இறைவனது வெளிப்பாட்டின் பிரகாசமிகு பேரொளியினால் ஒளிபெறச் செய்யப்பட்டுள்ளது.

அறுபதாம் ஆண்டில், தெய்வீக வழிகாட்டுதலின் ஒளியை முன்னறிவித்தவர் - படைப்பு முழுவதும் அவருக்காகத் தியாகம் செய்யப்படுமாக - புனித ஆவியின் புதியதோர் வெளிப்பாட்டினைப் பிரகடனம் செய்ய எழுந்தார்; பின்னர், இருபது ஆண்டு கழித்து, எவரது வருகையினால், வாக்களிக்கப்பட்ட ஒளியினை, இவ்வியத்தகு தயையினை உலகம் பெறுமாறு செய்யப்பட்டதோ, அவரால் பின்தொடரப்பட்டது.

மனித இனத்தில் பெரும்பான்மையினர் எவ்வாறு இறைவனின் மேன்மைமிகு போதனையைச் செவிமடுக்கும் திறமை வழங்கப் பெற்றுள்ளனர் என்பதைப் பாருங்கள்; மனிதர் அனைவரின் ஒன்று சேர்தலும், மீண்டும் ஆன்மீக உயிர்த்தெழுதலும், அப்போதனையையே சார்ந்திருக்கின்றன.

ஆண்டவனின் மக்களே, உண்மையான, ஈடிணையற்ற நண்பரின் அறிவுரைகளின்பால், உங்களின் உள்ளங்களைத் திருப்பிடுங்கள்.

இறைவனின் போதனையை ஓர் இளஞ்செடிக்கு ஒப்பிடலாம்; அதன் வேர்கள், மனிதனின் இதயங்களில் பதிக்கப்பட்டுள்ளன.

உயிர்நீரான விவேகம், திவ்விய திருமொழிகள் ஆகியவற்றைக் கொண்டு அதன் வளர்ச்சியைப் பேண வேண்டியது உங்கள் கடமையாகும்; அதனால், அதன் வேர்கள் உறுதிப்பெற்று, அதன் கிளைகள் விண்ணுலகளவும், அதற்கு மேலும், உயர்ந்து பரவக் கூடும்.

மண்ணுலகில் வாழ்வோரே! இத்தலையாய வெளிப்பாட்டின் தனிச்சிறப்பைக் குறிக்கும் அதி சிரேஷ்ட அம்சமானது, யாம், ஒரு பக்கத்தில், எவையெல்லாம் மானிடக் குழந்தைகளிடையே சச்சரவு, குரோதம், விஷமம் ஆகியவற்றுக்குக் காரணமாய் இருந்தனவோ, அவற்றை, ஆண்டவனின் புனித நூலின் பக்கங்களிலிருந்து அழித்து விட்டும், மற்றொரு பக்கத்தில், உடன்பாடு, புரிந்துணர்வு, பூரணமான, நிரந்தர ஒற்றுமை ஆகியவற்றை, இன்றியமையாத முன் நிபந்தனைகளாகவும் நியமித்தும் இருப்பதிலேயே அடங்கியுள்ளது.

எமது கட்டளைகளைக் கடைப் பிடிப்போருக்கு இது மிகவும் நன்று.

எவற்றிலிருந்து, விஷமத்தின் துர்நாற்றம் கண்டுபிடிக்கப் படுகின்றதோ, அவற்றையெல்லாம் ஒதுக்குமாறு, இல்லை, அவற்றிடமிருந்து அப்பால் ஓடுமாறு, யாம், எமது அன்புக்குப் பாத்திரமானோரை மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளோம்.

உலகம் பெருங் கொந்தளிப்பில் இருக்கின்றது.

அதன் மக்களின் உள்ளங்களோ முற்றும் குழப்ப நிலையில் இருக்கின்றன.

அவரது நீதியின் ஒளியினைக் கொண்டு, அவர்களை, அருள் கூர்ந்து பிரகாசமடையச் செய்யவும், எல்லாக் காலங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும், நன்மை பயக்கவல்லது எதுவோ அதனைக் கண்டுபிடிக்கவும் அவர்களுக்கு உதவியளிக்குமாறு, எல்லாம் வல்லவரை யாம் மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றோம்.

மெய்யாகவே, அவரே, சகலத்தையும் கொண்டுள்ளவர், அதி உயர்வானவர்.

XLIV

உலகின் கல்விமான்களே, இறைவன்பால் அச்சத்தினை அப்பால் வைத்திடாதீர்; இக்கல்லாதானின் சமயத்தினை நேர்மையுடன் ஆய்வு செய்திடுங்கள்; அவரைக் குறித்துப் பாதுகாப்பாளரான, சுயஜீவியான, இறைவனின் திருநூல்கள் அனைத்துமே சான்று பகர்ந்துள்ளன.

தெய்வ அதிருப்தியில் பேரச்சமோ, ஈடிணையற்ற அவர்பால் பயமோ, உங்களை எழுச்சியுறச் செய்திடாதா? உலகத்தினால் தவறிழைக்கப்பட்ட அவர், என்றுமே, உங்களுடன் நெருங்கிப் பழகியது கிடையாது; உங்களின் இலக்கியப் படைப்புகளைக் கற்றதுமில்லை; உங்கள் வாக்கு வாதங்களில் பங்கேற்றதுமில்லை.

அவர் அணிந்திருக்கும் ஆடை, அவரது அலையலையாய் விழுந்திடும் நீண்ட தலைமுடி, அவரது தலைப்பாகை ஆகிய அனைத்துமே அவரது திருமொழிக்குச் சான்றளிக்கின்றன.

எவ்வளவு காலந்தான் நீங்கள் உங்களின் அநீதியில் விடாப்பிடியாய் இருக்கப் போகின்றீர்? நீதியின் அவதாரமாகிய அவர் குடியிருக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள உறைவிடத்தைப் பாருங்கள்.

உங்கள் கண்களைத் திறந்து அவரது அவல நிலையைக் கண்ணுற்று, உங்கள் கைகள் ஆற்றியுள்ளதனைக் குறித்துத் தியானியுங்கள்; அதனால், ஒருவேளை, நீங்கள் அவரது திருவாசகங்களின் ஒளியினை இழந்திடாதிருக்கவோ, அவரது அறிவுப் பெருங்கடலிலிருந்து உங்கள் பங்கினைப் பறிகொடுத்து விடாதிருக்கவோ கூடும்.

பொதுமக்கள், மற்றும் உயர்க்குடி மக்கள் ஆகியோரிடையே குறிப்பிட்டச் சிலரும், இத்தவறிழைக்கப் பட்டோன் மதகுருமார்கள் வகுப்பிலிருந்தோ தீர்க்கதிரிசியின் வழித்தோன்றலிலிருந்தோ வந்திராமையால் மறுப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

கூறுவீராக: நீதிமான்கள் எனக் கூறிக்கொள்வோரே! சற்று நேரம் சிந்தித்துப் பாருங்கள்; அப்போது, அவர் எவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என நீங்கள் கோருகின்றீரோ அவற்றுக்கு மேலாக எந்தளவு சிறந்த நிலையில் அவர் தற்போது இருக்கின்றார் என்பதை அறிந்திடுவீர்.

புனிதர்கள், பேரறிஞர்கள், ஞானிகள், புலவர்கள் ஆகியோர் வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டியவற்றில் சிறிதளவுகூடக் கொண்டிராத சமூகத்தினில் இருக்கும் ஒருவரினால்தான் தமது சமயம் பிறப்பிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டுமென எல்லாம் வல்லவரது திருவிருப்பத்தின் கட்டளை விதித்துள்ளது.

புனித ஆவியின் சுவாசமானது, அவரை உறக்கம் களைந்தெழுந்து தமது வெளிப்பாட்டினைப் பிரகடனஞ் செய்யுமாறு கட்டளையிட்டது.

அவர், நித்திரையிலிருந்து எழுப்பப்பட்ட உடனே, தனது குரலை உயர்த்தி, மனித இனம் அனைத்தையும், உலகங்களுக்கெல்லாம் பிரபுவாகிய இறைவன்பால் அழைத்திட்டார்.

யாம் இத் திருச்சொற்களை வெளிப்படுத்துதற்குத் தூண்டுதல் அளித்ததே மனிதரின் தளர்ச்சி, வலுவின்மை ஆகியவைதாம்; இல்லையெனில், யாம் பிரகடனப்படுத்தியுள்ள இவ் வெளிப்பாட்டினை, எந்த ஓர் எழுதுகோலும் வருணித்திருக்கவோ, அன்றியும், எந்த ஒரு மனமும் அதன் உயர்வினைப் புரிந்திருக்கவோ இயலாத நிலையிலேயே இருந்திருக்கும்.

தாய்நூலெனப்படுவது எவரிடம் இருக்கின்றதோ, அவரே இதற்குச் சாட்சி அளிக்கின்றார்.

XLV

புராதன அழகானவர், மனித இனம், அதன் அடிமைத்தளையிலிருந்து விடுதலைப்பெற வேண்டும் என்பதற்காகவே, அவர் சங்கிலியினால் பிணைக்கப்படுவதற்கு இணங்கி இருக்கின்றார்; உலகனைத்தும் உண்மையான சுதந்திரம் பெறக்கூடும் என்பதற்காகவே, அவர், அதி வலுமிக்கக் கோட்டையினுள் கைதியாக்கப்படுவதை ஏற்றுக் கொண்டுள்ளார்.

உலக மக்கள் எல்லையிலாக் களிப்புற்று, மகிழ்ச்சியினால் நிரப்பப்பட வேண்டும் என்பதற்காக அவர் கடுந்துன்பமெனும் கிண்ணத்தை அடிமண்டிவரை உலரச் செய்துள்ளார்.

இதுவே இரக்கமும், அதி கருணையும் மிக்க உங்களது பிரபுவின் அருளிரக்கமாகும்.

இறைவனின் ஒருமைத்தன்மையில் நம்பிக்கையுடையோரே, நீங்கள் மேன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக யாம் இழிவுப்படுத்தப்படுவதை ஏற்றுக் கொண்டோம்.

நீங்கள் வளம் பெற்றுத் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காகவே யாம் பல்வேறு துன்பங்களை அனுபவித்திட்டோம்.

உலகனைத்தையுமே புதுப்பிக்க வந்துள்ள அவரை, எவ்வாறு, இறைவனுடன் பங்காளிகளாகச் சேர்ந்துள்ளவர்கள் மிகப்பாழடைந்த நகரங்களுள் ஒன்றினில் வற்புறுத்திக் குடியிருக்கச் செய்துள்ளனர் என்பதைப் பாருங்கள்!

XLVI

எனது சிறைவாசமெனும் பெருஞ்சுமைக்காக நான் வருந்தவில்லை.

அதுவுமல்லாது எனது இழிந்த நிலைக்காகவோ, எனது பகைவர்களின் கைகளினால் அடையும் கொடுந் துன்பத்திற்காகவோ, யாம் துயருறவில்லை.

எந்தன் உயிரின்மீது ஆணை! எவற்றைக் கொண்டு இறைவன் தம்மையே அழகுபடுத்திக் கொண்டுள்ளாரோ அவையே எனது மகிமை; இதனை நீங்கள் அறிந்திடக் கூடுமாக! யான் சுமக்க வேண்டியிருந்த அவமானம் படைப்பு முழுவதற்கும் அருளப்பட்டுள்ள ஒளியினையே வெளிப்படுத்தியுள்ளது.

யான் தாங்கி வந்துள்ள கொடுமைகளின் வாயிலாக நீதி என்னும் பகல் நட்சத்திரம் தன்னை வெளிப்படுத்தி, அதன் பிரகாசத்தினை மனிதரின் மீது விழச் செய்துள்ளது.

தங்களின் தீய உணர்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, அதே வேளையில், தங்களைக் கருணைமிக்க, சகல போற்றுதலுக்கும் உரியவரான, இறைவனின் சமயத்துடன் தொடர்புக்கொண்டுள்ளதாகக் கூறிக்கொள்கின்றனரே, அவர்களுக்காகத்தான் நான் வருந்துகின்றேன்.

உலகின்பாலும் அதிலுள்ள அனைத்தில் பாலும் மரிப்பதுவும் உலகியல் பொருள்களிலிருந்து பற்றின்றி இருப்பதுவும் பஹாவின் மக்களுக்குப் பொருத்தமாகும்; அதனால், அவர்களின் ஆடையினின்று வீசிடும் இனிய நறுமணத்தின் புனிதத் தன்மையினை விண்ணுலக வாசிகள் நுகர்ந்திடும் அளவு இருக்க வேண்டும்; அத்துடன், அது, உலக மக்கள் அனைவரும், அவர்களின் முகங்களில், கருணைமயமானவரின் பிரகாசத்தினைக் கண்டறிந்து, அதன் மூலம், எல்லாம்வல்ல, சர்வவிவேகியான இறைவனின் அடையாளங்களையும் சான்றுக் குறிப்புகளையும் வெளிநாடுகளுக்கெல்லாம் பரப்பிடக் கூடுமளவும் இருக்க வேண்டும்.

தங்களின் சிற்றின்ப ஆசைகளினால் இறைவனது சமயத்தின் மாசற்ற நற்பெயரினைக் கறைப்படுத்திடுவோர் - தெளிவாய்த் தவறிழைப்போராவர்!

XLVII

யூதர்களே! நீங்கள் ஆண்டவனின் ஆவியாகிய இயேசுவை மீண்டும் சிலுவையில் அறைய விருப்பம் கொண்டிருந்தால், என்னைக் கொல்லுங்கள்; ஏனெனில், எனது உருவில், அவரே மீண்டும் ஒருமுறை உங்களிடையே அவதரிக்கச் செய்யப்பட்டுள்ளார்.

உங்கள் விருப்பத்திற்கேற்ப என்னை நடத்துங்கள்; ஏனெனில் எனது உயிரை இறைவனின் பாதையில் அர்ப்பணிக்க உறுதி பூண்டுள்ளேன்.

மண்ணுலக, விண்ணுலக, சக்திகள் அனைத்தும் ஒருங்கே என்னை எதிர்த்த போதும், நான் எவருக்கும் அஞ்சேன்.

புதிய ஏற்பாட்டைப் பின்பற்றுவோரே! ஆண்டவனின் தூதரான முஹம்மதுவைக் கொல்ல ஆவல் கொண்டிருப்பீராயின் என்னைப் பிடித்து எனது உயிரை மாய்த்திடுங்கள்.

ஏனெனில், நானே அவர், எனது உள்ளமையே அவரது உள்ளமை.

என்னை நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்யுங்கள்; ஏனெனில், ஒளி என்னும் இராச்சியத்தில் உள்ள எனது பேரன்பரின் முன்னிலையை அடைவதே எனது இதயத்தின் அதி ஆழமிக்க விருப்பமாகும்.

இதனை நீங்கள் அறிவீராயின், அவ்வாறானதுதான் தெய்வீகக் கட்டளை.

முஹம்மதுவைப் பின்பற்றுவோரே! பாயான் என்னும் தமது திருநூலை உங்கள்பால் அனுப்பி வைத்தவரின் மார்பினை உங்களின் அம்புகளினால் துளைக்க விரும்பினீராயின், என்னைப் பிடித்துத் துன்புறுத்துங்கள்; ஏனெனில், எனது நாமம் அவரது நாமமாக இல்லாதிருப்பினும், நானே அவரது அன்புக்குப் பாத்திரமானவர், அவரது சொந்த மெய்ம்மையின் அவதாரம்.

ஒளி என்னும் மேகங்களின் நிழலின் கீழ்தான் நான் வந்துள்ளேன்.

மேலும், நான், இறைவனால் வென்றிடவியலாத மாட்சிமை வழங்கப் பட்டுள்ளேன்.

அவர், மெய்யாகவே, மெய்ப்பொருளானவர், மறைப்பொருள்களை அறிந்தவர்.

மெய்யாகவே, எனக்கு முன் தோன்றிய அவரை நடத்திய முறையிலேயே என்னையும் நடத்துவீர் என நான் எதிர்ப்பார்க்கின்றேன்.

நீங்கள் கவனிக்கக் கூடியவர்களாயின், மெய்யாகவே, இதற்கு, அனைத்துப் பொருள்களுமே சாட்சியமளிக்கின்றன.

பாயானின் மக்களே! எவரது அவதாரத்தினை முஹம்மது தீர்க்கதரிசனம் செய்துள்ளாரோ, எவரது வெளிப்பாட்டினை இயேசுநாதரே அறிவித்துள்ளாரோ, அவரது இரத்தத்தைச் சிந்தவேண்டுமென்று நீங்கள் உறுதி கொண்டுள்ளீராயின், இதோ, தயாராகவும் பாதுகாப்பின்றியும் நான் உங்கள் முன் நின்று கொண்டிருப்பதைப் பாருங்கள்.

உங்களின் சுய விருப்பத்திற்கேற்ப என்னை நடத்திக் கொள்ளுங்கள்.

XLVIII

இறைவனே எனது சாட்சி! அது இறைவனின் நிருபம் விதித்துள்ளவற்றுக்கு முரணாக இருந்திராவிடில், நான், நல்லன்பரின் பாதையில் எனது இரத்தத்தைச் சிந்த முயன்றவர்கள் எவராயினும், மகிழ்ச்சியுடன் அவரது கைகளை முத்தமிட்டிருப்பேன்.

மேலும், இத் தீச்செயலைப் புரிந்திட்ட ஒருவர், சர்வ வல்லவரின் கடுஞ் சினத்தைத் தூண்டி, அவரது சாபத்தைத் தன்மேல் வருவித்துக் கொண்டு, சகலத்தையும் கொண்டுள்ள, நேர்மைமிக்கவரும், சர்வ விவேகியுமான இறைவனின் நித்திய காலத்திற்கும் சித்திரவதைச் செய்யப்படுவதற்குத் தகுதி பெற்றிருப்பினும், இறைவன் என்னைக் கொண்டிருக்க அனுமதித்துள்ள உலகியல் பொருள்களில் ஒரு பகுதியை நான் அவருக்கு அளித்து விட்டிருப்பேன்.

XLIX

இவ்விளைஞர், தனது பார்வையைத் தன்மீதே திருப்பிய போதெல்லாம், மெய்யாகவே, எல்லாப் படைப்பின் மத்தியிலும், தன்னை ஓர் அற்பப் பிறவியாகவே காண்கின்றார்.

ஆனால், தான் வெளிப்படுத்துவதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட பிரகாசமிகு ஒளிர்வினைக் குறித்துச் சிந்தித்திடும் போது, அவரது (இறைவனது) முன்னிலையில், அவர், கண்ணுக்குப் புலனாகும், புலனாகா பொருள்கள் அனைத்தின் சாராம்சத்தையும் ஊடுருவிப் பரவச் செய்திடும் ஒரு மாட்சிமை பொருந்திய சக்தியாகத் திருவுருமாற்றம் அடைகின்றார்.

மெய்ம்மைச் சக்தியின் மூலம் தன் சொந்த மெய்ப்பொருளின் அவதாரத்தையே அனுப்பியருளி, மனித இனம் அனைத்திற்குமான தனது செய்தியினை அவரிடம் ஒப்படைத்துள்ளவரான அவருக்கே ஒளி உரியதாகட்டும்.

L

கவனமற்றோரே, அக்கறையின்மை என்னும் உறக்கத்தை உதறித் தள்ளுவீராக; அதனால் நீங்கள், அவரது பேரொளி உலகமுழுவதிலும் வியாபிக்கச் செய்துள்ள பிரகாசத்தினைக் கண்ணுறக் கூடும்.

அவரது ஒளியின் தோற்றக்காலம் நிறைவுறுவதற்கு முன்பாகவே தோன்றியுள்ளார் என்பதை எதிர்த்து முணுமுணுப்போர் எத்தகைய அறிவிலிகளாவர்.

உள்ளூரக் குருடராகியுள்ளோரே! அதி விரைவிலோ, காலங்கடந்தோ, அவரது பிரகாசமிகு பேரொளியின் சான்றுகள் இப்பொழுது உண்மையியிலேயே தெளிவாகப் புலனாகிவிட்டன.

அவ்வித ஒளி தோன்றி விட்டதா இல்லையா என்பதை நிச்சயப் படுத்திக் கொள்ள வேண்டியதுவே உங்களுக்குப் பொருத்தமானது.

அது எந்த நேரத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை நிர்ணயிப்பது உங்கள் சக்திக்கோ என் சக்திக்கோ உட்பட்ட ஒன்றல்ல.

அதற்கான நேரத்தை, இறைவனின் புரிந்திடவியலாத விவேகம், முன்கூட்டியே நிச்சயித்துள்ளது.

மனிதர்களே, இறைவன் விரும்பி உங்களுக்காக முன்விதித்துள்ளதைக் கொண்டு திருப்தியடையுங்கள்.

எனக்குத் தீங்கிழைப்பதை விரும்புவோரே! நித்திய வழிகாட்டுதல் என்னும் பகல் நட்சத்திரமே எனக்குச் சாட்சியளிக்கின்றது: அது எனது சக்திக்கு உட்பட்டதாய் இருந்திருந்தால், நான், எச் சூழ்நிலையிலுமே மனிதர்களிடையே தனிச் சிறப்புப் பெறுவதற்குச் சம்மதித்திருக்கவே மாட்டேன்; ஏனெனில், நான் தாங்கும் இத் திரு நாமமானது கறைப்படுத்தப் பட்ட நாவையும், உண்மையற்ற உள்ளங்கொண்ட இத் தலைமுறையினருடன் தொடர்பையும் முற்றாக வெறுத்தொதுக்குகின்றது.

மேலும், நான், எப்பொழுதெல்லாம் மௌனத்தைக் கடைப்பிடிக்க முடிவெடுத்து அமைதியைக் கடைப்பிடிக்கும் பொழுது, பரிசுத்த ஆவியானது, எனது வலப்புறம் நின்றவாறு, என்னை எழுச்சியுறச் செய்தது; அதி மேன்மைமிகு ஆவியானது எனக்கெதிரே காட்சியளித்தது; கேப்ரியல்* நிழல் தந்தது; பேரொளியின் ஆவியோ, எனது நெஞ்சத்தினுள் எழுச்சி உண்டுபண்ணி, என்னை எழுந்து மௌனத்தைக் கலைக்குமாறு கட்டளையிட்டது.

உங்களின் செவித்திறன் தூய்மைப் படுத்தப்பட்டு, உங்கள் காதுகள் கவனம் செலுத்திடுமாயின், நீங்கள், நிச்சயமாக, எனது உடலின் ஒவ்வோர் உறுப்பு மட்டுமல்லாது, எனது மெய்ம்மைத் தன்மையின் அணுக்கள் அனைத்துமே, இவ் வழைப்பைப் பிரகடனஞ் செய்து, இவ்வாறு அதற்கு அத்தாட்சியும் அளித்திடுவதை உணர்ந்திடுவீர்: “எவரைத் தவிர இறைவன் வேறெவருமிலரோ, எவரது அழகு இப்பொழுது புலனாகியுள்ளதோ, அதுவே விண்ணிலும் மண்ணிலும் உள்ளோர் அனைவருக்கும் அவரது பேரொளியின் பிரதிபலிப்பாகும்.

LI

மனிதர்களே! ஒரே உண்மைக் கடவுளின் மீது ஆணையிடுகின்றேன்! இச்சமுத்திரத்தில் இருந்துதான் கடல்களனைத்தும் தோன்றி வந்துள்ளன; அவை ஒவ்வொன்றும் இறுதியில் அதனுடனேயே ஒன்றிணைந்திடும்.

அவரிடமிருந்தே சூரியன்களெல்லாம் உருவாகி வந்துள்ளன; அவரிடமே அவையனைத்தும் திரும்பிச் சென்றிடும்.

அவரது சக்தியின் மூலமே தெய்வீக வெளிப்பாடெனும் விருட்சங்கள் அவற்றின் கனிகளைக் கொடுத்துள்ளன; அவ்வொவ்வொன்றும், சகலத்தையும் சூழ்ந்துள்ள தமது அறிவினைக் கொண்டு, கடவுள் ஒருவரால் மட்டுமே கணக்கிட முடிந்த, எண்ணற்ற உலகங்களில் வாழும் இறைவனின் உயிரினங்களுக்கு, ஒரு செய்தியினை ஏந்திவரும் தீர்க்கதரிசியின் உருவில் அனுப்பிவைக்கப் பட்டுள்ளது.

இதனை அவர், தமது வழிநடத்தும் விரலினால் இயக்கப்பட்ட எழுதுகோலின் மூலம் வெளிப்படுத்தப் பட்டுள்ள தமது திருமொழியின் ஒரே அட்சரத்தைக் கொண்டு சாதித்துள்ளார்; அவ்விரலே இறைவனின் மெய்ம்மை என்னும் சக்தியினால் உறுதியளிக்கப்படுகின்றது.

LII

கூறுவீராக: மனிதர்களே! இறைவனின் அருளையும் கருணையையும் பெறுவதிலிருந்து உங்களையே நீங்கள் தடைச்செய்து கொள்ளாதீர்.

எவரொருவர் அதிலிருந்து தன்னையே தடைச்செய்து கொள்கின்றாரோ அவர் உண்மையிலேயே கடும் இழப்புக்கு ஆளாகின்றார்.

மனிதர்களே! நீங்கள் மண்ணை வழிபட்டு, அருள்மிகுந்த, வள்ளன்மையே உருவான உங்களின் பிரபுவிடமிருந்து அப்பால் திரும்புகின்றீரா? இறைவனுக்கு அஞ்சுங்கள்; மாண்டோரில் சேர்ந்திடாதீர்.

கூறுவீராக: இறைவனின் திருநூல், இவ்விளைஞனின் உருவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அதி மேன்மைமிகு ஆக்குவோனாகிய இறைவன் புனிதப்படுத்தப்படுவாராக! உலக மனிதர்களே, நன்கு கவனங் கொள்வீராக, இல்லையெனில், அவரது திருவதனத்தை விட்டு அப்பால் ஓடிவிடப் போகின்றீர்.

இல்லை, அவரது முன்னிலையை அடைய விரைந்து, அவர்பால் திரும்பி வருவோராகிடுங்கள்.

மனிதர்களே, அவர்பால் உங்கள் கடமையில் தவறியமைக்காகவும், அவரது சமயத்திற்கெதிராகத் தவறிழைத்தமைக்காகவும் மன்னிப்புக்கோரி பிரார்த்தனை செய்யுங்கள்; அறிவற்றோரைச் சேர்ந்திடாதீர், அறிவிலிகள்போல் ஆகிடாதீர்.

உங்களைப் படைத்தவரே அவர்தான்; தனது சமயத்தின் வாயிலாக உங்களின் ஆன்மாக்களைப் பேணி வளர்த்து, எல்லாம்வல்ல, அதிமேன்மையான, சர்வஞானியான தன்னையே அறிந்துகொள்ளவும் உதவியவர் அவரே.

தனது ஞானமெனும் பொக்கிஷங்களை உங்கள் கண்களின் பார்வைக்குமுன் திரையகற்றி, உங்களைத், தடுக்கவியலாத, எதிர்த்து வாதிடவியலாத, அதி மேன்மைமிகு சமயத்தின்பால் பற்றுறுதி என்னும் சுவர்க்கத்திற்கு உயர்ந்தெழச் செய்வதற்குக் காரணமாய் இருந்தவரும் அவரே.

கவனமாயிருங்கள், அதனால் நீங்கள் உங்களை இறைவனது அருளின் இழப்புக்கு ஆளாக்கிக் கொள்ளாதிருக்கக் கூடும்; அதனால் உங்கள் சாதனைகளைப் பயனற்றவையாக ஆக்கிடாதிருக்கவும், இவ்வதித் தெளிவான, இம் மேன்மைமிகு, இப் பிரகாசமிகு, இவ்வொளிமிகு வெளிப்பாட்டினை மறுத்திடாதும் இருக்கக் கூடும்.

உங்களைப் படைத்தவரான இறைவனின் சமயத்தை நியாயத்துடன் ஆய்வுச்செய்யுங்கள்; உயர்விலுள்ள அரியாசனத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதனைக் கண்ணுறுங்கள்; குற்றமற்ற, தூய்மைப்படுத்தப்பட்ட உள்ளங்களுடன் அதனைத் தியானியுங்கள்.

அப்பொழுதுதான் இச் சமயத்தின் மெய்ம்மை, உச்சிவேளைச் சூரியனைப் போன்று, உங்களுக்குத் தெளிவாகப் புலனாகும்.

அப்பொழுதுதான், நீங்கள், அவர்பால் நம்பிக்கைக் கொண்டோரில் சேர்க்கப்படுவீர்.

கூறுவீராக: அவரது மெய்ம்மையினை நிரூபிப்பதற்கு, மிகமுக்கிய ஆதாரம், அவரது உள்ளமையே.

அவரது அவதாரத்திற்கு அடுத்ததாக, அவரது வெளிப்பாடு.

எவர் அவற்றில் ஒன்றையோ மற்றொன்றையோ தெரிந்துகொள்ளத் தவறுகின்றாரோ அவருக்குத் தனது மெய்ம்மைக்குச் சான்றாகத், தான் வெளிப்படுத்தியுள்ள வாசகங்களை நிறுவியுள்ளார்.

மெய்யாகவே, இதுவே மனிதர்பால் அவரது கருணைக்கு ஓர் அத்தாட்சி.

ஒவ்வோர் ஆன்மாவுக்கும் அவர், இறைவனின் அடையாளங்களை அறிந்து கொள்ளும் ஆற்றலை அருளியுள்ளார்.

அவரது சமயத்தை உங்கள் உள்ளங்களில் தியானிப்பீராயின், அது அவ்வாறில்லையெனில், எங்ஙனம் அவர், தனது அத்தாட்சிகளை மனிதரிடையே பூர்த்தி செய்திருக்க முடியும்.

அவர் யாரையுமே நியாயமற்ற முறையில் நடத்த மாட்டார்; அன்றியும், எந்த ஓர் ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறியதைச் சுமக்கச் செய்யமாட்டார்.

மெய்யாகவே, அவர் இரக்கமுடையவர், கருணைமயமானவர்.

கூறுவீராக: இறைவனது சமயத்தின் மகிமை அத்துணை மேன்மைமிக்கதாய் இருப்பதனால் அதனைக் குருடரும் உணர முடிகிறது; அவ்வாறிருக்க, கூர்மையான பார்வை, தெளிவாகக் காணுந்திறன் ஆகியவற்றினைக் கொண்டுள்ளோரின் பார்வை அதைவிட எத்துணை மேன்மையாக இருந்திடும்.

குருடர்கள், சூரியனின் ஒளியைக் கண்ணுற இயலாதிருப்பினும், அதன் வெப்பத்தைத் தொடர்ந்து அனுபவிக்க முடிகின்றது.

ஆனால், பாயானின் மக்கள் மத்தியில் குருடான உள்ளம் படைத்தோர் - இதற்கு இறைவனே எனக்குச் சாட்சி -- சூரிய ஒளி அவர்கள் மீது எத்துணை காலம் பிரகாசித்திடினும் - அதன் ஒளியின் பிரகாசத்தினை உணரவோ, அதன் கதிர்களின் வெப்பத்தினைப் பாராட்டவோ வலுவில்லாது இருக்கின்றனர்.

கூறுவீராக: பாயானின் மக்களே! எமது மெய்ம்மையினை அறிந்து கொள்வதற்காகவே யாம் உலகினில் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

உங்களைச் சுவர்க்கத்தின் வலப் பக்கத்தின் அண்மையை நெருங்கச் செய்துள்ளோம்; அவ்விடத்திலிருந்துதான் என்றுமே அணையாத தீயானது வலியுறுத்திக் குரலெழுப்புகின்றது: “சக்திமயமான, அதி உயர்வான இறைவன் எம்மைத் தவிர வேறெவருமிலர்!” கவனமாய் இருங்கள், இல்லையெனில், நீங்கள், கருணைமயமான உங்கள் பிரபுவின் விருப்பமெனும் பகலூற்றுக்குமேல் பிரகாசித்திடும் இப்பகல் நட்சத்திரத்திலிருந்து உங்களையே திரைக்குப் பின்னால் மறைத்துக் கொண்டவர்கள் போல் ஆகிடாதீர்; அதன் ஒளி, பெரியோரையும் சிறியோரையும் சூழ்ந்துள்ளது.

உங்கள் பார்வையைத் தூய்மைப் படுத்துங்கள்; அதனால் நீங்கள், அதன் மகிமையை மற்றோரின் பார்வையைக் கொண்டல்லாது உங்களின் கண்களைக் கொண்டே கண்ணுற்று, நீங்கள் உங்களையே சார்ந்திருக்கலாம்; இறைவன், எந்த ஓர் ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறியதனைச் சுமக்கச் செய்ததே கிடையாது.

அவ்வாறே அது, கடந்தகால தீர்க்கதரிசிகளுக்கும் தூதர்களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டு, திருமறைகளிலும் குறிக்கப் பட்டுள்ளது.

மனிதர்களே, இறைவனால் முதலும் முடிவும் நியமிக்கப்படாத எல்லையற்றப் பெருவெளியினுள் நுழைந்திட கடுமுயற்சி செய்யுங்கள்; அதனுள் அவரது குரல் எழுப்பப் பட்டுள்ளது; அதன்மீது தெய்வத் தன்மை, பேரொளி முதலிய இனிய நறுமணம் மிதக்கச் செய்யப் பட்டுள்ளது.

உங்கள் மீதுள்ள மாட்சிமை என்னும் அங்கியினை அகற்றிடாதீர்; உங்கள் உள்ளங்களை உங்களின் பிரபுவை நினைப்பதிலிருந்து தடுத்திடவும், உங்கள் காதுகளை அவரது வியத்தகுந்த, அனைத்தையும் நிர்ப்பந்திக்கும், தெளிவான, அதி நாவன்மைமிக்கக் குரலினைச் செவிமடுப்பதை இழக்கவும் விட்டு விடாதீர்.

LIII

நாஸெரே, எனது சேவகனே! நித்திய மெய்ம்மையாகிய இறைவனே எனக்குச் சாட்சி பகர்கின்றார்.

இவ்விண்ணுலக இளைஞர், இந்நாளில், நித்திய வாழ்வெனும் ஒளி மிகுந்த கிண்ணத்தை மனிதர்களின் தலைக்குமேல் உயர்த்திப் பிடித்தவாறு, எந்த ஒரு கண் தனது பேரொளியினை அறிந்து கொள்ளக் கூடுமெனவும், எந்த ஒரு கை, தனது வெண்பனிக் கரங்களிலிருந்து கிண்ணத்தைப் பற்றி, முற்றும் பருகிடுவதற்குத், தயக்கமின்றி நீட்டப்படும் எனவும் எதிர்பார்த்தவாறு, தனது அரியாசனத்தின்மீது காத்து நிற்கின்றார்.

இதுவரை, தொன்மை வாய்ந்த மன்னரின் இவ்வொப்பற்ற, மென்மையாக வழிந்து வரும் அருளினின்று உட்கொண்டிட்டோர் மிகச் சிலரே.

இவர்கள்தாம் சுவர்க்கத்தின் அதி உயரிய மாளிகைகளில் வசித்து, அதிகார பீடத்தின் மீது உறுதியாக ஸ்தாபிக்கப் பட்டுள்ளோர்.

இறைவனின் நேர்மைத்தன்மை சாட்சியாக! நீங்கள் உண்மையைப் புரிந்துகொள்ளக் கூடியோராயின், அவரது பேரொளியின் கண்ணாடிகளோ, அவரது நாமங்களை வெளிப்படுத்துபவர்களோ, படைக்கப்பட்டப் பொருள்கள் எவையுமோ அவர்களை விஞ்சியதில்லை, விஞ்சப்போவதுமில்லை.

நாஸெரே! அவர்களின் அறிவு எத்துணை விரிவானதாக இருந்திடினும், அவர்களின் புரிந்திடும் ஆற்றல் எத்துணை ஆழமிக்கதாக இருந்திடினும், இந்நாளின் பெருஞ் சிறப்பு மனிதர்களின் புரியுந்திறனுக்கு மேலாக, அளவற்ற உயரிய நிலையில் இருக்கின்றது.

அதன் பிரகாசத்தினின்று வழிதவறிப் போயும், அதன் பேரொளியில் இருந்து மறைக்கப்பட்டும் இருப்போரின் கற்பனைகளுக்கு மேல், அது, இன்னும் எத்துணை உயரத்தில் இருந்திடும்,! உங்கள் பார்வையை மறைத்திருக்கும் கடுந்திரையினைக் கிழித்தெறிவீராயின், ஆரம்பமில்லா ஆரம்பமுதல், முடிவில்லா முடிவு வரை, அதனுடன் ஒத்ததாகவோ சமமானதாகவோ இருக்கும் இத்தகைய வள்ளன்மையை நீங்கள் கண்டிருக்கவே முடியாது.

இறைவனின் பேச்சாளராக, அவர், எந்த மொழியைத் தேர்ந்தெடுத்தால், தம்மிடமிருந்து திரையைப் போன்ற ஒன்றினால் மறைக்கப் பட்டோர் தமது ஒளியினை அறிந்து கொள்ள முடியும்? நேர்மையாளரும், உயர்விலுள்ள இராஜ்யத்தின் வாசிகளும், பேரொளிமயமான எமது நாமத்தினால் தெய்வத் தன்மை என்னும் மதுரசத்தினைப் பருகிடுவர்.

அவர்களைத் தவிர வேறெவருமே அத்தகைய பலன்களை அனுபவித்திடார்.

LIV

இறைவனின் மேன்மைத் தன்மை சாட்சியாக, எனது மெய்யன்புக்குரிய நேசரே! யான் உலகாயத் தலைமைத்துவத்தை விழைந்ததே கிடையாது.

எனது ஒரே நோக்கம்: கிருபையாளரும் ஒப்புயர்வற்றவருமான இறைவன் கட்டளையிட்டதனை மனிதர்களுக்கு வழங்குவதேயாகும்; அதனால், அது, அவர்களை, இவ்வுலகைச் சார்ந்தவை அனைத்திலிருந்தும் தங்களைப் பற்றறுக்கச் செய்து, இறை பக்தியற்றோர் புரிந்து கொள்ளவோ, அடக்கமில்லாதோர் கற்பனைச் செய்யவோ இயலாத அளவு அவர்களை உயர்வடையச் செய்திடக் கூடும்.

LV

“தா” (தெஹ்ரான்) என்னும் நகரமே, உனது பிரபு உன்னைத் தனது அரியாசனத்தின் இருக்கையாக ஆக்கித், தனது பேரொளியின் பிரகாசத்தினால் சூழச் செய்திருந்த முந்திய நாள்களை ஞாபகப்படுத்திக் கொள்வாயாக.

அப்புனிதப்படுத்தப்பட்ட ஆன்மாக்கள், பற்றுறுதியின் சின்னங்கள் ஆகியோரின் எண்ணிக்கை எத்துணைப் பெருந்திரளானது; அவர்கள் உன்பால் கொண்ட மிகுந்த அன்பின் காரணமாகத் தங்களின் உயிர்களையே பலியாகக் கொடுத்து, உன் பொருட்டு தங்களின் உடைமைகள் அனைத்தையுமே தியாகஞ் செய்தனர்.

உனக்கு மகிழ்ச்சிக் கிட்டுமாக, உன்னுள் வசிப்போருக்குப் பேரின்பம் கிட்டுமாக.

உய்த்துணரும் உள்ளம் ஒவ்வொன்றும் உணர்ந்திருப்பது போல், உன்னிலிருந்தே உலகத்தின் ஆவலாகிய அவரது உயிர்மூச்சு வெளிப்பட்டு வருகிறதென்பதற்கு நான் சாட்சியம் கூறுகின்றேன்.

கண்ணுக்குப் புலனாகாதது உன்னுள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது; மனிதர்களின் கண்களுக்கு மறைந்திருந்தது உன்னிலிருந்தே தோன்றிவந்துள்ளது.

உனது வாயிலுக்குள் இரத்தம் சிந்தி, தங்களின் உடல்கள் இப்பொழுது உனது தரையின்கீழ் மறைந்து கிடக்கும் எண்ணற்ற அம் மெய்யன்பர்களுள் யான் யாரை நினைவு கூர்வது? இறைவனின் இனிய நறுமணம் இடைவிடாது மிதந்து வந்த வண்ணமிருக்கின்றது; அவ்வாறே அது நித்தியமும் உன் மீது மிதந்து வந்தவாறே இருக்கும்.

எமது எழுதுகோல் உனக்கு நினைவு விழா கொண்டாடவும், உனது மண்ணில் உறங்கிடும் கொடுங்கோன்மையின் பலியுயிர்களான ஆண்களையும் பெண்களையும் உயர்வாகப் புகழ்ந்துரைக்கவும் உணர்ச்சித் தூண்டல் பெறுகின்றது.

அவர்களுள்ளே ஒருவர் எமது சொந்த சகோதரி; எமது விசுவாசத்தின் அடையாளமாகவும், அவர்பால் எமது அன்புக் கருணைக்குச் சான்றாகவும், யாம், இப்பொழுது, அவரை நினைவுக் கூர்கின்றோம்.

எத்துணை வருத்தத்துக்குரியது அவரது அவல நிலை! எந்தளவு பற்றற்ற நிலையில் அவர் தனது இறைவன்பால் திரும்பிச் சென்றார்! சகலத்தையும் உள்ளடக்கும் எமது ஞானத்தினில், யாம் ஒருவர் மட்டுமே அதனை அறிந்திருந்தோம்.

“தா” என்னும் நகரமே! இறைவனின் அருளால், எதனைச் சுற்றி அவரது நேசர்கள் ஒன்று கூடியிருக்கின்றனரோ அம் மையமாகவே இன்னமும் நீயே இருந்து வருகின்றாய்.

மகிழ்ச்சியுறுகின்றனர் அவர்கள்; உனது புகலிடத்தைத் தேடிவரும் அகதி ஒவ்வொருவரும் இவ்வியத்தகு தினத்தின் பிரபுவாகிய இறைவனின் பாதையில், தான் அனுபவித்திடும் துன்பங்களில் மகிழ்ச்சியுறுகின்றார்.

ஒரே மெய்க்கடவுளாகிய அவரை நினைவுக்கூர்ந்து, அவரது நாமத்தை மிகைப் படுத்தி, அவரது சமயத்திற்குக் கடுமையாகச் சேவை செய்ய முன்வருபவர்கள் ஆசி பெறுவராக.

கடந்தகால திருமறைகளும் இம்மனிதர்களைத்தாம் குறிப்பிட்டிருக்கின்றன.

அவர்கள்மீதுதான் விசுவாசிகளின் தளபதியானவர் இவ்வாறு கூறி மிதமிஞ்சிய புகழ்ச்சியைப் பொழிகின்றார்: “அவர்களுக்குக் காத்திருக்கும் பேரின்பம், யாம் இப்பொழுது அனுபவிக்கும் பேரின்பத்தையே விஞ்சியுள்ளது.

” மெய்யாகவே, அவர், உண்மையே உரைத்துள்ளார்; இப்பொழுது யாமே அதற்குச் சாட்சி பகர்கின்றோம்.

இருப்பினும், அவர்களது ஸ்தானத்தின் ஒளி இன்னும் வெளிப்படுத்தப்படாமலே இருக்கின்றது.

தெய்வீகச் சக்தி என்னும் கரம், நிச்சயமாகத் திரையை மேலுயர்த்தி, வையத்தின் கண்ணை மகிழ்ச்சியுறவும், அமைதியடையவும் செய்யக் கூடியதனை மனிதரின் பார்வைக்கு வெளிப்படுத்திடும்.

இத்துணை வியத்தகுச் சலுகையினைப் பெற்றிருப்பதனாலும், அவரது புகழ்ச்சியெனும் ஆபரணத்தினால் அலங்கரிக்கப்பட்டிருப்பதனாலும், நித்திய மெய்ம்மையான இறைவன்பால், அவரது பேரொளி மேன்மைப்படுத்தப்படுமாக, நன்றி செலுத்துங்கள்.

இந்நாள்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, இவ்வெளிப்பாட்டில் எவையெல்லாம் ஏற்புடையவையோ அவற்றைப் பற்றிக்கொள்ளுங்கள்.

மெய்யாகவே, அவரே ஆலோசகர், இரங்குபவர், சர்வ ஞானி.

LVI

“தா” என்னும் நகரமே, (தெஹ்ரான்) உன்னை எதுவுமே துயருறச் செய்யவிடாதே, ஏனெனில், இறைவன், உன்னையே மனித இனம் அனைத்திற்கும் மகிழ்ச்சியின் ஊற்றாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

அது அவரது விருப்பமாயின், ஓநாய்கள் சிதறடித்துள்ள இறைவனின் மந்தையை ஒன்றுதிரட்டி, அதனை நீதியுடன் ஆட்சிபுரிந்திடும் ஒருவரைக் கொண்டு, அவர் உனது அரியாசனத்தை ஆசீர்வதிப்பார்.

அத்தகைய ஓர் அரசர், உவப்புடனும், மகிழ்ச்சியுடனும், பஹாவின் மக்கள்பால் தன் வதனத்தைத் திருப்பி, அவர்களுக்குத் தனது சலுகைகளை வழங்கிடுவார்.

உண்மையிலேயே இறைவனின் பார்வையில் அவர் மனிதர்களிடையே ஒரு மாணிக்கமாகக் கருதப்படுவார்.

இறைவனின் மகிமையும், அவரது வெளிப்பாடெனும் இராஜ்யத்தினில் வாழும் அனைவரின் மகிமையும், அவர் மீதே என்றென்றும் நிலைத்திடும்.

பெருமகிழ்ச்சியினால் களிப்புறுவாயாக; ஏனெனில், உன்னுள் அவரது ஒளியின் வெளிப்பாடு தோன்றியதன் காரணமாக, இறைவன், உன்னைத் தனது “ஒளியின் பகலூற்றாக” ஆக்கியுள்ளார்.

எந் நாமத்தின் மூலம் கிருபை என்னும் பகல்நட்சத்திரம் தனது பிரகாசத்தினைப் பொழிந்துள்ளதோ - எதன் மூலமாக மண்ணுலகும் விண்ணுலகும் ஒளிர்விக்கப் பட்டுள்ளனவோ - அந் நாமம் உனக்கு அருளப்பட்டதன் பொருட்டு நீ மகிழ்வுறுவாயாக.

விரைவில் உன்னுள் உள்ள ஆட்சி நிலைமைகள் மாற்றத்திற்குள்ளாகும்;; ஆட்சியதிகாரங்கள் மக்கள் கைகளில் வீழும்.

மெய்யாகவே, உனது தேவர் சகலத்தையும் அறிந்தவர்.

அவரது அதிகாரம் அனைத்தையும் உள்ளடக்குகின்றது.

உனது பிரபுவின் அருள்மிகு தயையில் நம்பிக்கை வைப்பாயாக.

அவரது அன்புக்கருணை என்னும் கண் நிரந்தரமாக உன் பக்கம் திருப்பப்பப்படும்.

உனது குழப்பம், சமாதானமும், அமைதியும் கொண்ட சாந்தநிலைக்கு மாற்றப்படவிருக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறுதான் வியத்தகு திருநூலில் விதிக்கப்பட்டுள்ளது.

LVII

முஹம்மதுவே, நீ எனது முன்னிலை என்னும் அரசவையினின்று புறப்பட்ட பின்னர் எனது இல்லத்தை (பக்தாத் இல்லம்) நோக்கி நடந்து, உனது பிரபுவின் சார்பாக விஜயம் செய்திடுவாயாக.

அதன் நுழைவாயிலை அடைந்ததும் அதன் முன் நின்று இதனைக் கூறிடு: இறைவனின் அதி மேன்மைமிகு இல்லமே, எவர் மூலம் இறைவன் உன்னை உலகத்தின் போற்றுதலுக்குரிய கவர்ச்சிமிகு மையப்பொருளாக ஆக்கி, விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும் உள்ளோர் அனைவருக்கும் தனது நினைவின் சின்னமாகப் பிரகடனம் செய்திருந்தாரோ, அவ் வாதி அழகானவர் எங்குப்போய்விட்டார்? ஐயகோ! இறைவனின் இல்லமே, முந்தைய காலத்தில் நீ, இறைவனின் பாதபீடமாக ஆக்கப்பட்டிருந்தாய்; அக்காலத்தில் உன்னிலிருந்து கருணைமயமானவரின் முடிவிலா இன்னிசையின் சுருதிகள் சரமாரியாய்ப் பொழிந்தன! படைப்பு முழுவதன் மீதும் தனது புகழொளிக் கதிர்களைப் பரவச் செய்திட்ட அவ் விரத்தினக்கல் என்னவாயிற்று? புராதன மன்னர் உன்னைத் தனது பேரொளியின் சிம்மாசனமாக்கியிருந்த அந்நாள்கள், மண்ணுலகுக்கும் விண்ணுலகுக்கும் இடையே உன்னை மட்டுமே கடைத்தேற்றத்தின் தீபமாகத் தேர்ந்தெடுத்து, அதிகாலையிலும் அந்தி வேளையிலும் பேரொளி மயமானவரின் இனிய நறுமணத்தினை எங்கும் பரவச் செய்திட்ட அந்நாள்கள், எங்குப் போயின? இறைவனின் இல்லமே, உன்னைத் தனது முன்னிலை என்னும் பிரகாசத்தினால் சூழச் செய்திட்ட மாட்சிமையும் சக்தியும் மிக்கச் சூரியன் எங்கே? தனது அரியாசனத்தை உனது மதிற் சுவருக்குள் ஸ்தாபித்திட்ட அக்கட்டுப்படுத்த இயலாத உனது பிரபுவின் மென்கருணையின் பகலூற்றான அவர் எங்கே? இறைவனின் அரியாசனமே, உனது வதனத்தை மாற்றமுறச் செய்து, உனது தூண்களை நடுக்கமுறச் செய்தது யாதோ? உன்னை ஆவலுடன் தேடுபவர்களின் முகங்களுக்கு முன்னால் கதவை அடைக்கச் செய்ததுதான் யாதோ? உன்னை அத்துணைப் பாழடையச் செய்தது யாதோ? உலகத்தின் நேசர், தனது பகைவர்களின் வாள்களினால் பின்தொடரப் படுகின்றார் என நீ அறிவிக்கப்பட்டிருக்கக் கூடுமா? பிரபுவானவர் உன்னை ஆசீர்வதிப்பாராக; அவர்பால் உன் விசுவாதத்திற்காகவும் உன்னை ஆசீர்வதிப்பாராக; ஏனெனில், அவரது வேதனைகளிலும் கடுந்துன்பத்திலும், நீ, அவருக்குத் துணையாக இருந்திருக்கின்றாய்.

அவரது மேன்மமிகு மகிமையின் நிகழ்விடமும், அதி புனித உறைவிடமும் நீயே என்பதற்கு நான் சாட்சியம் பகர்கின்றேன்.

உன்னிலிருந்தே ஒளிமயமானவரின் சுவாசம் வெளிப்பட்டுள்ளது; அதுவே படைப்புப் பொருள்கள் அனைத்தின் மீதும் மூச்சு விட்டு, சுவர்க்கத்தின் மாளிகைகளில் வாழும் பக்திமிக்கோரின் நெஞ்சங்களை மகிழ்ச்சியினால் நிரப்பியுள்ளது.

மேலுலகின் வான்படைகளும், இறைவனின் நாமங்கள் என்னும் மாநகரங்களில் வசிப்போரும், உனக்காகக் கண்ணீர் விடுகின்றனர்; உனக்குச் சம்பவித்தவைக்காக அழுது புலம்புகின்றனர்.

எல்லாம் வல்லவரின் நாமங்களுக்கும் பண்புகளுக்கும், மண்ணுக்கும் விண்ணுக்கும் பிரபுவாகியவரின் பார்வை திருப்பப்பட்டுள்ள அந்த இலக்கிற்கும் நீதான் இன்னும் சின்னமாகத் திகழ்கின்றாய்.

இறைவனின் பாதுகாப்புக்கான உறுதிமொழி உய்வதற்கென நிறுவப்பட்ட மரக்கலத்திற்கு நேர்ந்ததே உனக்கும் நேர்ந்துள்ளது.

இம்மொழிகளின் உள்நோக்கத்தினைப் புரிந்துகொண்டு, படைப்பனைத்தின் பிரபுவாகிய அவரது நோக்கத்தை அறிந்துகொள்ளும் ஒருவருக்கு அது நன்று.

கருணைமிக்கோனின் நறுமணத்தின் இனிமையினைச் சுவாசிப்போரும், உனது உயர்வினை அங்கீகரிப்போரும், உனது புனிதத் தன்மையைப் பாதுகாத்து, எல்லா வேளையிலும் உனது ஸ்தானத்தை மதிப்போரும் மகிழ்ச்சியுறுவர்.

உன்னிடமிருந்து அப்பால் திரும்பி, உனது மதிப்பை அறிந்து பாராட்டத் தவறியோரின் கண்கள் திறக்கப்படுவதற்கும், அதனால் அவர்கள் உண்மையாகவே உன்னையும், மெய்ம்மையின் சக்தியின் மூலமாக, உன்னை உயர்வடையச் செய்த அவரையும், அவர்கள் அறிந்துகொள்ளக் கூடுமாறு யாம் எல்லாம் வல்லவரைப் பிராத்திக்கின்றோம்.

உன்னைப் பொறுத்த வரையில் அவர்கள் உண்மையிலேயே குருடர்கள்; இந்நாளில் உன்னைப்பற்றி முற்றிலும் அறிந்தும் இராதவர்கள்.

உனது பிரபு, மெய்யாகவே, அருள்மிகுந்தவர், மன்னிப்பவர்.

உன் மூலமாகவே, இறைவன், தனது ஊழியர்களின் உள்ளங்களைச் சோதித்துள்ளார் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கின்றேன்.

உன்னை நோக்கித் தனது காலடிகளை இயங்கச் செய்து, உன்பால் விஜயஞ் செய்திட்ட மனிதர் ஆசீர்வதிக்கப் படுவார்.

உனது உரிமையை மறுக்கின்றவரும், உன்னிலிருந்து அப்பால் திரும்புகின்றவரும் உனது பெயரை அவமதிப்பவரும் உனது புனிதத் தன்மையை நிந்திப்பவரும் துன்பந்தான் அடைந்திடுவார்.

இறைவனின் இல்லமே, உனது புனிதத் தன்மை என்னும் திரை சமய நம்பிக்கையற்றோரினால் கிழிக்கப்படுமாயின், வருந்தாதே.

இப் படைப்புலகில், இறைவன், தனது நினைவு என்னும் அணிகலனைக் கொண்டு உன்னை அலங்கரித்துள்ளார்.

அத்தகையதோர் ஆபரணத்தை எந்த மனிதனும், எவ்வேளையிலும் மாசுபடுத்திடவே இயலாது.

உனது பிரபுவின் பார்வை, எல்லாச் சூழ்நிலைகளிலும், உன் பக்கமே திருப்பப் பட்டிருக்கும்.

உன்பால் விஜயஞ் செய்து, உன்னைச் சுற்றி வலம்வந்து, உன் பெயரில் அவரை அழைத்திடும் ஒவ்வொருவரின் பிரார்த்தனைக்கும் அவர், மெய்யாகவே, செவிசாய்த்திடுவார்.

அவர் உண்மையிலேயே மன்னிப்பவர், கருணையே உருவானவர்.

என் இறைவா, உம்மிடமிருந்து பிரிவின் காரணமாக அத்துணை மாற்றத்திற்குள்ளாகியும், உமது முன்னிலையினின்று வெகு தூரத்தில் இருப்பதனால் வேதனையுற்றும், உமது கொடுந்துன்பத்தைக் குறித்து துயருற்றுமுள்ள இவ்வில்லம் சாட்சியாக, நான், என்னையும், என் பெற்றோரையும், எனது சுற்றத்தாரையும், உம்மில் நம்பிக்கைக் கொண்டுள்ள என் உடன் பிறந்தோரையும் மன்னித்தருளுமாறு உம்மை மன்றாடுகின்றேன்.

நாமங்களுக்கெல்லாம் மன்னராகியவரே, உமது வள்ளன்மையின் மூலம் எனது தேவைகள் அனைத்தும் பூர்த்தியடைந்திட அருள் பாலிப்பீராக.

வள்ளன்மை மிக்கோரிடையே அதி வள்ளன்மை மிக்கவரும், அனைத்து உலகங்களுக்கும் பிரபுவானவர் நீரே.

LVIII

மர்ம பூமிக்கு (எட்ரியநோப்பில்) எமது நாடுகடத்தலின் முதலாம் ஆண்டில், எமது வேலையாளான மெஹ்டிக்கு வெளிப்படுத்தப்பட்டதனை நினைவுக் கூர்ந்திடுங்கள்.

வரவிருந்த நாள்களில், எமது இல்லத்திற்கு (பாக்தாத் இல்லத்திற்கு) நிகழவிருப்பதை அவரிடம் முன்னறிவித்திருந்தோம்; இல்லாவிடில் அதற்கெதிராக நடத்தப்படவிருக்கும் கொள்ளை, வன்செயல் ஆகியவற்றைக் கண்டு அவர் மனம் வருந்தக் கூடும்.

மெய்யாகவே, உனது பிரபுவான இறைவன், விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும் இருப்பவை அனைத்தையும் அறிந்திருக்கின்றார்.

அவருக்கு யாம் எழுதியுள்ளோம்: எமது இல்லத்தின் மீது இழிவுச்செயல் ஆற்றப்பட்டது, இதுவே முதல்முறையன்று.

கடந்த காலங்களிலும் கொடியோனின் கை அதன்மீது இகழ்ச்சியைக் குவித்தே வந்திருக்கின்றது.

மெய்யாகவே, வருங் காலங்களிலும், உய்த்துணரும் கண் ஒவ்வொன்றிலும் நீர்வடியச்செய்யுமளவு அது, இழிவுப்படுத்தப்படும்.

இவ்வாறாகவே யாம், எல்லாம்வல்ல, போற்றுதலனைத்துக்குமுரிய இறைவனுக்கு மட்டுமேயன்றி மற்றனைவருக்கும் புரியாதவாறு திரைக்குப் பின்னால் மறைக்கப்பட்டிருந்தவற்றை உனக்கு வெளிப்படுத்தியுள்ளோம்.

காலம் நிறைவுறும்போது, பிரபுவானவர், அதனை, மெய்ம்மையின் சக்தியினால், மனிதர்கள் அனைவரின் பார்வையிலும், மேன்மைப்படுத்துவார்.

அவரது இராஜ்யத்திற்கு எடுத்துக்காட்டாகவும், விசுவாசிகள் படையினர் சுற்றி வலம்வந்திடும் புண்ணிய ஸ்தலமாகவும் அதனை ஆக்கிடுவார்.

இவ்வாறாகத்தான், கதறிடும் காலம் வருவதற்கு முன்னரே, பிரபுவானவர், திருவாய் மொழிந்திருக்கின்றார்.

பகைவர்களின் தாக்குதல்களினால் எமது இல்லத்திற்கு நேர்ந்தவற்றிற்காக நீ வருந்தாதிருக்க வேண்டும் என்பதற்காகவே யாம் எமது புனித நிருபத்தினில் இவ்வெளிப்பாட்டினை அருளியுள்ளோம்.

சர்வஞானியான, சர்வவிவேகியான இறைவனுக்கே போற்றுதலனைத்தும் உரியதாகட்டும்.

LIX

இத்தவறிழைக்கப்பட்டோன், தனது வெளிப்பாட்டின் தோற்றத்தின் ஆரம்பத்திலிருந்தே மனித இனம் முழுவதையும் தங்களின் முகங்களைப் பேரொளி என்னும் பகலூற்றின்பால் திருப்புமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்பதையும், நேர்மையின்மை, வெறுப்பு, கொடுமை, துன்மார்க்கம் ஆகியவற்றைக் கண்டித்து வந்துள்ளார் என்பதையும், பாரபட்சமற்ற பார்வையாளர் ஒவ்வொருவரும் தயக்கமின்றி ஒப்புக்கொள்வர்.

இருந்தும், கொடுமையாளனின் கை ஆற்றியுள்ளவை யாவை எனப் பாருங்கள்! எந்த ஓர் எழுதுகோலுமே அவனது கொடுங்கோன்மையினை வருணிக்கத் துணிவுறாது.

நித்திய மெய்ப்பொருளாகிய அவரது நோக்கம், மனிதர்கள் அனைவருக்கும் நிலையான வாழ்வு அளிப்பதுவும், அவர்களது பாதுகாப்பையும் சமாதானத்தையும் உறுதிப்படுத்துவதுமாக இருந்தும், அவர்கள் எவ்வாறு அவரது அன்புக்குப் பாத்திரமானவர்களின் இரத்தத்தைச் சிந்த எழுந்து அவருக்கே மரண தண்டனையும் விதித்துள்ளனர் என்பதைப் பாருங்கள்.

மூடர்களாய் இருந்தும் அதி விவேகிகளுக்கு மேலான விவேகிகளெனப் பெயர் பெற்றுள்ள அவர்கள்தாம் இக்கொடுமையைத் தூண்டியவர்கள்.

அவர்களின் குருட்டுத்தனம் அத்தகையதாய் இருந்ததனால், அவர்கள், எவரது வாயிலின் ஊழியர்களுக்காக இவ்வுலகம் படைக்கப்பட்டதோ, அவரையே வெளிப்படையான உக்கிரத்துடன் பலம் பொருந்தியதும், வேதனைத் தரக்கூடியதுமான இச்சிறையில் தள்ளி விட்டுள்ளனர்.

இருந்தும், எல்லாம் வல்லவர், அவர்களையும் இந்த “மாபெரும் அறிவிப்பின்” உண்மையினை மறுத்தவர்களையும் பொருட்படுத்தாது, இச்சிறைக்கூடத்தினை அதி மேன்மைமிகு சுவர்க்கமாகவும், சுவர்க்கங்களுக்கெல்லாம் சுவர்க்கமாகவும் உருமாற்றியுள்ளார்.

எமது துன்பங்களைத் தணித்திட உதவும் சாதகமான பொருள்களை யாம் மறுப்பதில்லை.

இருப்பினும், எமது புனித அரசவை அவ்வித லௌகீக நன்மைகளிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டும், அவற்றிற்கப்பால் மிக்க உயரிய நிலையில் உள்ளதென்பதற்கும் எமது நண்பர்களில் ஒவ்வொருவரும் சான்று பகன்றிடுவர்.

ஆனாலும், இச்சிறையினில் கைதியாய் இருக்கும் இவ்வேளையில், சமய நம்பிக்கையற்றோர் எமக்குக் கிட்டாது செய்திடக் கடுமுயற்சி செய்திடும் அப்பொருள்களை யாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

தூய தங்கத்தினாலோ வெள்ளியினாலோ எமது பெயரில் ஓர் ஆலயம் எழுப்பவோ, விலைமதிக்கவியலாத இரத்தினக் கற்களினால் அலங்கரிக்கப்பட்ட வீட்டை எழுப்பவோ முன்வரும் ஒரு மனிதர் கிடைக்கப் பெற்றால், சந்தேகமின்றி, அத்தகைய வேண்டுகோள் ஏற்கப்படும்.

மெய்யாகவே, அவர் விரும்பியதை அவர் செய்வார்; அவர் திருவுளங் கொண்டதை அவர் விதிப்பார்.

எவராவது இந்நாடு முழுவதிலும் உன்னதமானதும் கவர்ச்சிமிக்கதுமான கட்டடங்கள் எழுப்பவும், ஜோர்டானைச் சேர்ந்தும், அதன் சுற்றுப்புறங்களிலுமுள்ள செழிப்பான, புனிதமிக்க பிரதேசங்களை இறைவழிப்பாட்டிற்கும், ஒரே உண்மைக் கடவுளின் சேவைக்கும் - அவரது மகிமை மேன்மைப்படுத்தப்படுமாக - அர்ப்பணம் செய்ய விரும்புவாராயின், அவருக்கு அனுமதி வழங்கப்படுகின்றது; அதனால், தெய்வீகத் திருமறைகளில் குறிக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்கள் பூர்த்திச் செய்யப்பட்டு, உலகங்களனைத்திற்கும் பிரபுவாகிய இறைவனின் இவ்வதி மேன்மையான, இவ்வதி புனிதமான, இவ் வலிமைமிக்க, இவ் வியத்தகு வெளிப்பாடு வெளிப்படையாய்த் தெளிவுப்படுத்தப்படக் கூடும்.

கடந்த காலங்களில், யாம், இப்பொன்மொழிகளைத் திருவாய் மலர்ந்துள்ளோம்: ஜெருசலமே, உனது பாவாடை விளிம்பைப் பரவச்செய்வாயாக! பஹாவின் மக்களே, இதனை உங்களின் உள்ளங்களில் தியானித்து, விளக்கவுரையாளரான, மிகத்தெளிவாய்த் தெரிபவரான உங்களின் பிரபுவுக்கு நன்றிச் செலுத்துவீராக.

இறைவனைத் தவிர வேறெவருக்குமே தெரிந்திராத மர்மங்கள் தெளிவுப்படுத்தப் படுமாயின், மனித இனம் முழுவதுமே முழுநிறைவான, தலைசிறந்த, நீதிக்கான ஆதாரங்களைக் கண்ணுற்றிடும்.

எவருமே சந்தேகிக்கவியலாத பற்றுறுதியுடன், மனிதர்களனைவருமே அவரது கட்டளைகளை இறுகப்பற்றி, வழுவாது கடைப்பிடிப்பர்.

எவரொருவர் கொடுமையிழைப்பதைத் தவிர்த்துக் கற்புநெறிதவறாத, புனித வாழ்க்கையைக் கடைப்பிடிக்கின்றாரோ அவருக்கு, மெய்யாகவே, யாம், நல்லதும், வள்ளன்மைமிக்கதுமான பரிசை நிர்ணயித்துள்ளோம்.

உண்மையாகவே, அவரே, மாபெரும் கொடையாளி, வள்ளன்மையே உருவானவர்.

LX

எனது சிறைவாசம் எனக்கு அவமானத்தைக் கொண்டுவராது.

அன்றியும் எனது உயிரின் மீது ஆணை; அது, எனக்குப் பெருமைதான் அளிக்கின்றது.

எனது நம்பிக்கையாளர்களிடையே, என்னை நேசிப்பதாகக் கூறிக்கொண்டு, தீயோனைப் பின்பற்றுகின்றனரே, அப்படிப் பட்டவர்களின் நடத்தைதான் என்னை நாணமுறச் செய்யக் கூடியது.

அவர்கள், உண்மையாகவே, வழிதவறியோராவர்.

இவ்வெளிப்பாட்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் பூர்த்தியடைந்து, உலகத்தின் பகல் நட்சத்திரமான அவர் ஈராக்கில் தோன்றியபோது, அவர், தன்னைப் பின்பற்றுபவர்களை, மண்ணுலகின் தூய்மைக்கேடுகளைக் களையக்கூடியவை எவையோ, அவற்றைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டார்.

சிலர் இழிவான இச்சைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்; ஆனால், மற்றவர்கள், நேர்மையான, நெறிதவறாத வழியில் நடந்தனர்; ஆகவே அவர்கள் சரியான பாதைக்கு வழிகாட்டப்பட்டனர்.

கூறுவீராக: தனது உலக ஆசைகளைப் பின்பற்றி உலகப் பொக்கிஷங்களின் மீது பற்றுக் கொள்பவர் பஹாவின் மக்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படத் தகுதிப்பெறமாட்டார்.

ஒருவர், தூய தங்கத்தினாலான பள்ளத்தாக்கு ஒன்றைச் சென்றடையுங்கால், அவர், ஒரு மேகத்தைப் போன்று, பற்றற்ற நிலையில், அதனைக் கடந்து செல்வார்; பின்புறம் திரும்பவோ, தயங்கி நிற்கவோ மாட்டார்.

அப்படிப்பட்ட மனிதர், நிச்சயமாக, என்னைச் சேர்ந்தவர்.

உயர்விலுள்ள வான்படையினர், அவரது ஆடையினின்று, புனிதத்தன்மை என்னும் நறுமணத்தினை முகர்ந்திடுவர்.

மேலும், அவர், பெண்களிலேயே அதி அழகியும் ரூபவதியுமாகிய ஒருத்தியைச் சந்திக்க நேர்ந்தால், அவளது அழகின்பால் தன் காமயிச்சையின் நிழல் சிறிதுகூட தனது மனதை வசியப்படுத்த விடமாட்டார்.

உண்மையாகவே, அப்படிப்பட்ட ஒருவர்தான், கறையற்ற கற்புடைமையின் படைப்பாகும்.

இவ்வாறுதான் எல்லாம்வல்ல, வள்ளன்மையே உருவான உங்களின் பிரபுவானவரின் கட்டளையின்படி பண்டையக் காலங்களின் எழுதுகோலானவர் கற்பிக்கின்றார்.

LXI

உலகம் பிரசவவேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றது; நாளுக்கு நாள் அதன் கலவரம் அதிகரித்து வருகின்றது.

அதன் முகமோ கீழ்ப்படியாமை, அவநம்பிக்கை ஆகியவற்றின்பால் திருப்பப்பட்டுள்ளது.

அதன் அவலநிலை அத்துணை மோசமடையவிருப்பதனால் அதனை இப்பொழுது பகிரங்கப்படுத்துவது பொருத்தமுமன்று, சரியுமன்று.

அதன் முறைகேடான நடத்தை நெடுங்காலத்திற்குத் தொடரும்.

அக்குறிப்பிட்ட நேரம் வந்ததும், மனித இனத்தின் அங்கங்களையே நடுக்கமுறச் செய்யக்கூடியதொன்று திடீரெனத் தோன்றும்; அப்பொழுதுதான், தெய்வீகக்கொடி அவிழ்த்துப் பறக்கவிடப்படும்; விண்ணுலக இராப்பாடி அதன் இன்னிசையை ஒலித்திடும்.

LXII

எனது கடுந்துன்பங்களையும், எனது பொறுப்புகளையும், மனக்கலக்கங்களையும், எனது கடுந்துயரங்களையும், எனது சிறைவாசத்தின் நிலைமையையும், நான் சிந்திய கண்ணீரையும், எனது வேதனையின் மனக்கசப்பையும், மேலும் இப்பொழுது இத்தூர தேசத்தில் எனது சிறைவாசத்தையும் நீ நினைவுக் கூர்ந்திடுவாயாக.

முஸ்தப்பாவே, இறைவனே எனக்குச் சாட்சி பகர்கின்றார்.

ஆதி அழகான அவருக்கு நேர்ந்தவை உனக்கு அறிவிக்கப்படக் கூடுமாயின், நீ, வனாந்தரத்துக்குள் ஓடி கண்ணீர்விட்டு அழுது புலம்பிடுவாய்.

உனது ஆழ்ந்த துயரத்தில், நீ, உன் தலையில் அடித்துக் கொண்டு, நச்சுப் பாம்பினால் தீண்டப்பட்டவனைப் போல் கத்திப் புலம்புவாய்.

அதிசக்தி வாய்ந்த, எல்லாம்வல்ல பிரபுவிடமிருந்து எம்பால் அனுப்பிவைக்கப்பட்ட அத்தேடவியலா கட்டளைகளின் இரகசியங்களை யாம் உனக்கு வெளிப்படுத்த மறுத்தமைக்காக, நீ, இறைவனிடத்தில் நன்றியுடையவனாய் இருப்பாயாக.

இறைவனின் நேர்மைத்தன்மை சாட்சியாக! ஒவ்வொரு காலையும், யான் எனது படுக்கையிலிருந்து எழுந்தபோது, எனது கதவுக்குப் பின்னால் பெருமளவிலான, எண்ணற்ற பேரிடர்கள் குவிக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டேன்; ஒவ்வோர் இரவும், யான், படுக்கைக்குச் சென்றதும், அந்தோ! எனது உள்ளம், அதன் கொடூரமிக்க பகைவர்களிடமிருந்து அனுபவித்திட்டக் கொடுமைகளின் வேதனையினால் வதையுற்றது.

புராதன அழகானவர் உண்ணும் ரொட்டித் துண்டு ஒவ்வொன்றுடனும் பேரிடரின் புதிய தாக்குதல் ஒன்றும் சேர்ந்திடுகின்றது; அவர் அருந்தும் ஒவ்வொரு துளியுடனும் அதி துயர்மிகு சோதனைகளின் மனக்கசப்பும் கலந்திருக்கின்றது.

அவர் எடுத்து வைத்திடும் ஒவ்வோர் அடியுடனும் எதிர்பாராத பேராபத்தின் படையானது முன்செல்கின்றது; அவ்வேளை, அவருக்குப் பின்னால் வேதனையளிக்கும் துன்பங்களும் தொடர்ந்து வருகின்றன.

உனது உள்ளத்தினில், நீ இதனை உணரக் கூடுமாயின், இதுவே எனது இக்கட்டான நிலை.

இருப்பினும், நீ இறைவன் எம்மீது பொழிந்திட்டவைக்காக உனது ஆன்மாவை வருத்தமுறச் செய்திடாதே.

உனது விருப்பத்தை அவரது சங்கற்பத்துடன் ஒன்றிணைத்திடுவாயாக; எவ்வேளையிலும், யாம், அவரது விருப்பத்தைத் தவிர வேறெதனையுமே நாடிலன்; அவரது மாற்றவியலாத கட்டளை ஒவ்வொன்றையும் வரவேற்றுள்ளோம்.

உனது உள்ளம் அமைதியடையட்டும்; தைரியத்தை இழந்து விடாதே.

கடும் கலவரமுற்றோரின் வழியையும் பின்பற்றாதே.

LXIII

உனது முகத்தை என்பால் திருப்பியுள்ளோனே! தூரத்தில் இருக்கும் பொழுதே உனது கண்கள் எனது தாயகமான மாநகரைக் (தெஹ்ரான்) கண்ணுற்றதும், நின்று, இதனைக் கூறிடுவாயாக: “தா” என்னும் நகரமே, ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியுமான இறைவனது செய்தியுடன், சிறையிலிருந்து வெளியே வந்திருக்கின்றேன்.

உலகத்தின் தாயே, அதன் மக்கள் அனைவருக்கும் ஒளியின் ஊற்றே, நான், உனது பிரபுவின் மென்கருணைகளை உனக்கு அறிவித்து, கண்ணுக்குப் புலப்படாதவற்றையெல்லாம் தெரிந்திருக்கும் நித்திய மெய்மையாகிய அவரின் பெயரால் உன்னை வாழ்த்துகின்றேன்.

மறைவாயுள்ள திருநாமமாகிய அவர் உன்னுள் வெளிப்படுத்தப்பட்டு, கண்ணுக்குப் புலனாகாச் செல்வம் வெளிப்படுத்தப்பட்டது என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கின்றேன்.

உன் மூலம், கடந்த காலம், எதிர்காலம் ஆகியவற்றின் இரகசியங்கள் அனைத்தும், தெளிவாக்கப்பட்டுள்ளன.

“தா” என்னும் நிலமே! அவர், திருநாமங்களுக்கு அதிபதியாகிய தனது பேரொளிமிக்க ஸ்தானத்திலிருந்து உன்னை நினைவுக்கூர்கின்றார்.

நீயே இறைவனின் சமயத்தின் பகலூற்றாகவும், அவரது வெளிப்பாட்டின் நீரூற்றாகவும், அவரது அதிவுயரிய நாமத்தின் - மனிதர்களின் உள்ளங்களையும் ஆன்மாக்களையும் நடுக்கமுறச் செய்த அந்நாமத்தின் - தோற்றுவாயாகவும் இருந்தாய்.

உனது மதிற்சுவருக்குள், இறைவனின் பாதையில் தங்களின் உயிர்களைத் தியாகஞ் செய்திட்ட ஆண்கள், பெண்கள், மற்றும் கொடுங்கோன்மையின் தீமைக்கு ஆளாகியோரின் எண்ணிக்கை எத்துணை அதிகமானது; அத்துணைக் கொடூரத்துடன் அவர்கள் உனது பூமியின்கீழ் புதைக்கப்பட்டதானது, இறைவனின் மதிப்பிற்குரிய ஒவ்வோர் ஊழியனையும் அவர்களின் துன்பமிகு நிலைக்காகத் துயருற்றுப் புலம்பச் செய்தது.

LXIV

ஒப்புயர்வற்ற பேரானந்தமிக்க இல்லத்தைப் (தெஹ்ரான்) புனித, ஒளிமிகு மாநகரை -- எதனுள் அன்புமிகு நேசரின் நறுமணம் வீசிடுமாறு செய்யப்பட்டுள்ளதோ, எதனுள் அவரது அடையாளங்கள் வியாபிக்கச் செய்யப்பட்டுள்ளனவோ, எதனுள் அவரது பேரொளியின் ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளனவோ, எதனுள் அவரது கொடிகள் ஏற்றப்பட்டுள்ளனவோ, எதனுள் அவரது திருக்கூடாரம் அமைக்கப்பட்டுள்ளதோ, எதனுள் விவேவகமிக்க கட்டளைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளனவோ - அம்மாநகரை நினைவு கூர்வதுதான் எமது விருப்பமாகும் இதுவே மீண்டும் ஒன்றிணைதல் என்னும் இனிய நறுமணம் வீசியுள்ள நகரமாகும்; இதுவே இறைவனின் உண்மை அன்பர்களை அவரது அருகாமையின்பால் ஈர்த்துப் புனிதத்தன்மை, அழகு ஆகியவை என்னும் வாசஸ்தலத்திற்குள் நுழைவுப்பெறச் செய்த நகரமாகும்.

தனது அருள்மிகுந்த, அனைத்துப் புகழ்ச்சிக்கும் உரிய பிரபுவானவரின் அருள்மழைப் பொழிவின் மூலம் இந்நகரத்தை நோக்கித் தனது காலடிகளைத் திருப்பி, அதனுள் நுழைவுப்பெற்று, மீண்டும் ஒன்றிணைதல் என்னும் மதுரசத்தினைப் பருகிடும் பிரயாணி மகிழ்வெய்துவார்.

உள்ளத்தின் ஆவலாகிய பூமியே, இறைவனின் நற்செய்தியுடன் உன்பால் வந்திருக்கின்றேன்; அவரது அருள்மிகு தயை, கருணை ஆகியவற்றைப் பிரகடனஞ் செய்து, அவரது நாமத்தினால் உன்னை வரவேற்றுப் பெருமைப் படுத்துவதற்காகவே யான் உன்பால் வருகைதந்திருக்கின்றேன்.

உண்மையாகவே, அவர் அளப்பரிய வள்ளன்மையையும், நன்மையையும் கொண்டுள்ளவர்.

தனது முகத்தை உன்பால் திருப்புகின்ற மனிதர், உன்னிடமிருந்து உலகங்களுக்கெல்லாம் பிரபுவாகிய இறைவனின் முன்னிலையெனும் நறுமணத்தினை உணர்ந்திடும் அம்மனிதர், பேறுபெற்றவராவார்.

இறைவனின் ஒளி உன் மீது இலயித்திடுமாக; அவரது ஒளியின் பொலிவும் உன்னைச் சூழ்ந்திடுமாக; ஏனெனில், அவர், உன்னைத் தனது ஊழியர்களுக்கு ஒரு சுவர்க்கமாக்கியுள்ளார்; உன்னையே, ஆசீர்வதிக்கப்பட்ட, புனிதத்தன்மை வாய்ந்த, பூமியெனப் பிரகடனம் செய்துள்ளார்; தனது தீர்க்கதரிசிகளும் தூதர்களும் வெளிப்படுத்தியுள்ள திருமறைகளில், தாமே, இதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

பிரகாசமிகு பேரொளியைக் கொண்டுள்ள பூமியே, உன் மூலமாகவே “அவரையல்லாது இறைவன் வேறெவருமிலர்” என்னும் சின்னம் பறக்கவிடப்பட்டுள்ளது; “மெய்யாகவே, கண்ணுக்குப் புலனாகாப் பொருள்களை எல்லாம் அறிந்தவரான மெய்ப்பொருள் யாமே”, என்னும் கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.

உன்பால் விஜயஞ் செய்து, உன்னிலும் உன்னுள் வசிப்போரிலும், எனது விருட்சத்திலிருந்து கிளைத்துள்ளவர்களிலும், அதன் இலைகளானவர்களிலும், எனது ஒளியின் அடையாளங்களானோரிலும், என்னைப் பின்பற்றுவோரான எனது அன்பர்களிலும், அதிவலுமிகு உறுதிப்பாட்டுடன், தங்கள் முகங்களை எனது பேரொளிமிக்க ஸ்தானத்தின்பால் திரும்பியுள்ளோரிலும் பெருமைக்கொண்டிடுவது உனக்குப் பொருத்தமானது.

LXV

கான்ஸ்டேண்டிநோப்பில் என்னும் மாநகருக்கு நீர் வந்து சேர்ந்தபொழுது, எவ்வாறு, சுல்தானின் மந்திரிகள், நீர், அவர்களின் சட்டங்களையும் விதிகளையும் முன்பின் அறியாதவர் என எண்ணி, உம்மையும் அறிவிலிகளுள் ஒருவரென நம்பினர் என்பதை நினைவுக்கூர்வீராக.

கூறுவீராக: “ஆம், என் பிரபு சாட்சியாக! தனது வள்ளன்மைமிகு தயையினால், இறைவன், எனக்குப் போதிக்க உளங்கொண்டவற்றைத்தவிர மற்றனைத்திலும் நான் அறிவற்றவன்தான்.

இதற்கு, யாம் நிச்சயமாகச்சாட்சியம் அளித்து அதனைத் தயக்கமின்றி ஒப்புக்கொள்ளவும் செய்வோம்.

கூறுவீராக: நீங்கள் பற்றிக்கொண்டிருக்கும் சட்டங்களையும் விதிகளையும் உங்களின் சொந்தப் படைப்புகளேயாயின், எவ்வகையிலும் யாம் அவற்றைப் பின்பற்ற மாட்டோம்.

இவ்வாறுதான் யான் சர்வவிவேகியான, சர்வமும் அறிவிக்கப்பட்டவரான அவரால் கட்டளையிடப் பட்டுள்ளேன்.

இறைவனின் சக்தி, அவரது வலிமை, ஆகியவற்றின் மூலம், கடந்த காலத்திலும் எனது வழக்கம் இவ்வாறாகவே இருந்து வந்திருக்கின்றது, எதிர் காலத்திலும் அவ்வாறாகத்தான் இருந்து வரும்.

உண்மையில், இதுவே, உண்மையானதும், சரியானதுமான வழி.

அவை இறைவனால் விதிக்கப் பட்டவையென்றால், நீங்கள் உண்மையே பேசுபவராயின், உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்.

கூறுவீராக: எந்த மனிதனின் பணியும், அது எத்துணை அற்பமானதாயினும், ஒன்றுவிடாது குறித்துவைக்கும் அப்புத்தகத்தினில் அவர்கள் உம்மீது சுமத்தி உள்ளவைகள், மற்றும் அவர்கள் உமக்கு ஆற்றியுள்ளவைகள் அனைத்தையுமே யாம் எழுதி வைத்துள்ளோம்.

கூறுவீராக: அரசாங்கத்தின் மந்திரிகளே, இறைவனின் கட்டளைகளை மேற்கொண்டு, உங்களின் சொந்த சட்டங்களையும் விதிகளையும் கைவிடுவதும், நேரான பாதைக்கு வழிநடத்தப் படுவதும் உங்களுக்குப் பொருத்தமானவை.

நீங்கள் அறிந்திடக் கூடுமாயின், நீங்கள் கொண்டிருக்கும் அனைத்தையும்விட இதுவே உங்களுக்கு மேலானது.

நீங்கள் இறைவனின் கட்டளையை மீறுவீராயின், உங்களின் சாதனைகளிலிருந்து ஓர் இம்மியளவுக் கூட இறைவனின் பார்வையில் ஏற்புடையதாகாது.

இன்னும் சிறிது காலத்திலேயே நீங்கள், இப்பயனற்ற வாழ்க்கையில் செய்திருக்கக் கூடியவற்றைக் கண்ணுறுவீர்; அவற்றுக்கான கைம்மாறும் அளிக்கப் படுவீர்.

மெய்யாகவே, இது உண்மை, சந்தேகத்திற்கு இடமற்ற உண்மை.

நீங்கள் செய்தவற்றைப் போலவே கடந்த காலங்களிலும் செய்திட்டவர்களின் எண்ணிக்கைதான் எத்துணைப் பெரியது; அந்தஸ்தில் அவர்கள் உ.

ங்களைவிட உயர்ந்திருந்தும், இறுதியில், மண்ணுக்கே திருப்பி அனுப்பப்பட்டு, தவிர்க்கவியலாத அழிவுக்கே ஆளாக்கப்பட்டனர்! இறைவனின் சமயத்தை நீங்கள் உங்களின் உள்ளங்களில் தியானித்திடுவீராக! அவர்களின் அடிச்சுவடுகளையே நீங்களும் பின்பற்றுவீர்கள்; நண்பரோ, உதவுபவரோ எவருமில்லாத ஓர் உறைவிடத்தில் குடியேறச் செய்யப்படுவீர்.

உண்மையாகவே, நீங்கள், உங்களின் செயல்களைக் குறித்து வினவப்படுவீர்; இறைவனின் சமயம் சம்பந்தமாக நீங்கள் கடமையில் தவறியதற்காகவும், தெளிவான நோக்கத் தூய்மையுடன் உங்களை நாடி வந்த அவரது நேசர்களை இகழ்ச்சியுடன் நிராகரித்தமைக்காகவும் காரணம் கேட்கப்படுவீர்.

அவர்களைக் குறித்துக் கலந்து பேசியவர்கள் நீங்கள்தாம்; உங்களின் சொந்த விருப்பத்தின் உந்துதலைப் பின்பற்றும் முடிவைத் தேர்ந்தெடுத்து, ஆபத்தில் உதவுபவரும், சர்வவல்லவருமான இறைவனின் கட்டளைகளைப் புறக்கணித்தவர்களும் கைவிட்டவர்களும் நீங்கள்தாம்.

கூறுவீராக: என்னே! உங்களின் சொந்த திட்டங்களையே இறுகப் பற்றிக்கொண்டு, இறைவனின் போதனைகளை பின்னால் வீசி எறிந்து விட்டீர்களா? உண்மையாகவே, நீங்களே உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தவறிழைத்துள்ளீர்.

அதனை நீங்கள் அறிந்திடக் கூடுமாக! கூறுவீராக: உங்கள் சட்டங்களும் கொள்கைகளும் நீதியை அடிப்படையாகக் கொண்டுள்ளதென்றால், எதனால் நீங்கள், உங்களின் நேர்மையற்ற விருப்பங்களுடன் ஒத்திருப்பவற்றை மட்டுமே பின்பற்றி, உங்களின் விருப்பங்களுக்கு முரணானவற்றை நிராகரிக்கின்றீர்? பின், எந்த உரிமையைக் கொண்டு, நீங்கள், மனிதர்களிடையே நியாயமாக நீதி வழங்குவதாகக் கூறிக்கொள்கின்றீர்? உங்களின் கட்டளைக்கிணங்க உங்கள் முன் வந்திட்ட அவரைத் துன்புறுத்துவதையும், அவரை நிராகரிப்பதையும், அவர்மீது ஒவ்வொரு நாளும் கடுமையான தீங்கிழைப்பதையும் நியாயமெனக் கொள்ளக் கூடியவைதானா உங்களின் சட்டங்களும் கொள்கைகளும்? எப்பொழுதாவது அவர், ஒரு கண நேரமேனும், உங்கள் ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்ததுண்டா? ஈராக்கின் மக்கள் அனைவரும், அதுவுமல்லாது, உணரக் கூடிய ஒவ்வொரு பார்வையாளரும், எனது வார்த்தைகளின் வாய்மைக்கு ஆதாரமளித்திடுவர்.

அரசாங்க அமைச்சர்களே, உங்கள் தீர்ப்பில் நேர்மையைக் கடைப்பிடிப்பீராக! எமது நாடுகடத்தல் நியாயமென நீங்கள் கொள்ளுமளவுக்கு யாம் செய்திட்ட குற்றந்தான் யாது? எம்மை வெளியேற்றுவதற்கான தேவையை ஏற்படுத்திய அக்குற்றம் என்ன? யாம்தான் உங்களைத் தேடிவந்தோம்; இருந்தும், நீங்கள் எவ்வாறு எம்மைச் சந்திக்க மறுத்திட்டீர் என்பதைப் பாருங்கள்! இறைவன் சாட்சியாக! நீங்கள் இழைத்திட்டது அளவற்ற ஓர் அநீதி -- உலக அநீதி எதனையுமே அதனுடன் ஒப்பிடவியலாது.

அதற்குச் சர்வவல்லவரே சாட்சியளிக்கின்றார்.

உலகமும், அதன் வீண் தற்பெருமைகளும், அதன் அலங்காரங்களும் அழிந்து போய்விடும் என்பதை நீங்கள் அறிவீராக.

ஆபத்தில் உதவுபவரும், பேரொளிமயமானவரும், சர்வ வல்லவரும், அனைத்திற்கும் மாட்சிமைமிகு பிரபுவும் ஆகிய அவருடன் தொடர்புடைய இறைவனின் இராஜ்யத்தைத் தவிர வேறெதுவுமே நிலைத்திடாது.

உங்களின் வாழ்நாள்கள் உருண்டோடிடும்; நீங்கள் ஈடுபட்டிருப்பவையும், எவற்றைக் குறித்துப் பெருமையடித்துக் கொள்கின்றீரோ அவை அனைத்தும், அழிந்து போய்விடும்; நிச்சயமாக, நீங்கள், படைப்பனைத்தின் அங்கங்களையும் நடுக்கமுறச் செய்யும், ஒவ்வொரு கொடுமையாளனின் உடலையும் நடுக்கமுறச் செய்யும் அவ்விடத்தில் ஆஜராகும்படி அவரது தெய்வகணங்கள் படை ஒன்றினால் அழைப்பாணை வழங்கப்படுவீர்.

இவ்வற்பமான வாழ்க்கையில் உங்களின் கைகள் ஆற்றியுள்ளவற்றைக் குறித்து நீங்கள் கேட்கப்பட்டு, உங்களின் செயல்களுக்குப் பிரதிபலன் அளிக்கப்படுவீர்.

உங்கள்பால் தப்பாது வரவிருக்கும் நாளும், எவருமே தாமதிக்கவியலாத நேரமும் இதுவே.

உண்மையே உரைப்பவரும் அனைத்தையும் அறிந்தவருமான அவரது நாவே இதற்குச் சாட்சியம் பகன்றுள்ளது.

LXVI

கான்ஸ்டேண்டிநோப்பில் என்னும் நகரில் வசிப்போரே, இறைவனுக்கு அஞ்சுங்கள்; மனிதர்களிடையே முரண்பாட்டை விதைத்திடாதீர்.

தீயோனின் வழிகளில் நடந்திடாதீர்.

எஞ்சியிருக்கும் உங்களின் வாழ்நாள்களில், நீங்கள், ஒரே உண்மைக் கடவுளானவரின் வழிகளில் நடந்திடுவீராக.

உங்களுக்கு முன் சென்றிட்டோரைப் போலவே உங்கள் நாள்களும் மறைந்து போய்விடும்.

கடந்த காலத்தில் உங்கள் மூதாதையர்களைப் போலவே, நீங்களும் மண்ணுக்கே திரும்பிச் சென்றிடுவீர்.

இறைவனைத் தவிர நான் எவருக்குமே அஞ்சுவதில்லை.

அவர் ஒருவரிடத்தில் மட்டுமல்லாது நான் வேறெவரிடத்திலுமே எனது நம்பிக்கையை வைப்பதில்லை; அவரைத் தவிர வேறெவரையுமே பற்றிக்கொள்ள மாட்டேன்; அவர் எனக்காக விரும்பியதைத் தவிர நான் வேறெதனையும் விரும்பியதில்லை.

இதனை நீங்கள் அறிவீராயின், உண்மையாகவே, இதுவே எனது உள்ளத்தின் ஆவல்.

எனது ஆன்மாவையும், எனது உடலையும் உலகங்களின் பிரபுவாகிய அவருக்காகவே அர்ப்பணித்துள்ளேன்.

இறைவனை அறிந்திட்டவர்கள் அவரைத் தவிர வேறெவரையுமே அறியமாட்டார்; இறைவனுக்கு அஞ்சுபவர், உலகின் சக்திகள் அனைத்துமே எழுந்து அவருக்கெதிராக அணிவகுத்து நின்றபோதும், வேறெவருக்குமே அஞ்ச மாட்டார்.

அவரது கட்டளையைத் தவிர நான் வேறெதனையும் அறிவிப்பதில்லை; இறைவனின் சக்தி, வலிமை ஆகியவற்றின் மூலம் மெய்ம்மையைத் தவிர வேறெதனையுமே நான் பின்பற்றுவதில்லை.

மெய்யாகவே, நேர்மையாளர்களுக்கு அவரே கைம்மாறு வழங்கிடுவார்.

ஊழியனே, இம்மாநகருக்கு உனது வருகையின்போது நீ பார்த்தவற்றை விவரித்து உரைத்திடுவாயாக; அதனால், உனது அத்தாட்சி மனிதரிடையே நிலைத்து, நம்பிக்கையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாகக்கூடும்.

அந்நகருக்கு எமது வருகையின் போது அதன் ஆளுநர்களும், மூத்தோர்களும் சிறுவர்களும் ஒன்றுகூடி பொழுதுபோக்குக்கான விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தனர்.

இறைவன் எமக்குக் கற்பித்த உண்மைகளை எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளவோ, எமது வியத்தகு, விவேகமிக்க, திருமொழிகளை ஏற்கவோ முதிர்ச்சியடைந்திட்டோர் எவரையுமே யாம் காணவில்லை.

அவர்களுக்காகவும், எதற்காக அவர்கள் படைக்கப்பட்டனரோ அதன்பால் அவர்களின் முழுமையான அக்கறை இன்மைக்காகவும், அவர்களின் பழிச் செயல்களுக்காகவும் எமது உள்ளம் வேதனையுற்றுக் கண்ணீர் வடித்தது.

இதனைத்தான் யாம் அம்மாநகரில் கண்டோம்; அது அவர்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்பதற்காகவே அதனை யாம் எமது திருநூலில் குறித்து வைக்க முடிவுசெய்தோம்.

கூறுவீராக: நீங்கள் இவ்வாழ்வையும் அதனையட்டிய ஆடம்பரங்களையும் தேடுபவர்களாயின் உங்களின் தாய்மார்களின் கர்ப்பங்களில் இருக்கும் பொழுதே அவற்றைத் தேடியிருக்க வேண்டும்.

இதனை நீங்கள் உணரக்கூடுமாயின், அப்பொழுதுதான் நீங்கள் அவற்றை நோக்கி வந்துகொண்டிருந்தீர்கள்.

மாறாக, நீங்கள் பிறந்து, முதிர்ச்சியடைந்த காலத்திலிருந்து, தொடர்ந்து இவ்வுலகிலிருந்து பின்னிட்டுச் சென்றவாறு புழுதியினை நெருங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்.

உங்களின் காலமோ முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றது; உங்களின் வாய்ப்போ இழப்புக்காளாகும் கட்டத்தை அடைந்து கொண்டிருக்கும்பொழுது எதனால் நீங்கள் உலகத்தின் செல்வங்களைக் குவிப்பதிலேயே அத்தகையப் பேராசைக் காட்டுகின்றீர்? கவனமற்றோரே, உங்களின் ஆழ்ந்த உறக்கத்தை உதறித்தள்ளமாட்டீரா? இறைவனின் பொருட்டு, இவ்வூழியன் உங்களுக்கு வழங்கிடும் அறிவுரையின்பால் செவிசாயுங்கள்.

மெய்யாகவே, அவர், உங்களிடமிருந்து எந்தக் கைம்மாறையும் கோரியதில்லை; இறைவன் அவருக்கு விதித்துள்ளவற்றைப் பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டு, இறைவனின் விருப்பத்திற்கு முழுமனதோடு பணிந்திடுகின்றார்.

மனிதர்களே, உங்கள் வாழ்நாள்களில் பெரும்பகுதி கழிந்துவிட்டது; உங்களின் முடிவுகாலமும் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆகவே, நீங்களே உருவாக்கியும் பற்றிக்கொண்டுமுள்ளவற்றை அப்பால் வைத்துவிட்டு, இறைவனின் கட்டளைகளை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்; அதனால், ஒருவேளை நீங்கள் உங்களுக்கென நிர்ணயிக்கப்பட்டுள்ளதனை அடைந்து, நேர்வழியைக் கடைப்பிடிப்போராகக் கூடும்.

உலகிலும் அதன் பயனற்ற அணிகலன்களிலும் மகிழ்ச்சியுறாதீர்; மேலும், அவற்றின்மீதே உங்கள் நம்பிக்கையையும் வைத்திடாதீர்.

அதி உயரிய, அதி மேன்மையான, இறைவனை நினைத்தலிலேயே இருக்கட்டும் உங்களின் நம்பிக்கை.

அவர், விரைவிலேயே, நீங்கள் கொண்டுள்ள பொருள்கள் அனைத்தையும் இல்லாது செய்திடுவார்.

உங்களின் அச்சம் அவராகவிருக்கட்டும்; அவருடனுள்ள உங்களது ஒப்பந்தத்தை மறந்து விடாதீர்; அவரிடமிருந்து திரையிட்டு மறைக்கப்பட்டோரில் சேர்க்கப்படாதிருப்பீராக.

கவனமாய் இருங்கள், அதனால், நீங்கள் இறைவன்முன் பெருமிதத்தினால் ஆணவங் கொண்டு, அவரது அன்புக்குரியவர்களை ஏளனமாக நிராகரிக்காமல் இருக்கக் கூடும்.

எவர் ஆண்டவனிடத்திலும் அவரது அடையாளங்களிலும் நம்பிக்கைக் கொண்டுள்ளனரோ, எவரது உள்ளங்கள் அவரது ஒருமைத் தன்மைக்குச் சாட்சியம் அளிக்கின்றனவோ, எவரது நாவுகள் அவரது ஒருமைப்பாட்டினைப் பிரகடனஞ் செய்கின்றனவோ, எவர் அவரது அனுமதியின்றிப் பேசமாட்டாரோ, அத்தகைய விசுவாசிகளிடம் பணிவுடன் மரியாதை காட்டுங்கள்.

அதனால், ஒரு வேளை, நீங்கள் விழிப்புற்று எழக்கூடும் என்பதற்காக, யாம், உங்களுக்கு நீதியுடன் அறிவுரைப் புகட்டி, மெய்ம்மையைக் கொண்டு எச்சரிக்கின்றோம்.

உங்கள்மீதே சுமத்தப்பட விரும்பாத ஒரு சுமையை எந்த ஓர் ஆன்மாவின் மீதும் சுமத்தாதீர்; உங்களுக்காக நீங்கள் விரும்பாத எவற்றையும் வேறெவருக்குமே விரும்பாதீர்.

நீங்கள் இதனைக் கடைப்பிடிக்கக் கூடுமாயின், இதுவே உங்களுக்கு எமது அதி சிறந்த அறிவுரையாகும்.

உங்கள் மத்தியிலுள்ள சமயப் போதகர், கற்றோர், ஆகியோரிடையே எவரது நடத்தை அவர்களின் வெளிப்படையான அறிவிப்புடன் ஒத்ததாய் இருக்கின்றதோ, எவர் இறைவனால் நியமிக்கப்பட்ட வரம்புகளை மீறாதிருக்கின்றனரோ, எவரது தீர்ப்புகள் தங்களின் நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கட்டளைகளுடன் ஒத்திருக்கின்றனவோ அவர்களிடம் மரியாதையுடன் நடந்திடுங்கள்.

அவர்கள்தாம் விண்ணிலும் மண்ணிலும் உள்ளோருக்கு வழிகாட்டிடும் தீபங்களென்பதை அறிவீராக.

அவர்கள் மத்தியில் வாழும் சமயப் போதகர்களையும் கற்றோரையும் அசட்டை செய்திடுவோர் -- உண்மையாகவே, ஆண்டவன் அளித்துள்ள சலுகையினை மாற்றிக் கொண்டுள்ளோர் ஆவர்.

கூறுவீராக: இறைவன் உங்கள்பால் தனது சலுகைகளை மாற்றிக்கொள்ளும் வரை காத்திருங்கள்.

அவரிடமிருந்து எதுவுமே தப்புவது கிடையாது.

அவர் விண்ணுலகங்கள், மண்ணுலகம் ஆகியவற்றின் இரகசியங்களை அறிந்திருக்கின்றார்.

அவரது அறிவு சகலத்தையும் உள்ளடக்குகின்றது.

நீங்கள் செய்தவற்றிலோ, எதிர்காலத்தில் செய்ய இருப்பவற்றிலோ மகிழ்ச்சியடையாதீர்; அதுவுமன்றி, எமக்கு நீங்கள் இழைத்துள்ள கொடுந்துன்பங்களில் களிப்புறவும் செய்யாதீர்; ஏனெனில், நீங்கள், உங்கள் சாதனைகளைக் கூர்ந்து கவனித்தீராயின், இதுபோன்ற வழிவகைகளைக் கொண்டு நீங்கள் உங்கள் ஸ்தானங்களை உயர்த்திக் கொள்ளவே முடியாது.

அல்லாமலும், எமது ஸ்தானத்தை மதிப்புக் குறையச் செய்திட நீங்கள் திறமையற்றுப் போய் விடுவீர்.

இன்னும் கூறினால், யாம் அனுபவித்திட்ட துன்பங்களைப் பொறுமையுடன் தொடர்ந்து தாங்கிக் கொண்டமைக்காக இறைவன் எமக்குக் கைம்மாறாக அளிக்கவிருக்கும் பரிசினை மேலும் அதிகரித்திடுவார்.

மெய்யாகவே, அவர், பொறுமை காப்பவர்களின் சன்மானத்தை அதிகரிக்கவே செய்வார்.

நினைவுக்கெட்டாத காலம் முதல் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டோரும், அவரது நேசர்களும், அவரைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்துள்ள அவரது ஊழியர்களும், வாணிகச் சரக்குகளோ வாணிகமோ தங்களை எல்லாம் வல்லவரின் நினைவிலிருந்து வழிதவறாது பார்த்துக் கொள்வோரும், அவர் திருவாய் மொழிவதற்குமுன்பு பேசாதிருப்போரும், அவரது கட்டளைப்படியே நடப்போரும் சோதனைகளுக்கும் பேரிடர்களுக்கும் ஆளாக்கப்பட்டே வந்திருக்கின்றனர்.

அவ்வாறானதுதான் கடந்த காலத்தில் கடவுள் செயல்பட்டுவந்த முறை, எதிர்காலத்திலும் அது அவ்வாறே இருந்து வரும்.

உறுதியுடன் தாங்கிக் கொள்வோர், நோய்களிலும், இன்னல்களிலும் பொறுமையுடன் இருப்போர், தங்களுக்கு நேர்ந்திடுபவைக்காக வருத்தமுறாதிருப்போர், மன அமைதியுடன் இருப்போர் ஆகிய அனைவரும் அருட்பேறு பெற்றோராவர்.

எமது நாள்களை நினைவுக் கூரவிருக்கும் மக்களும், எமது கடுந் துன்பங்களைக் குறித்த கதைகளைக் கூறவிருப்பவர்களும், ஓர் அணுவளவு ஆதாரமும் இல்லாதிருந்தும், எமக்கு வெளிப்படையாக அநீதி இழைத்தோரிடமிருந்து எமது உரிமைகளைத் திருப்பித் தந்திடுமாறு கேட்கக் கூடியவர்கள் தோற்றுவிக்கப்படவிருக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

எமக்குத் தீங்கிழைத்தோரின் வாழ்க்கையின் மீது அதிகாரம் செலுத்துபவர் இறைவனே என்பது உறுதி; அவர்களின் செயல்கள் அனைத்தையுமே அவர் நன்கு அறிவார்.

அவர்களின் பாவங்களுக்கு அவர் நிச்சயமாகத் தண்டனை வழங்குவார்.

மெய்யாகவே, பழிவாங்குவோரிடையே அதி பயங்கரமானவர் அவரே.

இவ்வாறுதான் யாம், அவ்வொரே உண்மைக் கடவுளானவரின் கதைகளை உங்களுக்கு விவரித்து, அவர் உங்களுக்கு முன்விதித்துள்ளவற்றையும் அனுப்பியுள்ளோம்.

அதனால், ஒரு வேளை, நீங்கள் அவரிடம் மன்னிப்புக்கோரக் கூடும்; அவர்பால் திரும்பி வந்திடக் கூடும்; உண்மையிலேயே வருந்திடக் கூடும்; தவறான செயல்களை உணர்ந்திடக் கூடும்; உங்களின் உறக்கத்தை உதறித் தள்ளக் கூடும்; உங்களின் கவனமின்மையிலிருந்து எழுப்பப்படக் கூடும்; உங்களிடமிருந்து கைநழுவிப் போனவைக்காகப் பிராயச்சித்தஞ்செய்து நன்மை செய்வோருடன் சேர்ந்திடக் கூடும்.

விரும்பியவர் எனது சொற்களின் உண்மையை ஒப்புக்கொள்ளட்டும்; அவ்வாறு செய்யாதவர் அப்பால் திரும்பட்டும்.

எனது ஒரே கடமை, நீங்கள் இறைவனின் சமயத்திற்கு ஆற்றவேண்டிய கடமையில் தவறிவிட்டுள்ளதை நினைவுப்படுத்துவதே; அதனால் ஒருவேளை, நீங்கள், எனது எச்சரிக்கையில் கவனம் செலுத்துபவராகக் கூடும்.

ஆகவே, எனது சொற்களில் கவனஞ் செலுத்தி, நீங்கள், இறைவன்பால் திரும்பி, செய்த தவறுக்காக வருந்துங்கள்; அதனால், அவர், தனது அருளின் வாயிலாக உங்கள்மீது கருணைக்கொண்டு, உங்களின் பாவங்களைக் கழுவி, உங்கள் தவறுகளை மன்னித்திடக் கூடும்.

அவரது கடுஞ்சினத்தை விஞ்சியது அவரது கருணையின் மேன்மையே.

படைக்கப்பட்டும் உயிர் என்னும் ஆடை அணிவிக்கப்பட்டும் உள்ளோர், அவர்கள் முற்காலத்தவரோ வருங்காலத்தவரோ, என்பதன்றி அவரது அருள் அவர்கள் அனைவரையுமே சூழ்ந்துள்ளது.

LXVII

இதற்கு முன் தோன்றியிராதவை இவ்வெளிப்பாட்டினில் தோன்றியுள்ளன.

வெளிப்படுத்தப்பட்டுள்ளவற்றைக் கண்ணுற்ற சமய நம்பிக்கையற்றோரைப் பொறுத்த வரையில், அவர்கள் முணுமுணுத்து இவ்வாறு கூறுகின்றனர்: “இவர், மெய்யாகவே, இறைவனுக்கெதிராக ஒரு பொய்யை உருவாக்கியுள்ள ஒரு மந்திரவாதி.

” உண்மையாகவே, அவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள்.

பண்டைய காலத்தின் எழுதுகோலே, ஈராக்கில் நிகழ்ந்தவற்றை நாடுகளுக்கு எடுத்துரைப்பீராக.

அந்நாட்டின் மதகுருமார் கூட்டத்தினர் தங்களைப் பிரதிநிதிக்க அனுப்பிய தூதரைப் பற்றி அவருக்குத் தெரிவிப்பீராக.

அவர், எமது முன்னிலையை அடைந்ததும் சில அறிவியல் ஞானங்களைக் குறித்து எம்மிடம் கேள்விகள் கேட்டார்; இயறக்கையாய்க் கொண்டுள்ள அறிவின் திறத்தினைக் கொண்டு யாம் அவருக்குப் பதிலளித்தோம்.

இறைவன், மெய்யாகவே, கண்ணுக்குப் புலப்படாதவற்றை அறிந்தவர்.

அவர், “நீங்கள் கொண்டுள்ள அறிவுடன் எவருமே ஒப்பிடப்படார் என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன்.

இருப்பினும், மக்கள் உங்களுக்கு அளித்திடும் உயரிய ஸ்தானத்தை மெய்ப்பித்துக் காட்டுவதற்கு அது போதுமானதல்ல.

நீங்கள் உண்மை உரைப்பவராயின், உலக மக்களனைவரின் ஒருங்கிணைந்த ஆற்றல்களே உண்டுபண்ண சக்தியற்று இருக்கும் ஒன்றினை நிரூபித்துக் காட்டுங்கள்” என அவர் கூறினார்.

உங்களின் பேரொளிமயமான, அன்புமிகு பிரபுவானவரின் முன்னிலை என்னும் அரசவையினில் இவ்வாறுதான் இம்மாற்றவியலாத கட்டளை விதிக்கப் பட்டுள்ளது.

“பாரும்! நீர் காண்பது என்ன?” அவர் வாயடைத்துப் போய்விட்டார்.

மீண்டும் சுயநினைவு வந்ததும், அவர் கூறினார்: “நான் பேரொளிமயமான, போற்றுதலனைத்திற்குமுரிய இறைவனை உண்மையாக நம்புகின்றேன்.

” “மக்களிடம் சென்று இவ்வாறு கூறும்: ‘ நீங்கள் விரும்பியது எதுவாயினும், கேளுங்கள்.

தான் விரும்பியதைச் செய்திடும் ஆற்றலுடையவர் அவர்.

கடந்த காலத்தவையோ, எதிர்காலத்தவையோ, அவை எவையுமே அவரது விருப்பத்தைச் செயலற்றுப் போகச் செய்ய இயலா.

‘கூறுவீராக: ‘மதகுருமார் கூட்டத்தினரே! நீங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுங்கள்; அதனை உங்களுக்கு வெளிப்படுத்துமாறு கருணைமிக்கக் கடவுளான உங்கள் பிரபுவைக் கேளுங்கள்.

அவர், தனது மாட்சிமையின் சக்தியைக் கொண்டு உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்திடுவாராயின், அவரில் நம்பிக்கைக் கொள்ளுங்கள்; அவரை நிராகரிப்போரில் சேர்ந்திடாதீர்.

’ “அவர், “புரிந்துணர்வு என்னும் அதிகாலைப் புலர்ந்து விட்டது; கருணைமயமானவரின் சான்று பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது.

” எனக் கூறினார்.

பேரொளிமயமான, நன்கு நேசிக்கப்படுபவரான இறைவனின் கட்டளைக்கிணங்க அவர் எழுந்து, தன்னை அனுப்பியவர்களிடம் திரும்பிச் சென்றார் நாள்கள் பல கடந்தன; அவர் எம்பால் திரும்பி வரவே இல்லை.

இறுதியில், வேறொரு தூதர் எம்மிடம் வந்து, ஆரம்பத்தில் அவர்கள் கொண்டிருந்த நோக்கத்தைக் கைவிட்டுவிட்டனரெனக் கூறினார்.

உண்மையிலேயே அவர்கள் வெறுக்கத்தக்க மனிதர்கள்.

ஈராக்கில் நடந்தது இதுவே; நான் வெளியிடுவதற்கு நானே சாட்சி.

இச்சம்பவம் வெளியிடங்களில் எல்லாம் பரவலாகத் தெரியவந்தது, இருந்தும், அதன் அர்த்தத்தினைப் புரிந்திட்டோர் எவரையுமே காணவில்லை.

யாம் அவ்வாறுதான் விதித்திருந்தோம்.

இதனை நீங்கள் அறிந்திடக் கூடுமாக.

எமது மெய்ம்மை சாட்சியாக! கடந்த காலங்களில், எவரெல்லாம் எம்மை இறைவனின் அடையாளங்களைக் காண்பிக்குமாறு கேட்டனரோ, அவர்கள், யாம் அவற்றை வெளிப்படுத்தியதுதான் தாமதம், அக்கணமே இறைவனின் மெய்ம்மையையே மறுத்து விட்டுள்ளனர்.

இருப்பினும், மனிதர்கள், பெரும்பாலும், கவனமற்றே இருந்திட்டனர்.

எவரது கண்கள் புரியுந் திறனெனும் தீபத்தினால் ஒளிர்விக்கப்பட்டுள்ளனவோ, அவர்கள், கருணைமயமானவரின் இனிய நறுமணத்தினை அறிந்து உண்மையை ஏற்றுக்கொள்வர்.

, உண்மையில் இவர்களே தூய உள்ளம் படைத்தோர் .

LXVIII

எனது விருட்சத்தின் கனிகளும் இலைகளும் ஆனோரே! எனது ஒளியும் கருணையும் உங்கள் மீதே இலயித்திடுமாக.

உங்களுக்கு நிகழ்ந்தவற்றிற்காக உங்கள் உள்ளங்களை வருத்தமடையச் செய்ய விட்டிடாதீர்.

வாழ்க்கை என்னும் நூலின் பக்கங்களைப் புரட்டி ஆராய்ந்திடுவீராயின், நீங்கள், நிச்சயமாக, கவலைகளைச் சிதறடிக்கக் கூடியவற்றையும், உங்கள் மனவேதனையைப் போக்கிடக் கூடியவற்றையும் தெரிந்து கொள்வீர்.

எனது விருட்சத்தின் கனிகளே, மாட்சிமைமிகு ஆணையாளரின் நியதிப்படி, விதி, ஊழ்வினை ஆகியவை இரண்டு வகைப்படும்.

இரண்டுமே கடைப்பிடிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் படவேண்டும்.

முதலாவது, மாற்றப்படவியலாதது; மற்றது, மனிதரின் கூற்றுப்படி, எக்கணமும் நடக்க விருப்பவை.

முதலாவதற்கு யாவரும் எவ்வித மறுப்புமின்றிக் கீழ்ப்படிய வேண்டும், ஏனெனில் அது நிலையானது, முடிவானது.

இருப்பினும், இறைவனால் அதனை மாற்றவோ, ரத்துச் செய்யவோ முடியும்.

அத்தகைய மாற்றத்தினால் விளையும் கேடு, அக்கட்டளை மாற்றப்படாமல் இருந்திருந்தால் விளைவதைவிட அதிகமானதாய் இருக்கும்.

ஆகவே, அனைவரும், இறைவன் விதித்துள்ளவற்றிற்கு மறுப்பின்றி உடன்படவும், அவற்றுக்கு நம்பிக்கையோடு கீழ்ப்படியவும் வேண்டும்.

இருப்பினும், எக்கணமும் நடக்க விருப்பதைக் குறித்த கட்டளையைத் தவிர்ப்பதில் பிரார்த்தனையும் இறைஞ்சுதலும் வெற்றி பெற முடியும்.

எனது விருட்சத்தின் கனிகளான நீங்களும், உங்களுடன் தொடர்புடையவர்களும், அதன் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்கப் பட இறைவன் அருள்புரிவாராக.

கூறுவீராக: கடவுளே, என் கடவுளே! நீர், உம்மிடமிருந்து ஒரு பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தீர்; உமது திருவிருப்பத்தின் நன்மகிழ்வுக்கிணங்க அதனை நீரே திரும்பவும் எடுத்துக் கொண்டீர்.

உமது பணிப் பெண்ணாகிய எனக்கு, இது எங்கிருந்து வந்தது, எக் காரணத்தினால் அது நிகழ்ந்தது எனக் கூறுவது பொருத்தமன்று; ஏனெனில், உமது செயல்களனைத்திலும் மேன்மைப்படுத்தப்பட வேண்டியவர் நீரே; உமது கட்டளை அடிபணியப்பட வேண்டியதே.

என் பிரபுவே, உமது பணிப்பெண்ணான இவள் உமது அருளிலும் வள்ளன்மையிலும் நம்பிக்கை வைத்துள்ளாள்.

அவளை உம்பால் ஈர்க்கச் செய்யக் கூடியதனையும், உமது உலகங்கள் ஒவ்வொன்றிலும் அவளுக்கு நன்மையளிக்கக் கூடியதனையும், அவளுக்கு அருள்வீராக; மன்னிப்பவரும், வள்ளன்மையே உருவானவரும் நீரே ஆவீர்.

விதித்திடுபவரும், நாள்களுக்கெல்லாம் ஆதியானவருமாகிய கடவுள் உம்மையன்றி வேறெவருமிலர்.

பிரபுவே, என் இறைவா, மனிதர்களின் முகத்துக்கு முன் உமது அன்பெனும் மதுரசத்தினைப் பருகிட்டோருக்கும், மேலும் உமது பகைவர்களையும் பொருட்படுத்தாது, உமது ஒருமைத்தன்மையை ஒப்புக் கொண்டுள்ளோருக்கும், உமது ஒருமைப்பாட்டிற்குச் சாட்சியமளித்தோருக்கும், உமது உயிரினங்களிடையே இருக்கும் கொடுமைப் படுத்துவோரின் அங்கங்களை அதிர்ச்சியுறச் செய்யக்கூடியதன் மீதும் உலகினில் செருக்குடையோரின் தசையை நடுங்கச்செய்யக் கூடியதன் மீதும் தங்களின் நம்பிக்கையை ஒப்புக்கொண்டோருக்கும் உமது ஆசீர்வாதங்களை வழங்கிடுவீராக.

உமது மாட்சிமை என்றுமே அழியாதென்பதற்கும், உமது விருப்பம் மாற்றப்பட மாட்டாது என்பதற்கும் நான் சாட்சியம் அளிக்கின்றேன்.

தங்களின் முகங்களை உம்பால் திருப்பியுள்ளோருக்கும், உமது கயிற்றினை இறுகப் பற்றிக் கொண்டுள்ள உமது பணிப்பெண்களுக்கும் உமது வள்ளன்மை என்னும் கடலைப் போன்றதனையும், உமது அருள் என்னும் சுவர்க்கத்தைப் போன்றதனையும் விதித்திடுவீராக.

என் இறைவா, செல்வத்திற்கு அதிபதியென தன்னைத் தானே பிரகடனஞ் செய்து கொண்டும், தனக்குச் சேவை செய்யும் மற்றனைவரையும் வறியோர் என்றும் ஏழை என்றும் வருணித்திடுபவரும் நீரே.

நீர் எழுதியுளள்ளதுபோல்: “நம்பிக்கை உடையோரே! இறைவன் உங்களுக்குத் தேவைப்படும் வறியோர் நீங்கள்; ஆனால் இறைவனோ சகலத்தையும் கொண்டுள்ளவர், போற்றுதல் அனைத்திற்கும் உரியவர்.

” எனது ஏழ்மை நிலையை ஒப்புக்கொண்டு, உமது அளவிலாத செல்வங்களை அங்கீகரித்துள்ள என்னை, உமது செல்வத்தின் ஒளியிலிருந்து தடைச்செய்திடாதீர்.

மெய்யாகவே, நீரே அதி உயரிய பாதுகாவலர், சர்வ ஞானி, சர்வ விவேகி.

LXIX

“ச” என்னும் பூமியில் (சன்ஜான்) தனது உயிரைத் தியாகம் செய்திட்ட அஷ்ராபினுடைய தாயாரின் நடத்தையை மனதில் நினைவுக்கூர்ந்திடுங்கள்.

அவன், நிச்சயமாகவே, மெய்ம்மை என்னும் ஆசனத்தின் மீதும், அதி சக்திவாய்ந்த, எல்லாம் வல்லவரான, அவரது முன்னிலையிலும் இருக்கின்றான்.

சமய நம்பிக்கையற்றோர், அநீதியாக, அவனது உயிரைப் போக்க முடிவெடுத்தனர்; அவனது தாயார், அவனுக்கு அறிவுரைக் கூறி, ஒருவேளை அவனைத் தனது சமயத்தைக் கைவிடுமாறு தூண்டக் கூடுமென்றும், உலகங்களுக்கெல்லாம் பிரபுவான இறைவனின் மெய்ம்மையை மறுத்துள்ளோரான அவர்களின் வழியைப் பின்பற்றச் செய்திடக் கூடுமென்றும் எண்ணி, அவர்கள், அவளை அழைத்துவரச் செய்தனர்.

அவள் தனது மைந்தனின் முகத்தைப் பார்த்த அக்கணமே, இறைவனின் நேசர்களின் உள்ளங்களையும், அதற்கப்பால், உயர்விலுள்ள வான்படையினரையும் துயரத்தினால் கண்ணீர் விட்டுக் கதறச் செய்யக் கூடிய அத்தகையச் சொற்களை உதிர்த்திட்டாள்.

உண்மையாகவே, எனது நா கூறியதனை உனது பிரபு அறிந்திருக்கின்றார்.

எனது வார்த்தைகளுக்கு அவரே சாட்சி பகர்கின்றார்.

அவனிடம் பேசும் பொழுது அவள் கூறினாள்: “என் மகனே, எனக்குரிய மகனே! உனது பிரபுவின் பாதையில் நீ உன்னையே தியாகம் செய்யத் தவறிவிடாதே.

கவனமாய் இரு; எவரது முன்னிலையில், விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும் உள்ளோர் அனைவருமே பக்தியினால் தலை குனிந்திடுகின்றனரோ, அவருக்கு உனது விசுவாசத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்திடாதே.

என் மகனே, நேராக முன்னேறிச் செல்; உனது இறைவனான பிரபுவின் பாதையில் கடும் முயற்சி செய்திடு.

அனைத்து உலகங்களின் அதி நேசரான அவரது முன்னிலையை நோக்கி விரைந்திடு.

” எனது ஆசீர்வாதங்களும், எனது கருணையும், எனது போற்றுதலும், எனது பேரொளியும் அவள்மீது இலயித்திடுமாக.

அவளது மைந்தனின் இழப்பிற்கு நானே பிராயச்சித்தம் செய்திடுவேன் - இப்பொழுது எனது மாட்சிமை, பேரொளி ஆகியவையெனும் திருக்கூடாரத்தினில் வசித்திடும் அவனது முகத்தின் மகிழ்ச்சியளி, அதன் பிரகாசத்தினால் தெய்வீக அந்தப்புறத்திலுள்ள விண்ணுலகக் கன்னிகளையும், அவர்களுக்கும் அப்பால், எனது சுவர்க்கத்தின் வாசிகளையும், புனிதத்தன்மை என்னும் மாநகரங்களின் குடிகளையும் சூழ்ந்துள்ளது.

அவனது முகத்தை ஒருவரது கண் உற்று நோக்கிடுமாயின், அவர்: “இவன் புனித தேவதூதனேயல்லாது வேறிலன்!” என வியப்புக் குரல் எழுப்பிடுவார்.

LXX

அதி சிறந்த இப்புதிய உலக அமைப்பின் இயக்கத்தின் நடுக்கமுறச் செய்திடும் பாதிப்பினால் உலகின் சமநிலையே சீர்கேடடைந்துள்ளது.

இணையற்ற, அற்புதமிக்க இவ்வமைப்பு முறையின் செயற்பாட்டினால், மனித இனத்தின் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ள வாழ்க்கை பெரும் மாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அமைப்பு முறையை மானிடக் கண்கள் இதுவரைகண்டதே கிடையாது.

எனது வார்த்தைகள் என்னும் சமுத்திரத்தினுள் உங்களை மூழ்கச் செய்வீராக.

அதனால் நீங்கள், அதன் மர்மங்களை வெளிப்படுத்தி அதன் ஆழத்தில் மறைந்து கிடக்கும் ஞான முத்துக்களைக் கண்டு பிடிக்கக் கூடும்.

கவனமாய் இருங்கள், இந்தச் சமயத்தின் மெய்மையினைத் தழுவுவதற்கான தீர்மானத்தில் தயக்கங் காட்டிடடப் போகின்றீர்.

அதன் மூலம் இறைவனது சக்தியின் ஆற்றல்கள் வெளிப்படுத்தப் பட்டு, அவரது மாட்சிமையும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சிப்பொங்கும் முகங்களுடன் அவர்பால் விரைவீராக; இதுவே இறைவனின் மாறாத சமயம்; கடந்த காலத்திலும் நிலையானது; வருங்காலத்திலும் நிலையானது.

அதனைத் தேடுபவர், அடையட்டும்; அதனைத்தேட மறுத்தவரைப் பொறுத்தமட்டில் - மெய்யாகவே, இறைவன் தன்னிறைவுடையவர்; தனது உயிரினங்களிடமிருந்து எதையுமே நாடத் தேவை இல்லாதவர்.

கூறுவீராக: நீங்கள், நம்பி இவ்வுண்மையை உணரக்கூடியோரில் சேர்ந்தோராயின், இதுவே இறைவனின் கை பிடித்துள்ள தவறில்லாத துலாக்கோல்.

அதனில்தான் விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும் உள்ளோர் அனைவரும் எடை பார்க்கப்பட்டு, அவர்களது விதியும் நிர்ணயிக்கப்படுகின்றது.

கூறுவீராக: அதன் மூலம் ஏழைகள் செல்வராக்கப்பட்டுள்ளனர்; கற்றோர் தெளிவுப் பெற்றுள்ளனர்; தேடுவோர், ஆண்டவனின் முன்னிலையின்பால் உயர்ந்திட உதவப் பட்டுள்ளனர்; கவனமாய் இருங்கள், இல்லையெனில், அதனை, உங்களிடையே, கருத்து வேற்றுமைக்குக் காரணமாக்கிடப் போகின்றீர்.

வல்லமை பொருந்தியவரும், அன்புமிக்கவருமான உங்களது பிரபுவின் சமயத்தில் நீங்கள், உறுதியாய் நிலைப்படுத்தப்பட்டுள்ள அசைக்கவியலாத பர்வதத்தைப் போல் இருப்பீராக.

LXXI

உலக மக்களே, எனது திருவழகு என்னும் பகல் நட்சத்திரம் அஸ்தமித்து, எனது திருக்கூடாரம் என்னும் சுவர்க்கம் உங்கள் பார்வையிலிருந்து மறைக்கப்படுமாயின் மனக்கலக்கமடையாதீர்.

எழுந்து, எனது சமயத்தை முன்னேறச் செய்யுங்கள்; எனது திருமொழியினை மனிதரிடையே மேன்மையடையச் செய்யுங்கள்.

எல்லா வேளைகளிலும் யாம் உங்களுடனேயே இருக்கின்றோம்; மெய்ம்மையின் சக்தியின் மூலமாக உங்களைப் பலப்படுத்துவோம்.

உண்மையாகவே, யாம், எல்லாம் வல்லவர்.

எவரொருவர் எம்மை அறிந்துகொள்கின்றாரோ, அவர், மண்ணுலக, விண்ணுலகச் சக்திகள் அனைத்துமே, தனது நோக்கத்தினைத் தோல்வியுறச் செய்யவியலாத அளவு, மன உறுதியுடன் எழுந்து எமக்குச் சேவை செய்திடுவார்.

உலக மக்கள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள், தங்களின் உறக்கத்திலிருந்து விழிப்புறுவராயின், மிக்க ஆவலுடன், சகலத்தையும் அறிந்த, சர்வ விவேகியான இறைவன்பால் விரைந்திடுவர்.

அவர்களின் பிரபுவானவர் அவர்களிடம் ஒரேயரு வார்த்தை மட்டுமே கூறிடுமளவு தங்களை நினைவுக்கூர்ந்திடுவாராயின், அதன் பொருட்டு, அவர்கள், தாங்கள் கொண்டுள்ளவை அனைத்தையுமே, அவை இவ்வுலகின் சொத்துக்கள் அனைத்துமாய் இருந்திட்ட போதிலும், அவற்றை அப்பால் வீசி எறிந்திடுவர்.

அவ்வாறானதுதான், படைப்பின் கண்ணே பார்த்திராத நிருபம் ஒன்றினில் மறைபொருள்களின் அறிவினைக் கொண்டிருப்பவரான அவரால் வழங்கப்பட்டுள்ள கட்டளை; அது உலகங்கள் அனைத்தின் சர்வ சக்தி வாய்ந்த, பாதுகாவலரான, தன் ஒருவருக்கு மட்டுமே அல்லாது வேறவருக்குமே வெளிப்படுத்தப்படுவதில்லை.

தங்களின் தீய ஆசை என்னும் போதையில் அவர்கள் அத்துணைக் குழப்பம் அடைந்திருந்ததனால், உயிருருவின் பிரபுவாகிய அவரை அறிந்துகொள்ளும் சக்தி அற்றிருக்கின்றனர்; ஒவ்வொரு திசையிலிருந்தும் அவரது குரல் உரக்க: “வல்லமை மிக்கவரும், சர்வ விவேகியுமான எம்மை அல்லாது இறைவன் வேறெவரும் இலர்” என அழைப்பு விடுக்கின்றது.

கூறுவீராக: நீங்கள் கொண்டிருக்கும் பொருள்களில் மகிழ்வுறாதீர்; இன்றிரவு அவை உங்களுடையவை; நாளை அவற்றை மற்றவர்கள் உடைமையாக்கிக் கொள்வர்.

இவ்வாறுதான், சர்வமும் அறிந்த, யாவும் அறிவிக்கப்பட்ட அவர், உங்களை எச்சரிக்கின்றார்.

கூறுவீராக: நீங்கள் கொண்டிருப்பது நிலையானது என்றோ, பாதுகாப்பானது என்றோ கூற முடியுமா? இல்லை! கருணை மயமானவராகிய என்மீது ஆணை; உங்களின் வாழ்நாள்கள், ஒரே மூச்சுக் காற்றைப் போன்று, பறந்தோடி விடுகின்றன; உங்களுக்கு முன்னால் சென்றிட்டோரின் ஆடம்பரமும் பெருமையும் எவ்வாறு சுருட்டப்பட்டு விட்டனவோ அவ்வாறே சுருட்டப்படும் உங்களின் ஆடம்பரமும் பெருமையும்.

மனிதர்களே, சிந்தியுங்கள்! உங்களின் கடந்த நாள்களும், மறைந்துபோன நூற்றாண்டுகளும் என்னவாயின? இறைவனின் நினைவுக்காக அர்ப்பணம் செய்யப் பட்ட நாள்களே மகிழ்ச்சி மிக்கவை; சர்வ விவேகியான அவரைப் போற்றுவதில் செலவிடப்பட்ட நேரம் பேறு பெற்றது.

என் உயிரின் மீது ஆணை! வல்லவரின் ஆடம்பரமோ, தனவந்தரின் செல்வமோ, இறைபக்தியற்றோரின் மேம்பாடோ, எதுவுமே நிலைத்திடாது.

அவரிடமிருந்து ஒரே வார்த்தையினால் அனைத்தும் மரித்திடும்.

மெய்யாகவே, அவரே சக்தி மயமானவர், அனைத்தையும் நிர்ப்பந்திக்க வல்லவர்; எல்லாம் வல்லவர்.

மனிதர்கள் கொண்டிருக்கும் இவ்வுலக உடைமைகளினால் அடையும் நன்மைதான் யாது? தங்களுக்கு நன்மை பயக்கக்கூடியவற்றை, அவர்கள் முற்றிலும் புறக்கணித்து விட்டுள்ளனர்.

சிறிது காலத்தில், அவர்கள் உறக்கம் கலைந்திடுவர்.

அத்தருணம், எல்லாம் வல்ல, சகல போற்றுதலுக்குமுரிய, தங்களின் பிரபுவாகிய அவரின் நாள்களில், தங்களிடமிருந்து கை நழுவிப் போய்விட்டவற்றை அடையவியலாத நிலையில், தங்களைக் காண்பர்.

அவர்கள் இதனை அறிந்தவர்களாயின், தங்களின் பெயர்கள் அவரது அரியாசனத்தின் முன் எடுத்துரைக்கப் படக் கூடும் என்பதற்காகத் தாங்கள் கொண்டுள்ள அனைத்தையுமே துறந்திடுவர்; அவர்கள், மெய்யாகவே, மாண்டோரின் எண்ணிக்கையில் சேர்க்கப் பட்டோராவர்.

LXXII

எனது முன்னிலை என்னும் ஒளி மறைந்து, எனது வெளிப்பாடு என்னும் சமுத்திரம் ஓய்ந்து போகுமாயின் மனங் கலங்காதீர்.

உங்கள் மத்தியில் எனது இருத்தலில் ஒரு விவேகமுண்டு, எனது இன்மையிலும், ஒப்பற்ற, சர்வ ஞானியான இறைவனைத் தவிர வேறு எவரும் புரிந்துகொள்ள இயலாத வேறொரு விவேகமும் உண்டு.

மெய்யாகவே, யாம் உங்களை ஒளி என்னும் இராஜ்யத்திலிருந்து கண்ணுறுகின்றோம்.

எமது சமயத்தின் வெற்றிக்காக எழுந்திடும் ஒவ்வொருவருக்கும் உயர்விலுள்ள வான்படையினரைக் கொண்டும், எமது அன்புக்குப் பாத்திரமான தேவ கணங்களின் கூட்டத்தைக் கொண்டும், உதவிடுவோம்.

உலக மக்களே! கட்டுப்படுத்த இயலாத உங்கள் பிரபுவினால் திருவாய் மொழியப்பட்டுள்ள வார்த்தைகளின் இனிமையின் வாயிலாக, கற்பாறைகளிலிருந்து, தூய, மிருதுவான நீர், அருவிகளாகப் பீறிட்டு வழிகின்றது என்பதற்கு நித்திய மெய்ம்மையாகிய ஆண்டவனே எனக்குச் சாட்சி; இருந்தும் நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்.

நீங்கள் கொண்டிருப்பவற்றை அப்பால் எறிந்துவிட்டு, பற்றின்மை என்னும் இறக்கையினைக் கொண்டு, படைப்புப் பொருள்களுக்கு மேல் உயர்ந்தெழுவீராக.

இவ்வாறுதான் படைப்பிற்கெல்லாம் பிரபுவாகிய அவர் உங்களுக்குக் கட்டளையிடுகின்றார்; அவரது எழுதுகோலின் இயக்கம் மனித இனத்தின் ஆன்மாவையே முற்றிலும் புரட்சியான மாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.

உங்களின் ஒளிமயமான பிரபுவானவர் எத்துணை உயரத்திலிருந்து உங்களை அழைக்கின்றார் என்று உங்களுக்குத் தெரியுமா? நாமங்கள் அனைத்திற்கும் அதிபதியாகிய உங்கள் பிரபுவானவர், எந்த எழுதுகோலைக் கொண்டு உங்களுக்குக் கட்டளையிடுகின்றார் என்பதை அறிந்து கொண்டுவிட்டீர் என நினைக்கின்றீரா? இல்லை, எமது உயிரின் மீது ஆணை! நீங்கள் அதனை அறிந்திருப்பீராயின், இவ்வுலகையே துறந்து, முழுமனதுடன், பேரன்புக்கு உரியவராகிய அவரது முன்னிலையை அடைய விரைந்திடுவீர்.

அவரது திருமொழியினால், உங்களின் ஆன்மா, மாபெரும் உலகினையே குழப்பத்தில் ஆழ்த்திடும் அளவு, மகிழ்ச்சியினால் பரவசமடையும் என்றால் - இச்சிறியதும் அற்பமானதுமாகிய இது எம்மட்டு! எனது அருளின் அடையாளமாக, எனது வள்ளன்மையின் மழை என்னும் சுவர்க்கத்திலிருந்து எனது அன்புக்கருணை பொழியச் செய்யப்பட்டுள்ளது; அதன் நோக்கம், நீங்கள் நன்றி உடையோராய் இருக்கவேண்டும் என்பதுதான்.

கவனமாய் இருங்கள், இல்லையெனில், உடலாசைகளும் இழிவு மனப்பான்மையும் உங்களிடையே பிளவுகளைத் தூண்டிடப் போகின்றன.

நீங்கள் ஒரே கையின் விரல்களைப் போலவும், ஒரே உடலின் அங்கங்களைப் போலவும் இருப்பீராக.

நீங்கள் நம்பிக்கை உடையோராயின், வெளிப்படுத்தும் எழுதுகோல் இவ்வாறுதான் உங்களுக்கு அறிவுரை பகர்கின்றது.

இறைவனின் கருணையையும் அவரது அன்பளிப்புகளையும் எண்ணிப் பாருங்கள்.

அவர் விரும்பினால், உயிரினங்கள் அனைத்தையுமே புறக்கணித்திட இயலும்; இருந்த போதிலும், அவர் உங்களுக்கு நன்மை பயக்கவல்லதனையே உங்களுக்காக விதித்துள்ளார்.

உங்களின் தீயச் செயல்கள் எமக்குத் தீங்கு விளைவிக்க இயலாது.

அதே போன்று உங்களின் நற்செயல்களும் எமக்கு நன்மையளிக்க வியலாது.

இறைவனின் பொருட்டே யாம் உங்களுக்கு அழைப்பாணை விடுக்கின்றோம்.

புரிந்துணர்வும் அகநோக்கும் கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனும் இதற்குச் சாட்சியம் அளித்திடுவான்.

LXXIII

இறைவனின் நாமங்கள், பண்புகள், ஆகியவற்றின் வெளிப்படுத்துதல்களான மெய்ம்மைகளை மறைத்துள்ள திரைகள் கிழிக்கப்பட்டு, கண்ணுக்குப் புலனாகும், புலனாகா படைப்புப் பொருள்கள் அனைத்துமே பிளவுறவும் செய்யப்பட்ட போது இறைவனின் அடையாளத்தை - தானாகவே, அவர் எல்லா மெய்ம்மைகளினுள்ளும் வைத்துள்ள அவ்வோர் அடையாளத்தைத் தவிர - வேறெதுவுமே எஞ்சியிராதென்பது, ஐயமறத் தெளிவாகின்றது.

அது, விண்ணுலகங்களுக்கும் மண்ணுலகுக்கும் பிரபுவாகிய, உங்களின் பிரபுவானவரின் விருப்பமாய் இருந்திடும்வரை, இவ்வடையாளம், தொடர்ந்து நீடித்திடும்.

படைப்புப் பொருள்களனைத்திற்கும் வழங்கப்படுகின்ற ஆசீர்வாதங்கள் அத்தகையவையாகில், உண்மை நம்பிக்கையாளர்களின் - அவர்களின் இருத்தலும் உயிர் வாழ்தலுமே படைப்பனைத்தின் தோற்றத்திற்கு அடிப்படை நோக்கமாகக் கருதப்படும்பொழுது - எத்துணை உயரியதாக இருக்கக் கூடும் அவர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஆசீர்வாதங்கள்.

எவ்வாறு, ஆரம்பமில்லாத ஆரம்ப முதல் முடிவுமில்லா முடிவு வரை நம்பிக்கையென்பது இருந்தே வந்திருக்கின்றதோ, அதே போன்று, உண்மை நம்பிக்கையாளர் என்றென்றும் வாழவும் செய்வார், நீடிக்கவும் செய்வார்.

அவரது ஆவியானது என்றென்றும் இறைவனின் விருப்பத்தினை வலம் வந்தவாறே இருந்திடும்.

இறைவன் இருக்கும் வரை அவரும் தொடர்ந்து இருந்தே வருவார்.

இறைவனின் வெளிப்பாட்டின் மூலமே அவர் வெளிப்படுத்தப் படுகின்றார்; அவரது கட்டளைக் கிணங்கவே மறைக்கவும் படுகின்றார்.

நித்தியம் என்னும் இராஜ்ஜியத்தினில் இருக்கும் அதி உயரிய மாளிகைகள், இறைவனிலும் அவரது அடையாளங்களிலும் உண்மையான நம்பிக்கை கொண்டோருக்கும், உறைவிடமாக நியமிக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகின்றது.

அப்புனித ஆசனத்தை மரணம் தாக்கவே இயலாது.

அவர்பால் உங்களின் அன்பில் நீங்கள், விடா முயற்சி செய்து, இவ்வுண்மையைப் புரிந்து கொள்வோர் ஆகவேண்டும் என்பதற்காகவே, யாம், உங்கள் பிரபுவின் அடையாளங்களை, உங்களிடம் ஒப்படைத்துள்ளோம்.

LXXIV

நீங்கள் இவ்வுண்மையைப் புரிந்துகொள்ளக் கூடியோராயின், இறைவனின் திருவாயினின்று வெளிவரும் ஒவ்வொரு திருச்சொல்லுக்கும், மனிதவுடல் ஒவ்வொன்றினுள்ளும் ஒரு புதிய உயிரைப்புகட்டக்கூடிய அளவு ஆற்றல் வழங்கப் பெற்றள்ளது.

நீங்கள் இவ்வுலகினில் காணும் வியத்தகு சாதனைகள் அனைத்தும் அவரது தலைசிறந்த, அதி மேன்மையான விருப்பமும், அவரது வியக்கத்தக்கதும் அசைக்கவியலாததுமான குறிக்கோள் ஆகியவற்றின் இயக்கத்தின் மூலமுமே புலனாக்கப்பட்டவையாகும்.

“உருவாக்குவோன்” என்னும் ஒரே வார்த்தையின் சாதாரண வெளிப்படுத்தலின் மூலமாக, அது அவரது உதடுகளிலிருந்து வெளிவந்து, மனித இனத்திற்கு, அவரது பண்புகளைப் பிரகடனம் செய்ததன் காரணமாக விடுவிக்கப்பட்ட சக்தியானது, அடுத்தடுத்துவந்திட்டக் காலங்களில், மனிதனின் கைகள் உண்டுபண்ணக் கூடிய சகல விதமான கலைகளையும் உருவாக்கும் அளவு ஆற்றலை வெளிப்படுத்தியது.

மெய்யாகவே இது ஒரு நிச்சயமான உண்மை.

இப்பிரகாசமிகு திருச்சொல் கூறப்பட்டதுதான் தாமதம், உடனே, அதன் உயிரூட்டும் இயக்கச் சக்தியானது, எல்லாப் படைப்புப் பொருள்களினுள்ளும் இயக்கத்தை உண்டுபண்ணி, அத்தகைய கலைகளைத் தோற்றுவிப்பதற்கும், முழுமைப் பெறச் செய்வதற்குமான வழிமுறைகளையும் சாதனங்களையும் உண்டாக்கிற்று; இப்பொழுது நீங்கள் கண்ணுறும் அதிசயமிக்கச் சாதனைகள் அனைத்தும் இந்நாமத்தின் வெளிப்படுத்துதலின் விளைவுகளேயாகும்.

வருங்காலத்தில் நீங்கள், மெய்யாகவே, முன்பு கேட்டிராதவற்றைக் கண்ணுறுவீர்.

இவ்வாறாகத்தான், அது, இறைவனின் நிருபங்களில் விதிக்கப்பட்டுள்ளது; கூரிய கண்பார்வை உடையோரைத் தவிர மற்றெவருமே அதனைப் புரிந்துகொள்ள இயலாது.

அதே போன்று, “சர்வஞானி” என்னும் எனது தன்மையினைக் குறிக்கும் சொல் எனது வாயினின்று வெளிப்பட்ட அக்கணமே, ஒவ்வொரு படைப்புப் பொருளும், அதனதன் திறமைக்கும் வரையறைக்கும் உட்பட, அதியற்புதமான அறிவியல் ஞானங்களை வெளிக் கொணர்வதற்கான சக்தி வழங்கப் பெற்று, காலப் போக்கில், சர்வசக்தி வாய்ந்தவரும் சர்வஞானியுமான அவரது கட்டளைக்கிணங்க, அவற்றைப் புலப்படுத்திடும் சக்தியும் வழங்கப்படும்.

மற்ற நாமங்கள் ஒவ்வொன்றின் வெளிப்படுத்துதலும், அதேபோன்றதொரு தெய்வீகசக்தியின் தோற்றத்தினால் தொடரப் படும் என்பதை, நீங்கள், நிச்சயமாக அறிந்திடுவீராக.

இறைவனின் திருவாயினின்று தோன்றிடும் ஒவ்வோர் எழுத்தும், உண்மையிலேயே, ஒரு தாயெழுத்தாகும்; தெய்வீக வெளிப்பாட்டின் பகலூற்றாகிய அவரால் கூறப்படும் ஒவ்வொரு சொல்லும் ஒரு தாய்ச்சொல்லாகும்; அவரது நிருபமும் ஒரு தாய் நிருபமாகும்.

இவ்வுண்மையைப் புரிந்து கொள்வோருக்கு இது மிக்க நன்று.

LXXV

உங்களின் பார்வையைப் படுமோசமாக மறைத்துள்ள திரையை, எனது பெயரால், கிழித்தெரியுங்கள்; இறைவனின் ஒருமைத் தன்மையில் உங்களுக்குள்ள நம்பிக்கையினின்று பிறந்திட்ட சக்தியின் மூலம் பொருளற்றப் போலி உருவங்களைச் சிதறடியுங்கள்.

பின்பு, கருணை மயமானவரின் நல்விருப்பம் என்னும் தெய்வீகச் சுவர்க்கத்தினுள் பிரவேசியுங்கள்.

எவையெல்லாம் இறைவனுடையவை இல்லையோ, அவற்றில் இருந்து உங்களின் ஆன்மாக்களைத் தூய்மைப் படுத்திக் கொள்ளுங்கள்; பரந்துவிரிந்ததும் சக்தி மிக்கதுமான அவரது வெளிப்பாடு என்னும் எல்லைக்குள்ளும், அதி சிறந்ததும் தவறாததுமான அவரது அதிகாரத்தின் நிழலின் கீழும், ஓய்வின் இனிமையினை அனுபவித்திடுங்கள்.

உங்கள் ஒவ்வொருவரின் உள்ளேயும் நான் எனது படைப்பை முழுமைப் பெறச் செய்துள்ளேன்; அதனால் நீங்கள், உங்களின் சுயநல ஆசைகள் என்னும் தடிப்பான திரைகளைக் கொண்டு, உங்களை மறைத்துக் கொண்டிடாதீர்; அதன்வழி, எனது கைவேலையின் சிறப்பு மனிதர்களுக்குப் பூரணமாக வெளிப்படுத்தப்படாமல் இருந்திடப் போகின்றது.

அதனால் ஒவ்வொரு மனிதனும், ஆண்டவனின் மகிமைப்படுத்தப்பட்ட அழகினைத் தானாகவே புரிந்து பாராட்ட முடிந்து வந்திருக்கின்றது; தொடர்ந்தும் அவ்வாறே முடிந்து வரும்.

அத்தகைய ஆற்றல் அவனுக்கு அளிக்கப்பட்டிருக்கவில்லையெனில், எங்ஙனம், அவன், தன் தவறுக்குக் காரணங்கூற அழைக்கப்பட முடியும்? உலக மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரட்டப்படவிருக்கும் அந்நாளில் எந்த மனிதனாவது இறைவனின் முன்னிலையில் நிற்கும் பொழுது.

“நீ ஏன் எனது அழகினில் நம்பிக்கைக் கொள்ளாது என்னிடம் இருந்து அப்பால் திரும்பிக் கொண்டாய்” எனக்கேட்கப்படும் வேளையில், அந்நபர் “எல்லா மனிதர்களும் அதனில் தவறிவிட்டுள்ளதனாலும், தங்களின் முகத்தை மெய்ம்மையின்பால் திருப்ப விரும்புகின்றவர் ஒருவர் கூட காணப்பட வில்லை என்பதனாலும், நானும், அவர்களின் உதாரணத்தைப் பின்பற்றி, நித்தியத்தின் அழகினை அறிந்துகொள்ள கடுமையாகத் தவறிவிட்டுள்ளேன்” எனப் பதிலளித்தால், அவ்வாதம் நிச்சயமாக நிராகரிக்கப்படும்.

ஏனெனில் எந்த ஒரு மனிதனின் நம்பிக்கைக்கும் அவனைத்தவிர வேறெவரும் பொறுப்பேற்க முடியாது.

இது எனது வெளிப்பாட்டில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள அடிப்படை உண்மைகளுள் ஒன்றாகும்; அவ்வுண்மையைத் தான் நான் எல்லாத் தெய்வீகத் திருநூல்களிலும் வெளிப்படுத்தி இருக்கின்றேன்; நான், அதனை, மகிமை என்னும் நாவினால் மொழியப் படவும், சக்தி என்னும் எழுதுகோலினால் பொறிக்கப் படவும் செய்துள்ளேன்.

அதனைக்குறித்துச் சற்றுச் சிந்தித்துப்பார்; அதனால், நீ, உனது அகக் கண்ணையும், புறக்கண்ணையும் கொண்டு தெய்வீக விவேகத்தின் மதிநுட்பத்தை உணர்ந்து, தெய்வீக அறிவெனும் இரத்தினங்களைக் கண்டிடக் கூடும்; அதனை, நான், தெளிவான, மாசுபடுத்திடவியலாத மொழியில், தூய்மைக் கேட்டுக்கு ஆளாகவியலாத இம் மேன்மைமிகு நிருபத்தினில் வெளிப்படுத்தியுள்ளேன்; அதனால், நீ, அதி உயர்வான அரியாசனத்திலிருந்தும், கடந்து சென்றிடவியலாத விருட்சத்திலிருந்தும், நித்திய சக்தி மற்றும் மகிமை என்னும் உறைவிடத்திலிருந்தும் விலகி, வழி தவறிப் போகாதிருக்கக் கூடும்.

இறைவனின் அடையாளங்கள், தனது உயிரினங்களின் செய்கைகளுக்கு இடையே, தெளிவான, சுடரொளிமிக்கச் சூரியனைப்போல் பிரகாசிக்கின்றன.

அவரிடமிருந்து உதித்திடுபவை அனைத்தும் எப்பொழுதுமே வேறுபட்டும் மனிதர்ககளின் கண்டுபிடிப்புகளை விடச் சிறந்தவையாகவும் இருந்துவரும்.

அவரது அறிவின் உதய பீடத்தில் இருந்து எண்ணற்ற ஒளிப்பிம்பங்களான கல்விமான்கள் தோன்றியுள்ளனர்; அவரது எழுதுகோல் என்னும் விண்ணுலகினின்று கருணைமயமானவரின் மூச்சானது, மனிதரின் உள்ளங்கள், ஆன்மாக்கள் ஆகியவற்றின் மீது தொடர்ந்து வீசி வந்துள்ளது.

இவ்வுண்மையை அறிந்திட்டோர் மகிழ்வெய்துவர்.

LXXVI

எனது ஊழியனே, அணுகவியலாத, அதி உயர்வான, உனது பிரபுவின் அரியாசனத்தில் இருந்து கீழே அனுப்பி வைக்கப்படும் அதன்பால் செவி சாய்ப்பாயாக.

அவரைத் தவிர இறைவன் வேறெவரும் இலர்.

இரக்கக் குணமுள்ள, கருணைமயமான தன்னை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் உயிரினங்களைத் தோற்றுவித்துள்ளார்.

எல்லாத் தேசங்களின் நகரங்களுக்கும் தனது தூதர்களை அனுப்பியுள்ளார்; தனது நல்விருப்பம் என்னும் சுவர்க்கத்தின் நற்செய்தியினை மனிதர்களுக்கு அறிவித்து, நித்திய புனிதத்தன்மை, தலைசிறந்த பேரொளி ஆகிய நிரந்தர பாதுகாப்பெனும் விண்ணுலகின்பால் அவர்களை ஈர்த்திடவும் அவர்களுக்குப் பொறுப்பு வழங்கியுள்ளார்.

சிலர், இறைவனின் ஒளியினால் வழிகாட்டப்பட்டனர்; அவரது முன்னிலை என்னும் அரசவையை அடைந்தனர்; அமைவடக்கம் என்னும் கரத்தினின்று நித்திய வாழ்வெனும் நீரினைப் பருகினர்; அவர்கள், அவரை உண்மையாகவே அறிந்து, நம்பிக்கைக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப் பட்டனர்.

மற்றவர்கள், அவரை எதிர்த்தனர்; அதி சக்திவாய்ந்த, எல்லாம் வல்ல, சர்வ விவேகியான இறைவனின் அடையாளங்களை ஏற்க மறுத்தனர்.

பாயானின் பகல் நட்சத்திரமானது கருணையெனும் தொடுவானத்திற்கு மேல் உதித்திட்டது; ஒளிமயமானவரின் அழகாகிய அலி முஹம்மது, பாப், என்னும் சிறந்த திருவுருவில் பிரகாசித்திட்டார்; நாள்களிலெல்லாம் முதன்மையான இந்நாளில், அவற்றின் முழுநிறைவை அடையும் வரை, காலங்கள் உருண்டோடின.

சிலரால், எல்லாம் வல்லவரான, நாள்களுக்கெல்லாம் தொன்மை வாய்ந்தவரான, அவர், இறைவனுக்கெதிராக அவதூறுரைப்பவர் எனக்கண்டனம் செய்யப்பட்டார்.

மற்றவர்கள், அவரைப் புத்திசுவாதீனமற்றவர் எனக்கருதினர்; அக்குற்றச் சாட்டை, நானே, ஒரு மதகுருவின் உதடுகளிலிருந்து கேட்டிருக்கின்றேன்.

வேறு சிலரோ, தான் இறைவனின் குரல் என்னும் அவரது கூற்றினை விவாதித்து, அவரை, எல்லாம் வல்லவரின் திரு மொழிகளைத் திருடி, அவற்றைத் தன்னுடையவை என உபயோகித்திடுபவர் எனவும், அவற்றின் அர்த்தத்தைத் தவறாகப் பொருள் கொண்டு, தனக்குச் சொந்தமானவற்றுடன் கலந்தும் கொண்டுள்ளார் எனவும் இழிவுப்படுத்தினர்.

அவர்களின் வாய்கள் கூறியவற்றுக்காக உன்னதத்தின் கண் துயரத்தினால் கண்ணீர் வடித்தது; அதே வேளையில் அவர்கள், தங்களின் இருக்கைகளின் மீது இருந்தவாறு, தொடர்ந்து பெருமிதமடைந்தனர்.

“மனிதர்களே, இறைவனே எனது சாட்சி! பிரபுவாகிய அவரிடமிருந்து, உங்களின் கடவுளிடமிருந்து, உங்களின் மூதாதையரின் கடவுளிடமிருந்து, நான், ஒரு வெளிப்பாட்டுடன் உங்கள்பால் வந்துள்ளேன்.

மனிதர்களே, நீங்கள் கொண்டிருப்பவற்றைக் கண்ணுறாதீர்.

மாறாக, உங்கள்பால் இறைவன் அனுப்பி வைத்துள்ளவற்றைப் பாருங்கள்.

இதனை நீங்கள் உணரக் கூடுமாயின், நிச்சயமாகப் படைப்பு முழுவதையும் விட இதுவே உங்களுக்கு நன்று.

மனிதர்களே, மீண்டும் உற்றுக் கவனியுங்கள்; உங்களிடம் இருக்கும் இறைவனது அத்தாட்சிகளையும் ஆதாரங்களையும் எண்ணிப் பாருங்கள்; இந்நாளில், உங்கள்பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளவற்றை அவற்றுடன் ஒப்பிடுங்கள், அதனால் உண்மை, பிழையற்ற இவ்வுண்மை, உங்களுக்கு ஐயத்திற்கு இடமின்றித் தெளிவாகிடும்.

மனிதர்களே, தீயோனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிடாதீர்; கருணைமயமானவரின் சமயத்தைப் பின்பற்றி, உண்மையான நம்பிக்கைக் கொண்டோரில் சேர்ந்திடுங்கள்.

கடவுளின் வெளிப்பாட்டினை அறிந்து கொள்வதில் மனிதன் தவறுவானாயின், அவன் அடையும் பயன்தான் யாது? எதுவுமே இல்லை.

இதற்கு, சர்வ சக்தி வாய்ந்த, யாவும் அறிந்த, சர்வ விவேகியான, எனது சுய மெய்ம்மையே சான்றாகிடும்.

” அவர், அவர்களை எந்தளவு எச்சரித்தாரோ, அந்தளவு அவர்களின் பகைமையும் அதிகரித்தது; இறுதியில், அவர்கள், அவமானமிக்க, கொடூரமான முறையில் அவரது உயிரைப் போக்கினர்.

அக்கொடுமையாளர்கள் இறைவனின் சாபத்திற்காளாவர்! சிலர், அவரில் நம்பிக்கை வைத்தனர்; எமது ஊழியர்களுள் ஒரு சிலரே நன்றியுடையோராய் இருக்கின்றனர்.

இவர்களை அவர் தனது நிருபங்கள் அனைத்திலும் - இல்லை, தனது வியத்தகு நூல்களின் ஒவ்வொரு பக்கத்திலும் எச்சரித்தார்; வாக்குறுதி அளிக்கப்பட்ட வெளிப்பாட்டின் காலத்தில், தங்களை, வேறெதனிடத்தின்பாலும், அது விண்ணிலோ மண்ணிலோ இருந்திட்ட போதிலும், சரணடையாதிருக்குமாறு அவர்களை எச்சரித்தார்.

“மனிதர்களே!” அவர் கூறினார், “அவரது வெளிப்பாட்டிற்காகவே என்னை வெளிப்படுத்தினேன்; பாயான் என்னும் எனது திருநூலையும் உங்கள்பால் அனுப்பினேன்; அதன் ஒரே நோக்கம், அவரது சமயத்தின் மெய்ம்மையினை நிலைநாட்டுவதே அல்லாது வேறெதுவும் அல்ல.

இறைவனுக்கு அஞ்சுங்கள்; திருக்குரானின் மக்கள் என்னிடம் வாதிட்டது போல் நீங்களும் அவரிடம் வாதிடாதீர்.

எந்த நேரத்தில் அவரைக் குறித்து நீங்கள் கேள்விப்படினும் உடனே அவரை நோக்கி விரையுங்கள்; எதனை அவர் உங்கள்பால் வெளிப்படுத்திடினும் அவற்றைப் பற்றிக் கொள்ளுங்கள்.

அவரைத் தவிர வேறெதுவுமே உங்களுக்கு நன்மை பயக்க இயலாது.

நீங்கள், உங்களுக்கு முன்பிருந்தோர் அனைவரின் ஆதாரங்களையும் ஆரம்பத்திலிருந்து முடிவுவரையில் கொண்டுவந்திடினும், அது இயலாது.

” சில ஆண்டுகள் கடந்த பின்னர், தெய்வீகக் கட்டளை என்னும் சுவர்க்கம் பிளக்கப்பட்டது; பாப் என்னும் திரு அழகானவர், இறைவனின் நாமங்கள் என்னும் மேகங்களில், ஒரு புதிய ஆடையில் தோன்றினார்; எவரது ஒளி, படைப்புப் பொருள்கள் அனைத்தையும் சூழ்ந்ததோ, அப்பொழுதே, அதே மனிதர்கள் அவருக்கெதிராகக் கெடுநோக்குடன் எழுந்தனர்.

அவரது ஒப்பந்தத்தை மீறினர்; அவரது உண்மையை நிராகரித்தனர்; அவருடன் வாதிட்டு, அவரது அடையாளங்களைக் குறித்து குதர்க்கம் பண்ணினர்; அவரது ஆதாரங்ளைப் பொய்க்கூற்றெனப் பாவித்து, சமய நம்பிக்கையற்றோரின் கூட்டத்தில் சேர்ந்து கொண்டனர்.

இறுதியாக, அவர்கள், அவரது உயிரையே பறிக்க உறுதி பூண்டனர்.

அத்தகையதுதான் தவறென்னும் பாதையில் நெடுந் தூரம் சென்றிட்டோரின் நிலை! தங்களின் நோக்கத்தை அடைவதற்குத் தங்களின் சக்தியில்லாமையை உணர்ந்ததும், அவர்கள், அவருக்கெதிராகச் சூழ்ச்சிச்செய்ய எழுந்தனர்.

இறைவனின் சமயத்தை அவமதிக்கவும், அதற்குத் தீங்கிழைக்க முடியும் என்ற எண்ணத்துடன், அவர்கள், அவருக்கு ஊறுசெய்ய எவ்வாறு ஒவ்வோரு விநாடியும் ஒவ்வொரு புது சதித்திட்டம் தீட்டுகின்றனர் என்பதைப் பாருங்கள்.

கூறுவீராக: நீங்கள் சாபத்திற்கு ஆளாவீராக! இறைவன் சாட்சியாக! உங்களின் சதித் திட்டங்கள் உங்களை அவமானத்தில் ஆழ்த்துகின்றன.

கருணைக் கடவுளாகிய உங்களின் பிரபு உயிரினங்கள் அனைத்தையுமே தவிர்த்திட முடியும்.

அவர் கொண்டிருப்பவை எதையுமே அதிகரிக்கச் செய்யவோ குறையச் செய்யவோ அவர்களால் முடியாது.

நீங்கள் நம்பினால், உங்களின் சொந்த நன்மையின் பொருட்டே நம்பிடுவீர்; நீங்கள் நம்பாவிட்டால், நீங்களே துன்பமடைந்திடுவீர்.

சமய நம்பிக்கையற்றோரின் கையானது, என்றுமே, அவரது அங்கியின் விளிம்பினை மாசு படுத்தவியலாது.

இறைவனிடம் நம்பிக்கை வைத்துள்ள எனது ஊழியனே! எல்லாம் வல்லவரின் நேர்மைத்தன்மை சாட்சியாக! எனக்குச் சம்பவித்துள்ளவற்றின் விவரத்தை நான் உனக்கு எடுத்து உரைத்திட்டேனாகில், மனிதரின் ஆன்மாக்களும் மனங்களும் அதன் பளுவைத் தாங்கக்கூடிய திறமையை இழந்திடும்.

இறைவனே எனக்குச்சாட்சி பகர்கின்றார்.

விழிப்புடன் இருப்பாயாக; இம் மனிதர்களின் காலடிகளைப் பின்பற்றாதே.

உனது பிரபுவின் சமயத்தைக் குறித்துக் கடுமையாகத் தியானித்திடு.

அவரது மெய்ம்மையினைக் கொண்டே அவரை அறிந்து கொள்ள கடுமுயற்சி செய்; மற்றவர்களின் மூலமல்ல.

ஏனெனில், அவரைத் தவிர வேறு எவராலும் உனக்கு நன்மை பயக்கவியலாது.

அதனை நீ, உணர முடியுமாயின், படைப்புப் பொருள்கள் அனைத்துமே அதற்குச் சாட்சி பகர்ந்திடும்.

ஒளிமயமான, அதி சக்திமிக்கவரான, உனது பிரபுவின் அனுமதிக்கிணங்க நீ, திரைக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டு, விண்ணுலகங்களிலும், மண்ணுலகிலும் உள்ளோரின் கண்களுக்கு முன்பாக, இறவாமை என்னும் கிண்ணத்தைப் பற்றிக்கொண்டு, அணுகிடவியலாத, அதி மேன்மைமிகு உனது பிரபுவின் பெயரால், வேண்டுமளவு பருகுவாயாக; தாமதிப்போரில் சேர்ந்திடாதே.

இறைவன் மீது ஆணையிடுகின்றேன்! அக்கிண்ணத்தை நீ உனது உதடுகளினால் தொட்டவுடனேயே, உயர்விலுள்ள வான்படையினர் உன்னைப் பாராட்டி இவ்வாறு கூறுவர்: “இறைவனை உண்மையாகவே நம்பிடும் மனிதனே, நன்றாகச் சுவைத்துப் பருகுவாயாக!” இறவாமை என்னும் மாநகரத்தின் வாசிகள், “அவரது அன்பு என்னும் கிண்ணத்தைக் காலியாக்கியோனே, மகிழ்ச்சியுறுவாயாக!” என உரக்கக் குரலெழுப்பினர்.

மகிமையின் நா, “எனது ஊழியனே, உனக்குக் காத்திருக்கும் அருட்பேறு அதி நேர்த்திமிக்கது; ஏனெனில், விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ளவை அனைத்தின்பாலும் பற்றறுத்து, உண்மையான பற்றின்மைக்கே சின்னமாய் உள்ளோரைத் தவிர, வேறெவருமே அடைந்திடாததனை நீ அடைந்துள்ளாய்!” என வரவேற்புக் குரலெழுப்பும்.

LXXVII

இப்பொழுது, மனிதனின் படைப்பைக் குறித்த உனது கேள்வி சம்பந்தமாக; மனிதர் அனைவருமே, பாதுகாவலரான, சுயஜீவியான இறைவனால் ஆக்கப்பட்டத் தன்மைக்கிணங்க படைக்கப்பட்டுள்ளனர்.

இறைவனின் வலுமிக்கதும் பாதுகாக்கப் பட்டதுமான நிருபங்களில் கட்டளையிடப்பட்டதற்கிணங்க, அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு குறிப்பிட்ட அளவு முன்விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உள்ளார்ந்த ஆற்றலாக நீங்கள் கொண்டிருப்பவை அனைத்தும், உங்களின் சுயமுயற்சியின் வாயிலாகவே வெளிப்படுத்தப்படும்.

இவ்வுண்மைக்கு உங்களின் சொந்த செயல்களே சாட்சி அளிக்கின்றன.

உதாரணமாக, பாயானில், மனிதர்களுக்குத் தடைச்செய்யப் பட்டிருந்தவற்றைக் கவனியுங்கள்.

அத்திருநூலில், இறைவன், தனது ஆணைக்கேற்ப, எவற்றை விரும்பினாரோ, அவற்றைச் சட்ட விரோதமானதென ஆணையிட்டிருந்தார்; தனது மாட்சிமை மிகு வலிமையின் மூலம், எவற்றைத் தடைச்செய்யத் தேர்ந்தெடுத்தாரோ அவற்றைத் தடைச்செய்தார்.

இதற்கு அவரது திருநூலின் வாசகங்களே சாட்சி பகர்கின்றன.

நீங்களும் சாட்சியளிக்க மாட்டீரா? இருப்பினும், மனிதர்கள், வேண்டுமென்றே அவரது சட்டத்தை மீறினர்.

அத்தகைய நடத்தைக்கு இறைவனையா, அல்லது, அவர்களின் சொந்த மெய்ம்மையையா காரணமெனக் கூறுவது? உங்கள் தீர்மானத்தில் நீதியைக் கடைப் பிடியுங்கள்.

நல்லவை ஒவ்வொன்றும் இறைவனுடையவையே; தீமை ஒவ்வொன்றும் உங்களிடமிருந்தே.

இதனைப் புரிந்து கொள்ள மாட்டீரா? நீங்கள் புரிந்துகொள்வோராயின், இதே உண்மை எல்லாத் திருமறைகளிலும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

நீங்கள் செய்திட உளங்கொண்டிடும் ஒவ்வொரு செயலும், அவருக்கு, நிறைவேற்றப்பட்டுவிட்ட ஒரு செயலைப் போன்றுத் தெளிவாகத் தோன்றும்.

அவரைத் தவிர இறைவன் வேறெவருமிலர்.

எல்லாப் படைப்பும் அதன் சாம்ராஜ்யமும் அவருடையதே.

அவர் முன் அனைத்துமே வெளிப்படை; யாவுமே அவரது புனிதமான, மறைவான நிருபங்களில் குறித்து வைக்கப் பட்டுள்ளன.

இருப்பினும், எவ்வாறு, ஒரு சம்பவம் நிகழப் போகிறது என்ற உங்களின் சொந்த முன்னறிவோ, அது நிகழ வேண்டும் என்ற உங்களின் ஆவலோ, அதன் நிகழ்வுக்குக் காரணமில்லையோ, காரணமும் ஆகாதோ, அதே போன்று அது குறித்த இறைவனின் இம்முன்னறிவு மனிதர்களின் அச்செயல்களை விளைவித்தது என்றும் கருதிட இயலாது.

LXXVIII

படைப்பின் ஆரம்பம் குறித்து உங்களின் கேள்வி சம்பந்தமாக.

ஆண்டவனின் படைப்பு, நித்திய காலமும் இருந்து வந்திருக்கின்றது; தொடர்ந்தும் என்றென்றும் இருந்து வரும் என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள்.

அதன் ஆரம்பம் ஆரம்பமற்றது; அதன் முடிவும் முடிவறியாதது.

மனிதரின் எஜமானன் என்னும் பட்டம் எவ்வாறு ஓர் ஊழியனின் உள்ளமையைக் குறிக்கின்றதோ, அதே போன்று, படைப்போன் என்னும் அவரது நாமம் ஒரு படைப்பினை முன்கூட்டியே அனுமானிக்கின்றது.

“ஆரம்பத்தில் ஆண்டவன் இருந்தார்; அவரை அறிந்திட உயிரினங்கள் எதுவும் கிடையா”, “பிரபுவானவர் ஏகமானவராக இருந்தார்; வழிபடுவோர் எவுருமிலர்” என்பவைப் போன்ற கடந்தகாலத் தீர்க்கதரிசிகளின் கூற்றுக்களின் அர்த்தம் தெளிவானது, ஆதாரமும் உடையது; எந்த வேளையிலுமே அது தவறாகப் புரிந்துகொள்ளப் படலாகாது.

இதே உண்மைக்கு அவர் வெளியிட்டுள்ள இவ்வார்த்தைகள் சாட்சியம் அளிக்கின்றன: “இறைவன் ஏகமானவராக இருந்தார்; அவரைத் தவிர வேறெவருமே கிடையாது.

அவர் இருந்து வந்தது போன்றே எப்பொழுதும் இருந்தும் வருவார்”.

பிரபுவானவர் இப்பொழுது தோன்றி விட்டார் என்பதை ஒவ்வோர் உய்த்துணரும் கண்ணும் தயக்கமின்றிக் கண்டிட இயலும்.

இருந்தும், அவரது பேரொளியினை அறிந்து கொள்வார் யாருமிலர்.

இதன் பொருளானது, தெய்வீகப் பிறவியான அவர் வாழும் உறைவிடம், தன்னைத் தவிர வேறெவரது அறிவெல்லைக்கும் உட்படாதும் எட்டாத தூரத்திலும் உள்ளதும் என்பதாகும்.

” உய்த்துணரும் கண் ஒவ்வொன்றும் இப்பொழுது பிரபுவானவர் தோன்றிவிட்டார் என்பதனைக் கன்டிட இயலும்; இருந்தும், அவரது மகிமையை அறிந்து கொள்வார் யாருமிலர்.

இதன் பொருளானது: மெய்ப்பொருளானவர் வாழும் உறைவிடம் அவரைத் தவிர மற்றெவரின் அடையும் எல்லை, காட்சியெல்லை ஆகியவைக்கு அப்பால் வெகு தொலைவில் உள்ளது என்பதாகும்.

படைப்புலகினில், அறிவிக்கவோ, தெரிந்துகொள்ளவோ கூடியவை எவையாயினும், அவை, அவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள உள்ளார்ந்த இயல்பினைக் கடந்திடவே இயலாது.

இறைவன் மட்டுமே அவ்வித எல்லைகளைக் கடந்திடுகின்றார்.

மெய்யாகவே, அவரே நிரந்தரமானவர்.

அவருக்குச் சமமானவரோ கூட்டளியோ தம்முடன் பங்காளியாகச் சேர்ந்ததுமில்லை, என்றும் சேரவும் முடியாது.

எந்த ஒரு நாமமும் அவரது நாமத்துடன் ஒப்பிடப்பட முடியாது.

எழுதுகோல் எதுவுமே அவரது இயல்பினை வருணிக்க இயலாது; எந்த ஒரு நாவும் அவரது மகிமையைச் சித்தரிக்கவும் இயலாது.

அவர், என்றென்றும், தம் ஒருவரைத் தவிர மற்றனைத்திற்கும் மேலானதும் அளவிடற்கரியதுமான உயர்வான நிலையிலேயே இருந்து வருவார்.

ஆண்டவனின் பிரதான அவதாரமானவர், தன்னை மனிதர்களுக்கு வெளிப்படுத்திக் கொள்ளும் அந்நேரத்தினை எண்ணிப் பாருங்கள்.

அந்நேரம் வருவதற்கு முன்னர் ஆதி பிறவியாகிய அவர், மனிதர்களுக்கு இன்னும் தெரியாதவராகவும், இறைவனின் திருமொழியை இன்னும் அறிவிக்காதவருமாக இருக்கின்றார்; யாருமே தன்னை அறிந்திராத ஓர் உலகினில், தான் மட்டும் சகலமும் அறிந்தவராக இருக்கின்றார்.

அவர், உண்மையிலேயே படைப்பில்லாப் படைப்போனாக இருக்கின்றார்.

ஏனெனில், அவரது வெளிப்பாட்டிற்குச் சற்று முந்திய அத்தருணத்தில் ஒவ்வொரு படைப்புப் பொருளும் அதன் ஆன்மாவினை ஆண்டவன்பால் அர்ப்பணம் செய்ய நிர்ப்பந்திக்கப்படும்.

உண்மையாகவே, இதுவே: “இந்நாளில் இராஜ்யம் யாருடையது?” என எழுதி வைக்கப்பட்டுள்ள நாள்.

விடை அளிக்கத் தயாரானோர் யாரையுமே காண முடியவில்லை!

LXXIX

ஆண்டவனின் உலகங்களைக் குறித்து உங்கள் கேள்வி சம்பந்தமாக.

இறைவனின் உலகங்கள், எண்ணிக்¬யில் கணக்கற்றவை என்பதையும், அளவில் எல்லையற்றவை என்பதையும் நீங்கள், உண்மையாகவே அறிந்திடுவீராக.

சர்வஞானியும் சர்வ விவேகியுமான இறைவனைத் தவிர வேறு எவருமே அவற்றைக் கணக்கிடவோ புரிந்து கொள்ளவோ இயலாது.

உறக்கத்தின் போது உங்கள் நிலையை எண்ணிப் பாருங்கள்.

மெய்யாகவே, யான் கூறுகின்றேன்; அவர்கள் அதனைத் தங்கள் மனங்களில் தியானித்துப் பார்ப்பராயின், மனிதரிடையே ஆண்டவனின் அடையாளங்களில், இவ்வியல்நிகழ்ச்சியானது அதி மர்மமிக்க ஒன்றாகும்.

நீங்கள் கனவில் கண்டிட்ட ஒன்று, எவ்வாறு, ஒரு குறிப்பிட்ட காலம் கடந்த பின், உண்மையில் நிகழ்கின்றது என்பதைப் பாருங்கள்.

நீங்கள் உங்கள் கனவில் கண்ட இவ்வுலகமும் நீங்கள் வாழும் இவ்வுலகமும் ஒன்றென்றால், அந்நிகழ்ச்சி, கனவில் நிகழும் அதே வேளையில், இவ்வுலகிலும் நிகழ்ந்திருக்க வேண்டும்.

அவ்வாறாயின், நீங்களே அதற்கு அத்தாட்சியும் அளித்திருப்பீர்.

ஆயினும், அது அவ்வாறு இல்லாததனால், நீங்கள் வாழும் இவ்வுலகமும் உங்கள் கனவில் அனுபவித்தவை நிகழ்ந்த அவ்வுலகமும், வேறானது, தனிப்பட்டது, என்பது தெளிவாகின்றது.

அடுத்ததாகக் குறிப்பிடப்பட்ட இவ்வுலகம் ஆரம்பமும் முடிவமற்றது.

அதே உலகம், ஒளிமயமான, எல்லாம் வல்ல இறைவன் விதித்ததற்கு இணங்க, உங்களின் சரியான மெய்யுருவினுள் உள்ளதென்றும், உங்களுள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் நீங்கள் வாதிடுவீராயின் அதுவும் உண்மையேயாகும்.

அவ்வாறே, உங்களின் ஆன்மா, உறக்க நிலையின் எல்லைகளுக்குமேல் உயர்ந்து, உலகப் பற்றுகள் அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டு, இறைவனின் செயலால், இவ்வுலகின் அதி ஆழமான மெய்ம்மையினுள் மறைந்து கிடக்கும் பிரதேசத்தினைக் கடக்கச் செய்யப்பட்டது என வற்புறுத்துவதும் சரியெனவே கூறலாம்.

மெய்யாகவே, யான் கூறுகின்றேன்; ஆண்டவனின் பிரபஞ்சம் இவ்வுலகை மட்டுமல்லாது வேறு உலகங்களையும், இவ்வுயிரினங்களை மட்டுமல்லாது வேறு உயிரினங்களையும் உள்ளடக்குகின்றது.

அவர், இவ்வுலகங்கள் ஒவ்வொன்றிலும், அனைத்தையும் ஆராய்பவரும், சர்வ விவேகியுமான அவரைத் தவிர வேறெவருமே ஆராய இயலாத பொருள்களை விதித்துள்ளார்.

யாம் உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ள இதனைத் தியானிப்பீராக; அதனால், நீங்கள், உங்களின் பிரபுவும், சகல உலகங்களின் பிரபுவுமான ஆண்டவனின் நோக்கத்தினைக் கண்டிடக் கூடும்.

தெய்வீக விவேகமெனும் மறைபொருள் இத்திருமொழிகளில்தாம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் எமது குரலினைச் செவிமடுக்கக் கூடியோராயின், எமது திருமொழிகளின் மூலம் படைக்கப்பட்டோரின் செயல்கள் எம்மைச் சூழ்ந்து கொண்டுள்ளதனால் ஏற்படும் மனவேதனையின் காரணமாக, யாம், இவ்விஷயத்தைக் குறித்துத் தொடர்ந்து உரையாடுவதைத் தவிர்த்துவிட்டுள்ளோம்.

LXXX

இறைவனின் தீர்க்கதரிசிகளையும் தேர்ந்தெடுக்கப் பட்டோரையும் தவிர்த்து, மனிதனானவன், அவனது உடல்சார்ந்த இறப்புக்குப்பின், இவ்வுலகினில் தனது வாழ்தலைக் குறிக்கும் அதே பிரத்தியேகத் தன்மையையும், தனிமனிதப் பண்பையும், பிரக்ஞையையும், புரிந்துணர்வையும், தொடர்ந்து கொண்டிருப்பானா என்று என்னிடம் வினவியிருந்தீர்.

அவனது மனோசக்திக்கு சிறு சேதம் விளைந்திடினும், மயக்கமும், கடும் நோயும் அவனது புரிந்துணர்வையும் பிரக்ஞையையும் இழக்கச் செய்து விடுகின்றதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்; அது அவ்வாறிருக்கையில், எவ்வாறு, அவனது உடலையே அழித்து, அதன் உறுப்புகளை எல்லாம் மண்ணோடு மண்ணாக்கிடும் அவனது புரிந்துணர்வை அழிக்கவும், அவனது உணர்வுச் சக்தியினைத் துடைத்தொழிக்கவும் எவ்வாறு சக்தியில்லாது போய்விடும்? அவற்றின் இருத்தலுக்கும் இயக்கத்திற்கும் தேவையான சாதனங்கள் முழுதும் சிதைந்து போன பிறகும், மனிதனின் உணர்வுநிலையையும் ஆளுமையும் தொடர்ந்து செயலுற முடியுமென எவ்வாறு ஒருவர் கற்பனைச் செய்ய முடியும்? மனிதனின் ஆன்மா, அவனது உடல், உள்ளம் ஆகியவையின் பலவீனங்கள் அனைத்திற்கும் மேலாக உயர்ந்தும், சுதந்திரமாகவும் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு நோயாளியினுள் வலுவின்மையின் அடையாளம் தோன்றுகின்றது என்றால், அதற்கு, அவரது ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடையே குறுக்கிடும் இடைஞ்சல்கள்தாம் காரணமாகும்.

ஏனெனில், ஆன்மாவைப் பொறுத்தமட்டில், அது உடல் சம்பந்தப்பட்ட பிணிகளால் பாதிக்கப்படாமலேயே இருக்கும்.

ஒரு விளக்கின் ஒளியை எண்ணிப் பாருங்கள்.

புறப்பொருள் ஒன்று அதன் பிரகாசத்தினைத் தடுத்திடினும் அதன் வெளிச்சம் தொடர்ந்து சக்தி குறையாது பிரகாசித்திடும்.

அதே போன்று, மனிதனின் உடலைப் பாதிக்கும் ஒவ்வொரு வியாதியும், அவ்வான்மாவை அதன் உள்ளார்ந்த ஆற்றலையும் சக்தியையும் வெளிப்படுத்துவதிலிருந்து தடைச்செய்திடும் ஓர் இடையூறாகி விடுகின்றது.

இருப்பினும், அது உடலை விட்டுப் பிரியும்போது, உலகிலுள்ள சக்தி எதுவுமே அதற்கு ஈடாகாத அளவு, அத்துணைத் தாக்கத்தை வெளிப்படுத்திடும்.

தூய்மையும் புனிதமுமான ஒவ்வோர் ஆன்மாவும் பேராற்றல் மிக்கச் சக்தி அருளப்பட்டு, அளவற்ற மகிழ்ச்சியில் களிப்புற்றிடும்.

ஒரு பெட்டியினுள் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் விளக்கை எண்ணிப் பாருங்கள்.

அது ஒளி கொடுத்துக் கொண்டிருந்தபோதும் அதன் பிரகாசம் மனிதரிடமிருந்து மறைக்கப்படுகின்றது.

அவ்வாறே மேகங்களினால் மறைக்கப்பட்ட சூரியனை எண்ணிப் பாருங்கள்; உண்மையில், அவ்வொளியின் தோற்றுவாயில் எவ்வித மாற்றமும் இல்லாதிருந்தபோதும் எவ்வாறு அதன் பிரகாசம் குறைந்து விட்டதாகத் தோன்றுகின்றது என்பதைக் கவனியுங்கள்; மனிதனின் ஆன்மாவை இச்சூரியனுக்குச் சமமாகக் கருதவேண்டும்; உலகிலுள்ள பொருள்களை எல்லாம் அவனது உடலைப்போல் கருத வேண்டும்.

புறஞ்சார்ந்த இடையூறு எதுவும் அவற்றுக்கிடையே குறுக்கிடாதிருக்கும் வரை, உடலானது, ஆன்மாவின் ஒளியைத் தொடர்ந்து முழுதும் பிரதிபலித்து, அதன் சக்தியினால் பேணி வளர்க்கப்படும்.

இருப்பினும், அவற்றுக்கிடையே ஒரு திரை குறுக்கிட்டவுடனே, அவ்விளக்கின் பிரகாசம் குறையத் தொடங்குவதாகத் தோன்றுகின்றது.

சூரியன் மேகங்களுக்குப் பின்னால் முற்றும் மறைக்கப்பட்டிருக்கும் பொழுது, அதனை மீண்டும் கவனியுங்கள்.

அதன் ஒளியினால் உலகம் தொடர்ந்து பிரகாசமடைந்த போதும், அது பெறும் ஒளி மிகவும் குறைந்து விடுகின்றது.

அம்மேகங்கள் கலையாது இருக்கும் வரை, சூரியன் மீண்டும் அதன் முழு அளவு ஒளியுடன் பிரகாசிக்க இயலாது.

மேகத்தின் இருத்தலோ, அதன் இல்லாமையோ, சூரியனின் உள்ளார்ந்த பிரகாசத்தினை எவ்வகையிலும் பாதிக்கவியலாது.

மனிதனின் ஆன்மாதான் அவனது சூரியன்; அதனிடமிருந்தே அவனது உடல் ஒளி பெறுகின்றது; அது அவ்வாறுதான் கருதப்பட வேண்டும்.

மேலும், ஒரு கனியானது, அது காய்ப்பதற்குமுன், எவ்வாறு அது மரத்திற்குள் உள்ளாற்றலாக இருக்கின்றது என்பதை எண்ணிப் பாருங்கள்.

அம்மரம், துண்டு துண்டாக வெட்டப்பட்ட போதிலும், அதனுள், அக்கனியின் எந்தப் பகுதியுமோ, அடையாளமோ ஒரு சிறிதளவுக்கூடக் காணப்படாது.

இருப்பினும், அது தோன்றும்பொழுது, அற்புத அழகுடனும் சிறந்த முழுநிறைவுடனும், தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

உண்மையிலேயே, குறிப்பிட்ட சில கனிகள், மரத்திலிருந்து பறிக்கப் பட்ட பின்னரே, அவற்றின் முழு வளர்ச்சியை அடைகின்றன.

LXXXI

இப்பொழுது, இறப்புக்குப்பின் மனிதனது ஆன்மாவின் நீடிப்புச் சம்பந்தமான உங்கள் கேள்விக் குறித்து; ஆன்மாவானது, உடலிலிருந்து அதன் பிரிவுக்குப் பின், காலங்கள், நூற்றாண்டுகள், ஆகியவையின் புரட்சியோ, இவ்வுலகின் மாற்றங்கள், தற்செயல் நிகழ்வுகள் ஆகியவையோ, அதனை மாற்றவியலாத நிலையில், தொடர்ந்து, இறைவனின் முன்னிலையை அடையும்வரை வளர்ச்சிப் பெற்றுவரும் என்ற உண்மையினை நீங்கள் அறிவீராக.

இறைவனின் இராஜ்யம், அவரது மாட்சிமை, அவரது அரசாட்சி, அதிகாரம் ஆகியவை நிலைத்திருக்கும் வரை, அதுவும் நிலைத்திருக்கும்.

அது ஆண்டவனின் அடையாளங்களையும், அவரது பண்புகளையும் வெளிக்கொணர்ந்து, அவரது அன்புக் கருணை, வள்ளன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும்.

அத்துணை உயர்வான நிலையையும் மகிமைமிகு ஸ்தானத்தையும் பொருத்தமுற வருணிக்க முயற்சித்திடும்போது எனது எழுதுகோல், அசைவிழந்து விடுகின்றது.

அவ்வான்மாவுக்குக் கருணை என்னும் கரம் அளிக்கவிருக்கும் கீர்த்தி.

எந்த ஒரு நாவும் பொருத்தமுற வெளிப்படுத்தவோ, வேறெந்த மண்ணுலக ஸ்தாபனம் வருணிக்கவோ இயலாத அளவு உள்ளது, அவ்வான்மாவுக்குக் கருணை என்னும் கரம் அளிக்கவிருக்கும் கீர்த்தி; ஓர் ஆன்மா, உடலை விட்டுப் பிரியும் வேளையில், உலக மனிதர்களின் வீண் கற்பனைகளிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டிருக்குமாயின் அது பேறு பெற்றதாகும்.

அத்தகைய ஓர் ஆன்மா, அதன் ப¬டைப்போனின் விருப்பத்திற்கிணங்க வாழ்ந்து, இயங்கி, அதி மேன்மைமிகு சுவர்க்கத்தினுள் பிரவேசித்திடும்.

விண்ணுலகக் கன்னிகளும், அதி உயரிய மாளிகை வாசிகளும், அதனைச் சுற்றி வலம் வருவர்; இறைவனின் தீர்க்கதரிசிகளும், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டோரும், அதன் தோழமையை நாடுவர்.

அவ்வான்மா, அவர்களுடன் தடையின்றி உரையாடி, உலகங்கள் அனைத்தின் பிரபுவாகிய இறைவனின் பாதையில் அது சகிக்க வேண்டி இருந்தவற்றை எல்லாம் அவர்களுக்கு எடுத்துரைக்கும்.

மேலுலகிலும் கீழுலகிலுமுள்ள அரியாசனத்தின் அதிபரான இறைவனின் உலகங்களில் அத்தகைய ஓர் ஆன்மாவுக்கென விதிக்கப்பட்டவை, எந்த ஒரு மனிதனுக்காவது எடுத்துரைக்கப்படுமாயின், அவனது உருவம் முழவதுமே அவ்வுயர்வான, புனிதமான, பிரகாசமான, நிலையை உடனே அடையவேண்டும் என்ற பேராவலினால் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்து விடும்.

இறப்புக்குப்பின், ஓர் ஆன்மாவின் நிலை விவரிக்கப்படவே முடியாது; அது மனிதர்களின் கண்களுக்கு வெளிப்படுத்தப்படுவதும் பொருத்தமன்று, அனுமதிக்கப் படவும் மாட்டாது.

மனித இனத்தை, மெய்ம்மை என்னும் நேரான வழிக்கு அழைத்துச் செல்லும் ஒரே நோக்கத்துடன்தான் தீர்க்கதரிசிகளும் இறைவனின் தூதர்களும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.

அவர்களின் வெளிப்பாட்டிற்கான அடிப்படை நோக்கம், மனிதர்கள் அனைவருக்கும் கல்வி புகட்டுவதாகவே இருந்து வந்திருக்கின்றது; அதனால், மனிதர்கள், மரணம் எய்தும் வேளையில், அதி தூய்மையுடனும் புனிதத் தன்மையுடனும் முழுமையான பற்றின்மையுடனும் அதி மேன்மை மிக்கவரின் அரியாசனத்தை நோக்கி உயர்ந்தெழக் கூடும்.

இவ்வான்மாக்கள் வீசிடும் ஒளிக்கதிர்கள்தாம் உலகின் முன்னேற்றத்திற்கும் அதன் மக்களின் வளர்ச்சிக்கும் காரணமாகும்.

அவர்கள்தாம் மனித உலகினைப் பக்குவமடையச் செய்யும் புரையூட்டும் பொருளைப் போன்றவர்கள்; அவர்களே இவ்வுலகின் கலைகளையும் அபூர்வங்களையும் வெளிப்படுத்துவதற்குக் காரணமாகின்ற உயிர்ச்சக்தியாகின்றனர்.

அவர்கள் மூலமாகவே மேகங்கள் மனிதரின்மீது அவற்றின் வள்ளன்மையைப் பொழிகின்றன; மண்ணுலகமும் அதன் கனிகளை வெளிக்கொணர்கின்றன.

எல்லாப் பொருள்களுமே ஒரு மூல காரணத்தை, ஓர் இயக்கச்சக்தியை, ஓர் உயிர்ப்பிக்கும் அடிப்படை விதிமுறையைக் கொண்டிருக்க வேண்டும்.

இவ்வான்மாக்களும், இப்பற்றின்மையின் சின்னங்களும், படைப்பினங்களைக்கொண்ட உலகத்திற்கு அதிமுக்கியமான இயக்கச்சக்தியினை அளித்து வந்திருக்கின்றனர்; தொடர்ந்தும் அளித்து வருவர்.

எவ்வாறு, குழந்தை தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது அதற்கு இவ்வுலகம் வேறுபடுகின்றதோ, அதே போன்றுதான் அவ்வுலகம் இவ்வுலகத்தை விட வேறுபட்டது.

ஆன்மாவானது இறைவனின் முன்னிலையைச் சென்று அடையும்பொழுது, அதன் சிரஞ்சீவி நிலைக்கு மிகப் பொருத்தமான, அதன் தெய்வீக உறைவிடத்திற்குத் தகுதியான வடிவத்தை மேற்கொண்டிடும்.

அத்தகைய உள்ளமை, மற்றொன்றைச் சார்ந்திருப்பதாகும்; சுதந்திரமான உள்ளமையன்று; ஏனெனில், முன்னது காரணத்தைப் பொறுத்திருக்கின்றது; பின்னதோ, காரணத்தின் தேவையிலிருந்து விடுபட்டது.

பூரண உள்ளமை நிச்சயமாக இறைவனுக்கு மட்டுமே, - அவரது மகிமை உயர்வுப் பெறுமாக -, சொந்தமானதாகும்.

இவ்வுண்மையைப் புரிந்து கொள்வோருக்கு இது நன்று.

ஆண்டவனின் தீர்க்கதரிசிகளின் நடத்தையை உங்களின் உள்ளங்களில் சிந்தித்துப் பார்ப்பீர்களாயின், இவ்வுலகம் மட்டுமல்லாது வேறு உலகங்களும் இருக்கவேண்டும் என்பதற்கு நீங்களே நிச்சயமாகவும் தயக்கமின்றியும் சாட்சி அளித்திடுவீர்.

எல்லாக் காலங்களிலும், பெரும்பான்மையான மெய்ஞ்ஞானிகளும் கற்றோரும், விவேகம் எனும் நிருபத்தினில் குறித்திருப்பது போல், இறைவனின் திருமறைகள் வெளியிட்டிருப்பதன் உண்மைக்குச் சாட்சி அளித்துள்ளனர்.

பருப்பொருள் சம்பந்தப்பட்ட தத்துவ ஞானிகளுங் கூட இத்தெய்வீகமாய் நியமிக்கப்பட்ட தூதர்களின் விவேகத்திற்குத் தங்களின் நூல்களில் சாட்சியம் அளித்துள்ளதோடு, விண்ணுலகத் தீர்க்கதரிசிகளினால் சுவர்க்கம், நரகத் தீ, வருங்கால வெகுமதி, தண்டனை ஆகியவைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளவை மனிதரின் ஆன்மாக்களுக்குக் கல்விப்புகட்டி அவற்றைக் கைத் தூக்கிவிடும் நோக்கத்தோடுதான் எனக் கருதியுள்ளனர்.

ஆகவே, மனித இனத்தில் பெரும்பான்மையினர், அவர்களின் நம்பிக்கைகள், கோட்பாடுகள் எதுவாய் இருந்தபோதிலும், எவ்வாறு, இறைவனின் இத்தீர்க்கதரிசிகளின் சிறந்த மேன்மையினை அறிந்து, மேம்பட்ட நிலையை ஒப்புக் கொண்டுள்ளனர் என்பதை எண்ணிப்பாருங்கள்.

சிலரால், பற்றின்மையெனும் இவ்விரத்தினங்கள், விவேகத்தின் திருவுருவங்களெனப் பாராட்டப் படுகின்றனர்; அதே வேளையில், வேறு சிலர் இவர்களை இறைவனின் குரலே என நம்புகின்றனர்.

இறைவனின் உலகங்கள் அனைத்துமே, இம்மண்ணுலக வாழ்வு நிலைக்கே தாழ்த்தப்பட்டுள்ளதென, இத்தகைய ஆன்மாக்கள் நம்பி இருப்பராயின், எங்ஙனம் தங்களின் பகைவர்களின் கையில் தங்களை ஒப்படைக்கச் சம்மதித்திருக்க முடியும்? எந்த மனிதனுமே அறிந்திராத, அல்லது கண்டிராத, துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவிக்க அவர்கள் மனப்பூர்வமாகச் சம்மதித்திருப்பார்களா?

LXXXII

நீங்கள் ஆன்மாவின் இயல் தன்மையினைக் குறித்து என்னிடம் கேட்டிருந்தீர்.

ஆன்மாவானது ஆண்டவனின் ஓர் அடையாளமாகும் என்பதை அறிவீராக; அது ஒரு தெய்வீக இரத்தினக்கல்; கல்வியில் மிகச் சிறந்தோரும் அதன் மெய்ம்மையினைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டுள்ளனர்; ஒரு மனிதனின் அறிவாற்றல், அது, எத்துணை கூர்மையானதாய் இருப்பினும், அதன் மர்மத்தினை வெளிப்படுத்தவே இயலாது.

படைப்போனின் சிறப்பினைப் பிரகடனம் செய்வதில், படைப்புப் பொருள்கள் அனைத்திலும் அதுவே முதன்மையானது, அவரது மகிமையைக் கண்டறிவதிலும், அவரது உண்மையினைப் பற்றிக்கொண்டு, பயபக்தியுடன் அவர்முன் தலைவணங்குவதிலும் அதுவே முதன்மையானது.

அது இறைவனிடம் விசுவாசத்துடன் இருக்குமாயின், அவரது பேரொளியினைப் பிரதிபலித்திடும்; இறுதியில், அவர்பால் திரும்பிச் செல்லும்.

ஆயினும், அதன் படைப்போனின்பால் விசுவாசத்தில் தவறுமாயின், அது, அதன் தானெனும் தன்மைக்கும் அதீத உணர்ச்சிக்கும் பலியாகி, இறுதியில், அவற்றின் ஆழத்தில் மூழ்கிவிடும்.

எவரொருவர், இந்நாளில், மனிதரின் சந்தேகங்கள், கற்பனைகள் ஆகியவைத் தன்னை நித்திய மெய்ம்மையிலிருந்து அப்பால் திரும்பிடச் செய்வதற்கு உடன்பட மறுக்கின்றாரோ, யார், தன்னைச் சமயச்சார்புடைய, சமயச்சார்பற்ற அதிகாரிகளால் எழுப்பப்படும் குழப்பங்களை அவரது செய்தியினை அறிந்துகொள்வதிலிருந்து தடுக்கவிடாது பார்த்துக் கொள்கின்றாரோ, அத்தகைய ஒருவர் இறைவனால், மனிதர் அனைவருக்கும் பெருமானாகவும், அவரது வலிமையின் அடையாளங்களுள் ஒன்றாகவும் கருதப்படுவார்; மேலும், அவர், எவரது நாமங்கள் அதி உயர்விலிருக்கும் அவரது எழுதுகோலினால் தமது திருநூலில் பொறிக்கப் பட்டுள்ளனவோ, அவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவார்.

அத்தகைய ஆன்மாவின் உண்மைச் சிறப்பினை அறிந்து, அதன் ஸ்தானத்தை அங்கீகரித்து, அதன் பண்புகளைக் கண்டுகொள்ளும் ஒருவர் அருட்பேறு பெற்றவராவார்.

பழங்கால நூல்களில், ஆன்மாவின் வளர்ச்சியின் பற்பல கட்டங்களில், சிற்றின்பம், மனக்கோபம், அருள்தூண்டல், உதாரகுணம், மனத்திருப்தி, தெய்வீக நல்விருப்பம் ஆகியவை போன்ற இயல்புகளின் தொடர்பினைக் குறித்து நிறைய எழுதப்பட்டுள்ளன; இருப்பினும், உயர்வுமிக்க அவரது எழுதுகோல், அவை சம்பந்தமாகத் தொடர்ந்து விவரிக்க விருப்பம் கொள்ளவில்லை.

இந்நாளில் பணிவுடன் தனது ஆண்டவனுடன் நடந்தும், அவரைப் பற்றிக் கொண்டுமுள்ள ஒவ்வோர் ஆன்மாவும் பாராட்டத்தக்க நற்பெயர்கள், ஸ்தானங்கள் ஆகியவையின் பெருமதிப்பு, புகழ், ஆகியவை வழங்கப் பட்டிருப்பதைக் கண்டிடும்.

மனிதன் உறங்கும்போது அவனின் ஆன்மா, இயல்பாகவே புறப்பொருளினால் பாதிக்கப்படுகின்றதென எவ்வகையிலும் கூறவியலாது.

அதன் மூல நிலையிலோ, இயல்தன்மையிலோ, அது, எவ்வித மாற்றத்தின் பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.

அதன் இயக்கத்தினில் ஏதாவது மாற்றம் ஏற்படுமாயின் அதற்குப் புறக் காரணங்கள்தாம் கற்பிக்கப் படவேண்டும்.

அதன் இயற்கைச் சூழல், அதன் புரிந்திடும் ஆற்றல், உணரும் சக்தி ஆகியவையில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படுமாயின் அவற்றுக்கு இப்புறத் தாக்கங்களையே காரணமாகக் கூறவேண்டும்.

மானிடனின் கண்ணை எண்ணிப் பாருங்கள்.

அது படைப்புப் பொருள்கள் அனைத்தையும் காணுந்திறன் கொண்டிருக்கின்றது; இருந்தும், அதனில் மிகச்சிறிய ஒரு வில்லங்கமும், அதனை, எந்தப் பொருளையுமே பார்க்க இயலாத அளவு காணுந் திறனில் இடையூறு விளைவித்துக், கண்பார்வையையே பறித்திடக் கூடும்.

எவர் இவ்விளைவுகளைத் தோற்றுவித்து, அவற்றுக்குக் காரணமாகவும் இருக்கின்றாரோ, எவர் படைப்புலகினில் ஒவ்வொரு மாற்றத்தையும், வேறுபாட்டையும், விதித்து, அவற்றையும், அவ்விளைவுகளையே சார்ந்திருக்குமாறு விதித்துள்ளாரோ, அவரது திருநாமம் மேன்மைப்படுத்தப்படுமாக.

பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு படைப்புப்பொருளும் அவரது அறிவுக்கு வழிகாட்டும் ஒரு கதவாகும்; அவரது இறைமைக்கு ஓர் அடையாளமாகும்; அவரது நாமங்களின் வெளிப்படுத்துதலாகும்; அவரது மாட்சிமைக்கு ஒரு சின்னமாகும்; அவரது சக்திக்கு ஒரு சான்றுக் குறிப்பாகும்; அவரது நேர்வழியின் நுழைவுக்கு ஒரு வழிவகையாகும்....

மெய்யாகவே யான் கூறுகின்றேன்; மானிட ஆன்மா, அதன் சாராம்சத்தில், ஆண்டவனின் அடையாளங்களுள் ஒன்று; அவரது மர்மங்களிடையே அது ஒரு மர்மமாகும்.

அது எல்லாம் வல்லவரின் வலுமிக்க அடையாளங்களுள் ஒன்று; ஆண்டவனின் உலகங்கள் அனைத்தின் மெய்ம்மையினைப் பிரகடனஞ் செய்திடும் முன்னோடி.

இப்பொழுது முழுதும் புரிந்துகொள்ள இயலாத ஒன்று உலகத்தினுள் மறைந்து கிடக்கின்றது.

இறைவனது புனித ஆன்மாவின் வெளிப்பாடு, அவரது நியதிகள் அனைத்தினுள்ளும் வியாபித்திருப்பதை, உங்கள் மனதில் எண்ணிப் பாருங்கள்; அவருக்கு எதிராகக் கிளர்ச்சி உண்டுபண்ணும் அத் தாழ்வான, ஆவலைத் தூண்டக் கூடிய தன்மையுடன் அதனை ஒப்பிட்டுப் பாருங்கள்; அது, அவர்களைச், சிற்றின்ப இச்சைகள், கொடூரத்தன்மை ஆகியவற்றின்பால் இயக்கி, மனிதர்களை, நாமங்களின் பிரபுவாகிய அவர்பால் திரும்புவதிலிருந்து தடுத்திடுகின்றது.

அத்தகைய ஓர் ஆன்மா உண்மையாகவே, தவறான வழியில் வெகு தொலைவு சென்று விட்டதாகும்...

மேலும், ஆன்மா உடலைவிட்டுப் பிரிந்தபின் அதன் நிலையைக் குறித்து என்னைக் கேட்டிருந்தீர்.

ஒரு மனிதனின் ஆன்மா இறைவன் வழியில் நடந்திருக்குமாயின், அது நிச்சயமாகத் திரும்பிச் சென்று, நேசரின் பேரொளியினில் ஒன்று திரட்டப்படும் என்பதை, நீங்கள், மெய்யாகவே அறிவீராக.

இறைவனின் மெய்ம்மைத் தன்மை சாட்சியாக! அது, எந்த ஓர் எழுதுகோலும் விவரிக்க இயலாத, எந்த ஒரு நாவும் வருணிக்க இயலாத ஸ்தானத்தை எய்திடும்.

ஆண்டவனின் சமயத்தில் விசுவாசத்துடன் இருந்து அவரது வழியில் தடுமாறாத உறுதியுடன் நிற்கும் அவ்வான்மா, மேலுலகை அடைந்தபின், அவர் மூலம், எல்லாம் வல்லவர் படைத்துள்ள உலகங்கள் அனைத்தும் பயன் பெறும் அளவு, சக்தி பெற்றிடும்.

அத்தகைய ஓர் ஆன்மா, சிறப்புமிகு மன்னரும் தெய்வீகப் போதகருமான அவரது கட்டளைக்கிணங்க, உயிரினங்கள் அடங்கிய உலகிற்குப் புரையூட்டுந் தூய்மையான உறைபொருள் வழங்கிடும்; அதன் மூலம், உலகின் கலைகளும் அற்புதங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன.

எவ்வாறு, உணவைப் புளிக்கச் செய்வதற்கு உறைபொருள் தேவைப் படுகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள்.

பற்றின்மையின் சின்னங்களாகிய ஆன்மாக்கள்தாம் உலகிற்கு உறைபொருளாவர்.

இதனைத் தியானித்து, நன்றியுடையோர் ஆவீராக.

எமது நிருபங்கள் பலவற்றில், யாம், இவ்விஷயம் சம்பந்தமாகக் குறிப்பிட்டுள்ளோம்; ஆன்மாவின் வளர்ச்சயில் பல்வேறு கட்டங்களைக் குறித்து விளக்கியுள்ளோம்.

மெய்யாகவே யான் கூறுகின்றேன், மனித ஆன்மா சகலவிதமான வெளியேறல், பின்செல்லல் ஆகியவற்றிற்கெல்லாம் மேலாக உயரிய நிலையில் உள்ளதாகும்.

அசையாதிருக்கின்றது; அதே வேளையில் அது வானளாவ பறக்கின்றது; நகர்கின்றது, ஆனால் அது அசைவதில்லை.

அதுவே, நிலையற்ற ஓர் உலகத்தின் உள்ளமைக்கும், முதலோ முடிவோ இல்லாத உலகத்தின் மெய்ம்மைக்கும் சான்றுப் பத்திரமாகின்றது.

எவ்வாறு, நீங்கள் கண்டிட்டக் கனவு, பல ஆண்டுகள் கழிந்த பின்பு, மீண்டும் உங்கள் கண்களுக்குமுன் நிகழ்கின்றது என்பதைப் பாருங்கள்.

உங்கள் கனவில் தோன்றும் உலகின் மர்மம் எத்துணை விசித்திரமானது என்பதை எண்ணிப் பாருங்கள்.

உங்கள் மனதில், இறைவனின் ஊடுருவ இயலாத சூக்கும அறிவினைச் சிந்தித்து, அதன் பல்வேறு வெளிப்பாடுகளைக் குறித்து உங்கள் மனதில் தியானியுங்கள்.

இறைவனின் அற்புதமிக்கக் கைவேலையின் அத்தாட்சிகளைக் கண்ணுற்று, அதன் செயல் எல்லையையும் தன்மையையும் ஆலோசியுங்கள்.

தீர்க்கதரிசிகளின் முத்திரையாகிய அவர் கூறியிருக்கின்றார்; “இறைவா, உம்பால் எனது வியப்புணர்ச்சியையும் மலைப்பையும் அதிகரிப்பீராக!” பௌதீக உலகமானது ஏதாவது வரையறைகளுக்கு உட்பட்டதா என்னும் உங்களின் கேள்வி சம்பந்தமாக: இவ்விஷயத்தைப் புரிந்து கொள்ளுதல் கவனிப்பவரைப் பொறுத்தே உள்ளது என்பதை அறிவீராக.

ஒரு வகையில் அது கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது; இன்னொரு வகையில் அது கட்டுப்பாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது.

ஒரே உண்மைக் கடவுளானவர் என்றென்றும் இருந்து வந்திருக்கின்றார்; தொடர்ந்தும் என்றென்றும் இருந்தே வருவார்.

அதே போன்று, அவரது படைப்பும் ஆரம்பமே இல்லாது வந்திருக்கின்றது; முடிவும் இல்லாமலேயே இருந்து வரும்.

இருப்பினும் படைக்கப்பட்டவை அனைத்தும் ஒரு மூலத்தை முன்னதாகக் கொண்டுள்ளன; இவ்வுண்மை, சிறிதும் சந்தேகத்திற்கிடமின்றி, படைப்போனின் ஒருமைத் தன்மையை நிரூபிக்கின்றது.

மேலும், நீங்கள், விண்வெளிக் கோளங்களின் இயல்பினைக் குறித்து வினவியிருந்தீர்.

அவற்றின் இயல்பினைப் புரிந்துகொள்வதற்கு அவை சம்பந்தமாகப் பழங்காலத் திருநூல்களில் கொடுக்கப்பட்டுள்ள மறைக் குறிப்புகளின் பொருளை ஆராய வேண்டும்; இவ் விண்வெளிக் கோளங்கள், விண்ணுலகங்கள், ஆகியவற்றுடன் அவற்றின் தொடர்பின் தன்மையையும், அத்தன்மையின் மீது அவை ஏற்படுத்தும் தாக்கத்தையும் பாதிக்கும் வகையைக் கண்டு உணர வேண்டியதும் அவசியம்.

ஒவ்வோர் உள்ளமும் அத் திகைப்பூட்டும் விஷயத்தினால் மிகுந்த குழப்பமடைகின்றது; அதன் மர்மம் ஒவ்வொரு மனதையும் கலக்கமடையச் செய்கின்றது.

ஆண்டவன் ஒருவர் மட்டுமே அதன் முக்கியத்துவத்தை ஆழங்காண இயலும்.

இம்மண்ணுலகின் ஆயுள் காலம் பல்லாயிரம் ஆண்டுகளெனக் கணித்திடும் கற்றோர், தங்களின் நெடுங்கால ஆய்வுக்குப் பின்னுங் கூட மற்ற கோளங்களின் எண்ணிக்கையையோ வயதையோ ஆராய்வதில், தோல்வி அடைந்துள்ளனர்.

மேலும், இம்மனிதர்களால் விவரிக்கப் பட்டுள்ள தத்துவங்களினால் தோன்றியுள்ள எண்ணிறந்த வேறுபாடுகளைக் கவனியுங்கள்.

ஒவ்வொரு கோளமும் அதன் சொந்த உயிரிணங்களைக் கொண்டுள்ளது.

அவற்றின் எண்ணிக்கையை எந்த மனிதனுமே கணித்திட இயலாது.

உங்கள் பார்வையை எனது வதனத்தின் மீது நிலைக்கச் செய்துள்ளோரே! இந்நாளில், பேரொளி என்னும் பகலூற்று, அதன் பிரகாசத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

உயர்வுமிக்கோனின் குரல் அழைக்கின்றது.

யாம், முன்னாளில், இச்சொற்களை மொழிந்துள்ளோம்: “எந்த ஒரு மனிதனும் தனது பிரபுவைக் கேள்வி கேட்கும் நாள் இதுவல்ல; யார் ஆண்டவனின் அழைப்பினைச் செவி மடுத்துள்ளாரோ அவர், ஒளி என்னும் பகலூற்றாகிய அவரால் எழுப்பப்பட்ட குரலுக்கிணங்க எழுந்து, இவ்வாறு உரக்கக் குரல் எழுப்புவதுதான் பொருத்தமானது: “இதோ நான் இருக்கின்றேன், நாமங்களுக்கெல்லாம் அதிபதியே, நான் இதோ இருக்கின்றேன்; விண்ணுலகை எல்லாம் ஆக்கியோனே, நான் இதோ இருக்கின்றேன், இதோ இருக்கின்றேன்.

விண்ணுலகை எல்லாம் ஆக்கியோனே, இதோ இருக்கின்றேன்! உமது வெளிப்பாட்டின் மூலம் இறைவனின் திருநூல்களில் மறைந்திருந்த பொருள்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன என்பதற்கும், உமது புனித வாசகங்களிலும் உமது தூதர்களால் குறிப்பிடப்பட்டவை எவையோ அவை அனைத்தும் பூர்த்திச் செய்யப்பட்டுவிட்டன என்பதற்கும் நான் சாட்சியம் அளிக்கின்றேன்.

LXXXIII

மனிதனின் சாரம்சத்திற்கு இறைவன் வழங்கியுள்ள பகுத்தறியும் ஆற்றலை எண்ணிப் பாருங்கள்.

உங்களையே நீங்கள் பரிசோதியுங்கள்; எவ்வாறு உங்களின் அசைவும் அசைவின்மையும், உங்களின் விருப்பமும் குறிக்கோளும், உங்களின் காணுந்திறனும் கேட்குந்திறனும், உங்களின் முகருந்திறனும் பேச்சாற்றலும், மற்றும், எவையெல்லாம் உங்களின் பௌதீகப் புலன்கள், ஆன்மீக உணர்வுகள் ஆகியவையுடன் தொடர்புடையவையோ, அவற்றைக் கடந்தவையோ, அவை யாவுமே, அப்பகுத்தறியும் ஆற்றலில் இருந்தே தோன்றுகின்றன; அவற்றின் உள்ளமையும் அதற்கே கடன் பட்டிருக்கின்றன.

அதனுடன் அவை கொண்டுள்ள தொடர்பு அத்துணை நெருக்கமானதன் காரணமாக, மனித உடலுடன் அதன் தொடர்பு கண்ணிமைக்கும் நேரமேனும் துண்டிக்கப் படுமாயின், இப்புலன்கள் ஒவ்வொன்றின் இயக்கமும் உடனே செயலற்றுப்போகும்.

அவ் வாற்றலின் நடவடிக்கைக்கான ஆதாரத்தினை வெளிப்படுத்துவதற்கான சக்தியையே அவை இழந்துவிடும்.

முன்கூறப்பட்ட இச்சாதனங்கள் ஒவ்வொன்றும், அதனதன் முறையான இயக்கத்திற்கு, இப்பகுத்தறியும் ஆற்றலையே சார்ந்திருக்கின்றது என்பதும், தொடர்ந்தும் அவ்வாறே சார்ந்திருக்கும் என்பதுவும் ஐயத்துக்கிடமின்றித் தெளிவாகின்றது; அதுவே ,அனைத்திற்கும் மாட்சிமைமிகு பிரபுவாகிய அவரது வெளிப்படுத்துதலின் ஓர் அடையாளம் எனக் கருதப்பட வேண்டும்.

அதன் வெளிப்படுத்துதலின் வாயிலாக எல்லா நாமங்களும் பண்புகளும் புலனாக்கப்பட்டுள்ளன; அதன் இயக்கம் தடைச்செய்யப் படுமாயின் அவை அனைத்துமே அழிக்கப்பட்டு மரித்துப் போய்விடும்.

இவ்வாற்றல் காணுந்திறனுக்குச் சமமானதென உறுதியாகக் கூறுதல் முழுதும் உண்மைக்கு மாறானது; ஏனெனில், காணுந்திறனே பகுத்தறியும் ஆற்றலிலிருந்துதான் பெறப்படுகின்றதென்பதுடன் அதனையே சார்ந்து செயல்படுகின்றது.

அதே போன்று, இவ்வாற்றல் கேட்குந் திறனுக்குச் சமமானதென வாதிடுதலும் பயனற்றது; ஏனெனில் செவித்திறனும், அது செயற்படுவதற்குத் தேவையான ஆற்றலைப் பகுத்தறிவுத் திறனிடமிருந்தே பெறுகின்றது.

அதே தொடர்புதான், இவ்வாற்றலையும், மானிட உடல் என்னும் ஆலயத்தினுள் இருக்கும் இந்நாமங்கள், பண்புகள் ஆகியவற்றைப் பெறக்கூடியவற்றுடன் இணைத்திடுகின்றது.

பல்வேறான இப்புனித நாமங்களும், வெளிப்படுத்தப்பட்டப் பண்புகளும், இறைவனின் அடையாளம் என்னும் இச்சாதனத்தின் மூலமாகவே தோற்றுவிக்கப் பட்டுள்ளன.

அதன் சாராம்சத்திலும், மெய்ம்மையிலும், இவ்வடையாளம், அத்தகைய நாமங்களுக்கும் பண்புகளுக்கும் மேலாக, அளவிடற்கரிய உயர்வானதாகும்.

இல்லை, அதனைத் தவிர மற்றெதனையுமே அதன் மகிமையுடன் ஒப்பிடும் போது, அது முற்றிலும் இன்மை நிலையை அடைந்து, முழுதாக மறக்கப்பட்டுவிட்ட ஒன்றாகி விடுகின்றது.

நிலையான, ஒளிமயமான, இறைவனது வெளிப்பாட்டின் இவ்வடையாளத்தினை, தெய்வீகமாக விதிக்கப்பட்ட இவ்விழுமிய மெய்ம்மையினை, அறிவாற்றலில் தலைசிறந்த மனங்கள், கடந்த காலத்தில் அடைந்திட்டதும் வருங்காலத்தில் அடையக் கூடியதுமான ஒருமுகப்படுத்தப்பட்ட அறிவுத்திறம், புரிந்துணர்வு ஆகிய அனைத்தையும் கொண்டு, நீங்கள், உங்கள் உள்ளத்தினில், இப்பொழுதிருந்து, முடிவில்லா முடிவு வரை, ஆழ்ந்து சிந்தித்திடினும், அதன் மர்மத்தினைப் புரிந்து கொள்வதிலோ, அதன் பண்பினை விளக்குவதிலோ, தோல்வியே அடைந்திடுவீர்.

உங்களுள் உறையும் அம்மெய்ம்மையினைக் குறித்து, நீங்கள், பொருத்தமான புரிந்துகொள்ளலைப்பெறச் சக்தியற்றிருப்பதை உணர்ந்திடுவீர்; அப்பொழுதுதான் நீங்கள், உங்களாலோ, படைப்புப் பொருள் எதனாலுமோ, மங்காத பேரொளியினைக் கொண்ட பகல்நட்சத்திரமான, நித்திய காலங்களின் தொன்மை வாய்ந்தவரான, அவ்வுயிருள்ள இறைவனின் மர்மத்தினை ஆழங் கண்டிடச் செய்திடும் முயற்சியின் பயன் இன்மையைத் தயக்கமின்றி ஒப்புக்கொண்டிடுவீர்.

இறுதியில், ஒவ்வொரு மனத்திலும், இம்முதிர்ந்த சிந்தனை, அதன் சக்தியற்ற நிலையினை ஒப்புக்கொள்ளத் தூண்டுதல் பெறுகின்றதே, அதுதான் மானிட உணருந்திறனின் வளர்ச்சியின் உச்சக்கட்டம்; அதுவே மனித வளர்ச்சியின் உச்சக் கட்டத்தையும் குறிக்கின்றது.

LXXXIV

நீங்கள், ஒரே மெய்க்கடவுளாகிய அவரைச், சார்பற்றவராகவும், சகல படைப்புப் பொருள்களுக்கும் மேலாக, அளவிடற்கரிய உயரிய நிலையில் உள்ளவராகவும், கருதுவீராக.

பிரபஞ்சம் முழுவதுமே அவரது மகிமையைப் பிரதிபலிக்கின்றது; ஆனால் அவரோ, அனைத்திலிருந்தும் சுயேச்சையானவராகவும், அவரது உயிரினங்களை விஞ்சியவராகவுமே இருக்கின்றார்.

இதுவே தெய்வீக ஒருமைத்தன்மை என்பதன் பொருள்.

நித்திய மெய்ம்மையாகிய அவர், படைப்பினங்களைக் கொண்ட உலகின் மீது மறுக்கவியலாத அதிகாரம் செலுத்துகின்றார்; அவரது உருவமே படைப்பு முழுமையின் கண்ணாடியில் பிரதிபலிக்கின்றது; உள்ளவை அனைத்தும் அவரையே சார்ந்திருக்கின்றன; வாழ்வாதாரத்திற்கான அனைத்துப்பொருளின் தோற்றுவாய் அவரிடமிருந்தே உதயமாகின்றது.

இதுவே தெய்வீக ஒருமைத்தன்மை எனப் பொருள்படுகின்றது; இதுதான் அதன் அடிப்படைக் கொள்கை.

சிலர், தங்களின் வீண் கற்பனைகளில் மயங்கி, படைப்பினங்கள் அனைத்தையும் இறைவனின் உடந்தையாளர்கள் எனவும் கூட்டாளிகள் எனவும் கருதி வந்துள்ளனர்; தங்களை, அவரது ஒருமைத்தன்மையின் விரிவுரையாளர்கள் எனவும் கற்பனைச் செய்து கொள்கின்றனர்.

ஒரே உண்மைக் கடவுளாகிய அவர் சாட்சியாக! அத்தகைய மனிதர்கள், போலித் தனத்திற்கே இரையாகி வந்திருக்கின்றனர், தொடர்ந்தும் இரையாகி வருவர்; அவர்கள் இறைத் தத்துவத்தைச் சுருக்கவும் வரையறுக்கவும் செய்துள்ளோரின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட வேண்டியோராவர்.

எவரொருவர், கடவுள் ஒருவரா இருவரா என்னும் கருத்துக்களினால் குழப்பம் அடையாதும், கடவுள் பன்மையானவர் என்னும் கருத்துக்கள் எவையுமே தனது கொள்கையில் குழப்பம் ஏற்பட அனுமதித்திடாதும் இருந்திட்டாரோ, அவரே உண்மையான நம்பிக்கையாளர்; அவர், புனித மெய்ம்மையாகிய அவரை, இறைவனை, இயற்கையாகவே, எண்ணிக்கைகளின் வரையறைகளைக் கடந்துள்ள ஏகமானவரே எனக் கருதிடுவார்.

தெய்வீக ஒருமைத் தன்மையில் நம்பிக்கையின் சாரமென்பது இறைவனின் அவதாரமானவரையும் கண்களுக்குப் புலனாகாத, அணுகவியலாத, அறிந்து கொள்ளவும் இயலாத சாராம்சமாகிய அவரையும் ஒருவரே எனக் கொள்வதில்தான் அடங்கியிருக்கின்றது.

இதன் பொருளானது, முன்கூறப் பெற்றவருடன் தொடர்புடைய அவரது செயல்கள், சாதனைகள், அவர் ஆணையிடுபவை, தடைச்செய்பவை ஆகிய அனைத்துமே, எல்லா அமிசங்களிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும், எவ்விதத் தயக்கமும் இன்றி, இறைவனின் விருப்பத்துடன் முற்றிலும் ஒன்றானது எனக் கருதப்படல் வேண்டும்.

இறைவனின் ஏகத்துவத்தில் உண்மை நம்பிக்கையாளர் அடைய நம்பிக்கை கொள்ளும் அதி உயரிய நிலை இதுவேயாகும்.

இந்நிலையை அடைந்திடும் ஒரு மனிதன் மகிழ்வெய்துவானாக; தங்களின் நம்பிக்கையில் பற்றுறுதியுடன் இருந்திடுவோரில் இவர்கள் சேர்க்கப்படுவர்.

LXXXV

எனது ஊழியர்களே! தெய்வீகமானதும், கிளர்ச்சியுறச் செய்யக்கூடியதுமான இவ் வசந்தகாலத்தில் உங்கள் மீது பொழியப் படும் அருள்மிகு தயையின் வாயிலாக, நீங்கள், உங்கள் ஆன்மாக்களை எழுச்சிப் பெறவும், புத்துயிர்ப்பெறவும் செய்துகொள்வது நன்று.

அவரது மேன்மைமிகு, பேரொளிமிகு, பகல் நட்சத்திரம் உங்கள் மீது அதன் பிரகாசத்தினை விழச்செய்துள்ளது; அவரது அளவிலா அருள் மேகங்கள் உங்களுக்கு மேல் படர்ந்துள்ளது.

தன்னை அத்துணை உயர்வான வள்ளன்மையை இழக்கச் செய்து கொள்ளவோ, இப்புதிய உடையினில் தோன்றியிருக்கும் தனது அதி அன்புக்குரியவரின் அழகினை அறிந்துகொள்ளத் தவறாதிருக்கவோ செய்துகொண்டுள்ள ஒருவரின் பரிசு எத்துணை உயர்வானது.

கூறுவீராக: மனிதர்களே! இறைவனின் தீபம் எரிந்து கொண்டிருக்கின்றது; கவனமாயிருங்கள்; இல்லையெனில், உங்களின் ஆணைமீறுதல் அதன் ஒளியை அணைத்திடப்போகின்றது.

நீங்கள் எழுந்து, உங்கள் பிரபுவாகிய இறைவனை மிகைப் படுத்துவதற்கான நேரம் இதுவே.

உடல்சுகத்தைத் தேடாதீர்; உங்கள் இதயங்களைத் தூய்மையாகவும் கறையின்றியும் வைத்திடுவீர்.

தீயோன், உங்களைச் சிக்க வைப்பதற்குத் தயார் நிலையில் காத்துக் கொண்டிருக்கிறான்.

அவனது நயவஞ்சகத் திட்டத்தை எதிர்ப்பதற்காக இடைத்துணியை வரிந்து கட்டிக்கொண்டு, ஒரே மெய்க்கடவுளாகிய அவரது நாமத்தின் ஒளியினால் வழிநடத்தப்பட்டு, நீங்கள் உங்களைச் சூழ்ந்துகொண்டுள்ள இருளில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் எண்ணங்களை, உங்களிலேயே அல்லாது, அன்புமிகு நேசரில் மையப் படுத்துங்கள்.

கூறுவீராக: விலகிச் சென்று வழி தவறிப் போனவர்களே! உண்மையைத் தவிர வேறெதையுமே பேசாத தெய்வீகத் தூதர், அதி அன்புக்குரிய தமது வருகையை உங்களுக்கு அறிவித்திருக்கின்றார் பாருங்கள்; அவர் இப்பொழுது வந்துவிட்டார்: எதற்காக நீங்கள் வாட்டமுற்றும் சோர்வுற்றும் இருக்கின்றீர்? தூய்மையாகவும், மறைவாகவுள்ள அவர், திரையை விளக்கிக் கொண்டு உங்களிடையே தோற்றம் அளித்துள்ள இவ்வேளையில், எதனால் நீங்கள் நம்பிக்கை இல்லாதிருக்கின்றீர்? முதலும் முடிவுமாகிய அவர், அசைவின்மையும் அசைவும் ஆகிய அவர், இப்பொழுது உங்களின் கண்களுக்கு முன் தோன்றியுள்ளார்.

எவ்வாறு இந்நாளில், ஆரம்பம் முடிவில் பிரதிபலிக்கின்றது என்பதையும், அசைவின்மையினின்று அசைவு தோற்றுவிக்கப்படுகின்றது என்பதையும் பாருங்கள்.

படைப்பு முழுவதிலும் தோற்றுவிக்கப்பட்டுள்ள இவ்வசைவு, எல்லாம் வல்லவரின் ஆற்றல்மிகு திருச்சொற்களின் வலுமிக்கச் சக்தியினால் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

எவர் அதன் உயிரூட்டும் சக்தியினால் எழுச்சியூட்டப்பட்டுள்ளாரோ, அவர், அன்புக்குரியவரின் அரசவையை அடைய உந்தப்படும் நிலையில் தன்னைக் காண்பார்; மேலும், யார் தன்னை, அதனை இழக்கச்செய்து கொள்கின்றாரோ, அவர், மீளவியலா மனத்தளர்ச்சியினுள் மூழ்கிடுவார்.

எவரை, உலகமும் அதில் உள்ள அனைத்தும் இந்நாளின் பேரொளியினை அறிந்துகொள்வதிலிருந்து தடுத்திடாது இருக்கின்றதோ, மனிதரின் பயனற்றப் பேச்சு, தன்னை, நேரான பாதையிலிருந்து விலக விடாது பார்த்துக் கொள்கின்றாரோ, அவரே உண்மையான விவேகி.

எவர், இவ்வெளிப்பாட்டின் வியத்தகு உதயத்தின்போது, ஆன்மாவைத் துடிப்புறச்செய்யும் அதன் தென்றல் காற்றினால் எழுச்சி பெறத் தவறுகின்றாரோ அவர் மாண்டவரைப் போன்றவரே.

எவர், அதி சிறந்த மீட்பாளரை அறிந்து கொள்ளத் தவறி, தனது ஆன்மாவை, ஆசை என்னும் விலங்குகளில், துயருறும் வகையிலும், உதவியற்ற நிலையிலும் கட்டிப்போடுகின்றாரோ, அவர், உண்மையாகவே ஒரு சிறைக் கைதியாவார்.

எனது ஊழியர்களே! யார் இந் நீரூற்றிலிருந்து சுவைக்கின்றாரோ, அவர், நித்திய வாழ்வைப் பெற்றவராவார்; யார், அதிலிருந்து பருக மறுத்திட்டாரோ, அவர், மாண்டோரைப் போன்றவரே.

கூறுவீராக: அநீதியின் சேவகர்களே! பேராசை, உங்களைச் சுயஜீவியான அவரது இனிய குரலின்பால் செவிசாய்ப்பதிலிருந்து தடுத்துவிட்டுள்ளது.

உங்கள் உள்ளங்களிலிருந்து அதனைக் கழுவிடுவீராக; அதனால், அவரது தெய்வீக இரகசியங்கள் உங்களுக்கு அறிவிக்கப்படக்கூடும்.

அவரைத் தெளிவான, பேரொளி மிக்கச் சூரியனாகப் பாருங்கள்.

கூறுவீராக: புரியுந் திறனற்றோரே! ஒரு கடுஞ் சோதனை உங்களைப் பின் தொடர்கின்றது; அது உங்களைத் திடீரெனத் தாக்கும்.

உங்களை எழுச்சியுறச் செய்து கொள்ளுங்கள்; அதனால் ஒரு வேளை அது உங்களுக்குக் கேடு விளைவிக்காது கடந்து சென்றிடக் கூடும்.

தனது ஒளியின் மகிமையுடன் உங்களிடம் வந்துள்ள பிரபுவாகிய உங்கள் இறைவனது திருநாமத்தின் உயரிய தன்மையினை அங்கீகரித்திடுங்கள்.

மெய்யாகவே, அவர், சர்வமும் அறிந்தவர், அனைத்தும் கொண்டுள்ளவர், தலைசிறந்த பாதுகாப்பாளர்.

LXXXVI

இப்பொழுது, மனித ஆன்மாக்கள், உடலிலிருந்து பிரிக்கப்பட்ட பின்பும், தொடர்ந்து ஒன்றையன்று அறிந்துகொள்ள முடியுமா என்ற உங்களது கேள்வி சம்பந்தமாக; செந்நிறக் கலத்தினுள் பிரவேசித்து, அதனுள் நிலைப்பெற்றுள்ள பஹாவின் மக்களது ஆன்மாக்கள் ஒன்றோடொன்று நெருங்கிப் பழகி, உரையாடி, அவர்களின் வாழ்க்கை, அவா, நோக்கம், முயற்சி ஆகியவற்றில் ஒரே ஆன்மாவைப் போல் நெருங்கிப் பழகுவர் என்பதை அறிவீராக.

உண்மையாகவே, கூரிய நோக்குடையோர், புரிந்துகொள்ளும் ஆற்றல் வழங்கப்பட்டோர் ஆகிய அவர்களே பரந்த அறிவு பெற்றோர்; அவ்வாறாகத்தான் சகலத்தையும் அறிந்தவரும் சர்வ விவேகியுமான அவரால் விதிக்கப்பட்டுள்ளது.

இறைவனது கலத்தின் வாசிகளாகிய பஹாவின் மக்கள் அனைவருமே, ஒருவர் மற்றவரின் தரத்தையும், நிலையையும் அறிந்திருப்பதோடு நெருங்கிய உறவு, சகோதரத்துவம் ஆகியவற்றினால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருப்பர்.

இருப்பினும், அவ்வாறான நிலை அவர்களது நம்பிக்கை, நடத்தை ஆகியவற்றைப் பொறுத்தே இருக்கும்.

தரத்திலும் அந்தஸ்திலும் சமமாக உள்ளவர்கள், ஒருவர் மற்றவரின் ஆற்றல், தன்மை, சாதனைகள், சிறப்புகள், ஆகியவற்றை அறிந்திருப்பர்.

ஆனால், தரத்தில் குறைந்தவர்கள், தங்களைவிட உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் ஸ்தானத்தைப் பொருத்தமுறப் புரிந்து கொள்ளவோ, அவர்களின் சிறப்பை மதிப்பிடவோ ஆற்றலற்றிருப்பர்.

உங்களின் பிரபுவிடமிருந்து ஒவ்வொருவரும் அவரவர் பங்கைப் பெற்றிடுவார்.

ஒரு மனிதர், தனது ஆன்மா, அனைத்திற்கும் மாட்சிமை மிகு பிரபுவாகிய, அதி சக்தி வாய்ந்த, என்றும் மன்னிப்பவரான, கருணைமயமான இறைவனை நோக்கிச் சிறகடித்துப் பறந்திடும் வரை தனது முகத்தை ஆண்டவன்பால் திருப்பி, அவரது அன்பில் பற்றுறுதியுடன் நடந்திருப்பாராயின், அவர், ஆசீர்வதிக்கப் பட்டவராவார்.

இருப்பினும், சமய நம்பிக்கையற்றோரின் ஆன்மாக்கள் -- இதற்கு நானே சாட்சி பகர்கின்றேன் - கடைசி மூச்சுவிடும் வேளையில், அவர்களின் கவனத்தைத் தொட்டிடாதிருந்த நல்லவைகள் அவர்களுக்கு உணர்த்தப்படும்; தங்களின் அவல நிலைக்காக அழுது புலம்புவர்; இறைவனின் முன்னிலையில் பணிவு காட்டுவர்.

தங்களின் ஆன்மாக்கள் உடலைவிட்டுப் பிரிந்த பின்பும் தொடர்ந்து அவ்வாறே செய்து வருவர்.

மனிதரெல்லாம், தங்களின் தூல மரணத்திற்குப் பின், தங்களது செயல்களின் தரத்தை மதிப்பிட்டுத் தங்களின் கைகள் ஆற்றியுள்ளவை அனைத்தையும் தெளிவாக உணர்ந்து கொள்வர்.

தெய்வீக ஆற்றல் என்னும் தொடுவானத்திற்கு மேல் பிரகாசிக்கும் பகல் நட்சத்திரத்தின் பெயரால் நான் ஆணையிடுகின்றேன்! ஒரே உண்மைக் கடவுளாகிய அவரைப் பின்பற்றுவோர், இவ்வாழ்க்கையிலிருந்து விடுபட்டுச்செல்லும் அத்தருணம், வருணிக்கவே இயலாத அளவு அத்துணை மகிழ்ச்சியும் ஆனந்தமும் அனுபவிப்பர்; அதே வேளையில், தவறான வாழ்க்கை வாழ்வோர், எதுவுமே விஞ்சிடாத அளவு, அத்துணை அச்சத்தினாலும் நடுக்கத்தினாலும் பீடிக்கப்பட்டு, பீதியினால் நிரப்பப்படுவர்.

மதங்களுக்கெல்லாம் பிரபுவான அவரது அருள்மிகு தயையின் மூலமாகவும், பல்வேறு வள்ளன்மைகளின் மூலமாகவும், அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட, தரம் குறையாத நம்பிக்கை என்னும் மதுரசத்தினைப் பருகிடும் ஒருவருக்கு அது நன்று.

இதுவே இறைவனின் அன்புக்குரியவர்கள், தங்களது அவதாரத்தின்பால் பார்வையைச் செலுத்தி, அவ் வவதாரம் வெளியிடத் திருவுளம் கொண்டவை எவையோ அவற்றின்பால் அதனை நிலைப்படுத்த வேண்டிய நாள்.

கடந்த காலங்களின் குறிப்பிட்ட சில வழக்குகள் எவ்வித அடிப்படையும் இல்லாதவை; அதே வேளையில், கடந்த கால சந்ததிகள், தங்களின் நூல்களில், குறித்தும், நம்பிக்கை கொண்டுமுள்ள கருத்துக்கள், பொதுவாகத், தங்களின் இழிவான எண்ணத்தினின்று உதித்திட்ட ஆசைகளின் பாதிப்புக்கு ஆளானவையே ஆகும்.

மனிதரிடையே இப்பொழுது வழக்கில் இருந்து வரும் இறைவனின் திருமொழியைக் குறிக்கும் பெரும்பான்மையான விரிவுரைகளும் பொருள் விளக்கங்களும் முற்றிலும் உண்மை இல்லாதிருப்பதை நீங்கள் பார்க்கின்றீர்.

சில வேளைகளில், குறுக்கிடும் திரைகள் கிழிக்கப்படும்போது, அவற்றின் பொய்ம்மை அம்பலமாக்கப்பட்டுள்ளது.

இறைவனின் திருமொழிகளின் பொருள் எதனையும் புரிந்து கொள்வதில் தோல்வி அடைந்துள்ளதைத் தாங்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

எமது நோக்கம், இறைவனின் நேசர்கள் தங்களின் உள்ளங்களையும் காதுகளையும் முற்காலத்தின் பயனற்றக் கூற்றுக்களிலிலிருந்து தூய்மைப் படுத்திக்கொண்டு, தங்களின் உள்ளார்ந்த ஆன்மாக்களைக் கொண்டு, அவரது வெளிப்பாடு என்னும் பகலூற்றின்பாலும் அவரால் வெளிப்படுத்தப் பட்டவையின் பாலும், திருப்புவராயின், அத்தகைய நடத்தை, இறைவனின் பார்வையில், மிகப் பாராட்டத் தக்கதாகக் கருதப் படும் என்பதைக் காட்டுவதே யாகும்.

அவரது நாமத்தைப் போற்றி, அவரிடம் நன்றியுடையோராய் இருப்பீராக.

எனது நேசர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பீராக; இறைவன் அவர்களைத் தனது அன்பிற்காகத் தேர்ந்தெடுத்து, அவர்களின் நோக்கத்தை அடையச்செய்துள்ளார்.

உலகங்களுக்கெல்லாம் பிரபுவாகிய ஆண்டவனுக்கே எல்லா மகிமையும் உரியதாகுக.

LXXXVII

இப்பொழுது, “மனித இனத்தின் தந்தையாகிய ஆதாமிற்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளையும், அவர்கள் காலத்தில் வாழ்ந்த அரசர்களையும் பற்றிய பதிவேடுகள் எதுவுமே காணப்படவில்லையே, அது எப்படி?” என்னும் உங்களின் கேள்வி சம்பந்தமாக: அவர்கள் சம்பந்தமான எவ்விதக் குறியீடுகளும் இல்லாதிருப்பது அவர்கள் இல்லாதிருந்தனர் என்பதற்கு ஆதாரமாகாது என்பதை நீங்கள் அறிவீராக.

அவர்களைக் குறிக்கும் பதிவேடுகள் எவையும் இப்பொழுது கிடைக்காததற்குக் காரணம், அக்காலம் நெடுங்காலத்திற்கு முந்தியதாய் இருந்ததுதான்; அதோடு, அவர்களின் காலத்திற்குப் பின் உலகத்திற்கு ஏற்பட்ட மாபெரும் மாற்றங்களும் அதற்கு மற்றொரு காரணமாகும்.

மேலும், மனிதரிடையே இப்பொழுது வழக்கிலிருந்து வரும் எழுத்து வகைகளும் முறைகளும் ஆதாமுக்கு முன்பாக இருந்த தலைமுறையினருக்குத் தெரியாதிருந்தது.

மனிதர்கள் முற்றிலும் எழுத்தறிவே இல்லாதிருந்த ஒரு காலமும் இருந்தது; அக்காலத்தில், இப்பொழுது அவர்கள் உபயோகித்து வரும் முறையை விட முழுமையாக வேறுபட்ட முறையை மேற்கொண்டிருந்தனர்.

இதனைப் பொருத்தமுற விவரிப்பதற்கு விரிவான விளக்கம் தேவைப் படும்.

ஆதாமின் காலமுதல் இன்றுவரை தோன்றியுள்ள மாற்றங்களை எண்ணிப் பாருங்கள்.

இப்பொழுது உலக மக்களால் பேசப்படும் பல்வேறான, பரவலாகத் தெரிந்துள்ள மொழிகள், இப்பொழுது அவர்களிடையே நடைமுறையிலுள்ள விதிகளையும் சம்பிரதாயங்களையும் போலவே, தொடக்கத்தில் தெரியாதிருந்தன.

அக்காலத்திய மக்கள், இப்பொழுதுள்ள மக்களுக்குத் தெரிந்திராத ஒரு மொழி பேசினர்.

மொழி வேறுபாடுகள் பிற்காலத்தில்தான் ஏற்பட்டன; அது பேபல் எனப்படும் இடத்தில் நிகழ்ந்தது.

அது “மொழிகளில் குழப்பம் தோன்றிய இடம்“ என பொருள்படுவதால் அதற்கு பேபல் என்ற பெயர் கொடுக்கப் பட்டது.

அதற்குப்பின், அப்பொழுது இருந்த மொழிகளில் சிரியாக் மொழி பிரபலமடைந்தது.

முந்தைய திருமறைகள் அம்மொழியிலேயே வெளிப்படுத்தப்பட்டன.

பிறகு, ஆப்ரஹாம், ஆண்டவனின் நண்பர், தோன்றி, தெய்வீக வெளிப்பாட்டின் ஒளியினை உலகின்மீது விழச்செய்தார்.

அவர் ஜோர்டான் நதியைக் கடக்கும் பொழுது உபயோகித்த மொழி ஹிப்ரு மொழியாகும் (இப்ரானீ); அதன் பொருள், “கடக்கும் மொழி”.

அதன் பிறகு, இறைவனின் நூல்களும் திருமறைகளும் அந்த மொழியிலேயே வெளிப்படுத்தப்பட்டன; ஒரு குறிப்பிட்ட காலம் கடந்த பின்னரே அரபு மொழி வெளிப்பாட்டு மொழியாக ஆகியது .

ஆகவே, ஆதாமின் காலம் முதல் இன்றுவரை, மொழி, பேச்சு, எழுத்து ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எத்துணை எண்ணற்றதும் பரவலானதுமாய் இருந்திருக்கின்றன என்பதைப் பாருங்கள்.

இன்னும் எந்தளவு அதிகமானதாய் இருந்திருக்க வேண்டும் அவருக்கு முன்பாக ஏற்பட்டிருந்த மாற்றங்கள்! யாம் இவ்வார்த்தைகளை வெளிப்படுத்துவதன் நோக்கம், ஒரே உண்மைக் கடவுளாகிய அவர், தமது அதிவுயரிய, அனைத்திற்கும் மேம்பட்ட ஸ்தானத்தில், எப்பொழுதுமே தன்னைத் தவிர மற்றனைவரின் புகழ்ச்சிக்கும், புரிந்துகொள்ளலுக்கும் மேலான மிகச் சிறந்த நிலையிலேயே இருந்துவந்திருக்கின்றார், தொடர்ந்தும் எக்காலத்தும் அவ்வாறே இருந்தும் வருவார் என்பதைச் சுட்டிக் காட்டுவதே.

அவரது படைப்பு எக்காலத்தும் இருந்து வந்தே உள்ளது; அவரது தெய்வீக மகிமையின் அவதாரங்களும் அவரது நித்திய புனிதத் தன்மை என்னும் பகலூற்றுகளானோரும், நினைவுக்கெட்டாத காலம் முதல், மனித இனத்தை ஒரே உண்மைக் கடவுளின்பால் அழைத்திடுமாறு பொறுப்பு வழங்கப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டு வந்திருக்கின்றனர்.

அவர்களுள் சிலரின் பெயர்கள் மறக்கப்பட்டும், அவர்களின் வாழ்க்கையைக் குறிக்கும் பதிவேடுகள் இழக்கப்பட்டுமிருப்பற்கு உலகத்தில் ஏற்பட்டு வந்துள்ள கொந்தளிப்புகளும் மாற்றங்களுமே காரணங்களாகும்.

சரித்திரக் குறிப்புகளும் மற்றப் பொருள்களும் உள்பட, உலகத்தில் உள்ளவற்றை எல்லாம் அழித்திட்ட ஒரு பிரளயத்தைப் பற்றிச் சில நூல்களில் குறிக்கப்பட்டுள்ளது; அன்றியும், பல நிகழ்வுகளின் அடையாளங்களைத் துடைத்தழித்திட்டப் பல பிரளயங்களும் நிகழ்ந்துள்ளன.

மேலும், இப்பொழுதிருக்கும் சரித்திர வரலாறுகளில் வேறுபாடுகள் காணப் படுகின்றன; உலகின் பல்வேறான இனங்கள் ஒவ்வொன்றும் அக்காலக் கட்டத்தையும் அதன் சரித்திரத்தையும் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளன.

சில, எட்டாயிரம் ஆண்டுகளிலிருந்து அவற்றின் வரலாற்றினை விவரிக்கின்றன; மற்றவை, பன்னிரண்டாயிரம் ஆண்டுகள் வரை பின்னோக்கிச் செல்கின்றன.

“ஜூக்“ என்பவரின் நூலைப் படித்திருப்பவர் யாராயினும் அவருக்குப் பற்பல நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரலாறுகளுக்கு இடையே எந்தளவு வேறுபாடுகள் உள்ளன என்பது தெளிவாகவும் ஐயத்திற்கு இடமின்றியும் தெரிந்திடும்.

நீங்கள், இம் முரணான கட்டுக்கதைகளையும் பரம்பரை பழக்க வழக்கங்களையும் புறக்கணித்து, இவ்வதி மேன்மைமிகு வெளிப்பாட்டின்பால் உங்கள் பார்வையைத் திருப்பிட இறைவன் அருள் புரிவாராக.

LXXXVIII

நீங்கள் உண்மையை அறிந்திடக் கூடியோராயின், நீதியின் சாராம்சம், அதன் தோற்றுவாய் ஆகிய இரண்டுமே, மனிதரிடையே இறைவனது மெய்ம்மையின் அவதாரமாகிய அவரால் விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளுக்குள் அடக்கமானவை என்பதை அறிவீராக.

அவர், மெய்யாகவே, படைப்பனைத்திற்கும் தன்னையே நீதியின் தவறா அளவுகோலாக அவதரிக்கச் செய்துகொண்டார்.

அவரது சட்டம் மண்ணிலும் விண்ணிலும் உள்ளோர் அனைவரின் உள்ளங்களையும் பீதியினால் தாக்கக்கூடியதாய் இருந்திடினும், அச் சட்டம் தெளிவான நீதியே அல்லாது வேறெதுவுமன்று.

இதனை நீங்கள் அறிந்துகொள்ளக் கூடியோராயின், இச்சட்டம், மனிதரின் உள்ளங்களில் தூண்டிடும் அச்சங்கள், கலவரங்கள் ஆகியவற்றை, உண்மையாகவே, தாய்ப்பாலை மறக்கச் செய்யும் போது, குழந்தை அழுவதற்குச் சமமாகவே கருதிட வேண்டும்.

மனிதர்கள், இறைவனது வெளிப்பாட்டின் செயல்நோக்கத்தைக் கண்டிடுவராயின், தங்களின் அச்சங்களை அப்பால் எறிந்துவிட்டு, நன்றியுணர்வு நிறைந்த உள்ளத்துடன், பெருமகிழ்ச்சியில் பேரின்பமுறுவர்.

LXXXIX

இறைவனின் திருமொழி - அவரது மகிமை மேன்மைப்படுத்தப்படுமாக - என்றுமே நிலைத்திருக்கும் என நீங்கள் நம்புவது போலவே, அதன் அர்த்தமும் என்றுமே முற்றுப்பெறாமலே இருந்திடும் என்பதை அசைக்கவியலாத் திடப்பற்றுடன் நம்ப வேன்டும் என்பதை நிச்சயமாக அறிவீராக.

இருப்பினும், யார் அதன் பொருள் விளக்குவோராக நியமிக்கப்பட்டனரோ, எவரது உள்ளங்கள் அதன் இரகசியங்களின் பொக்கிஷங்கள் ஆனவையோ, அவர்கள்மட்டுமே அதன் எண்ணிறந்த விவேகத்தினை முழுதும் புரிந்துகொள்ள இயலும்.

யாராவது, திருமறைகளைப் படிக்கும்பொழுது, அவற்றிலிருந்து மனிதர்களிடையே ஆண்டவனின் பிரதிநிதியானவரின் அதிகாரத்தை எதிர்ப்பதற்குப் பொருத்தமானவை எவையோ, அவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கத் தூண்டப்படுகின்றாரோ, அவர், வெளித் தோற்றத்திற்கு, நடமாடுபவர் போலவும், அண்டையருடன் உரையாடுபவர் போலவும் தோன்றிடினும், உண்மையாகவே, அவர், ஒரு மாண்டவரைப் போன்றவரே அந்தோ, இவ்வுலகம் என்னை நம்பிடக் கூடுமாக! பஹாவின் உள்ளத்தினில் பொதிந்து கிடப்பவை அனைத்தும், நாமங்களுக்கெல்லாம் பிரபுவாகிய தனது இறைவனானவர் அவருக்குப் போதித்தவையாகும்; அவை மனித இனத்திற்குத் திரைவிலக்கப்படுமாயின், உலகின் மீதுள்ள ஒவ்வொரு மனிதனும் வாயடைத்துப் போய்விடுவான்.

எந்தளவு எண்ணிறந்தவை, சொற்கள் என்னும் ஆடைக்குள் அடங்காத உண்மைகள்! தகுந்த முறையில் வருணித்திட இயலாத அம் மெய்க்கூற்றுகளின் எண்ணிக்கைதான் எத்துணைப் பேரளவானவை; அவற்றின் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்படவே முடியாது; நெருங்கிட வியலாத தூரத்திலுள்ள மறைக் குறிப்புகளைக் கொண்டும் அவற்றை விளக்கிடவும் முடியாது! நியமிக்கப்பட்ட நேரம் வரும் வரை கூறப் பெறாமலேயே இருக்க வேண்டிய உண்மைகள்தாம் எந்தளவு எண்ணிறந்தவை! கூறப்பட்டிருப்பது போல்: “ஒரு மனிதன் அறிந்திருப்பது ஒவ்வொன்றும் தெரிவிக்கப்படக்கூடியதாய் இராது; அன்றியும், அதனை அறிவிப்பதற்கான நேரமும் பொருத்தமான நேரம் எனக் கருதிடவும் இயலாது; அதுவுமல்லாது, அறிவிப்பதற்கான நேரம் பொருத்தமாய் இருந்திடினும் அதனைக் கேட்போரின் தகுதியுடைமைக்கு அது பொருத்தமானதாய் இல்லாதும் இருக்கலாம்“.

இவ்வுண்மைகளில் சில, எமது ஞான ஒளியின் களஞ்சியங்களும் எமது மறைவான அருளின் பெறுநர்களும் கொண்டுள்ள புரிந்திடும் ஆற்றலின் அளவுக்கேற்பவே தெரிவிக்கப் படலாம்.

தமது சக்தியைக் கொண்டு உங்களை வலுப்பெறச் செய்யுமாறு இறைவனை வேண்டுகின்றோம்; அதனால், எல்லா மனித அறிவிலிருந்தும் நீங்கள் உங்களைப் பற்றறுத்துக் கொள்ளக் கூடும்; ஏனெனில், “ஒரு மனிதன், அறிவனைத்தின் நோக்கமான அவரைக் கண்டும், தெரிந்தும் கொண்டிட்டப் பின்பு, அறிவைத் தேட முயற்சிப்பதில் அடையும் பயன்தான் என்ன?” அறிவின் வேரையும், அதன் ஊற்றாகிய அவரையும் பற்றிக்கொள்ளுங்கள்; அதனால் நீங்கள், மானிட அறிவில் தேர்ச்சிப்பெற்றோர் எனத் தங்களைக் கூறிக்கொள்வோர் அனைவரிடமிருந்தும், உங்களைச் சுதந்திரம் அடைந்தோராய்க் கண்டிடக்கூடும்; மேலும், அவர்களின் அவ்வுரிமைக்கோரலுக்கு அறிவொளி வழங்கும் எந்த ஒரு நூலின் அத்தாட்சியும் அதற்கு ஆதாரம் அளிக்க இயலாது.

XC

விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலுமுள்ளது எதுவோ, அது, தன்னுள், இறைவனின் பண்புகள், நாமங்கள், ஆகியவை வெளிப்படுத்தப்பட்டுள்ளமைக்கு, நேரடியான ஆதாரமாகின்றது; ஆகையினால்தான், ஒவ்வோர் அணுவிற்குள்ளும் அவ்வதி மேன்மைமிகு பேரொளியின் வெளிப்பாட்டிற்குத் தெளிவான சான்றுகளின் அடையாளங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அவ்வெளிப்பாட்டின் ஆற்றலின்றி, உயிரினங்கள் எதுவுமே இருக்க முடியாதென நான் நினைக்கின்றேன்.

எத்துணை ஜோதிமிக்கவை ஓர் அணுவினுள் பிரகாசித்திடும் சுடரொளிகள்! எந்தளவு பரந்ததாகவும் அகன்றதாகவும் உள்ளது ஒவ்வொரு துளியினுள் பொங்கியெழும் விவேகம் எனும் பெருங்கடல்கள்! மனிதனைப் பொறுத்தமட்டில் இது ஓர் ஒப்புயர்வற்ற உண்மை; படைப்புப் பொருள்கள் அனைத்திலிருந்தும், அவன் மட்டுமே, அத்தகைய வரங்கள் என்னும் அங்கி அணிவிக்கப் பட்டும், அத்தகைய மதிப்புமிக்க உயர்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளான்.

ஏனெனில், அவனுள்தான், படைக்கப்பட்ட வேறெந்த உயிரினமுமே மேம்படவோ, விஞ்சிடவோ இயலாத அளவு, இறைவனின் அனைத்துப் பண்புகளும் நாமங்களும், உள்ளார்ந்த நிலையில், வெளிப்படுத்தப் பட்டுள்ளன.

அந் நாமங்கள், அப் பண்புகள் ஆகிய அனைத்துமே அவனுக்குப் பொருந்தும்.

அவர் கூறியிருப்பதுபோல்: “மனிதன் எனது மர்மம்; யானோ அவனது மர்மம்.

” இவ்வதி விழுமிய, உயரிய கருத்தைத் தெளிவாய் காட்டிடும் எண்ணற்ற வாசகங்கள், மீண்டும் மீண்டும், எல்லாத் தெய்வீக நூல்களிலும் திருமறைகளிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அவர் வெளிப்படுத்தியுள்ளது போல்: “யாம், நிச்சயமாக, எமது அடையாளங்களை உலகிலும் அவர்களுக்குள்ளேயும் காண்பித்திடுவோம்.

” அவர் மேலும் கூறுகின்றார்: “உங்களுக்குள்ளும் நீங்கள், இறைவனின் அடையாளங்களைக் கண்டிட மாட்டீரா?” மீண்டும் அவர் வெளிப்படுத்துகின்றார்: “ நீங்களும் கடவுளை மறந்திட்டோரைப் போல் ஆகிடாதீர்; ஏனெனில், அவரும், அவர்களைத் தங்களையே மறந்திடச் செய்திட்டார்.

” இது தொடர்பாக, நித்திய மன்னராகிய அவர் - மறைபொருளான திருக்கூடாரத்தினுள் வசிப்போர் அனைவரின் ஆன்மாக்களும் அவருக்காகப் பலியிடப்படுமாக -- கூறி இருக்கின்றார்: “தன்னையே அறிந்திட்ட ஒருவர் இறைவனையே அறிந்தவராவார்.

” .

இங்குக் கூறப்பட்டுள்ளதில் இருந்து, பொருள்கள் அனைத்தும், அவற்றின் உள்ளார்ந்த மெய்ம்மையில், அவற்றுக்குள்ளேயே, இறைவனின் நாமங்கள், பண்புகள் ஆகியவற்றின் வெளிப்படுத்துதலுக்குச் சாட்சியமளிக்கின்றன என்பது தெளிவாகின்றது.

ஒவ்வொன்றும், அதனதன் தகுதியுடைமைக்கேற்ப, இறைவனின் ஞானத்தைக் காட்டுகின்றது, வெளியிடவும் செய்கின்றது.

இவ்வெளிப்பாடு, கண்ணுக்குப் புலனாகும், புலனாகா பொருள்கள் அனைத்தையும் உள்ளடக்கும் அளவு அத்துணை ஆற்றல் மிக்கதும், உலகளாவியதுமாகும்.

அவர் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்: “உம்மைத் தவிர, நீரே கொண்டிராத வெளிப்படுத்தும் சக்தியை, உம்மையே நீர் வெளிப்படுத்திக் கொள்ளக் கூடிய ஆற்றலை, வேறெதுவும் கொண்டிருக்கின்றதா? உம்மை உய்த்துணராக் கண் குருடானதாகும்.

” அவ்வாறே, நித்திய மன்னராகிய அவர் திருவாய் மொழிந்திருக்கின்றார்: “அதனுள்ளும், அதற்கு முன்பாகவும், அதற்குப் பின்பும் நான் இறைவனைக் கண்ணுற்றதைத் தவிர நான் வேறெதனையும் கண்டிலேன்.

” மேலும், குமாய்ல் மரபு வழக்கில் எழுதப்பட்டிருப்பதாவது: “நித்தியம் என்னும் காலைப்பொழுதிலிருந்து ஓர் ஒளி பிரகாசித்துள்ளதைக் காண்பீர்களாக.

அனைத்து மனிதர்களின் அதி உள்ளார்ந்த மெய்ம்மையினையும் அதன் அலைகள் ஊடுருவி விட்டனவன்றோ!” படைப்புப் பொருள்கள் அனைத்தையும்விட உயர்ப்பண்பினனான, மிகச்சிறந்தவனான மனிதன், இவ்வெளிப்பாட்டின் உள்ளுயிர்த்துடிப்பில், அவை அனைத்தையும் விஞ்சிடுகின்றான்; அவனே அதன் மகிமையின் மிகுதியான வெளிப்படுத்துதலாகும்.

மேலும், மெய்ம்மைச் சூரியனின் இவ்வவதாரங்களே மனிதர் அனைவரிலும் தனிச்சிறப்புடையோரும் தீர்க்கமானோருமாவர்.

அன்றியும், அவர்களைத் தவிர மற்றவையனைத்தும், அவர்களின் விருப்பத்தின் இயக்கத்தின் மூலமாகவே வாழ்கின்றன; அவர்களின் அருட்பொழிவின் மூலமே இயங்குகின்றன; வாழ்வையும் பெறுகின்றன.

XCI

இவ்வெளிப்பாட்டின் மெய்ம்மையினை நிரூபித்துக் காட்டிடும் ஆதாரங்களுள் இதுவும் ஒன்று: ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வோர் அருளாட்சிக் காலத்திலும் கண்ணுக்குப் புலப்படாத சாராம்சமானவர், அவரது திரு அவதாரத்தின் உருவில் வெளிப்படுத்தப்பட்ட பொழுது, பொதுவாக அறியப்படாமலும், உலகியல் சிக்கல்கள் அனைத்திலிருந்தும் பற்றறுத்துக் கொண்டுமுள்ள சில குறிப்பிட்ட ஆன்மாக்கள், தீர்க்கதரிசனச் சூரியனிடமிருந்தும், தெய்வீக வழிகாட்டுதல் என்னும் சந்திரனிடமிருந்தும், அறிவொளியை நாடி அத்தெய்வீக முன்னிலையை அடைந்திடுவர்.

இக்காரணத்தினால்தான், அக்காலத்தின் சமயத் தலைவர்களும், செல்வம் படைத்தோரும், அம்மனிதர்களை ஏளனம் செய்யவும் பழித்துரைக்கவும் செய்தனர்.

வழி தவறியோரான அவர்களைக் குறித்து அவர் இவ்வாறு கூறி இருக்கின்றார்: “பிறகு, அம் மக்களின் நம்பிக்கையற்றத் தலைவர்கள் கூறினர், “உங்களில் நாங்கள் காண்பது எங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதரே; உங்களைப் பின்பற்றுவோரில் நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும், ஆராயாது முடிவு செய்பவர்களைத் தவிர வேறெவரும் இலர்; அல்லாமலும், எங்களைவிட மேலான சிறப்பு எதனையுமே நாங்கள் உங்களிடம் கண்டிலோம்; அன்றியும், நாங்கள் உங்களைப் பொய்யர்களாகவே கருதுகின்றோம்.

” அப்புனித அவதாரங்களைக் குறை கூறினர், கண்டனம் தெரிவித்து இவ்வாறு கூறினர்: “எங்களிடையேயுள்ள இழிவானோரையும், எவ்வித மரியாதைக்கும் தகுதியற்றோரையும் தவிர உங்களை வேறெவரும் பின்பற்றியதில்லை.

” கற்றோர்கள், தனவந்தர்கள், பிரசித்திப்பெற்றோர் ஆகியோரிடையேயுள்ள எவருமே அவர்களை நம்பினாரிலர் என எடுத்துக் காட்டுவதே அவர்களின் நோக்கம்.

இதையும் மற்றும் இது போன்ற ஆதாரங்களையும் கொண்டு உண்மையைத் தவிர வேறெதுவுமே பேசாத அவரை பொய்யர் என நிரூபித்துக் காட்ட முயன்றனர்.

இருப்பினும், இப் பிரகாசமிகு அருளாட்சியில், இவ் வதி வலிமிகு மாட்சிமையின் போது, ஞான ஒளிப்பெற்ற பல மதகுருமார்கள், தலை சிறந்த அறிஞர்கள், முதிர்ச்சியும் விவேகமும் படைத்தப் பேரறிஞர்கள் அவரது அரசவையையடைந்து, அவரது தெய்வீக முன்னிலையென்னும் கிண்ணத்திலிருந்து பருகி, அவரது அதிமேலான தயை வழங்கப்பட்டுள்ளனர்.

தங்களின் அன்புக்குரியவரின் பொருட்டு, அவர்கள் உலகையும், அதிலுள்ள அனைத்தையும் துறந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் தெய்வீக வெளிப்பாடு என்னும் சூரியனின் ஒளியினால் வழிகாட்டப்பட்டு அவரது மெய்ம்மையினை ஒப்புக்கொண்டும் அங்கீகரித்தும் உள்ளனர்.

அவர்களுள் பெரும்பாலோர் தங்களின் உடைமைகளையும் உறவினர்களையும் துறந்து, ஒளிமயமானவரின் நல்விருப்பத்தினைப் பற்றிக்கொண்டுள்ளனர்.

அவர்கள், தங்களின் அன்புக்குப் பாத்திரமானவருக்குத் தங்களின் உயிர்களையே தியாகஞ் செய்தனர்; தாங்கள் கொண்டுள்ளவை அனைத்தையும் அவரது பாதையில் அர்ப்பணித்தனர்.

அவர்களின் மார்புகள் பகைவர்களின் அம்புகளுக்குக் குறிகளாக்கப்பட்டன; அவர்களின் சிரசுகள் சமய நம்பிக்கையற்றோரின் ஈட்டிகளை அலங்கரித்தன.

பற்றுறுதியின் உருவங்களாகிய அவர்களின் இரத்தத்தைக் குடிக்காத நிலம் எதுவுமே எஞ்சியில்லை; அவர்களின் கழுத்துக்களைக் காயப்படுத்தாத வாளும் கிடையாது.

அவர்களின் செயல்கள்மட்டுமே, அவர்களின் சொற்களுக்குச் சாட்சியம் அளிக்கின்றன.

இப்புனித ஆன்மாக்கள் எழுந்து, பெருமையுறத்தக்க வழியில், தங்களின் அன்புக்குப் பாத்திரமானவருக்காகத் தங்களின் உயிர்களை அர்ப்பணித்துள்ள அத்தாட்சியே இக்கால மக்களுக்குப் போதாதா? உலகம் முழுவதுமே அவர்கள் தியாகஞ் செய்த விதத்தைக்கண்டு வியப்புற்றது.

அதற்கு மாறாக, ஓர் அற்பப் பொருளுக்காகத் தங்களின் சமயத்திற்கே இரண்டகம் செய்தனரே, மரிக்கக்கூடிய ஒன்றிற்காக நித்திய வாழ்வையே பண்டமாற்று செய்தனரே, தெய்வீக முன்னிலை என்னும் விண்ணுலக நதியையே கரிப்பு நிறைந்த நீரூற்றுக்காகக் கைவிட்டனரே, மற்றவர்களின் சொத்துக்களைப் பறிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்டிருந்தனரே அவர்களின் விசுவாசமின்மைக்கு இந்த அத்தாட்சியே போதாதா? நீங்கள் கண்ணுறுவது போலவே, எவ்வாறு அவர்களனைவரும் உலக ஆடம்பரங்களில் ஈடுபட்டுக் கொண்டு, அதி மேன்மைமிகு பிரபுவாகிய அவரை விட்டு வெகுதூரம் வழி தவறிப் போய்விட்டுள்ளனர் என்பதைப் பாருங்கள்.

நேர்மையாய் இருங்கள்: எவரது செயல்கள் தங்களின் சொற்களுடன் ஒத்திருக்கின்றனவோ, எவரது வெளிப்படையான நடத்தை உள்ளார்ந்த வாழ்க்கையுடன் ஒத்திருக்கின்றதோ, அவர்களின் இவ் வவதாரம் ஏற்புடையதாகவும் கவனிக்கத் தகுந்ததாகவும் இருக்கின்றதா? அவர்களின் செயல்களைக் கண்டு மனம் திகைப்புறுகின்றது; அவர்களின் உளவலிமையையும், உடலின் துன்பந் தாங்கும் திறனையும் கண்டு ஆன்மா வியப்படைகின்றது.

மாறாக, தன்னல இச்சைகளின் மூச்சைத் தவிர வேறெந்த மூச்சும் விடாதோர், தங்களின் வீண் கற்பனைகள் என்னும் கூண்டினில் சிறைப்பட்டுக்கிடப்போர் ஆகியோர் ஏற்கத்தகுந்தவர்களா? இருளிலிருக்கும் வெளவாலைப் போல், நிலையில்லாத உலகக் காரியங்களிலேயே ஈடுபட்டுத், தங்களின் மஞ்சத்திலிருந்து தலைகளை உயர்த்தாது கிடக்கின்றனர்; இராக்காலங்களிலும், தங்களின் அற்ப நோக்கங்களை அடைவதற்கான கடும் முயற்சியில் ஈடுபடுவதில் அல்லாது வேறெதனிலும் அமைதி பெற்றிலர்.

தங்களின் சுயநல திட்டங்களிலேயே மூழ்கி, தெய்வீகக் கட்டளையில் நினைவிழந்து கிடக்கின்றனர்.

பகற்காலங்களில், லௌகீக ஆதாயத்தை அடைய ஆன்மார்த்தமாகக் கடும் முயற்சி செய்கின்றனர்; இராக்காலங்களில் தங்களின் சிற்றின்ப இச்சைகளைப் பூர்த்திசெய்வதுவே அவர்களின் முழுநேர வேலையாகின்றது.

எந்தச் சட்டத்தை, எந்த நியமத்தைக் கொண்டு மனிதர்கள், அத்தகைய குறுகிய மனப்பான்மைக் கொண்ட ஆன்மாக்களின் மறுப்புக்களை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டு, இறைவனின் நல்விருப்பத்தின் பொருட்டு தங்களின் உயிரையும், உடைமைகளையும், தங்களின் பெயரையும் புகழையும், தங்களின் பெருமதிப்பையும் கௌரவத்தையும் துறந்துள்ளோரின் நம்பிக்கையை அலட்சியம் செய்வதை நியாயமென நிரூபிக்கக் கூடும்?.

எவ்விதப் பற்றுடன், எவ்விதப் பயபக்தியுடன், எவ்விதப் பேரானந்தத்துடன், பேருவகையுடன், அவர்கள் தங்களின் உயிர்களை, ஒளிமயமானவரின் பாதையில் தியாகஞ் செய்தனர்! இவ்வுண்மைக்கு எல்லாருமே சாட்சிப் பகர்கின்றனர்.

இருந்தும், எங்ஙனம் அவர்கள் இவ்வெளிப்பாட்டினை அற்பமாகக் கருதக்கூடும்? எந்தக் காலமாவது பெருஞ்சிறப்புவாய்ந்த இத்தகைய நிகழ்வுகளைக் கண்டதுண்டா? இத் தோழர்கள் உண்மையாகக் கடுமுயற்சி செய்பவர் அல்லரெனக் கொள்ளப்பட்டால், வேறு யார்தான் இப்பெயரைக் கொண்டு அழைக்கப்பட முடியும்? இத் தோழர்கள், அதிகாரத்தையோ பெருமையையோ நாடியதுண்டா? அவர்கள் செல்வத்திற்காக ஏங்கியதுண்டா? இறைவனின் நல்விருப்பத்தைத் தவிர அவர்கள் வேறெதனையும் நேசித்ததுண்டா? இவ்வியப்புமிக்கச் சான்றுகளையும் அற்புதமிக்கச் செயல்களையும் கொண்டுள்ள இந் நண்பர்களைப் பொய்யர்கள் என்றால், வேறு யார்தான் தன்னை உண்மையானவர் எனக் கூறிக் கொள்ளத் தகுதியுடையவராவார்? இறைவன் மீது ஆணையிடுகின்றேன்! தெய்வீக வெளிப்பாட்டின் மர்மங்களை மனிதர்கள் தங்களின் உள்ளங்களில் தியானிப்பராயின், இவர்களின் செயல்களே போதுமான ஆதாரமாகும்; உலக மக்கள் அனைவரின் மத்தியில் ஒரு மறுக்க முடியாத அத்தாட்சி.

“அநீதியுடன் நடந்து கொள்பவர்கள் தங்களுக்காகக் காத்திருப்பது யாதென விரைவில் தெரிந்து கொள்வர்!”.

கேள்விக்கு இடமில்லாத மனத்தூய்மைப் படைத்த இவ்வுயிர்த் தியாகிகளை எண்ணிப் பாருங்கள்; அவர்களின் நேர்மைக்குத் திருமறைகளின் தெளிவான வாசகங்களே ஆதாரமளிக்கின்றன; நீங்கள் பார்த்திருப்பதுபோல் அவர்கள் எல்லாருமே தங்களின் உயிர்கள், உடைமைகள், மனைவி மக்கள் ஆகிய அனைத்தையுமே தியாகம் செய்துவிட்டு, விண்ணுலகின் அதி உயர்விலுள்ள அறைகளுக்கு உயர்ந்தெழுந்துள்ளனர்.

பற்றற்ற, மேன்மைமிக்க, இப்பிறவிகளின் மிகச் சிறந்த, பேரொளிமிக்க இவ்வெளிப்பாட்டின் உண்மையைக்குறித்த அத்தாட்சியை நிராகரித்துவிட்டுப், பொன்னை விரும்பி, இப்பிரகாசமிக்க ஒளிக்கு எதிராகத் தங்களின் நம்பிக்கையையே கைவிட்டும், தலைமைத்துவத்தின் பொருட்டு மனித இனத்தின் பிரதம தலைவரான அவரையே மறுத்துள்ள விசுவாசமற்ற இம்மனிதர்களின் கண்டனங்களை ஏற்கக் கூடியவை எனக் கருதுவது நியாயமா? எவ்வகையிலும் அவர்கள் தங்களின் இம்மைக்குரிய அதிகாரத்தை இறைவனது புனித சமயத்தின் பொருட்டு ஓர் அணுவளவேனும், ஓர் இம்மியளவேனும் கைவிடமாட்டார்கள் என்ற நடத்தை உலக மக்களுக்கெல்லாம் தெரிந்ததே; அவ்வாறிருக்க அவர்கள் தங்களின் உயிரையும் உடைமைகளையும் கைவிடுவதென்பது எத்துணைச் சிரமமானது.

XCII

இறைவனின் திருநூல் அகலத் திறக்கப்பட்டு அவரது திருவாசகம் மனித இனத்தை அவர்பால் அழைக்கின்றது.

இருப்பினும், அவரது சமயத்தினைப் பற்றிக் கொள்ளவும், அதன் முன்னேற்றத்திற்குக் கருவியாவதற்கும் விருப்பங் கொண்டோர் வெகு சிலரே.

அச் சிலரே இவ்வுலகத்தின் கழிவுப் பொருள்களைப் பரிசுத்தமான தங்கமாக மாற்றக் கூடிய தெய்வீக சஞ்சீவி வழங்கப் பட்டுள்ளனர்; அவர்களே, மனிதர்களின் குழந்தைகளைப் பாதிக்கும் நோய்களுக்குத் தவறாத சிகிச்சை அளிப்பதற்கான ஆற்றலும் அளிக்கப் பட்டுள்ளனர்.

அளவிடற்கரியதும், வியக்கத் தகுந்ததும், விழுமியதுமான இவ்வெளிப்பாட்டின் உண்மையினைத் தழுவினால் அன்றி, எந்த மனிதனுமே நிலையான வாழ்வைப் பெறவே இயலாது.

இறைவனின் நண்பர்களே, இவ்வுலகத்தினால் தவறிழைக்கப் பட்டுள்ள அவரது குரலின்பால் செவிச் சாய்த்து, அவரது சமயத்தினை மேம்பாடடையச் செய்யக்கூடியது எதுவோ, அதனை இறுகப்பற்றிக் கொள்வீராக.

மெய்யாகவே, அவர் யாரை விரும்புகின்றாரோ அவரைத் தனது நேரானபாதைக்கு அழைத்துச் செல்கின்றார்.

பலவீனருக்குச் சக்தியூட்டி, வறியோருக்குச் செல்வம் என்னும் மகுடம் அணிவிக்கும் வெளிப்பாடு இதுவேயாகும்.

முழு நட்புறவுடனும், பூரண தோழமை உணர்வுடனும் கூட்டாகக் கலந்தாலோசித்து, உங்களின் அரிய வாழ்நாள்களை உலகத்தின் மேம்பாட்டுக்காகவும், சகலத்திற்கும் பிரபுவாகிய அவரது சமயத்தை முன்னேறச் செய்வதற்காகவும் அர்ப்பணியுங்கள்.

அவர், மெய்யாகவே, மனிதர்களுக்கு எது சரியானதோ அதனையே அவர்களுக்கு விதித்துள்ளார்; எது அவர்களின் நிலையை இழிவுறச் செய்கின்றதோ அதனைத் தடைச் செய்துள்ளார்.

XCIII

படைக்கப் பட்ட ஒவ்வொரு பொருளும் இறைவனது வெளிப்பாட்டின் அடையாளமே.

ஒவ்வொன்றும், அதனதன் திறமைக்கேற்ப, எல்லாம் வல்லவரின் ஒரு சான்றுக் குறிப்பாகவே இருக்கின்றன; தொடர்ந்தும் என்றென்றும் அவ்வாறே இருந்துவரும்.

அனைத்திற்கும் மாட்சிமை பொருந்திய பிரபுவான அவர், நாமங்கள், பண்புகள் என்னும் இராஜ்யத்தினில், தனது இறைமையை வெளிப்படுத்த விரும்பியதனால், படைப்புப் பொருள் ஒவ்வொன்றுமே தெய்வீக விருப்பத்தின் செயல் மூலமாக, அவரது பேரொளியின் அடையாளமாக ஆக்கப்பட்டுள்ளது.

இவ் வெளிப்படுத்துதல் அத்துணைப் பரவலாகவும் பொதுவாகவும் இருந்தமையால் பிரபஞ்சம் முழுவதிலுமே அவரது புகழொளியினைப் பிரதிபலிக்காத எதனையுமே காணவியலாது.

அந்நிலையில், காலத்தால் அண்மை, நெடுந்தொலைவு என்பவை துடைத்தழிக்கப் படுகின்றன....

தெய்வீகச் சக்தி என்னும் கரம் இத்திறனைக் கொண்டிராவிடில், படைப்புப்பொருள்கள் அனைத்துமே, பிரபஞ்சம் முழுவதுமே, பாழடைந்தும் வெறுமையாகிடும்.

உங்களின் பிரபுவாகிய இறைவனானவர், படைப்புப் பொருள்கள் அனைத்தையும்விட எத்துணை அளவிடற்கரிய உயர்வில் இருக்கின்றார் என்பதைப் பாருங்கள்! அவரது இறைமையின் மாட்சிமையையும், உயர்வையும், அனைத்திற்கும் மேலான சக்தியையும் கவனியுங்கள்.

அவரால் - அவரது மகிமை மேன்மைப் படுத்தப்படுமாக - படைக்கப்பட்டப் பொருள்கள், அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள அருளின் காரணமாக, அவரது நாமங்கள், பண்புகள் ஆகியவற்றின் வெளிப்படுத்துதல்களாகிட விதிக்கப்பட்டும், அருகாமை, தொலைவு ஆகியவைக்கெல்லாம் மேலாக உயர்த்தப்பட்டும் உள்ளனவென்றால், அவற்றைத் தோற்றுவித்த அத்தெய்வீகச் சாராம்சம் இன்னும் எத்துணை உயரிய நிலையில் இருக்க வேண்டும்?...

கவிஞர் என்ன எழுதியுள்ளார் என்பதைக் குறித்துத் தியானியுங்கள்: “எனதருகில் நான் இருப்பதைவிட, எனது நல்லன்புக்குரியவர் அதைவிட அருகில் இருந்தால், வியப்புறாதீர்; நான், அவருக்கு அந்தளவு அருகிலிருந்தும், அவரிடமிருந்து அத்துணைத் தூரத்தில் இருக்கின்றேனே, அதனில்தான் வியப்புற வேண்டும்... ”

“மனிதனுக்கு யாம், அவனது உயிர் நாடியைவிட, இன்னும் அருகே இருக்கின்றோம்”, என்று இறைவன் வெளிப்படுத்தியுள்ளதனை மனத்திற்கொண்டு, கவிஞர், இவ்வாசகத்தைக் குறித்துக் கூறியதாவது: எனது நல்லன்புக்குரியவரின் வெளிப்பாடு, எனது உயிர் நாடியைவிட அருகிலேயே இருக்குமளவு எனது மெய்ம்மையினுள் ஊடுருவியிருந்தும், என் பற்றுறுதி அதன் மெய்ம்மையில் அந்தளவிருந்தும், எனது ஸ்தானத்தை நான் உணர்ந்திருந்தும், அவரிடமிருந்து இன்னும் வெகு தொலைவிலேயே இருக்கின்றேன்.

இதன் பொருளானது; கருணைமயமானவரின் இருக்கையும், அவரது வெளிப்பாட்டின் பிரகாசம் அமர்ந்திருக்கும் அரியாசனமுமாகிய எவரது உள்ளம், தன்னைப் படைத்தோனை மறந்து, அவரது வழியில் இருந்து விலகிச் சென்று, அவரது பேரொளியிலிருந்து தன்னையே மறைத்துக் கொண்டும், உலக ஆசைகளின் தூய்மைக்கேட்டினால் கறைப்படுத்தப்பட்டும் இருக்கின்றது, என்பதாகும்.

இது சம்பந்தமாக, ஒரே மெய்க் கடவுளாகிய அவரே, அண்மை, தொலைவு, ஆகியவைக்கு அப்பால் மிக உயரிய நிலையிலும் இருக்கின்றார் என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும்.

அவரது மெய்ம்மை அத்தகைய வரையறைகளைக் கடந்தது.

அவரது படைப்பினங்களுடன் அவருக்குள்ள தொடர்பு அளவற்றது.

சிலர் அருகிலும், சிலர் தொலைவிலும் இருப்பது அவதாரங்களாகிய அவர்களையே பொருத்ததாகும்.

கருணைமயமான இறைவனின் வெளிப்பாடு, மனிதனின் உள்ளமெனும் அரியாசனத்தினுள் மையப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு, இதற்கு முன், யாம் வெளிப்படுத்தியுள்ள புனித வாசகங்களே சான்றளிக்கின்றன.

அவற்றிடையே உள்ளதுதான் இக்கூற்று: “மண்ணுலகும் விண்ணுலகும் என்னை உள்ளடக்க இயலாது; என்னில் நம்பிக்கை கொண்டும், எனது சமயத்தில் விசுவாசம் கொண்டுமுள்ள ஒருவரால் மட்டுமே என்னை உள்ளடக்கவியலும். ”

இறைவனது ஒளியின் பெறுநரும், கருணைமயமானவரது வெளிப்பாட்டின் இருக்கையுமான மனிதவுள்ளம், அவ்வொளியின் தோற்றிடமும், அவ்வெளிப்பாட்டின் கிணற்றூற்றுமாகிய அவரிடம் மீண்டும் மீண்டும் தவறாக நடந்திருக்கின்றனர்.

அவ்வுள்ளத்தின் இச்சொற்கேளாத தன்மையே, அதனை இறைவனிடமிருந்து வெகு தூரம் விலகச்செய்கின்றது; அவருடன் நெருக்கமில்லாத அவல நிலைக்குக் கொண்டு செல்கின்றது.

இருப்பினும், அவரது உள்ளமையை உணர்ந்திட்ட அவ் வுள்ளங்கள், அவரை நெருங்கி இருக்கின்றன; அவையே அவரது அரியாசனத்தின்பால் ஈர்க்கப் பட்டவையாகக் கொள்ளப்படுகின்றன.

மேலும், எவ்வாறு மனிதன் அடிக்கடி தன்னையே மறந்து விடுகின்றான் என்பதைக் கவனியுங்கள்.

அதே வேளையில், இறைவன், அனைத்தையும் சூழ்ந்துள்ள தமது அறிவின் மூலம், தனது உயிரினங்களின் உள்ளமையை உணர்ந்து, தனது ஒளியின் பிரகாசத்தினைத் தொடர்ந்து அவன் மீது பாய்ச்சிடுகின்றார்; ஆகவே, அந்நிலையில், அவனைவிட அவரே அவனுடன் நெருக்கமாய் இருக்கின்றார் என்பது தெளிவாகின்றது.

உண்மையிலேயே அவர், என்றென்றும் அவ்வாறே இருந்திடுவார்; ஏனெனில், மரணத்துக்குரிய மனிதன், தன்னுள் அடங்கியுள்ள மர்மங்களைக் குறித்து அறியாமையில் இருப்பதனால், தவறுக்கு காரணமாகின்றான்; ஆனால், ஒரே மெய்க் கடவுளாகிய அவர், யாவற்றையும் அறிந்திருக்கின்றார்; யாவற்றையும் கண்ணுறுகின்றார்....

படைப்புப் பொருள்கள் அனைத்துமே இறைவனின் வெளிப்படுத்துதலின் அடையாளங்கள் என்னும் எமது கூற்றின் பொருள், மனிதர்கள் அனைவரும், நல்லவர்களோ கொடியவர்களோ, பக்தர்களோ சமய நம்பிக்கையற்றவர்களோ, அனைவருமே இறைவனின் பார்வையில் சமமானவர்கள் என எவருமே கற்பனைச்செய்திடலாகாது.

அல்லாமலும், அத் தெய்வீகப் பிறவியானவர் - அவரது நாமம் மேன்மைப் படுத்தப்படுமாக; அவரது மகிமையும் உயர்வு பெறுமாக -- எச்சூழ்நிலையிலும், மனிதர்களுடன் சமமாக மதிக்கப்படுபவர் என்றோ, அவரது உயிரினங்களுடன் எவ்வகையிலும் சம்பந்தப்பட்டவர்கள் என்றோ பொருள்படமாட்டாது.

அத்தகைய ஒரு தவறு, தங்களின் வீண் கற்பனைகள் என்னும் சுவர்க்கங்களுக்கு உயர்ந்தெழுந்திடும் சில அறிவிலிகளால் செய்யப்படுகின்றது; தெய்வீக ஒருமைத் தன்மை என்பது படைப்பினங்கள் எல்லாம் ஆண்டவனின் அடையாளங்களே என அவர்கள் பொருள்கொண்டிடுகின்றனர்; அதன் பயனாக அவைகளிடையே வேறுபாடுகள் எவையுமே கிடையாது என விளக்கம் அளிக்கின்றனர்.

சிலர் அவர்களையும் விஞ்சிடுகின்றனர்; இவ்வடையாளங்களினால் அவர்கள் இறைவனுக்கு இணையானவர்கள், துணைவர்கள் என்றும், ஊர்ஜிதப் படுத்திடுகின்றனர்.

கருணைக் கடவுளே! அவர், மெய்யாக அவர் ஒருவரே; பகுக்கப்பட இயலாதவர்; தனது சாராம்சத்திலும் ஒருவரே; தனது பண்புகளிலும் ஒருவரே.

அவரைத் தவிர வேறெதுவும் அவரது பிரகாசமிக்க நாமங்கள் ஒன்றின் முன்பாக, நேருக்குநேர் கொண்டுவரப் படுமாயின், அது, ஒன்றும் இல்லாததைப் போலவே ஆகிடும் - அதுவும் அவரது பேரொளி மிகவும் மங்கிய நிலையில் இருக்கும் பொழுதே அவ்வாறாயின், அவரது சொந்த மெய்ம்மைக்கு முன்னால் கொண்டுவரப்படின் அது இன்னும் எந்தளவு குறைவான நிலையை அடைந்திடும்! கருணைமயமான எனது நாமத்தின் நேர்மைத் தன்மை சாட்சியாக! இத்திருச் சொற்களின் வெளிப்படுத்துதலினால் அதி உயர்வில் உள்ளோனின் எழுதுகோலே பெரும் அதிர்வினால் நடுக்கமுற்றுக் கடுமையான ஆட்டத்திற்கு ஆளாகின்றது.

நிலையற்ற இத்துளியானது, இறைவனின் எல்லையற்றதும், என்றும் நிலையானதுமான சமுத்திரத்தின் அலைகளுடனும் பேரலைகளுடனும் ஒப்பிடும்போது, அது எத்துணைச் சிறியதாகவும் அற்பமானதாகவும் உள்ளது; படைக்கப்படாததும், உச்சரிக்கவியலாததுமான நித்தியத்தின் மகிமையுடன் நேருக்குநேர் வைத்திடும்போது, தற்செயலானதும் அழியக்கூடியதுமான இப்பொருள் ஒவ்வொன்றும், எந்தளவு முற்றிலும் வெறுக்கத் தக்கதாகத் தோன்றக் கூடும்!

அத்தகைய நம்பிக்கைகளைக் கொண்டோருக்காக யாம் சக்திமயமான இறைவனிடம் மன்னிப்புக் கோரி, இத்தகைய சொற்களை வெளியிடுகின்றோம்.

“மனிதர்களே, கூறுவீராக! கணநேரமே தோன்றி மறைந்திடும் ஒரு கற்பனையை, எவ்வாறு, சுயஜீவியான அவருடன் ஒப்பிட முடியும்? தனது எழுதுகோலின் வெறும் எழுத்துகளானோருடன் எவ்வாறு படைத்தோன் ஆகிய அவரை ஒப்பிட முடியும்? இல்லை, அவரது எழுத்து, அனைத்தையும் விஞ்சிடுகின்றது; அது, தூய்மைப்படுத்தப்பட்டும், உயிரினங்கள் அனைத்திற்கும் மேலானதாகவும், அளவிடற்கரிய உயரிய நிலையிலும், இருக்கின்றது.

தவிரவும், இறைவனின் வெளிப்பாட்டிற்கான அடையாளங்களை ஒன்றோடொன்றை ஒப்பிட்டுப் பாருங்கள்.

இவ்வடையாளங்களுள் ஒன்றான சூரியனையும் இருளையும் தரத்தில் சமமானவை எனக் கருத முடியுமா? ஒரே உண்மைக் கடவுளான அவரே எனக்குச் சாட்சி பகர்கின்றார்! ஒருவரின் உள்ளம் குறுகலாக்கப்பட்டும், கண்கள் மயக்கத்திற்குள்ளாக்கப் பட்டும் இருந்தாலொழிய, எந்த மனிதனுமே இதனை நம்ப முடியாது.

கூறுவீராக: உங்களையே நீங்கள் கவனித்துப் பாருங்கள்.

உங்களின் நகங்கள், கண்கள், ஆகிய இரண்டுமே உங்கள் உடல்களின் பாகங்களே.

ஆனால், அவற்றைத் தரத்திலோ முக்கியத்துவத்திலோ சமமானவை எனக் கருதுவீர்களா? இதற்கு நீங்கள், ஆம் எனக் கூறினால், இதனைக் கூறிடுங்கள்: பிரபுவாகிய, எனது கடவுளான, ஒளிமயமான அவரை நீங்கள், ஏமாற்றுக்காரர் எனக் குற்றஞ் சாட்டுகின்றீர்; ஏனெனில் ஒன்றின் விளிம்பை வெட்டியெறிந்து விட்டு, மற்றதை அன்புடன் உங்களின் உயிருக்கு உயிராகப் பேணுகின்றீர்.

ஒருவர், தனது சொந்த அந்தஸ்தையும் ஸ்தானத்தையும் மீறுதல், எந்தச் சூழலிலுமே அனுமதிக்கப்படமாட்டாது.

ஒவ்வோர் அந்தஸ்தின் நாணயமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதன் பொருளானது: படைப்புப் பொருள் ஒவ்வொன்றையும் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட ஸ்தானத்தின் கோணத்திலேயே பார்க்கவேண்டும்.

இருப்பினும், சகலத்தையும் வியாபிக்கும் எனது நாமத்தின் ஒளி, அதன் பிரகாசத்தினைப் பிரபஞ்சத்தின் மீது விழச் செய்திட்ட போது, படைப்புப்பொருள் ஒவ்வொன்றும், உறுதிப்படுத்தப்பட்ட அளவுக்கேற்ப, ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றல் வழங்கப்பட்டு, தெளிவான ஒரு பண்பைப் பெறச்செய்யப்பட்டுள்ளது என்பது மனதில் கொள்ளப்பட வேண்டும்.

விஷத்தின் விளைவை எண்ணிப் பாருங்கள்.

அது மரணம் விளைவிக்கக் கூடியதாய் இருப்பினும், சில சூழ்நிலைகளில் அது நலன் விளைவிக்கும் தாக்கத்தை உண்டுபன்னும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

படைப்புப் பொருள் அனைத்திற்குள்ளும் புகட்டப்பட்டுள்ள ஆற்றல் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட திருநாமத்தின் வெளிப்படுத்துதலின் நேரடியான விளைவேயாகும்.

நாமங்கள், பண்புகள் ஆகிய அனைத்தையும் படைத்தோனாகிய அவர் மகிமைப்படுத்தப்படுவாராக! அழுகியும், காய்ந்துமிருக்கும் மரத்தைத் தீயில் எறிந்துவிட்டு, பசுமையானதும் நல்லதுமான மரத்தின் நிழலின்கீழ் தங்கி வாழ்ந்திடுவீராக; அதன் கனிகளை உண்பீராக.

இறைவனது அவதாரங்களின் காலத்தில் வாழும் மக்கள், பொதுவாக, அத்தகைய ஒவ்வாத சொற்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவை, வெளிப்படுத்தப்பட்ட திருநூல்களிலும் திருமறைகளிலும், தற்செயலாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.

உயிரினங்களுக்கும் படைத்தோனுக்குமிடையே வேறுபாடு எதுவுமில்லை என விடாப்பிடியாய் இருப்பவரைப்போலல்லாது, யாரொருவர், படைப்புப்பொருள் ஒவ்வொன்றிலும் நித்திய மெய்மையாகிய அவரது வெலிப்பாட்டின் அடையாளங்களைக் காண்கின்றாரோ, அவரே, இறைவனின் ஒருமைத் தன்மையில் உண்மையான நம்பிக்கையாளர் எனப்படுபவர் ஆவார்.

உதாரணமாக, கல்விப்புகட்டுபவரான இறைவனது நாமத்தின் ஒளியின் வெளிப்பாட்டினைக் கவனியுங்கள்.

எவ்வாறு எல்லாப் பொருள்களிலும் அத்தகைய வெளிப்பாட்டின் சான்றுகள் தெளிவாகப் புலப்படுகின்றன என்பதையும், எவ்வாறு அதனையே எல்லா உயிரினங்களின் அபிவிருத்தியும் சார்ந்திருக்கின்றன என்பதையும் பாருங்கள்.

அக் கல்வி இரண்டு வகைப்படும்.

ஒன்று பொதுவானது.

அதன் தாக்கம் சகலத்தையும் உள்ளடக்குகின்றது; அவற்றைப் பராமரிக்கின்றது.

இக்காரணத்தினால்தான் இறைவன் “உலகங்கள் அனைத்திற்கும் பிரபுவானவர்” என்னும் பட்டப்பெயரை சூட்டிக்கொள்கின்றார்.

மற்றது, அவரது இந்நாமத்தின் நிழலின்கீழ் வந்து, அவரது வலுமிக்க வெளிப்பாட்டினுள் புகலிடம் தேடினோருக்கு உரியதாகும்.

இருப்பினும், இப்புகலிடத்தைத் தேடாதவர்கள் இவ்வுரிமையைப் பறிகொடுத்திட்டோராவர்; அவர்கள், அதி உயரிய நாமத்தின் தெய்வீக அருளின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஆன்மீக உணவின் பயனை அடையச் சக்தியற்றிருப்பர்.

அதற்கும் மற்றதற்குமிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள வேறுபாடு எத்துணை அதிகமானது! திரை உயர்த்தப்பட்டு, இறைவன்பால் முழுமையாகத் திரும்பி, அவர்பால் கொண்ட அன்பினால், உலகையே துறந்திட்டோரின் ஸ்தானம் வெளிப்படுத்தப்படுமாயின், படைப்பனைத்துமே ஸ்தம்பித்து விடும்.

முன்பு தெளிவுப்படுத்தப் பட்டுள்ளதன்படி, இறைவனின் ஒருமைத் தன்மையில் உண்மையான நம்பிக்கையாளர், நம்பிக்கையற்றவர் என்னும் இரு சாராரிடையேயும், அவ்விரண்டு நாமங்களது வெளிப்பாட்டின் அடையாளங்களையும் கண்டு கொள்வார்.

இவ்வெளிப்படுத்துதலை அறிந்துகொள்ளும் ஆற்றல் விலக்கப்படுமாயின் யாவுமே அழிந்து போய்விடும்.

அதே போன்று, ஒப்புயர்வற்ற இறைவனது நாமத்தின் ஒளியினைக் கவனியுங்கள்.

எவ்வாறு, இவ்வொளி, படைப்பு முழுவதையும் சூழ்ந்துள்ளது என்பதையும், எவ்வாறு ஒவ்வொரு பொருளும் அவரது ஒருமைத் தன்மையினைப் புலனாக்குகின்து என்பதையும், நித்திய மெய்ம்மையாகிய அவரது உண்மை நிலைக்குச் சான்றளிக்கின்றது என்பதையும், அவரது இறைமையையும், அவரது ஒருமையையும், அவரது சக்தியையும் பிரகடனஞ் செய்கின்றது என்பதையும் பாருங்கள்.

படைப்புப் பொருள்கள் அனைத்தையும் சூழ்ந்துள்ள அவரது கருணையின் ஓர் அடையாளமே இவ்வெளிப்பாடு.

இருப்பினும், அவருடன் பங்காளிகளாகக் கூட்டுச் சேர்ந்திட்டோர், அத்தகைய வெளிப்பாட்டினை உணராதிருக்கின்றனர்; எந்தச் சமயத்தின் மூலம் அவரது அருகாமையின்பால் ஈர்க்கப்பட்டு அவருடன் ஒன்றிணைய இயலுமோ அந்தச் சமயத்தை அவர்கள் இழந்துவிட்டுள்ளனர்.

உலகின் பல்வேறு மக்களும் இனங்களும் எவ்வாறு அவரது ஒருமைத் தன்மைக்குச் சாட்சியமளித்து, அவரது ஒருமை நிலையை அறிந்து கொள்கின்றனர் என்பதைப் பாருங்கள்.

இறைவனின் ஒருமைத் தன்மையின் அடையாளம் அவர்களுள் இல்லாதிருந்தால், அவர்கள், “இறைவனைத் தவிர வேறு இறைவன் யாருமிலர்” என்னும் வார்த்தைகளை அங்கீகரித்தே இருக்க மாட்டார்.

இருந்தும், எவ்வாறு அவர்கள் கடுந் தவறிழைத்து, அவரது வழியில் இருந்து விலகிப்போயுள்ளனர் என்பதைப் பாருங்கள்.

மாட்சிமைமிகு வெளிப்படுத்துபவரான அவரை அறிந்து கொள்ளத் தவறி விட்டதனால், அவர்கள், இறைவனின் ஒருமைத் தன்மையில் நம்பிக்கையுடையோரின் எண்ணிக்கையில் சேர்க்கப்படாது விடப்பட்டுள்ளனர்.

அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ளோரினுள் இருக்கும் திருவுருவானவரின் வெளிப்பாட்டின் இவ் வடையாளத்தை, ஒரு வகையில், விசுவாசிகள் ஒளிரச் செய்யப் பட்டுள்ள அவ்வொளியின் பிரதிபலிப்பாகக் கருதலாம்.

இருப்பினும், புரியுந்திறன் வழங்கப் பட்டோரைத் தவிர வேறெவருமே, இவ்வுண்மையைப் புரிந்துகொள்ள இயலாது.

இறைவனின் ஒருமைத் தன்மையை அறிந்திட்டவர்கள் இந்நாமத்தின் ஆரம்ப வெளிப் படுத்துதல்களாகக் கருதப்பட வேண்டும்.

இறைவனின் கரம் அவர்கள்பால் அருளிட முன்வந்த கிண்ணத்திலிருந்து தெய்வீக ஒருமைத் தன்மை என்னும் மதுரசத்தினைப் பருகி, அவர்பால் தங்களின் முகங்களைத் திருப்பியுள்ளோர், அவர்களே ஆவர்.

புனிதப்படுத்தப்பட்ட இப்பிறவிகளுக்கும் இறைவனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள தூரந்தான் எத்துணை அதிகமானது!.

நுண்ணறிவுள்ள காணுந்திறன் படைத்த நீங்கள், சகல பொருள்களிலும் புராதன மன்னராகிய அவரின் வெளிப்பாட்டின் அடையாளத்தைக் கண்டிடவும், அவ்வதி புனிதமான தெய்வீகப் பிறவியாகிய அவர், படைப்பனைத்திற்கும் மேலாக, எத்துணை உயர்வானவராகவும் தூய்மையானவராகவும் இருக்கின்றார் என்பதைக் கண்டு கொள்ளவும் இறைவன் அனுமதிப்பாராக.

உண்மையாகவே, இறைவனின் ஒருமைத் தன்மை, தனித்தன்மை ஆகியவற்றின்பால் நம்பிக்கைக்கு இதுவே மூலாதாரமும் சாராம்சமும் ஆகும்.

“இறைவன் தனி ஒருவராக இருந்தார்; அவருடன் வேறு எவருமே இருந்திலர்.

” அவர், எப்பொழுதும் இருந்துவந்தது போலவே இப்பொழுதும் இருக்கின்றார்.

தனி ஒருவரான, ஒப்புயர்வற்ற, எல்லாம் வல்ல, அதிமேன்மைப்படுத்தப்பட்ட, அதிவுயரிய அவரைத் தவிர இறைவன் வேறெவரும் இலர்.

XCIV

இப்பொழுது, கடவுள்கள் இருவர் உள்ளனர் என்பது சம்பந்தமான உங்களின் குறிப்பைப்பற்றி: கவனமாய் இருங்கள்; இல்லையெனில், உங்களின் பிரபுவாகிய இறைவனுடன் கூட்டுச் சேர்ந்திடத் தூண்டப்படப் போகின்றீர்.

அவர், என்றென்றும் ஒருவரேயாகவும் தனியராகவுமே இருக்கின்றார்; எப்பொழுதும் அவ்வாறே இருந்தும் வந்திருக்கின்றார்; அவருக்கு இணையானவரோ, சமமானவரோ இருந்திலர்; அவர், கடந்த காலத்திலோ, வருங்காலத்திலோ, ஆதியும் அந்தமுமற்றவர்; சகல பொருள்களிலும் பற்றின்றியும், என்றும் நிலையாகவும், சுயஜீவியாகவும் இருந்து வந்திருக்கின்றார்.

தனது இராஜ்யத்தில் தனக்குத் துணைவர் யாரையுமே அவர் நியமித்ததில்லை; ஆலோசனைக் கூற அவருக்கு ஆலோசகரும் இலர்; அவருக்கு ஒப்பானவர் யாருமிலர்; அவரது மகிமைக்குப் போட்டியானவரும் கிடையாது.

இதற்குப் பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அணுவும் சாட்சி பகர்ந்திடும்; மேலும், உயர்விலுள்ள விண்ணுலக வாசிகள், அதி மேன்மைமிகு ஆசனங்களில் அமர்ந்திருப்போர், எவரது பெயர்கள் இறைவனின் பேரொளி என்னும் அரியாசனத்தில் நினைவுக்கூரப் படுகின்றனவோ அவர்கள் ஆகியோரும் இதற்குச் சாட்சிப் பகர்ந்திடுவர்.

தன்னைத் தவிர இறைவன் வேறிலர் என்பதற்கும், தன்னைத் தவிர மற்றனைத்துமே அவரது விருப்பத்திற்கு ஏற்பவே படைக்கப்பட்டுள்ளன என்பதற்கும், அவை அவரது சட்டத்திற்கு உட்பட்டவை என்பதற்கும், அவரது ஒருமையுடன் ஒப்பிடுகையில் அது மறந்திட்ட ஒன்றைப் போன்றது என்பதற்கும், அவரது ஏகத்துவத்தின் வலுமிக்க வெளிப்படுத்துதல்களுடன் நேருக்கு நேர் வைத்திடும் பொழுது அவை இன்மை நிலையில் உள்ளன என்பதற்கும் நீங்கள் உங்களின் அதி உள்ளார்ந்த மனதினில், அவர், தானாகவும் தனக்காகவும் உச்சரித்திட்ட இச்சான்றுக்குச் சாட்சி அளிப்பீராக.

அவர், உண்மையிலேயே, நித்திய காலமும், தனது சாராம்சத்திலும் பண்புகளிலும், செயல்களிலும் ஒற்றையராகவே இருந்து வந்திருக்கின்றார்.

ஒப்புவமை ஒவ்வொன்றும் அவரது உயிரினங்களுக்கே பொருத்தமானவை; தொடர்புறவு என்னும் கருத்துக்கள் அனைத்தும் அவருக்கு ஊழியம் செய்வோருக்கு மட்டுமே சொந்தமாகும்.

அவரது படைப்பினங்களின் வருணனைகளுக்குமேலாக அளவிடற்கரிய உயர்விலுள்ளது அவரது சாராம்சம்.

தனியராகவே அவர், அதிவுயர்வான மாட்சிமை மிகுந்ததும், தலையாயதும், அடைய இயலாததுமான பேரொளி என்னும் ஆசனத்தின் மீது அமர்ந்திருக்கின்றார்.

மனிதர்களின் உள்ளங்கள் என்னும் பறவைகள், எத்துணை உயரத்தில் வானளாவிப் பறந்திடினும், அவை, அவரது அறிந்திடவியலாத சாராம்சத்தின் உச்சங்களை அடைந்திடுவோம் என்ற நம்பிக்கைக் கொள்ளவே இயலாது.

தன் கட்டளையின் வாயிலாக ஒவ்வொரு படைப்புப்பொருளையும் தோற்றுவித்து, படைப்பு முழுவதையுமே உருவாக்கியவர் அவரே.

அவ்வாறாயின், அவரது எழுதுகோல் வெளிப்படுத்திய திருமொழியின் காரணமாக உதித்து, அவரது விருப்பம் என்னும் விரலினால் வழிகாட்டப்பட்ட அப்பொருளானது அவருடன் கூட்டாளி என்றோ, அவரது மெய்ம்மையின் உருவென்றோ கருதப்பட முடியுமா? மனிதனின் எழுதுகோலோ, நாவோ, அவரது மர்மத்தைக் குறிப்பிடுவதும், மனித உள்ளம் அவரது சாராம்சத்தினைப் புரிந்து கொள்வதும், அவரது பேரொளியினின்று எட்டாத தூரத்திலுள்ளது.

அவரது முன்னிலையில் அவரைத் தவிர மற்றனைத்தும் அற்பமானதாகவும் பாழடைந்ததாகவுமே இருந்திடும்; அவரது உயர்வுக்கு முன்பாக அனைத்துமே சக்தியற்றுப் போய்விடும்; அவரது இராஜ்யத்தில் அனைவருமே அடிமைகள்.

உயிரினங்கள் அனைத்தையுமே விளக்கி ஒதுக்கிடும் அளவுக்கு அவர் செல்வமுடையவர்.

வழிபடுவோனுக்கும் வழிபாட்டுப் பொருளுக்குமிடையேயும், படைப்போனுக்கும் படைப்பினத்திற்குமிடையேயும் ஏற்படுத்தப்பட்டுள்ள சேவகத் தொடர்பு மனிதர்பால் அவரது தயையின் ஓர் அடையாளமாகக் கருதப்பட வேண்டுமேயல்லாது, அவர்களின் தகுதியைக் குறிக்கும் அறிகுறியாக அல்ல.

இதற்கு உண்மையான, புரியுந்திறன் படைத்த ஒவ்வொரு நம்பிக்கையாளரும் சாட்சியளித்திடுவார்.

XCV

மனிதருக்கெல்லாம் பிரபுவாகிய உங்களின் பிரபு, தமது திருநூலில் விதித்துள்ளதற்கிணங்க, மனித இனத்திற்கு அவரால் உறுதியளிக்கப்பட்ட சலுகைகள் அளவற்றதாக இருந்து வந்திருக்கின்றன; என்றென்றும் அவ்வாறே இருந்தும் வரும் என்பதை நீங்கள் அறிவீராக.

எல்லாம் வல்லவர் மனிதனுக்கு வழங்கியுள்ள இச்சலுகைகளில் முதன்மையானது உணருந்திறம் என்னும் கொடையாகும்.

அவர் இத்தகைய கொடையினை வழங்கியதன் நோக்கம், அவரது உயிரினங்கள், ஒரே உண்மைக் கடவுளாகிய அவரை -- அவரது ஒளி உயர்வு பெறுமாக -- அறிந்து ஏற்றுக் கொள்ள உதவுவதேயாகும்.

இக்கொடை மனிதனுக்கு அனைத்துப் பொருள்களினுள்ளுமுள்ள மெய்ம்மையினை அறிந்துகொள்ளும் ஆற்றலை வழங்குகின்றது; எது சரியோ அதற்கு வழிகாட்டுகின்றது; அவனுக்குப் படைப்பின் இரகசியங்களைக் கண்டுபிடிக்கவும் உதவுகின்றது.

இதற்கு அடுத்த படியாக உள்ளது அவனது காணுந்திறன்; அது அவனது புரியுந்திறன் இயங்க உதவும் கருவியாகின்றது.

கேட்குந்திறன், இதயம் ஆகியவை போன்றவையும் அவ்வாறே மனித உடலுக்கு வழங்கப் பட்டுள்ள கொடைகளின் எண்ணிக்கையைச் சேர்ந்திடும்.

இவ்வாற்றல்களைத் தோற்றுவித்து, அவற்றை மனித உருவத்தினுள் வெளிப்படுத்திட்ட அவர் அளவிடற்கரிய உயரிய நிலையில் இருக்கின்றார்.

இக் கொடைகள் ஒவ்வொன்றும், ஒரே உண்மைக் கடவுளாகிய -- அவரது ஒளி மேன்மைப்படுத்தப்படுமாக - அவரது மாட்சிமைக்கும், ஆற்றலுக்கும், உயர்வுக்கும், சகலத்தையும் உள்ளடக்கும் அறிவுக்கும் ஐயத்திற்கிடமற்ற ஆதாரமாகும்.

மெய்ச்சார்ந்த புலனைக் கவனியுங்கள்.

எவ்வாறு, அதன் சக்தி மனித உடல் முழுவதிலும் பரவியுள்ளது என்பதைப் பாருங்கள்.

மாறாக, காணுந்திறன், கேட்குந்திறன் ஆகிய ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட மையத்திலேயே அமைக்கப்பட்டிருக்கின்றது; ஆனால், மெய்ச்சார்ந்த புலனுணர்வோ மனித உடல் முழுவதையும் தழுவுகின்றது.

அவரது சக்தி மகிமைப்படுத்தப்படுமாக; அவரது மாட்சிமை மேன்மைப்படுத்தப்படுமாக! இக் கொடைகள் மனிதனுள் இயற்கையாகவே அமைந்திருக்கின்றன.

மற்றக் கொடைகள் அனைத்தையும்விட அதிமுக்கியமான கொடை தெய்வீக வெளிப்பாடே ஆகும்; அது அழிவுறாத் தன்மையைக் கொண்டது; அது இறைவனை மட்டுமே சார்ந்ததாகும்.

இறைவனால் மனிதனுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு கொடையும், லௌகீகமானதோ ஆன்மீகமானதோ, அது, இதற்குக் கீழ்ப்பட்டதே.

அதன் சாராம்சத்தில், அது, விண்ணுலகினின்று வந்திடும் ஆகாரமாகவே இருக்கும்; என்றென்றும் அவ்வாறே இருந்தும் வரும்.

அதுவே இறைவனின் தலைசிறந்த அத்தாட்சி; அவரது மெய்ம்மையின் மிகத் தெளிவான ஆதாரம்; அவரது முழுநிறைவான வள்ளன்மை; அனைத்தையும் சூழ்ந்திடும் அவரது கருணைக்கு அடையாளம்; அவரது அதி அன்பார்ந்த அருளுக்கு அத்தாட்சி; அவரது அதி சிறந்த அருளின் சின்னம்.

இந்நாளில் அவரது அவதாரத்தை அறிந்து கொண்ட ஒருவர், உண்மையாகவே, இறைவனின் அதி உயரிய கொடையில் பங்குப்பெற்றவராவார்.

உங்களுக்கு அத்துணை உயரிய கொடைதனை அருளியுள்ளமைக்காக நீங்கள் உங்களின் பிரபுவுக்கு நன்றி செலுத்துங்கள்.

உங்கள் குரலை உயர்த்தி: புரிந்திடும் உள்ளங்கொண்ட ஒவ்வொருவரின் ஆவலானவரே, போற்றுதல் எல்லாம் உமக்கே உரியதாகட்டும்! எனக் கூறுவீராக.

XCVI

அதிவுயரிய எழுதுகோல் ஓய்வுஒழிவின்றி அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றது; இருந்தும், எத்துணைக் குறைவாக உள்ளனர் அதன் குரலின்பால் செவி சாய்த்துள்ளோர்! நாமங்கள் என்னும் இராஜ்யத்தின் வாசிகளானோர் உலகத்தின் பகட்டான பணிச் சின்னங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்; காணக் கண்களும் கேட்கச் செவிகளும் கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனும், அவற்றின் நிறங்கள் எந்தளவு நிலையற்றவை என்பதைச் சுலபத்தில் கண்டு கொள்ள முடியும் என்பதைத் தெரிந்திருந்தும், மறதிநிலையிலேயே இருக்கின்றான்.

இக்காலத்தில், மண்ணுலக மக்கள் அனைவருக்குள்ளும், ஒரு புதிய உயிர், துடிப்புற ஆரம்பித்துள்ளது; இருந்தும், அதன் காரணத்தைக் கண்டு கொண்டோரோ, நோக்கத்தைப் புரிந்து கொண்டோரோ, யாருமே கிடையாது.

மேற்கத்திய நாட்டு மக்களைக் கவனியுங்கள்.

எவ்வாறு அவர்கள், வீணான, பயனற்ற நோக்கத்திற்கான முயற்சியில் ஈடுபட்டு, அவற்றை நிறுவுவதற்காகவும் முன்னேறச் செய்வதற்காகவும் எண்ணற்ற உயிர்களைப் பலியிட்டு வந்துள்ளனர், இன்னமும் பலியிட்டும் வருகின்றனர்.

மற்றொரு பக்கத்தில், பிரகாசமிகு களஞ்சியமாகிய திருவெளிப்பாடு பாரசீக நாட்டில் தோன்றி, அதன் உயர்வும் புகழும் உலகம் முழுவதையும் சூழ்ந்துவிட்டுள்ள போதும், அந்நாட்டின் மக்கள், ஒழுக்கக் கேட்டுக்கு ஆளாகியும், உற்சாகமிழந்தும், அக்கறையின்மையில் மூழ்கியும் கிடக்கின்றனர்.

நண்பர்களே! உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பண்புகளின்பால் கவனக் குறைவாய் இருந்திடாதீர்; உங்களுக்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள உயரிய நிலையில் நாட்டக் குறைவாகவும் இருந்திடாதீர்.

சில உள்ளங்களினால் உருவாக்கப்பட்டுள்ள வீண் கற்பனைகளின் மூலம் உங்களின் உழைப்பை விரயம் செய்திடாதீர்.

நீங்கள்தாம் புரிந்துணர்வு என்னும் சுவர்க்கத்தின் நட்சத்திரங்கள்; அதிகாலையில் அசைவுறும் தென்றல் காற்று; மனித உயிர்களனைத்தும் நம்பியிருக்கும் மெல்லிய நீரோட்டங்கள்; அவரது திரு ஏட்டில் பொறிக்கப்பட்டுள்ள அட்சரங்கள்.

அதி மிகுதியான ஒற்றுமையுடனும், முழுமையான சகோதரத்துவ மனப்பாங்குடனும், கடுமுயற்சியில் இறங்குங்கள்; அதனால் நீங்கள், இறைவனுக்கு ஏற்புடையதனை நிறைவேற்றிடக்கூடும்.

மெய்யாகவே யான் கூறுகின்றேன், சண்டை சச்சரவுகளும், மற்றும், மனிதனின் மனம் வெறுக்கக் கூடியவை யாவுமே அவனது நிலைக்குப் பொருத்தமானவை அன்று.

இறைவனின் சமயத்தைப் பரப்புவதிலேயே உங்கள் சக்தியை மையப்படுத்துங்கள்.

எவரொருவர் இவ்வுயரிய சேவைக்குத் தகுதி உடையவரோ அவர் எழுந்து அதனை முன்னேற்றப் பாடுபடட்டும்.

எவருக்கு முடியவில்லையோ அவர், வலுமிக்கக் கட்டிடங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டமுறச் செய்து, ஒவ்வொரு மலையையும் நொறுக்கித் துகளாக்கி, ஆன்மா ஒவ்வொன்றையும் பிரம்மிப்படையச் செய்திடும் இவ்வெளிப்பாட்டினைப் பிரகடனம் செய்வதற்காகத் தனக்குப் பதிலாக வேறொருவரை நியமிக்க வேண்டியது கடமையாகின்றது.

இந்நாளின் மேன்மை முழுமையாக வெளிப்படுத்தப்படுமாயின் ஒவ்வொரு மனிதனும், ஒரு கண நேரமேனும் அதன் பேரொளியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவலில், எண்ணற்ற உயிர்களைத் தியாகஞ்செய்வான் என்றால் -- இவ்வுலகும் அதன் அழிவுறும் செல்வக் குவியல்களும் எம்மாத்திரம்! உங்களின் செயல்கள் அனைத்திலும் விவேகத்தினால் வழிகாட்டப்படுவீராக; அதனையே உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்.

நீங்கள் அனைவரும் இறைவனின் விருப்பத்தினை நிறைவேற்றிட அவரால் வலுப்படுத்தப்படுவீராக; அவரது நாமத்தை மகிமைப்படுத்த எழுந்திட்ட அவரது அன்புக்குப் பாத்திரமானோருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்தானத்தை மதித்திட நீங்கள் அருள் கூர்ந்து உதவி அளிக்கப்படுவீராக.

இறைவனின் பேரொளியும் விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும் உள்ளவை அனைத்தும், சுவர்க்கத்துளெல்லாம் சுவர்க்கமாகிய மேன்மைமிகு வானுலகத்திலுள்ள அனைத்தும் அவர்கள் மீது பொழியப் படுமாக.

XCVII

இறைவனுடன் பங்காளிகளானோர் இம் மண்ணுலக மக்களின் மனதுக்குள் புகுத்தி விட்டுள்ள அச் சந்தேகங்களைக் கவனியுங்கள்.

“செம்பைத் தங்கமாக இயல்பு மாற்றஞ் செய்வது எப்பொழுதாவது சாத்தியப் பட்டதுண்டா?” என கேட்கின்றனர்.

என் பிரபுவின் மீது ஆணையாக, அது முடியும் எனக் கூறுங்கள்.

இருப்பினும், அதன் இரகசியம், எமது அறிவினுள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

யாம் யாரை விரும்புகின்றோமோ அவருக்கு அதனை வெளிப்படுத்துவோம்.

யாராவது எமது சக்தியைச் சந்தேகித்தால், அவர், தனது பிரபுவாகிய இறைவனை வேண்டட்டும்; அதனால், அவருக்கு அவ்விரகசியத்தை வெளிப் படுத்தி, அதன் மெய்ம்மையை அவருக்கு உறுதிப்படுத்தக்கூடும்.

இவ்வுண்மையை அவர்கள் உணர்வோராயின், செம்பு தங்கமாக மாற்றப்பட முடியும் என்றால், அதுவே, தங்கமும் செம்பாக மாற்றப் பட முடியும் என்பதற்குப் போதுமான சான்றாகின்றது.

உலோகப் பொருள் ஒவ்வொன்றும் மற்ற உலோகப் பொருள் ஒவ்வொன்றின் அடர்த்தியையும் வடிவத்தையும் பண்டத் தன்மையையும் பெற்றிட முடியும்.

அது தொடர்பான அறிவு மறைவாயுள்ள நூலில் எம்மிடமே இருக்கின்றது.

XCVIII

கூறுவீராக: மதத் தலைவர்களே,! உங்களிடையே நடப்பிலுள்ள அளவிடும் முறைகளையும், அறிவியல் ஞானங்களையும் கொண்டு ஆண்டவனின் திருநூலை எடை போடாதீர்; மனிதரிடையே அளவிடுவதற்கென கொடுக்கப்பட்டுள்ள தவறாத் துலாக்கோலே அத்திருநூல்தான்.

மனிதர்களும் இனங்களும் கொண்டுள்ளவை எவையாயினும், அவை இவ்வதி சிறந்த துலாக்கோலில்தான் எடை பார்க்கப்பட வேண்டும்; இதனை நீங்கள் அறிவீராயின், அதன் எடையளவை அதன் சொந்த அளவிடும் முறையைக் கொண்டே பரிசோதிக்க வேண்டும்.

எவரை நீங்கள் பகல் வேளையிலும் இராக் காலத்திலும், மாலையிலும் காலையிலும் அழைத்திட்டீர்களோ அவரையே அறிந்து கொள்ளத் தவறிவிட்டதற்காக என் அன்புப்பரிவு என்னும் கண் உங்களுக்காகக் கண்ணீர் வடிக்கின்றது.

மனிதர்களே, வெண்பனியைப் போன்ற முகங்களுடனும், பிரகாசமிக்க உள்ளங்களுடனும், ஆசீர்வதிக்கப்பட்ட, இரத்தச் சிவப்பான அத்தளத்தை நோக்கி முன்னேறுங்கள்.

அதிலிருந்துதான் ஸட்ராத்-உல்-முந்தஹா இவ்வழைப்பு விடுக்கின்றது: “மெய்யாகவே, சர்வ சக்தி வாய்ந்த பாதுகாவலரான, சுயஜீவியான, என்னைத் தவிர இறைவன் வேறெவருமிலர்.

” சமயத் தலைவர்களே! உங்கள் மத்தியில், அகக் காட்சியிலோ உள்ளளியிலோ எம்மை விஞ்சிடவல்ல மனிதன் யார்? நா வன்மையிலும் விவேகத்திலும் எனக்கு ஈடானவன் எனத் துணிவுடன் கூறிக் கொள்பவனைக் காண்பது எங்கே? கருணையே உருவான எனது பிரபுவின் மீது ஆணையாக, நிச்சயமாக இல்லை! உலகிலுள்ள அனைத்தும் இல்லாது அழிந்து போய்விடும்; இதுவே சக்திமிக்க, அதி அன்புக்குரிய உங்கள் பிரபுவின் வதனமாகும் மனிதர்களே, எல்லா அறிவுக்கும் குறிக்கோளாகிய அவரை அறிந்து கொள்ளலையே கற்றலுக்கெல்லாம் அதிவுயரிய, இறுதி நோக்கமாக விதித்துள்ளோம்; ஆயினும், எவர் மூலமாக மறைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் வெளிக் கொணரப் பட்டதோ அவ்வொளியின் பகலூற்றான அவரிடமிருந்து ஒரு திரையைப் போன்றவற்றால் உங்களை மறைத்திட எவ்வாறு உங்கள் கல்வியினை அனுமதித்துள்ளீர் என்பதைக் கண்ணுறுங்கள்.

இவ் வெளியிடுகையின் பிரகாசம் பரிணமித்திடும் தோற்றுவாயினைக் கண்டிடுவீராயின் உலக மக்களையும் அவர்கள் கொண்டுள்ள அனைத்தையும் அப்பால் எறிந்து விட்டு மகிமை என்னும் அதி புனித ஆசனத்தை அணுகிடுவீர்.

கூறுவீராக: இதனை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடுமாயின், மெய்யாகவே, தாய் நூல் பொக்கிஷமாகப் போற்றப்படும் சுவர்க்கம் இதுவே.

புனித பூமிக்கு மேலாக எழும்பிடும் மலையிலிருந்து கற்பாறையினை உரக்க ஓசையிடச் செய்து, எரியும் புதிரினைக் குரலெழுப்பச் செய்து, “சகலத்திற்கும் மாட்சிமை பொருந்திய பிரபுவும் சக்தி மிக்கவரும் அன்புடையவருமான இறைவனுக்கே இராஜ்யம் உரியதாகும்,” எனப் பிரகடனம் செய்திட வைத்தவரும் அவரே.

யாம் எந்தப் பாடசாலைக்கும் சென்றதில்லை, அன்றியும் உங்களின் விளக்கக் கட்டுரைகள் எதனையுமே வாசித்ததும் இல்லை.

இக்கல்வியற்றோனின் சொற்களுக்குச் செவி சாய்த்திடுங்கள்.

அவற்றின் மூலமாகத்தான் அவர் உங்களை என்றும் நிலையான இறைவன்பால் அழைக்கின்றார்.

இதனை நீங்கள் புரிந்து கொள்ள இயலுமாயின் இதுவே உங்களுக்கு உலகப் பொக்கிஷங்கள் அனைத்தையும் விட நன்மை பயக்கவல்லது.

XCIX

எல்லா நாடுகளிலும் மனிதர்களின் இறை நம்பிக்கை வலுவிழந்து வருகின்றது; அவரது நலம் பயக்கும் மருந்தைத் தவிர வேறெதுவுமே அதனை மீண்டும் நலம்பெறச் செய்திட இயலாது.

கடவுள்பற்றின்மை என்னும் துருவின் அரித்தல் மனித சமுதாயத்தின் முக்கிய உடலுறுப்புகளைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றது; அவரது ஆற்றல்மிக்க வெளிப்பாடு என்னும் அருமருந்தைத் தவிர அதனைச் சுத்திகரித்துப் புத்துயிர்ப்பெறச் செய்யக்கூடியது வேறு என்ன இருக்கின்றது? ஹக்கீம், பருப்பொருளின் தனிம உட்கூறு பகுதிகளாகிடும் நுண்ணிய, பகுத்திடவியலாத துகள்களைத் தூய தங்கமாக மாற்றிடும் அளவுக்கு முழுமையான தன்மைமாற்றத்தைக் கொணர்ந்திடும் ஆற்றல் மனிதசக்திக்கு உட்பட்டதா? இது மலைப்பூட்டக் கூடியதாகவும், கடினமானதாகவும் தோன்றிடலாம்; ஆனால், நிறைவேற்றுவதற்கென யாம் சக்தி அளிக்கப்பட்டுள்ள பணியோ அதைவிட மிகப் பெரியது; அது சாத்தானுக்குரிய பலத்தைத் தெய்வீகச்சக்தியாக மாற்றக்கூடியது.

அத்தகைய ஒரு தன்மை ஓர் உருமாற்றத்திற்கான பேராற்றல் அவ்வருமருந்தின் ஆற்றலையே விஞ்சியதாகும்.

இறைவனின் திருமொழி மட்டுமே, அந்தளவு விளைவை உண்டுபண்ணக் கூடியதும் மிகப் பெரியதுமான அத்தகையத் தனித்தன்மையைக் கொண்டுள்ளதாகவும் கோரிக் கொள்ள இயலும்.

C

தெய்வீகத் தூதரின் குரல், இறைவனின் அரியாசனத்தினின்று வெளிவந்து இவ்வாறு பிரகடனம் செய்கின்றது: எனது அன்புக்குப் பாத்திரமானவர்களே! இவ்வுலகப் பொருள்களைக் கொண்டு எனது புனித ஆடையினைக் கறைப்படுத்தவோ, தீயதும், தூய்மையற்றதுமான ஆசைகளின் தூண்டுதல்களைப் பின்பற்றவோ செய்யாதீர்.

பேரொளி என்னும் இச் சிறையாகிய சுவர்க்கத்தினில் அதன் ஒளியின் முழுநிறைவுடன் பிரகாசிக்கும் தெய்வீக வெளிப்பாடு என்னும் பகல்நட்சத்திரம் எனக்குச் சாட்சி அளிக்கின்றது.

எவரது உள்ளங்கள் படைப்பு முழுவதன் வழிபாட்டின் நோக்கமான அவர்பால் திருப்பப்பட்டுள்ளனவோ, அவை, இந்நாளில், கண்ணுக்குப் புலனாகும், புலனாகாப் படைப்புப் பொருள்கள் அனைத்தையும் கடந்து சென்று தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.

அவர்கள் எனது சமயத்தைப் போதிக்க எழுவராயின், அவர்கள், கட்டுப்படுத்தப்படாதவரின் மூச்சைத் தங்களுக்குத் தூண்டுதல் அளிக்க அனுமதித்து, உறுதிமிக்க நோக்கத்துடனும், அவரிலேயே மையப்படுத்தப்பட்ட மனங்களுடனும், சகல பொருள்களில் இருந்தும் முழுமையாகப் பற்றறுத்துக் கொண்டும், அவற்றினின்று சுதந்திரமடைந்த உள்ளங்களுடனும், உலகும் அதன் பகட்டுகளிலிருந்தும் தூய்மைப்படுத்தப்பட்ட ஆன்மாக்களுடனும் அதனை உலக முழுவதிலும் பரப்பவேண்டும்.

இறைவனிடத்தில் நம்பிக்கையினைத் தங்களின் பிரயாணத்திற்கு முன்னேற்பாடாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதி மேன்மைப் படுத்தப்பட்ட, பேரொளிமயமான தங்களின் பிரபுவின்பால் அன்பு என்னும் ஆடையினால் தங்களை அணிவிக்கச் செய்துகொள்வது அவர்களுக்குப் பொருத்தமாகும்.

அவ்வாறு அவர்கள் செய்வராயின், அவர்களின் பேச்சு கேட்போரின் உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்திடும்.

இந்நாளில், எம்மையும், தங்களின் தீய உணர்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு, தங்களின் நம்பிக்கையை மண்ணுலகப் பொருள்களின் மீதும், விரைந்தோடி மறையும் புகழின் மீதும் வைத்துள்ளோரையும் பிரித்திடும் இடைப்பள்ளம்தான் எத்துணைப் பெரியது, மிக மிகப் பெரியது! பன்முறை, கருணைமயமானவரின் அரசவை, வெளித்தோற்றத்திற்கு, இவ்வுலகச் செல்வங்கள் சம்பந்தமாக அந்தளவு வறியதாய் இருந்ததன் காரணமாக, அவருடன் நெருங்கி வாழ்ந்தவர்கள் பயங்கரமான வறுமையினால் துன்பம் அனுபவித்தனர்.

அவர்களின் கடுந் துன்பங்களிலும், அதி மேன்மையின் எழுதுகோலானவர், எந்த வேளையிலுமே, இவ்வுலகையும் அதன் பொக்கிஷங்களையும் பொறுத்தவரை எதையுமே குறிப்பிடவோ, மறைமுகமாகச் சுட்டிக் காட்டவோ விரும்பியது கிடையாது.

எப்பொழுதாவது, ஏதேனும் அன்பளிப்பு அவருக்கு வழங்கப்பட்டால், தனக்கு வழங்கியவர்பால் அவரது அருளின் அடையாளமாக, அது ஏற்றுக் கொள்ளப்படும்.

யாம், உலகப் பொக்கிஷங்கள் அனைத்தையுமே எமது சொந்த உபயோகத்திற்காக வைத்துக்கொள்ள விரும்புவோமாகிலும், எமது அதிகாரத்தைக் குறித்துக் கேள்வி எழுப்பவோ, எமது உரிமையை எதிர்த்துக் கேட்கவோ யாருக்குமே உரிமை வழங்கப்பட வில்லை.

ஒரே மெய்க் கடவுளின் பெயரில் மனிதர்கள் கொண்டுள்ள செல்வங்களை வேண்டிக் கேட்பதை விட வெறுக்கத் தகுந்த பிறிதொரு செயலைக் கற்பனைச் செய்வதும் அசாத்தியமானதாகும்.

எது, மனிதர் அனைவரையும், உலகப் பொருள்கள் அனைத்தின்பாலுமுள்ள பற்றுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும், அதன் கறைகளிலிருந்து தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவும் செய்யுமோ, அதன்பால் எல்லா மனிதரையும் அழைக்க வேண்டியது உங்களுக்கும் நித்திய மெய்ம்மையினைப் பின்பற்றுவோருக்கும் கடமையாகின்றது; அதனால், அவர்பால் அன்பு கொண்டோர் அனைவரும் ஒளிமயமானவரது ஆடையின் நறுமணத்தினை முகர்ந்திடக் கூடும் இருப்பினும், செல்வம் படைத்தோர், ஏழைகளிடத்தில் அதிக மரியாதைக் காட்ட வேண்டும்; ஏனெனில், பொறுமையில் உறுதியுடன் இருக்கும் அவ்வேழைகளுக்கென இறைவனால் வழங்கப்பட்டுள்ள கீர்த்தி மிகவும் உயர்வானது.

எனது உயிரின் மீது ஆணை! இறைவன் வழங்க விரும்பும் அக் கீர்த்தியுடன் ஒப்பிடக்கூடிய கீர்த்தி வேறெதுவுமே கிடையாது.

பொறுமையுடன் தாங்கிக்கொண்டு, தங்களின் துன்பங்களை மறைத்து வைத்துக்கொள்ளும் ஏழைகளுக்காகக் காத்திருக்கும் அருள் மிகவும் உயர்வானது; செல்வந்தர்கள் தங்களின் செல்வங்களை வறியோருக்கு வழங்கி, அவர்களைத் தங்களைவிட மேலானவர்களாகக் கருதுவராயின், அது அவர்களுக்கு நன்று.

ஏழைகள், தங்களின் கடும் முயற்சியினால், வாழ்க்கைத் தேவைகளைச் சம்பாதிப்பதற்குப் பாடுபட இறைவன் அருள்புரிவாராக.

அதி மேன்மைமிகு இவ் வெளிப்பாட்டில், இதுவே, ஒவ்வொருவருக்கும் ஆணையிடப்பட்டு, ஆண்டவனின் பார்வையில் மிகச் சிறந்த செயலாகவும் மதிப்பிடப்படுகின்ற கடமையாகின்றது.

யார் இக்கடமையினை ஆற்றுகின்றாரோ, அவருக்கு நிச்சயமாக அரூபியானவரின் உதவி துணை புரியும்.

தன் கிருபையின் மூலம், அவர், யாரை விரும்புகின்றாரோ அவரைச் செல்வந்தராக்க அவரால் இயலும்.

மெய்யாகவே, அவர், சகலத்தின் மீதும் அதிகாரம் கொண்டுள்ளவர்.

அலியே, மனித பண்புகளுள் மிக அடிப்படையானது நேர்மையே என இறைவனின் நேசர்களிடம் கூறுவீராக.

அனைத்தையும் மதிப்பிடுவது அதனையே சார்ந்திருக்கின்றது.

இச்சிறைக்கைதி தாங்கிக்கொள்ள வேண்டியிருந்த கடுந்துன்பங்களையும் வேதனைகளையும் குறித்துச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

வாழ்நாள் முழுவதும், நான் எனது பகைவர்களின் தயவை நம்பியே கிடக்க வேண்டி இருந்தது; இறைவனின் மீதுள்ள அன்பின் பொருட்டு, ஒவ்வொரு நாளும் நான் ஒரு புதிய துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.

இறைவனது சமயத்தின் புகழ் உலக முழுவதிலும் பரவும்வரை நான் பொறுமையுடன் காத்திருந்தேன்.

இப்பொழுது யாராவது எழுந்து, தனது உள்ளம் தோற்றுவித்த வீண் கற்பனைகளினால் உந்தப்பட்டு, வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ, மனிதர்கள் மத்தியில், முரண்பாடெனும் விதைகளை விதைத்திடுவராயின் - அத்தகைய மனிதன் நீதியுடன் நடந்து கொண்டவன் எனக் கூற முடியுமா? எவரது வலிமை எல்லாப் பொருள்களின் மீதும் பரவியுள்ளதோ, அவர் மீது ஆணையாக, இல்லை! எனது உயிரின் மீது ஆணையாக! இறைவனின் சமயத்திற்காகவும், தாங்கள் என்ன கூறுகின்றனர் என்பதைத் தாங்களே அறியாதிருப்போருக்காகவும், புரிந்திட இயலாதவற்றைக் கற்பனைச் செய்வோருக்காகவும் எனது உள்ளம் வேதனையால் புலம்புகின்றது, எனது கண்கள் கண்ணீர் வடிக்கின்றன.

இந் நாளில், அதிவுயரிய நாமத்தினை இறுகப் பற்றிக்கொள்வதும், மனித இனம் முழுவதன் ஒற்றுமையை நிலைநாட்டுவதும் எல்லா மனிதர்களுக்கும் மிகவும் பொருத்தமானதாகும்.

அவரை விடுத்து ஓடுவதற்கு வேறு இடமில்லை; அவர் ஒருவரைத் தவிர தேடுவதற்குப் புகலிடம் வேறெதுவுமில்லை.

எந்த மனிதனாவது, மனிதர்களை இறைவனின் எல்லையற்ற சமுத்திரத்திலிருந்து வழிதவறிப் போகச்செய்திடக்கூடிய அத்தகைய வார்த்தைகளை உச்சரிப்பானாயின், அவர்களின் உள்ளங்களை அவரது தெளிவான, ஒளிமயமான, மெய்ம்மையை அல்லாது வேறெதனிலாவது வைக்கச் செய்வானாயின், அவற்றை மானிடனின் வரையறைக்குட்பட்ட அமைப்பைப் பெறவோ செய்வானாயின் - அத்தகைய ஒரு மனிதன், அவன் கொண்டிருக்கும் ஸ்தானம் எத்துணை உயர்ந்ததாக இருப்பினும், அவன், படைப்பு முழுவதனாலும் இறைவனின் இனிய நறுமணத்தைத் தானே இழக்கச் செய்து கொண்டவன் என்னும் நிந்தனைக்கு ஆளாவான்.

கூறுவீராக: புரிந்திடும் ஆற்றல் படைத்த உள்ளங் கொண்ட மனிதர்களே, நீதியைக் கடைப்பிடியுங்கள்! சீர்தூக்கிப் பார்ப்பதில் நியாயமற்ற ஒருவன் மனிதனின் ஸ்தானத்தை வேறுபடுத்திக் காட்டிடும் பண்பில் வறியோனாவான்.

மனிதனின் நெஞ்சங்கள் மறைத்து வைத்துள்ளவற்றை நித்திய மெய்ம்மையாகிய அவர் நன்கு அறிந்துள்ளார்.

அவரது நெடு நாளையப் பொறுமை தமது உயிரினங்களைத் துணிவு கொள்ளச் செய்துள்ளது; அவர் எந்த திரையையும் குறிப்பிட்ட நேரம் வரும் பொழுதுதான் கிழித்தெறிவார்.

அவரது விஞ்சிடும் கருணையே அவரது கடுங் கோபத்தின் கொடூரத்தைக் கட்டுப்படுத்துகின்றது; அதுதான் பெரும்பான்மையான மனிதர்களைத் தாங்கள் இரகசியமாகச் செய்தவற்றை ஒரே உண்மைக் கடவுளானவர் அறிந்திருக்க முடியாது எனக் கற்பனைச் செய்யவைக்கின்றது.

சகலமும் அறிந்த, சகலமும் அறிவிக்கப்பட்ட அவரின் பெயரால்! மனிதர் அனைவரின் செயல்களையும், அவரது அறிவெனும் கண்ணாடி, தெளிவாகவும், துல்லியமாகவும், விசுவாசத்துடனும் பிரதிபலித்துக் காட்டுகின்றது.

கூறுவீராக: வலுக்குறைந்தோர், உதவியற்றோர், ஆகியோரின் பாவங்களை மறைத்திடுபவரே, நீர் போற்றப்படுவீராக; கவனமற்றோரையும் உமக்கு எதிராக எழுந்திடுவோரையும் மன்னிப்பவரே, உமது நாமம் மேன்மைப் படுத்தப்படுமாக! மனிதரைத் தங்களது மனதின் கற்பனைகளுக்கேற்ப நடப்பதை, யாம், தடைச்செய்துள்ளோம்; அதனால் அவர்கள், அறிவுக்கெல்லாம் தோற்றுவாயும் நோக்கமும் ஆகிய அவரைக் கண்டுகொள்ள உதவப்பட்டு, அவர் வெளிப்படுத்த விரும்புகின்றவற்றை ஒப்புக்கொள்ளக் கூடும்.

அவர்கள் எவ்வாறு தங்களைப் பயனற்றக் கனவுகளிலும் வீண் கற்பனைகளிலும் சிக்கவைத்துக் கொண்டுள்ளனர் என்பதைப் பாருங்கள்.

எனது உயிரின் மீது ஆணை! தங்களின் உள்ளங்கள் உருவாக்கியுள்ளவற்றுக்குத் தாங்களே பலியாகியுள்ளனர்; இருந்தும், அவர்கள் அதனை உணர்ந்தாரிலர்.

அவர்களின் உதடுகள் உதிர்த்திடும் சொற்கள் வீணானவையும் பயனற்றவையும் ஆகும்; இருந்தும், அவர்கள் புரிந்திட்டாரிலர்.

அவர் கிருபைகூர்ந்து மனிதர்கள் அனைவருக்கும் தனது கருணையை அருளி, அவர்களைத் தம்மைப் பற்றிய அறிவையும் தங்களைப் பற்றிய அறிவையும் பெற்றிட உதவுமாறு யாம் இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.

எமது உயிர்மேல் ஆணையாக! யாரொருவர் அவரை அறிந்தருக்கின்றாரோ அவர் தமது பாசத்தினில் உயர்ந்து மேலெழுந்து, உலகின்பாலும் அதிலுள்ள அனைத்தின்பாலும் பற்றறுத்துக் கொள்வார்.

உலகில் எதுவுமே அவரைத் தமது பாதையிலிருந்து விலகச் செய்ய இயலாதிருக்கையில், தங்களின் வீண் கற்பனைகளினால் உந்தப்பட்டு, கடவுள் தடைச்செய்துள்ளவற்றைப் பேசுபவர்கள் அதனைச் சாதிப்பதென்பது எத்துணை அரிதானது.

கூறுவீராக: இதுவே ஒவ்வொரு காதும் அவரது குரலின்பால் கவனம் செலுத்தவேண்டிய நாள்.

இத் தவறிழைக்கப்பட்டோனின் அழைப்புக்குச் செவிசாய்ப்பீராக; ஒரே மெய்க்கடவுளானவரின் திருநாமத்தினை மிகைப்படுத்துவீராக; அவரது நினைவு என்னும் ஆபரணத்தைக் கொண்டு உங்களை அலங்கரித்துக் கொள்வீராக; அவரது அன்பெனும் தீபத்தைக் கொண்டு உங்களின் உள்ளங்களை ஒளிபெறச் செய்வீராக.

மனிதர்களின் உள்ளங்களைத் திறந்திடும் திறவுகோல் இதுவே; ஆன்மாக்களையெல்லாம் தூய்மைப்படுத்திடும் மெருகும் இதுவே.

இறைவனின் விருப்பமென்னும் விரலினின்று வெளிவந்திடுபவற்றில் கவனங் கொள்ளாதிருப்பவர் தெளிவாகத் தவறான வாழ்க்கை வாழ்பவராவார்.

உடன்பாடின்மையிலும் கயமைத் தனத்திலும் அல்லாது நட்புறவையும் நடத்தையில் நேர்மையையும் கடைப்பிடித்தல் உண்மை நம்பிக்கையின் அடையாளங்களாகும்.

உண்மையே உரைப்பவரும் இறைவனின் நம்பிக்கைக்குக் கருவூலமானவரும், உங்களைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட்டவற்றை மனிதர்களுக்குப் பிரகடனஞ் செய்யுங்கள்.

எமது நாமத்தைக் கூறிடுபவரே, எமது அரசவையின்மீது பார்வையைச் செலுத்தியுள்ளவரே, நலமளிப்பவரும் உங்களின் பிரபுவுமான அவரைப் போற்றிப்புகழும் நாவைக் கொண்டவரே, உமக்கு எமது மகிமை கிட்டிடுமாக

CI

ஒவ்வொரு புனித நூலின் வெளிப்படுத்துதலுக்கும், இல்லை, தெய்வீகமாக வெளிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு வாசகத்திற்கும் அடிப்படை நோக்கம், எல்லா மனிதர்களுக்கும், நேர்மைத்தன்மை, புரிந்துணர்வு ஆகிய பண்புகளை நல்குவதேயாகும்; அதனால் சமாதானமும் அமைதியும் அவர்களிடையே நிறுவப்படக்கூடும்.

எவையெல்லாம் மனிதரின் உள்ளங்களில் உறுதியை உண்டாக்குகின்றனவோ, அவர்களின் நிலையை மேம்பாடடையவோ மனநிறைவை அதிகரிக்கவோ செய்கின்றனவோ, அவை ஆண்டவனின் பார்வையில் ஏற்புடையவையாகும்.

தனது உயரிய நிர்ணயத்தினைப் பூர்த்தி செய்வதைத் தேர்ந்தெடுத்திடும் மனிதன் அடையவிருக்கும் ஸ்தானம்தான் எத்துணை உயர்வானது! அதி கீழான உயிரினங்கள்கூட என்றுமே அடைந்திடாத அம்மோசமான தாழ்நிலைக்கு அவன் தாழ்ந்திடக்கூடும்! நண்பர்களே, இந்நாள் உங்களுக்கு வழங்கிடும் வாய்ப்பைப்பற்றிக் கொள்ளுங்கள்; நீங்கள், தாராளமாகப் பொங்கி வழிந்திடும் அவரது அருளைப் பெறுவதிலிருந்து உங்களையே தடுத்துக் கொள்ளாதீர்.

ஆசீர்வதிக்கப்பட்ட இந்நாளில் அவர், உங்களைத், தூய, புனிதச் செயல்கள் என்னும் ஆபரணத்தினால் அலங்கரித்துக் கொள்ள கிருபை கூர்ந்து உதவிட நான் இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.

மெய்யாகவே அவர் எதனை விரும்புகின்றாரோ அதனைச் செய்வார்.

CII

மனிதர்களே, உண்மையாக நான் உங்களுக்குக் கூறுவதன்பால் செவி சாய்த்திடுங்கள்.

ஒரே மெய்க்கடவுளானவர், அவரது மகிமை மேன்மைப்படுத்தப் படுமாக, மனிதரின் உள்ளங்களை என்றென்றும் தனக்கே சொந்தமானவையாகவும், தனது தனி உடமையாகவும் கருதி வந்திருக்கின்றார்; தொடர்ந்தும் கருதி வருவார்.

மற்றவை அ¬னைத்தும், அவை நிலம் நீர் தொடர்பானவையோ, செல்வம் மேன்மை ஆகியவையோ, அவற்றை மண்ணுலகின் அரசர்கள், ஆட்சியாளர்கள், ஆகியோருக்கே பூர்வீக உடைமையாக்கியுள்ளார்.

ஆரம்பமில்லா ஆரம்பமுதல் “அவர், எதை விரும்புகின்றாரோ அதையே செய்வார்” என்னும் வாசகத்தைப் பிரகடனஞ் செய்யும் கொடி, முழுப் பேரொளியுடன் அவரது வெளிப்படுத்தலுக்கு முன்னர் பறக்கவிடப்பட்டுள்ளது.

இந்நாளில் மனித இனத்திற்குத் தேவையானது எதுவெனில், அதிகாரத்திலிருப்போருக்குக் கீழ்ப்படிதலும், விவேகம் என்னும் கயிற்றினை விசுவாசத்துடன் கடைப் பிடித்தலுமேயாகும்.

மானிட இனத்தின் உடனடியான ஆதரவு மற்றும் பாதுகாப்பு, காப்புறுதி ஆகியவற்றுக்கு அத்தியாவசியமான கருவிகள் மனித சமுதாய ஆளுனர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் பிடியில் உள்ளன.

இதுவே, ஆண்டவனின் விருப்பமும் அவரது கட்டளையுமாகும்.

உலக மன்னர்களுள் ஒருவர், ஆண்டவனின் பொருட்டு, தவறிழைக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டுமுள்ள இந்த மக்களின் வெற்றிக்காக எழுவார் என்ற நம்பிக்கையினைக் கொண்டுள்ளோம்.

அத்தகைய மன்னர், என்றென்றும் புகழப்பட்டு வானளாவப் பாராட்டப்படுவார்.

எவரொருவர் அவர்களுக்கு உதவுகின்றனரோ அவருக்கு உதவுவதையும், அவரது நம்பிக்கைக்காகச் சேவை செய்வதையும், அவர்பால் தங்களது நிலையான விசுவாசத்தினைக் காட்டுவதையும், ஆண்டவன், இந்த மக்களுக்குக் கடமையாக விதித்துள்ளார்.

என்னைப் பின்பற்றுகின்றவர்கள், எல்லாச் சூழ்நிலைகளிலும், எவர் எனது சமயத்தின் வெற்றிக்காக எழுகின்றாரோ அவரது நலனை மேம்படுத்தக் கடுமுயற்சி செய்யவேன்டும்; எல்லா வேளைகளிலும், அவர்பால் தங்களின் பக்தியையும் விசுவாசத்தையும் காட்ட வேண்டும்.

எனது அறிவுரையைச் செவிமடுத்துக் கடைப்பிடிக்கும் மனிதன் மகிழ்வெய்துவான்.

எனது விருப்பத்தினை நிறைவேற்றத் தவறியவன் கடுந்துயரத்துக்கு ஆளாவான்.

CIII

உண்மையே உரைத்திடும் தனது நாவினால், இறைவன்: “பேரொளி என்னும் அப்ஹா இராஜ்யத்தினில் வாழ்கின்றவர் நானே” என்ற இத் திருச்சொற்களுக்குத் தனது நிருபங்களில் சாட்சியம் அளித்திருக்கின்றார்.

இறைவனின் நேர்மைத் தன்மை சாட்சியாக! அவர், இவ் விழுமிய, இப் புனித, இவ் வலிமை மிகு, சகலத்திற்கும் மேலான ஸ்தானத்தின் உச்சத்தில் இருந்து யாவற்றையும் பார்க்கின்றார், யாவற்றையும் கேட்கின்றார்; இக்காலத்தில் இவ்வாறு பறைசாற்றுகின்றார்: ஜவாத், எந்த ஒரு மனிதனும் இதற்கு முன் அடைந்திடாததனை நீ அடைந்துள்ளததற்காக, ஆசீர்வதிக்கப்படுவாய்.

நித்திய மெய்ம்மையான அவர் மீது ஆணையிடுகின்றேன்! உன் மூலமாக, மேன்மைப்படுத்தப்பட்ட சுவர்க்கத்தின் வாசிகளின் கண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன.

இருப்பினும், மனிதர்கள், முழுதும் கவனமற்றிருக்கின்றனர்.

யாம் உங்களின் ஸ்தானத்தை வெளிப்படுத்துவோமாகில், மனிதர்களின் உள்ளங்கள் கடுமையான கிளர்ச்சிக்கு ஆளாகிடும்; அவர்களின் காலடிகள் சறுக்கும்; வெற்றுப் பகட்டின் உருக்கள் பிரம்மிப்படைந்து, தரையில் வீழ்ந்திடுவர்; கேட்கப் பயந்து, கவனமின்மை என்னும் விரல்களைத் தங்களின் காதுகளுக்குள் திணித்துக் கொள்வர்.

இவ்வுலகக் காரியங்களிலேயே ஈடுபட்டு, அதி மேன்மையான இறைவனை நினைக்க மறந்துவிட்டுள்ளோரைக் குறித்துக் கவலையுறாதீர்.

நித்திய மெய்ம்மையான அவர் சாட்சியாக! எல்லாம் வல்லவரின் கடும் சீற்றமிக்கச் சினம் அவர்களைப் பிடித்து உலுக்கிடும்.

மெய்யாகவே, அவர், சர்வவல்லவர், சகலத்தையும் கட்டுப்படுத்துபவர், அதி சக்தி வாய்ந்தவர்.

அவர்களின் ஒழுக்கக் கேட்டின் கறையிலிருந்து உலகத்தைத் தூய்மைப் படுத்தி, அதனை, அவரது அருகாமையில் உள்ள தனது ஊழியர்களிடம் பரம்பரைச் சொத்தாக வழங்கிடுவார்.

கூறுவீராக: மனிதர்களே! தெய்வீக ஜோஸப்பை, மிக சொற்ப விலைக்குப் பண்டமாற்று செய்துவிட்டுள்ள உங்களின் வாய்களை மண் நிரப்பப்பட்டும் , உங்களின் கண்களைச் சாம்பல் குருடாக்கட்டும்.

வழி தவறி நெடுந்தூரம் போனவர்களே, கடும் வேதனை உங்களைத் தாக்குமாக! அவரையும் அவரது சமயத்தையும் விஞ்சிடுவதற்கான சக்தியைக் கொண்டிருப்பதாக உங்கள் மனதில் நீங்கள் கற்பனைச் செய்கின்றீர்களா? அது ஒரு போதும் நடந்திடாது! சர்வசக்தி வாய்ந்த, அதி மேன்மையான, அதிவுயரிய, அவரே இதற்குச் சாட்சி பகர்கின்றார்.

விரைவில், அவரது தண்டனை என்னும் கொடுங்காற்று உங்களைத் தாக்கும்; நரகத்தின் தூசி உங்களை முழுதாக மூடிடும்.

இவ்வுலகின் வீண் தற்பெருமைகளையும் அலங்கரிப்புகளையும் திரட்டிக் குவித்து வைத்திருக்கும் அவர்கள், இறுமாப்புடன் இறைவனிடமிருந்து அப்பால் திரும்பிவிட்டுள்ளனர் - இவர்கள் இவ்வுலகையும் வருவுலகையும் இழந்துவிட்டுள்ளனர்.

விரைவில், இறைவன், சக்தி என்னும் கரங்களைக் கொண்டு, அவர்களின் உடைமைகளைப் பறித்துக்கொண்டு, அவர்களிடமிருந்து தனது வள்ளன்மை என்னும் அங்கியினை அகற்றிடுவார்.

அவர்களே குறுகிய காலத்தில் இதனைக் கண்டிடுவர்.

நீங்களுங்கூட, இதற்குச் சாட்சியம் அளிப்பீர்.

கூறுவீராக: மனிதர்களே! இவ் வாழ்க்கையையும் அதன் சூழ்ச்சிகளையும் உங்களை ஏமாற்ற விட்டிடாதீர்; உலகமும் அதனுள் இருக்கும் அனைத்தும் அவரது விருப்பம் என்னும் பிடியில் உறுதியாகப் பிடிபட்டுக் கிடக்கின்றன.

தான் விரும்பியவருக்குத் தனது சலுகையினை வழங்குகின்றார்; தனது விருப்பத்தின்படியே எவரிடம் வேண்டுமோ அவரிடம் இருந்து அதனை நீக்குகின்றார்.

இவ்வுலகம் தன் பார்வையில் மதிப்புடையதாய் இருந்திருப்பின், நிச்சயமாக, அவர், தனது பகைவர்களை, அதிலிருந்து ஒரு கடுகளவுகூட உடைமையாக்கிக் கொள்ள விட்டிருக்க மாட்டார்.

இருப்பினும் தமது சமயத்தில் உங்களின் கைகள் ஆற்றியுள்ள¬வைக்குக் கைம்மாறாக அவர், உங்களை அதன் காரியங்களில் சிக்க வைத்துள்ளார்.

இதனை நீங்கள் உணர்ந்திடக் கூடுமாயின், உண்மையாகவே, இது, நீங்களே விரும்பி நீங்களாகவே உங்கள் மீது விளைவித்துக் கொண்ட தண்டனையாகும்.

இறைவனின் மதிப்பின்படி வெறுக்கத் தக்கதும் பயனற்றதுமான பொருள்களில் நீங்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றீர்களா? அப்பொருள்களைக் கொண்டுதான் அவர் சந்தேகமுறும் உள்ளங்களைச் சோதிக்கின்றார்.

CIV

உலக மக்களே! மெய்யாகவே அறிவீராக; எதிர் பாராத பேரிடர் ஒன்று உங்களைப் பின் தொடர்ந்து வருகின்றது.

கடுந் தண்டனை உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது.

நீங்கள் ஆற்றிய செயல்கள் எனது பார்வையில் இருந்து மறைக்கப் பட்டுவிட்டன என்று எண்ணிடாதீர்.

எனது அழகின் மீது ஆணை! உங்களின் செயல்கள் அனைத்தையும், எனது எழுதுகோல், மரகதத் தகடுகளின்மீது தெளிவான எழுத்துக்களால் செதுக்கி வைத்துள்ளது.

CV

உலக மன்னர்களே! சகலத்திற்கும் மாட்சிமை பொருந்திய பிரபுவான அவர் வந்து விட்டார்.

அரசு எல்லாம்வல்ல பாதுகாப்பாளரும், தன்னிச்சையாய் இயங்கவல்லவருமான இறைவனுக்கே உரியதாகும்.

இறைவனைத் தவிர வேறெதனையும் வழிபடாதீர்; பிரகாசிக்கும் உள்ளங்களுடன் நாமங்களுக்கெல்லாம் பிரபுவான உங்கள் பிரபுவின்பால் முகங்களை உயர்த்திடுங்கள்.

நீங்கள் அறிந்திடக் கூடுமாயின், இதுவே நீங்கள் கொண்டுள்ளதும் எதனுடனும் ஒப்பிட இயலாததுமான ஒரு வெளிப்பாடாகும்.

எனது பாதுகாக்கப்பட்ட நிருபத்தை அல்லாது வேறு எதுவுமே கணித்திட இயலாத உலகங்களிலிருந்து நீங்கள் உங்களை மறைத்துக் கொண்டு, மற்றவர்களுக்காக நீங்கள் குவித்து வைத்திருப்பவற்றில் பெரும் மகிழ்வுறுவதையும் யாம் கண்ணுறுகின்றோம்.

நீங்கள் குவித்து வைத்துள்ள செல்வங்கள் உங்களின் இறுதிக் குறிக்கோளிலிருந்து உங்களை வெகுதூரங் கொண்டு சென்றுள்ளன.

நீங்கள் புரிந்துகொள்ள இயலுமாயின், இது உங்களுக்குச் சிறிதும் பொருத்தமற்றது.

உங்களின் உள்ளங்களை உலகக் கறைகளிலிருந்து கழுவித் தூய்மைப்படுத்தி, மண்ணுலகையும் விண்ணுலகையும் படைத்தோனாகிய உங்கள் பிரபுவின் இராஜ்ஜியத்துக்குள் நுழைந்திட விரையுங்கள்; உலகத்தையே நடுக்கமுறச் செய்திட்டவர் அவரே; பொருள்களனைத்தையும் துறந்து, மறைவாயுள்ள நிருபம் விதித்துள்ளதனைப் பற்றிக்கொண்டோரைத் தவிர அதன் மக்கள் அனைவரையும் புலம்பச் செய்திட்டார்.

இறைவனுடன் சம்பாஷணை நடத்திய அவர், காலங்களில் புராதனமான அவரின் ஒளியையடைந்து, கடல்களைப் பொங்கி எழச்செய்து, இக் கிண்ணத்திலிருந்து ஒன்றிணைதல் என்னும் தூயநீரினைப் பருகிட்டநாள் இதுவேயாகும்.

கூறுவீராக: ஒரே மெய்ப்பொருள் சாட்சியாக! வெளிப்பாடு என்னும் பகலூற்றினை ஸைனாய் (ஷிவீஸீணீவீ) வலம் வந்து கொண்டிருக்கின்றது; அப்பொழுது, இராஜ்ஜியத்தின் உச்சிகளிலிருந்து, இறைவனது ஆவியின் குரல் இவ்வாறு பிரகடனஞ் செய்வது கேட்கின்றது: “உலகின் செருக்குற்றோரே, உங்களை எழுச்சியுறச் செய்து கொண்டு அவர்பால் விரையுங்கள்.

” இந் நாளில் கார்மெல் () ஏக்கமிகு பக்தியுடன் அவரது அரசவை¬யை அடைய விரைந்தது; அப்பொழுது, ஸையோனின் (ஞீவீஷீஸீ) மையத்தில் இருந்து: “வாக்குறுதி நிறைவேற்றப் பட்டுவிட்டது.

அதி மேன்மையான, சர்வ வல்லவரான, அதி அன்புக்குரியவரான இறைவன் தனது திருநூலில் அறிவித்துள்ளது வெளிப்படுத்தப்பட்டுவிட்டது” எனும் குரல் எழும்பியது.

உலக மன்னர்களே! அதி உயரிய சட்டம் உன்னதப் பேரொளியின் இக்காட்சித் தலத்தினில் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது.

முடிவுக் காலத்திற்கு யார் வழிகோலினாரோ, யார் மூலமாகச் சந்திரன் இரண்டாகப் பிளவுறச் செய்யப்பட்டு, ஒவ்வொரு மாற்றவியலாத ஒவ்வொரு கட்டளையும் விளக்கப்பட்டுள்ளதோ, அவ்வதி உயரிய ஆணையாளரின் விருப்பத்திற்கு இணங்கவே ஒவ்வொரு மறைபொருளும் வெளிக் கொணரப் பட்டுள்ளது.

உலக மன்னர்களே, நீங்கள் வெறும் சிற்றரசர்கள்தாம்! அதி அற்புத ஒளியினால் அலங்கரிக்கப்பட்டு மன்னர்களுக்கெல்லாம் மன்னராகிய அவர் தோன்றி விட்டார்.

ஆபத்தில் உதவுபவரும் தன்னிச்சையாய் இயங்கவல்லவருமான அவர் உங்களைத் தம்பால் அழைக்கின்றார்.

கவனமாய் இருங்கள், இல்லையெனில், பெருமை, இவ்வெளிப்பாட்டின் தோற்றுவாயினை அறிந்து கொள்வதிலிருந்து உங்களைத் தடுத்திடப் போகின்றது; இவ்வுலகப் பொருள்கள் ஒரு திரையைப்போலாகி சுவர்க்கத்தின் படைப்பாளரான அவரிடமிருந்து உங்களை மறைத்திடப் போகின்றது.

தேசங்களின் ஆவலானவரும் தம் ஒரு சொல்லின் மூலம் உங்களைப் படைத்து என்றென்றும் அவர்தம் அரசுரிமையின் அடையாளங்களாக ஆக்கியுள்ளவருமான அவருக்குச் சேவை ஆற்றிட எழுந்திடுவீர்.

இறைவனின் நேர்மைத்தன்மை சாட்சியாக! உங்களது இராஜ்யங்களின் மீது கை வைப்பது எமது நோக்கமன்று.

மனிதர்களின் உள்ளங்களைக் கைப்பற்றி அவற்றை ஆட்கொள்வதே எம் தூதுப்பணியாகும்.

அவற்றின் மீதே பஹாவின் பார்வை பொருந்தியுள்ளது.

இதனை நீங்கள் உணர முடியுமாயின், அதற்கு நாமங்களின் இராஜ்ஜியமே சாட்சி பகர்கின்றது.

தனது பிரபுவைப் பின்பற்றும் ஒருவன் இவ்வுலகையும் அதிலுள்ள அனைத்தையும் துறப்பான்; அவ்வாறாயின், அத்துணை உயர்வான ஸ்தானத்தைக் கொண்டுள்ள அவரது பற்றின்மை எத்துணை உயரியதாக இருக்கக் கூடும்! உங்களின் அரண்மனைகளைத் துறந்து அவரது இராஜ்யத்தினுள் நுழைய விரையுங்கள்.

மெய்யாகவே, இதுவே, இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்கு நன்மை பயப்பதாகும்.

இதனை நீங்கள் அறிந்திட இயலுமாயின் மேலுலக இராஜ்யத்தின் அதிபதியானவரே இதற்குச் சாட்சியமளிக்கின்றார்.

எமது இராஜ்யத்தில் எமது சமயத்திற்கு உதவிட எந்த ஒரு மன்னர் எழுகின்றாரோ, எந்த ஒரு மன்னர் எம்மைத் தவிர மற்ற அனைத்தின்பாலும் பற்றைத் துறக்கின்றாரோ, அந்த மன்னருக்குக் காத்திருக்கும் அருட்பேறுதான் என்னே! அப்படிப்பட்ட மன்னர் பஹாவின் மக்களுக்காக இறைவன் தயாரித்துள்ள கலமான -- அச் செங்கலத்தின் அன்பர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப் படுகின்றார்.

அனைவரும் அவரது பெயரை மகிமைப்படுத்த வேண்டும்.

அவரது ஸ்தானத்திற்குப் பக்தி மரியாதை அளிக்க வேண்டும்; கண்ணுக்குப் புலனாகும், புலனாகா இராஜ்யங்களில் வசிப்போர் அனைவரின் சர்வசக்திவாய்ந்த பாதுகாப்பாளர்கள் என்னும் எனது நாமங்களான திறவுகோல்களைக் கொண்டு நகரங்களைத் திறப்பதற்கு அம்மன்னருக்கு உதவுங்கள்.

அத்தகைய மன்னர் மனித இனத்தின் கண்ணாவார்; படைப்பின் நெற்றியில் பிரகாசிக்கும் ஆபரணமாவார்; உலகம் முழுவதன் அருட்பேறுகளுக்கு மூலத்தோற்றுவாய் ஆவார்.

பஹாவின் மக்களே, அவருக்கு உதவிட உங்கள் பொருள்களை மட்டும் அல்லாது, உங்கள் உயிரையே அர்ப்பணித்திட முன்வாருங்கள்.

CVI

அனைத்தும் அறிந்த தெய்வீக மருத்துவர் தனது விரலை மானிடத்தின் நாடியின் மேல் வைத்திருக்கின்றார்.

வியாதியை அறிகின்றார்; தனது தவறா விவேகத்தினைக் கொண்டு பரிகாரம் வழங்குகின்றார்.

ஒவ்வொரு காலமும் அதற்கு உரியதான பிரச்சினையையும், ஒவ்வோர் ஆன்மாவும் அதன் பிரத்தியேக அவாவையும் கொண்டுள்ளன.

தற்கால துன்பங்களுக்கான பரிகாரம் அடுத்துவரும் காலத்தின் தேவைக்கு முழுதும் ஏற்றதாய் இருக்கவே முடியாது.

நீங்கள் வாழும் காலத்தின் தேவைகளில் அக்கறை காட்டி, அதன் உடனடித் தேவைகள், அவசியங்கள், ஆகியவற்றிலேயே உங்கள் கலந்தாலோசனைகளை மையப் படுத்துங்கள்.

மனித இனம் முழுவதுமே எவ்வாறு அளவிறந்த துன்பங்களால் சூழப்பட்டிருக்கின்றது என்பதை நாம் நன்கு உணர முடிகின்றது.

அது, கடும் வேதனையினால் அவதியுற்றும், நம்பிக்கை இழந்தும், நோய்ப் படுக்கையில் நலிவுற்றுக் கிடப்பதை நாம் பார்க்கின்றோம்.

தற்பெருமையெனும் போதையில் கிடப்போர், அதற்கும், தெய்வீகமான, தவறிழைக்காத மருத்துவருக்குமிடையே, தங்களைக் குறுக்கிடச் செய்து கொண்டுள்ளனர்.

எவ்வாறு, அவர்கள், தாங்களும் உட்பட, எல்லா மனிதர்களையும் தங்களின் சூழ்ச்சி வலையில் சிக்க வைத்துள்ளனர் என்பதைப் பாருங்கள்.

அவர்கள் நோயின் மூலகாரணத்தையும் அறிந்திட முடிந்திலர்; அதன் சிகிச்சைக்கான அறிவு எதனையும் கொண்டிடவுமிலர்.

நேரானதைக் கோணலானதென எண்ணிக்கொண்டுள்ளனர்; நண்பனைப் பகைவன் எனவும் கற்பனைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

இக் கைதியின் இனிமைமிகு கீதத்தின்பால் செவி சாயுங்கள்.

எழுந்து, உரக்கக் குரல் எழுப்புங்கள்; அதனால், ஒரு வேளை, ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பவர்கள் உறக்கம் கலைந்து எழுந்திடக்கூடும்.

கூறுவீராக: மரணமடைந்தோரே, தெய்வீக வள்ளன்மை என்னும் கரம் உங்களுக்கு ஆன்ம நீரினை வழங்குகின்றது.

விரைந்து வந்து நிரம்பப் பருகுங்கள்.

யாரொருவர் இந் நாளில் மீண்டும் உயிர் பெற்றுள்ளாரோ, அவர், இறக்க மாட்டார்; யார் மாண்டவராய் கிடக்கின்றாரோ, அவர் உயிர் பெறவே மாட்டார்.

CVII

உங்களின் கருணை மயமான பிரபுவானவர், தனது உள்ளத்தினில், மனித இனம் முழுவதையும் ஒரே ஆன்மாவாகவும் ஒரே உடலாகவும் காணவேண்டும் என்ற அவாவினைக் கொண்டிருக்கின்றார்.

படைக்கப்பட்ட நாள்களை எல்லாம் மங்கச் செய்யும் இந்நாளில் ஆண்டவனின் அரிய கடாட்சம், கருணை,

ஆகியவற்றில் உங்கள் பங்கைப் பெற வேண்டும் என்ற அவாவினால், தான் கொண்டுள்ள அனைத்தையும் துறக்கும் ஒரு மனிதனுக்காகக் காத்திருக்கும் பேரானந்தந்தான் என்னே! அத்தகைய மனிதர், ஆண்டவனின் அருள் பேற்றினைப் பெற்றவர்களின் மத்தியில் இருப்பார் என்பதற்கு நானே சாட்சி அளிக்கின்றேன்.

CVIII

மனிதர்களே, யாம் உங்களுக்கென ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்துள்ளோம்.

நியமிக்கப்பட்ட நேரத்தில், நீங்கள், இறைவன்பால் திரும்பத் தவறுவீராயின், மெய்யாகவே அவர், உங்கள் மீது ஆவேசமாகக் கை வைத்து, எல்லாத் திசைகளிலிருந்தும் கடுந் துன்பங்கள் உங்களைத் தாக்குமாறு செய்திடுவார்.

உண்மையாகவே, அப்பொழுது உங்களின் பிரபுவானவர் உங்களுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைதான் எத்துணை கொடூரமானது!

CIX

கமால்! இறைவனின் அதி அருள்மிகு தயையினால், இந் நாளில் மரணத்துக்குரிய மனிதன் அடையவிருக்கும் உயரிய நிலைகள், இன்னும் அவனது பார்வைக்கு வெளிப்படுத்தப்படாமலேயே இருக்கின்றன.

படைப்புலகம் இத்தகைய ஒரு வெளிப்பாட்டிற்கான ஆற்றலைக் கொண்டிருந்ததே இல்லை; இதுவரையிலுங்கூட கொண்டிருக்கவில்லை.

அவரது விருப்பத்திற்கிணங்க, அத்தகைய உள்ளார்ந்த ஆற்றல்கள், மனிதர்களுக்கு வழங்கப்படும்நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

நாடுகளின் படைகளெல்லாம் அவருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்திடினும், உலகத்தின் மன்னர்கள் அவரது சமயத்தைக் கீழறுக்கக் கூட்டுச்சேர்ந்திடினும், அவரது வலிமையின் சக்தியானது ஆட்டமுறாமலேயே இருந்திடும்.

மெய்யாகவே அவர் உண்மையே உரைக்கின்றார்; ஒப்பற்றவரான, சகலமும் அறிந்தவரான அவரது பாதைக்கு அவர்களை அழைக்கின்றார்.

என்றென்றும் தொடர்ந்து முன்னேறிடும் நாகரிகத்தினை மேலும் முன்னேற்றமடையச் செய்யவே மனிதரெல்லாம் படைக்கப்பட்டுள்ளனர்.

சர்வவல்லவரே எனக்குச் சாட்சி பகர்கின்றார்: காட்டு மிருகங்களைப் போல் நடந்திடுவது மனிதனுக்குப் பொருத்தமன்று.

பொறுமை, கருணை, உலக மக்கள் அனைவரின்பாலும், இனங்களின் பாலும், அனுதாபம், பரிவன்பு ஆகியவையே அவனது கௌரவத்திற்குப் பொருத்தமான பண்புகள்.

கூறுவீராக: நண்பர்களே! நாமங்களுக்கெல்லாம் பிரபுவாகிய அவரது தெய்வீக அருளின் மூலம் பெருக்கெடுத்திடும் கண்ணாடியைப் போன்ற நீரோடையிலிருந்து வேண்டிய அளவு பருகிடுங்கள்.

மற்றவர்களும், எனது நாமத்தினால், அதன் நீரை உட்கொள்ளட்டும்; அதனால், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மனிதரின் தலைவர்கள், நித்திய மெய்ம்மை வெளிப்படுத்தப்பட்டதன் நோக்கத்தையும், அவர்கள் படைக்கப்பட்டதற்குக் காரணத்தையும் முழுதாக அறிந்துகொள்ளக் கூடும்.

CX

மேன்மைமிகு திருவுருவானவர் மொழிகின்றார்: மனிதரின் குழந்தைகளே! இறைவனின் சமயத்திற்கும் அவரது மதத்திற்கும் உயிரூட்டும் அடிப்படை நோக்கம்: மனித இனத்தின் நன்மையைப் பாதுகாத்து, அதன் ஒற்றுமையை வளர்ச்சியடையச் செய்து, மனிதரிடையே அன்புணர்ச்சியையும், சகோதரத்துவத்தையும் பேணுவதேயாகும்.

அதனை வேற்றுமை, முரண்பாடு, வெறுப்பு, பகைமை ஆகியவற்றிற்குத் தோற்றிடமாக்கிடாதீர்.

இதுவே நேர்வழி; நிலையான, அசைக்கவியலாத அஸ்திவாரத்தைக் கொண்டுள்ளது.

எவையெல்லாம் இவ் வஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளனவோ, இவ்வுலகத்தின் மாற்றங்களும் தற்செயல் நிகழ்வுகளும் அவற்றின் பலத்தைப் பாதிக்கவோ, எண்ணற்ற நூற்றாண்டுகளின் புரட்சிகள் அதன் அமைப்பினை வலுவிழக்கச் செய்யவோ இயலாது.

உலகத்தின் மதத் தலைவர்களும் அதன் மன்னர்களும், இக் காலத்தைச் சீர்த்திருத்தவும், அதன் பாக்கியத்தை மறுசீரமைப்பதற்காகவும் ஏகமனதாக எழுவார்கள் என்பதே எமது நம்பிக்கையாகும்.

அதன் தேவைகள் சம்பந்தமாக ஆழ்ந்து சிந்தித்த பின், அவர்கள், கூட்டாகக் கலந்தாலோசித்து, அக்கறையுடன் கொண்ட ஆழ்ந்த யோசனையின் மூலம், நோயுற்று, கடுந் துன்பத்தில் இருக்கும் உலகத்திற்குத் தேவையான சிகிச்சை அளித்திடட்டும்.

அதிகாரம் படைத்தோர், எல்லாக் காரியங்களிலும், நிதானத்தைக் கையாளவேண்டியது கடமையாகின்றது.

எவை நிதானத்தின் எல்லையைக் கடக்கின்றனவோ அவை நன்மை பயக்கும் சக்தியை இழந்திடும்.

உதாரணமாக, சுதந்திரம், நாகரிகம் ஆகியவற்றைக் கவனியுங்கள்.

புரியுந்திறன் கொண்டுள்ள மனிதர் எவ்வளவுதான் அவற்றைக் குறித்து அனுகூலமான கருத்தினைக் கொண்டிருப்பினும், அவை, வரம்பு மீற விடப்படுமாயின், அவை மனிதரில் மிக மோசமான தாக்கத்தைத் தான் உண்டு பண்ணும்.

இறைவா, மனிதர் மத்தியிலுள்ள ஆட்சியாளர்கள், விவேகிகள், கற்றோர் முதலியோரின் கடுமுயற்சிகளின் விளைவாக உலக மனிதர்கள் தங்களுக்கு நன்மை பயக்கவல்லவற்றைக் கண்டிட வழிகாட்டப் படுவராக.

எத்தனை காலந்தான் மனித இனம் தனது தவறான வழியில் பிடிவாதமாக இருந்திடும்? எத்தனை காலந்தான் அநீதி தொடர்ந்திடும்? எத்தனை காலந்தான் மனிதரிடையே ஒழுங்கின்மையும் குழப்பமும் ஆட்சி செலுத்திடும்? எத்தனை காலந்தான் முரண்பாடு சமுதாயத்தின் வதனத்தைக் கிளர்ச்சியுறச் செய்திடும்? நம்பிக்கையின்மை என்னும் காற்று, அந்தோ, எல்லாத் திசைகளிலிலிருந்தும் வீசிக்கொண்டு இருக்கின்றது; மனித இனத்தைப் பிளவுறச் செய்து வேதனைப்படுத்திடும் மாறுபட்ட கருத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

வரவிருக்கும் கொந்தளிப்புகள், பெருங்குழப்பங்கள், ஆகியவற்றின் அறிகுறிகள் இப்பொழுது காணப்படுகின்றன; ஏனெனில், வழக்கிலிருக்கும் அமைப்புமுறைகள் வருந்தத்தக்கக் குறைபாடு உடையனவாகத் தோன்றுகின்றன.

உலக மக்களை விழிப்புறச் செய்திடவும், அவர்களின் நடத்தை தங்களுக்கு நன்மை செய்யவல்லதாய் ஆவதற்கு உடன்படவும், அவர்களின் நிலைக்குப் பொருத்தமானதனைச் சாதித்திட உதவிடவும் ஆண்டவன், அவரது ஒளி உயர்வு பெறுமாக, அருள் பாலித்திட நான் வேண்டிக் கொள்கின்றேன்.

CXI

உலகின் போட்டியிடும் இனத்தவர்கள், மனிதர்களே! உங்கள் முகங்களை ஒற்றுமையின்பால் திருப்பி, அதன் ஒளியினை உங்கள்மீது பிரகாசிக்கச் செய்வீராக.

ஒன்றிணைந்து, இறைவனின் பொருட்டு, உங்களிடையே பூசல்களுக்குக் காரணமானவற்றை எல்லாம் களைந்தெறியுங்கள்.

அப்பொழுதுதான் உலகின் பேரழகுமிக்க ஒளிப்பிழம்பானவரின் பிரகாசமானது உலக முழுவதையும் சூழ்ந்திடும்; அதன் குடிமக்கள், ஒரே மாநகரின் பிரஜைகளாகவும், ஒரே அரியாசனத்தின் வாசிகளாகவும் ஆகக்கூடும்.

தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்தே, இத் தவறிழைக்கப் பட்டோன், இதைத் தவிர வேறெந்த ஆசையையும் நினைவில் கொண்டாரிலர்; தொடர்ந்தும் இவ்வாசையைத் தவிர வேறெந்த ஆசையையும் மனதிற்கொள்ளாமலேயே இருந்திடுவார்.

உலக மக்கள் அனைவரும், அவர்கள் எந்த இனத்தையோ மதத்தையோ சேர்ந்தோராயினும், அவ்வொரே தெய்வீகத் தோற்றுவாயிலிருந்தே தங்களின் அருள்தூண்டலைப் பெற்றிடுகின்றனர் என்பதில் எவ்விதசந்தேகமும் இருக்க முடியாது.

அவர்கள் வாழும் காலத்தின் சட்டங்களுக்கிடையே ஏற்படும் வேற்றுமைகளுக்கு அவை வெளிப்படுத்தப்படும் காலத்தின் மாறுதலான உடனடித் தேவைகளையே காரணமாகக் கொள்ளவேண்டும்.

மனித இனத்தின் முறைகேட்டினால் உண்டாகும் விளைவைத் தவிர மற்றவை அனைத்தும் இறைவனால் விதிக்கப்பட்டவையே; அவை, அவரது விருப்பம், நோக்கம் ஆகியவையின் பிரதிபலிப்பேயாகும்.

திடநம்பிக்கை என்னும் சக்தியைக் கொண்டு எழுந்து, உங்களிடையே பூசல்களை விதைக்கும் உங்களின் வீண் கற்பனைகள் என்னும் தெய்வங்களைச் சுக்கல் சுக்கலாக உடைத்தெறிவீராக.

உங்களை ஈர்த்து, ஒன்றிணைத்திடுவதனைப் பற்றிக்கொள்ளுங்கள்.

மெய்யாகவே, இதுவே, தாய்நூல் உங்கள்பால் அனுப்பி வெளிப்படுத்தியுள்ள மேன்மைமிகு திருச்சொல்லாகும்.

பேரொளியென்னும் அவரது உறைவிடத்தில் இருக்கும் மகத்துவம் பொருந்திய இந்நாவே இதற்குச் சாட்சியம் பகர்கின்றது.

CXII

பல்லாண்டுக் காலமாக உலகைப் பாதித்து வந்த குழப்பங்களையும், அதன் மக்களை அல்லற்படுத்திவந்துள்ள மனக்கலக்கத்தையும் பாருங்கள்.

அது போரினால் சின்னாபின்னப் படுத்தப்பட்டோ, எதிர்பாராமல் திடீரென வந்திடும் பேரிடர்களினால் வதைக்கப்பட்டோ, வந்திருக்கின்றது.

உலகம் கடுந்துன்பத்தினாலும் மனவேதனையினாலும் குழப்பமுற்றிருந்த போதும், அதன் காரணத்தையோ நோயையோ எந்த மனிதனுமே ஆராய முயன்றிலன்.

எப்பொழுதெல்லாம் உண்மையான ஆலோசகர், கண்டன வார்த்தை ஒன்றினை வெளிப்படுத்தினால், அந்தோ, அவர்கள் அனைவருமே அவரைக் கேடு விளைவிப்பவர் எனக் கண்டனஞ்செய்து, அவரது கூற்றினை நிராகரித்துள்ளனர்.

எந்தளவு திகைப்பும் குழப்பமும் உண்டாக்கக்கூடியது அத்தகைய நடத்தை! வெளிப்படையாகவும் உள்ளூரவும் ஒற்றுமையாக இருக்கக் கூடிய மனிதர்கள் இருவரைக்கூட காண முடியாது.

இணக்கம், ஒற்றுமை ஆகியவைக்காகவே எல்லாரும் படைக்கப்பட்டிருந்தபோதும், எங்குப்பார்த்தாலும் முரண்பாட்டிற்கும் குரோதத்திற்குமான ஆதாரங்களே காணப்படுகின்றன.

மேன்மைமிக்க உயிருருவானவர் திருவாய் மலர்கின்றார்: அன்புக்குரியவர்களே! ஒற்றுமையெனுந் திருக்கோவில் எழுப்பப்பட்டுவிட்டது; ஒருவர் மற்றவரை அந்நியராகக் கருதாதீர்.

நீங்கள் ஒரே மரத்தின் கனிகள்; ஒரே கிளையின் இலைகள்.

நீதி என்னும் ஒளி உலகின்மீது பிரகாசித்து, அதனைக் கொடுங்கோன்மையிலிருந்து தூய்மைப்படுத்துமென்று யாம் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்.

ஆண்டவனது நீதியின் சின்னங்களாகிய - அவரது ஒளி உயர்வு பெறுமாக -- அரசர்களும் உலக மன்னர்களும் எழுந்து, மனித இனம் முழுமையின் உயரிய நன்மையினை வளர்ச்சியுறச்செய்வது எதுவோ அதற்குத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்ள எழுந்திடுவராயின், மனிதக் குழந்தைகளின் மத்தியில் நீதிமயமான ஆட்சி நிறுவப்பட்டு, அவ்வொளியின் பிரகாசம் உலகம் முழுவதையுமே சூழ்ந்திடும்.

மேன்மைமிக்க உயிருருவானவர் திருவாய் மலர்கின்றார்: உலகத்தின் திடநிலை, ஒழுங்குமுறை ஆகியவை என்னும் கட்டடம், வெகுமதி, தண்டனை என்னும் இரட்டைத் தூண்களின்மீது எழுப்பப்பட்டு, தொடர்ந்து அவற்றாலேயே தாங்கியும் நிற்கப்படுகின்றன.

மற்றொரு வாசகத்தில் அவர் எழுதியுள்ளார்: உலகத்தின் அரசர் படையினரே! கவனமாய் இருங்கள்! உலகத்திலேயே நீதி, விவேகம் ஆகிய வென்றிடும் ஆற்றலுக்குச் சமமான சக்தி வேறெதுவுமே கிடையாது.

விவேகம் எனும் கொடியினைத் தன்முன்னே பறக்கவிட்டு, நீதி எனும் சைனியங்களைத் தனக்குப் பின்னே ஒன்றுதிரட்டிக்கொண்டு அணிவகுத்துச் சென்றிடும் மன்னர், அருட்பேறு பெற்றவராவார்.

மெய்யாகவே, அவரே, சமாதானம் எனும் நெற்றியையும் பாதுகாப்பு என்னும் முகத்தையும் அலங்கரித்திடும் ஆபரணமாவார்.

கொடுங்கோன்மை என்னும் மேகத்தினால் மறைக்கப்பட்டுள்ள நீதி என்னும் பகல்நட்சத்திரம் அதன் ஒளியினை மனிதர்மீது விழச் செய்யுமாயின் உலகமே, பூரண தன்மைமாற்றமடைந்திடும் என்பதில், எவ்வித ஐயமும் இருக்க முடியாது.

CXIII

மாநகரில் (கான்ஸ்டாண்டிநோப்பிலில்) ஷா மன்னரின் அமைச்சரே, இறைவனது சமயத்தின் தெய்வநியமத்தினை நான் எனது பிடியில் வைத்திருக்கின்றேன் என்று கற்பனை செய்கின்றீரா? எனது சிறைவாசமோ, நான் அடைய வேண்டியிருந்த அவமானமோ, இன்னும் எனது மரணமோ, முற்றும் அழிவோ, அதன் முன்னேற்றத்தினைத் திசைமாறச் செய்திடும் என்று நினைக்கின்றீர்களா? உங்கள் மனத்தில் நீங்கள் கற்பனைச்செய்துள்ளது வருந்தத்தக்கது! உண்மையாகவே, நீங்கள், தங்களின் உள்ளங்கள் புனைந்திட்ட வீண் கற்பனைகளின் வழி நடப்போரைச் சேர்ந்தோராவீர்.

அவரைத் தவிர இறைவன் வேறிலர்.

தனது சமயத்தை வெளிப்படுத்தவும், அவரது ஆதாரங்களை மேம்பாடடையச் செய்யவும், அவர் எதனை விரும்புகின்றாரோ அதனை நிலைநாட்டி அதனை உங்களின் சொந்தக் கைகளோ, அவரிடமிருந்து அப்பால் திரும்பிட்டோரின் கைகளோ, அதனைத் தொடவோ, அதற்குத் தீங்கு விளைவிக்கவோ முடியாத அளவு, அத்துணை சிறந்த நிலைக்கு அதனை உயர்த்திடுமளவு அவர் சக்திவாய்ந்தவர்.

அவரது விருப்பத்தைத் தோல்வியுறச் செய்யவோ, அவர் தனது நீதியை நிலைநாட்டுவதற்கு முட்டுக்கட்டைப் போடவோ, தனது ஆட்சியை அவர் நிலைநாட்டுவதைத் தடைச்செய்யவோ உங்களுக்குச் சக்தி உண்டென்று நம்புகின்றீர்களா? விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலுமுள்ள எவையாவது அவரது சமயத்தை எதிர்த்து நிற்க முடியுமென இறுமாப்புக் கொள்கின்றீர்களா? நித்திய மெய்ம்மையாகிய அவர் சாட்சியாக, அது முடியாது! படைப்பு முழுவதிலுமே, அவரது நோக்கத்தினைத் தடுத்து நிறுத்தவல்லது எதுவுமே கிடையாது.

ஆகவே, நீங்கள் கொண்டிருக்கும் தற்செருக்கினை அப்பால் வீசியெறியுங்கள்; ஏனெனில், தற்பெருமையினால் உண்மையை வென்றிடவே முடியாது.

நடந்ததற்கு உண்மையாக வருந்தி, உங்களைப் படைத்து, பேணி வளர்த்து, உங்களின் சமயத்தை ஏற்றுக்கொண்டோர் மத்தியில் உங்களை ஒரு பணியாளராக ஆக்கியுள்ள இறைவன்பால் திரும்புகின்றவர்களைச் சேர்ந்தோராகிடுங்கள்.

மேலும், தனது சொந்த விருப்பத்திற்கிணங்க, விண்ணுலகங்களிலும், மண்ணுலகிலும் உள்ளவை அனைத்தையும் படைத்தவர் அவரே என்பதை நீங்கள் அறிவீராக.

ஆகவே, அவரது கட்டளைக்கிணங்க படைக்கப்பட்ட அவை, எங்ஙனம் அவரை வென்றிட இயலும்? கெடுநோக்குடைய மனிதர்களே, அவரைக் குறித்து நீங்கள் கற்பனைச்செய்வதற்கு மேலான, உயரிய நிலையில் இருப்பவர் அவரே! இந்தச் சமயம் இறைவனுடையதாயின், அதனை எந்த மனிதனுமே எதிர்த்து வெற்றிபெற இயலாது; அது இறைவனுடையதில்லையெனின், உங்களிடையேயுள்ள மதத் தலைவர்களும், தங்களின் ஒழுக்கமற்ற இச்சைகளைப் பின்பற்றுபவர்களும், அவருக்கு எதிராகப் புரட்சி செய்திட்டோரும் அவரை வென்றிடப் போதுமானவராவர்.

ஆதிகாலத்தில் பேரோவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், ஒரு நம்பிக்கையாளர் கூறியுள்ளதனை, இறைவன் தனது திருத்தூதரிடம் எடுத்துரைத்து இருப்பதையும், மேலும், மானிடர் மத்தியில், அனைவருக்கும் மேலாக, ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரிடம் தனது போதனையை நம்பி ஒப்படைத்து, உலகில் வாழ்வோர் அனைவருக்கும் அவரையே தனது கருணையின் தோற்றுவாயாகவே ஆக்கியுள்ளார் என்பதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? அவர் கூறினார், மெய்யாகவே, அவர் உண்மையே உரைக்கின்றார்: “தனது தூதுப்பணிக்கான ஆதாரங்களுடன் உங்கள்பால் வந்துள்ள ஒரு மனிதர், இறைவனே எனது பிரபுவானவர் எனக் கூறினதற்காக, அவரது உயிரைப் போக்குவீர்களா? அவர் ஒரு பொய்ப் பேசுபவராக இருந்தால், அந்தப் பொய் அவரையே சாரும்; ஆனால், மெய்யுரைப்பவரானால், அவர் முன்னெச்சரிக்கைச் செய்வதில், ஒரு பகுதியாவது, உங்களைப் பாதிக்கும்.

” இவைதாம், இறைவன், தமது தவறாத் திருநூலினில், தமது அன்புக்குரியவருக்கு வெளிப்படுத்தியவை ஆகும்.

இருந்தும், நீங்கள், அவரது கட்டளைக்குச் செவி சாய்க்கத் தவறிவிட்டுள்ளீர்; அவரது சட்டத்தைப் புறக்கணித்து, அவரது திருநூலில் குறிக்கப்பட்டுள்ள அறிவுரையை நிராகரித்து, அவரிடமிருந்து வெகுதூரம் விலகிச் சென்றோரைச் சேர்ந்திருக்கின்றீர்.

ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு மாதமும் எத்தனைப் பேர்கள் கொல்லப் படுவதற்கு நீங்கள் காரணமாய் இருந்திருக்கின்றீர்கள்! நீங்கள் இழைத்திட்ட அநீதிகள்தாம் எவ்வளவு! அத்தகைய அநீதிகளை படைப்பின் கண்கள் கண்டதே கிடையா; அவற்றை எந்த வரலாற்றாசிரியரும் குறித்து வைத்தது கிடையாது! அநீதி இழைப்போரே, எத்தனைக் குழந்தைகள், எத்தனைச் சிசுக்கள் அநாதையாக்கப்பட்டுள்ளனர்; எத்தனைத் தந்தைகள் தனயனை இழந்துள்ளனர்; அனைத்துமே உங்களின் அநீதியினால்தான்! சகோதரி ஒருத்தி எவ்வாறு தனது சகோதரனுக்காக மீண்டும் மீண்டும் ஏங்கி வாடியிருக்கின்றாள்; ஒரு மனைவி எவ்வாறு தனது கனவனுக்காக, அவ்வொரே ஆதரவாளனுக்காக, அடிக்கடி கதறி அழுதிருக்கின்றாள்! உங்களின் நேர்மையின்மை சிறுகச் சிறுக வளர்ந்து இறுதியில் அதிமேன்மைப்படுத்தப்பட்ட, அதி உயரிய இறைவனின் வதனத்தினின்று தனது பார்வையை அப்பால் திருப்பாமலே இருந்த அவரைக் கொன்றீர்கள்.

மனிதர்கள் ஒருவரை ஒருவர் வழக்கமாக உயிரைப் போக்கும் வகையில் அவரது உயிரைப் போக்கி இருக்கலாம்! ஆயினும், நீங்களோ, அவரை எந்த மனிதனுமே கண்டிராத முறையில் கொன்றீர்கள்.

விண்ணுலகமே அவருக்காகக் கண்ணீர் வடித்தது; இறைவனின் அருகே இருந்த ஆன்மாக்கள் அவரது வேதனைக்காக அழுதனர்.

அவர் உங்களின் தீர்க்கதரிசியின் மிகப் பழமையான குடும்பத்தினரின் வழித்தோன்றல் அல்லவா? திருத்தூதரின் நேரடியான வாரிசு என்ற வகையில் அவரது புகழ் உங்களிடையே பரவி இருக்கவில்லையா? இருந்தும் நீங்கள், ஏன், எத்தனைக் காலம் பின்நோக்கினும், இதுவரையில் எந்த மனிதனும் இன்னொரு மனிதர் செய்திடக் கண்டிடாத அளவு, அவரைப் படுவேதனைக்கு ஆளாக்கினீர்கள்? இறைவன் சாட்சியாக! படைப்பின் கண்கள் உங்களைப் போன்றவர்களைக் கண்டதே கிடையா.

நீங்கள், உங்களது தீர்க்கதரிசியின் மிகப் பழமையான குடும்பத்தினரின் வழித்தோன்றலான அவரைக் கொன்று, பின், உங்களின் மதிப்பிற்குரிய ஆசனங்களில் அமர்ந்து கொண்டு, பெருமகிழ்ச்சியுற்று, களியாட்டம் போட்டீர்! உங்களுக்கு முன், நீங்கள் ஆற்றியவற்றையே ஆற்றியவர்களைச் சபித்தீர்கள்; உங்களின் படுமோசச் செயல்களை நீங்களே உணராதிருந்தீர்கள்! உங்களின் கணிப்பில் நீதியைக் கடைப்பிடியுங்கள்.

நீங்கள் யார்மீது சாபமிட்டீர்களோ, யாருக்குத் தீமையை வேண்டுகின்றீர்களோ, அவர்கள் உங்களுக்கு மாறாகவா நடந்தனர்? நீங்கள், உங்களின் தீர்க்கதரிசியின் மரபு வழித்தோன்றலானவரைக் கொன்றது போலவே அவர்களும் தங்களின் தீர்க்கதரிசிக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளின் வழிவந்தவரைக் கொல்லவில்லையா? உங்கள் நடத்தை அவர்களின் நடத்தையைப் போலவே இல்லையா? ஆகவே, மனிதரிடையே பிளவை விதைப்பவர்களே, எதனைக் கொண்டு நீங்கள் அவர்களைவிட வேறுபட்டவர்களெனக் கூறிக்கொள்கின்றீர்? உரிமை கொண்டாடுகின்றீர்? நீங்கள் அவரது உயிரைப் பறித்தபோது, அவரைப் பின்பற்றுபவருள் ஒருவர் பழிக்குப் பழிவாங்க எழுந்தார்.

அவர் பிரபலமானவர் அல்லர்; அவர் போட்டிருந்த திட்டமும் எவரது கவனத்தையும் ஈர்க்கவில்லை.

கடைசியில், அவர், முன்விதிக்கப்பட்டிருந்த அக்காரியத்தை நிறைவேற்றினார்.

ஆகவே, நீங்கள் நேர்மையுடன் சீர்தூக்கிப் பார்ப்பவராயின், நீங்கள் ஆற்றியவற்றுக்கு உங்கள் மீதேயல்லாது வேறு யார்மீதும் பழி சுமத்தாதிருப்பதே உங்களுக்கு ஏற்புடையதாகும்.

இவ்வுலகம் முழுவதிலும் நீங்கள் செய்ததை வேறு யாராவது செய்ததுண்டா? உலகங்களுக்கெல்லாம் பிரபுவாகிய அவர் சாட்சியாக, இல்லவே இல்லை! நீங்கள் அதனைக் காணக்கூடுமாயின், உலகிலுள்ள ஆட்சியாளர்கள், மன்னர்கள் அனைவருமே தங்களின் தீர்க்கதரிசிகளின் வழியில் வந்தவர்களையும் புனிதர்களையும் உயர்வாக மதித்து மரியாதைச் செலுத்துகின்றனர்.

மாறாக, நீங்கள், எந்த மனிதனுமே எக்காலத்திலும் செய்திடாத அத்தகைய செயலுக்குப் பொறுப்பாகியுள்ளீர்கள்.

புரிந்திடும் ஆற்றல் படைத்த ஒவ்வோர் உள்ளத்தையும் உங்களின் குற்றச்செயல் துயரத்தினால் சுட்டெரித்தது.

இருந்தும், நீங்கள், கவனமின்மையினுள் மூழ்கியிருந்தீர்கள்; உங்களது செயலின் கொடுமையை நீங்கள் உணரவில்லை.

உங்களின் பகைமைக்குக் காரணமாகக் கூடிய எதனையுமே யாம் செய்யாதிருந்தும், நீங்கள் எமக்கெதிராக எழுந்தீர்கள்; உங்களின் ஒழுங்கற்ற நடத்தையில் தொடர்ந்து பிடிவாதமாய் இருந்துவந்திருக்கின்றீர்; உங்களைப் படைத்து, வடிவந்தந்து, நீங்கள் உங்கள் பலத்தைப்பெற உதவி, உங்களை, அவரிடம் சரணடைந்தோருடன் (முஸ்லீம்கள்) இணைத்திட்ட அவருக்கு அஞ்சுவதில்லையா? உங்களின் முறையற்ற நடத்தையில் இன்னும் எத்துணைக் காலந்தான் பிடிவாதமாய் இருக்கப்போகின்றீர்கள்? இன்னும் எத்துணை காலந்தான் சிந்திக்க மறுப்பீர்கள்? உங்கள் உறக்கத்தை உதறித்தள்ளிவிட்டுக் கவனமின்மையிலிருந்து எழுப்பப்பட இன்னும் எவ்வளவு காலமாகும்? இன்னும் எவ்வளவு காலந்தான் நீங்கள் உண்மையை அறிந்து கொள்ளாமலேயே இருக்கப் போகின்றீர்? இதனை உங்கள் உள்ளத்தில் வைத்துத் தியானியுங்கள்.

உங்கள் நடத்தையும், உங்கள் கைகள் ஆற்றியவையும், இறைவனின் தீயைத் தணிப்பதிலோ, அவரது வெளிப்பாட்டின் ஒளியினை - நித்திய வாழ்வெனும் அலைபொங்கும் மாக்கடல்களில் மூழ்கிக் கிடக்கும் அவர்களை, அவரது ஒருமைத்தன்மையில் உண்மையான நம்பிக்கைக் கொண்டுள்ள அவ்வான்மாக்களை ஈர்த்திட்டுள்ள அவர்களைத் தன் பிரகாசத்தினால் சூழ்ந்துள்ள அவ்வொளியினை, அணைப்பதிலோ நீங்கள் வெற்றி பெற்றீர்களா? இறைவனின் கை உங்களின் கைகளுக்கு மேல் உயர்ந்துள்ளது என்பதையும், அவரது மாற்றவியலாக் கட்டளை உங்களின் சூழ்ச்சித் திட்டங்களையெல்லாம் விட உயர்ந்தது என்பதையும், அவரது ஊழியர்களைவிட அவர் அதிசிறந்தவர் என்பதையும், அவரது நோக்கத்திற்கேற்றத் தகுதி கொண்டுள்ளவர் என்பதையும், அவர் விரும்பியதை அவர் செய்வார் என்பதையும், அவர் எதனை விரும்புகின்றாரோ அதனை ஏன் என்று கேட்கக் கூடாது என்பதையும், அவர் விரும்பியதை விதித்திடுவார் என்பதையும், அவர் அதி சக்தி வாய்ந்தவர், எல்லாம் வல்லவர் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கவில்லையா? இதை உண்மையென நம்பினீர்களாயின், எதனால், நீங்கள் குழப்பமடைவதை நிறுத்த முடியாமலும் அமைதிபெற முடியாமலும் இருக்கின்றீர்? உங்களின் விவகாரங்களில் நான் தலையிடாதிருந்தபோதும், நீங்கள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய அநீதிச்செயல் புரிகின்றீர்; கடந்த காலங்களில் என்னை நடத்தியது போலவே இப்பொழுதும் நடத்துகின்றீர்.

எந்த வேளையிலுமே நான் உங்களை எதிர்த்திலன்; உங்ளின் சட்டங்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததும் கிடையாது.

இறுதியில், நீங்கள், என்னை இத்தூரத்தேசத்தில் கைதியாக்கியுள்ளதைப் பாருங்கள்! இருப்பினும், எதையெல்லாம் உங்கள் கைகளோ, சமய நம்பிக்கையற்றோரின் கைகளோ ஆற்றியுள்ளனவோ, அவை, கடந்த காலத்தைப் போன்றே, இறைவனின் சமயத்தை மாற்றவோ, அவரது திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தவோ முடியாது என்பதை நிச்சயமாக நம்புவீராக.

பாரசீக நாட்டு மக்களே, எனது எச்சரிக்கையில் கவனஞ் செலுத்துங்கள்! உங்களின் கைகளினால் நான் கொல்லப்படுவேனாயினும், இறைவன், எனது மரணத்தின் காரணத்தினால் காலிசெய்யப்பட்ட ஆசனத்தினை நிரப்புவதற்காக ஒருவரைத் தோற்றுவிப்பார்; ஏனெனில், இதுவே கடந்த காலங்களில் இறைவனால் செயல்படுத்தப்பட்டு வந்த முறை; இறைவன் பின்பற்றி வந்துள்ள முறையில் நீங்கள் எந்த மாற்றத்தையும் காணமுடியாது.

உலகின்மீது பிரகாசித்திடும் இறைவனின் தீபத்தை அணைத்திடப் பார்க்கின்றீர்களா? நீங்கள் விரும்புவதை இறைவன் வெறுக்கின்றார்.

உங்களின் உள்மனதில் அதனை நீங்கள் வெறுத்திட்ட போதிலும், அவர் தனது தீபத்தினைப் பூரணமடையச் செய்திடுவார்.

அமைச்சரே, நிதானித்துச், சற்று நேரம் தியானியுங்கள்; உமது தீர்ப்பில் நேர்மையைக் கடைப்பிடியுங்கள்.

நீர், மன்னரின் அமைச்சர்களிடம் எம்மைப் பழித்துரைக்குமளவு, உமது சொந்த விருப்பப்படி உண்மையைத் திரித்து மாற்றிக் கூறுமளவு, எமக்கெதிராக அவதூறுரைக்குமளவு, யாம் செய்த குற்றந்தான் என்ன? யாம் எமது தந்தையின் வீட்டில், இமாம் ஹ¨சேனின் உயிர்த்தியாகத்தின் நினைவு விழா கொண்டாட்டத்தின் போதல்லாது வேறெங்குமே ஒருவரை ஒருவர் சந்தித்தது கிடையாது.

அவ்வேளை, உரையாடலின் வழியோ, விரிவுரையின் வழியோ எமது நோக்கங்களையும் நம்பிக்கைகளையும் மற்றவருக்குத் தெரிவித்திட வாய்ப்பு இருந்திருக்கவும் முடியாது.

நீர் நேர்மையாளர்களைச் சேர்ந்தவராயின், எமது சமயத்தின் மெய்ம்மைக்குச் சாட்சி அளித்திடுவீர்.

நீரோ, வேறெவருமோ எமது மனதை அறிந்துகொள்வதற்குரிய வேறெந்தக் கூட்டங்களிலும் நான் அடிக்கடி கலந்து கொண்டது கிடையாது.

அவ்வாறிருந்தும், எனது வாயிலிருந்தே எனது வாக்குமூலத்தைக் கேட்டிடாது, எங்ஙனம் நீர், எனக்கெதிராகத் தீர்ப்பு வழங்கினீர்? இறைவன், அவரது ஒளி மேன்மைப் படுத்தப் படுமாக, கூறுகின்றார்: “உங்களைச் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் - நீங்கள் ஒரு நம்பிக்கையாளர் இல்லை எனக் கூறிடாதீர்” “காலையிலும் மாலையிலும் தங்களின் பிரபுவிடம், அவரது வதனத்தைக் காணவேண்டி, அலறுவோரைத் தள்ளிவிடாதீர்” என உரைத்ததை, நீர் கேட்டதில்லையா? உண்மையாகவே, நீர், இறைவனின் திருநூல் ஆணையிட்டுள்ளதனைக் கைவிட்டுள்ளீர்; இருந்தும், நீர் உம்மை ஒரு நம்பிக்கையாளர் எனக் கருதிக் கொள்கின்றீர்.

இருந்தபோதிலும், எனக்கு நீங்கள் ஆற்றியுள்ளவைக்காக, - இதற்கு இறைவனே எனக்குச் சாட்சி -- உங்கள் மீதோ, மற்றெவரின் மீதோ எனக்கு மனக்கசப்பு எதுவும் கிடையாது; இருப்பினும், உங்களிடமும் மற்றவர்களிடமும் இருந்து யாம் அடைந்திட்ட மனவேதனையை இறைவனின் ஒருமைத் தன்மையின் நம்பிக்கையாளரான யாருமே சகிக்க முடியாது.

எனது சமயம் இறைவனைத் தவிர வேறெவரின் கையிலும் இல்லை; எனது நம்பிக்கையும் அவரிலல்லாது வேறெவரிலும் இல்லை.

இப்பொழுது தங்களின் அண்டையரிடம் தெளிவான இறுமாப்புடன் தற்பெருமைக் காட்டுகின்றவர்களின் நாள்கள் மறைந்தோடிடப் போவது போலவே, உங்களின் நாள்களும் விரைவில் மறைந்தோடிடும்.

விரைவில், இறைவனின் முன்னிலையில் நீங்கள் ஒன்றுதிரட்டப்பட்டு, உங்களின் செயல்களுக்கு விளக்கம் கேட்கப்படுவீர்; உங்களின் கைகள் ஆற்றியவற்றுக்குக் கைம்மாறு வழங்கப்படுவீர்; துயர்மிகுந்தது, தீமை இழைப்போரின் இருப்பிடம்! இறைவன் மீது ஆணையாக! நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதை உணர்வீராயின், நீங்களாகவே துயறுற்றுக் கண்ணீர் வடித்து, புகலிடம் நாடி இறைவனிடமே விரைந்தோடுவீர்; இறைவன் உங்களை மன்னிக்கும் வரை, ஏக்கமுற்று, உங்களின் வாழ்நாள் முழுவதும் துயரத்தில் ஆழ்ந்திருப்பீர்; மெய்யாகவே, இறைவன், அதி தாராள குணமுடையவர், அதி வள்ளன்மை வாய்ந்தவர்.

இருந்தும் நீங்கள், முழுமனதாகவும் ஆன்மார்த்தமாகவும், உள்ளூரவும், இவ்வுலக வாழ்க்கையின் வீண் பகட்டுகளில் ஈடுபட்டிருந்தமையால், உங்களின் மரணவேளை வரும்வரை, தொடந்து உங்களின் கவனமின்மையில் விடாப்பிடியாகவே இருப்பீர்.

யாம் உங்களுக்கு வெளிப்படுத்தி இருப்பவற்றை இறப்புக்குப் பின்தான் நீங்கள் அறிந்து கொள்வீர்; உங்கள் செயல்களெல்லாம் அவரது திருநூலில் குறிக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்; உலகில் வாழ்வோர் அனைவரின் செயல்களும், அவை மிகப் பெரியவையாகவோ, ஓர் அணுவளவேயாகவோ இருந்தபோதிலும், அவை, அந்நூலில்தாம் குறித்து வைக்கப்படும்.

ஆகவே, நீங்கள், எனது அறிவுரையினில் கவனம் செலுத்தி, உங்கள் உள்ளத்தின் கேட்குந்திறனைக் கொண்டு, என் உரையைச் செவிமடுத்திடுங்கள்; எனது வார்த்தைகளில் கவனக் குறைவாக இருந்திடவோ, எனது உண்மையை நிராகரித்தோருடன் சேர்ந்திடவோ செய்திடாதீர்.

உங்களுக்குக் கொடுக்கப்பட்டவையில் பெருமைக் கொள்ளாதீர்.

ஆபத்தில் உதவுபவரும், ஒளிமயமானவருமான இறைவனின் திருநூலில் வெளியிடப்பட்டுள்ளதனை உங்களின் கண்களுக்குமுன் வைத்துக்கொள்ளுங்கள்.

“அவர்கள் தங்களின் எச்சரிக்கைகளை மறந்ததும்,” யாம், உங்களுக்கும், உங்களைப் போன்றவர்களுக்கும், இவ்வுலகிற்கான நுழைவாயில்களையும் அவற்றிலுள்ள ஆபரணங்களையும் திறந்து வைத்தது போலவே, “அவர்களுக்கு முன்பாகவும் சகல பொருள்களுக்குமான நுழைவாயிலை திறந்து வைத்தோம்.

” ஆகவே, இத்திருவாசகத்தின் பிந்திய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளதற்குக் காத்திருங்கள்; ஏனெனில், இது எல்லாம் வல்லவரான, சர்வ விவேகியான அவரது வாக்குறுதி -- உண்மையற்றதெனக் கூறவியலாத வாக்குறுதி.

எனக்குத் தீமை விரும்புவோரின் கூட்டத்தினரே, நீங்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளீர் என்றோ, எதனைப் பின்பற்றுகின்றீர் என்றோ எனக்குத் தெரியாது! யாம் உங்களை இறைவன்பால் அழைக்கின்றோம்; யாம், உங்களுக்கு அவரது நாளை நினைவுப்படுத்துகின்றோம்; யாம், உங்களுக்கு அவருடன் ஒன்றிணைதலின் செய்தியினை அறிவிக்கின்றோம்; யாம் உங்களை அவரது அரசவையின்பால் ஈர்க்கின்றோம்; அவரது வியத்தகு விவேகத்தினை உங்கள்பால் அனுப்பிவைக்கின்றோம்; இருந்தும், அந்தோ, நீங்கள் எவ்வாறு எம்மை நிராகரிக்கின்றீர்கள் என்பதையும், உங்களின் பொய்யுரைக்கும் வாய்கள் எம்மைச் சமய நம்பிக்கையற்றவரெனக் கூறியிருப்பதன் மூலம், எவ்வாறு எம்மீது கண்டனம் தெரிவிக்கின்றீர்கள் என்பதையும், எவ்வாறு எமக்கெதிராகச் சூழ்ச்சிகள் செய்கின்றீர்கள் என்பதையும் பாருங்கள்! இறைவன், தனது வள்ளன்மைமிகு தயையின் மூலம், எமக்கு வழங்கிட்டதனை உங்களுக்கு வெளிப்டுத்தியபோது, நீங்கள் “இது சாதாரணமான மாயவித்தையே” எனக் கூறுகின்றீர்.

இதே வார்த்தைகள்தாம் உங்களுக்கு முன்னாலிருந்த தலைமுறைகளாலும் பேசப்பட்டன; இதனை உணர்ந்தீராயின், உங்களைப் போல்தான் அவர்களும் இருந்தனர்.

எனவே, அதன் விளைவாக, உங்களையே நீங்கள் இறைவனின் வள்ளன்மையை இழக்கச்செய்து கொண்டுள்ளீர்; உங்களுக்கும் எமக்கும் இடையே இறைவனே தீர்ப்புக்கூறிடும்நாள் வரும்வரை, அவற்றை நீங்கள் பெற்றிட இயலாது; மெய்யாகவே, அவரே, நீதிபதிகளிடையே அதிசிறந்த நீதிபதி.

உங்களுள் சிலர் கூறியிருந்தீர்கள்: “தான் கடவுள் என உரிமை கோரிக்கொண்டவர் அவரே.

” இறைவன்மீது ஆணையாக! இது மிகக் கீழ்த்தரமான அவதூறு.

நான் இறைவனின் ஓர் ஊழியனே; அவரிலும், அவரது அடையாளங்களிலும், அவரது தீர்க்கதரிசிகளிலும் அவரது தேவதூதர்களிலும் நம்பிக்கை வைத்துள்ளேன்.

எனது நாவும், எனது உள்ளமும், எனது உள்ளுரு, புறவுரு ஆகியவையும், அவர் ஒருவரைத் தவிர இறைவன் வேறிலர் என்பதற்கும், படைக்கப் பட்டவை அனைத்தும், அவரது கட்டளைக்கு இணங்கவே படைக்கப்பட்டு, அவரது விருப்பத்தின் இயக்கத்தின் மூலமாகவே வடிவம் பெற்றுள்ளன என்பதற்கும் சாட்சியம் அளிக்கின்றன.

படைப்பவரும், மாண்டோரை எழச்செய்பவரும், எழுச்சியுறச்செய்பவரும், அழிப்பவருமான இறைவன், அவரேயல்லாது வேறெவரும் இலர்.

இறைவன், தனது வள்ளன்மையின் மூலம், எனக்களித்துள்ள தயையினை அனைவருக்கும் எடுத்துரைப்பவர் நானே.

இதுவே எனது தவறென்றால், நானே தவறிழைப்போரில் முதல்வனாவேன்.

நானும் எனது சுற்றத்தார்களும் உங்களின் கருணைக்குட்பட்டவர்களே.

நீங்கள் விரும்பியவாறு எங்களை நடத்துங்கள்; தயங்குவோரில் சேர்ந்திடாதீர்; அதனால், நான் எனது பிரபுவான இறைவனிடம் திரும்பிச்சென்று, உங்களின் முகங்களைப் பார்க்கமுடியாத இடத்தைச் சென்றடையக்கூடும்.

உண்மையாகவே, இதுவே எனது மனமார்ந்த விருப்பம்; எனது பேராவல்.

எனது நிலையைப் பொறுத்த வரையில், மெய்யாகவே, இறைவன் போதுமளவு அறிந்தவராகவும், கூர்ந்து கவனிப்பவராகவும் இருக்கின்றார்.

அமைச்சரே, நீர் இறைவனின் கண்காணிப்பில் இருப்பதாகக் கற்பனைச் செய்து கொள்ளும்! நீர் அவரைப் பார்க்காவிடினும், அவர், உண்மையில், உம்மைத் தெளிவாகப் பார்க்கின்றார்.

நீர் நீதியுடையவராயின், எமது சமயத்தை நேர்மையுடன் கவனித்து, யாம் செய்திட்டது எது உம்மை எமக்கெதிராக எழுந்திடவும், மனிதரிடையே எம்மைப் பழித்துரைக்கவும் தூண்டியிருக்கக் கூடுமென, நேர்மையாகச் சீர்தூக்கிப் பாரும்.

? யாம் தெஹ்ரானை விட்டு நீங்கி, மன்னரின் கட்டளைக்கிணங்கவும், அவரது அனுமதியுடனும், ஈராக்கிற்குக் குடி மாறினோம்.

நான் அவரது கட்டளையை மீறி இருந்திருந்தால், அவர் எங்ஙனம் என்னை விடுவித்திருப்பார்? நான் குற்றமற்றவனாய் இருந்தும், எதனால் நீர், உமது மதத்தைப் பின்பற்றுவோரில் யாருமே பட்டிராத அத்தகைய வேதனையை எமக்கு ஏற்படுத்தினீர்? யாம் ஈராக்கை வந்தடைந்தபின்பும் எனது செயலில் ஏதேனும் அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பாதிக்கக்கூடியதாய் இருந்திருக்கின்றதா? எமது நடத்தையில் கண்டனத்துக்குரிய எதையாவது கண்டுள்ளதாகக் கூறிக் கொள்பவர் யார் இருக்கின்றார்? நீரே அங்குள்ள மக்களைக் கேட்டுப் பாரும், அதனால், நீர், உண்மையை உணர்ந்திட்டோரில் சேர்ந்திடலாம்.

உமது அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கும் அமைச்சர் வருவதற்கு முன்பாக, பதினோர் ஆண்டுகளாக யாம் அந் நாட்டில் வசித்துவந்தோம்; அவரது பெயரைக் குறிப்பிடக்கூட எமது எழுதுகோல் வெறுக்கின்றது; அவருக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்தது; அவர் தனது சிற்றின்ப இச்சைகளுக்கு அடிமையாகி, கொடூரச் செயல்களில் ஈடுபட்டவர்; ஒழுக்கங் கெட்டவர்; ஈராக்கையும் கெடுத்தவர்.

நீங்கள் இதனைப் பாக்தாத் வாசிகளிடம் விசாரிப்பீராயின் அவர்களே இதற்குச் சாட்சியம் அளித்திடுவர்; உண்மையைத் தேடுவோரில் சேர்ந்திடுவீராக.

அவர்தான் தனது சகமனிதர்களின் உடைமைகளைத் தவறான வழியில் கைப்பற்றியவர்; இறைவனின் கட்டளைகளை எல்லாம் கைவிட்டு, எதனை இறைவன் தடைச் செய்துள்ளாரோ அதனைச் செய்திட்டவரும் அவரே.

கடைசியில், அவர், தனது சொந்த இச்சைகளுக்கு அடிமையாகி, எமக்கெதிராக எழுந்தார்; அநீதி இழைப்போரின் வழியைப் பின்பற்றினார்.

உமக்கு அனுப்பிய கடிதத்தில் எம்மீது குற்றஞ் சாட்டினார்; அவரிடமிருந்து எந்த அத்தாட்சியோ நம்பக்கூடிய ஆதாரமோ தேடாது, தாங்களும் அவரை நம்பி அவரது வழியினையே பின்பற்றினீர்.

நீர் விளக்கம் எதுவும் கேட்கவில்லை; நீர் அவ்விஷயத்தை விசாரணைச் செய்து, அதனை உறுதிப்படுத்தவுமில்லை; அதன்வழி, நீர், உமது பார்வையில் மெய்யுக்கும் பொய்யுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறிந்து, உமது அறிவில் தெளிவும் பெற்றிருக்கலாம்.

அவ்வேளையில் ஈராக்கிலிருந்த அமைச்சர்களையும், மாநகரின் (பாக்தாத்) ஆளுநரையும், மற்றும் அதன் உயர் ஆலோசகரையும் கேட்டு, அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை நீரே தெரிந்து கொள்வீராக; அதனால், நீர் உண்மை அறிவிக்கப்பட்டு, நன்கு செய்தியறிந்தவராகக் கூடும்.

இறைவனே எமது சாட்சி! எந்தச் சூழலிலுமே யாம் அவரையோ மற்றவர்களையோ எதிர்த்ததிலன்.

எல்லா நிலைமையிலுமே யாம் இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றி வந்திருக்கின்றோம்; யாம் அராஜகத்தை உருவாக்கிடுவோரில் ஒருவரல்லன்.

இதற்கு அவரே சான்றளிக்கின்றார்.

எம்மைக் கைதுசெய்து ஈரான் நாட்டுக்குத் திருப்பி அனுப்பி, அதன் மூலம் தனது புகழையும் நற்பெயரையும் வளர்த்துக் கொள்வதே அவரது நோக்கம்.

நீரும் அதே குற்றத்தையே புரிந்திருக்கின்றீர்; அதுவும் அதே நோக்கத்திற்காகத்தான்.

யாவற்றிற்கும் மாட்சிமை பொருந்திய பிரபுவாகிய, சகலமும் அறிந்த, இறைவனின் பார்வையில், உங்கள் இருவரின் தரமும் ஒன்றே.

இவ்வார்த்தைகளை உம்மிடம் எடுத்துரைப்பதன் நோக்கம், எமது வேதனையின் சுமையைக் குறைத்துக் கொள்வதற்காகவோ, எம் சார்பில் யாரிடமும் பரிந்து பேசுவதற்கு உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துவற்காகவோ அல்ல.

உலகங்களுக்கெல்லாம் பிரபுவாகிய அவர்மேல் ஆணையாக, இல்லை! முழு விவரத்தையும் உமக்குத் தெரிவித்துள்ளோம்; அதனால், ஒருவேளை, நீர் ஆற்றியுள்ளவை என்னவென்பதை உணரக்கூடும்; எமக்கு விளைவித்த வேதனையை மற்றவர்களுக்கு விளைவிப்பதைத் தவிர்க்கக் கூடும்; செய்த தவறுக்கு உண்மையாக, உம்மையும் மற்றப் பொருள்கள அனைத்தையும் படைத்த இறைவனிடம் வருத்தம் தெரிவிக்கக் கூடும்; வருங்காலத்தில் விவேகத்துடன் நடக்கக் கூடும்.

இதுவே நீர் கொண்டுள்ள அனைத்தையும் விட, இன்னும் குறுகிய காலமே இருக்கும் உமது மந்திரி பதவியையும் விட, உயர்வானது.

கவனமாய் இருப்பீராக; இல்லயெனில், நீர், அநீதிக்கு உடந்தையாவதற்குத் தூண்டப்படக்கூடும்.

உமது உள்ளத்தைத் திடமாக நீதியின்மீது நிலைக்கச் செய்வீராக; இறைவனின் சமயத்தை மாற்றிடாதீர்; அவரது திருநூலில் வெளிப்படுத்தப் பட்டவையின்பால் பார்வையைத் திருப்பியுள்ளோரில் சேர்ந்திடுவீராக.

எத்தகையச் சூழ்நிலையிலும், உங்களின் தீய ஆசைகளின் தூண்டுதல்களைப் பின்பற்றாதீர்.

உங்களின் பிரபுவாகிய, கொடையாளரான, தொன்மைவாய்ந்த இறைவனின் கட்டளைகளைப் பற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள் மண்ணுக்குத் திரும்புவது நிச்சயம்; நீங்கள் மகிழ்ச்சியுறும் பொருள்கள் அனைத்தும் அழிவது போலவே நீங்கள் அழிவது நிச்சயம்.

மெய்ம்மை, பேரொளி ஆகியவற்றின் நாவானது கூறியுள்ளதும் இதுவே .

இறைவனின் கடந்த கால எச்சரிக்கை உங்களின் நினைவிற்கு வருகின்றதா?அதனால் நீங்கள், அவரது எச்சரிக்கையைப் பொருட்படுத்துவோர் ஆகிடக் கூடும்.

அவர் கூறினார்; மெய்யாகவே, அவர் உண்மையே உரைக்கின்றார்: “அதிலிருந்தே (மண்ணில் இருந்தே) யாம் உங்களை ஆக்கினோம்; அதற்கே உங்களைத் திருப்பி அனுப்பிடுவோம்; அதிலிருந்தே உங்களை மீண்டும் தோற்றுவித்திடுவோம்.

” அவர்கள் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ, இதுதான் இறைவன், உலகில் வாழும் அனைவருக்கும் விதித்துள்ளது.

ஆகவே, மண்ணிலிருந்து படைக்கப்பட்ட அவன், அதற்கே திரும்பிச்செல்லப் போகின்ற அவன், அதிலிருந்தே மீண்டும் தோற்றுவிக்கப்படப் போகின்ற அவன், இறைவனின் முன்னும், அவரது நேசர்களின் முன்னும் இறுமாப்பினால் பெருமிதம் கொள்வதோ, செருக்குடன் அவர்களை ஏளனம் செய்வதோ, இகழ்ச்சி நிரம்பிய ஆணவத்துடன் நடந்து கொள்வதோ அவனுக்குப் பொருத்தமானதன்று.

இல்லை, மாறாக, இறைவனின் ஒருமைத் தன்மையின் அவதாரங்களாகிய அவர்களுக்குக் கீழ்ப்படிந்தும், இறைவனின் பொருட்டு அனைத்தையும் துறந்து, மனிதரின் கவனத்தை முழுதும் கவர்ந்திடும் பொருள்களினின்று தங்களைப் பற்றறுக்கச் செய்து கொண்டு, தங்களை ஒளிமயமான, அனைத்துப் போற்றுதலுக்குமுரிய இறைவனின் பாதையை விட்டு விலகிடச் செய்திடும் பொருள்களிலிருந்து தங்களைப் பற்றறுத்துக் கொண்டுள்ள விசுவாசிகளிடம் பணிவுடன் மரியாதை காட்டுவதும் உங்களுக்கும் உங்களைப் போன்றோருக்கும் பொருத்தமாகும்.

அவ்வாறுதான், யாம், உங்களுக்கும், தங்களின் முழு நம்பிக்கையை தங்களின் பிரபுவினிடம் வைத்துள்ள உங்களைப் போன்றவர்களுக்கும் நன்மை பயக்க வல்லதனை உங்கள்பால் அனுப்புகின்றோம்.

CXIV

மன்னரே (ஸ§ல்தான் அப்துல்-அசீஸ்), உண்மையே உரைத்திடுபவரும், இறைவன் உமக்கு வழங்கிடத் தேர்ந்தெடுத்துள்ளவற்றிலிருந்து இழப்பீடு செய்யுமாறு கேட்டிடாடதவரும், பிழையில்லாது நேர்வழியிலேயே நடந்திடுபவருமான அவரது பேச்சுக்குச் செவிசாய்ப்பீராக.

உம்மை, உமது பிரபுவான இறைவன்பால் அழைத்திடுபவரும், உண்மையான கழிபேருவகைக்குச் சரியான வழியைக் காட்டிடுபவரும் அவரே; அதனால் நீர் நலம் பெறுபவரில் சேர்க்கப்படக் கூடும்.

மன்னரே, தீய ஆசைகளைப் பின்பற்றிக்கொண்டும் தங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளவற்றைப் பின்னால் வீசியெறிந்துவிட்டுத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பில் பகிரங்கமாக நம்பிக்கைத் துரோகம் செய்துகொண்டுமுள்ள அமைச்சர்களை உம்மைச் சுற்றி வைத்துக்கொள்ளாது கவனமாய் இருப்பீராக.

இறைவன் உம்மிடம் தாராளமாக நடந்து கொண்டது போல் நீங்களும் மற்றவர்களிடம் தாராளமாக நடந்துகொள்வீராக; உமது பிரஜைகளின் நலனை, இது போன்ற அமைச்சர்களின் ஆதிக்கத்தில் விட்டுவிடாதீர்.

இறையச்சத்தை அப்பால் வைத்துவிடாதீர்; நேர்மையாக நடப்போரில் சேர்ந்திடுவீராக.

யாரிடம் விசுவாசம், நீதி ஆகியவற்றின் நறுமணத்தை உணர்கின்றீரோ அத்தகைய அமைச்சர்களை உம்மைச்சுற்றி வைத்துக்கொள்வீராக; அவர்களுடன் கலந்தாலோசித்து, உமது பார்வையில் எவை நன்மையாகப் படுகின்றனவோ அவற்றையே தேர்ந்தெடுப்பீராக; தாராளமாய் நடப்போரில் சேர்ந்திடுவீராக.

கடவுள் நம்பிக்கையற்றவர்கள் நம்பத்தகுந்தவர்களாகவோ வாய்மையுடையவர்கள் ஆகவோ இருக்க முடியாது என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

நிச்சயமாக, இதுவே உண்மை, சந்தேகத்திற்கு இடமற்ற உண்மை.

இறைவனிடம் நம்பிக்கைத் துரோகமாக நடக்கும் ஒருவன், அரசனிடமும் நம்பிக்கைத் துரோகியாகத்தான் நடந்திடுவான்.

அப்படிப்பட்ட மனிதனை எதுவுமே தீமையிலிருந்து தடுத்திட இயலாது; தனது அண்டையரைக் காட்டிக்கொடுப்பதில் இருந்து எதுவுமே அவனைத் தடுக்க வியலாது; அவனை நேர்வழியில் நடக்கச் செய்ய எதனாலுமே முடியாது.

அரசாங்க விவகாரங்களை மற்றவர்களிடம் விட்டுவிடாது கவனமாய் இருப்பீராக; உமது நம்பிக்கைக்குப் பாத்திரமாகாத அமைச்சர்கள்மீது நம்பிக்கை வைக்காதீர்; கவனமற்ற நிலையில் வாழ்வோரில் சேர்ந்திடாதீர்.

யாருடைய உள்ளங்கள் உம்மிடமிருந்து அப்பால் திருப்பப்பட்டுள்ளதோ அவர்களைத் தவிர்த்திடுவீராக; உமது நம்பிக்கையை அவர்களிடத்தில் வைத்திடாதீர்; உமது விவகாரங்களையும் உமது மதத்தைப் பின்பற்றுபவர்களின் காரியங்களையும் அவர்களை நம்பி ஒப்படைக்காதீர்.

கவனமாய் இருப்பீராக; ஓநாயை இறைவனது மந்தையின் மேய்ப்பாளனாகிட அனுமதித்திடாதீர்; அவரது அன்புக்குப் பாத்திரமானோரின் விதியைக் கெடுநோக்கு உடையவர்களிடம் ஒப்படைத்திடாதீர்.

இறைவனின் கட்டளைகளை மீறுபவர்கள் தாங்கள் பின்பற்றும் மதத்தில் நம்பகமானோராகவோ உண்மையானோராகவோ இருப்பர் என்று எதிர்பார்க்காதீர்.

அவர்களைத் தவிர்த்திடுவீராக; உம்மைப் பாதுகாத்துக் கொள்வீராக; இல்லையெனில், அவர்களின் சூழ்ச்சிகளும் விஷமங்களும் உமக்குப் பாதகம் விளைவிக்கக்கூடும்.

அவர்களிடமிருந்து அப்பால் திரும்பி, உமது கவனத்தை உம் பிரபுவான, பேரொளிமயமான, வள்ளன்மை மிக்கவரான இறைவன் மீது பதித்திடுவீராக.

யாரொருவர் இறைவனிடம் முழுதாகச் சரணடைகின்றாரோ, நிச்சயமாக இறைவன் அவருடன் இருப்பார்; யார் இறைவனில் முழு நம்பிக்கை வைக்கின்றாரோ, மெய்யாகவே, இறைவன், அவருக்குக் கேடு விளைவிக்கக் கூடியவற்றிலிருந்து அவரைப் பாதுகாப்பார்; தீய சதித்திட்டமிடுபவரின் கொடுமையிலிருந்தும் காத்திடுவார்.

நீர் எனது வார்த்தைகளுக்குச் செவிசாய்த்து, எனது அறிவுரைகளைக் கடைப் பிடிப்பீராயின், இறைவன் உம்மைச் சிறப்புமிக்க நிலைக்கு உயர்த்திடுவார்; அதனால், உலகிலுள்ள எந்தவொரு மனிதனின் சதித்திட்டமும் உம்மைத் தீண்டவோ தீங்கிழைக்கவோ முடியாது.

மன்னரே, உமது அதி உள்ளார்ந்த மனத்தினாலும், உடல் முழுவதனாலும் கடவுளின் கட்டளைகளைக் கடைப் பிடிப்பீராக; கொடுமைப் படுத்துவோனின் வழிகளில் நடந்திடாதீர்.

நீர், உமது மக்களின் விவகாரங்களில் அதிகாரமென்னும் கடிவாளத்தினை உமது கைகளில் உறுதியாகப் பிடித்தவராக, அவர்கள் தொடர்பானவை எவையோ அவற்றை நீரே பரிசோதிப்பீராக.

உம்மிடமிருந்து எதுவுமே நழுவாது பார்த்துக் கொள்வீராக; ஏனெனில், அதனில்தான் அதி உயரிய நலனே அடங்கியுள்ளது.

உலக முழுவதிலுமிருந்து உம் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, உம் மதத்தைச் சேர்ந்தோருக்கு உம்மையே அரசனாக்கியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவீராக.

இறைவன் உமக்கு அளித்துள்ள வியத்தகு சலுகையைப்பாராட்டி, அவரது நாமத்தை மீண்டும் மீண்டும் மிகைப்படுத்துவது உமக்கு மிகவும் பொருத்தமானது.

அவரது அன்பர்களிடம் அன்பு காட்டுவதன் மூலமும், அவரது ஊழியர்களை வஞ்சகர்களின் விஷமத்திலிருந்து பாதுகாப்பதன் மூலமும், நீர், அவரைப் புகழலாம்; அதனால், யாருமே அவர்களைத் தொடர்ந்து கொடுமைப் படுத்தாதிருக்கக் கூடும்.

மேலும், நீர், இறைவனின் சட்டத்தினை அவர்களிடையே அமலாக்க எழ வேண்டும்; அதனால், நீர், அவரது சட்டத்தினில் வலுவாக உறுதிப் படுத்தப் பட்டோரில் சேர்க்கப்படக்கூடும்.

நீர், நீதியெனும் நதிகளையும் அவற்றின் நீரையும் உமது பிரஜைகளின் மத்தியில் பரவச்செய்வீராயின், நிச்சயமாக இறைவன் கண்ணுக்குப் புலனாகா, புலனாகும் சைனியங்களைக் கொண்டு உமக்கு உதவி புரிவார்; உமது விவகாரங்களில் உம்மை வலுப் படுத்துவார்.

அவரைத் தவிர இறைவன் வேறிலர்.

எல்லாப் படைப்பும் அதன் சாம்ராஜ்யமும் அவருடையதே.

விசுவாசிகளின் செயல்களெல்லாம் அவரிடமே திரும்பிச் செல்கின்றன.

உமது நம்பிக்கையை உமது செல்வங்களிலேயே வைத்திடாதீர்.

உமது முழு நம்பிக்கையையும் உமது பிரபுவாகிய இறைவனின் கருணையிலேயே வைப்பீராக.

நீர் செய்வது என்னவாயினும் அதில் அவரே உங்களின் பாதுகாப்பாக இருக்கட்டும்; அவரது விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்தோரில் சேர்ந்திடுவீராக.

அவரே உமது உதவியாளராகட்டும்; தனது செல்வங்களைக் கொண்டே உம்மை வளம்பெறச் செய்யட்டும்; ஏனெனில், விண்ணுலக, மண்ணுலகக் கருவூலங்கள் அனைத்தும் அவரிடமே உள்ளன.

அவர் விரும்பியவருக்கு அவற்றை வழங்குகின்றார்; எவருக்கு வேண்டுமோ அவருக்கு அவற்றை வழங்குவதைத் தவிர்க்கின்றார்.

சகலத்தையும் கொண்டுள்ள, போற்றுதலுக்கெல்லாம் உரிய இறைவன் அவரைத் தவிர வேறிலர்.

அவரது கருணைக்கதவின் முன் எல்லாருமே ஏழைகள்; அவரது மாட்சிமையின் வெளிப்பாட்டின் முன்பாக எல்லாருமே ஆதரவற்றவர்கள்; அவரது தயவை வேண்டுபவர்கள்.

மித நிலையை மீறாதீர்; உங்களுக்குச் சேவை செய்பவர்ளை நீதியுடன் நடத்துங்கள்.

அவர்களின் தேவைகளுக்கேற்ப வழங்கிடுங்கள்; அது அவர்கள் தமக்கென செல்வத்தைக் குவிப்பதற்கும், தமது உடல்களை அலங்காரம் செய்துகொள்வதற்கும், வீடுகளை அலங்கரித்துக் கொள்வதற்கும், தமக்கு நன்மை பயக்கவியலாத பொருள்களை அடைவதற்கும், வரம்பு மீறிச் செலவுச் செய்வோரின் எண்ணிக்கையில் சேர்ந்து கொள்வதற்குமாக இருத்தலாகாது.

அவர்களை வழுவாத நீதியுடன் நடத்துவீராக; அதனால், அவர்களில் யாருமே பற்றாக்குறையினால் துன்பப்படாமலோ, ஆடம்பரப்பொருள்களைக் கொண்டு திருப்தி படுத்தப்பட வேண்டியளவு இல்லாமலோ இருக்கக் கூடும்.

தரங்குறைந்தவர்களை உயர்ப்பண்பினர் மீதும், மரியாதைக்கு உரியவர்கள் மீதும், ஆட்சி செலுத்தவோ, ஆதிக்கம் செலுத்தவோ அனுமதிக்காதீர்; பெருந்தன்மை உடையவர்களை வெறுக்கத் தக்கவர்களிடமிருந்தும் தகுதியற்றவர்களிடமிருந்தும் இரக்கத்தை எதிர்ப்பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கிடாதீர்; மாநகருக்கு (கான்ஸ்டேண்டிநோப்பில்) எமது வருகையின்போது, இதனைத்தான் யாம்கவனித்தோம்; இதற்கு யாமே சான்று பகர்கின்றோம்.

அங்கு வசிப்போரிடையே, மற்றவர்கள் மிகுந்த வறுமையிலும் பரிதாபத்திற்குரிய ஏழ்மையிலும் வாழும்போது, சிலர் பெருஞ்செல்வம் படைத்தவர்களாகவும், பொருள்வளம் மிகுந்தவர்களாகவும் வாழ்வதைக் கண்டோம்.

உமது அரசாட்சிக்கு இது பொருத்தமாகத் தெரியவில்லை; உமது தரத்திற்கும் அது தகுந்ததன்று.

எனது அறிவுரை உமக்கு ஏற்புடையதாய் இருக்கட்டும்; நீர் மனிதரிடையே நடத்தும் ஆட்சி நடுநிலையுடையதாயிருக்க முயற்சி செய்வீராக; அதனால் இறைவன் உமது பெயரை உயர்வடையச் செய்து, உமது நீதியை உலகமுழுவதிலும் புகழ் பெறச் செய்யக்கூடும்.

கவனமாய் இருப்பீராக, இல்லையெனில் உமது பிரஜைகளின் வியர்வையில் உமது அமைச்சர்கள் செழித்தோங்கக் கூடும்.

ஒவ்வொரு காலையிலும் தங்களின் விதியை எண்ணி மனம் வருந்தும் ஏழைகளுக்கும் நேர்மை உள்ளங் கொண்டோருக்கும் அஞ்சுவீராக; அவர்கள்பால் அருளிரக்கங் கொண்ட மன்னராவீராக.

மெய்யாகவே, அவர்கள்தாம் இவ்வுலகின் செல்வங்கள்.

ஆகவே, கொள்ளையடிப்போரிடமிருந்து உமது செல்வங்களைப் பாதுகாப்பது உமக்குப் பொருத்தமானது.

ஒவ்வொரு வருடமும், இல்லை, ஒவ்வொரு மாதமும் அவர்களின் நிலைமையைக் குறித்த விவகாரங்களை விசாரிப்பீராக; தங்களின் கடமையில் கவனமற்றவர்களின் எண்ணிக்கையில் சேர்ந்திடாதீர்.

இறைவனின் தவறாத துலாக்கோலை உங்கள் கண்களுக்குமுன் வைத்துக்கொள்ளுங்கள்; அவரது முன்னிலையில் நிற்கும் ஒருவரைப் போன்று, ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவினாடியும் உங்கள் வாழ்க்கையின் செயல்களை, அத்துலாக்கோலில் எடைப்பார்த்துக் கொள்ளுங்கள்.

இறைவன்பால் அச்சத்தினால், அவர்முன் நிற்க எந்தவொரு மனிதனும் வலுவற்றிருக்கும் அந்நாளில், கவனமற்றோரின் உள்ளங்கள் நடுக்கமுறச் செய்யப்படவிருக்கும் அந் நாளில், நீங்கள், உங்கள் செயல்களுக்குக் காரணங் கூற அழைக்கப் படுவதற்கு முன், அவற்றை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

சூரியனைப் போன்று வள்ளன்மை மிக்கவராக ஆக வேண்டியது அரசர் ஒவ்வொருவருக்கும் பொருத்தமானதாகும்.

சூரியன், எல்லா உயிரினங்களின் வளர்ச்சியையும் ஊக்குவித்து, அதனதன் தேவையைப் பூர்த்திச் செய்கின்றது; அந் நலன்கள் எல்லாம் தன்னுள்ளேயே உள்ளார்ந்த நிலையில் இருப்பதில்லை; ஆனால் அது, அதி சக்தி வாய்ந்த, எல்லாம்வல்ல அவரால் விதிக்கப்படுபவையாகும்.

அரசரானவர், தாராளத் தன்மை உடையவராகவும், தனது கருணையில் மேகங்களைப் போன்று பெருந்தன்மை உடையவராகவும் இருக்கவேண்டும்; அவ்வள்ளன்மையின் பொழிவுகள், அனைத்திலும் சிறந்த, சகலமும் அறிந்த, ஆணையாளரின் கட்டளைக்கிணங்க, ஒவ்வொரு நாட்டிலும் பொழியப்பட்டுள்ளன.

உமது அலுவல்களை மற்றவர் கைகளில் முழுதாக ஒப்படைத்துவிடாது பார்த்துக் கொள்ளுங்கள்.

உம் பணியினை, உம்மைத் தவிர வேறு யாருமே உம்மைவிட நன்றாகச் செய்ய முடியாது.

இவ்வாறுதான் யாம் எமது விவேகமிக்க வார்த்தைகளை உமக்குத் தெளிவுப் படுத்தி, உம்மைக் கொடுமைப்படுத்துதல் என்னும் இடப்பக்கத்திலிருந்து, நீதி என்னும் வலப்பக்கத்திற்குக் கொண்டு சென்று, அவரது பிரகாசமிக்கச் சலுகைகள் என்னும் மாக்கடலை அணுகச் செய்யக்கூடியதனை உம்பால் அனுப்புகின்றோம்.

அத்தகையதுதான் உமக்கு முன்பிருந்த அரசர்கள் பின்பற்றி வந்த வழி; அவர்கள், தங்கள் பிரஜைகளிடம், நடுநிலையுடனும், நெறி பிறழாத நீதியுடனும் நடந்து கொண்டனர்.

உலகினில் கடவுளின் நிழலுருவம் நீர்தான்.

ஆகவே, நீர், அத்துணை மாண்புமிக்க, மாட்சிமைப்பொருந்திய ஸ்தானத்திற்குப் பொருந்த நடந்திட கடுமுயற்சி செய்வீராக.

யாம் உமக்குக் கிடைக்கச்செய்தும் போதித்தும் உள்ளவற்றிலிருந்து அப்பால் செல்வீராயின், நிச்சயமாக, அவ்வுயரியதும் விலைமதிப்பற்றதுமான நிலையிலிருந்து நீர் உம்மையே தாழ்த்திக் கொள்வதாகும்.

அதனால் நீர், திரும்பி வந்து, இறைவனையே பற்றிக்கொண்டு, இவ்வுலகிலிருந்தும் அதன் வீண் தற்பெருமைகளிலிருந்தும் உமது உள்ளத்தினைத் தூய்மைப் படுத்திக் கொள்வீராக; எந்த ஓர் அயலானையும் அதனுள் நுழையவும், தங்கிடவும் அனுமதித்திடாதீர்.

உமது உள்ளத்தை, அத்தகைய ஆசையின் ஒவ்வோர் அறிகுறியிலிருந்தும் தூய்மைப் படுத்திடாதவரை, இறைவனின் ஒளி அதன் பிரகாசத்தினை அதன்மீது விழச்செய்திட இயலாது; ஏனெனில், இறைவன் யாருக்குமே ஓர் இதயத்திற்குமேல் கொடுத்ததில்லை.

மெய்யாகவே, இதுவே, அவரது பண்டைய திருநூலினில் ஆணையிட்டும் எழுதியும் வைக்கப் பட்டுள்ளது.

இறைவனால் படைக்கப்பட்ட மனித இதயம் ஒன்றேயாகவும் பிரிக்கப்படாததாகவும் இருப்பதனால், அதன் பாசமும் ஒன்றாகவும் பிரிக்கப்படாததாகவும் இருந்திடுவதில் நீங்கள் கவனம் செலுத்துவது உங்களுக்குப் பொருத்தமாகும்.

ஆகவே, உங்கள் உள்ளத்தின் முழுப் பாசவுணர்வுடன், அவரது அன்பைப் பற்றிக்கொண்டு, அதனை, அவரைத் தவிர மற்றோரிடமுள்ள பாசத்தினைக் கைவிடச் செய்திடுங்கள்.

அதனால், அவர், உங்களைத் தனது ஏகத்துவம் என்னும் சமுத்திரத்தில் மூழ்கச் செய்து, தனது ஒருமைத் தன்மையை ஆதரிப்பவராகிட உதவக்கூடும்.

இறைவனே எனது சாட்சி.

யாம் இவ் வசனங்களை உமக்கு வெளிப்படுத்துவதன் ஒரே நோக்கம், உம்மை உலகின் நிலையற்றப் பொருள்களிலிருந்து புனிதமடையச்செய்து, நித்தியப்புகழொளி என்னும் இராஜ்யத்தினுள் பிரவேசிக்க உதவுவதுமேயாகும்; அதனால் நீர், இறைவனின் இசைவுக்கிணங்க, அதனில் வாழ்ந்து அதனை ஆட்சி செய்யவும் கூடும்.

மன்னரே, இறைவன் மீது ஆணையாக! என்னைத் துன்புறுத்துபவர்களுக்கு எதிராக உம்மிடம் முறையிடுவது எம் விருப்பமன்று.

எனது துக்கத்தையும் மனவேதனையையும் இறைவனிடமே முறையிடுகின்றேன்; அவர்தான் என்னையும் அவர்களையும் படைத்தவர்; எங்களின் நிலையையும் நன்கு அறிந்தவரும், சகலத்தையும் கண்காணிப்பவரும் அவரே.

அவர்கள் செயல்களின் விளைவுகளைக் குறித்து அவர்களுக்கு எச்சரிப்பதுவே என் விருப்பம்; அதனால் ஒரு வேளை, அவர்கள், என்னை நடத்தியது போல் மற்றவர்களை நடத்துவதைத் தவிர்க்கக் கூடும்; எனது எச்சரிக்கையின்பால் கவனஞ் செலுத்துவோரைச் சேர்ந்திடக்கூடும்.

எம்மைப் பாதித்திட்ட கொடுந்துன்பங்கள், யாம் அனுபவித்திட்ட வறுமை நிலை, எம்மைச் சூழ்ந்திருக்கும் பல்வேறான தொல்லைகள் ஆகிய அனைத்துமே, அவர்கள் களிப்புறும் சிற்றின்பங்களும், அவர்கள் அனுபவிக்கும் செழுமையும் மறைந்து போவது போலவே மறைந்து போய் விடும்.

இது எந்த மனிதனுமே மறுக்கவியலாத உண்மை.

மதிப்புக்குரிய ஆசனங்களில் அவர்கள் அமர்ந்திருந்த காலம் விரைவில் முடிவுறப் போவது போலவே, யாம் மண்தரையில் வாழப் பலவந்தப்படுத்தப்பட்டக் காலம் முடிவுறப் போகின்றது.

இறைவன், நிச்சயமாக, எங்களுக்கிடையே, மெய்ம்மையின் அடிப்படையில், தீர்ப்புக் கூறுவார்; மெய்யாகவே, நீதிபதிகளுக்கெல்லாம் மேலான நீதிபதி அவரே.

எமக்கு நேரிட்டவைக்காக யாம் இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்; கடந்த காலத்தில் அவர் எமக்கு விதித்துள்ளவற்றையும் வருங்காலத்தில் விதிக்கவிருப்பவற்றையும், யாம், பொறுமையுடன் ஏற்றுக்கொள்கின்றோம்; அவரிலேயே எனது நம்பிக்கையை வைத்துள்ளேன்; அவரது கைகளிலேயே எனது சமயத்தையும் ஒப்படைத்துள்ளேன்.

பொறுமையுடன் தாங்கிக்கொண்டும், அவரில் தங்களின் நம்பிக்கையை வைத்துக் கொண்டும் உள்ளோருக்கு அவர் நிச்சயமாக கைம்மாறு வழங்கிடுவார்.

படைப்பும் அதன் சாம்ராஜ்யமும் அவருடையதே.

அவர் யாரை விரும்புகின்றாரோ அவரை மேம்பாடுறச் செய்வார்; யாரை வேண்டுமோ, அவரைத் தாழ்த்திடுவார்.

அவரது செயல்களுக்குக் காரணம் கேட்கலாகாது.

மெய்யாகவே, அவரே பேரொளி மயமானவர், எல்லாம் வல்லவர்.

மன்னரே, யாம் உமக்கு உரைத்திட்டவற்றின்பால் உமது செவி கவனஞ் செலுத்தட்டும்.

கொடுமை செய்வோன் தனது கொடுங் கோன்மையை நிறுத்தட்டும்; அநீதி இழைப்போன் உமது மதத்தைப் பின்பற்றுவோர் மத்தியிலிருந்து விலக்கி ஒதுக்கப்படட்டும்.

இறைவனின் நேர்மைத் தன்மை சாட்சியாக! யாம் அனுபவித்திட்ட கொடுந்துன்பங்கள் அத்தகையவை; அவற்றை விவரித்திடும் எழுதுகோல் மனவேதனையால் குழப்பமடைவதைத் தவிர்த்திட இயலாது.

எமது பகைவர்கூட கண்ணீர் வடிக்குமளவும் அவர்களுக்கும் மேலாகப் பகுத்தறிவு படைத்த ஒவ்வொருவரும் கண்ணீர் விட்டு அழுமளவும் இருந்தன; யாம் அடைந்த அக் கடுந் துன்பங்கள்.

முழுநம்பிக்கை வைத்து அதனைப் பின்பற்றிடும் ஒருவர் அதனை எடுத்துரைப்பதனால் ஏற்படும் மன வேதனையைத்தாங்கிக் கொள்ளவே இயலாது! இறைவனின் ஒருமைத் தன்மையில் நம்பிக்கை வைத்துள்ளோருக்கு நீர் ஒரு வலுமிக்க அரணாகிடக் கூடும் என்பதற்காக, யாம், உம்மை அணுகும் காரியத்தில் ஈடுபட்டு, மக்களை உமது நிழலின்கீழ் வருமாறு அழைத்திட்டிருந்த போதும், யாம், இச் சோதனைகள் அனைத்திற்கும் ஆளாக்கப்பட்டே வந்தோம்.

மன்னரே, எப்பொழுதாவது யான் உமக்குக் கீழ்ப்படிய மறுத்ததுண்டா? யான், எப்பொழுதாவது உமது சட்டங்களை மீறி நடந்ததுண்டா? ஈராக்கில் உம்மைப் பிரதிநிதிக்கும் உமது அமைச்சர்களுள் யாராவது என் விசுவாசமின்மைக்கு ஏதாவது ஆதாரம் அளிக்க முடியுமா? உலகங்களுக்கெல்லாம் பிரபுவாகிய அவர் சாட்சியாக, முடியாது! ஒரு கண நேரமேனும் யாம் உமக்கெதிராகவோ, உமது அமைச்சர்களில் யாருக்கும் எதிராகவோ புரட்சி செய்தது கிடையாது.

கடந்த காலத்தில் யாம் அனுபவித்திட்ட சோதனைகளைவிட மோசமானவைக்கு ஆளாக்கப்பட்டபோதிலும், இறைவனின் அருளால், என்றுமே உமக்கெதிராகப் புரட்சி செய்ய மாட்டோம்.

நீர், இறைவனுக்குக் கீழ்ப்படிந்து, அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கு உதவி புரியுமாறு, யாம், பகல் வேளையிலும் இரவுக் காலத்திலும், உமது சார்பில், இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்; அதனால், அவர், உம்மைத் தீயோர் படையினரிடமிருந்து பாதுகாக்கக்கூடும்.

ஆகவே, நீர் விரும்பியவாறு செய்வீராக; உமது ஸ்தானத்திற்கும் மாட்சிமைக்கும் பொருந்த எம்மை நடத்துவீராக.

இப்பொழுதோ, வரவிருக்கும் நாள்களிலோ, நீர் எதனைச் சாதிக்க விரும்பிடினும், இறைவனின் சட்டத்தை மறந்திடாதீர்.

கூறுவீராக: எல்லா உலகங்களுக்குமே பிரபுவாகிய இறைவன் போற்றப் படுவாராக!

CXV

ஸாபியே, வெளிப்பாட்டின் எழுதுகோலானவர், தெய்வீகமாக வெளிப்படுத்தப்பட்ட பெரும்பாலான நிருபங்களில், இவ்வார்த்தைகளைக் குறித்திருக்கின்றார்: எமது புனித ஆடையின் விளிம்பு சட்டவிரோதமான செயல்கள் என்னும் சகதியினால் களங்கப்படுத்தப்படாதிருக்குமாறும், கறைப்படுத்தப்படாதிருக்குமாறும் பார்த்துக் கொள்ளுமாறு இறைவனின் நேசர்களை எச்சரிக்கைச் செய்துள்ளோம்.

மேலும், யாம், அவர்களது பார்வையை எமது நிருபங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவையின்பால் நிலைக்கச்செய்யுமாறும் வற்புறுத்திக் கூறியுள்ளோம்.

கருணைமயமானவரின் எழுதுகோலிலிருந்து வெளிப்பட்டு வந்துள்ள தெய்வீக அறிவுரைகளின்பால் அவர்களின் உட்செவிகள் கவனஞ் செலுத்தியும் அவரது குரலுக்குச் செவிச் சாய்த்தும் இருந்திருக்குமாயின், உலகின் பெரும்பான்மையான மக்கள் எப்பொழுதோ அவரது வழிகாட்டுதல் என்னும் ஆபரணத்தினால் அலங்கரிக்கப்பட்டிருப்பர்.

இருப்பினும், எது முன்விதிக்கப் பட்டிருந்ததோ அது இப்பொழுது நடந்தேறிவிட்டது.

நாள்களில் தொன்மையானவரின் நா, இவ்வதி மேன்மைமிகு சிறையில், மீண்டும் ஒரு முறை, இவ்வார்த்தைகளை, இத்தூய வெண்பனி நிறமுள்ள திருவேட்டில் குறித்து வைத்துள்ளது: ஒரே மெய்ப்பொருளான இறைவனின் நேசர்களே! நீங்கள், உங்களின் தீயதும் தூய்மைக் கெட்டதுமான உங்கள் ஆசைகளெனும் குறுகலான பாதுகாப்பிடத்தைக் கடந்து சென்றிடுங்கள்; இறைவனின் இராஜ்யமான பரந்தகன்றப் பெருவெளியை நோக்கி முன்னேறி, புனிதத் தன்மை, பற்றின்மை என்னும் பசும்புல் நிலத்தில் வாழ்வீராக; அதனால், உங்களது செயல்களின் நறுமணம் மனித இனம் முழுவதையும் இறைவனின் மங்காத பேரொளி என்னும் மாக்கடலுக்கு அழைத்துச் சென்றிடக்கூடும்.

இவ்வுலக விவகாரங்களிலோ, அவை தொடர்பானவை அனைத்திலுமோ, மற்றும், அதன் வெளிப்படையான தலைவர்களின் விவகாரங்களிலோ தலையிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

ஒரே மெய்க்கடவுளானவர் - அவரது ஒளி மேன்மைப்படுத்தப்படுமாக - உலக அரசாங்கங்களை அரசர்களிடமே வழங்கியுள்ளார்.

அதிகாரத்தில் உள்ளோரினால் ஆழ்ந்து ஆராயப்பட்ட கருத்துக்களுக்கு மாறான வழியில் நடப்பதற்கு யாருக்குமே உரிமை அளிக்கப்படவில்லை.

அவர் தனக்கென ஒதுக்கி வைத்துள்ளது மனிதர்களின் உள்ளங்கள் என்னும் மாநகரங்களே; அவர்களிலும், மாட்சிமைமிக்க மெய்ம்மையாகிய அவரது அன்பர்களானோரே அவற்றுக்குத் திறவுகோல்கள் ஆவர்.

இறைவா, அவர்கள் ஒவ்வொருவரும், அதி உயரிய நாமத்தின் சக்தியின் மூலமாக, அந் நகரங்களின் வாயிற் கதவுகளைத் திறந்திட உதவுவீராக.

இதுதான், ஒரே மெய்க் கடவுளானவருக்கு உதவுதல் என்பதன் பொருள் -- அதிகாலையை விடியச் செய்துள்ள அவரது எழுதுகோலான அவர் தமது திருநூல்களிலும் நிருபங்களிலும் குறிப்பிட்டுள்ள மையக் கருத்து இதுவே.

அது போன்றே, இறைவனின் அன்பர்கள், தங்களின் சக மனிதரிடம் பொறுமையாய் இருக்கவேண்டியதும், யாவற்றிலிருந்தும் தூய்மைப் படுத்தப்பட்டும் பற்றற்றும் இருக்க வேண்டியதும் அவசியமாகும்; அதனால், உலக மனிதரெல்லாம் அவர்களை மனிதரிடையே இறைவனின் அறங்காப்பாளர்கள் என அடையாளங் கண்டிடக் கூடும்.

எல்லாம் வல்லவரின் தடையுத்தரவுகள் எந்தளவு உச்சத்தை அடைந்துள்ளன என்பதையும், இந்நலிவுற்றுள்ள ஆன்மாக்கள் இப்பொழுது வாழும் உறைவிடம் எத்துணை இழி நிலையில் உள்ளது என்பதையும் எண்ணிப் பாருங்கள்.

பற்றுறுதி என்னும் இறக்கைகளின் மீது உங்களின் கருணைமயமான பிரபுவின் எழுதுகோலான அவரால் பரப்பப்பட்டுள்ள விண்ணுலகங்களில் பறந்திட்டோர் ஆசீர்வதிக்கப் பட்டோராவர்.

ஸாபீயே, மாட்சிமைமிகு மெய்ம்மையான இறைவன் ஆக்கியுள்ளதனைப் பார்.

நீ கூறுவாயாக: எல்லா உலகங்களையும் சூழ்ந்துள்ள அவரது சக்தி எத்துணை உயர்வானது, உண்மையாகவே எத்துணை உயர்வானது,! மேன்மையானது, அளப்பரிய மேன்மையானது, படைப்பனைத்துமே அணுகிடவியலாத அவரது பற்றின்மை! போற்றப்பட்டது, போற்றப்பட்டது அவரது அடக்கம் - இறைவனின் அருகாமையை அடைந்திட்டோரின் உள்ளங்களை உருகச் செய்துள்ளது அந்த அடக்கம்! யாம், எமது பகைவர்களின் கைகளில் எண்ணற்றப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்டிருந்த போதும், உலக மன்னர்களுக்கெல்லாம் பிரகடனஞ் செய்யுமாறு இறைவன் விதித்திட்டதனைப் பிரகடனஞ் செய்துள்ளோம்; அதனால், புராதனமானவரின் எழுதுகோல், அதன் நோக்கத்தினை அடைவதிலிருந்து எத்தகைய துன்பங்களுமே தடுக்கவியலாது என்பதை, எல்லா நாடுகளுமே அறிந்திடக் கூடும்.

அவரது எழுதுகோல், இறைவனது கட்டளைக்கிணங்கவே இயங்குகின்றது; நொறுங்கித் துகளாகியும் பாழாகியும்போன எலும்புகளுக்கு வடிவம் கொடுப்பவர் அவரே.

இம்மாபெரும் திட்டத்தைக் கவனிக்குமிடத்து, அவரை நேசிப்போர் தங்களின் பெருமுயற்சிக்குத் தயார் செய்துகொண்டு, வெறுக்கத்தக்க, இழிவான, செயல்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, தங்களின் எண்ணத்தை இறைவனின் சமயத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதிலேயே பதித்திடவேண்டுவது அவர்களுக்குப் பொருத்தமாகும்.

நித்திய மெய்ம்மையாகிய அவரது வெளிப்படையான செயல்களை, நீங்கள், சற்று ஆழ்ந்து சிந்திப்பீராயின், சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து இவ்வாறு கூறிடுவீர்கள்: பிரபுகளுக்கெல்லாம் பிரபுவானவரே! படைப்பனைத்திற்கும் பிரபுவானவரும், கண்ணுக்குப் புலனாகும், புலனாகா உயிரினங்கள் அனைத்திற்கும் கல்விப் புகட்டுபவர் நீரே என்பதற்கு நான் சாட்சி அளிக்கின்றேன்.

உமது சக்தி பிரபஞ்சம் அனைத்தையும் சூழ்ந்துள்ளது என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கின்றேன்; உலக சைனியங்கள் அனைத்துமே உம்மை அச்சமுறச் செய்யவோ, எல்லா மனிதரின் இராஜ்யங்களோ தேசங்களோ நீர் உமது நோக்கத்தைச் செயல்படுத்துவதைத் தடைச்செய்திடவோ இயலாது.

உலகம் முழுவதையும் புத்துயிர்ப் பெறச் செய்வதையும், அதன் மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டுவதையும், அதனில் வாழ்வோர் அனைவரையும் விமோசனம் பெறச்செய்வதையும் தவிர உமக்கு வேறெந்த அவாவும் இல்லை என்பதை நான் ஒப்புக் கொள்கின்றேன்.

சற்றுச் சிந்தித்து, இறைவனின் நேசர்கள் எங்ஙனம் நடந்துகொள்ள வேண்டும் என்பதையும், எந்தளவு உயரத்திற்கு அவர்கள் மேலெழவேண்டும் என்பதையும் எண்ணிப் பாருங்கள்.

எல்லா வேளைகளிலும், கருணைக் கடவுளாகிய உங்களின் பிரபுவிடம் அவர் விரும்பியதைச் செய்திட உதவி அளிக்குமாறு மன்றாடுங்கள்.

மெய்யாகவே, அவரே, அதி சக்தி வாய்ந்தவர், ஒளி மயமானவர், சகலமும் அறிந்தவர்.

இத்தவறிழைக்கப்பட்டோனுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறைவாசம், அவருக்கு எவ்விதத் தீங்கையும் இழைக்கவில்லை; அதனைச் செய்யவும் முடியாது; இவ்வுலகப் பொருள்களின் இழப்போ, தனது நாடுகடத்தலோ, தனது வெளிப்படையான அவமதிப்போ அவருக்கு எவ்வித வேதனையையும் அளிக்காது.

தனக்குத் தீங்கழைக்கவல்லது இறைவனின் அன்புக்குரியவர்கள் ஆற்றிடும் தீயச் செயல்களும், பின் அச்செயல்களை மாட்சிமைமிகு மெய்ம்மையாகிய அவர்மீதே சுமத்திடுவதுந்தான்.

நான் அனுபவிக்கும் வேதனை இதுதான்; அனைத்தின்மீதும் சக்திகொண்டுள்ள அவரே எனக்குச் சாட்சியமளிக்கின்றார்.

ஒவ்வொரு நாளும் பாயானின் மக்கள் கொண்டாடிடும் உரிமைகள்தாம் எனக்குக் கடும்வேதனை அளித்துள்ளன.

எனது கிளைகளில் (மகன்களில்) சிலர், ஒரு நபருக்குத் தங்களின் விசுவாசத்தை விளம்பரப் படுத்தியுள்ளனர்.

அதே வேளையில், மற்றவர்களோ, சுயேச்சையாக அவ்வுரிமையைக் கோரிக் கொண்டு, தங்களின் சொந்த விருப்பங்களுக்கேற்ப நடந்து வந்துள்ளனர்.

ஸாபியே! உன்னதத்தின் நா வாய்மொழிகின்றது: உண்மையே உரைத்திடும் எனது பெயரால்! இவ்வதி மேன்மைமிகு வெளிப்பாட்டில், கடந்த காலத் தூதுப்பணி அனைத்தும் அவற்றின் அதிவுயரிய, இறுதியான முழுநிறைவைப் பெற்றுள்ளன.

தமக்குப் பிறகு, யாராவது ஒரு வெளிப்பாட்டிற்கு உரிமைக் கோரினால், நிச்சயமாக அத்தகைய மனிதர் ஒரு பொய்யு¬ரைக்கும் போலியாவார்.

அவர், தனது கூற்றினை மறுத்து அதனைக் கைவிடச் செய்திட அருள் கூர்ந்து அவருக்கு உதவிடுமாறு யாம் இறைவனை மன்றாடுகின்றோம்.

அவர், தன் தவறுக்கு வருந்துவாராயின், இறைவன் நிச்சயமாக அவரை மன்னிப்பார்.

இருப்பினும், அவர், தனது தவறில் விடாப்பிடியாய் இருந்திடின், இறைவன், நிச்சயமாக, அவரைக் கருணையின்றி நடத்திடும் ஒருவரை அனுப்பிடுவார்.

அவர், மெய்யாகவே, எல்லாம் வல்லவர், அதி சக்தி வாய்ந்தவர்.

எனக்கு முன்பாக வந்திட்ட அவதாரமும், எனது திருவழகின் முன்னறிவிப்பாளருமான அவரது வெளிப்படுத்துதலின் ஒரே நோக்கம் எனது வெளிப்படுத்துதலும் எனது சமயத்தின் பிரகடனமுமே என்பதை எவ்வாறு பாயானின் மக்கள் அறிந்து கொள்ள முற்றிலும் தவறி விட்டுள்ளனர் என்பதைப் பாருங்கள்.

எனக்காகவல்லாது, அவர், தான் தெரிவித்தவற்றைத் தெரிவித்திருக்கவே மாட்டார் என்பதற்கு - மாட்சிமை மிகு மெய்ம்மையாகிய அவரே எனக்குச் சாட்சி அளிக்கின்றார்.

அறிவற்ற இம்மக்கள் , சகலத்தையும் கொண்டுள்ள, அடையவியலாத, அவரது சமயத்தை எவ்வாறு ஒரு விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் பாவித்துள்ளனர் என்பதைப் பாருங்கள்! அவர்களின் உள்ளங்கள், ஒவ்வொரு நாளும், ஒரு புதிய சூழ்ச்சித் திட்டத்தை உருவாக்குகின்றன; அவர்களின் வீண் கற்பனை அவர்களை ஒரு புதுமையான ஓய்விடம் தேடத் தூண்டுகின்றது.

அவர்கள் கூறுவது உண்மையாயின், தங்களின் பிரபுவான அவரது சமயத்தின் திடநிலை எவ்வாறு உறுதிப்படுத்தப்படும்? இதனை உங்கள் உள்ளத்தினில் சிந்தித்து, கூர்ந்து நோக்குபவராகவும் நோக்கத்தில் திடமானோராகவும், தங்களின் நம்பிக்கையில் உறுதியுடையோராகவும் கூரிய பார்வை கொண்டோராகவும் ஆவீராக.

அத்தகையதாய் இருக்கவேண்டும் உங்களின் பற்றுறுதி; அதனால், எந்த மனிதனுமே இதுவரைக் கோரியிராத, எந்த மனமும் கற்பனைச் செய்ய இயலாத, அத்தகைய வெளிப்பாட்டுக்கு மனித இனம் முழுவதுமே உரிமை கோருமாயின், அவற்றை நீங்கள் முற்றாகப் புறக்கணித்திடுவீர்; அவற்றை உங்களிடமிருந்து வீசியெறிந்துவிட்டு உலகங்கள் அனைத்தின் வழிபாட்டுக் குறியான அவரது திசையில் உங்களின் பார்வையைச் செலுத்திடுவீர்.

எனது சொந்த நேர்மைத் தன்மையே சாட்சியாக! மேன்மை வாய்ந்தது, அளவிடற்கரிய மேன்மை வாய்ந்தது இச் சமயம்! வலுமிக்கது, கருதுதற்கியலாத அளவு வலுமிக்கது இந் நாள்! சகலத்தையும் துறந்து, விண்ணுலகிலும் மண்ணுலகிலுமுள்ளோர் அனைவரின் மீதும் ஒளியைப்பாய்ச்சிட்ட அவரது வதனத்தின்மீது தனது பார்வையைப் பதித்திட்ட மனிதன் உண்மையாகவே ஆசீர்வதிக்கப் பட்டவனாவான்.

ஸாபியே, மனிதரின் நெஞ்சங்களில் தோன்றிடும் ஆசைகளின் தாக்குதல்களினால் நீ, அதிர்ச்சியுறாதிருக்க விரும்பினால், உனது பார்வைக் கூரியதாய் இருக்க வேண்டும், உறுதியாய் இருக்க வேண்டும் உனது ஆன்மா, பித்தளையைப் போன்று வலுவுடையதாய் இருக்கவேண்டும் உனது பாதங்கள்.

இதுவே, அதிவுயரிய நாமத்தின் எழுதுகோலான, புராதன மன்னராகிய, அவர், தனது விருப்பத்திற்கிணங்க, வெளிப்படுத்த உந்துதல்பெற்றுள்ள உறுதியான கட்டளையாகும்.

அதனை உனது கண்ணின் மணியாக வைத்துக் கொள்ள கடுமுயற்சி செய்வாயாக; நன்றி உடையவனாக ஆவாயாக.

நித்திய மெய்ம்மையாகிய அவரது சமயத்திற்கு இரவு பகலாகச் சேவை செய்வாயாக; அவரைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்துக் கொள்வாயாக.

எம்மீது ஆணையாக! இந் நாளில் நீ காணும் அனைத்துமே அழிந்து போகும்.

உனது பிரபுவின் சமயத்தில் உனது ஸ்தானம் அதி சிறந்ததாகிடும்; உனது சுறுசுறுப்பான இயக்கம் அவரை நோக்கியே போவதாயிருக்க வேண்டும்; உனது இறுதி ஓய்விடம் அவரிலேயே இருக்க வேண்டும்.

CXVI

கிறிஸ்துவ நாட்டு மன்னர்களே! “நான் போய்விட்டு மீண்டும் உங்களிடம் வருவேன்” என ஆண்டவனின் ஆவியாகிய இயேசு நாதரின் கூற்றினை நீங்கள் கேட்டதில்லையா ? இருந்தும் அவர், விண்ணுலகம் என்னும் மேகத்தினுள் உங்கள்பால் மீண்டும் வந்தபோது நீங்கள் ஏன் அவரது அருகினை அடைந்து, அதன்வழி அவரது வதனத்தைக் கண்ணுறுவதிலும், அவரது அருகாமையை அடைவதிலும் தோல்வியடைந்துள்ளீர்! மேலுமொரு வசனத்தில் அவர் கூறுகின்றார்: “மெய்ம்மை என்னும் ஆவியாகிய அவர் வந்ததும், உங்களை, அனைத்து உண்மைகளின்பால் வழிநடத்துகின்றார்.

” இருந்தும், அவர் உண்மையைக் கொண்டுவந்தபோது, எவ்வாறு நீங்கள், அவர்பால் உங்களின் முகங்களைத்திருப்ப மறுத்துவிட்டுள்ளீர் என்பதைப் பாருங்கள்; கேளிக்கைகளிலும் பயனற்றக் கற்பனைகளிலும் நேரத்தைப் போக்குவதில் பிடிவாதமாய் இருக்கின்றீர்.

நீங்கள், அவரது வாயிலிருந்தே இறைவனின் வாசகங்களைக் கேட்டும், ஒளிமயமான, விவேகமிக்க, எல்லாம் வல்லவரின் பல்வேறான நல்லறிவுகளில் பங்கேற்றுமிருக்க முடிந்திருக்கும்; ஆனால் நீங்கள் அவரை வரவேற்கவுமில்லை; அவரது முன்னிலையை அடைவதற்கும் வழிசெய்ததில்லை; உங்களின் தோல்வியின் காரணமாக, நீங்கள், இறைவனின் சுவாசம் உங்கள் மீது வீசுவதைத் தடைச் செய்துகொண்டுள்ளீர்; அதன் நறுமணம் உங்கள் ஆன்மாவை அடையவிடாது செய்து விட்டுள்ளீர்.

உங்களின் ஒழுங்கற்ற ஆசைகள் என்னும் பள்ளத்தாக்கினில் மகிழ்ச்சியுடன் தொடர்ந்து சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றீர்.

நீங்களும் நீங்கள் கொண்டுள்ள அனைத்தும் இல்லாதுபோய்விடும்.

நிச்சயமாக, நீங்கள் இறைவன்பால் திரும்பி வருவீர்; அப்பொழுது, படைப்பனைத்தையும் ஒன்று திரட்டியுள்ள அவரது முன்னிலையில் உங்கள் செயல்களுக்குக் காரணங்கூற அழைக்கப்படுவீர்.

அரசர்களே, இருபது ஆண்டுகள் கடந்து விட்டன; அக்காலத்தில் யாம், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய துன்பத்தின் வேதனையை அனுபவித்தோம்.

எமக்கு முன்பிருந்தவர்களுள் ஒருவர்கூட யாம் அனுபவித்தவற்றை அனுபவித்திலர்.

நீங்கள் அதனை உணரக் கூடுமாக! எமக்கெதிராக எழுந்தவர்கள், எமக்கு மரண தண்டனை விதித்துள்ளனர்; எமது இரத்தத்தைச் சிந்தச்செய்துள்ளனர்; எமது உடைமைகளைக் கொள்ளையிட்டுள்ளனர்; எம்மை அவமதித்துள்ளனர்.

பெரும்பாலான எமது துன்பங்களை அறிந்திருந்தும், நீங்கள், ஆக்கிரமிப்பவர்களைத் தடைச் செய்யத் தவறியுள்ளீர்.

கொடியோனின் அக்கிரமங்களைத் தடுக்க வேண்டியதும், உங்களின் பிரஜைகளை நியாயமாக நடத்துவதும், உங்களின் தெளிவான கடமையல்லவா? அதன்வழி உங்களின் உயரிய நீதியுணர்வு மனித இனம் முழுவதற்கும் மெய்ப்பிக்கப் படக்கூடும்.

நீங்கள் நீதியுடன் ஆட்சிப்புரியக்கூடும் என்பதனால், இறைவன் மக்களின் மீதான ஆட்சிப்பொறுப்பை, உங்களின் கைகளில் ஒப்படைத்துள்ளார்; அதனால்.

நசுக்கப் பட்டோரின் உரிமையைப் பாதுகாத்து, குற்றம்புரிவோரைத் தண்டிக்கவும் கூடும்.

இறைவனால், தமது திருநூலில், உங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நீங்கள் அலட்சியம் செய்தீராயின், அவரது பார்வையில் உங்கள் பெயர்கள் அநீதி இழைப்போரின் எண்ணிக்கையில் சேர்க்கப்படும்.

உங்களின் தவறு, உண்மையாகவே, கடுமையானது.

உங்களின் கற்பனைகள் தோற்றுவித்துள்ளவற்றைப் பற்றிக்கொண்டு, நீங்கள் அதி மேன்மையான, அடையவியலாத, அனைத்தையும் நிர்ப்பந்திக்கவல்ல, எல்லாம் வல்ல, இறைவனின் கட்டளைகளைப் பின்னுக்கு வீசியெறிந்து விட்டுள்ளீர்களா? நீங்கள் கொண்டுள்ளவற்றை அப்பால் எறிந்துவிட்டு, இறைவன் உங்களைக் கடைப்பிடிக்குமாறு ஆணையிட்டுள்ளவற்றைப் பற்றிக் கொள்ளுங்கள்.

அவரது அருளைத் தேடுங்கள்; ஏனெனில், அதனைத் தேடுபவர் நேர்வழியில் நடந்திடுவார்.

யாம் இப்பொழுதிருக்கும் நிலையைக் கவனியுங்கள்; எமக்கு வருத்தம் உண்டுபண்ணும் தீமைகளையும் தொல்லைகளையும் கவனியுங்கள்.

ஒரு கணநேரமேனும் எம்மை அலட்சியப் படுத்தாதீர்; எமக்கும் எமது பகைவர்களுக்குமிடையே உள்ள வேறுபாட்டை நியாயமுடன் சீர்தூக்கிப் பாருங்கள்.

நிச்சயமாக இதுவே உங்களுக்கு மிகவும் அனுகூலமாகும்; ஆகையினால்தான், யாம், எமது கதையை உங்களுக்கு எடுத்துரைக்கின்றோம்; எம்மைப் பாதித்துள்ளவற்றை விவரிக்கின்றோம்; அதனால், நீங்கள் எமது துன்பங்களையகற்றிச், சுமையைக் குறைக்கக்கூடும் என்று விரும்புகின்றவர்கள், எமது தொல்லைகளிலிருந்து எம்மை விடுவிக்கட்டும்; அதனைச் செய்ய விரும்பாதோரைப் பொறுத்தமட்டில், எனது பிரபுவே உதவுவோரிலெல்லாம் மிகச் சிறந்தவர்.

ஊழியனே, உனக்கு யாம் அனுப்பி வைத்துள்ளவற்றை மக்களுக்குத் தெரிவிப்பாயாக; எவரிடத்திலுள்ள அச்சமும் உனக்குக் கிலியூட்டாதிருக்கட்டும்; தடுமாறுவோரில் சேர்ந்திடாதே.

விண்ணுலகங்களிலும், மண்ணுலகிலும் இருப்போர் அனைவரின் பார்வையிலும், இறைவன், தனது சமயத்தை மேம்படுத்துவதற்கும் தனது அத்தாட்சியை மிகைப்படுத்துவதற்கும் காலம் நெருங்கிகொண்டிருக்கின்றது.

எல்லாச் சூழ்நிலைகளிலும் நீ, உனது முழு நம்பிக்கையை உனது பிரபுவில் வைத்து, உனது பார்வையை அவர்பால் திருப்பி, அவரது உண்மையை நிராகரிப்போரிடமிருந்து அப்பால் திரும்புவாயாக.

உனது பிரபுவான இறைவனே உனக்குப் போதுமான நல்லுபகாரியாகட்டும்.

உம்பால் தனது முகத்தைத் திருப்பிடும் மன்னர் எவரும் காணப்படவில்லையெனினும், உலகினில் உமது வெற்றியை நிச்சயித்து, மனிதருக்கெல்லாம் மேலாக, எமது சமயத்தை மேம்பாடுறச் செய்வதென, யாம் உறுதி பூண்டுள்ளோம்.

CXVII

மேன்மைமிகு திருவுருவானவர், உலகத்தின் சமாதானம், அமைதி, ஆகியவையின் முன்தேவைகளையும், அதன் மக்களின் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்த விரும்பி, இதனை எழுதியுள்ளார்: சகலத்தையும் உள்ளடக்கும் ஒரு மாபெரும் கூட்டங் கூட்ட வேண்டியதன் தவிர்க்க இயலாத தேவை உலகளவில் உணரப்படும் நேரம் வந்தே தீரும்.

மண்ணுலகின் அரசர்களும் மன்னர்களும் அதில் கண்டிப்பாகப் பங்கெடுத்துக் கொள்வதோடு, அதன் ஆலோசனைகளில் கலந்துகொண்டு, மனிதரிடையே உலகின் மாபெரும் சமாதானத்திற்கு அடித்தளம் அமைக்கத் தேவையான வழிவகைகளைச் சிந்திக்க வேண்டும்.

அவ்வாறான அமைதிக்கு, வல்லரசுகள், உலக மக்களின் அமைதியின் பொருட்டு, தங்களிடையே முழுமையாக ஒத்துப்போக வேண்டியது அவசியமாகும்.

எந்த ஒரு மன்னராவது மற்றொருவர் மீது படையெடுத்தால் எல்லாரும் ஒன்றாக எழுந்து அவரைத் தடுக்க வேண்டும்.

இது நடைபெறுமாயின், தங்கள் பிரதேசங்களின் பாதுகாப்புக்காகவும் தங்களின் எல்லைக்குள் உள்நாட்டு அமைதியை நிலைநாட்டும் நோக்கத்திற்காகவும் அல்லாது உலக நாடுகளுக்கு வேறு எதற்காகவும் எந்தப் போர்க்கருவிகளும் தேவைப்படா.

இது மனிதர்கள், அரசாங்கம், நாடு ஆகியவையின் சமாதானத்திற்கும் அமைதிக்கும் உத்தரவாதம் அளிக்கும்.

கிருபைமிக்க, எல்லாம்வல்ல இறைவனின் நாமத்தின் பிரதிபலிப்பாகிய உலக மன்னர்களும், அரசர்களும் இந்நிலையை அடைந்து, மனித இனத்தினைக் கொடுங்கோன்மையின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவர் என்று உவகையுடன் நம்புகிறோம்.

உலக மக்கள் அனைவரும் ஓர் உலக மொழியையும் ஒரு பொது எழுத்தினையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

இது சாதிக்கப்படும்பொழுது எந்த நகரத்திற்கு ஒரு மனிதர் பிரயாணம் செய்தாலும், அது அவர் தனது சொந்த வீட்டினுள் பிரவேசிப்பதுபோல் இருக்கும்.

இவை அனைத்தும் கடமை மட்டுமல்ல, அதி முக்கியமானவையுங் கூட; உள்ளுணர்வும் புரிந்துணர்வுமுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இது கடமையாகின்றது.

யாரொருவன் இன்று, மனித இனம் முழுவதன் சேவைக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றானோ, அவனே, ஓர் உண்மையான மனிதன்.

மேன்மைமிகு திருவுருவானவர் கூறுகின்றார்: உலக மனிதர்கள், இனங்கள் ஆகியோரின் நன்மைகளை விருத்தியடையச்செய்ய எழுகின்றவர் அருட்பேறும் மகிழ்வும் பெறுவர்.

மற்றொரு வசனத்தில் அவர் பிரகடனஞ் செய்துள்ளார்: ஒருவர் தனது நாட்டின்பால் பற்றினைக் குறித்துப் பெருமை கொள்வது அவருக்குப் பொருத்தமானதன்று; மாறாக, சர்வ லோகத்தின்பால் பற்றுக் கொள்வதே பொருத்தமாகும்.

உலகமே ஒரு நாடு, மனித இனமே அதன் பிரஜைகள்.

CXVIII

உலக மன்னர்களே, இறைவனிடம் அச்சத்தை விட்டிடாதீர்; எல்லாம் வல்ல இறைவன் நிர்ணயித்துள்ள வரம்புகளை மீறாதீர்.

அவரது திருநூலில் உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள தடையுத்தரவுகளைக் கடைப்பிடியுங்கள்; அவற்றின் எல்லைகளைக் கடந்திடாது மிகக் கவனமாய் இருங்கள்.

எச்சரிக்கையாய் இருங்கள், அதன்வழி நீங்கள் யாருக்குமே கடுகளவேனும் அநீதி இழைக்காதிருக்கக் கூடும்; நீதியின் பாதையைப் பின்பற்றுங்கள்; ஏனெனில், மெய்யாகவே, இதுவே நேர் வழி.

உங்களிடையேயுள்ள முரண்பாடுகளைத் தீர்த்துக்கொண்டு, போர்த் தளவாடங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்; அதனால், போர்ச்செலவுகளின் சுமை குறைந்து, உங்களின் மனமும் உள்ளமும் அமைதி பெறக்கூடும்.

உங்களிடையே உள்ள பிளவுகளைப் போக்கிடுங்கள்; ஆகவே, உங்களின் நகரங்கள், பிரதேசங்கள், ஆகியவற்றின் பாதுகாப்பிற்கான தேவையைத் தவிர, வேறெதற்கும் போர்த் தளவாடங்கள் தேவைப்படா.

இறைவனுக்கு அஞ்சி, மித நிலையின் எல்லைகளைக் கடந்து, வீண் செலவு செய்திடுவோரில் சேர்ந்திடாதீர்.

ஒவ்வொரு வருடமும் நீர், உமது செலவுகளை அதிகரிப்பதாகவும், அவற்றின் பாரத்தை உமது பிரஜைகளின்மீது சுமத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

மெய்யாகவே, இது, அவர்கள் தாங்கக் கூடியதைவிட அதிகமானது; இது வேதனை மிக்க அநீதியாகும்.

மனிதர்களிடையே நீதியுடன் முடிவுச்செய்வீராக; அவர்களிடையே, நீர், நீதியின் சின்னமாக ஆவீராக.

நீர் நேர்மையாக முடிவெடுப்பீராயின், அதுவே உமக்குத் தகுந்தது; உமது நிலைக்கும் பொருத்தமானது.

கவனமாய் இருங்கள்; உங்களிடம் முறையிட்டு, உங்களின் நிழலின்கீழ் வருபவரிடம் அநீதியாக நடந்திடாதீர்.

இறைவனுக்கு அஞ்சி நடப்பீராக; இறைபக்தியுடன் வாழ்வோரில் சேர்ந்திடுவீராக.

உங்களது பலம், படைகள், பொருட் செல்வம் ஆகியவற்றை நம்பியிராதீர்.

உங்களின் முழு நம்பிக்கையையும் மனவுறுதியையும் உங்களைப் படைத்த இறைவனிலேயே வைத்து, உங்கள் விவகாரங்களில் அவரது உதவியை நாடுங்கள்.

அவர் ஒருவரிடமிருந்தே உதவி வரும்.

அவர் விரும்புகின்றோருக்கு அவர் விண்ணுலங்களிலும் மண்ணுலகிலுமுள்ள வான்படைகளைக் கொண்டு உதவிடுவார்.

உங்கள் மத்தியிலுள்ள ஏழைகள் இறைவனின் பொறுப்பு என்பதை அறிவீராக.

அவரது பொறுப்பின்பால் நம்பிக்கைத் துரோகம் செய்திடாது கவனமாய் இருங்கள்; அதனால், அவர்களை அநீதியுடன் நடத்தாமலும், வஞ்சகர்களின் வழியைப் பின்பற்றாமலும் இருப்பீராக.

நீதியின் துலாக்கோல் நிறுவப்படும் அந்நாளில் நீங்கள் அவரது பொறுப்பைப் பற்றிப் பதில்கூற நிச்சயமாக அழைக்கப் படுவீர்கள்; அந்நாளில்தான், ஒவ்வொருவரும் அவரவருக்குச் சேரவேண்டியதை அளிக்கப்பெறுவார்; அவர்கள் செல்வம் படைத்தோரோ, ஏழையோ, அவ் வனைவரின் செயல்களும், அப்பொழுதுதான் எடை பார்க்கப்படும்.

ஒப்பற்ற, ஐயத்திற்கிடமற்ற மொழியில், யாம், இந்நிருபத்தில் வெளிப்படுத்தியுள்ள அறிவுரைகளின்பால் நீங்கள் கவனஞ் செலுத்தத் தவறினால், எல்லாத் திசைகளிலிருந்தும் தெய்வத் தண்டனை உங்களைத் தாக்கும்; உங்களுக்கெதிராக அவரது நீதியின் தண்டனை வழங்கப்படும்.

அந்நாளில், அவரை எதிர்க்க உங்களுக்குச் சக்தி இராது; உங்களின் வலுவின்மையை அறிந்து கொள்வீர்கள்.

உங்கள் மீதும் உங்களுக்குக் கீழிருப்போர் மீதும் கருணை காட்டுங்கள்.

தமது புனிதமான, உயரிய, நிருபங்களில் இறைவனால், அளிக்கப்பட்ட கட்டளைகளின் அடிப்படையில், அவர்களுக்கிடையே தீர்ப்புக் கூறுங்கள்.

அவர், அந் நிருபத்தினில் அவ்வொவ்வொன்றுக்கும் நிச்சயிக்கப்பட்டுள்ள அளவையும், யாவற்றுக்குமான விளக்கத்தையும் தெளிவாக வழங்கியுள்ளார்; அதுவே அவரிடத்தில் நம்பிக்கைக் கொண்டுள்ளோருக்கு முன்னெச்சரிக்கையான அறிக்கையாகும்.

எமது சமயத்தை ஆராயுங்கள்; எம்மைப் பாதித்துள்ளவற்றைக் குறித்து விசாரியுங்கள்; எமக்கும் எமது பகைவர்களுக்குமிடையே நீதியுடன் தீர்ப்பளியுங்கள்; தனது அண்டையரிடம் நியாயமாக நடந்திடுவோரில் சேர்க்கப்படுவோர் ஆகிடுங்கள்.

நீங்கள் கொடியோனின் செயலைத் தடுக்காவிட்டால், நசுக்கப்பட்டோரின் உரிமையைப் பாதுகாக்கத் தவறினால், மனிதரிடையே நீங்கள் தற்பெருமை காட்டுவதில் என்ன நியாயம் இருக்கின்றது? நீங்கள் பெருமைப் பட்டுக் கொள்வதற்கு அதில் என்ன இருக்கின்றது? நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்வது உங்கள் உணவிலும் மதுபானத்திலுமா, கருவூலங்களில் நீங்கள் குவித்து வைத்திருக்கும் செல்வங்களிலா, உங்களை நீங்கள் அலங்கரித்துக் கொள்ளும் பல்வேறு ஆபரணங்களிலா அல்லது அவற்றின் கிரயத்திலா? உண்மையான உயர்வு இம் மரிக்கக்கூடிய அத்தகைய உடைமைகளைக் கொண்டிருப்பதில்தான் என்றால், நீங்கள் அடிவைத்து நடக்கும் இப்பூமி உங்களைவிட அதிகமாகப் பெருமைப்பட்டுக் கொள்ளலாமே; ஏனெனில், நீங்கள் பெருமைப் பட்டுக் கொள்ளும் அப்பொருள்களை எல்லாம், வல்லவரின் ஆணையின்படி, அதுதானே உங்களுக்கு வழங்குகின்றது.

இறைவனின் விதிப்படி, நீங்கள் கொண்டிருப்பவை அனைத்தும் அதன் ஆழத்தில்தான் வைக்கப்பட்டிருக்கின்றன.

அவரது கருணையின் அடையாளமாக, அதிலிருந்து நீங்கள் உங்களின் செல்வங்களைப் பெற்றிடுகின்றீர்! நீங்கள் காணக்கூடிவர்களாயின் அப்பொருளில் பெருமை கொள்ளும் உங்களின் நிலையைப் பாருங்கள்! இல்லை, படைப்பனைத்தின் இராஜ்யத்தையும் தன் பிடியில் வைத்துள்ள அவர் சாட்சியாக! இறைவனின் கட்டளைகளை இறுகப் பற்றிக்கொள்வதில் அல்லாது, அவரது சட்டங்களை முழுமனதோடு கடைப்பிடித்தலில் அல்லாது, அவை அமல்படுத்தப் படாதிருக்கலாகாது என்னும் உங்களின் அசையா உறுதியிலும் அல்லாது, நேர் வழியைத் திடப் பற்றுடன் பின்பற்றுவதில் அல்லாது வேறெதனிலுமே நிரந்தரமான உயர்வு கிடையாது.

CXIX

உலக மன்னர்களே! எதற்காக நீங்கள் கதிரவனின் பிரகாசத்தினை மங்கச்செய்து, அது ஒளி கொடுப்பதை நிறுத்தச் செய்துள்ளீர்? மேன்மை மிக்கவரின் எழுதுகோலினால் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிவுரையின்பால் செவிசாய்ப்பீராக.

உலக மன்னர்கள் உலகில் சமாதானத்தை நிலைநாட்ட உதவுமாறு இறைவனை மன்றாடுகின்றோம்.

மெய்யாகவே, அவர், எதை விரும்புகின்றாரோ அதனைச் செய்வார்.

உலக மன்னர்களே! ஒவ்வோர் ஆண்டும் நீங்கள் உங்கள் செலவுகளை அதிகரித்து அதன் சுமையை உங்கள் பிரஜைகளின் மீது சுமத்துவதை யாம் கண்ணுறுகின்றோம்.

மெய்யாகவே இது, முழுமையானதும் பெரும் அநீதியுமாகும்.

இத் தவறிழைக்கப்பட்டோனின் பெருமூச்சுக்கும் கண்ணீருக்கும் அஞ்சுங்கள்; உங்கள் மக்களின் மீது அளவற்ற பாரத்தினைச் சுமத்தாதீர்.

அவர்களிடமிருந்து கொள்ளையடித்து உங்களுக்காக அரண்மனைகள் எழுப்பிக்கொள்ளாதீர்; மாறாக நீங்கள் உங்களுக்காக எதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றீர்களோ அதனையே அவர்களுக்கும் தேர்ந்தெடுங்கள்.

இதனை நீங்கள் உணரக்கூடுமாயின், உங்களுக்கு எது பயனளிக்கின்றதோ, அதனையே உங்கள் கண்களுக்குக் காட்சியளிக்கச் செய்கின்றோம்.

உங்கள் மக்களே, உங்கள் செல்வமாகும்.

உங்களின் ஆட்சி, கடவுளின் கட்டளைகளை மீறாதவாறும், உங்களின் பாதுகாப்பில் இருப்பவர்களை, நீங்கள், கொள்ளையரின் கைகளில் ஒப்படைத்து விடாதவாறும் கவனமாய் இருங்கள்.

அவர்களைக் கொண்டே நீங்கள் வெற்றி அடைகின்றீர்.

இருந்தும், அவர்களிடம் எத்துணை அலட்சியமாக நடந்துகொள்கின்றீர்.

என்னே விசித்திரம்; உண்மையாகவே என்னே விசித்திரம்! நீங்கள் இப்பொழுது அதிமேன்மைமிக்கப் பேரமைதியினை நிராகரித்து விட்டுள்ளதனால், சிற்றமைதியையாவது இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்.

அதனால், ஒருவேளை, உங்களின் சொந்த நிலையையும், உங்களைச் சார்ந்திருப்போரின் நிலையையும் ஒரு சிறிதளவாவது விருத்தியடையச் செய்யக் கூடும்.

மண்ணுலக ஆட்சியாளர்களே! உங்களிடையே பூசலைத் தீர்த்துக் கொள்வீராக; அதனால், உங்களின் பிரதேசங்களின் அரசுரிமையின் பாதுகாப்புக்காக ஓரளவே போர்க்கருவிகளைத் தவிர அதிகமாகத் தேவைப் படாதிருக்கக் கூடும்.

உள்ளதனைத்தையும் அறிந்தவரான, விசுவாசமுள்ள அவரது ஆலோசனையை உதாசீனப் படுத்தாது கவனமாய் இருங்கள்.

மண்ணுலக மன்னர்களே, ஒற்றுமையாய் இருங்கள்; ஏனெனில், நீங்கள் புரிந்திடக் கூடுவோராயின், அதன் வழியாகத்தான் உங்களிடையே முரண்பாடு என்னும் புயல் ஓய்ந்து உங்களின் மக்கள் ஓய்வுப் பெறுவர்.

உங்களிடையே யாராவது மற்றவருக்கு எதிராகப் படை எடுப்பாராயின், அவருக்கு எதிராக எல்லாரும் எழுவீராக.

ஏனெனில், இதுவே தெளிவான நீதியல்லாது வேறெதுவுமில்லை.

CXX

ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே! நீங்கள் கவனத்துடன் நோக்குவீராயின், ஒன்றாகக் கூடி கலந்தாலோசித்து மனித இனத்திற்கு எது நன்மை பயக்கின்றதோ, எது அதன் நிலையை விருத்தியடையச் செய்கின்றதோ, அதில் மட்டுமே அக்கறையுடன் இருந்திடுவீர்.

எவ்வாறு ஒரு மனித உடல் படைப்பின் பொழுது முழுமையாகவும், பூரணமாகவும் இருந்து, பிறகு, பல்வேறு காரணங்களினாலும் கடுமையான கோளாறுகளினாலும், நோய்களினாலும் பாதிக்கப்படுகின்றதோ, அதே போன்று, இவ்வுலகையும் அதற்குச் (மனித உடலுக்குச்) சமமாகக் கருதுங்கள்.

அது, ஒருநாள்கூட ஓய்வுப் பெற்றதில்லை.

மாறாகச் சொந்த ஆசைகளுக்கு முழு சுதந்திரம் அளித்து, கடுந்தவறிழைத்துள்ள அறிவற்ற மருத்துவர்களின் சிகிச்சைக்கு உட்பட்டதன் காரணமாக அதன் நோய் அதிகரித்து, மேலும் கடுமையாயிற்று.

ஓர் ஆற்றல்மிகு மருத்துவரின் பாதுகாப்பில் அவ்வுடலின் ஓர் அங்கம் குணப்படுத்தப் பட்ட போதிலும், மற்றவை முன்போலவே தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறுதான் சகலத்தையும் அறிந்த, சர்வ விவேகியான அவர் உங்களுக்கு அறிவிக்கின்றார்.

இந் நாளில், அது (உலகம்), பெருமையினால் மயக்கமுற்றிருக்கும் ஆள்பவர்களின் தயவை நாடிக் கிடக்கின்றதை யாம் கண்ணுறுகின்றோம்; தங்களுக்கு மிக்க அனுகூலமானதையே அவர்கள் தெளிவாக அறிந்துகொள்ளவில்லை என்றால், எங்ஙனம் அவர்கள் அத்துணை திகைப்பளிக்கக் கூடிய, கடினமான, ஒரு வெளிப்பாட்டினை அறிந்து கொள்ள முடியும்.

எப்பொழுதாவது அவர்களுள் ஒருவர் அதன் (உலகத்தின்) நிலையை விருத்தியடையச் செய்ய முயன்றிடுவாராயின், ஒப்புக் கொள்ளப்படுமோ இல்லையோ, அதற்கு அவரது நோக்கம் தனது சொந்த நலனாகவே இருந்து வந்துள்ளது; அவரது நோக்கத்தின் கண்ணியமின்மை, அவரது குணப்படுத்தும் ஆற்றலினைக் கட்டுப்படுத்தி விட்டுள்ளது.

உலக மக்கள் அனைவரும் ஒரே உலகச் சமயத்தில், ஒரே பொது மதத்தில் ஒன்றுபடுவது உலகத்தையே குணப்படுத்துவதற்கான உயரிய சிகிச்சையும் வலுமிக்கக் கருவியுமென பிரபுவாகிய அவர் விதித்துள்ளார்.

இதனை ஓர் ஆற்றல்மிகுந்த, எல்லாம்வல்ல, அருள்தூண்டல் பெற்ற மருத்துவர் ஒருவரையன்றி வேறெவராலும் சாதிக்க இயலாது.

மெய்யாக, இதுவே உண்மை; மற்றனைத்தும் தவறேயன்றி வேறில்லை.

CXXI

கூறுவீராக: என்னிடம் பொறாமை கொண்டு எனக்குத் தீங்கிழைக்க முற்படுவோரே! எனக்கெதிரான உங்களின் கடுங்கோபத்தின் சீற்றம் உங்களையே குழப்பமுறச் செய்யட்டும்! அதோ பாருங்கள், பேரொளி என்னும் பகல் நட்சத்திரம் எனது வெளிப்படுத்துதல் என்னும் தொடுவானத்திற்கு மேல் எழுந்து, அதன் பிரகாசத்தினால் மனித இனம் முழுவதையும் சூழ்ந்துள்ளது.

இருந்தும், எவ்வாறு நீங்கள் அதன் சுடரொளியிலிருந்து உங்களை மறைத்துக் கொண்டு, முழுக்கவனமின்மையில் மூழ்கி இருக்கின்றீர்கள் என்பதைப் பாருங்கள்.

உங்கள் மீது கருணை காட்டுங்கள்; உண்மையென நீங்களே ஒப்புக்கொண்டுள்ள அவரது உரிமைகோரலை மறுத்திடாதீர்; மறுப்போரிலும் சேர்ந்திடாதீர்.

ஒரே மெய்க் கடவுளின் நேர்மைத் தன்மை சாட்சியாக! இவ்வெளிப்பாட்டினை நிராகரித்தீர் என்றால், உலக நாடுகள் அனைத்துமே உங்களைப் பார்த்து இகழ்ந்து நகையாடும்; ஏளனஞ்செய்யும்; ஏனெனில் நீங்கள்தாம், அவர்களின் கண்முன்னால், உங்களின் சமயத்தின் மெய்ம்மையை நிரூபிக்கும் நோக்கத்துடன், மாட்சிமை பொருந்திய பாதுகாப்பாளரான, அதி சக்திவாய்ந்த, பேரொளி மயமான, சர்வமும் அறிந்த இறைவனின் அத்தாட்சிகளைத் தோற்றுவித்தீர்கள்.

இருந்தும், நிர்ப்பந்திக்கவல்ல பேரொளி என்னும் மாட்சிமையினால் அணிவிக்கப்பட்டு, அடுத்து வந்த வெளிப்பாடு, உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அக்கணமே, கவனமற்றோரின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டவர்களே, நீங்கள் அதனை, உங்களுக்குப் பின்னால் வீசியெறிந்து விட்டீர்கள்! என்னே! நீங்கள், சூரியனின் பிரகாசத்தினைத் தணித்து விடுவதற்கும், அதன் சுடரொளியினை மூடி மறைக்கச் செய்வதற்குமான ஆற்றலைக் கொண்டுள்ளதாக உங்கள் மனதில் நம்புகின்றீர்களா? எனது உயிரின் மீது ஆணை, அது முடியாது! விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலுமுள்ள அனைத்தையுமே உங்களுக்கு உதவியாக அழைத்திடினும், நீங்கள், உங்களின் நோக்கத்தை அடையவும் மாட்டீர்கள், அடையவும் முடியாது.

இறையச்சம் என்னும் வழியில் நடப்பீராக; உங்களின் செயல்களை எல்லாம் பயனற்றதாக்கிடாதீர்.

அவரது வார்த்தைகளுக்குச் செவிசாய்த்திடுங்கள்; அவரிடமிருந்து ஒரு திரையினால் மறைக்கப்பட்டோரில் சேர்ந்திடாதீர்.

கூறுவீராக: இறைவனே எனது சாட்சி! நான் எதையுமே எனக்காக விரும்பியது கிடையாது.

நான் விரும்பியதெல்லாம் இறைவனின் வெற்றியும் அவரது சமயத்தின் பெருஞ்சாதனையுமே.

எனக்கும் உங்களுக்குமிடையே அவரே ஒரு போதுமான சாட்சியாகும்.

நீங்கள் உங்கள் கண்களைத் தூய்மைப் படுத்துவீராயின், எனது செயல்கள் எவ்வாறு எனது சொற்களின் மெய்ம்மைக்குச் சாட்சியம் அளித்திடுகின்றன என்பதையும், எனது வார்த்தைகளே எனது செயல்களுக்கு வழிகாட்டி என்பதையும் எளிதில் உணர்ந்து கொள்வீர்கள்.

உங்களின் கண்கள் குருடாக்கப் பட்டுள்ளன! இறைவனது சக்தி, அவரது இறைமை, ஆகியவற்றின் மேன்மையை நீங்கள் உணரவில்லையா? அவரது மாட்சிமையையும் மகிமையையும் நீங்கள் பார்க்க முடிகின்றதா? கெடுநோக்கும் பொறாமையும் கொண்டோரின் கூட்டத்தினரே, நீங்கள் கடுந்துயரத்திற்கு ஆளாவீர்கள்! எனது வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பீராக; ஒரு கணநேரமேனும் தாமதிக்காதீர்.

இவ்வாறுதான், கருணையே உருவான அவ்வழகர் உங்களுக்குக் கட்டளையிடுகின்றார்; அதனால், ஒருவேளை, நீங்கள் கொண்டுள்ளவற்றின்பால் பற்றறுத்துக் கொண்டு, படைப்பு முழுதும் அவரது வெளிப்பாட்டின் நிழலின்கீழ் பாதுகாப்பாய் உள்ளதனைக் கண்டிடக்கூடிய அதிவுயரிய நிலையை நோக்கி மேலெழக் கூடும்.

கூறுவீராக: நீங்கள் ஓடி ஒளிவதற்கு இடர்க்காப்பிடமோ புகலிடமோ எதுவுமே, உங்களுக்குக் கிடையாது; இந் நாளில், அவரது வெளிப்பாட்டின் நிழலை நாடாதிருக்கும் வரை, இறைவனின் கடுங்கோபத்திலிருந்தும் அவரது தீவிரச் சக்தியிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கவோ காப்பாற்றவோ எவருமே கிடையாது.

உண்மையாகவே, இதுவே, இவ்விளைஞனின் உருவில் உங்கள்பால் புலனாக்கப் பட்டுள்ள வெளிப்பாடாகும்.

இத்துணை பிரகாசமான, மதிப்புமிக்க, வியத்தகு, காட்சிக்காக இறைவன் மகிமைப்படுத்தப் படுவாராக.

என்னைத் தவிர மற்றதனைத்திலிருந்தும் உங்களைப் பற்றறுத்துக் கொண்டு, உங்கள் முகங்களை எனது வதனத்தின்பால் திருப்புங்கள்; ஏனெனில், இதுவே நீங்கள் கொண்டிருப்பவற்றை விட நன்மையானதாகும்.

உண்மையே உரைத்திடும் இறைவனின் நாவே எனது வார்த்தைகளின் மெய்ம்மைக்குச் சாட்சியம் அளிக்கின்றது; அது சகலத்தையும் உள்ளடக்குகின்றது; புரிந்து கொண்டிருக்கின்றது.

கூறுவீராக: அவரது சமயத்தின்பால் உங்களின் விசுவாசம் அவருக்கு நன்மை பயக்கக்கூடியதென்றோ, உங்களின் மறுப்பு அவருக்கு எவ்வித இழப்பையும் உண்டுபண்ணும் என்றோ எண்ணுகின்றீரா? அனைத்தையும் அடக்கவல்ல, எய்திட இயலாத, அதிவுயரிய என் மீதே ஆணையாக, இல்லை! நாமங்கள் என்னும் திரைகளைக் கிழித்து அவற்றின் இராஜ்யத்தைப் பிளவுறச் செய்வீராக.

எனது அழகின்மீது ஆணை! அவர் வந்துவிட்டார்; எவரது கட்டளையின் மூலம் ஆரம்பமே இல்லா ஆரம்பம் முதல் ஒவ்வொரு நாமமும் படைக்கப்பட்டு வந்துள்ளதோ, யார், தான் விரும்பியவாறே அவற்றைத் தொடர்ந்து படைத்து வருவாரோ, அவர், நாமங்களுக்கெல்லாம் மன்னராகிய அவர், இப்பொழுது வந்து விட்டார்.

மெய்யாகவே, அவரே, சர்வ சக்தி வாய்ந்தவர், சர்வ விவேகி.

கவனமாய் இருங்கள்; இல்லையெனில், தெய்வீக வழிகாட்டுதல் என்னும் ஆடையினை அகற்றிக் கொண்டிடப் போகின்றீர்.

இவ் விண்ணுலக இளைஞர், உங்களின் தலைக்குமேல் உயர்த்தியுள்ள கிண்ணத்திலிருந்து நிரம்பப் பருகிடுவீராக.

உங்கள் மீதே நீங்கள் காட்டிடும் கருணையைவிட அதிகமான கருணைகாட்டிடும் அவர், உங்களிடமிருந்து எவ்வித கைம்மாறையோ, நன்றியறிதலையோ கோராத அவர், இடுகின்ற கட்டளை அவ்வாறானதுதான்.

எவரது மெய்ம்மையின் சக்தியின் மூலம், அவரை உங்கள்பால் அனுப்பி வைத்தும், அவரைமட்டும் விசேஷமாகத் தேர்ந்தெடுத்தும், படைப்பினம் முழுவதற்கும் தனது சொந்த அத்தாட்சியாகப் பிரகடனஞ் செய்திட்டாரோ, அவரிடமிருந்து வந்த பரிசுதான் இது.

தனது அடையாளங்களை எல்லாம் வெளிப்படுத்திட அவருக்கு ஆற்றல் அளித்திட்டவரும் அவரே.

மீண்டும் கூர்ந்து கவனியுங்கள்; அதனால் நீங்கள், நாள்களில் புராதனமானவரின் நா உங்களுக்கு எதன்பால் அழைப்பாணை விடுத்துள்ளதோ அதனைக் காணக் கூடும்; அதனால், ஒருவேளை, நீங்கள் உண்மையை அறிந்துள்ளோரில் சேர்க்கப்படக்கூடும்.

வெளிப்பாடெனும் மேகங்களில், தெளிவான, விழுமிய மாட்சிமை அளிக்கப்பட்டும், தனது வலப்பக்கத்தில் இறைவனின் இராஜ்யத்தையும் தனது இடப்பக்கத்தில் அவரது நித்திய அரசையும் பெற்றவராகவும் வரும் ஒருவர், எல்லாம் வல்ல, நிர்ப்பந்திக்கவல்ல சர்வ சக்திவாய்ந்த இறைவனின் சைனியங்கள் முன்செல்ல, அதன் தனிச்சிறப்பு மனிதர்களிடையே கற்றோர், விவேகிகள் ஆகியோரின் மனங்களே ஆழங்காண சக்தியற்றுமிருக்கும் வாசகங்களைத் தொடர்ச்சியாக உச்சரித்தபடியே வரும் ஒருவர், இறைவனின் செய்தியைத் தவிர வேறெதனையும் ஏந்தி வருபவராக இருக்க முடியுமென, முதலாம் ஆதாம் உட்பட, உங்களின் மூதாதையர்களோ, அவர்களுக்கு முன்பிருந்த தலைமுறையினரோ எடுத்துரைத்ததை நீங்கள் கேட்டதுண்டா? நீங்கள் நேர்மையானவர்கள் என்றும் உயரிய எண்ணங் கொண்டவர்கள் எனக் கூறிக் கொள்வோராயின், உய்த்துணர்ந்து, உண்மையை, முழு உண்மையை உரைப்பீராக.

கூறுவீராக: யாம் வெளிப்படுத்தியுள்ள வாசகங்கள், இதற்கு முன் பாப் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாசகங்களின் எண்ணிக்கைக்குச் சமமானவை.

இறைவனின் ஆவி மொழிந்துள்ள வார்த்தைகளில் சந்தேகங் கொள்ளும் ஒருவர் எமது முன்னிலை என்னும் அரசவையை நாடி, தெய்வீகமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள எமது வாசகங்களைச் செவிமடுத்து, எமது உரிமைக் கோரலுக்கு, அவர், தெளிவாக நேரில் கண்டதைக் குறித்துச் சாட்சி பகரட்டும்.

கூறுவீராக: எல்லாம் வல்லவரின் நேர்மைத் தன்மை சாட்சியாக! இறைவனின் சலுகையின் அளவு முழுமையாக நிரப்பப்பட்டு விட்டது; அவரது திருவாக்கு முழுநிறைவுச் செய்யப்பட்டுள்ளது; அவரது வதனத்தின் ஒளி வெளிப்படுத்தப்பட்டுவிட்டது; அவரது மாட்சிமை உலகம் முழுவதையும் சூழ்ந்துள்ளது; அவரது வெளிப்பாட்டின் பெருஞ் சிறப்பு தெளிவாக்கப்பட்டுள்ளது; அவரது அருட்கொடைகள் மனித இனம் முழுவதன் மீதும் பொழியப்பட்டுள்ளன.

CXXII

மனிதனே அதிவுயரிய தாயத்து.

இருப்பினும், தகுந்த கல்வியின்மை, அவனைத், தான் இயல்பாகக் கொண்டுள்ளவற்றை இழக்கச் செய்துள்ளது.

இறைவனின் திருவாயினின்று வெளிவந்திட்ட ஒரே சொல்லின் மூலம் அவன் உருவாக்கப்பட்டான்; மேலும் ஒரு சொல்லின் மூலமாக, அவன், கல்வியின் தோற்றிடத்தை அறிந்துகொள்ள வழிகாட்டப்பட்டான்; மேலும் ஒரு சொல்லின் மூலமாக அவனது ஸ்தானமும் தெய்வநிர்ணயமும் பாதுகாக்கப்பட்டுள்ளன.

மேன்மைமிகு திருவுருவானவர் திருவாய் மலர்கின்றார்: மனிதனை விலை மதிப்பிடவியலாத இரத்தினங்களைக் கொண்ட சுரங்கமாகக் கருதுங்கள்.

கல்வி ஒன்றே, அதனைத் தன் பொக்கிஷங்களை வெளிப்படுத்தச் செய்து, மனிதனை அதிலிருந்து பயன்பெற உதவிடும்.

எந்த மனிதனாவது, இறைவனின் புனித விருப்பம் என்னும் சுவர்க்கத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டவை வெளிப்படுத்தியுள்ளதனைத் தியானிப்பானாயின், அவற்றின் நோக்கம், மனிதர் அனைவரும் ஒரே ஆன்மாவாகக் கருதப்பட வேண்டும் என்பதை, அவன், தடையின்றி அறிந்து கொள்வான்; அதனால், “இராஜ்யம் இறைவனுடையதே” என்னும் வார்த்தைகளைக் கொண்ட முத்திரை ஒவ்வோர் உள்ளத்தின் மீதும் பொறிக்கப்படக்கூடும்; தெய்வீக வள்ளன்மை என்னும் ஒளி, அருள், கருணை ஆகியவை மனித இனத்தைச் சூழக் கூடும்.

ஒரே மெய்க்கடவுளானவர், அவரின் மகிமை மேன்மைப்படுத்தப்படுமாக, தனக்கென எதையுமே விரும்பியது கிடையாது.

மனித இனத்தின் விசுவாசம் அவருக்கு எந்தப் பயனையும் விளைவிப்பதில்லை; அவனுடைய முறைகேடான நடத்தையும் அவருக்குத் தீங்கு விளைவித்திடாது.

திருச்சொற்கள் என்னும் இராஜ்யத்தின் பறவை தொடர்ந்து இவ்வழைப்பு விடுக்கின்றது: “எல்லாப் பொருள்களையும் உங்களுக்காகவே விதித்துள்ளேன்: யாம் உங்களைப் படைத்ததும் உங்கள் பொருட்டே” இக்காலத்தின் கற்றோரும், உலகியல் வாழ்க்கையில் உள்ளோரும், மனித இனத்தைச் சகோதரத்துவம், பாசம் முதலியவற்றின் நறுமணத்தினை நுகர அனுமதிப்பராயின், உணருந் திறம் படைத்த ஒவ்வோர் உள்ளமும் உண்மைச் சுதந்திரம் என்பதன் பொருளினைப் புரிந்து கொள்வதோடு, குழப்பமற்ற அமைதி, முழுமையான சாந்தநிலை ஆகியவற்றின் இரகசியத்தை அறிந்துகொள்ளக் கூடும்.

உலகம் இந் நிலையையடைந்து அதன் பிரகாசத்தினால் ஒளிபெறக் கூடுமாயின், அது குறித்து, உண்மையில் இவ்வாறு கூறப்படும்: “அதனில் நீங்கள் பள்ளத்தாக்குகளையோ உயர்ந்த மலைகளையோ காண முடியாது.

CXXIII

உங்களுக்கு முன் சென்ற தலைமுறைகள் -- அவை எங்கே ஓடி மறைந்தன? எவரது வாழ்க்கையில், நாட்டின் அதி அழகுமிக்கோரும் கவர்ச்சிமிக்கோரும் எவரைச் சுற்றி வட்டமிட்டனரோ, - அவர்கள் இப்பொழுது எங்குப் போயினர்? மனிதர்களே, அவர்களின் உதாரணத்தில் இருந்து பயன் பெறுங்கள்; வழிதவறிப் போனவர்களில் சேர்ந்திடாதீர்.

இன்னும் சிறிது காலத்தில், மற்றவர்கள், நீங்கள் கொண்டுள்ளவற்றில் கை வைத்து, உங்கள் வாசஸ்தலங்களில் நுழைந்திடுவர்.

எனது திருச்சொற்களுக்குச் செவிசாயுங்கள்; அறிவிலிகளின் எண்ணிக்கையில் சேர்ந்திடாதீர்.

யாருமே மீறவும் பறித்துக் கொள்ளவும் முடியாததனையே தனக்கென தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவருக்கும் தலையாய கடமையாகின்றது.

நீங்கள் உணரக் கூடுமாயின், இறைவனின் அன்பு அத்தகைய ஒன்றாகும்; இதற்கு எல்லாம் வல்லவரே எனது சாட்சி.

உங்களுக்கென, மழையும் வெள்ளமும் அழிக்கவியலாத வீடுகளைக் கட்டிக் கொள்ளுங்கள்.

அவை இவ்வாழ்வின் மாற்றங்கள், தற்செயல் நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கக்கூடும்.

இதுவே தவறிழைக்கப்பட்டும் கைவிடப்பட்டும் உள்ளவரின் கட்டளை.

CXXIV

ஜீவனுள்ள, என்றும் நிலையான, இறைவனின் ஒருமைத் தன்மை எந்தளவு வியக்கத் தக்கது; அவ்வொருமைத் தன்மை கட்டுப்பாடுகளுக்கெல்லாம் மேலாக அதி உயர்வில் உள்ளது; அது படைப்புப்பொருள்கள் அனைத்தின் புரியுந்திறனையும் கடந்தது! எக்காலத்தும் அடையவியலா புனிதத் தன்மை, பேரொளி ஆகிய உறைவிடத்தில் அவர் வாசஞ் செய்து வந்திருக்கின்றார்; தொடர்ந்தும், தன்னுடைய சுயேச்சையான மாட்சிமை, மேதகைமை ஆகியவையின் உச்சத்திலுள்ள அரியணையின் மீது அமர்த்தப்பட்டிருப்பார்.

எத்துணை மேன்மையானது அவரது மாசுபடுத்த வியலாத சாராம்சம்; படைப்புப் பொருள்கள் அனைத்தின் அறிவிலிருந்து எந்தளவு பூரண சுதந்திரத்தைக் கொண்டுள்ளது; அது, விண்ணுலக, மண்ணுலக வாசிகள் அனைவரின் போற்றுதலுக்கு மேல் எத்துணை உயர்வில் உள்ளது.

சிறந்த தோற்றிடத்திலிருந்தும், அவரது தயை, வள்ளன்மை ஆகிய சாராம்சத்திலிருந்தும், அவர், படைப்புப் பொருள் ஒவ்வொன்றுக்கும் தனது அறிவின் ஓர் அடையாளத்தை நம்பி ஒப்படைத்துள்ளார்; அதனால், அவரது படைப்பினங்களில் ஒவ்வொன்றுமே, அதனதன் திறமை, தரம் ஆகியவற்றுக்கேற்ப, இவ்வறிவை வெளிப்படுத்துவதற்கானப் பங்கை இழக்காமல் இருக்கக் கூடும்.

இவ்வடையாளமே இப் படைப்புலகில் அவரது அழகின் பிரதிபலிப்பாகும்.

நேர்த்திமிகுந்ததும் விழுமியதுமான இக் கண்ணாடியினைச் செம்மைப்படுத்த எடுக்கப்படும் முயற்சி அதிகரிக்க அதிகரிக்க, இன்னும் தெளிவாக அது இறைவனின் நாமங்களின் பேரொளியையும் அவரது இயல்புகளையும் பிரதிபலிக்கச் செய்து, அவரது அடையாளங்கள், அறிவு ஆகியவையின் அதிசயங்களை வெளிப்படுத்தும்.

அது, (பிரிதிபலிக்கும் அவ்வாற்றல் அந்தளவு உயர்வானது) படைப்புப் பொருள் ஒவ்வொன்றையும் அதனதன் உள்ளார்ந்த ஆற்றல்களையும் முன்விதிக்கப்பட்டுள்ள ஸ்தானத்தையும் வெளிப்படுத்த உதவிடும்; அதன் ஆற்றலையும் வரம்பெல்லையையும் அறிந்து கொண்டு, “மெய்யாகவே, அவரே கடவுள், அவரைத் தவிர கடவுள் வேறெவரும் இலர்”.

என்னும் உண்மைக்குச் சாட்சியம் அளித்திடும்.

ஒவ்வொரு மனிதனும், நன்கு உணர்ந்து செய்யும் முயற்சிகளின் விளைவாகவும், தனது ஆன்மீக இயல்வலிமைகளைக் கொண்டு செய்யும் கடுமுயற்சியின் பயனாகவும், இக்கண்ணாடி, அதன் உலகியற் கறைகளின் கசடுகளிலிருந்து மாசகற்றப் பட்டும், சாத்தானுக்குரிய வீண் கற்பனைகளிலிருந்தும் தூய்மைப் படுத்தப்படுகின்றது.

அதனால் அவன் நித்திய தெய்வத் தன்மை என்னும் பசும்புல் நிலத்தின்பால் ஈர்க்கப்பட்டு நிரந்தரமான தோழமை என்னும் அரசவைகளை அடைய முடிகின்றது.

இருப்பினும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நேரம் குறிக்கப்பட்டுள்ளது என்ற கொள்கைக்கும், ஒவ்வொரு கனிக்கும் ஒரு பருவகாலம் விதிக்கப்பட்டுள்ளது என்பதற்கும் இணங்கவே அத்தகைய வள்ளன்மையின் உள்ளார்ந்த ஆற்றல் விடுவிக்கப்படும்; அத்தகைய கொடையின் அதி வுயரிய மகிமையும் இறைவனின் நாள்களில்தாம் வெளிப்படுத்தப்படும்.

ஒவ்வொரு தினமுமே இறைவனின் முன்விதிக்கப்பட்ட வியத்தகு அருளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த போதிலும், இறைவனின் திரு அவதாரத்துடன் நேரடியாகத் தொடர்புக் கொண்டுள்ள நாள்கள் அபூர்வமான தனித்தன்மை கொண்டுள்ளதோடு, எந்த ஒரு மனமுமே புரிந்துகொள்ளவே முடியாத ஸ்தானத்தைப் பெற்றுள்ளது.

அத்தகையதுதான் அவற்றுள் புகுத்தப்பட்டுள்ள தனிச் சிறப்பு; அதனால், நித்திய உவகைமிக்க அந்நாள்களில், விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும் வாசஞ்செய்வோர் அனைவரின் உள்ளங்களும், என்றும் மங்காத அப்பகல் நட்சத்திரத்துடன் நேருக்குநேர் கொண்டுவரப்பட்டு, அவரது விருப்பத்துடன் ஒத்திசையுமாயின், அவ்வொவ்வொன்றும் உலகப் பொருள்கள் அனைத்திற்கும் மேலாக உயர்த்தப்படுவதைக் கண்டிடும்; அவரது ஒளியினால் பிரகாசமுமடைந்து, அவரது அருளின்மூலம் புனிதப் படுத்தவும்படும்.

எந்த ஆசீர்வாதமுமே, அது எத்துணை உயர்வானதாயினும், விஞ்சிடவியலாத இவ்வருள், மகிழ்ச்சியுடன் வரவேற்பளிக்கப் படுமாக; படைப்பின் கண்ணே கண்டிராத அத்தகைய அன்புக் கருணைக்கே கீர்த்தியெல்லாம் சென்றடையுமாக! அவர்கள் அவரைக் குறித்துரைக்கும் அடைமொழிகளோ, விவரிப்பதோ அவையனைத்தையும்விட உயர்வான நிலையில் இருக்கின்றார் அவர்! இக் காரணத்தினால், அந் நாள்களில், எந்த மனிதனுமே தன் அண்டையரை நாடத் தேவையிராது.

தெய்வீகமாக நியமிக்கப்பட்ட அந்நாளில், அவரது புனித அரசவையைத் தேடி அடைந்திட்டவர்களில் பெரும்பாலோர் அந்தளவு அறிவையும் விவேகத்தையும் வெளிப்படுத்தி உள்ளதனால், அதிலிருந்து ஒரே ஒரு துளியைக்கூட, இப்புனித ஆன்மாக்களைத் தவிர வேறெவருமே, எத்தனைக் காலம்தான் தாங்கள் போதித்தோ, கற்றோ இருந்தபோதிலும், அதனைப் புரிந்துகொண்டதோ, உய்த்துணர்ந்து கொண்டதோ கிடையாது.

இவ்வாற்றலின் காரணமாகத்தான், மெய்ம்மை என்னும் பகல் நட்சத்திரத்தின் அவதார காலத்தில், இறைவனின் நேசர்கள், மானிடக் கல்விக்கெல்லாம் மேலாக மேம்படவும், அதிலிருந்து சுதந்திரம் பெறவும் செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்று, அவர்களின் உள்ளங்களிலிருந்தும், அவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்கள் என்னும் ஊற்றுகளிலிருந்தும் மனித அறிவு, விவேகம் என்னும் அதி உள்ளார்ந்த சாராம்சம் தொடர்ச்சியாகப் பீறிட்டு வெளிவந்துள்ளது.

CXXV

எனது சகோதரனே, உண்மையாகத் தேடும் ஒருவர், தொன்மையான நாள்களின் அறிவின்பால் அழைத்துச் செல்லும் தேடுதல் என்னும் பாதையில் அடியெடுத்து வைக்க உறுதி கொள்ளும் பொழுது, மற்றெல்லாவற்றிற்கும் முன், அவர், இறைவனின் உள்ளார்ந்த மர்மங்களின் வெளிப்படுத்துதலுக்கு இருப்பிடமாகிய தனது இதயத்தைக் கற்றக் கல்வி என்னும் புழுதியிலிருந்தும் சாத்தானின் கற்பனை என்னும் உருவங்களின் நிலைக்கலன்களாக விளங்கிடுபவற்றிலிருந்தும் அவசியம் துப்புரவாக்கித் தூய்மைப் படுத்த வேண்டும்.

அன்புக்குரியவரின் நிலையான இருப்பிடமாயுள்ள தமது நெஞ்சத்தினை மாசு ஒவ்வொன்றிலிருந்தும் துப்புரவாக்கி, தமது ஆன்மாவை நீரும், களிமண் சார்ந்த அனைத்திலிருந்தும், மாயையிலிருந்தும், நிலையற்ற பற்றுக்களிலிருந்தும், புனிதப்படுத்த வேண்டும்.

அதனில் விருப்பும், வெறுப்பும் கிஞ்சிற்றும் எஞ்சியிராத அளவு தன் உள்ளத்தினைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இல்லயெனில், விருப்பம், கண்மூடித்தனமாகத் தவறிழைத்திடவோ, வெறுப்பு அவரை உண்மையைவிட்டு விலகிச் சென்றிடவோ செய்திடக்கூடும்.

இன்றும், நீங்கள் காண்பது போலவே, பெரும்பான்மை மனிதர்கள் இவ்வித விருப்பு, வெறுப்பு ஆகியவையின் காரணமாக, நித்திய வதனத்தை இழந்து, தெய்வீக மர்மங்கள் என்னும் திருவுருவங்களிலிருந்து வெகுதூரத்திற்கப்பால் வழிதவறிச் சென்றோராகி, வழிகாட்டுவாரின்றி, மறதி, தவறு என்னும் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தவாறு இருக்கின்றனர்.

அத் தேடுபவர், எல்லாவேளைகளிலும் இறைவனிடத்தில் நம்பிக்கை வைத்து, உலக மக்களைத் துறந்து, புழுதி என்னும் உலகிலிருந்து தன்னைப் பற்றறுத்துக் கொண்டு, பிரபுக்களுக்கெல்லாம் பிரபுவாகிய அவரை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும்.

எவருக்கு மேலாகவும் அவர் தன்னை உயர்த்திக்கொள்ள என்றுமே முயற்சி செய்யலாகாது.

தனது இதயமெனும் நிருபத்திலிருந்து செருக்கு, வீண் பெருமை ஆகியவற்றின் சுவடுகள் அனைத்தையும் அவர் முற்றாகத் துடைத்தொழிக்க வேண்டும்; பொறுமை, சகிப்பு ஆகியவற்றை இறுகப்பற்றிக்கொண்டு மௌனமாய் இருப்பதோடு, வீண் பேச்சுகளிலிருந்தும் விலகியிருக்க வேண்டும்.

ஏனெனில், மனிதனின் நா உள்ளூர கனன்று எரியும் நெருப்பாகும்; அளவற்ற பேச்சோ ஒரு கொடும் விஷமாகும்.

தீ உடலை எரிக்கும்; ஆனால், நாவின் நெருப்போ, உள்ளம், ஆன்மா ஆகிய இரண்டையுமே அழித்திடும்.

முன்னதன் ஆற்றல் சிறிது காலத்திற்கேயாகும்.

ஆனால், பின்னதன் விளைவுகளோ ஒரு நூற்றாண்டு நீடிக்கும்.

மேலும், அத் தேடுபவர், புறங்கூறுதலைக் கடுந் தவறாகக் கருதி, அதன் தாக்கத்திற்கு உட்படாது ஒதுங்கிட வேண்டும்.

ஏனெனில், புறங்கூறுதல் உள்ளத்தின் ஒளியை அணைத்து ஆன்மாவின் ஜீவனையும் அழித்திடுகின்றது.

குறைவில் மனநிறைவுப்பெற்று, மிதமிஞ்சிய ஆசைகள் அனைத்தினின்றும் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும்.

உலகைத் துறந்தோரின் தோழமையைப் பொக்கிஷமாகப் போற்றி, அவர், தற்பெருமை பேசித்திரிவோர், உலக இன்பங்கள் மீது பாசம்வைத்தோர் ஆகியோரைத் தவிர்ப்பதை ஓர் அரிய நன்மையாகக் கருத வேண்டும்.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவர் இறைவனோடு தொடர்புக் கொள்ள வேண்டும்; தனது அன்புக்குரியவரைத் தேடும் முயற்சியில் அவர் சிறிதும் மனந் தளரலாகாது.

ஒழுங்கற்ற எண்ணம் ஒவ்வொன்றையும், அவர்பாலுள்ள அன்பின் உச்சரிப்பு என்னும் ஒளிப்பிழம்பினைக் கொண்டு எரித்துவிட்டு, அவரைத் தவிர மற்றதனைத்தையும் மின்னல் வேகத்தில் கடந்து சென்றிட வேண்டும்.

அவர் பறிகொடுத்திட்டோருக்கு உதவிக்கரம் நீட்டி, வறியோருக்கு மறுக்காது என்றும் ஆதரவு நல்க வேண்டும்.

அவர் பிராணிகளுக்கே அன்பு காட்ட வேண்டும் என்றால், பேசுந்திறன் வழங்கப்பெற்ற தன் சக மனிதரிடம் நடப்பது எத்தகையதாய் இருத்தல் வேண்டும்.

தனது அன்புக்குரியவருக்காக அவர் தன் உயிரையே அர்ப்பணிக்க தயங்கலாகாது; அன்றியும், மனிதரின் கண்டனம் தன்னை உண்மையிலிருந்து விலகிச் சென்றிட அனுமதிக்கலாகாது.

தனக்காகத் தான் விரும்பாதததை அவர் மற்றவர்களுக்காக விரும்பலாகாது; அன்றியும், நிறைவேற்ற முடியாததனை வாக்களிக்கவுங் கூடாது.

அவர், தீமை இழைப்போரின் தோழமையை முழுமனதாகத் தவிர்த்து, அவர்களின் பாவமன்னிப்புக்காகப் பிரார்த்திக்கவும் வேண்டும்.

அவர் பாவியை மன்னிக்க வேண்டும்; என்றுமே அவனது தாழ்ந்த நிலையை இழித்துரைக்கலாகாது; ஏனெனில், தனது சொந்த முடிவு எவ்வாறிருக்கும் என்று யாருக்குமே தெரியாது.

எத்தனை முறை, பாவி, தான் சாகுந் தறுவாயில், நம்பிக்கையின் சாரத்தைப் பெற்று, நித்திய ஜீவநீரினைப் பருகி, விண்ணவர் கூட்டத்தின் முன்னிலைக்குச் சிறகடித்துப் பறந்திருக்கின்றான்.

அதே வேளையில், எத்தனை முறை பக்திமிக்க ஒரு நம்பிக்கையாளன் தனதான்மா பிரியும் வேளையில் நரகத் தீயில் விழுமளவு மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கின்றான்.

நம்பிக்கையூட்டக் கூடிய, கருத்து நிறைந்த இத் திருச்சொற்களை வெளிப்படுத்துவதன் நோக்கம், உண்மையைத் தேடுபவர், இறைவனைத் தவிர மற்றனைத்தையும் நிலையற்றவையாகக் கருதிடவும், சகல போற்றுதலுக்கும் உரிய அவரைத் தவிர மற்ற அனைத்தையும் முற்றிலும் வெறுமை எனக் கருதிடவும் வேண்டும் என்பதுதான்.

இவை மேன்மைமிக்கோனின் இயல்புகளுள் சில; அவையே ஆன்மீக மனம் படைத்தோரின் தரக்குறியீடாகும்.

ஆக்கமுறையான அறிவின் பாதையில் நடப்போருக்கான தேவைகள் சம்பந்தமாக முன்பே குறிப்பிடப்பட்டுவிட்டன.

பற்றற்ற வழிப்போக்கரும், உண்மையாகத் தேடுபவருமான அவர் அத்தியாவசியமான இந்நிபந்தனைகளை நிறைவேற்றிய பிறகேதான், அவர், உண்மையாகத் தேடுபவர் என அழைக்கப்பட முடியும்.

“எவரொருவர் எமக்காக முயற்சிகளை மேற்கொள்கின்றாரோ,” என்னும் வசனம் குறிப்பிடுகின்ற நிபந்தனைகளை எப்போது அவர் நிறைவேற்றுகின்றாரோ அப்போதெல்லாம், “உறுதியாகவே அவரை யாம் எமது வழியில் நடத்திடுவோம்,” என்னும் சொற்கள் வழங்கிடும் அருட்பாலிப்புகளால் இன்புறுவார்.

தேடுதல், பேரார்வமிகு முயற்சி, ஏக்கமிகு வேட்கை, உணர்ச்சிமிகு ஆழ்ந்த பக்தி, முனைப்புமிகு அன்பு, பேருவகை, ஆனந்தப் பரவசம் என்னுந்தீபம் உண்மையைத் தேடுபவரின் உள்ளத்தில் ஏற்றப்பட்டு, இறைவனின் அன்பு என்னும் தென்றல் அவரது ஆன்மாவின் மீது வீசினாலன்றி, தவறு என்னும் இருள் அகற்றப்பட மாட்டாது; ஐயப்பாடுகள், அவநம்பிக்கைகள் என்னும் பனிமூடங்கள் விலக்கப்படமாட்டா; அறிவு, உறுதிப்பாடு ஆகியவற்றின் ஒளிகள் அவரை ஆட்கொள்ளவும் இயலாது.

அந் நேரத்தில் மெய்யறிவுமிகு முன்னறிவிப்பாளர் ஆவியின் நற்செய்திகளைத் தாங்கியவராக, இறைவனின் திருநகரத்திலிருந்து ஒளிமிக்கக் காலையைப்போன்று பிரகாசித்து, அறிவெனும் எக்காள முழக்கத்தின் வாயிலாக, கவனமின்மை என்னும் உறக்கத்திலிருந்து இதயத்தையும், ஆன்மாவையும், ஆவியையும், தட்டி எழுப்பிடுவார்.

அதன் பின்னர், புனிதமானதும், நித்தியமானதுமான ஆவி தேடுபவர்பால் வழங்கிடும் அருட்கொடைகளும், பெருங்கருணையும் அத்தகையதொரு புதிதான வாழ்வினைத் தந்திடுமாதலால் ஒரு புதிய கண்ணும், ஒரு புதிய செவியும், ஒரு புதிய உள்ளமும், ஒரு புதிய மனமும் தனக்கு அருளப்பட்டுள்ளதை அவர் உணர்ந்திடுவார்.

பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள தெளிவான அடையாளங்கள் குறித்து ஆழ்ந்து சிந்தித்து, ஆன்மாவினுள் மறைந்துள்ள மர்மங்களை அவர் ஊடுருவுவார்.

இறைவனின் கண்கொண்டு பார்த்து, நிச்சயமான உறுதிப்பாட்டின் ஸ்தானங்களின்பால் தன்னை வழிநடத்திச் செல்லவல்ல கதவினை ஒவ்வோர் அணுவினுள்ளும் கண்டுணர்வார்.

சகல பொருள்களிலும் அவர் தெய்வீக வெளிப்பாட்டின் மர்மங்களையும், நித்தியமான ஓர் அவதரிப்பின் சான்றுகளையும் காண்பார்.

இறைவன் மீது ஆணை! அவர், வழிகாட்டுதல் என்னும் பாதையில் நடந்து, மகிமைமிக்கதும், அதி உயரியதுமான இந்த ஸ்தானத்தை அடையும் பொருட்டு நேர்மை என்னும் உச்சத்தை அடைய முற்படுவாராயின், ஆயிரக்கணக்கான மைல்கள் தூரத்திலிருந்துங் கூட அவர் இறைவனின் நறுமணத்தினை நுகர்ந்து, அனைத்துப் பொருள்களின் பகலூற்றுக்கும் மேலாக தெய்வீக நல்வழிகாட்டலின் பிரகாசமான காலை உதயமாவதைக் காண்பார்.

ஒவ்வொரு பொருளும், அது எத்துணைச் சிறியதாயினும், தேடுதலின் இலக்கான தனது அன்புக்குரியவரின்பால் தன்னை அழைத்துச் சென்றிடும் ஒரு வெளிப்பாடாகவே விளங்கும்.

அத் தேடுபவரின் உய்த்துணரல் அந்தளவு பெரிதாக இருக்குமாதலின், மெய்ம்மைக்கும் பொய்ம்மைக்குமுள்ள வேறுபாட்டினைச் சூரியனை நிழலிலிருந்து பிரித்துப் பார்ப்பதுபோல் காண்பார்.

கிழக்குத் திசையில், அதி தொலைவில், இறைவனின் நறுமணம் வீசுமாயின், அவர் மேற்குத் திசையின் அதிதூரத்து எல்லைகளில் இருந்தபோதும், அவற்றின் நறுமணத்தை நிச்சயமாக உணர்ந்திடுவார்.

அதே போன்று, அவர், இறைவனின் அடையாளங்கள் அனைத்தையும் -- அவரது அற்புத வெளியிடுகைகள், அவரது பெரும் வேலைப்பாடுகள், அவரது வலிமைமிகு செயல்கள் ஆகியவற்றை மனிதர்களின் செயல்களிலிருந்தும், அவர்களின் சொற்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிலிருந்தும், ஒரு நகைவியாபாரி, வைரம், கல் இவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டைத் தெரிந்திருப்பது போன்றும், இளவேனிற் காலத்திலிருந்து வசந்தத்தையும், வெப்பத்திலிருந்து குளிரையும் அறிந்திருப்பது போன்றும் தெளிவாக வேறுபடுத்திக் காண்பார்.

மனிதனின் ஆன்மீகத்திற்கான நுழைவழி, இம்மைக்குரியதும் தடுக்கவியலாததுமான பற்றுக்களிலிருந்தும் தூய்மைப்படுத்தப்படுமாயின், அது அளவிடற்கரிய தூரங்களுக்கப்பால் இருக்கும் நேசரின் மூச்சினைத் தவறாது உணர்ந்து, அதன் நறுமணத்தால் வழிநடத்தப்பட்டு, மெய்யுறுதி என்னும் நகரையடைந்து அதனுள் பிரவேசித்திடும்.

அவர், அதனில், இறைவனின் புராதன விவேகத்தின் அற்புதங்களை உணர்ந்து, அம் மாநகரில் செழித்து வளர்ந்திடும் திருவிருட்சத்தின் இலைகளின் சலசலப்பில் மறைக்கப்பட்டுள்ள போதனைகள் அனைத்தையும் உணர்வார்.

அதன் மகிமை என்னும் தூசியிலிருந்து போற்றுதல் என்னும் கீதங்கள் பிரபுக்கெல்லாம் பிரபுவாகியவரின்பால் உயர்வதைத் தன் உட்செவி, புறச்செவி ஆகியவற்றின்வழி செவிமடுத்து, தனது அகக்கண் துணைக்கொண்டு “மீண்டும் வருதல்,” மற்றும் “மறுமலர்ச்சி” ஆகியவையின் மர்மங்களைக் கண்டுணர்வார்.

நாமங்கள், நற்பண்புகள் ஆகியவற்றின் மன்னரானவர் அம் மாநகருக்கு ஈந்துள்ள அடையாளங்கள், சின்னங்கள், வெளிப்பாடுகள், பிரகாசங்கள் ஆகியன எந்தளவு சொல்லொணா மகிமை மிகுந்தவை! இம்மாநகரை அடைதலானது நீரின்றித் தாகந் தணிக்கும்; நெருப்பின்றி இறைவன்பால் அன்பு என்னும் தீயை மூட்டும்.

புல்லின் ஒவ்வோர் இதழினுள்ளும் அறிவுக்கெட்டாத விவேகத்தின் மர்மங்கள் புதையுண்டுள்ளன; ஒவ்வொரு ரோஜாப் புதரின் மீதிருந்து பல்லாயிரம் இராப்பாடிகள் தங்களின் பேரின்பக் களிப்பில் இனிய கீதங்களைப் பொழிகின்றன.

அதன் அற்புதமிகு மணிமலர்ச்செடிகள் எரியும் புதரின் அணையா நெருப்பின் மர்மத்தினை வெளிப்படுத்துகின்றன; அதன் புனிதமெனும் இனிமைச் சுவைகளின் சுகந்தம் இரட்சகரின் திருஆவியின் நறுமணத்திணைச் சுவாசிக்கின்றது.

அது தங்கமின்றிச் செல்வம் வழங்குகின்றது; மரணமின்றி நித்திய வாழ்வினை வழங்குகின்றது.

அதன் ஒவ்வோர் இலையிலும் விவரிக்க இயலா மகிழ்ச்சிகள், பேரானந்தங்கள், புதைந்து கிடக்கின்றன; ஒவ்வொரு பகுதியிலும் எண்ணிறந்த மர்மங்கள் மறைந்து கிடக்கின்றன.

இறைவனின் நல்விருப்பத்தினை நாடும் பொருட்டுத் துணிவுடன் பெருமுயற்சி செய்திடுவோர், அவரைத் தவிர மற்றதனைத்தையும் துறந்தபின், அம் மாநகரோடு அந்தளவு அணுக்கமாக ஐக்கியமாய் இருப்பார்களாதலின், ஒரு கணமேனும் அதனை விட்டுப் பிரிந்திருப்பது என்பது அவர்களுக்கு நினைத்துக் கூடப்பார்க்க முடியாததாகும்.

அச்சபையின் செந்நீல மலரிலிருந்து தவறில்லா நிரூபணங்களை அவர்கள் செவிமடுப்பர்; அதன் ரோஜாவின் அழகிலிருந்தும், அதன் இராப்பாடியின் இன்னிசையிலிருந்தும் நம்பத்தகுந்த அத்தாட்சிகளைப் பெறுவர்.

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை இம் மாநகர் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் அழகுப்படுத்தப்படும்.

அந்நகர் ஒவ்வொரு சகாப்தத்திலும், ஒவ்வோர் அருளாட்சியிலும் வெளிப்படுத்தப்படும் இறைவனின் திருவாக்கேயன்றி வேறெதுவுமன்று.

மோஸஸின் நாள்களில் அது பெந்தாத்தியூக்; இயேசுவின் நாள்களில் அது விவிலிய நூல்; இறைவனின் திருத்தூதரான முஹம்மதுவின் நாள்களில் அது குர்-ஆன்; இந் நாளில் அது பாயான்; கடவுள் வெளிப்படுத்தவிருக்கும் அருளாட்சிக் காலமான அவரது காலத்தில் அவரது நாளின்போது அவரது சொந்தத் திருநூலாகும்.

இத்திருநூல், கடந்தகால அருளாட்சிகளின் திருநூல்கள் அனைத்திற்கும் மேற்கோளாகவும், அவற்றுக்கெல்லாம் அதிவிழுமியதும் அதிவுயரியதுமாகும்.

CXXVI

எந்த இடத்திற்கெல்லாம் யாம் நாடுகடத்தப்படினும், யாம் அனுபவித்திடும் கொடுந்துன்பங்கள் எத்துணை மோசமானவையாய் இருப்பினும், இறைவனின் மக்களானோர், பூரணமனவுறுதியுடனும் முழுநம்பிக்கையுடனும், தங்களின் பார்வையைப் பேரொளி என்னும் பகலூற்றின்பால் திருப்பி, உலகத்தின் நலனுக்கும் மக்களின் கல்விக்கும் உகந்தவை எவையோ அவற்றிலேயே ஈடுபட்டிருக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எமக்கு ஏற்பட்டுள்ளவை அனைத்துமே எமது வெளிப்பாட்டின் நலனையே முன்னேற்றி வந்ததோடு, அதன் புகழையும் பறைசாற்றி வந்துள்ளன; மேலும், எமக்கு எதிர்காலத்தில் ஏற்படவிருப்பவை அனைத்துமே அத்தகைய விளைவையே உண்டுபண்ணும்.

இறைவனின் சமயத்தை உங்களின் அதி உள்ளார்ந்த இதயங்களில் உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்; அது, ஆணையிடுபவரும் சர்வ விவேகியுமான அவரால் அனுப்பி வைக்கப்பட்ட சமயமாகும்.

யாம், அதிமிகு கருணையுடனும் இரக்கச் சிந்தையுடனும் மக்கள் எல்லாரையும் நாடுகளையும் அவர்களுக்கு மெய்யாகவே பயனளிக்கக் கூடியவற்றின்பால் அழைத்தும் வழிகாட்டியும் உள்ளோம்.

புகழொளியின் உச்சத்தினில் பிரகாசிக்கும் மெய்ம்மை என்னும் பகல்நட்சத்திரம் எமக்குச் சாட்சி அளிக்கின்றது! இறைவனின் மக்களாகிய அவர்களுக்கு, உலகைப் புத்துயிர்ப்பெறவும், வாழ்க்கையை உயர்வுப்படுத்தவும், அதன் மக்களை மீண்டும் உயிர்த்தெழவும் செய்வதைத்தவிர வேறெந்த விருப்பமுமே கொண்டிருக்கவில்லை.

எல்லா வேளைகளிலுமே, மெய்யுரைத்தல், நல்லெண்ணம் ஆகியவை மனிதரிடையே தொடர்புறவைக் குறிப்பதாய் இருந்துவந்திருக்கின்றன.

அவர்களின் புறநடத்தை அகவாழ்வின் பிரதிபலிப்பாகும்; அவர்களின் அகவாழ்வு புறநடத்தையின் பிரதிபலிப்பாகும்.

அவர்களின் சமயம் நிலைநாட்டியுள்ள உண்மைக் கோட்பாடுகளை எந்தத் திரையுமே மறைப்பதோ மங்கலாக்குவதோ இயலாது.

மனிதர் அனைவரின் பார்வைக்கு இவ்வுண்மைக் கோட்பாடுகள் திறந்து காட்டப்பட்டும், தவறாமல் அறிந்துகொள்ளவும் முடியும்.

அவர்களின் நடவடிக்கைகளே இவ்வுண்மைக்குச் சான்றளிக்கின்றன.

இந் நாளில், ஒவ்வோர் உய்த்துணரும் கண்ணும் இறைவனது வெளிப்பாட்டின் உதய ஒளியினை அறிந்துகொள்ள இயலும்; ஒவ்வொரு கவனமிக்கச் செவியும் எரியும் புதரின் குரலை அடையாளங்காணவும் முடியும்.

தெய்வீகக் கருணை என்னும் நீரின் வேகம் அத்தகையதாக இருப்பதனால் இறைவனின் அடையாளங்களின் பகலூற்றானவரும் தனது பேரொளிக்கான ஆதாரங்களை வெளிப்படுத்துபவரும், திரையோ, மறைவோ இல்லாது, மண்ணுலக மக்களுடனும் அதன் இனங்களுடனும் சேர்ந்து பழகியவரும், அவரே.

குரோதத்திலேயே கருத்தை ஊன்றிய உள்ளத்தோடு எமது முன்னிலையை நாடி வந்தோருள் எத்தனை பேர், விசுவாசமும் அன்புங் கொண்ட நண்பர்களாகத் திரும்பிச் சென்றிருக்கின்றனர்! அருளுக்கான நுழைவாயில் எல்லா மனிதரின் முன்பும் அகலத் திறக்கப்பட்டுள்ளன.

அவர்களுடன் எமது வெளிப்படையான தொடர்புகளில், யாம், நேர்மையாளரையும் பாவிகளையும் சமமாகவே நடத்தி வந்திருக்கின்றோம்; அதனால் ஒருவேளை, தீமை இழைப்போர், எல்லையிலா தெய்வீக மன்னிப்பெனும் சமுத்திரத்தினை அடையக் கூடும்.

அத்தகையதுதான் “மறைப்போன்” என்னும் எமது பெயர் மனிதர்மீது பாய்ச்சியுள்ள ஒளி; அதனால் முரணானவன்கூட தான் பக்திமிக்கோரின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுவிட்டதாகக் கற்பனைச் செய்துகொண்டுள்ளான்.

எம்மை நாடுபவர் எவரையுமே யாம் ஏமாற்றமடையச் செய்ததிலன்; அதுவுமன்றி, தனது முகத்தை எம்பால் திருப்பியவருக்கு எமது அரசவையினை அடைவதை மறுத்திலன்.

நண்பர்களே! உங்களின் நற்செயல்களின் மூலமும், அவரது பார்வையில் ஏற்புடையதான நடத்தை, நல்லொழுக்கம் ஆகியவை மூலமும், ஒரே உண்மைக் கடவுளானவருக்கு, அவரது ஒளி மேன்மைப்படுத்தப்படுமாக, உதவிடுங்கள்.

இந் நாளில், இறைவனின் உதவியாளராக விரும்புகின்ற ஒருவர், தான் கொண்டுள்ளவற்றின்பால் தனது கண்களை மூடி, அவற்றை இறைவன் தொடர்பானவற்றின்பால் திறக்கட்டும்.

தனக்கு இலாபமானவற்றில் ஈடுபடுவதை விடுத்து, எல்லாம் வல்லவரின் நாமத்தை உயர்வுறச் செய்வனவற்றில் தனது கருத்தைச் செலுத்தட்டும்.

அவர், தனது உள்ளத்தைத் தீய உணர்ச்சிகளிலும் ஒழுங்கற்ற ஆசைகளிலுமிருந்து தூய்மைப்படுத்த வேண்டும்; ஏனெனில், அவரை வெற்றிபெறச் செய்திடும் ஆயுதம் இறைவன்பால் அச்சமே; அவர் தனது நோக்கத்தை அடைவதற்கு அதுவே முதன்மையான கருவியாகும்.

இறையச்சமே தனது சமயத்தைப் பாதுகாக்கும் கவசமும் தனது மக்களை வெற்றிபெறச் செய்ய உதவும் கேடயமும் ஆகும்.

எந்த ஒரு மனிதனுமே போட்டியிடவியலாத ஒரு சக்தியை இழிவுப்படுத்துவது முடியாத ஒன்று என்பது ஒரு நியமமாகும்.

அதன் துணையைக் கொண்டு சைனியங்களுக்கெல்லாம் பிரபுவாகிய அவரது அனுமதியின் பேரில், இறைவனின் அருகில் ஈர்க்கப்பட்டவர்களால்தாம், மனித உள்ளங்களெனும் கோட்டைகளை வெற்றிகொள்ள முடிந்திருக்கின்றன.

CXXVII

மனிதர்களே! கடவுளை அறிந்து கொள்வதும், அவரது சக்தியின் மகிமையைத் தெரிந்துகொள்வதும் உங்களின் விருப்பமாயின், எனது கண்கொண்டே என்னைப் பாருங்கள்; என்னைத் தவிர வேறொருவரின் கண்களைக் கொண்டல்ல.

அவ்வாறில்லையெனில், நீங்கள் எனது இராஜ்யம் நீடித்திடும் வரை எனது சமயத்தைக் குறித்துத் தியானித்திடினும், படைப்புப் பொருள் அனைத்தையும் குறித்து இறைவனின் நித்திய காலமும் ஆழ்ந்து சிந்தித்திடினும், சர்வவல்ல, என்றும் நிலையான, சர்வ விவேகியான, சகலத்திற்கும் மாட்சிமைமிகு பிரபுவாகியவருமான என்னை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறமுடியாமலே இருந்திடுவீர்.

அவ்வாறுதான் யாம் எமது வெளிப்பாட்டின் மெய்ம்மையினைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளோம்; அதனால், ஒருவேளை, மனிதர்கள் தங்களின் கவனமின்மையிலிருந்து எழுப்பப்பட்டு, புரிந்துகொள்வோரில் சேர்க்கப்படக் கூடும்.

என்னையும் எனது இனத்தாரையும் இறைவனின் பாதையிலும், அவர்பால் அவர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் பொருட்டு அர்ப்பணித்துள்ளேன் என்பதை இம்மனிதர்கள் நன்கு தெரிந்திருந்தனர்; இருந்தும் எமது பகைவர்கள் எம்மைச் சூழ்ந்து கொண்டுள்ள அந்நாளில், மனிதர்களின் உள்ளங்கள் அஞ்சி நடுங்கிக்கொண்டுமிருந்த அந் நாளில், எமது நேசர்கள், பகைவர்கள் ஆகியோரின் பார்வையிலிருந்து தங்களை மறைத்தும் கொண்டிருந்த அந்நாளில், இறைவனின் நேசர்கள், எவ்வாறு தங்களின் சொந்தப் பாதுகாப்பை நிச்சயப்படுத்துவதிலேயே ஈடுபட்டிருந்தனரென்றால், அம்மனிதர்களின் தாழ்வான நிலையைப் பாருங்கள்.

இறுதியில், யாம், இறைவனின் சமயத்தை வெளிப்படுத்துவதில் வெற்றிபெற்றோம்; தங்களின் மனங்களில், இவ்விளைஞனுக்கெதிராகத் தீய எண்ணங் கொண்டு, எல்லாம்வல்லவருடன் கூட்டுச் சேர்ந்திட்டோரைத் தவிர்த்து, மற்றெல்லா மனிதர்களும், இறைவனின் மாட்சிமையையும் அவரது வலுமிகு இராஜ்ஜியத்தையும் ஒப்புக் கொள்ளுமளவு யாம் அதனைச் சிறப்புமிக்க நிலைக்கு உயர்த்தியுள்ளோம்.

இவ்வெளிப்பாட்டின் தாக்கம் படைப்புப்பொருள் அனைத்தின்மீதும் வியாபித்திருந்தபோதும், அவர்களுள் எவருமே கண்டிராத அத்தகைய ஒளியின் பிரகாசத்தினையும் பொருட்படுத்தாது, பாயானின் மக்கள், எவ்வாறு என்னை நிராகரித்தும் என்னுடன் வாதிடவும் செய்துள்ளனர் என்பதைப் பாருங்கள்.

சிலர் இறைவனின் பாதையில் இருந்து அப்பால் திரும்பிவிட்டுள்ளனர்; தாம் நம்பிக்கைக் கொண்டிருந்த அவரது அதிகாரத்தினை நிராகரித்தனர்; அதி சக்திமிக்க, ஒப்புயர்வற்றப் பாதுகாப்பாளரான, அதி மேன்மைமிக்க இறைவன்பால் ஆணவத்துடன் நடந்தும் கொண்டுள்ளனர்.

மற்றவர்கள், தயங்கி, அவரது பாதையில் நின்றுவிட்டனர்.

; படைப்போனின் சமயத்தை, அதன் உள்ளார்ந்த மெய்ம்மை நிலையிலும், எனது விருப்பத்தின் இயக்கத்தின் மூலம் படைக்கப்பட்ட அவரால் நிரூபிக்கப்பட்டாலன்றி, அதனைச் சட்டப்படி செல்லாதது எனக் கருதினர்.

ஆகவேதான், அவர்களின் செயல்களெல்லாம் பயனற்றவையாகி விட்டுள்ளன; இருந்தும், அவர் அதனை உணர்ந்தாரிலர்.

அவர்கள் மத்தியில், தனது சொந்த அளவுகோலைக் கொண்டே இறைவனை அளவிடும் ஒருவர் இருந்தார்; இறைவனின் பல்வேறு நாமங்களினால் குழப்பமடைந்ததன் காரணமாக, அவர், எனக்கெதிராக எழுந்து, நான் மரணதண்டனை வழங்கப்பட வேண்டியவரெனத் தீர்ப்புக் கூறினார்; தானே செய்த குற்றங்களை என்மீது சுமத்தினார்.

ஆகையால், நான், எனது துயரத்திற்காகவும் வருத்தத்திற்காகவும் என்னைப் படைத்துத் தனது போதனையை என்னிடம் ஒப்படைத்திட்ட அவரிடமே மன்றாடுகின்றேன்.

அவர் விதித்துள்ளவற்றிற்காகவும், எனது தனிமைக்காகவும், அவரிடமிருந்து வெகுதூரம் விலகிப்போன இம்மனிதர்களின் செயல்களினால் என்னைப் பாதித்திட்ட வேதனைக்காகவும், நான், அவருக்கு நன்றி கூறுகின்றேன்.

என்னைப் பாதித்ததும், தொடர்ந்தும் பாதிக்கவிருக்கும் கொடுந்துன்பத்தையும் நான் பொறுமையுடன் தாங்கி வந்திருக்கின்றேன்; இறைவனிலேயே நான் முழு நம்பிக்கை வைத்திடுவேன்.

என் பிரபுவே, உமது ஊழியர்களை உமது தயை, வள்ளன்மை என்னும் அரசவையின்பால் வழிநடத்துவீராக; உமது அருள் என்னும் அற்புதத்தையும் உமது பல்வேறான ஆசீர்வாதங்களையும் அடைவதிலிருந்து அவர்களைத் தடுத்திடாதீர் என்னும் வார்த்தைகளைக் கூறி மன்றாடுகின்றேன்.

ஏனெனில், நீர், படைப்பனைத்தையும் சூழ்ந்துள்ள உமது கருணையினால் அவர்களுக்கு விதித்துள்ளவை யாவை என அவர்கள் அறிந்தாரிலர்.

என் பிரபுவே, புறத்தோற்றத்தில் அவர்கள் வலுவற்றர்களாகவும் ஆதரவற்றவர்களாகவும் உள்ளனர்; உள்ளூர அவர்கள் வெறும் அனாதைகளே.

நீர் வள்ளன்மையே உருவானவர், உன்னதமானவர், அதிமேன்மைப்படுத்தப்பட்டவர், அதிவுயர்வானவர்.

என் இறைவா, உமது கடுங்கோபத்தின் சீற்றம் அவர்களைத் தாக்காதிருக்கச் செய்வீராக; உமது கருணையின் அதிசயங்கள் வெளிப்படுத்தப்படும் அந் நேரம் வரை அவர்களைத் தாமதிக்கச் செய்வீராக; ஏனெனில், அதனால் ஒரு வேளை, அவர்கள் உம்பால் திரும்பி வந்து உமக்கெதிராக அவர்கள் ஆற்றியவற்றிற்காக உம்மிடம் மன்னிப்புக் கோரக் கூடும்.

மெய்யாகவே, நீரே மன்னிப்பவர், கருண மயமானவர்.

CXXVIII

கூறுவீராக: ஒரு மனிதன், கருணைமயமான தனது பிரபுவின் நம்பிக்கையாளர் எனத் தன்னைக் கூறிக் கொண்ட போதிலும், தனது உள்ளத்தில், தீயோனின் அதே செயல்களைப் புரிவது அவனுக்குப் பொருந்துமா? இல்லை, அது அவனுக்குப் பொருந்தாது; இதற்கு, ஒளிமயமானவரின் அழகரான அவரே எனக்குச் சாட்சியம் அளித்திடுவார்.

இதனை நீங்கள் புரிந்துகொள்வீராக! உங்களின் உள்ளங்களிலிருந்து உலகியல் பொருள்களின்பாலுள்ள பற்றுகளையும், உங்கள் நாவிலிருந்து அவரது நினைவைத் தவிர வேறு நினைவுகள் அனைத்தையும், உங்களின் உயிருரு முழுவதிலுமுள்ள எவையெல்லாம் உங்களை அவரது வதனத்தைக் கண்ணுறுவதிலிருந்து தடைச் செய்கின்றனவோ அவற்றையும், அல்லது, உங்களின் தீய, ஒழுக்கங்கெட்ட ஆசைகள் ஆகியவற்றைப் பின்பற்றத் தூண்டிடுபவையிலிருந்தும் அகற்றிடுங்கள்.

மனிதர்களே, இறைவனே உங்களின் அச்சமாக இருக்கட்டும்; நேர் வழியைப் பின்பற்றிடுவோருள் சேர்ந்திடுவீராக.

கூறுவீராக: மனிதர்களே, உங்களின் நடத்தை உங்களின் கொள்கைக்கு நேர்மாறாக இருக்குமாயின், தங்களின் பிரபுவான இறைவனில் நம்பிக்கைக் கொண்டோரெனத் தங்களைக் கூறிக் கொண்டு, அதே வேளையில், புனிதத் தன்மை என்னும் மேகத்தின்மீது, அவர் தோற்றமளித்திட்டபோது, அவரை ஏற்கமறுத்து அவரது மெய்ம்மையையும் மறுத்துள்ளோர் மத்தியில் நீங்கள் எவ்வாறு உங்களை வேறுபடுத்திக் கண்டிட இயலும்? இவ்வுலகின்பால் கொண்ட எல்லாப் பற்றுகளிலிருந்தும், அவற்றின் வெளிப்பகட்டுகளிலிருந்தும் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.

கவனமாய் இருங்கள், அவற்றை அணுகிடாதீர்; ஏனெனில், அவை உங்களை உங்களின் அடங்காச் சிற்றின்ப ஆசைகள், பேராசைமிக்க இச்சைகள் ஆகியவற்றை நாடிச்செல்லத் தூண்டக்கூடும்; அதன்வழி, நீங்கள் நேரானதும், சிறந்ததுமான வழியைப் பின்பற்றுவதைத் தடுத்திடக் கூடும்.

“உலகம்” எனப்படுவதன் பொருளானது: உங்களை ஆக்கியோனை அறிந்திராது அவரைத் தவிர மற்றவற்றில் மூழ்கிக் கிடப்பது என்பதாகும்.

மாறாக, “வரவிருக்கும் வாழ்க்கை” பேரொளிமயமான, ஒப்புயர்வற்ற இறைவனை அணுகுவதற்குப் பாதுகாப்பானவற்றைக் குறிக்கின்றது.

இந்நாளில் எவையெல்லாம் நீங்கள் இறைவனை நேசிப்பதற்குத் தடையாக உள்ளனவோ அவை உலகமே அல்லாது வேறெதுவுமன்று.

அதிலிருந்து அப்பால் விரைந்தோடுங்கள்; அதனால், ஆசீர்வதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் நீங்கள் சேர்க்கப்படக்கூடும்.

ஒரு மனிதன், எதையுமே தனக்கும் இறைவனுக்கும் இடையேவந்திட அனுமதித்திடாது இருப்பானாயின், உலகின் ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக்கொள்வதிலோ, அதன் உடைகளை அணிந்து கொள்வதிலோ, அது அளிக்கக் கூடிய நன்மைகளை ஏற்க விரும்புவதிலோ, அவனுக்கு எவ்விதக் கெடுதலும் நேர்ந்திடாது; ஏனெனில், இறைவன், நல்லவை ஒவ்வொன்றையும், அது விண்ணுலகங்களிலோ மண்ணுலகிலோ படைக்கப்பட்டிருப்பினும், அவரில் உண்மையான நம்பிக்கைக் கொண்டுள்ள ஊழியர்களுக்கே விதித்துள்ளார்.

மனிதர்களே, இறைவன் உங்களுக்கு அனுமதித்துள்ள நற்பொருள்களை உட்கொள்ளுங்கள்; அவரது அரிய வள்ளன்மைகளை இழக்கச் செய்துகொள்ளாதீர்.

அவருக்கு நன்றியும் போற்றுதலும் அளித்திடுங்கள்; உண்மையாக நன்றியுடையோரில் சேர்ந்திடுங்கள்.

இல்லம் துறந்து இறைவனின் முன்னிலையை அடைந்தோரே! உங்கள் பிரபுவின் செய்தியை மனிதர்பால் பிரகடனஞ் செய்யுங்கள்; அதனால் ஒருவேளை அது அவர்களைத் தங்களின் தீய, ஒழுங்கற்ற ஆசைகளின் உந்துதல்களைப் பின்பற்றுவதிலிருந்து தடுத்து, அதி மேன்மை வாய்ந்த, அதி உயரியவரான இறைவனின் நினைவின்பால் கொண்டு செல்லக்கூடும்.

கூறுவீராக: மனிதர்களே, இறைவனுக்கு அஞ்சுங்கள்; எவரது இரத்தமும் சிந்தாதிருக்க உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களின் அண்டையருடன் வாதிடாதீர்; நன்மை செய்வோருள் சேர்ந்திடுங்கள்.

கவனமாய் இருங்கள்; உலகினில் ஒழுங்கு நிலைநாட்டப்பட்ட பின்பு, அதனில் ஒழுங்கின்மைகளை உண்டாக்காதீர்; வழி தவறிப் போனவர்களின் காலடியைப் பின்பற்றாதீர்.

உங்களிடையே யாரொருவர் தனது பிரபுவின் சமயத்தைப் போதிக்க எழுகின்றாரோ அவர், மற்றதனைத்திற்கும் முன்பாகத், தனக்குத் தானே போதித்துக் கொள்ளவேண்டும்; அதனால், அவரது பேச்சுக் கேட்போரின் உள்ளங்களை ஈர்த்திடும்.

ஒருவர், தனக்கே போதித்துக் கொள்ளாவிடில் அவரது வாயினின்று உதிர்ந்திடும் சொற்கள் தேடுபவர் எவரின் உள்ளத்தையும் கவர்ந்திடாது.

மனிதர்களே, கவனமாய் இருங்கள்; இல்லையெனில், நீங்களும், மற்றவர்களுக்கு நல்லறிவுரைகளை வழங்கியபோதும், தாங்களே அவற்றைப் பின்பற்றத் தவறியோனைச் சேர்ந்திடக்கூடும்.

அத்தகையோரின் இவைபோன்ற வார்த்தைகளும், அவ்வார்த்தைகளுக்கப்பால், பொருள்களனைத்தின் மெய்ம்மைகளும், மேலும் அம்மெய்ம்மைகளுக்கப்பால் இறைவனின் அருகிலுள்ள தேவகணங்களும், அவர்கள் மீது, பொய்யுரைப்போர் எனக் குற்றஞ்சாட்டக் கூடும்.

அத்தகைய ஒரு மனிதர் எவரிலாவது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றார் என்றால், அவ் வெற்றிக்கு அவரைக் காரணமாகக் கூறவியலாது; மாறாக, எல்லாம்வல்ல, சர்வவிவேகியான இறைவனின் கட்டளைக்கேற்ப, அத்தாக்கத்திற்கு, இறைவனின் வாசகங்களையே காரணமாகக் கொள்ளவேண்டும்.

இறைவனின் பார்வையில், அவர், தன்னையே எரித்துக் கொண்டு, அதே வேளையில் ஒளியும் கொடுத்திடும் ஒரு விளக்காகக் கருதப்படுவார் கூறுவீராக: மனிதர்களே, உங்களுக்கே அவமானத்தைக் கொண்டுவரக் கூடியதும், மனிதர்களின் பார்வையில் இறைவனின் சமயத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான எதனையும் செய்திடாதீர்; விஷமம் செய்வோரில் சேர்ந்திடாதீர்.

உங்களின் மனங்கள் உங்களைக் கண்டிப்பவற்றை அணுகிடாதீர்.

எல்லாவிதக் கொடுமைச் செயல்களையும் தவிர்த்திடுங்கள்; ஏனெனில், அத்தகைய செயல்கள் இறைவனால் தனது திருநூலில் தடைச்செய்யப் பட்டுள்ளன; குற்ற உணர்வின் சாயல் ஒவ்வொன்றிலிருந்தும் தூய்மைப் படுத்தப்பட்டும் மாசகற்றப் பட்டும் உள்ளோருடன் சேர்ந்தோரைத் தவிர வேறெவராலும் அத் திருநூலைத் தொட்டிடவே முடியாது.

உங்களிடத்திலும் மற்றோரிடத்திலும் நியாயமாக நடந்து கொள்ளுங்கள்; அதனால், நீதியின் ஆதாரங்கள், உங்களின் செயல் மூலம், எமது விசுவாசமுள்ள ஊழியர்கள் மத்தியில் வெளிப்படுத்தப்படக்கூடும்.

கவனமாய் இருங்கள், இல்லையெனில் அண்டையரின் பொருளினை ஆக்கிரமித்திடப் போகின்றீர்.

நீங்கள் அவரது மரியாதைக்கும் நம்பிக்கைக்கும் ஆதாரமாகி, ஆண்டவனின் அருள் உங்களுக்கு வழங்கியுள்ள கொடைகளை ஏழைகளுக்கு அளிக்க மறந்திடாதீர்.

அவர் மெய்யாகவே, தர்மம் செய்வோருக்குக் கைம்மாறு செய்வதோடு அவர்கள் அளித்ததைக் காட்டிலும் இருமடங்காக ஈடு செய்வார்.

அவரை அல்லாது ஆண்டவன் வேறிலர்.

சகல படைப்பும் அதன் சாம்ராஜ்யமும் அவருடையவையே.

தான் விரும்பியவருக்குத் தனது பரிசினை வழங்குவார்.

தான் விரும்பியவருக்கு அதனை வழங்க மறுப்பார்.

அவரே மாபெரும் அருளாளர்.

மிக விசால குணமுடையவர்; உதாரச் சிந்தை படைத்தவர்.

கூறுவீராக: பஹாவின் மக்களே, இறைவனின் சமயத்தைப் போதிப்பீராக; ஏனெனில் இறைவன் ஒவ்வொருவருக்கும் தனது சமயத்தைப் பிரகடனஞ் செய்யும் கடமையை விதித்து, அதனைச் செயல்களிலெல்லாம் மிகப் போற்றுதலுக்குரிய செயலாகக் கருதுகின்றார்.

சமயத்தைப் போதிக்கும் அவர், எல்லாம் வல்லவரான, கிருபையாளரும் மேன்மைமிகு பாதுகாவலருமான இறைவனிடத்தில் திட நம்பிக்கை கொண்டிருக்கும் போதுதான், அத்தகையச் செயல் ஏற்புடையதாகும்.

மேலும், மனிதர்களின் சொல்லாற்றலின் மூலமாகத்தான் அவரது சமயம் போதிக்கப்படவேண்டுமே அல்லாது பலாத்காரத்தை மேற்கொள்வதன் மூலமாக அல்லவென்று அவர் கட்டளையிட்டுள்ளார்.

இவ்வாறுதான் அதி மேன்மைப்படுத்தப்பட்ட, சர்வவிவேகியான அவரது இராஜ்யத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கவனமாய் இருங்கள், இல்லையெனில் யாருடனாவது தர்க்கத்தில் ஈடுபடப் போகின்றீர்; மாறாக, அவரை அன்பான முறையிலும், மிகவும் திருப்தியான புத்திமதிகளாலும் உண்மையை உணரச்செய்ய முயற்சியுங்கள்.

கேட்பவர்களிடம் ஏற்புக்குறி தோன்றினால், அது அவரின் தகுதிக்குத் தகுந்ததாகும்; இல்லையெனில், அவரை விட்டு அப்பால் திரும்பி உங்கள் முகங்களைப் புனிதமிக்கப் பிரகாசத்தின் இருப்பிடமான இறைவனின் தெய்வீக அரசவையின்பால் திருப்பிடுங்கள்.

இவ்வுலகின் பொருள்களையும் அதன் விவகாரங்களையும் சார்ந்தவைகளைக் குறித்து எவரிடமும் வாதிடாதீர்கள்; ஏனெனில், அவற்றின்மீது பாசம் வைத்துள்ள அவர்களிடமே இறைவன் அவற்றை விட்டுவிட்டார்.

உலகம் முழுவதிலும் இருந்து அவர் மனிதரின் உள்ளங்களையே தனக்கெனத் தேர்ந்தெடுத்துள்ளார் - வெளிப்பாட்டின் சைனியங்களும் திருவாசகங்களுமே அவ்வுள்ளங்களை ஆட்கொண்டிட இயலும்.

இவ்வாறாகத்தான், பஹாவின் விரல்களினால், ஆண்டவனின் மாற்றவியலா கட்டளை என்னும் நிருபத்தினில், சர்வமுமறிந்த, ஒப்புயர்வற்ற ஆணையாளராகிய அவரது விருப்பத்திற்கிணங்க விதிக்கப் பட்டுள்ளது.

CXXIX

இறைவன் பாதையில் பயணம் செய்வோரே! அவரது அருள் என்னும் மாக்கடலிலிருந்து உங்களின் பங்கை எடுத்துக் கொள்ளுங்கள்; அதன் ஆழத்தில் மறைந்து கிடக்கும் பொருள்களை நீங்கள், உங்களையே இழக்கச் செய்து கொள்ளாதீர்.

அதன் பொக்கிஷங்களில் பங்குபெற்றோரைச் சார்ந்திருங்கள்.

இச் சமுத்திரத்தில் இருந்து ஒரே ஒரு பனித்துளியளவு விண்ணுலகங்கள், மண்ணுலகம் ஆகியவையின் மீது விழச்செய்யப்படுமாயின், அதுவே எல்லாம் வல்ல, சகலமும் அறிந்த, சர்வ விவேகியான இறைவனின் வள்ளன்மையைக் கொண்டு அவற்றை மேம்பாடுறச் செய்வதற்குப் போதுமானதாகும்.

துறவு என்னும் கைகளினால் அதன் உயிரளிக்கும் நீரினை எடுத்துப் படைப்புப் பொருள்கள் அனைத்தின் மீதும் தெளித்திட்டால், அவை மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, இறைவனின் இப்புனிதமானதும் பிரகாசமானதுமான வலுமிக்க அரியாசனத்தை அணுகிடக் கூடும்.

நீங்கள் தனி ஒருவராகவே அதனைச் செய்ய வேண்டியிருந்தால் வருந்தாதீர்.

இறைவனே உங்களுக்கு முற்றிலும் போதுமானவராய் இருக்கட்டும்.

அவரது ஆவியுடன் நெருங்கியத் தொடர்புக் கொண்டு, நீங்கள் நன்றியுடையோராவீராக.

உங்கள் பிரபுவின் சமயத்தை விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும் பிரகடனஞ் செய்திடுங்கள்.

உங்களின் அழைப்புக்கு யாராவது செவிசாய்ப்பாராயின், உங்கள் பிரபுவான இறைவன் உங்களுக்கு அனுப்பி வைத்துள்ள விவேகமிக்க முத்துக்களை அவர்முன் வைத்திடுங்கள்; உண்மையாக நம்புவோருள் சேர்ந்திடுவீராக.

நீங்கள் கொடுக்க முன்வருவதை யாராவது ஏற்க மறுத்தால், அவரிடமிருந்து அப்பால் திரும்பி, உங்கள் நம்பிக்கையையும் மனவுறுதியையும் உங்கள் இறைவனான, உலகங்கள் அனைத்திற்கும் பிரபுவாகிய அவரிலேயே வைத்திடுங்கள்.

இறைவனின் நேர்மைத்தன்மை சாட்சியாக! யாரொருவர் இந்நாளில் வாயைத் திறந்து தனது பிரபுவின் நாமத்தை உச்சரிக்கின்றாரோ அவர்மீது தெய்வீக அகத்தூண்டலின் சைனியங்கள், சகலமும் அறிந்த, சர்வ விவேகமும் கொண்டுள்ள எனது நாமம் என்னும் சுவர்க்கத்தில் இருந்து, அவர்பால் வந்திறங்கிடும்.

மேலும், உயர்விலுள்ள வான்படைக்கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரும், தூய ஒளியைக் கொண்ட கிண்ணம் ஒன்றினை ஏந்தியவாறு அவர்மீது வந்திறங்கிடுவர்.

அவ்வாறுதான் இறைவனின் வெளிப்பாடு என்னும் இராஜ்யத்திலேயே பேரொளி மயமான, அதிசக்திவாய்ந்த அவரால் முன்விதிக்கப்பட்டுள்ளது.

புனிதத் திரைக்குப் பின்னால், இறைவனின் சேவைக்காகத் தயார்ச்செய்யப்பட்டு, மனிதர்பால் புலனாக்கப் படவிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டோர் படைஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளது; அவர்கள், அவரது சமயத்திற்கு உதவிடுவர்; மனித இனம் முழுவதுமே எழுந்து அவர்களுக்கு எதிராகப் போர் தொடுத்திடினும் அவர்கள் யாருக்குமே அஞ்ச மாட்டார்கள்.

இவர்கள்தாம், உலகவாசிகள், விண்ணுலகவாசிகள் ஆகியோரின் பார்வையின் முன்பாக எழுந்து, எல்லாம் வல்லவரின் நாமத்தை உரக்கக் குரலெழுப்பி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்து, மனிதர்களின் குழந்தைகளைப் பேரொளிமயமான, போற்றுதலனைத்திற்கும் உரிய இறைவனின் பாதைக்கு வருமாறு அழைப்பாணை விடுப்பவர்கள்.

அவர்களின் வழியிலேயே நடந்திடுவீராக; யாரையுமே உங்களை அச்சுறுத்த விடாது பார்த்துக் கொள்ளுங்கள்.

படைத்தோனின் பாதையில் நடப்போருக்கு உலகின் கொந்தளிப்பு, அது எந்தளவு தொல்லை விளைவித்திடினும், அவர்களை வருத்தமுறச் செய்திடாது; குற்றஞ்சாட்டுவோரின் குற்றச்சாட்டுகளும் அவர்களைத் தங்களின் நோக்கத்தில் தோல்வியுறச் செய்திடா.

இறைவனின் நிருபத்துடனும் அவரது அடையாளங்களுடனும் முன்னேறிச் சென்று, என்னில் நம்பிக்கையுடையோருடன் மீண்டும் ஒன்றிணைந்திடுங்கள்; எமது அதிபுனித சுவர்க்கத்தின் செய்தியினை அவர்களுக்குப் பிரகடனம் செய்திடுங்கள்.

அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ளோரை எச்சரித்திடுங்கள்.

கூறுவீராக: மனிதர்களே, பேரொளி என்னும் அரியாசனத்தினின்று நான் உங்களிடம் வந்துள்ளேன்; அதிசக்தி வாய்ந்த, அதிமேன்மைப்படுத்தப்பட்ட, அதிவுயரிய ஆண்டவனிடமிருந்து நான் உங்களுக்கு ஓர் அறிவிப்புக் கொண்டுவந்திருக்கின்றேன்.

உங்கள் பிரபுவான, உங்கள் முன்னோர்களின் பிரபுவான இறைவனின் அத்தாட்சியை எனது கையில் ஏந்திக் கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் கொண்டிருக்கும் நியாயமான துலாக்கோலைக் கொண்டு அதனை எடை போடுவீராக.

அதுவே தீர்க்கதரிசிகள், இறைத்தூதர்கள் ஆகியோரின் துலாக் கோல்.

அது, மெய்ம்மையின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதென அறிவீராயின், அது இறைவனுடையதென நீங்கள் நம்பினீராயின், எச்சரிக்கையுடன் இருப்பீராக; இல்லையெனில், அர்த்தமற்றக் குறைகள் கூறி, உங்களின் செயல்களைப் பயனற்றதாக்கிக் கொள்வதோடு, சமய நம்பிக்கையற்றோருடன் சேர்ந்திடப் போகின்றீர்.

உண்மையாக அதுவே மெய்ம்மையின் சக்தியின் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இறைவனின் அடையாளம்; அதன் மூலமாகவே அவரது சமயத்தின் மெய்ம்மைத்தன்மை அவரது உயிரினங்களுக்கு நிரூபிக்கப்பட்டு, அதன் தூய்மைநிலை என்னும் விருதுக்கொடிகள் மண்ணுலகத்திற்கும் விண்ணுலகத்திற்கும் இடையே ஏற்றப்பட்டுள்ளன.

கூறுவீராக: இதுவே முத்திரையிடப்பட்ட, மர்மமான திருச்சுவடி; புனிதத் தன்மையெனும் அவரது விரல் வரைந்துள்ள சொற்களைத் தாங்கிவந்துள்ள, இறைவனின் மாற்றவியலாத கட்டளைக் களஞ்சியம்; அது ஊடுருவ இயலாத மர்மத்தினுள் சுருட்டி வைக்கப் பட்டிருந்து, இப்பொழுது, எல்லாம் வல்லவரான, நாள்களில் புராதனமான அவரது அருளின் அடையாளமாக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

அதனில்தான் யாம் உலகவாசிகள், விண்ணுலகவாசிகள் ஆகியோரின் விதியை நிர்ணயித்துள்ளோம்; அனைத்துப் பொருள்களின் அறிவை, ஆரம்பமுதல் முடிவுவரை, எழுதிவைத்துள்ளோம்.

இதனை நீங்கள் உணரக்கூடுமாயின், எதுவுமே, அவை, கடந்த காலத்தில் படைக்கப்பட்டவையோ, வருங்காலத்தில் படைக்கப்படவிருப்பவையோ, அவற்றில் எதுவுமே அவரது கவனத்திலிருந்து தப்பவோ, அவரது ஆர்வத்தைக் குலைக்கவோ இயலாது.

கூறுவீராக: இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட வெளிப்பாடு, நிச்சயமாக மீண்டும் நிகழ்ந்துள்ளது; நீட்டப்பட்டுள்ள எமது சக்தி என்னும் கரம் விண்ணுலகங்களிலும் மண்ணுலகத்திலுமுள்ள அனைத்தின் மீதும் அதன் நிழலை விழச் செய்துள்ளது.

மெய்ம்மையின், அதே மெய்ம்மையின் சக்தியின் மூலம், யாம் எமது ஊடுருவ இயலாத மர்மத்தில் ஓர் அணுவளவே புலனாக்கியுள்ளோம்; இருந்தும் அந்தோ, எமது வெளிப்பாடெனும் சைனாயைச் சூழ்ந்துள்ள மின்னிடும் செந்நிற ஒளியின் பிரகாசத்தினைக் கண்டிட்டோர் மரணமுற்றனர்.

இவ்வாறாகத்தான், கருணைமயமான அழகரானவர் தனது அத்தாட்சி என்னும் மேகங்களால் சூழப்பட்டுக் கீழிறங்கி வந்துள்ளார்; சர்வவிவேகியான, ஒளிமயமான இறைவனின் விருப்பத்திற்கிணங்க அக் கட்டளை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூறுவீராக: விண்ணுலக் கன்னியே, மேன்மைமிகு சுவர்க்கத்தின் வாசியே, உனது புனித அறையினின்று வெளிவருவாயாக! உனக்கு விருப்பமான வகையில் நீ இறவாமை என்னும் பட்டாடையில் உன்னைப் போர்த்திக்கொண்டு, ஒளிமயமான அவரது நாமத்தின் பெயரால் பின்னப்பட்ட ஆடையை அணிந்து கொள்.

பிறகு, இனிமையான, அற்புதமான உச்சரிப்புடனும், அணுகிடவியலாத, அதிமேன்மையான உனது பிரபுவின் அரியாசனத்தினின்று வந்திடும் குரலினைச் செவிமடுப்பாயாக.

உனது முகத்திரையை விலக்கி, கருமைநிறக் கண்ணைக்கொண்ட இளநங்கையின் அழகை வெளிப்படுத்திடுவாயாக; இறைவனின் ஊழியர்களை உனது பிரகாசித்திடும் வதனத்தின் ஒளியை இழக்கச் செய்திடாதே.

உலக வாசிகளின் பெருமூச்சுகளையோ, விண்ணுலக வாசிகளின் புலம்பலையோ கேட்க நேர்ந்தால், வருந்தாதே.

அவர்களை, அழிவு என்னும் மண்ணில் அழிந்துபோக விட்டுவிடு.

அவர்களின் நெஞ்சங்களில் வெறுப்பெனும் தீச்சுடர் தூண்டப்பட்டிருப்பதனால் அவர்கள் இன்மை நிலைக்குத் தாழ்த்தப்படட்டும்.

மண்ணுலகிற்கும் விண்ணுலகிற்குமிடையே உள்ள மக்களின் முன்பாகப் புகழ்ச்சிக் கீதத்தை, நாமங்களுக்கும் பண்புகளுக்கும் மன்னராகிய அவரது நினைவின் பொருட்டு, இனிமைமிக்கக் குரலில் ஓதிடுங்கள்.

இவ்வாறுதான் யாம் உங்களின் விதியை நிர்ணயித்துள்ளோம்.

எமது நோக்கத்தை அடைந்திட எம்மால் முடியும்.

தூய்மையின் சாராம்சமாகிய நீர் உமது ஒளியென்னும் பிரகாசமிக்க மேலங்கியினை இழந்திடாது, கவனமாய் இருப்பீராக.

இல்லை, படைப்பெனும் இராஜ்ஜியத்தில் நீர் உம்மை உமது இறைவனின் மாசுபடுத்தவியலாத ஆடையினால் மேன்மேலும் வளமடையச் செய்து கொள்வீராக; அதனால், எல்லாம்வல்லவரின் அழகிய உருவம் உம் மூலமாகப் படைப்புப் பொருள் அனைத்தினுள்ளும் பிரதிபலித்திடும்; அதன்வழி உமது பிரபுவின் அருள், அதன் பூரண சக்தியுடன், படைப்பு முழுவதிலும் வியாபித்திடக் கூடும்.

உமது பிரபுவின்பால் அன்பு என்னும் நறுமணத்தினை யாரிடமாவது நுகர்ந்திடுவீராயின், அவருக்காக உங்களையே அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்; ஏனெனில், அந் நோக்கத்திற்காகத்தான் யாம், உம்மைப் படைத்து, நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து, எமது நல்லன்புக்குரியவர்களின் திருக்கூட்டத்தின் முன்பாக, உம்முடன் இவ்வொப்பந்தத்தைச் செய்துள்ளோம்.

உள்ளத்தில் குருடானோர் தங்களின் வீண் கற்பனைகள் என்னும் அம்புகளை உங்கள்மீது எய்திடுவராயின் நீங்கள் பொறுமை இழந்திடாதீர்.

அவர்களைப் பொருட்படுத்தாதீர்; ஏனெனில், அவர்கள் தங்களின் தீய தூண்டுத¬லையே பின்பற்றுகின்றனர்.

விண்ணுலக, மண்ணுலக வாசிகளின் முன்னால் உரக்கக் குரலெழுப்புங்கள்: நான்தான் விண்ணுலகக் கன்னி; பஹாவின் ஆவியினால் தோற்றுவிக்கப்பட்ட சந்ததி.

எனது உறைவிடம் பேரொளி மயமானவரின் திருநாமம்.

உயர்விலுள்ள வான்படையினருக்கு முன், அவரது நாமம் என்னும் அணிகலனைக் கொண்டு, நான் அலங்கரிக்கப் பட்டேன்; ஊடுருவவியலாத பாதுகாப்பு எனும் திரையினால் சுற்றிப் போர்த்தப்பட்டு, நான், மனிதரின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுக் கிடந்தேன்.

கருணைமிக்க இறைவனின் வலப்பக்கத்தினின்று தெய்வீகமான, ஒப்பற்ற இனிமைமிக்க ஒரு குரலைக் கேட்டேன் என எண்ணுகின்றேன்; அதோ, அதன் உச்சரிப்பைக் கேட்பதற்கும், அதனை வெளிப்படுத்தியவரின் அழகினைக் கண்ணுறுவதற்குமான ஆவலில் வானுலகமே எமக்கு முன்னால் அசைவுற்று நடுங்கியது.

இவ்வாறுதான், யாம், பிரகாசமிக்க இந் நிருபத்தினில், அதி இனிமையான மொழிகளில், நித்தியத்தின் நா வெளிப்படுத்த உந்துதல் அளித்திட்ட வாசகங்களின் மூலம் கயூம் உல்-அஸ்மாவில் வெளிப்படுத்தியுள்ளோம்.

கூறுவீராக: அவரது மாட்சிமையின் அதிகாரத்திற்கேற்ப அவர் விரும்பியவாறு அவர் விதிப்பார்; அவரது சொந்த கட்டளைப்படியே அவர் எதனையும் செய்வார்.

தான் விரும்பியதைச் செய்வதை யாருமே ஏன் என்று கேட்கலாகாது.

உண்மையாகவே, அவர் கட்டுப்படுத்தப்படாதவர், சர்வசக்தி வாய்ந்தவர், சர்வ வல்லவர், சர்வ விவேகி.

இறைவனில் நம்பிக்கை இல்லாது, அவரது மாட்சிமைக்கு எதிராகப் புரட்சி செய்பவர்கள், ஆதரவற்ற நிலையில், தங்களின் ஒழுக்கமற்ற இச்சைகளுக்கும் ஆசைகளுக்கும் பலியானோராவர்.

இவர்கள் நரகத்தின் தீயிலுள்ள தங்களின் இருப்பிடத்திற்கே திரும்பிச் சென்றிடுவர்: மறுப்போரின் இருப்பிடம் இழிவு மிக்கதாகும்!

CXXX

செல்வச் செழிப்பின்போது ஈகைக் குணமுடையவராகவும், துரதிர்ஷ்டத்தின் போது நன்றியுடையவராகவும் இருப்பீராக.

அண்டையரின் நம்பிக்கையைப்பெற்றிடத் தகுதியுடையவராகி, அவரை நட்பும் பிரகாசமுங் கொண்ட முகத்துடன் பார்ப்பீராக.

ஏழைகளுக்குச் செல்வமாகவும் செல்வந்தர்களுக்கு ஓர் அறிவுறுத்தலாகவும், வறியோரின் குரலுக்குப் பதில் கொடுப்பவராகவும், வாக்குறுதியின் புனிதத் தன்மையைப் பாதுகாப்பவராகவும் இருப்பீராக.

உங்களின் தீர்ப்பில் நியாயம் உடையவராகவும், உங்களின் பேச்சில் கவனமுடையவராகவும் ஆவீராக.

எந்த மனிதனுக்கும் அநீதி இழைக்காதீர்.

எல்லா மனிதர்களிடமும் பணிவு காட்டுங்கள்.

இருளில் நடப்பவருக்கு ஒரு விளக்காகவும், வருத்தமிக்கோருக்கு ஒரு மகிழ்ச்சியாகவும், தாகமுற்றோருக்கு ஒரு கடலாகவும், துன்புற்றோருக்கு ஒரு புகலிடமாகவும், கொடுமைக்குப் பலியானோரைப் பாதுகாத்து ஆதரிப்பவராகவும் ஆவீராக.

உங்களின் செயல்கள் நீதிக்கும் நேர்மைக்கும் புகழ்பெற்றதாக இருக்கட்டும்.

அந்நியருக்கோர் இல்லமாகவும் வருந்துவோருக்கு ஓர் ஆறுதலாகவும், அகதிகளுக்கு ஒரு பலமிக்கக் கோட்டையாகவும் ஆவீராக.

குருடர்களுக்குக் கண்களாகவும், தவறியோரின் பாதங்களுக்கு வழிகாட்டும் ஒளியாகவும் ஆவீராக.

மெய்ம்மை என்னும் வதனத்துக்கோர் ஆபரணமாகவும், விசுவாசம் என்னும் நெற்றிக்கு ஒரு மகுடமாகவும், நேர்மைத்தன்மை என்னும் ஆலயத்திற்கு ஒரு தூணாகவும், மனித இனம் என்னும் உடலுக்கு ஒரு மூச்சு உயிராகவும், நீதி என்னும் சைனியங்களுக்கு ஒரு விருதுக்கொடியாகவும், நல்லொழுக்கம் என்னும் தொடுவானத்திற்கு மேல் ஓர் ஒளி பரப்புவோனாகவும், மனித உள்ளமெனும் தரைக்கு ஒரு துளி பனியாகவும், அறிவு என்னும் கடலுக்கு ஒரு மரக்கலமாகவும், வள்ளன்மை எனும் சுவர்க்கத்திற்கு ஒரு சூரியனாகவும், விவேகம் என்னும் கிரீடத்திற்கு ஓர் இரத்தினமாகவும், உங்களின் தலைமுறை என்னும் வானவெளிக்கு ஒரு பிரகாசித்திடும் ஒளியாகவும், பணிவு என்னும் விருட்சத்தின் மீது ஒரு கனியாகவும் திகழ்வீராக.

CXXXI

புராதன அழகானவரின் எழுதுகோலானவர் இறைவனின் நேசர்களை நினைவுக்கொள்வதை நிறுத்தியதே கிடையாது.

ஒரு காலத்தில், அவரது எழுதுகோலிலிருந்து கருணை என்னும் நதிகள் பாய்ந்து வந்திட்டன; மற்றொரு வேளையில், அதன் இயக்கத்தின் மூலம், எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய இறைவனின் நூல் வெளிப்படுத்தப்பட்டது.

அவருடன் எவருமே ஒப்பிடப்படார்; அவரது மூதுரையுடனும் யாருமே போட்டியிட முடியாது.

நித்திய காலத்திலிருந்து அவரது ஆதிக்கம், வலிமை என்னும் அரியாசனத்தின் மீது நிலைநாட்டப்பட்டுள்ளது; மனித இனம் முழுவதன் தேவையையுமே திருப்திபடுத்தக்கூடிய அறிவுரைகளும், அவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய எச்சரிக்கைகளும் அவரது உதடுகளிலிருந்தே உதிர்க்கப்பட்டுள்ளன.

ஒரு கணநேரமேனும் நான் மனிதர்களின் பார்வையிலிருந்து என்னை மறைந்திருக்க அனுமதித்தது கிடையாது என்பதற்கு, ஒரே உண்மைக் கடவுளாகிய அவரே எனக்குச் சாட்சி பகர்கின்றார்; அதற்கு அவரது படைப்பினங்களும் சாட்சி பகர்கின்றன; மேலும் யான், அவர்களின் தீமைகளிலிருந்தும் என்னைப் பாதுகாத்துக்கொள்ள சம்மதித்ததிலன்.

நான் மனிதர் அனைவரின் முகத்துக்குமுன் எழுந்து, அவர்களை எனது விருப்பத்தை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டேன்.

எனது நோக்கம் உலகத்தின் நன்மையும் எல்லா மனிதர்களின் அமைதியுமே அல்லாது வேறெதுவுமன்று.

மனித இனத்தின் ஒற்றுமை வலுவாக நிலைநாட்டப் படாதவரையில் அது நலமும், அமைதியும் அடையவே முடியாதவையாகும்.

அதிமேன்மையின் எழுதுகோலானவர் வெளிப்படுத்தியுள்ள அறிவுரைகள் புறக்கணிக்கப்படும்வரை அவ்வொற்றுமையை அடைவதில் வெற்றிபெறவே இயலாது.

அவர் வெளிப்படுத்தியுள்ள போதனைகளின் சக்தியின் மூலமாக மனித இனம் முழுவதையுமே ஒற்றுமை என்னும் ஒளியினால் பிரகாசமடையச் செய்ய முடியும்; அவரது நாமத்தின் நினைவு எல்லா மனிதரின் உள்ளங்களிலும் உற்சாகத் தீயை மூட்டி அவர்களுக்கும் அவரது பேரொளிக்குமிடையே குறுக்கிடும் திரைகளை எரித்திடும்.

ஒரே ஒரு நேர்மைச் செயலுக்கு, ஒரு தூசியைக்கூட விண்ணுலகங்களுக்கெல்லாம் மேலான விண்ணுலகையும் கடந்து சென்றிடக் கூடுமளவு, ஆற்றல் அளிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஒவ்வொரு பாசப்பிணைப்பையும் துண்டித்திட இயலும்; அது, சக்தியிழந்து மறைந்துவிட்டதனைப் புதுப்பித்திடும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

தூய்மையாய் இருங்கள், இறைவனின் மக்களே, தூய்மையாய் இருங்கள்; நேர்மையாய் இருங்கள், நேர்மையாய் இருங்கள்.

கூறுவீராக: இறைவனின் மக்களே! நித்திய மெய்ம்மையாகிய அவரது வெற்றியை நிச்சயிப்பது, அவரது சைனியங்களும் உலகில் அவரது உதவியாளர்களுமேயாவர்; இது புனித நூல்களிலும் திருவாசகங்களிலும் கூறப்பட்டு, சூரியனைப் போல் தெளிவாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது.

நேர்மைச் செயல்களே அச் சைனியங்கள்; அத்தகைய நடத்தையும் நற்குண இயல்புமே அவரது பார்வையில் ஏற்புடையவை.

இந் நாளில் யாராவது எமது சமயத்திற்கு உதவ எழுந்து, போற்றத்தகுந்த நற்குணம், நேர்மையான நடத்தை ஆகிய சைனியங்களைத் தனக்கு உதவியாக அழைத்துக் கொள்வாராயின், அச்செயலிலிருந்து தோன்றிடும் தாக்கமானது, நிச்சயமாக, உலக முழுவதிலும் பரவிடும்.

CXXXII

ஒரே மெய்க் கடவுளானவர், அவரது ஒளி மேன்மைப்படுத்தப்படுமாக, தன்னை, மனிதர்களுக்கு வெளிப்படுத்துவதன் நோக்கம், அவர்களின் உள்ளார்ந்த மெய்ம்மை என்னும் சுரங்கத்தில் மறைந்து கிடக்கும் அவ்விரத்தினங்களை வெளிக்கொணர்வதேயாகும்.

உலகின் பல்வேறு சமூகங்களும் கூட்டத்தினரும் எண்ணிறந்த மத நம்பிக்கை அமைப்புகளும் மனிதரிடையே பகைமை உணர்வுகளை வளரவிடாது பார்த்துக் கொள்வதே, இந்நாளில், இறைவனின் சமயத்திற்கும் அவரது மதத்திற்கும் அதிமுக்கிய பணியாகும்.

இக்கொள்கைகளும் சட்டங்களும், உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இவ்வலுமிக்க, முறைமைகளும், ஒரே மூலத்திலிருந்தே தோன்றிவந்தவையாகும்; அவை ஒரே ஒளிப்பிழம்பின் கதிர்களேயாகும்.

ஒன்றிலிருந்து மற்றது வேறுபடுகிறது என்பதற்கு அவை வெளிப்படுத்தப்படும் காலத்தின் வேறுபட்ட தேவைகளையே காரணமாகக் கொள்ளவேண்டும்.

பஹாவின் மக்களே, முயற்சியில் ஈடுபடுவதற்காக உங்களின் இடைத்துணியை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள்; அதனால் ஒருவேளை, உலக மக்களைக் கலக்கமுறச் செய்யும் மத உடன்பாடின்மைகளும் சச்சரவுகளும் ஏற்படுத்திடும் கொந்தளிப்பு, ஓய்வுப் பெறக்கூடும்; அங்ஙனம், அதன் சுவடுகள் முற்றிலும் துடைத்தழிக்கப்படக்கூடும்.

இறைவனிடமும் அவருக்குச் சேவைசெய்வோரிடமுமுள்ள அன்பின் பொருட்டு, அதிவிழுமியதும் பெருஞ்சிறப்பு வாய்ந்துதுமான இவ்வெளிப்பாட்டிற்கு உதவிட எழுவீராக.

மதவெறியும் மிதமிஞ்சிய வெறுப்பும் உலகையே விழுங்கவல்ல தீயாகும்; அதன் சீற்றத்தை யாருமே தணிக்க இயலாது.

தெய்வீக சக்தியின் கரம் ஒன்றே, மனித இனத்தை, இப் பாழ்ப்படுத்தும் பேரிடரிலிருந்து விடுவிக்க இயலும்.

இறைவனின் திருமொழி ஒரு தீபம்; இவ் வார்த்தைகள்தாம் அதன் ஒளி.

நீங்கள் ஒரே மரத்தின் கனிகள்; ஒரே கிளையின் இலைகள்.

ஒருவர் மற்றவரை மிக்க அன்புடனும் இணக்கத்துடனும், நட்புறவுடனும் தோழமையுடனும் நடத்துங்கள்.

மெய்ம்மையின் பகல்நட்சத்திரமான அவரே எனக்குச் சாட்சியம் பகர்கின்றார்! உலகம் முழுவதையுமே ஒளிபெறச் செய்யுமளவு பேராற்றல் வாய்ந்தது ஒற்றுமையின் ஒளி; ஒரே மெய்க்கடவுளான அவர், சகலத்தையும் அறிந்தவரான அவர், தாமே இத்திருமொழிகளுக்குச் சான்றளிக்கின்றார்.

முயற்சி செய்யுங்கள்; அதனால், நீங்கள் சிறப்புமிக்க, அதி விழுமிய இந்நிலையை அடையக்கூடும்; அந்நிலை, மனித இனத்தின் பாதுகாப்பையும் இடர்க்காப்பையும் நிச்சயப்படுத்திடும்.

இந்நோக்கம், மற்ற நோக்கம் ஒவ்வொன்றையும் விஞ்சிடுகின்றது; இக்குறிக்கோள் குறிக்கோள்களுக்கெல்லாம் அரசனாகும்.

இருப்பினும், நீதி என்னும் பகல்நட்சத்திரத்தைக் கொடுமை என்னும் அடர்ந்த மேகங்கள் மங்கவைத்திடும் வரை, அவை கலைக்கப்படாதிருக்கும் வரை, ஒளி என்னும் இந்நிலை மனிதர்களின் பார்வைகுக்குத் திரைவிலக்கப் படுவது கடினமாகும்.

பஹாவின் மக்களே, எல்லா மனிதர்களுடன் நட்புணர்வுடனும் தோழமையுடனும் சகவாசியுங்கள்.

மற்றவரிடம் இல்லாத ஓர் உண்மையை நீங்கள் அறிந்திருந்தால், ஓர் இரத்தினத்தைப் பெற்றிருந்தால், அதனை, மிக்க அன்புக்கனிவும் நல்லெண்ணமும் மிகுந்த மொழியில், அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அது ஏற்றுக்கொள்ளப் படுமாயின், அதன் நோக்கத்தை அடைந்திடுமாயின், உங்களின் குறிக்கோளை அடைகின்றீர்.

யாராவது அதனை நிராகரித்தால், அவரைத் தனது விருப்பத்திற்கு விட்டு விட்டு, அவருக்கு வழிகாட்டுமாறு இறைவனிடம் மன்றாடுங்கள்.

கவனமாய் இருங்கள்; இல்லையெனில் அவரிடம் அன்பற்ற முறையில் நடந்திடப்போகின்றீர்.

அன்பு கனிந்த நா, மனித உள்ளங்களைக் கவர்ந்திடும் காந்தக்கல்.

அதுவே ஆவியின் உணவு; அது வார்த்தைகளுக்குப் பொருளென்னும் ஆடையை அணிவிக்கின்றது; விவேகம், புரியுந்திறன் என்னும் ஒளியின் தோற்றிடம் அதுவே.

CXXXIII

இறைவனின் சட்டங்கள் அவரது மாட்சிமை பொருந்திய வெளிப்பாடு எனும் விண்ணுலகிலிருந்து அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.

அவற்றை அனைவரும் தளரா ஊக்கத்துடன் கடைப்பிடிக்க வேண்டும்.

மனிதனின் அதிசிறந்த தனித்தன்மை, அவனது உண்மையான முன்னேற்றம், அவனது இறுதி வெற்றி, எப்பொழுதும் அவற்றையே சார்ந்திருக்கின்றது, தொடர்ந்தும் அவற்றையே சார்ந்திருக்கும்.

யாரொருவர் இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றுகின்றாரோ, அவர், நித்திய கழிபேருவகையினை அடைந்திடுவார்.

இறைவனின் ஏகத்துவம் என்னும் பகலூற்றினை அறிந்து, அவரது ஒருமைத்தன்மையின் வெளிப்படுத்துதலானவரின் மெய்ம்மையை ஒப்புக்கொண்ட ஒருவர் இரட்டைக் கடமைகளை ஏற்றுக் கொண்டவராவார்.

முதலாவது, அவரது அன்பில் உறுதியாயிருத்தல்; பகைவர்களின் ஆரவாரமோ, பயனற்றப் போலிகளோ அவரை, நித்திய மெய்ம்மையாகிய அவரைப், பற்றிக்கொள்வதிலிருந்து தடுக்கவே இயலாது; அவ் வுறுதிதான் அவற்றைப் பொருட்படுத்தாது இருக்கச் செய்திடும்.

இரண்டாவது, அவர் வகுத்துள்ள சட்டங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்தல் - அவையே அவர் மனிதர்பால் எப்பொழுதுமே விதித்து வந்துள்ளவை, தொடர்ந்தும் விதித்துவரும் சட்டங்களும் அவையே; அவைமூலமாக உண்மை பொய்யிலிருந்து அடையாளங் காணப்பட்டு, பிரித்து வேறாக்கவும் படக்கூடும்.

CXXXIV

நித்திய மெய்ம்மையாகிய அவரை அறிந்துகொள்வதற்கு அடுத்ததாக, மனிதர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முதலாவதும் அதிமுக்கியமானதுமான கடமை, அவரது சமயத்தில் உறுதியாயிருத்தல்.

அதனைப் பற்றிக் கொள்ளுங்கள்; மனங்கள் இறைவனில் உறுதியாய் நிலைப்படுத்தப்பட்டோருடன் சேர்ந்திடுங்கள்.

ஒரு செயல், அது எந்தளவு மெச்சத்தக்கதாய் இருப்பினும், அதற்கு ஈடாகவே முடியாது.

அதுவே செயல்களுக்கெல்லாம் அரசனாகும்; இதற்கு அதிமேன்மையான, அதிசக்திவாய்ந்த உங்கள் பிரபுவே சாட்சியம் அளித்திடுவார்.

கடவுளுக்குரிய பண்புகளும் இயல்புகளும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் தெரிகின்றன; எல்லாத் தெய்வீக நூல்களிலும் அவை, குறிப்பிடப் பட்டும் விவரிக்கப்பட்டும் உள்ளன.

அவற்றுள் அடங்கியவை, நம்பிக்கைக்குப் பாத்திரமாதல், வாய்மை, உள்ளத் தூய்மை, இறைவனுடன் உரையாடுதல், தற்கட்டுப்பாடு, எல்லாம் வல்லவர் விதித்துள்ள கட்டளைகளுக்கு அடிபணிதல், அவரது விருப்பத்திற்கிணங்க வழங்கப்பட்டுள்ளவற்றில் திருப்தி, பொறுமை, கொடுந்துன்பத்துக்கிடையில் நன்றியுணர்வு, எல்லாச் சூழ்நிலைகளிலும் அவரிடத்தில் முழு நம்பிக்கை, ஆகியவையே.

இறைவனின் கணிப்பின்படி, எல்லாச் செயல்களிலும் இவையே அதி உயர்வானவையும், மிகு மெச்சத் தகுந்தவையும் ஆகும்.

மற்ற செயல்களனைத்தும் இப்பொழுதும், எப்பொழுதும் அவற்றுக்கு அடுத்த நிலையிலும், முக்கியத்துவத்தில் குறைந்த நிலையிலுமே இருந்து வரும்.

மனித உள்ளத்திற்கு உயிரூட்டும் ஆவி ஆண்டவனின் அறிவே; அதன் உண்மையான அணிகலன் “அவர் விரும்பியதை அவர் செய்கின்றார், அவர் திருவுளங் கொண்டதற்கேற்ப அவர் விதிக்கின்றார்” என்பதன் உண்மையைத் தெரிந்து கொள்ளுதலே.

அதன் ஆடை இறைவன்பால் அச்சமே; அதன் முழுமை அவரது சமயத்தில் உறுதி.

இவ்வாறாகத்தான் இறைவன் தன்னைத் தேடுபவர் யாராயினும் அவருக்குப் போதிக்கின்றார்.

மெய்யாகவே அவர், தம்பால் திரும்புகின்றவரை நேசித்திடுகின்றார்.

பொறுத்தருள்பவரும், அதி வள்ளன்மைமிக்கவருமான அவரைத் தவிர கடவுள் வேறெவருமிலர்.

உலகங்களுக்கெல்லாம் பிரபுவாகிய இறைவனுக்கே போற்றுதல்கள் அனைத்தும் உரியதாகட்டும்.

CXXXV

உயிரெழுத்தே! உமது புலம்பல் இறைவனின் காதுக்கெட்டியது; எழுத்து வடிவிலான உமது தாழ்வான வேண்டுகோளை அவரது கண்கள் பார்த்தன.

அவர், தனது பேரொளி என்னும் அரியாசனத்திலிருந்து உம்மை அழைக்கின்றார்; ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியுமான அவரால் அனுப்பிவைக்கப்பட்ட திருவாசகங்களை உம்பால் வெளிப்படுத்துகின்றார்.

அதி உயரிய பாதுகாவலரான, எல்லாம் வல்லவரும் ஒரே நேசருமான உங்கள் பிரபுவின் வலிமையின் சக்தியைக் கொண்டு, நீங்கள், தானெனுந்தன்மை, வீண் கற்பனை ஆகியவற்றின் சிலையினை முழுமையாக ஒழித்தும், பயனற்றக் கனவெனும் திரையைக் கிழித் தெறிந்தும் விட்டுள்ளதற்காக, ஆசீர்வதிக்கப்படுவீராக.

நீங்கள், உண்மையாகவே, மற்ற எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் விஞ்சிட்ட அவ்வெழுத்துகளின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட வேண்டியோர் ஆவீர்.

அதனால், நீங்கள், உங்களின் பிரபுவின் நாவாகிய பாப் அவர்களின் மூலமாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்; அவரது வதனத்தின் பிரகாசம் படைப்பு முழுவதையும் சூழ்ந்துள்ளது; தொடர்ந்தும் சூழ்ந்திடும்.

அவர், விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும் வசிப்போரின் உள்ளங்களை அதிர்ச்சியுறச் செய்திட்ட ஒரு சமயத்தினை அறிந்துகொள்ள உங்களுக்கு உதவியதற்காக எல்லாம் வல்லவரான அவருக்கு நன்றி கூறி, அவரது நாமத்தினை மிகைப்படுத்துவீராக.

அது, படைப்புலகங்கள், வெளிப்பாடு ஆகிய இராஜ்யங்களின் வாசிகளைக் கதறச்செய்துள்ளது; அதன் மூலமாக, மனிதரின் நெஞ்சங்களில் மறைந்துள்ள இரகசியங்கள் தேடிக் கண்டுபிடிக்கப் பட்டுச் சோதிக்கவும் பட்டுள்ளன.

அதிவுயரிய உங்கள் பிரபு (பாப் அவர்கள்) தனது பேரொளி என்னும் இராஜ்ஜியத்தில் இருந்து இவ் வார்த்தைகளை வாய்மொழிகின்றார்: உயிரெழுத்தே, உமக்குக் காத்திருக்கும் ஆசீர்வாதம் உயர்வானது; ஏனெனில், நீர், உயர்விலுள்ள வான்படையினரின்முன் எமக்கு அவமானம் உண்டுபண்ண மறுத்துவிட்டீர்; உமது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளீர்; வீண் கற்பனைகள் என்னும் திரையை வீசியெறிந்து விட்டு, உமது இறைவனான, கண்ணுக்குப் புலனாகும் புலனாகா பிரபுவான, அடிக்கடி விஜயம் செய்யப்படும் ஆலயத்தின் பிரபுவான, எம்மிடத்தில் உண்மையாக நம்பிக்கைக் கொண்டுள்ளீர்.

உம்மில் யான் மகிழ்ச்சியடைகிறேன்; ஏனெனில், முகங்கள் துயருற்றும் இருளடைந்துமுள்ள இந் நாளில் உமது முகத்தில் ஒளி பிரகாசிப்பதைக் காண்கின்றேன்.

கூறுவீராக: பாயானின் மக்களே! உங்களின் தீய ஆசைகளையும் ஒழுங்கற்ற உளச்சார்புகளையும் பின்பற்றாது, அதி வலிமைமிகு துலாக்கோல் நிறுவப்படும் அந் நாளில், இறைவனது ஆவியின் இனிய கீதங்கள் சர்வ வல்லவரான, வலிமையே உருவான, புனிதருள் எல்லாம் புனிதரான உங்கள் பிரபுவின் அரியாசனத்தின் வலப்புறத்திலிருந்து பொழிந்திடும் அந்நாளில், உங்களின் பார்வையை வியக்கத்தக்க ஒளியின் காட்சியின்மீதும், செலுத்துமாறு, யாம், எமது நிருபங்கள் அனைத்திலும், மறைவாயுள்ள எமது இறைநூல்கள் அனைத்திலும், உங்களை எச்சரிக்கவில்லையா? எமது திருவழகின் அவதாரத்தின் பின்வந்த வெளிப்பாட்டினில், உங்களை மறைத்திடும் பொருள்களை, அவை இறைவனின் நாமங்களின் உருவகங்களாகவோ, அவற்றின் பேரொளி அனைத்துமாகவோ, அவரது தனி இயல்புகளையும் அவற்றின் மேன்மைகளையும் வெளிப்படுத்துவனவாகவோ இருந்தபோதிலும், அவற்றைப் பற்றிக் கொள்வதிலிருந்து யாம் உங்களைத் தடைச்செய்திடவில்லையா? யான் என்னை வெளிப்படுத்திய உடனே, எவ்வாறு, நீங்கள் எனது மெய்ம்மையினை நிராகரித்து, எம்மிடமிருந்து அப்பால் திரும்பி, இறைவனின் அடையாளங்களை விளையாட்டாகவும் பொழுதுபோக்காகவும் கருதுகின்றோரில் சேர்ந்திட்டீர்கள் என்பதையும் பாருங்கள்! எனது திருவழகு சாட்சியாக! இந் நாளில், நீங்கள், அவரது ஆட்சிக்காலத்தில் நித்திய காலமும் தொடர்ந்து வழிபடவும், இறைவனின் முன் சாஷ்டாங்கமாய் வணங்கவும் செய்திடினும், அவை எவையுமே உங்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.

ஏனெனில் அனைத்துமே அவரது விருப்பத்தைச் சார்ந்தே உள்ளன; எல்லாச் செயல்களின் மதிப்பும் அவரது ஏற்பையும் சம்மதத்தையும் பொறுத்தே உள்ளன.

அவரது கையில், பிரபஞ்சம் முழுவதுமே, ஒரு கைப்பிடியளவு மண்தான்.

இந் நாளில், ஒருவர், இறைவனை அறிந்து அவர்பால் அன்புகொண்டாலன்றி, அவரது புலம்பல் இறைவனதுசெவியை எட்டாது.

இதனை நீங்கள் அறிவீராயின், அவரது சமயத்தின் சாராம்சமே இதுதான்.

நீங்கள் சமவெளியினில் நீராவியைப் போன்றிருப்பதனில் திருப்தி கொண்டு, இறைவனின் விருப்பத்திற்கிணங்க மனிதரின் ஆன்மாக்களைப் புத்துயிர் பெறச் செய்யும் மாக்கடலின் நீரைத் துறந்திடச் சம்மதிப்பீர்களா? இறைவனின் வள்ளன்மைக்குக் கைம்மாறாக அத்தகைய அற்பமானதை, வெறுக்கத் தக்கதைக் கொடுத்ததற்காக நீங்கள் கடுஞ் சாபத்துக்கு ஆளாவீர்களாக! நீங்கள், உண்மையாகவே, எனது முந்தைய வெளிப்பாட்டின் போது என்னை நிராகரித்திட்டோரில் சேர்க்கப்பட்டோராவர்.

உங்களின் உள்ளங்கள் இதனை உணர்ந்திடுமாக! நீங்கள் எழுந்து, இறைவனது கண்களுக்கு முன்பாக, உங்களின் கடமையில் தவறியதற்காகப் பிராயச்சித்தம் செய்யுங்கள்.

எனது கட்டளையின்பால் உங்களின் செவிகளைத் திருப்புவீராயின், இதுதான் உங்கள்பால் எனது கட்டளை என்பதை அறிவீர்.

எனது சொந்த மெய்ம்மை சாட்சியாக! திருக் குர்ஆனின் மக்களோ, தோரா (பழைய ஏற்பாடு), அல்லது புதிய ஏற்பாடு ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களோ, அதல்லாமலும், வேறு திருநூல் ஒன்றினைப் பின்பற்றுபவர்களோ உங்களின் கைகள் ஆற்றியவற்றைப் போல் எதையுமே செய்தது கிடையாது.

யானே, எனது வாழ்நாள்கள் முழுவதையுமே இந்தச் சமயத்தின் மெய்ம்மையை நிரூபிப்பதற்காகவே அர்ப்பணித்துள்ளேன்.

யானே, எனது நிருபங்களிலெல்லாம், அவரது வெளிப்பாட்டின் வருகையைப் பிரகடனஞ் செய்துள்ளேன்.

இருந்தும், தனது பிந்திய வெளிப்பாட்டினில், அவர், தனது உயரிய நிலையிலும், பஹாவின் பேரொளி என்னும் ஆடையினின்று தனது மேன்மை எனும் மேலங்கியினால் போர்த்தப் பட்டுத், தன்னைப் புலப்படுத்திக்கொண்ட உடனேயே, நீங்கள், அதி உயரிய பாதுகாப்பாளரும் சுயஜீவியுமான அவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்திட்டீர்.

மனிதர்களே, கவனமாய் இருங்கள்! இறைவனின் பாதையில் உங்கள் கைகளில் எனக்கு நேர்ந்திட்டவைக்காக வெட்கப்படுங்கள்.

கவனமாய் இருங்கள், அதனால், இறைவனின் பிரகாசமிக்கப் பேரொளி என்னும் சுவர்க்கத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டதனை நிராகரித்திட்டோரில் சேர்ந்திடப் போகின்றீர்.

உயிரெழுத்தே, அவ்வாறானவைதாம் உமது பிரபுவானவர், உயர்விலுள்ள இராஜ்ஜியங்களிலிருந்து உமக்குக் கூறியவை.

அவரது ஊழியர்களின் மத்தியில் உங்கள் பிரபுவின் திருமொழிகளைப் பிரகடனஞ் செய்யுங்கள்; அதனால், ஒருவேளை, அவர்கள் தங்களின் உறக்கம் களைந்து, தங்களைப் படைத்து உருவாக்கி, இப் பிரகாசமிகு, அதி புனிதமான, தெளிவான, அழகின் வெளிப்பாட்டினை உமக்கு வழங்கியுள்ள இறைவனிடம் மன்னிப்புக் கோரக் கூடும்.

CXXXVI

கூறுவீராக: மனிதர்களே, உங்களின் ஆன்மாக்களைத் தானெனும் சிறையிலிருந்து விடுவித்து, அவற்றை என்னைத் தவிர மற்றெல்லாப் பற்றுகளிலிருந்தும் தூய்மைப் படுத்துங்கள்.

நீங்கள் உணரக் கூடுமாயின், அனைத்துப் பொருள்களையும் எல்லாக் கறைகளிலிருந்தும் தூய்மைப்படுத்தவல்லது எனது நினைவே.

கூறுவீராக: படைப்புப் பொருள்கள் அனைத்துமே உலகியல் பகட்டுகளிலிருந்தும், ஆசைகளிலிருந்தும் விடுவிக்கப்படுமாயின், இறைவனின் கரம், இந் நாளில், அவர்கள் ஒவ்வொருக்கும் “தனது படைப்பு என்னும் இராஜ்ஜியத்தினில், அவர் விரும்பியதை அவர் செய்வார்” என்னும் ஆடையினை அணிவிக்கக் கூடும்; அதன்வழி, அவரது மாட்சிமையின் அடையாளம் எல்லாப் பொருள்களிலும் வெளிப்படக் கூடும்.

அப்பொழுது, அனைத்திற்கும் மாட்சிமைமிகு பிரபுவும், எல்லாம் வல்லவரும், அதி உயரிய பாதுகாவலரும், ஒளிமயமானவரும், சர்வசக்தி வாய்ந்தவருமான அவர் மேன்மைப் படுத்தப்படுவாராக.

எனது ஊழியனே, உன்னால் பெறப்பட்ட கடவுளின் வசனங்களை அவர் அருகினில் ஈர்க்கப்பட்டோர் ஓதியதுபோல் ஓதுவாயாக.

அதனால், உனது கீதத்தின் இனிமை, உன் சொந்த ஆன்மாவைக் கிளர்ச்சியுறச் செய்வதுடன், எல்லா மனிதர்களின் இதயங்களையும் ஈர்த்திடும்.

எவரொருவர், தனது அறையின் தனிமையில் இறைவனால் வெளிப்படுத்தப் பட்டுள்ள வாசகங்களை ஓதுகின்றாரோ அவரின் வாய்மொழிந்த சொற்களின் நறுமணத்தினை, எல்லாம்வல்லவரின் தூதகணங்கள், எல்லாத் திசைகளிலும் பரவச் செய்து ஒவ்வொரு நேர்மைமிக்க மனிதனின் உள்ளத்தையும் துடிப்புறச் செய்திடும்.

இதன் விளைவினை அவர் ஆரம்பத்தில் அறியாதிருப்பினும், அவருக்கு அருளப்பட்ட கிருபையானது, விரைவிலோ, காலங்கடந்தோ, அதன் தாக்கத்தினை அவரது ஆன்மாவில் ஏற்படுத்தவே செய்யும்.

இவ்வாறாகவே, கடவுளின் வெளிப்பாட்டின் புதிர்கள், ஆற்றலுக்கும் விவேகத்திற்கும் மூலமானவரின் திருவிருப்பத்தினால் விதிக்கப்பட்டுள்ளன.

கலேல்! இறைவனே எனக்குச் சாட்சி பகர்கின்றார்.

எனது எழுதுகோல் தொடர்ந்து இன்னும் எனது நிருபத்தின் மீது நகர்ந்திட்டபோதும், அதன் அதி மையத்தில், அது, கண்ணீர்விட்டுக் கடும் வேதனைப்படுகின்றது.

அவ்வாறே, அரியாசனத்திற்கு முன்பாக எரியுந் தீபமானது, புராதன அழகரான அவர் தனது விருப்பத்திற்கிணங்க படைக்கப்பட்டோரின் கைகளில் அனுபவித்துள்ளவற்றிற்காகக் கண்ணீர்விட்டுப் புலம்புகின்றது.

எனது திருமொழியின் மெய்ம்மைக்கு இறைவனே சாட்சி அளிக்கின்றார்.

சமய நம்பிக்கையற்றோரின் உரத்தப் பேரிரைச்சலிலிருந்து தனது செவியினைத் தூய்மைப்படுத்தி, அதனைப் படைப்புப் பொருள் அனைத்தின்பாலும் சாய்த்திட்ட எந்த மனிதனுமே, நம்பிக்கை இல்லாது, எமக்கெதிராகக் கிளர்ச்சி செய்திட்ட ஊழியர்களின் கைகளில் யாம் அனுபவித்திட்ட கொடுமைகளுக்கான அவர்களின் கதறல், புலம்பல் ஆகியவற்றின் குரலைக் கேட்கத் தவறமாட்டார்.

இவ்வாறாகத்தான் யாம், எமக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளில் சிறிதளவை உங்களுக்குக் காண்பித்துள்ளோம்; அதனால் நீங்கள், எமது துன்பங்களை அறிந்துகொண்டு, உங்களின் துயரங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்ளக் கூடும்.

எல்லா வேளைகளிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்களின் பிரபுவுக்கு உதவிட எழுந்திடுங்கள்; அவரது உதவியாளர்களில் ஒருவராயிடுங்கள்.

பிறகு, ஒளி வீசும் இப்பிரகாசமிக்க நிருபத்தினில், இறைவனின் ஆவியானது மொழிந்துள்ள வார்த்தைகளுக்குச் செவிசாய்த்திடுமாறு மனிதர்களை எச்சரித்திடுங்கள்.

கூறுவீராக: மனிதர்களே, மனிதரிடையே உடன்பாடின்மையை விதைத்திடாதீர்; உங்களின் அண்டையருடன் வாதிடாதீர்.

எல்லாச் சூழ்நிலைகளிலும் பொறுமையாய் இருங்கள்; உங்களின் முழுப் பற்றுறுதியையும் நம்பிக்கையையும் இறைவனிலேயே வைத்திடுங்கள்.

விவேகம், பேச்சு என்னும் வாளைக் கொண்டு, நீங்கள், உங்களின் பிரபுவுக்கு உதவிடுங்கள்.

உண்மையாக, இதுவே மனிதனின் ஸ்தானத்திற்குப் பொருத்தமானது.

இதில் தவறுவது அனைத்தின்மீதும் மாட்சிமைமிகு பிரபுவாகிய, மேன்மைப்படுத்தப் பட்ட இறைவனுக்கு உகந்ததன்று.

இருந்தும், மனிதர்கள், தவறான வழிக்குக் கொண்டுசெல்லப் பட்டுள்ளனர்; உண்மையிலேயே அவர்கள் கவனமற்றோரில் சேர்க்கப்படுவர்.

மனிதர்களே, இறைவனின் நினைவாகியவரும் உங்களிடையே விவேகத்தின் தோற்றிடமுமாகிய அவரது நினைவுமாகிய அவரது திறவுகோல்களைக் கொண்டு மனிதரின் உள்ளங்களின் கதவுகளைத் திறப்பீராக.

உலகம் முழுவதிலுமிருந்து, அவர், தமது ஊழியர்களின் உள்ளங்களைத் தேர்ந்தெடுத்து, அவை ஒவ்வொன்றையும் தமது பேரொளியின் ஆசனமாக்கியுள்ளார்.

ஆகவே, எல்லாக் கறைகளிலிருந்தும் அவற்றைத் தூய்மைப்படுத்துவீராக; அதனால், எதற்காக அவை படைக்கப்பட்டனவோ, அவை, அவற்றின்மீது செதுக்கப்படுமாக.

உண்மையாக, இதுவே, இறைவனின் வள்ளன்மையின் சலுகையாகும்.

மனிதர்களே, வாய்மையைக் கொண்டு உங்கள் நாவை அழகுப்படுத்தி, உங்கள் ஆன்மாவினை நேர்மை என்னும் ஆபரணத்தைக் கொண்டு அலங்கரிப்பீராக.

மனிதர்களே, கவனமாய் இருங்கள்; இல்லையெனில், நீங்கள் யாரிடமாவது வஞ்சகமாக நடந்திடப் போகின்றீர்.

அவரது படைப்பினங்களின் மத்தியில் இறைவனின் அறங்காவலராகவும், அவரது மக்களிடையே தாராளத் தன்மையின் சின்னங்களாகவும் ஆகிடுவீராக.

தங்களின் சிற்றின்ப ஆசைகளையும் ஒழுங்கற்ற விருப்பங்களையும் பின்பற்றுவோர், தவறிழைத்துத் தங்களின் முயற்சிகளை விரயம் செய்வோராவர்.

அவர்கள், உண்மையாகவே, வழிதவறிப் போனவர்களாவர்.

மனிதர்களே, முயன்றிடுங்கள்; அதனால், உங்களின் பார்வை இறைவனது கருணையின் திசையில் சென்றிடக்கூடும்; அதனால், உங்கள் உள்ளங்கள் அவரது வியத்தகு நினைவுடன் பொருந்திடக்கூடும்; அதனால், உங்களின் ஆன்மாக்கள் முழு நம்பிக்கையுடன் அவரது அருள், வள்ளன்மை ஆகியவற்றில் இலயித்திடக்கூடும்; அதனால், உங்கள் காலடிகள் அவரது நல்விருப்பம் என்னும் பாதையில் நடந்திடக்கூடும்.

இவ்வாறானதுதான் யாம் உங்கள்பால் வழங்கிடும் அறிவுரைகள்.

எமது அறிவுரைகளை நீங்கள் பின்பற்றக்கூடுமாக!

CXXXVII

தங்களது அண்டையரின் உடைமைகள் தொடர்பாக, சிலர், நேர்மைத் தவறி நடப்பது சட்டத்துக்கு உட்பட்டதெனக் கருதி, இறைவன் தமது திருநூலில் விதித்துள்ள கட்டளைகளை அற்பமாக மதித்து வந்திருக்கின்றனர்.

அவர்களுக்குத் தீமை விளையுமாக; சர்வ வல்லமை பொருந்திய, எல்லாம்வல்ல இறைவனின் தண்டனைக்கு ஆளாகிடுவராக! புனிதத் தன்மையின் பகலூற்றுக்குமேல் பிரகாசித்திடும் அவர் சாட்சியாக! உலகம் முழுவதுமே வெள்ளியும் தங்கமுமாக மாற்றப்பட்டாலும், உண்மையான நம்பிக்கை, பற்றுறுதி என்னும் சுவர்க்கத்திற்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்படும் எந்த ஒரு மனிதனுமே அதனைக் கைப்பற்ற நினைப்பதையோ, ஏன், அதனைக் கருத்தில்கூடக் கொள்ள மாட்டார்.

இத் தலைப்புக் குறித்து இதற்குமுன், அரபு மொழியில், எழில்மிக்கதும் வனப்புடையதுமான அம்மொழியில் வெளிப்படுத்திய வாசகங்களில் குறிப்பிட்டுள்ளோம்.

இறைவனே எமக்குச் சாட்சி! யார் அத் திருமொழிகளின் இனிமையினைச் சுவைத்திட்டாரோ, அவர், இறைவன் நிச்சயித்துள்ள வரம்பினை மீறச் சம்மதிக்கவே மாட்டார்; அல்லாமலும், தனது நல்லன்புக்குரியவரைத் தவிர வேறெவர் மீதுமே தனது பார்வையைச் செலுத்திடார்.

அத்தகைய ஒரு மனிதர், தனது அகக் கண்ணைக் கொண்டு, தயக்கமின்றி, இவ்வுலகப் பொருள்கள் எந்தளவு முழுதாக வீணானவை, விரைந்தோடக் கூடியவை என்பதை அடையாளங் கண்டிடுவதோடு, உயர்விலுள்ள பொருள்களின்மீது தனது பாசத்தை வைத்திடுவார்.

கூறுவீராக: புராதன அழகானவரின் நேசர்களென உங்களைக் கூறிக்கொள்வோரே, நாணிடுவீராக! அவர் அடைந்துள்ள கடுந்துன்பங்களினாலும், இறைவனின் பொருட்டு அவர் தாங்கியுள்ள மனவேதனையின் சுமையினாலும் நீங்கள் அச்சுறுத்தப்படுவீராக.

உங்களின் கண்கள் திறக்கப்படுமாக.

அவர் தாங்கிக் கொண்ட எண்ணற்ற சோதனைகள், இறுதியில், அத்தகைய வெறுக்கத்தக்க வெளிப்படையான அறிவிப்பிலும், அத்தகைய நடத்தையிலும் முடிவுறுகின்றனவாயின், அவர் உழைத்ததன் நோக்கந்தான் யாது? எமது வெளிப்பாட்டிற்கு முற்பட்ட நாள்களிலும், கொள்ளையடிப்பவன் ஒவ்வொருவனும், அநீதி இழைக்கும் ஒவ்வொரு தொழிலாளியும், இவ்வார்த்தைகளையே கூறினர்; இதே தெய்வநிந்தனைச் செயல்களிலேயே ஈடுபட்டனர்.

மெய்யாகவே யான் கூறுகின்றேன்: எனது இனிமைமிக்கக் குரலின்பால் செவி சாய்த்து, உங்களின் தீய உணர்ச்சிகள், ஒழுங்கற்ற ஆசைகள் ஆகியவற்றின் கறைப் படுத்துதலிலிருந்து உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

இறைவனின் திருக்கூடாரத்தினில் வாழ்ந்து, நித்தியப் பேரொளி என்னும் அரியாசனங்களில் நிலைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், பசியினால் உயிரே போகும் நிலையில் இருப்பினும், அவர் எந்தளவு இழிநிலையிலோ பயனற்றவராகவோ இருந்திடினும், தனது கைகளை நீட்டி, அண்டையரின் உடைமைகளைச் சட்ட விரோதமாகப் பற்றிக்கொள்ள மறுத்திடுவார்.

ஒரே மெய்க்கடவுளாகிய அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதன் ஒரே நோக்கம் மனித இனம் அனைத்தையும் வாய்மை, உண்மையாயிருத்தல், பக்தி, நம்பகம், ஆகியவையின்பாலும், இறைவனின் விருப்பத்திற்குப் பணிதல், கட்டுப்படுதல், பொறுமை, இரக்க மனப்பான்மை, நேர்மை, விவேகம் ஆகியவையின்பாலும் அழைப்பதுவேயாகும்.

அவரது குறிக்கோளே, ஒவ்வொரு மனிதனையும் புனிதருக்கு உகந்த நடத்தையென்னும் ஆடையை அணிவிப்பதுவும், தெய்வீகமானதும் நேர்த்தியானதுமான செயல்கள் என்னும் ஆபரணத்தைக் கொண்டு அலங்கரிப்பதுவுமேயாகும்.

உங்களிடமும் உங்களின் சக மனிதரிடமும் கருணை காட்டுங்கள்; இறைவனின் சமயத்தை -- அதி உள்ளார்ந்த புனிதத்தன்மைக்கு மேல் அதிவுயரிய நிலையிலிலுள்ள அச் சமயத்தை -- உங்களின் வீண் கற்பனைகள், உங்களின் பொருத்தமற்ற, ஒழுங்கற்ற கனவுகள் என்னும் கறைகளினால் தூய்மைக்கெடச் செய்திடாதீர்.

CXXXVIII

கருணைக் கடவுளே, படைப்புப் பொருள் அனைத்திலும் உமது சக்தியை வியாபிக்கச் செய்துள்ள நீர், உமது இவ்வூழியர்களை, உமது அடிமைகளை, உமது நல்விருப்பத்திற்கிணங்கவே பார்க்கின்றீர்; நீர் விதித்துள்ளதற்கேற்ப பகல் வேளையில் உண்ணாவிரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்; அவர்கள், வைகறையில் எழுந்து, உமது நாமத்தை உச்சரிக்கின்றனர், உமது புகழைப் பாடுகின்றனர்; உமது அருள், வள்ளன்மை என்னும் பொக்கிஷத்தினில் பாதுகாப்பாக வைத்துள்ள நற்பொருள்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் அதனைச் செய்கின்றனர்.

உமது கைகளில் படைப்பு முழுவதன் அதிகாரத்தை வைத்துள்ளவரே, எவரது பிடியில் உமது நாமங்கள், உமது தன்மைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளவரே, இந்நாளில், உமது ஊழியர்களை, உமது கருணை என்னும் மேகங்களிலிருந்து வீழ்ந்திடும் பொழிவினைப் பெறுவதிலிருந்து தடுத்திடாதீர்; உமது நல்விருப்பம் என்னும் மாக்கடலிலிருந்து தங்களின் பங்கைப் பெறுவதைத் தடுக்கவும் செய்திடாதீர்.

என் பிரபுவே, உமது சக்தியின் மேன்மைக்கும் உமது இறைமைக்கும் உலகின் அணுக்களெல்லாம் சாட்சி பகர்கின்றன; உமது மாட்சிமையின் மேன்மைக்கும் உமது வலிமைக்கும் பிரபஞ்சத்தின் அடையாளங்கள் யாவுமே அத்தாட்சி அளிக்கின்றன.

எனவே, அனைத்தின் மீதும் அதிகாரம் கொண்டுள்ள பிரபுவும் மாட்சிமைமிகு பிரபுவும் நித்திய காலத்தின் மன்னரும், நாடுகள் அனைத்தின் ஆட்சியாளருமானவரே, எவர் உமது கட்டளைகள் என்னும் கயிற்றைப் பற்றிக்கொண்டு, உமது விருப்பம் என்னும் சுவர்க்கத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட சட்டங்களின் வெளிப்படுத்துதல்களின்பால் தங்களின் கழுத்துகளைத் தாழ்த்தியுள்ள உமது ஊழியர்களின்மீது கருணை காட்டுவீராக.

என் பிரபுவே, எவ்வாறு அவர்களின் பார்வை உமது அன்புக் கருணை என்னும் தோற்றிடத்தை நோக்கி உயர்த்தப்பட்டுள்ளதென்பதையும், எவ்வாறு அவர்களின் உள்ளங்கள் உமது சலுகைகள் என்னும் மாக்கடலின்மீது பதிக்கப்பட்டுள்ளன என்பதையும், எவ்வாறு அவர்களின் குரல்கள் உமது இனிமைமிகுக்குரலின் கீதத்தின்முன் தணிக்கப்பட்டுள்ளதையும் காண்பீராக; அதி விழுமிய ஸ்தானத்திலிருந்து, அக்குரல், பேரொளி மயமான உமது நாமத்தினால் அழைப்பு விடுக்கின்றது.

என் பிரபுவே, அனைத்தையும் துறந்துள்ள உமது நேசர்களுக்கு உதவி புரிவீராக; அதனால், அவர்கள், நீர் கொண்டுள்ளவற்றைப் பெற்றிடக் கூடும்; உலகையே துறந்து, உமது ஒளி என்னும் இராஜ்யத்தின்பால் பாசம் வைத்ததனால் அவர்கள் சோதனைகளாலும் துன்பங்களாலும் சூழப்பட்டுள்ளனர்.

என் பிரபுவே, அவர்களின் தீய உணர்ச்சிகள், ஆசைகள் ஆகியவையின் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாத்திடுமாறும், இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவர்களுக்கு நன்மை பயக்கவல்லவற்றை அவர்கள் அடைந்திட உதவி புரியுமாறும் உம்மை மன்றாடுகின்றேன்.

என் பிரபுவே, படைப்பு என்னும் இராஜ்யத்திலிருந்து உரத்தக் குரலெழுப்பி, கடந்திடவியலாத திருவிருட்சத்தின்பாலும் பேரொளி என்னும் அரியாசனத்தின்பாலும் மனிதர்கள் அனைவரையும் அழைத்திடும் உம்மை, எங்கள் மீதும் உமது ஊழியர்களின் மீதும் உமது கருணை என்னும் அபரிமிதமான மழைப் பொழிவினைப் பொழிந்தருளுமாறு மறைவாகவும் பொக்கிஷமெனப் போற்றப்படுவதுமான உமது திருநாமத்தின் பெயரால் வேண்டிக் கொள்கின்றேன்.

அதனால், எங்களை அது உம்மைத் தவிர மற்றதனைத்தின்பாலுமான நினைவிலிருந்து தூய்மைப்படுத்தி, உமது அருள் என்னும் பெருங்கடலின் கரைகளின்பால் எங்களை ஈர்த்திடக்கூடும்.

என் பிரபுவே, பேரொளி என்னும் இராஜ்யத்தினில் எங்களின் பெயர்களை நிரந்தரமாக நீடிக்கச் செய்திடவும் எங்களின் உயிர்களை உமது மீறக்கூடாத பாதுகாப்பான கோட்டையிலும் பாதுகாக்கப்படுமாறும் உமது அதி மேன்மைமிகு எழுதுகோலின் மூலமாக ஆணையிடுவீராக.

சகலப் பொருள்களின் மீதும் - அவை கடந்த காலத்தவையோ, வருங்காலத்தவையோ என்பதன்றி அவற்றின்மீது சக்திக் கொண்டுள்ளவர் நீரே.

சர்வவல்ல பாதுகாவலரும் சுயஜீவியான கடவுளும் உம்மையன்றி வேறெவருமிலர்.

என் பிரபுவே, எங்களின் கெஞ்சுங்கரங்கள் உமது தயை, வள்ளன்மை என்னும் சுவர்க்கத்தின்பால் உயர்த்தப்பட்டுள்ளதை நீர் பார்க்கின்றீர்.

அவை உமது தாராளத்தன்மையும் வள்ளன்மையும் மிக்க பொக்கிஷங்களினால் நிரப்பப்பட அருள்வீராக.

எங்களையும், எங்கள் தந்தைகளையும், எங்கள் தாய்மார்களையும் மன்னித்து, உமது அருள், தெய்வீகத் தாராளத்தன்மை என்னும் சமுத்திரத்திலிருந்து நாங்கள் விரும்புகின்றவற்றை நிறைவுச் செய்திடுவீராக.

எங்கள் உள்ளங்களின் நேசரே, உமது பாதையில் எங்கள் சேவைகளை ஏற்றுக்கொள்வீராக.

மெய்யாகவே, நீரே அதிசக்தி வாய்ந்தவர், அதி மேன்மைப்படுத்தப்பட்டவர், ஒப்பற்றவர், ஏகநாயகர், மன்னிப்பவர், கருணையாளர்.

CXXXIX

நபில்-இ-ஆஸமே, புராதன அழகானவரின் குரல் அவரது பேரொளிமயமான திருநாமம் என்னும் சுவர்க்கத்திலிருந்து உம்மை நோக்கி எழுப்பும் ஓசையின்பால் உமது செவியைக் கவனங்கொள்ளச் செய்வீராக.

இப்பொழுது உயர்விலுள்ள இராஜ்யத்திலிருந்தும், படைப்புப்பொருள் அனைத்தின் அதி உள்ளார்ந்த சாராம்சத்தினுள்ளிருந்தும் இவ்வாறு பிரகடனம் செய்திடுபவர் அவரே.

“உண்மையாகவே, நானே கடவுள், என்னைத் தவிர கடவுள் வேறிலர்.

எல்லா மாட்சிமைக்கும் ஆற்றலுக்கும் என்றென்றும் தோற்றுவாயாக இருந்து வந்திருப்பவர் நானே; நித்திய காலமும், தொடர்ந்து, தனது அரசுரிமையைப் பயன்படுத்தி, அனைத்துப் பொருள்களின்பாலும் தனது பாதுகாப்பை நீடிக்கச் செய்பவரும் அவரே.

எனது ஆதாரம் எனது வலிமையின் மேன்மையும் படைப்பனைத்தையும் சூழ்ந்துள்ள எனது இறைமையுமே.

” எந்தன் நாமமே, நீர் எனது மாட்சிமைமிக்க, அதி மேன்மைப்படுத்தப்பட்ட சக்தியின் மூலம், எனது மரக்கலத்தினுள் பிரவேசித்து, எனது மகிமையெனும் மாக்கடலின்மீது விரைந்து சென்றுகொண்டு இருக்கின்றீர் என்பதனால், நீர் ஆசீர்வதிக்கப் பட்டவராவீர்; எவரின் பெயர்களை இறைவனின் விரல் பொறித்துள்ளதோ அவர்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கின்றீர்.

உண்மையாகவே இவ்விளைஞனின் கரங்களிலிருந்து உண்மையுயிர் என்னும் கிண்ணத்தினின்று பருகியுள்ளீர்; அவரைச் சுற்றியே பேரொளிமயமானவரின் வெளிப்படுத்துதல்கள் சுழல்கின்றன; அவரது முன்னிலை என்னும் பிரகாசத்தையே கருணையின் பகலூற்றானவர்கள் பகல் வேளையிலும் இரவுக் காலங்களிலும் வானளாவப் பாராட்டுகின்றனர்.

அவரது ஒளி உம்மிடமே உள்ளது; ஏனெனில், நீர் இறைவனிடமிருந்து இறைவன்பால் பிரயாணம் செய்து, ஒளிமங்காத பிரகாசமெனும் அரசவையின் எல்லைகளுக்குள் - மரணத்துக்குரிய மனிதனால் வருணிக்கவியலாத அத் தளத்திற்குள் பிரவேசித்துள்ளீர்.

அதனுள்தான், உங்களின் பிரபுவின் அன்பைச் சுமந்தவாறு, புனிதத்தன்மை என்னும் இளங்காற்று, உங்களுக்குள்ளுள்ள ஆவியினை அசைவுறச் செய்தது; நெடுந் தொலைவு, இறைதன்மையின்மை எனும் கறைகளைப் புரிந்துணர்வெனும் நீர் உம்மைக் கழுவியுள்ளது.

மனிதரிடையே அந் நினைவின் திருவுருவாகிய அவர் மூலமாக நீர், இறைவனை அறிந்துகொள்ளுதல் என்னும் சுவர்க்கத்தினில் பிரவேசிக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளீர்.

ஆகவே, உங்களை அவரது சமயத்திற்கு உதவிட வலுப்பெறச் செய்தமைக்காகவும், உங்களின் உள்ளமெனும் பூங்காவில் அறிவு, புரிந்துணர்வு ஆகிய மலர்களைத் தோற்றுவித்தமைக்காகவும், இறைவனிடம் நன்றியுடையோர் ஆகிடுங்கள்.

அவ்வண்ணமே, அவரது அருள் உங்களைச் சூழ்ந்துள்ளது; படைப்பு முழுவதையும் சூழ்ந்துள்ளது.

கவனமாய் இருங்கள், இல்லையெனில், நீங்கள் எவற்றையாவது உங்களைத் துயரத்துக்குள்ளாக்க விட்டுவிடப்போகின்றீர்.

பயனற்ற மறைமுகமான குறிப்புகள் அனைத்தின்பாலும் உள்ள பற்றுகளையெல்லாம் விட்டொழித்திடுங்கள்; இறைவனிடமிருந்து திரையிட்டு மறைக்கப்பட்டோரின் வீணான, சூட்சுமமிக்கச் சர்ச்சைகளைப் பின்னால் வீசியெறிந்திடுங்கள்.

பிறகு, அதி மேன்மைமிகு ஆவியானது உங்களைப் பிரபுவானவரின் சேவையில் எடுத்துரைக்க வேண்டியவற்றைக் குறித்து அகத்தூண்டல் அளித்திடுபவற்றைப் பிரகடனம் செய்திடுங்கள்; அதனால், நீங்கள், எல்லா மனிதரின் ஆன்மாக்களைத் துடிப்புறச் செய்து, அவர்களின் உள்ளங்களை, அதி ஆசீர்வதிக்கப்பட்ட, பேரொளிமயமான அரசவையின்மீது பாசங்கொள்ளச் செய்யக் கூடும்.

எமது சமயத்திற்கு உதவியாக, யாம், ஆயுதத்தைக் கொண்டு ஆட்சிபுரிவதை ரத்து செய்து, அதற்குப் பதிலாக மனிதரின் நாவன்மையினின்று தோன்றும் சக்தியையே நியமித்துள்ளோம் என்பதை அறிவீராக.

அவ்வாறுதான், எமது அருளினால், யாம், மாற்றவியலாதவாறு ஆணைப் பிறப்பித்துள்ளோம்.

கூறுவீராக: மனிதர்களே! மனிதரிடையே முரண்பாடு என்னும் விதைகளை விதைக்காதீர்; உங்களின் அண்டையருடன் வாதிடுவதைத் தவிர்த்திடுங்கள்; ஏனெனில், உங்களின் பிரபுவானவர் உலகத்தையும் அதன் நகரங்களையும் உலக மன்னர்களிடம் ஒப்படைத்து, அவர்களுக்கு தமது மாட்சிமையை வழங்க நிச்சயித்து, அவர்களையே தமது மாட்சிமையின் சின்னங்களாக ஆக்கியுள்ளார்.

இம் மண்ணுலக இராஜ்ஜியத்தில் பங்கெதுவும் தனக்கென ஒதுக்கி வைத்துக்கொள்வதை மறுத்துவிட்டார்.

நித்திய மெய்ம்மையாகிய அவரே இதற்குச் சாட்சியம் அளிக்கின்றார்.

தனக்கென அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளவை, மனிதர்களின் உள்ளங்கள் எனும் மாநகரங்கள் மட்டுமே; அதன்வழி அவர், உலகியல் கறைகளிலிருந்து அவற்றைத் தூய்மைப்படுத்தி, சமய நம்பிக்கையற்றோர் கறைப்படுத்தவியலாத அப்புனித ஸ்தலத்தின் அருகிற்கு அவர்களை ஈர்த்திடக் கூடும்.

மனிதர்களே, உங்களின் நாவன்மை என்னும் திறவுகோலைக் கொண்டு மனித உள்ளம் என்னும் மாநகரைத் திறந்திடுங்கள்.

அவ்வாறுதான், முன்விதிக்கப் பட்ட அளவிற்கேற்ப, யாம், உங்களுக்குக் கடமையை விதித்துள்ளோம்.

இறைவனின் நேர்மைத் தன்மை சாட்சியாக! உலகும் அதன் ஆடம்பரங்களும், அதன் பெருமையும், அது அளிக்கக் கூடிய இன்பங்கள் ஆகிய அனைத்துமே, இறைவனின் பார்வையில் பயனற்றவை மட்டுமல்லாது, புழுதி, சாம்பல் ஆகியவற்றிற்குமேலாக வெறுக்கத் தக்கவை.

இதனை மனிதரின் உள்ளங்கள் அறிந்திடுமாக! பஹாவின் மக்களே, உலகத்தின் மாசுகளிலிருந்தும், அதனைச் சார்ந்த மற்றெல்லாவற்றிலிருந்தும் உங்களை நன்கு தூய்மைப் படுத்திக் கொள்ளுங்கள்.

இறைவனே எனக்குச் சாட்சியம் பகர்கின்றார்.

உலகின் பொருள்கள் உங்களுக்குத் தக்கவையல்ல.

அவற்றை விரும்பியோரிடம் அவற்றை வீசியெறிந்து விட்டு, உங்களின் பார்வையை இவ்வதி புனிதமான, பிரகாசமிக்கக் காட்சியில் பதியவைப்பீராக.

இதனை நீங்கள் அறிந்திடுவீராயின், இறைவன்பால் அன்பும், அவரது சாராம்சத்தின் வெளிப்படுத்துதலுமாகிய அவர்பால் அன்பும், அவர் உங்களுக்காக விதித்திடத் தேர்ந்தெடுத்துள்ளவை எவையோ அவற்றைக் கடைப்பிடித்தலுமே உங்களுக்குப் பொருத்தமானவையாகும்.

கூறுவீராக: வாய்மையும் பணிவன்பும் உங்களின் அலங்காரமாகட்டும்.

பொறுமை.

நீதி ஆகியவையின் அங்கியினை உங்களையே இழக்கச் செய்துகொள்ளாதீர்; அதனால் புனிதத் தன்மையின் இனிய நறுமணம் உங்களின் உள்ளங்களிலிருந்து படைப்புப்பொருள் அனைத்தின் மீதும் வீசுமாக.

கூறுவீராக: பஹாவின் மக்களே, எவரது செயல்கள் சொற்களிலிருந்து வேறுபடுகின்றனவோ, அவர்களின் வழியில் சென்றிடாது, கவனமாய் இருங்கள்.

இறைவனின் அடையாளங்களை உலக மக்களுக்கு வெளிப்படுத்திடவும், அவரது கட்டளைகளைப் பிரதிபலித்திடவும் உதவிடும் வகையில் கடும் முயற்சி செய்வீராக.

உங்களின் செயல்கள் மனித இனத்தோர் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும்.

ஏனெனில், பெரும்பான்மை மனிதர்களின் வெளிப்படையான கூற்றுகள், அவர்கள் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ, அவர்களின் நடத்தைக்கு மாறானவையாகவே உள்ளன.

உங்களின் செயல்களின் மூலமாகத்தான் உங்களை மற்றவரிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட இயலும்.

அவற்றின் மூலமாகத்தான் நீங்கள் உங்கள் ஒளியின் பிரகாசத்தினை உலக முழுவதன்மீதும் விழச்செய்ய இயலும்.

எமது அறிவுரையைப் பொருட்படுத்தி, சர்வஞானியான, சர்வவிவேகியான அவரால் விதிக்கப்பட்ட கட்டளைகளைப் பின்பற்றிடும் மனிதன் மகிழ்வெய்துவான்.

CXL

முஹம்மதலியே! உமக்காகக் காத்திருக்கும் ஆசீர்வாதம் உயர்வானது; ஏனெனில், நீர் ஒளிமயமான, சகல போற்றுதலுக்குமுரிய உமது பிரபுவினிடத்தில் பாசம் என்னும் ஆபரணத்தைக் கொண்டு உமது உள்ளத்தை அலங்கரித்துள்ளீர்.

யார் இந் நாளில், இந்த ஸ்தானத்தை அடைந்துள்ளாரோ, அவருக்கே நல்லனவனைத்தும் உரியதாகும்.

இந்நாளில்,, இறைவனின் நேசர்கள் உட்படுத்தப்பட்டுள்ள அவமானத்தின் மீது, நீர் கவனஞ் செலுத்தாதீர்.

இந்த அவமானமே இம்மைக்குரிய மதிப்பும் உலகியல் மேம்பாட்டிற்கும் பெருமையும் பெருஞ்சிறப்பும் ஆகும்.

அதி மேன்மைமிகு சிறைதனில் தனது அன்புக்குரியவர்களைப் புராதன அழகெனும் நாவானவர் நினைவுகூரும்பொழுது, வழங்கப்படும் கௌரவத்தைவிட உயர்வான கௌரவம் வேறெதனையும் கற்பனைச் செய்திட முடியுமா? குறுக்கிடும் மேகங்கள் முழுதாகச் சிதறடிக்கப்பட்டு, “புகழெல்லாம் இறைவனுக்கும் இறைவனை நேசிப்போருக்குமே சொந்தம்“ என்ற சொற்களின் பிரகாசம் தோன்றி, எல்லாம் வல்லவரின் திருவிருப்பம் என்னும் தொடுவானத்திற்கு மேல், சூரியனைப் போல் தெளிவாகத் தோன்றவிருக்கும் அந் நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

மனிதரனைவரும், உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ, அத்தகைய உயரிய கௌரவத்தைத்தான் தேடிக்கொண்டு இருந்திருக்கின்றனர்; இன்னும் தேடிக்கொண்டும் இருக்கின்றனர்.

இருந்தும், மெய்ம்மைச் சூரியன் அதன் பிரகாசத்தினை உலகின்மீது விழச்செய்த உடனேயே, ஒரே மெய்க்கடவுளானவரின் தவறாத வள்ளன்மை என்னும் கயிற்றினைப் பற்றிக்கொண்டு, முழுமையான பற்றற்ற நிலையில் தங்களின் முகங்களை அவரது புனிதமிக்க அரசவையின்பால் திருப்பியுள்ளோரைத் தவிர, மற்றனைவரும் அதன் பலன்களை இழந்து, அதன் பேரொளியிலிருந்து ஒரு திரையினால் மறைக்கப் பட்டோரைப் போன்று மறைக்கப் பட்டுள்ளனர்.

அத்தகைய உயர்வான கௌரவத்தை அணிவிக்கச் செய்தமைக்காக, எல்லா உலகங்களின் ஆவலாகிய அவருக்கு, நன்றி செலுத்துவீராக.

விரைவில், உலகமும் அதிலுள்ளை அனைத்துமே மறைந்துபோன ஒன்றாக ஆக்கப்பட்டுவிடும்; உங்களின் ஒளி மயமான, வள்ளன்மைமிகு பிரபுவான அவரின் நேசர்களுக்கே மதிப்பனைத்தும் சொந்தமாக்கப் பட்டிருக்கும்.

CXLI

உண்மையிலேயே, அகநோக்குடைய மனிதர்களுக்கே ஒரு திருநூல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது! அது, மனிதர்களை நீதியைக் கடைப்பிடிக்குமாறும், நேர்மைச் செயல் புரியுமாறும், கட்டளையிடுகின்றது; அவர்களைத் தங்களின் தீய விருப்பங்களையும் சிற்றின்ப இச்சைகளையும் பின்பற்றுவதைத் தடைச்செய்கின்றது; அதனால், ஒருவேளை, மனிதரின் குழந்தைகள் அவர்களின் உறக்கத்திலிருந்து எழுப்பப்படக் கூடும்.

கூறுவீராக: மனிதர்களே, எமது நிருபங்களில் விதிக்கப்பட்டுள்ளவற்றைக் கடைப்பிடியுங்கள்; கொடுமை இழைத்துப் பின்னர், அதனை, அதி புனிதமான, ஒளிமயமான, அதி மேன்மைப் படுத்தப்பட்ட இறைவன் மீது சுமத்திடும் விஷமம் விதைப்போர் புனைந்திடும் கற்பனைகளுக்கு ஏற்ப நடந்திடாதீர்.

கூறுவீராக: யாம், எம்மைத் தீமைகளும் துன்பங்களும் பாதிக்க அனுமதித்துள்ளோம்; அதனால், நீங்கள், உலகியல் கரைகள் அனைத்திலிருந்தும் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக்கூடும்.

இருந்தும், எதனால் நீங்கள் எமது நோக்கத்தினைக் குறித்து உங்களின் உள்ளங்களில் தியானிப்பதில்லை? இறைவனின் நேர்மைத் தன்மைச் சாட்சியாக! எவரொருவர் யாம் அனுபவித்திட்டத் துன்பங்களை எண்ணிப் பார்க்கின்றாரோ, அவரது ஆன்மா, நிச்சயமாக, துயரத்தினால் உருகிடும்.

எனது வார்த்தைகளுக்குப் பிரபுவான அவரே சாட்சி பகர்கின்றார்.

உலகியல் ஒழுக்கக்கேடுகள் அனைத்திலிருந்தும் உங்களைத் தூய்மைப்படுத்தும் பொருட்டே யாம் அனைத்துப் பேரிடர்களின் பாரத்தையும் தாங்கிக் கொண்டுள்ளோம்; இருந்தும் நீங்கள் அலட்சியமாய் இருக்கின்றீர்.

கூறுவீராக: எமது அங்கியின் விளிம்பினை உறுதியாகப் பற்றிக்கொண்டுள்ள ஒவ்வொருவரும் உயர்விலுள்ள வான்படையினரால் வெறுப்புக் கொள்ளக் கூடிய எதனாலும் கறைப்படுத்தப்படாதிருப்பது பொருத்தமாகும்.

அவ்வாறுதான், ஒளிமயமான உங்களின் பிரபுவினால் தனது துலக்கமான திருநூலில் விதிக்கப்பட்டுள்ளது.

கூறுவீராக: நீங்கள் எனதன்பினை அப்பால் வைத்துவிட்டு, எனது உள்ளத்திற்குத் துயர் தருபவற்றைச் செய்வீர்களா? சர்வஞானியான, சர்வவிவேகியான அவரால் உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளனவற்றைப் புரிந்துகொள்வதிலிருந்து தடுப்பதுதான் யாது? மெய்யாகவே யாம், உங்களின் செயல்களைக் கண்ணுறுகின்றோம்.

அவற்றினின்று வீசும் தூய்மை, புனிதத் தன்மை ஆகியவையின் இனிய மணத்தினை யாம் உணர்ந்திடுவோமாயின், யாம் நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்போம்.

அப்பொழுதுதான், சுவர்க்கவாசிகளின் நா, உங்களின் பெயர்களை இறைவனின் அருகே ஈர்க்கப்பட்டோரின் மத்தியில் பாராட்டவும் புகழவும் செய்திடும்.

இறைவனது அங்கியின் விளிம்பினைப் பற்றிக்கொண்டு, எவராலும் துண்டிக்கப் படவியலாத அக்கயிற்றினை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்.

இவ்வதி உயரிய அறிவிப்பினை மறுத்துள்ளோரின் ஆரவாரங்கள் நீங்கள் உங்கள் நோக்கத்தை அடைவதிலிருந்து தடுத்திடாதவாறு கவனமாய் இருங்கள்.

மனிதர்கள் அனைவரும் உங்களை எதிர்க்க எழுந்திட்டபோதும், இந் நிருபத்தினில் விதிக்கப் பட்டுள்ளவற்றைப் பிரகடனம் செய்யுங்கள்.

உங்களின் பிரபு, மெய்யாகவே, நிர்ப்பந்திக்க வல்லவர், தவறாப் பாதுகாப்பாளர்.

உமக்கும் உம்முடன் தொடர்புடையோருக்கும் எமது அன்புக்குரியோருக்கும் எனது பேரொளி கிட்டுமாக.

இவைகள்தாம் உண்மையாகவே அவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கவல்லவை.

CXLII

நல்லன்புக்குரியவரின் அழகின்மேல் ஆணையிடுகின்றேன்! படைப்பு முழுவதையுமே சூழ்ந்துள்ள கருணை இதுதான்; இறைவனின் அருள் எல்லாப் பொருள்களையும் ஊடுருவியும் பரவியும் உள்ள நாள் அதுவே.

அலியே, எனது கருணையின் உயிர்நீர் வேகமாக வீழ்கின்றது.

எனது அன்பின் இரக்கத்தன்மை மிகுந்த வெப்பத்தினால் எனது உள்ளம் உருகுகின்றது.

வேதனைகளினால் எனது நேசர்கள் பாதிக்கப்படுவதுடனோ, துன்பங்களினால் அவர்களின் உள்ளங்களின் மகிழ்ச்சி மங்கச் செய்யப் படுவதுடனோ, எந்த வேளையிலுமே யான்இணங்கிப் போகவே முடிந்ததில்லை.

ஒவ்வொரு முறையும் எனது அன்பர்களுள் ஒருவர் என் விருப்பத்திற்கு மாறான வார்த்தை ஒன்றினை “கருணை மயமானவர்” என்னும் எனது நாமத்தினிடம் மூச்சு விட்டாரென்றால், அது, துயரமும் வாட்டமும் அடைந்த நிலையில் தன் இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றது; எப்பொழுதெல்லாம், எனது நம்பிக்கையாளரில் ஒருவர் “மறைப்போன்” என்னும் எனது நாமம், தனது அண்டையருக்கு அவமதிப்பையோ அவமானத்தையோ ஏற்படுத்தினார் என்று உணர்ந்திடுமாயின், அவ்வாறே, அது, கடும் ஏமாற்றமும் துயரமும் அடைந்து தனது ஒளியெனும் புகலிடங்களுக்குத் திரும்பிச் சென்று, அங்குக் கண்ணீர்விட்டு வேதனையினால் தேம்பியழுது துக்கத்துக்கு ஆளாகியது.

எப்பொழுதெல்லாம் எனது நண்பரில் யாராவது “என்றும் மன்னிப்பவர்” என்னும் நாமம், பழிச்செயல் புரிந்திட்டார் என அறிந்திடுமாயின், தனது கடும் துயரினால் அது, கதறி ஓலமிட்டு, பெருந்துயரில் ஆழ்ந்து, மண்ணில் சாய்ந்திட்டது; அப்பொழுது, அது, கண்ணுக்குப் புலப்படாத தேவகணங்களின் படையினரால், உயர்விலுள்ள தனது இருப்பிடங்களுக்குக் கொண்டு செல்லப் பட்டது.

அலியே, ஒரே உண்மையாளரான என்மீது ஆணையாக! பஹாவின் உள்ளத்தினைக் கொழுந்துவிட்டு எரியச் செய்த தீயானது உமது உள்ளத்தினில் கனன்றெரியும் தீயைவிடக் கொடூரமானது; அவரது கதறலோ உமது புலம்பலைவிட உரத்தது.

அவர்களிடையே ஒருவரால் இழைக்கப்பட்ட பாவச்செயல் ஒவ்வொரு முறையும் தனது முன்னிலை என்னும் அரசவையினில் மூச்சுவிடப்பட்டதும், புராதன அழகானவர், தனது வதனத்தின் பேரொளி மனிதர் அனைவரின் பார்வையிலிருந்து மறைக்கப்படக்கூடாதா என விரும்பும் அளவு அவமானத்திற்கு ஆளாகி விடுகின்றார்; ஏனெனில், எல்லா வேளைகளிலும், அவர், அவர்களின் மெய்ப்பற்றின்பால் தனது பார்வையைப் பதியவைத்து, அதன் முக்கியமான தேவைகளைக் கவனித்து வந்திருக்கின்றார்.

நீர் எழுதியுள்ள வார்த்தைகள், எனது முன்னிலையில் வாசிக்கப் பட்ட உடனேயே, அவை, என்னுள் விசுவாசம் என்னும் கடலைப் பொங்கி எழச்செய்து, எனது மன்னிப்பு என்னும் தென்றலை உமது ஆன்மாவின்மீது வீசச்செய்தது; எனது அன்புப் பரிவு என்னும் விருட்சத்தினை உமக்கு நிழல் கொடுக்கச் செய்த, எனது வள்ளன்மை என்னும் மேகங்களின் அன்பளிப்புகளை உம்மீது பொழியச் செய்தன.

நித்தியம் என்னும் தொடுவானத்திற்கு மேல் பிரகாசித்திடும் பகல் நட்சத்திரத்தின் பெயரால் நான் சாட்சி அளிக்கின்றேன்; உமது துயரத்துக்காக நான் வருந்தி, உமது கொடுந்துன்பத்தில் உம்முடன் நானும் துயறுருகின்றேன்.

நீர் எனக்கு ஆற்றிய சேவைக்கு நானே சாட்சி பகர்கின்றேன்; நீர் என் பொருட்டு அனுபவித்துள்ள பல்வேறு துன்பங்களுக்கு நான் சான்று பகர்கின்றேன்.

உம்மீது எனக்குள்ள பாசத்தினை உலகத்தின் அணுக்களெல்லாம் அறிவிக்கின்றன.

அலியே, நீர் விடுத்த அழைப்பு எனது பார்வையில் மிகவும் ஏற்புடையதாகும்.

உமது எழுதுகோலினாலும் நாவினாலும் எனது சமயத்தைப் பிரகடனம் செய்வீராக.

எல்லா மனதர்களும் உற்சாகமடையுமளவு ஆர்வத்துடனும் தீவிரமாகவும், எல்லா மனிதர்களையும், கூக்குரலிட்டு உலகங்களனைத்தின் மாட்சிமைமிகு பிரபுவாகிய அவர்பால் அழைத்திடுங்கள்.

கூறுவீராக: என் பிரபுவே, என் அதிமிகு அன்புக்குரியவரே, என் செயல்களைத் தூண்டுபவரே, என் ஆன்மாவின் துருவ நட்சத்திரமே, என் உள்ளார்ந்த மெய்ம்மையினில் ஒலியெழுப்பும் குரலே, என் உள்ளத்தின் வழிபாட்டுக் குறியே! என் முகத்தை உம்பால் திருப்பிட உதவியமைக்காகவும், உமது நினைவால் எனது ஆன்மாவை ஒளிரச் செய்தமைக்கைகவும், உமது நாமத்தினைப் பிரகடனம் செய்யவும் உமது புகழைப் பாடவும் உதவியமைக்காகவும் நீர் போற்றப் படுவீராக.

என் இறைவா, என் இறைவா! உமது பாதையிலிருந்து விலகிப் போகின்றவர் யாரையும் காண முடியவில்லையெனில், எவ்வாறு உமது கருணை என்னும் கொடி பறக்கவிடப்படவோ, உமது வள்ளன்மைமிகு தயை என்னும் கொடி ஏற்றப்படவோ முடியும்? அநீதி இழைக்கப் படவில்லையெனில், என்றும் மன்னிப்பவரான, சகலமும் அறிந்தவரான, சர்வ விவேகியான உம்மை மனிதரின் பாவங்களை மறைப்போன் எனப் பிரகடனம் செய்வதுதான் யாது? மற்றோரினால் உமக்கெதிராக விளைவிக்கப்பட்ட பாவச்செயல்களுக்காக எனதான்மா பலியிடப்படுமாக; ஏனெனில், அத்தகைய பாவச் செயல்களின் மூலமே உமது அருளென்னும் மூச்சும் உமது அன்புக் கருணையின் நறுமணமும் அறிமுகப்படுத்தப்பட்டு, மனிதரிடையே பரவச்செய்யப்படுகின்றது.

உமக்கெதிராகப் பாவச்செயல் புரிந்தோருக்காக எனது அதிஉள்ளார்ந்த மெய்ம்மை அர்ப்பணஞ் செய்யப்படுமாக; ஏனெனில், அத்தகைய பாவச்செயல்களின் விளைவாகவே உமது பல்வேறு சலுகைகள் உமது வள்ளன்மை என்னும் தொடுவானத்தில் வெளிப்படுத்துப்பட்டு, உமது தவறாத வள்ளன்மை, அதன் அருள், அதன் அன்பளிப்புகள் ஆகியவற்றை அனைத்துப் படைப்புப் பொருள்களின் மீதும் பொழிந்திடுகின்றது.

என் இறைவா, உம்மிடம் தனது எண்ணற்றத் தீயச் செயல்களை ஒத்துக்கொண்டும், எந்த மனிதனுமே ஒப்புக்கொண்டிராததை ஒப்புக்கொண்டும் உள்ளவன் நானே.

உமது மன்னிப்பெனும் மாக்கடலை அடைந்திட விரைந்து, உமது கருணைமிகு தயை என்னும் நிழலின்கீழ் அடைக்கலம் தேடியுள்ளேன்.

நித்திய மன்னரும், மனிதரனைவரின் மாட்சிமை பொருந்திய பாதுகாவலரும் ஆனவரே, மனிதரின் உள்ளங்களும் ஆன்மாக்களும் உமதன்பு என்னும் எல்லையிலாப் பரந்த வெளியில் உயரப்பறந்து, உமது ஆவியுடன் தொடர்பு கொண்டிடச் செய்யக்கூடியதனைப் புலப்படுத்திட எனக்கு உதவியளிக்குமாறு உம்மிடம் மன்றாடுகின்றேன்.

உமது மாட்சிமை என்னும் சக்தியின் மூலம் என்னைப் பலப்படுத்துவீராக; அதனால், நான், படைப்புப் பொருள்கள் அனைத்தையும் உமது அவதாரமெனும் பகலூற்றின்பாலும், உமது வெளிப்பாடெனும் தோற்றிடத்தின்பாலும் திரும்பச் செய்திடக் கூடும்.

என் இறைவா, உமது விருப்பத்திற்கு முழுமையாகச் சரணடையவும், உமக்குச் சேவைச் செய்திடவும் உதவிடுவீராக; ஏனெனில், நான், இம் மண்ணுலக வாழ்க்கையை நேசிப்பது உமது வெளிப்பாடு என்னும் திருக்கூடாரத்தையும் உமது பேரொளி என்னும் அரியாசனத்தையும் வலம் வருவதற்காகவல்லாது வேறெந்த நோக்கத்திற்காகவும் அன்று.

என் இறைவா, உம்மைத் தவிர மற்றனைத்திலுமிருந்தும் பற்றறுத்துக் கொண்டும், உமது விருப்பத்திற்குக் கட்டுப்பட்டும், அடிபணிந்தும், இருப்பதை நீர் பார்க்கின்றீர்.

நீர் விரும்பியதற்கிணங்கவும், உமது உயரிய நிலைக்கும் மேன்மைமிக்கப் பேரொளிக்கும் ஏற்பவும் என்னை நடத்திடுவீராக.

அலியே! எல்லா உலகங்களுக்கும் பிரபுவாகிய அவரது வள்ளன்மை உமக்கு அருளப்பட்டு வந்துள்ளது, எப்பொழுதுமே அருளப்பட்டும் வரும்.

அவரது வலிமை, ஆற்றல் என்னும் ஆயுதந் தரித்து, அவரது சமயத்திற்கு உதவிடவும் அவரது புனித நாமத்தினை மிகைப்படுத்தவும் எழுவாயாக.

மனிதக் கல்வியின் அறியாமையையும், எழுதவும் படிக்கவும் இயலாமையையும் உனது உள்ளத்தை வருத்த விட்டுவிடாதே.

அவரது பல்வேறான அருளுக்கான கதவுகள், ஒரே மெய்க்கடவுளாகிய அவரது சக்தியின் வலுமிக்கப் பிடியினுள் இருக்கின்றன.

அவர், அவற்றைத் தனக்குச் சேவை செய்வோர் முன் திறந்து வைத்திருக்கின்றார்; என்றும் திறந்தே வைத்திருப்பார்.

இத் தெய்வீக இனிமை என்னும் தென்றல் எல்லா வேளைகளிலும் தொடர்ந்து உமது உள்ளமெனும் புசும்புல் நிலத்தினின்று உலக முழுவதன் மீது தொடர்ந்து வீசிடும்; அதன் பலன் ஒவ்வொரு நாட்டிலும் தெளிவாகப் புலனாக்கப் படும்.

அனைத்துப் பொருள்களின்மீதும் ஆற்றலுடையவர் அவரே.

மெய்யாகவே, அவர், அதி சக்திவாய்ந்தவர், ஒளிமயமானவர், எல்லாம் வல்லவர்.

CXLIII

எனது சேவகனே, உண்மையை அறிந்துகொண்டு, கருணைமயமானவரை மறுத்திட்டவனிடமிருந்தும், தாய்நூலில் கொடியவன் எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டவனிடமிருந்தும் விலகிக் கொண்டுள்ளதற்காகவும், நீ, ஆசீர்வதிக்கப்படுவாயாக.

திடப்பற்றுடன் இறைவனின் அன்பினில் நடந்தும், அவரது சமயத்தில் நெறி பிறழாது இருந்தும், உனது நாவின் வலிமையைக் கொண்டு அவருக்கு உதவுவாயாக.

தனக்குக் கொடுமை இழைப்போரின் கைகளினால் சிறைச் செய்யப்பட்டுத் துன்புறும் கருணைமயமான அவர் இவ்வாறுதான் உனக்குக் கட்டளையிடுகின்றார்.

என்பொருட்டு உன்னைக் கொடுந்துன்பம் பாதிக்குமாயின், என் வேதனைகளையும் துன்பங்களையும் நினைவுப்படுத்திக்கொள்; எனது நாடுகடத்தலையும், சிறைவாசத்தையும் மனதிற்கொள்.

அவ்வாறுதான், ஒளிமயமான, சர்வ விவேகியான அவரிடமிருந்து எம்மை வந்தடைந்தவற்றை உன்பால் வழங்குகின்றோம்.

என்மீது ஆணையாக! யாம், உலகையும் அதனுள் இருக்கும் அனைத்தையும் சுருட்டிவிட்டு, அதற்குப் பதிலாக, ஓர் புதிய அமைப்பினை நிறுவவிருக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

மெய்யாகவே, அவர், அனைத்துப் பொருள்களின்மீதும் ஆற்றல் கொண்டுள்ளவர்.

உனது உள்ளத்தைப் புனிதப்படுத்துவாயாக,; அதனால், நீ, என்னை நினைவு கூரக் கூடும்; உனது செவியைத் தூய்மைப் படுத்துவாயாக, அதனால், எனது திருமொழிகளைச் செவிமடுக்கலாம்.

உனது பார்வையைக் கருணைக் கடவுளாகிய உன் பிரபுவின் அரியாசனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடத்தில் நிலைக்கச்செய்து, இதனைக் கூறுவாயாக: என் பரபுவே, என்னை உமது சொந்த அவதாரத்தினை அறிந்திட இயலச்செய்து, எனது ஆன்மாவின் குறிக்கோளும் எனது வழிபாட்டுக் குறியுமாகிய உமது முன்னிலை என்னும் அரசவையின்மீது பதியச்செய்திட உதவியமைக்காக நீர் போற்றப்படுவீராக.

நீர், உம்மைத் தவிர மற்றதனைத்திலிருந்தும் அப்பால்திரும்பி, தங்களின் உள்ளங்களை உம்மீது உறுதியாக இலயிக்கச்செய்திட அருளுமாறு விண்ணுலகங்களையும் மண்ணுலகையும் பிளவுறச் செய்துள்ள உமது நாமத்தினால் நான் மன்றாடுகின்றேன்.

நான், பேரொளி என்னும் திருக்கூடாரத்தினுள், உமது முன்னிலையில், மெய்ம்மை என்னும் ஆசனத்தின்மீது அமர்ந்திட அனுமதிப்பீராக.

நீர் விரும்பியவாறு செய்திடும் சக்திமிக்கவர் நீரே.

ஒளிமயமான, சர்வவிவேகியான இறைவன் உம்மையன்றி வேறெவருமிலர்.

CXLIV

அதிஉயர்வானவரின் எழுதுகோலான அவர், ஒவ்வொருவருக்கும் இச் சமயத்தைப் போதிக்கும் கட்டளையை விதித்து, அதனைக் கடமையாக்கியுள்ளார்.

யாரொருவர், அவரைத் தவிர மற்றனைத்தின்பாலும் பற்றறுத்திடுகின்றாரோ, அவருக்கு, இறைவன், சந்தேகமின்றி, உந்துதல் அளித்து, அவரது உள்ளத்திலிருந்து விவேகம், வார்த்தைகள் ஆகிய தூய நீரைப் பீறிட்டுவரவும், பொங்கி வழிந்திடவும், செய்திடுவார்.

மெய்யாகவே, கருணைமயமான உனது பிரபுவானவர், தான் விரும்பியதைச் செய்யும் ஆற்றல் படைத்தவராவார்; அவர் விரும்பியதை அவர் விதித்திடுகின்றார்.

நீங்கள் இவ்வுலகை ஆழ்ந்து கவனித்து, அது தொடர்பானவை எந்தளவு விரைந்தோடிடுபவை என உணர்வீராயின், உங்கள் பிரபுவின் சமயத்திற்கான சேவைப் பாதையைத் தவிர வேறெந்தப் பாதையையும் தேர்ந்தெடுக்கமாட்டீர்.

மனிதர் அனைவருமே உங்களை எதிர்க்க எழுந்தபோதும், நீங்கள் அவரது புகழைப் பாடுவதைத் தடுத்திடும் சக்தி படைத்தவர் யாருமே இருக்க மாட்டார்.

நேராக முன்னேறிச் சென்று, அவரது சேவையில் கடுமுயற்சி செய்யுங்கள்.

மனிதர்களே, கூறுவீராக! எல்லாத் திருநூல்களிலும் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இப்பொழுது வந்துவிட்டது.

இறைவனுக்கு அஞ்சி, உங்களின் படைப்பின் நோக்கமாகிய அவரை நீங்கள் அறிந்து கொள்வதிலிருந்து உங்களையே தடைச்செய்து கொள்ளாதீர்.

அவர்பால் விரைந்திடுங்கள்.

இவ்வுலகும் அதனிலுள்ள அனைத்தையும்விட இதுவே உங்களுக்கு மேலானது.

அதனை நீங்கள் உணரக் கூடுமாக.

CXLV

தாழ்வுற்றோரையோ நசுக்கப்பட்டோரையோ நீங்கள் சந்தித்தால் அவர்களிடமிருந்து அலட்சியமாக அப்பால்திரும்பாதீர்; பேரொளியின் மன்னராகிய அவர் எப்பொழுதுமே அவர்களைப் பாதுகாக்கின்றார்; அவர்களை இன்கனிவினால் சூழ்ந்திடுகின்றார்; தங்களின் சொந்த விருப்பங்களையும் ஆசைகளையும் உங்களின் கருணைமிக்க, சர்வ விவேகியான பிரபுவின் விருப்பத்துடன் ஒன்றாக்கிடாதோரைத் தவிர மற்றெவருமே அதனை ஆழங்காண இயலாது.

உலகின் செல்வந்தர்களே! தரையில் கிடக்கும் ஏழையிடமிருந்து ஓட்டமெடுக்காதீர்; மாறாக, அவரிடம் ஆதரவாக நடந்து இறைவனின் புரிந்திடவியலாத கட்டளையின் காரணமாக அவரைப் பாதித்திடும் தொல்லைகளினால் ஏற்படும் கடுந் துயர்மிகுந்த கதைகளை உங்களிடம் எடுத்தியம்பச் செய்யுங்கள்.

இறைவனின் நேர்மைத் தன்மை சாட்சியாக! நீங்கள் அவருடன் பழகும் பொழுது, மேலுலகின் வான்படைகள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்; உங்கள் சார்பில் பரிந்து பேசும்; உங்களின் பெயர்களைப் புகழ்ந்துரைத்து உங்களின் செயல்களை வானளாவப் போற்றிடும்.

தங்களின் சாதனைகளில் பெருமையுறாத கற்றோர்கள் பேறு பெறுவர்; பாவிகளைக் கண்டு ஏளனஞ்செய்யாதிருத்தல் நேர்மையாளருக்கு நன்று; மாறாக, அவர்களின் குற்றச்செயல்களை மறைத்திடல் வேண்டும்; அதனால், தங்களின் சொந்த குறைபாடுகள் மனிதரின் கண்களிலிருந்து மறைக்கப்படக்கூடும்.

CXLVI

நீங்கள் ஒவ்வொருவரும் மனிதர் அனைவருக்கும் நன்னடத்தைக்கொரு தோற்றிடமாகவும், மனித இனத்துக்கோர் எடுத்துக்காட்டாகவும் ஆகவேண்டும் என்பதே எமது விருப்பமும் ஆவலும் ஆகும்.

கவனமாய் இருங்கள்; இல்லையெனில், நீங்கள் உங்களை அண்டையரைவிட மேலானோரெனக் கருதிடப் போகின்றீர்.

மனிதரிடையே இறைவனின் திருக்கோயிலான அவர்மீதே உங்களின் பார்வையைப் பதித்திடுங்கள்.

உண்மையாகவே, அவர் உலகத்தின் மீட்புக்காகத் தனது உயிரையே பணயமாகக் கொடுத்திருக்கின்றார்.

மெய்யாகவே, அவர் வள்ளன்மையே உருவானவர், அருளாளர், கருணைமிக்கவர், அதி உயர்வானவர்.

உங்களிடையே வேற்றுமைகள் ஏதேனும் தோன்றுமாயின், யாம் உங்கள்முன் நிற்பதைப் பாருங்கள்; எனது நாமத்தின் பொருட்டும், எனது தெளிவான, ஒளிமயமான, சமயத்தின் மீதுள்ள அன்பின் அடையாளமாகவும், ஒருவர் மற்றவரின் தவறுகளைப் பொருட்படுத்தாதீர்.

எல்லா வேளைகளிலும் நீங்கள், எனது நல்விருப்பம் என்னும் சுவர்க்கத்தினுள், சமாதானத்துடனும் இணக்கத்துடனும் சகவாசிப்பதையும், உங்களின் நடத்தையிலிருந்து நட்புடமை, ஒற்றுமை, அன்புப்பரிவு, சகோதரத்துவம் ஆகியவையின் நறுமணத்தினை முகர்வதையும் கண்ணுற விரும்புகின்றேன்; இவ்வாறாகத்தான் சகலமும் அறிந்த, விசுவாசமுள்ள அவர் உங்களுக்கு அறிவுரைப் பகர்கின்றார்.

யாம் எப்பொழுதுமே உங்களுடனேயே இருப்போம்.

; யாம் உங்களின் சகோதரத்துவத்தின் நறுமணத்தினை முகர்ந்திடுவோமாயின், எமது உள்ளம் நிச்சயமாக மகிழ்வுறும்; ஏனெனில், எமக்கு மனநிறைவளிக்கக் கூடியது வேறெதுவும் இல்லை.

புரிந்திடும் ஆற்றல் படைத்த ஒவ்வொரு மனிதனும் இதற்குச் சாட்சியம் அளிப்பான்.

CXLVII

அதி உயரிய நாமமே எனக்குச் சாட்சி பகர்கின்றது! எந்த ஒரு மனிதனாவது, இந் நாளில், தன் உள்ளத்தினை, இவ்வுலகின் நிலையில்லாப் பொருள்களின் மீது இலயிக்க விடுவானாகில், அது எந்தளவு வருத்தத்திற்குரியது! எழுந்து, இறைவனின் சமயத்தை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்.

ஒருவர் மற்றவருடன் அன்புடன் நடந்து கொள்ளுங்கள்.

மெய்யன்பரின் பொருட்டு, தானெனுந் தன்மையை எரித்தழியுங்கள்; அழிவில்லாத் தீச்சுடரைக் கொண்டும், ஒளியினால் பிரகாசித்திடும் மகிழ்ச்சிப்பொங்கும் முகங்களுடனும், உங்களின் அண்டையருடன் பழகுங்கள்.

உங்கள் மத்தியில் மெய்ம்மையின் திருச்சொல்லாகிய அவரது நடத்தையை நீங்கள், எல்லாக் கூறுகளிலும், நன்கு கவனித்திருக்கின்றீர்கள்.

இவ்விளைஞனுக்கு, இறைவனின் நேசர்களின் மத்தியில் எந்த ஒருவரின் உள்ளத்தையும், ஓர் இரவு கூட, துயருறச் செய்வதென்றால் அது எத்துணைக் கடினமானது என்று நீங்கள் நன்றாகவே அறிந்திருக்கின்றீர்.

இறைவனின் திருமொழி உலகத்தின் இதயத்தையே தீப்பற்றி எரியச் செய்துள்ளது; நீங்கள் அதன் சுடரினால் ஒளிபெறத் தவறினால் அது எத்துணை வருந்தத்தக்கது! இறைவனின் விருப்பமானால், நீங்கள், ஆசீர்வதிக்கப்பட்ட இவ்விரவை ஒற்றுமையின் இரவாகக் கருதிடுவீர்; உங்களின் ஆன்மாக்களை ஒன்றாகப் பிணைத்து, உங்களை நன்னடத்தை, போற்றத் தகுந்த பண்பு என்னும் ஆபரணத்தினால் அலங்கரித்துக்கொள்ள உறுதிகொண்டிடுவீர்.

உங்களின் தலையாய நோக்கம், வீழ்ச்சியடைந்தோரை வரவிருக்கும் அழிவு என்னும் சகதியிலிருந்து காப்பாற்றி, இறைவனின் புராதன சமயத்தை ஏற்றுக்கொள்ள உதவுவதாகவே இருக்கட்டும்.

உங்கள் நடத்தை, உங்களின் அண்டையர்பால், ஒரே மெய்க்கடவுளின் அடையாங்களைத் தெளிவாகப் பிரதிபலிப்பதாய் இருக்கவேண்டும்; ஏனெனில், மனிதரிடையே, அவரது ஆவியினால் முதன் முதலில் புத்துயிர் அளிக்கப்பட்டோரில் முதன்மையானோர் நீங்கள்தாம்; முதன்மையாக அவரைப் பூஜித்து, அவர்முன் மண்டியிட்டோரும் நீங்கள்தாம்.

அவரது பேரொளி என்னும் அரியாசனத்தை முதலில் வலம் வந்திட்டோரும் நீங்கள்தாம்; அவர் விரும்பியவற்றை என்னை வெளிப்படுத்தச் செய்திட்ட அவர்மீது ஆணையாக! நீங்கள் உங்களை அறிந்திருப்பதைவிட உயர்விலுள்ள இராஜ்ஜியவாசிகளுக்கு உங்களை மேலும் நன்றாகத் தெரிந்திருக்கின்றது.

இவ் வார்த்தைகள் வீணானவையும் பொருளற்றவையும் என எண்ணுகின்றீரா? உங்களின் கருணைமயமான பிரபு கண்ணுறுபவற்றை உணரும் சக்தியை நீங்கள் பெற்றிருக்கக் கூடுமாக; அவை, உங்கள் ஸ்தானத்தின் மேம்பாட்டுக்குச் சான்றளிக்கின்றன; அவை, மதிப்பின் மேன்மைக்குச் சாட்சியளிக்கின்றன; உங்கள் ஸ்தானத்தின் விழுமிய நிலையைப் பிரகடனஞ் செய்கின்றன.

உங்களின் ஆசைகளும், அடங்கா உணர்ச்சிகளும் உங்களுக்கென விதிக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து உங்களைத் தடுத்திடாதிருக்க இறைவன் அருள் புரிவாராக.

CXLVIII

ஸல்மானே! முனிவர்களும் மெய்ஞ்ஞானிகளும் கூறியோ எழுதியோ உள்ளவை யாவுமே, நிச்சயமாக, மனிதனின் வரம்புக்குட்பட்ட அறிவாற்றலின் எல்லைக்குக் கட்டுப்பட்டவையே.

அதிசிறந்த மனிதனின் அறிவாற்றல், எத்துணை உயரத்திற்கு எழுந்திடினும், பற்றறுத்தும், புரியுந்திறனும் கொண்டுமுள்ள உள்ளம் ஊடுருவிடினும், அத்தகைய அறிவாற்றலும் உள்ளமும் அவற்றின் சொந்த கற்பனையின் படைப்பும் அவற்றின் சுயச் சிந்தனையின் விளைபொருளேயாகும்.

ஆழ்ந்த சிந்தனையாளரின் தியானமும், பக்திமிக்க முனிவர்களின் வழிபாடுகளும் தங்களின் பிரபுவாகிய இறைவனின் வெளிப்பாட்டின் மூலம் தங்களுள் தோற்றுவிக்கப் பட்டுள்ளவற்றின் பிரதிபலிப்பேயாகும்.

யாரொருவர், இவ்வுண்மையைத் தனது உள்ளத்தினில் வைத்து ஆழ்ந்து சிந்திக்கின்றாரோ, அவர், எந்த மானிடனுமே கடக்கவியலாத சில எல்லைகள் உள்ளன என்பதைத் தயக்கமின்றி ஒப்புக்கொள்வார்.

ஆரம்பமில்லா ஆரம்பமுதல் இறைவனை அகக்கண்ணின் வாயிலாக அறிந்திடுவதற்காகச் செய்யப்பட்டு வந்துள்ள ஒவ்வொரு முயற்சியும், அவரது சொந்த படைப்பின் தேவைகளுக்கு உட்பட்டவையாகவே இருந்து வந்திருக்கின்றன; அவரது விருப்பத்தின் செயல்பாட்டின் மூலமாகத் தோற்றுவித்துள்ள அப்படைப்பானது, தனது சொந்த நோக்கங்களுக்காகவே, வேறெதற்காகவும் அன்று.

அவரது சாராம்சத்தினைப் புரிந்துகொள்வதற்காகவோ, அல்லது மனிதனின் நா அவரது மர்மத்தினை வருணிப்பதற்காவோ, செய்யப்படும் கடுமுயற்சிகளுக்கெல்லாம் மேலான உயரிய நிலையில் அவர் இருக்கின்றார்.

நேரடியானத் தொடர்புறவு எதுவுமே அவரைத், தான் படைத்துள்ள பொருள்களுடன் தொடர்புப் படுத்திடவே முடியாது; அல்லாமலும், அவரது உயிரினங்களின் அதிமறைபொருளான, அதி தொலைவான மறைகுறிப்புகளும் அவரது நிலைக்குப் பொருத்தமாகா.

உலகத்தையே வியாபித்துள்ள தனது விருப்பத்தின் மூலம், அவர், படைப்புப்பொருள் அனைத்தையும் உருவாக்கியுள்ளார்.

புராதன நித்தியத்திலும், மேன்மைப்படுத்தப்பட்டும், கண்ணுக்குப் புலனாகாததுமான தனது சாராம்சத்திலும் அவர், என்றென்றும் மறைந்தே இருந்துவந்திருக்கின்றார், தொடர்ந்தும் அவ்வாறே என்றென்றும் தனது அணுகவியலா மாட்சிமையிலும் பேரொளியிலும் மறைந்தே இருந்தும் வருவார்.

விண்ணிலும் மண்ணிலும் உள்ளவை அனைத்துமே அவரது கட்டளையினாலேயே உருவாக்கப்பட்டுள்ளன; அவரது விருப்பத்திற்கிணங்கவே, அனைத்தும், முற்றும் இன்மை என்னும் நிலையினின்று வெளிவந்து, உள்ளமை என்னும் இராஜ்ஜியத்தினுள் நுழைந்துள்ளன.

ஆகவே, இறைவனின் திருச்சொல்லானது உருவாக்கியுள்ள உயிரினம், எங்ஙனம், நாள்களில் புராதனமான அவரது இயல்பினைப் புரிந்துகொள்ள இயலும்?

CXLIX

எந்த மனிதனாவது, இந்நாளில், விண்ணுலகிலும் மண்ணுலகிலுமுள்ள அனைத்தின்பாலும் முழுமையான பற்றற்ற நிலையில், முன்னெழுந்து, இறைவனின் புனித வெளிப்பாட்டின் பகலூற்றாகிய அவரிடம் பாசம் வைத்திடின், அவர், மெய்யாகவே, அவரது கடவுளாகிய, சர்வஞானியான, சர்வவிவேகியான பிரபுவின் நாமங்களுள் ஒன்றின் வலிமையின் மூலமாகப் படைப்புப் பொருள் அனைத்தையும் ஆட்கொண்டிட ஆற்றல் அளிக்கப்படுவார்.

மெய்ம்மையின் பகல் நட்சத்திரமாகிய அவர், நிச்சயமாக, இந் நாளில், கடந்தகால சகாப்தங்கள் கண்டிராத ஒரு பிரகாசத்தினை உலகின்மீது பாய்ச்சிடுவார்.

மனிதர்களே, அவரது பேரொளி உங்கள் மீது பிரகாசித்திடுமாக; கவனமற்றோரில் சேர்ந்திடாதீர்.

CL

வெற்றி வரும்பொழுது, ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒரு நம்பிக்கையாளன் என பறைசாற்றிக் கொண்டு, இறைவனின் சமயம் என்னும் புகலிடத்தை நோக்கி விரைவான்.

உலகையே சூழ்ந்துள்ள கடுஞ்சோதனைக் காலங்களில் சமயத்தில் பற்றுறுதியுடனிருந்து அதன் நேர்வழியிலிருந்து விலக மறுத்திட்டவர்கள் மகிழ்வெய்துவர்.

CLI

இறைவனின் இராப்பாடிகளே, ஈனநிலையும் கடுந்துன்பமும் ஆகிய முட்களிலும் முட்புதர்களிலுமிருந்தும் உங்களை விடுவித்துக்கொண்டு, மங்காப் புகழொளி என்னும் ரோஜாத்தோட்டத்தின்பால் சிறகடித்துப் பறப்பீராக.

மண்ணின்மீது வாழ்ந்திடும் எனது நண்பர்களே! உங்களின் தெய்வீக உறைவிடத்தின்பால் விரைவீராக.

“அதி அன்புக்குரியவரான அவர் வந்துவிட்டார்! கடவுளின் ஒளி என்னும் மகுடத்தினைத் தனக்குச் சூட்டிக்கொண்டுள்ளார்; மனிதரின் முன்னால் தனது புராதன சுவர்க்கத்தின் கதவுகளைத் திறந்து விட்டுள்ளார்” என்னும் மகிழ்ச்சிமிக்க செய்தியினை உங்களுக்கு அறிவித்துக் கொள்ளுங்கள்.

கண்களனைத்தும் மகிழ்ச்சியுறட்டும்; ஒவ்வொரு செவியும் இன்புறட்டும்; ஏனெனில், இதுதான் அவரது அழகினை உற்றுப்பார்த்திடும் நேரம்; அவரது குரலைச் செவிமடுப்பதற்கு உகந்தநேரமும் இதுதான்.

அவாவுறும் ஒவ்வொரு நேசருக்கும் இவ்வாறு பிரகடனம் செய்திடுங்கள்: “உங்களின் நல்லன்பர் மனிதரிடையே வந்துள்ளதைப் பாருங்கள்!” அன்புக்கரசரின் தூதர்களுக்கு இச்செய்தியினை அறிவித்திடுவீராக: “அந்தோ, தனது பேரழகின் முழுமையான ஆடையணிகலன்களில் வணங்குதற்குரிய அவர் தோன்றியுள்ளார்!” அவரது அழகின் நேசர்களே! அவரிடமிருந்து பிரிவின் மனவேதனையை மீண்டும் ஒன்றிணைதல் என்னும் நித்திய ஆனந்தப்பரவசமாக மாற்றி, அவரது முன்னிலை என்னும் இனிமையினைக் கொண்டு அவரது அரசவையினின்று தொலைவு என்னும் மனக்கசப்பைக் கரையச் செய்திடுவீராக.

இந்நாளில், எவ்வாறு, தெய்வீக ஒளி என்னும் மேகங்களிலிருந்து பொழியப்படும் இறைவனின் பல்வேறான அருள் உலகையே சூழ்ந்துள்ளது என்பதைப் பாருங்கள்.

கடந்த காலங்களில், மாறாக, ஒவ்வோர் அன்பரும் தனது அன்புக்குப் பாத்திரமானவரைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சித்தனர்; ஆனால், இப்பொழுதோ, அன்புக்குப்பாத்திரமானவரே தனது அன்பர்களை அழைத்துத் தனது முன்னிலையையடைய வருமாறு வேண்டுகின்றார்.

கவனமாய் இருங்கள்; இல்லையெனில் அத்தகைய குறிப்பிடத்தக்க சலுகையினை இழந்திடப்போகின்றீர்; எச்சரிக்கையாய் இருங்கள்; அவரது அருளின் அந்தளவு சிறப்பான அடையாளத்தை அற்பமாகக் கருதிடப்போகின்றீர்.

தூய்மைக் கெடாத நன்மைகளைக் கைவிடாதீர்; அழியக்கூடியதனைக் கொண்டு திருப்தியடையாதீர்.

உங்களின் பார்வையை மறைத்திடும் திரையினை விலக்கி, அதனைச் சூழ்ந்துள்ள இருளை அகற்றிடுவீராக; அதனால், நீங்கள், அன்புக்குரியவரின் வதனத்தின் மறைவற்ற அழகினைக் கண்ணுறக்கூடும்; எக்கண்ணுமே பார்த்திராததனைப் பார்க்கவும், எக்காதுமே கேட்டிராததனைக் கேட்கவும் கூடும்.

மரணத்திற்குரிய பறவைகளே, செவிமடுப்பீராக! மாறாத சுடரொளி என்னும் ரோஜா தோட்டத்தினில் மலரொன்று மலரத் தொடங்கியுள்ளது; அதனுடன் ஒப்பிடுகையில் மற்ற மலர்கள் ஒவ்வொன்றுமே ஒரு முள்தான்; அவரது மகிமையின் பிரகாசத்தின்முன் அழகின் சாராம்சமே மங்கலாகி வாடி வதங்கிடும்.

ஆகவே, எழுந்து, உங்கள் உள்ளங்களின் முழு உற்சாகத்துடனும், உங்களின் ஆன்மாக்களின் அனைத்து ஆர்வத்துடனும், உங்களின் விருப்பத்தின் முழு எழுச்சியுணர்வுடனும், உங்களின் முழு உள்ளமையின் ஒருமித்த முயற்சிகளுடனும், அவரது முன்னிலை என்னும் சுவர்க்கத்தினை அடைந்திட கடுமுயற்சி செய்து, தூய்மைக்கெடாத மலரின் நறுமணத்தினை முகர்ந்திடவும், புனிதத்தன்மையின் இனிய நறுமணத்தினைச் சுவாசித்திடவும், தெய்வீக ஒளி என்னும் இந் நறுமணப் பொருளிலிருந்து ஒரு பகுதியைப் பெற்றிட பெருமுயற்சி செய்திடுங்கள்.

யாரொருவர் இவ்வறிவுரையைப் பின்பற்றுகின்றாரோ, அவர், தனது விலங்குகளை உடைத்தெறிந்திடுவார்; அளவுகடந்த அன்பினில் மகிழ்ச்சிப் பரவசத்தில் மூழ்கிடுவார்; தன் உள்ளத்தின் ஆவலை அடைந்திடுவார்; தனது ஆன்மாவை அன்புக்குரியவரின் கரங்களில் ஒப்படைத்திடுவார்.

தனது கூட்டை உடைத்துக்கொண்டு, அவர், ஆவியெனும் பறவையைப்போல், புனிதமானதும் என்றும் நிலையானதுமான கூட்டினை நோக்கிப் பறந்திடுவார்.

பகலைத் தொடர்ந்து இரவு வந்துள்ளது; இரவைத் தொடர்ந்து பகல் வந்துள்ளது; உங்கள் வாழ்க்கையின் காலமும் நேரமும் வந்தும் போய்க் கொண்டும் இருக்கின்றன; இருந்தும், உங்களில் ஒருவருமே, அழியக்கூடியவற்றைத் துறந்திட சம்மதித்ததில்லை.

உங்களை எழுச்சியுறச் செய்து கொள்ளுங்கள்; அதனால், இன்னும் உங்களுடையதாயுள்ள சொற்ப நேரம் வீண்போகாமலும் மறைந்துபோகாமலும் இருக்கக் கூடும்.

உங்களின் நாள்கள் மின்னல் வேகத்தைப் போன்று ஓடி மறைந்திடும்; உங்களின் உடல் புழுதியெனும் விதானத்தின்கீழ் அடக்கஞ் செய்யப்படும்.

அப்பொழுது நீங்கள் எதனைச் சாதிப்பீர்கள்? உங்களின் தவறுகளுக்கு எவ்வாறு பிராயச்சித்தம் தேடுவீர்கள்? என்றும் அணையா மெழுகுவத்தி அதன் மறைக்கப்படாத ஒளியினை வீசுகின்றது.

எவ்வாறு, அது, அழிவுக்குரிய திரை ஒவ்வொன்றையும் எரித்துப் பொசுக்கியுள்ளது என்பதைப் பாருங்கள்.

அவரது தீபத்தின் விட்டிலைப் போன்ற அன்பர்களே! ஒவ்வோர் அபாயத்தையும் எதிர்த்துப் போராடி, உங்களின் ஆன்மாக்களை அதன் பொசுக்கிடும் சுடரொளிக்கு அர்ப்பணம் செய்திடுங்கள்.

அவருக்காக ஏங்குவோரே! உங்களின் உலகியல் பாசம் ஒவ்வொன்றையும் அகற்றிவிட்டு, அன்புக்குரியவரை ஆரத்தழுவிட விரையுங்கள்.

எவரும் போட்டியிடவியலாத உற்சாகத்துடன் அவரை அடைய விரையுங்கள்.

மனிதரின் பார்வையிலிருந்து இதுவரை மறைத்து வைக்கப்பட்டிருந்த மலர், உங்களின் பார்வைக்குத் திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தனது பேரொளியின் ஒளிவு மறைவற்ற பிரகாசத்துடன் அவர் உங்கள்முன் நிற்கின்றார்.

அவரது குரல், எல்லாத் தெய்வீகமான, புனிதப்படுத்தப்பட்ட ஆன்மாக்களையும் தன்பால் வந்து ஒன்றிணைந்திடுமாறு அழைப்பு விடுக்கின்றது.

அதன்பால் திரும்புபவர் மகிழ்வெய்துவார்; அத்தகைய வியத்தகு வதனத்தின் ஒளியினை அடைந்து, அதனைக் கண்ணுறுபவருக்கு அது நன்று.

CLII

உனது கண்ணே எனது நம்பகம்; வீண் ஆசைகள் என்னும் தூசியினை அதன் பிரகாசத்தினை மங்கச்செய்ய விட்டுவிடாதே.

உனது காதே எனது வள்ளன்மயின் ஓர் அடையாளம்; ஒழுங்கற்ற நோக்கங்களினால் உண்டாகும் கொந்தளிப்புகளைப் படைப்பையெல்லாம் சூழ்ந்துள்ள எனது திருமொழியிலிருந்து அதனை அப்பால் திரும்பச்செய்திட விட்டுவிடாதே.

உனது உள்ளமே எனது கருவூலம்; நான் அதனுள் பாதுகாப்பாக வைத்திருக்கும் முத்துக்களைத், தானெனுந் தன்மையின் நயவஞ்சகக் கை அதனை உன்னிடமிருந்து சூறையாட விட்டுவிடாதே.

உனது கை எனது அன்புக் கருணையின் சின்னம்; அதனை எனது பாதுகாக்கப்பட்டதும் மறைவானதுமான நிருபங்களை இறுகப் பற்றிக்கொள்வதைத் தடுக்க விட்டுவிடாதே .

கேட்காமலேயே, நான் எனது அருளினை உன்மீது பொழிந்துள்ளேன்.

விண்ணப்பிக்காமலே, நான், உனது விருப்பத்தைப் பூர்த்தி செய்துள்ளேன்.

தகுதியற்றிருந்தபோதும், எனது செல்வத்தை, எனது கணித்தற்கரிய சலுகையைப்பெற உன்னையே தேர்ந்தெடுத்துள்ளேன்.

எனது ஊழியர்களே! பூமியைப்போல் பணிவாகவும் பொறுமையாகவும் இருப்பீராக; அதனால், உங்களின் உயிருருவென்னும் தரையிலிருந்து நறுமணமிக்க, தெய்வீகமான, பலநிறமலர் பூத்திடக் கூடும்.

தீயைப் போன்று கிளர்ச்சியுறுவீராக; அதனால், நீங்கள் கவனமின்மை என்னும் திரைகளை எரித்தொழித்து, இறையன்பெனும் எழுச்சியூட்டும் ஆற்றலின் மூலம் கடுங்குளிருற்ற, ஒழுங்கற்ற உள்ளத்தினைக் கொழுந்துவிட்டெரியச் செய்வீராக.

இலேசாகவும் தடையற்றதாகவுமுள்ள தென்றலைப்போல் ஆவீராக; அதனால், நீங்கள், எனது அரசவையின் எல்லைகளுக்குள், எனது மீறவியலாத சரணாலயத்துக்குள் நுழைந்திடக்கூடும்.

CLIII

நாடுகடத்தப்பட்ட, விசுவாசமுள்ள நண்பனே! கவனமின்மை என்னும் தாகத்தை எனது அருள் என்னும் புனித நீரினைக் கொண்டு தணித்து, எனது தெய்வீக முன்னிலையெனும் தீபத்தைக் கொண்டு தொலைவு என்னும் இருளைத் துரத்திடுவீராக.

உன்பால் எனது அழியாத அன்பு உறைந்திடும் வாசஸ்தலத்தை, அராஜகமென்னும் பேராசைமிக்க அவாவினைக்கொண்டு அழிந்துபோக விட்டிடாதே; தெய்வீக இளைஞனின் அழகினைத் தானெனுந்தன்மை, உணர்ச்சி என்னும் தூசியினால் இருளடையச் செய்திடாதே.

உன்னை நேர்மைத்தன்மை என்னும் சாராம்சத்தை அணிவிக்கச் செய்திடுவாயாக; உனது உள்ளத்தை இறைவனைத் தவிர வேறெதன்பாலும் அச்சங்கொள்ளச் செய்திடாதே.

உனது உள்ளமெனும் நீரூற்றிலிருந்து வழிந்திடும் ஆன்மாவின் பிரகாசமிக்கச் சுனையினை, வீணான, மட்டுமீறிய பாசங்களெனும் முட்களாலும் முட்செடிகாளாலும் தடைப்படுத்திடாதே; அந்நீரோடையின் உயிர்நீரின் ஓட்டத்தைத் தேங்கச் செய்திடாதே.

உனது நம்பிக்கை அனைத்தையும் இறைவனிலேயே வைத்து, அவரது தவறா கருணையை வலுவாகப் பற்றிக்கொள்.

அவரைத் தவிர வேறு யாரால் வறியோரை வளம்பெறச் செய்யவும், தாழ்வுற்றோரை இழிநிலையிலிருந்து மீட்டிடவும் இயலும்?

எனது ஊழியர்களே! எனது மாசுபடுத்தவியலாத செல்வம் என்னும் மறைவாயுள்ள, கறையற்ற மாக்கடல்களைக் கண்டிடுவீராயின், நீங்கள், நிச்சயமாக, உலகையும், இல்லை, படைப்பு முழுவதையுமே, அற்பமென மதித்திடுவீர்.

தேடுதலெனும் ஒளிப்பிழம்பு - நீங்கள், உங்களின் அதிசிறந்ததும், உயர்வானதுமான நோக்கத்தினை - அதிநேசரான அவரை அணுகி, அவருடன் ஒன்றிணைந்திடுமளவு - உங்களின் உள்ளங்களில் உக்கிரமாக எரியட்டும்.

எனது ஊழியர்களே! உங்களின் வீணான நம்பிக்கைகள், பயனற்றக் கற்பனைகள் ஆகியவற்றைப் பேரொளிமயமான இறைவன்பால் உங்களுக்குள்ள நம்பிக்கையின் அடித்தளங்களையே பலவீனமடையச் செய்ய விடாதீர்; ஏனெனில், அத்தகைய கற்பனைகள் மனிதருக்கு முழுதும் பயனற்றதாக இருந்து வந்திருக்கின்றன; அவை அவர்களின் காலடிகளை, நேரான பாதையில் செல்வதில் தோல்வியடையச் செய்துள்ளன.

எனது ஊழியர்களே, யாவற்றையும் சூழ்ந்துள்ள எனது கரம், நிழல்விழச் செய்யும் மேன்மைமிகு எனது மாட்சிமை ஆகியவை கட்டுப்படுத்தப் பட்டுவிட்டது என்றோ, புராதனமானதும் ஓயாததுமான யாவற்றையும் வியாபித்துள்ள எனது கருணையின் பெருக்குத் தடைச்செய்யப்பட்டு விட்டது என்றோ, விழுமியதும், ஒப்பற்றதுமான எனது சலுகைகள் என்னும் மேகங்கள் அவற்றின் அன்பளிப்புகளை மனிதர்மீது பொழிவதை நிறுத்திவிட்டனவென்றோ நினைக்கின்றீரா? எனது தெய்வீகமான, தடுக்கவியலாத சக்தியினைப் பிரகடனஞ் செய்திடும் வியத்தகு சாதனைகள் கைவிடப்படுவதையோ, எனது திருவிருப்பத்தின் ஆற்றலும் குறிக்கோளும் மனித இனத்தின் விதிகளின் இயக்கத்தைத் தடுத்து விட்டிருப்பதையோ நீங்கள் கற்பனைச் செய்ய முடியுமா? அது அவ்வாறில்லையெனில், எதனால் நீங்கள் எனது புனிதமான, அருள்பாலிக்கும் வதனத்தின் அழிவற்ற அழகினை மனிதரின் பார்வைக்குத் திரைவிலக்குவதைத் தடைச்செய்துள்ளீர்? எதனால், நீங்கள், எல்லாம்வல்ல, பேரொளிமயமான உயிருருவின் அவதாரமான அவரைத் தனது வெளிப்பாட்டின் பிரகாசத்தினை உலகின்மீது விழச்செய்வதைத் தடுக்கக் கடுமுயற்சி செய்தீர்கள்? உங்கள் தீர்ப்பில், நீங்கள் நியாயமானோராயின், எவ்வாறு எல்லாப் படைப்புப் பொருள்களின் மெய்ம்மைகள், இப் புதியதும், வியக்கத் தக்கதுமான வெளிப்பாட்டினால் ஏற்படும் மகிழ்ச்சியினால் கிளர்ச்சியுற்றுள்ளதையும், எவ்வாறு உலகத்தின் அணுக்களெல்லாம் அதன் ஒளியின் பிரகாசத்தின்மூலம் ஒளிபெறச் செய்யப்பட்டுள்ளன என்பதையும் தயக்கமின்றி அடையாளங் கண்டிடுவீர்.

நீங்கள் கற்பனைச் செய்துள்ளதும் இன்னும் கற்பனை செய்திடுவதும் எத்துணை வீணானதும் இரக்கத்துக்குரியதும் ஆகும்!

எனது ஊழியர்களே, பின்னால் அடியெடுத்து வைத்து, உங்கள் உள்ளங்களை, உங்களின் படைப்பிற்கு மூலகாரணமாகிய அவர்பால் திருப்புங்கள்.

உங்களின் தீய, ஒழுங்கற்றப் பாசங்களிலிருந்து உங்களை விடுவித்துக்கொண்டு, ஸைனாயில் கனன்றெரியும் இம் மர்மமான, உயரிய, வெளிப்பாடெனும் அணையாச் சுடரின் ஒளியினைத் தழுவிட விரைந்திடுங்கள்.

இறைவனின் தெய்வீகமான, சகலத்தையும் சூழ்ந்துள்ள, திருமொழியினைக் களங்கப்படுத்தி, அதன் புனிதத் தன்மையினை மாசுபடுத்தவோ, அதன் மேன்மைமிகு குணவியல்பினைத் தரங்குறையச் செய்திடாதீர்.

கவனமற்றோரே! எனது கருணை என்னும் அதிசயங்கள், கண்ணுக்குப் புலனாகும் புலனாகா படைப்புப் பொருள் அனைத்தையும் சூழ்ந்துள்ளபோதும், எனது அருள், வள்ளன்மை ஆகிய வெளிப்பாடுகள் பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அணுவையும் ஊடுருவியுள்ளபோதும், தீயவர்களைத் தாக்கிடும் தடியோ கொடூரமிக்கது; அவர்கள்பால் எனது கோபத்தின் தீவிரமோ பயங்கரமிக்கது.

உலக ஆசைகள், வீண் பெருமை ஆகியவற்றிலிருந்து புனிதப்படுத்தப்பட்ட காதுகளைக் கொண்டு, நான், எனது கருணைமிக்க அன்பின் நிமித்தம் உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ள அறிவுரைகளை உற்றுக் கேளுங்கள்; அகக் கண், புறக் கண், ஆகியவற்றைக் கொண்டு எனது அற்புதமிக்க வெளிப்பாட்டின் சான்றுகளைத் தியானியுங்கள்.

எனது ஊழியர்களே! தெய்வீக ஒளி என்னும் தீபத்தினுள் பிரகாசிக்கும் மங்காத வெளிச்சத்தினை உங்களை நீங்களே இழக்கச் செய்திடாதீர்.

இறையன்பெனும் சுடரினை உங்களின் பிரகாசமிக்க உள்ளங்களில் கொழுந்து விட்டெரிய விடுவீராக.

தெய்வீக வழிகாட்டுதல் என்னும் எண்ணெயைக் கொண்டு அதற்கு ஊட்டமளித்து, உங்களின் மாறாத் தன்மை என்னும் நிழலின்கீழ் அதனைப் பாதுகாப்பீராக.

பொறுப்புடைமை, இறைவனைத் தவிர மற்றதனைத்தின்பாலும் பற்றின்மை, என்னும் கோளத்தினுள் அதனைக் காப்பீராக; அதனால், சமய நம்பிக்கையற்றோரின் தீய குசுகுசுப்புகள் அதன் ஒளியினை அணைத்திடாதிருக்கக் கூடும்.

எனது ஊழியர்களே! எனது புனிதமான, தெய்வீகமாக விதிக்கப்பட்ட வெளிப்பாட்டினை ஒரு சமுத்திரத்திற்குச் சமமாகக் கருதலாம்; எண்ணற்ற, மதிப்புமிக்க, இணையற்ற, பிரகாசமிக்க, முத்துக்கள் அதன் ஆழத்தில் மறைந்து கிடக்கின்றன.

எழுச்சியுற்று அச் சமுத்திரத்தின் கரையை அடைய கடுமுயற்சி செய்யவேண்டியது தேடுபவர் ஒவ்வொருவரின் கடமையாகும்; அதனால், அவர், தனது தேடுதலின் ஆர்வத்தின் அளவுக்கேற்பவும், அவர் செய்திட்ட முயற்சிக்கேற்பவும், இறைவனின் மாற்றவியலாததும், மறைவாயுள்ளதுமான நிருபங்களில் முன்விதிக்கப்பட்டுள்ள பங்கினைப்பெற்றிடுவார்.

அதன் கரைகளை நோக்கி எவருமே நடக்கவிரும்பவில்லையெனில், ஒவ்வொருவரும் அவரைத் தேடும் பொருட்டு எழுவதில் தோல்வி அடைவரெனின், அத்தகைய தோல்வி, அச்சமுத்திரத்தின் சக்தியைப் பறித்து விட்டதாகவோ, அதன் செல்வங்களைச் சிறிதளவேனும் குறைவுறச் செய்துவிட்டதாகக் கொள்ளமுடியுமா? உங்களின் உள்ளங்கள் புனைந்துள்ளதும் தொடர்ந்தும் புனைந்துவரும் கற்பனைகள் எந்தளவு வெறுக்கத்தக்கவை! எனது ஊழியர்களே! ஒரே மெய்க்கடவுளானவரே எனது சாட்சி! இவ்வதி மேன்மையான, ஆழங்காணவியலாத இச் சமுத்திரம் அருகில் இருக்கின்றது, வியப்படையச் செய்யுமளவு அருகில், உங்கள் அருகிலேயே இருக்கின்றது.

அது உங்களின் உயிர் நாடியை விட இன்னும் அருகில் இருப்பதைப் பாருங்கள்! விரும்பினால், நீங்கள், கண்சிமிட்டும் நேர வேகத்தில், அதனையடைந்து, அதன் இறவா சலுகையினை, இறைவனால் வழங்கப்பட்ட அருளினை, ஒழுக்கக் கேட்டுக்குட்படுத்தவியலாத அன்பளிப்பினை, இவ்வதி சக்தி வாய்ந்ததும் சொற்களால் விவரிக்க இயலாததுமான ஒளிமிக்க அவ்வள்ளன்மையினைப் பெற்றிடக் கூடும்.

எனது ஊழியர்களே! எத்தகைய வள்ளன்மையின் அதிசயங்களை நான் உங்களின் ஆன்மாக்களிடம் ஒப்படைக்க விரும்பியிருக்கின்றேன் என்பதை நீங்கள் உணர்வீராயின், உண்மையாகவே, நீங்கள் படைப்புப்பொருள்கள் அனைத்தின்பாலும் உள்ள பற்றுகளையெல்லாம் துறந்து, உங்களைக் குறித்த உண்மை அறிவைப் பெற்றிடுவீர் - அவ்வறிவு, எனது மெய்நிலையின் அறிவுக்கே சமமானதாகும்.

உங்களை நீங்கள் என்னைத் தவிர மற்றதனைத்தினின்றும் சுதந்திரமடைந்தோராகக் கண்டிடுவீர்; உங்களின் அகக்கண், புறக்கண் ஆகியவற்றினால் எனது அன்புக் கருணை, அருள்பாலிப்பு என்னும் கடல்கள் உங்களுள் அசைவுறுவதைக் காண்பீர்; அவை சுடரொளி வீசும் எனது திருநாமத்தின் வெளிப்படுத்துதலைப் போன்று தெளிவாய்த் தோன்றிடும்.

உங்களின் வீண் கற்பனைகளை, உங்களின் உணர்ச்சிகளையும், நேர்மையின்மையையும், உள்ளத்தின் குருட்டுத் தன்மையையும் உயரிய நிலையின் அத்துணைப் பிரகாசத்தினை மங்கச் செய்யவோ, அதன் புனிதத்தன்மையைக் கறைப் படுத்தவோ விட்டுவிடாதீர்.

நீங்கள், விண்ணுலகங்களின் பெரும்பரப்பினூடே, பூரண மகிழ்ச்சி பொங்கும் நம்பிக்கையுடன், தனது பலம் பொருந்திய இறக்கைகளின் முழு வலிமையுடன் உயர்ந்தெழுந்திடும் பறவையைப் போன்றவர்கள்; அதன் பசியைத் தணிக்க வேண்டிய கட்டாயத்தினால் அது கீழேயுள்ள தண்ணீரையும் களிமண்தரையையும் ஆவலுடன் நோக்கித் திரும்புகின்றது; அது தன் ஆசையின் வலையில் சிக்கிக் கொண்டபின், தான் எங்கிருந்து வந்ததோ அப்பிரதேசத்தை நோக்கிப் பறக்கச் சக்தியற்ற நிலையில் தன்னைக் காண்கின்றது; தனது கறைப்படுத்தப்பட்ட இறக்கையை அழுத்திடும் சுமையை உதறித்தள்ளுவதற்குச் சக்தியற்றிருக்கும் அப்பறவை, அதுவரை விண்ணுலகங்களின் வாசியாய் இருந்துவந்த அப்பறவை, இப்பொழுது மண்ணின்மீது உறைவிடந் தேட முயற்சிசெய்ய வேண்டியதாகி விட்டது.

அதனால், எனது ஊழியர்களே, உங்களின் இறக்கைகளைக் கீழ்ப்படியாமை என்னும் களிமண், வீண் ஆசைகள் ஆகியவற்றைக் கொண்டு கறைப்படுத்திடாதீர்; அவற்றைத் தூசியினாலும் வெறுப்பினாலும் கறைப்படுத்த விட்டுவிடாதீர்; அதனால், நீங்கள் எனது தெய்வீக ஞானம் என்னும் வானத்தில் உயர்ந்தெழுவதிலிருந்து தடுக்கப்படாமல் இருக்கக்கூடும்.

எனது ஊழியர்களே! இறைவனின் வலிமை, அவரது சக்தி ஆகியவையின் மூலமாகவும், அவரது அறிவு, விவேகம் என்னும் கருவூலத்திலிருந்தும், நான், அவரது நிலையான சமுத்திரத்தின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் முத்துக்களை வெளிக்கொணர்ந்து புலனாக்கியுள்ளேன்.

விண்ணுலகக் கன்னிகளுக்கு, மறைவு என்னும் திரைக்குப் பின்னால் இருந்து வெளிவருமாறு அழைப்பாணை விடுத்து, அவர்களுக்கு எனது திருச்சொற்கள் என்னும் ஆடையினை அணிவித்துள்ளேன் - அச்சொற்கள் சக்தி, விவேகம் ஆகியவற்றைக் கொண்டு முழுநிறைவு பெற்றவையாகும்.

மேலும், நான், தெய்வீகச் சக்தி என்னும் கரத்தினால் எனது வெளிப்படுத்துதல் என்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட மதுரசத்தினைத் திறந்து, அதன் புனிதமான, மறைவான, கஸ்தூரி மிக்க நறுமணத்தினைப், படைப்புப் பொருள் அனைத்தின்மீதும் வீசச்செய்துள்ளேன்.

இறைவனின் அத்தகைய உயரிய, அனைத்தையும் உள்ளடக்கியுள்ள அருளினை, அத்தகைய பிரகாசமிக்க கருணையின் வெளிப்படுத்துதலை, உங்களுக்கு அளிக்கப் பெறாதிருப்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும்போது, அதற்கு, உங்களைத் தவிர வேறு யாரைக் குற்றஞ் சொல்வது? எனது ஊழியர்களே! எனது உள்ளத்தினில் தெய்வீக வழிகாட்டுதலின் அதிகாலையைத் தவிர வேறெதுவுமே ஒளி வீசுவதில்லை; எனது வாயினின்று உங்கள் இறைவனான பிரபு வெளிப்படுத்தியுள்ள மெய்ம்மையின் சாரத்தைத் தவிர வேறெதுவுமே வெளிப்படுவதில்லை.

ஆகவே, உங்கள் உலகியல் ஆசைகளைப் பின்பற்றி, இறைவனின் ஒப்பந்தத்தை மீறவோ, அவர்பால் உங்களின் வாக்குறுதியை முறிக்கவோ செய்திடாதீர்.

அசையாத மனவுறுதியுடனும், உங்கள் உள்ளத்தின் முழுப் பாசத்துடனும், உங்கள் வார்த்தைகளின் முழு வலிமையுடனும், அவர்பால் திரும்புங்கள்; முட்டாள்களின் வழிகளில் நடந்திடாதீர்.

உலகமே ஒரு கண்காட்சி; வீணானது, ஒன்றுமில்லாதது; வெறுமை; மெய்ம்மையின் போலித்தோற்றத்தைக் கொண்டுள்ளது.

உங்கள் பாசத்தை அதன்மீது வைத்திடாதீர்.

உங்களை உங்கள் படைப்போனுடன் ஒன்றிணைத்திடும் பிணைப்பினைத் துண்டித்திடாதீர்; தவறிழைத்து, அவரது பாதைகளைவிட்டு வழிதவறிப் போனவர்களைச் சேர்ந்திடாதீர்.

மெய்யாகவே, நான் கூறுகின்றேன், உலகம் பாலைவனத்தின் கானல்நீரைப் போன்றது; தாகமுற்றோர் அதனை நீர் என்றெண்ணி, அடைய கடு முயற்சி செய்வர்; அதனை அடைந்த பொழுதுதான் அது வெறும் மாயை என்பதை உணர்ந்திடுவர்.

மேலும், அதனை நேசரின் ஓர் உயிரற்ற உருவத்தின் நிழலுருவமே என்பதைக் கண்டிடுவர்; அதனைத்தான் அன்பர், நீண்டகாலத் தேடுதலுக்குப் பின் கண்டுபிடித்தார்; இறுதியில், அது, தன்னைச் “செழிப்படையச் செய்யவோ, பசியைத் தணிக்கவோ முடியாத ஒன்று” என்பதைக் கண்டு வருந்தினார்.

எனது ஊழியர்களே! இந்நாளில், இவ்வுலகளவில், உங்களின் விருப்பத்திற்கு மாறானவை இறைவனால் நியமிக்கப்பட்டு வெளிப்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டு வருந்தாதீர்; ஏனெனில், பேரானந்தம், தெய்வீக மகிழ்ச்சி நிறைந்த நாள்கள், உங்களுக்கென நிச்சயமாகக் காத்துக் கொண்டிருக்கின்றன.

புனிதமானதும், ஆன்மீக ஒளிமிக்கதுமான உலகங்கள் உங்கள் கண்களுக்குத் திறக்கப்படும்.

இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீங்கள் அவற்றின் நலன்களை அனுபவிக்கவும், அவற்றின் மகிழ்ச்சியில் பங்குப்பெறவும், அவற்றின் பேணும் அருளினில் ஒரு பகுதியைப் பெற்றிடவும், அவரால் விதிக்கப் பட்டுள்ளீர்.

அவை ஒவ்வொன்றையும் நீங்கள் அடைவீர்கள் என்பதில் ஐயமே கிடையாது.

CLIV

சல்மானே! ஒரே உண்மைக் கடவுளின் நேசர்களை, மனிதரின் கூற்றுக்களையும் இலக்கியப் படைப்புகளையும் குற்றங்காணும் கண்கொண்டு பார்க்காதிருக்குமாறு எச்சரிப்பீராக.

மாறாக, அவர்களின் கூற்றுக¬ளையும் இலக்கியப் படைப்புகளையும் திறந்த மனதுடனும், பரிவன்பு நிறைந்த உள்ளத்துடனும் நாடுங்கள்.

இருப்பினும், இந் நாளில், தங்களின் உணர்ச்சியைக் கிளறும் நூல்களில் இறைவனது சமயத்தின் கொள்கைகளைத் தாக்க வழிவகுப்பனவற்றை வேறுவகையில் நடத்தவேண்டும்.

ஒவ்வொருவரும் தத்தம் சக்திக்கேற்ப, இறைவனின் சமயத்தைத் தாக்கியுள்ளோரின் வாதங்களை மறுக்க வேண்டியது எல்லா மனிதருக்கும் கடமையாகின்றது.

அவ்வாறுதான், அதிசக்திவாய்ந்தவரும் எல்லாம்வல்லவருமான அவரால் ஆணையிடப்பட்டுள்ளது.

ஒரே மெய்க்கடவுளான அவரது சமயத்தை முன்னேற்ற விரும்புகின்ற ஒருவர், வாள், வன்முறை ஆகியவற்றின் வழியிலல்லாது, தனது எழுதுகோல், நா ஆகியவற்றின் மூலமாகவே அதனை முன்னேற்றட்டும்.

முன்பு ஒரு வேளையில், யாம், இத்தடையுத்தரவை வெளிப்படுத்தியுள்ளோம்; நீங்கள் புரிந்துகொள்ளக் கூடியோராயின், யாம் அதனையே இப்பொழுது உறுதிப்படுத்துகின்றோம்.

இந் நாளில், படைப்புப் பொருள்கள் அனைத்தின் அதி உள்ளார்ந்த மையத்தினுள் குரலெழுப்புகின்ற அவரது நேர்மைத்தன்மை சாட்சியாக: “இறைவா, எம் ஒருவரைத் தவிர இறைவன் வேறிலர்!” எந்த மனிதனாவது, தனது எழுத்தோவியங்களில், இறைவனின் சமயத்தைத் தாக்குவோரிடமிருந்து, அதனைப் பாதுகாக்க எழுவாராயின், அத்தகைய மனிதர், அவரது பங்கு எவ்வளவு அற்பமானதாய் இருந்திடினும், வரவிருக்கும் உலகினில் அவர், கௌரவிக்கப் படுவார்; அவரது புகழைக் கண்டு வான்படையினரே பொறாமையடைவர்.

அவரது ஸ்தானத்தின் உயர்வினை எந்த ஓர் எழுதுகோலுமே சித்திரிக்கவியலாது; அல்லாமலும், எந்த நாவுமே அதன் பிரகாசத்தினை வருணிக்க முடியாது.

யாராவது புனிதமான, உயரிய, மேன்மைப் படுத்தப்பட்ட இவ்வெளிப்பாட்டினில் உறுதியாய் இருப்பாராயின், அவர் விண்ணுலகிலும் மண்ணுலகிலுமுள்ள அனைத்தையுமே எதிர்த்து நிற்க ஆற்றலளிக்கப்படுவார்.

இதற்கு இறைவனே சாட்சி.

ஆண்டவனின் அன்புக்குப் பாத்திரமானவர்களே! உங்களின் மஞ்சங்களில் இளைப்பாறிக் கொண்டிராதீர்; மாறாக, படைப்போனாகிய உங்களின் பிரபுவை அங்கீகரித்து, அவருக்கு நேர்ந்தவற்றைக் கேட்ட அக்கணமே அவருக்கு உதவி நல்கிட விரையுங்கள்.

உங்கள் நாவினைக் கட்டவிழ்த்து அவரது சமயத்தினை ஓயாது பிரகடனஞ் செய்யுங்கள்.

நீங்கள் இவ்வுண்மையைப் புரிந்துகொள்வீராயின், உங்களுக்கு இதுவே கடந்தகால எதிர்கால பொக்கிஷங்கள் அனைத்தையும் விட மிகுந்த நன்மை பயப்பதாகும்.

CLV

இறைவனால் தமது ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட முதல் கடமை யாதெனில் தமது வெளிப்பாட்டின் பகலூற்றானவரும் தமது சட்டங்களுக்குத் தோற்றுவாயானவரும் தமது சமயம் என்னும் இராஜ்ஜியம், படைப்புலகம் ஆகிய இரண்டிலும் இறைமையைப் பிரதிநிதிப்பவருமாகிய அவரை அறிந்து, ஏற்றுக் கொள்வதுதான்.

இக் கடமையை எய்திடும் ஒருவன் நல்லன அனைத்தையும் அடைந்தவன் ஆவான்; அதன் இழப்பிற்கு ஆளாகிடும் ஒருவன் நேர்மைச் செயல் ஒவ்வொன்றிற்கும் தோற்றுவாயாக இருந்தபோதிலும் வழி தவறிப் போனவனே.

அதி விழுமிய இந்நிலையை , உயர்வுமிகு இவ்வொளியின் உச்சத்தை அடையும் ஒவ்வொருவனும் உலகின் ஆவலாகிய அவரது ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டியது இன்றியமையாததாகும்; இவ்விரட்டைக் கடமைகள் பிரிக்கப்பட இயலாதவை.

ஒன்றின்றி மற்றது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இவ்வாறுதான் தெய்வீக அருட்தூண்டலின் ஊற்றாகிய அவரால் ஆணையிடப் பட்டுள்ளது.

இறைவனால் வழங்கப் பட்டுள்ள கட்டளைகள்தாம் உலகில் ஒழுங்கை நிலைநாட்டுதற்கும் அதன் மக்களின் பாதுகாப்பிற்கும் உகந்த அதி உயரிய வழியென இறைவனால் அகநோக்கு அருளப்பெற்றவர்கள் தடையின்றி அறிந்துகொள்வர்.

அவற்றிலிருந்து அப்பால் செல்பவன் இழிவானவர்கள், அறிவிலிகள் ஆகியோரின் பட்டியலில் சேர்க்கப்படுவான்.

தீய உணர்ச்சிகள், ஒழுங்கற்ற ஆசைகள் ஆகியவற்றின் உந்துதல்களை மறுக்கும்படியும் அதிவுயரிய எழுதுகோல் நிர்ணயித்துள்ள வரம்புகளை மீறாதிருக்கும்படியும் மெய்யாகவே, யாம் கட்ட¬ளைப் பிறப்பித்துள்ளோம்.

ஏனெனில் இவைதாம் படைப்பினங்கள் அனைத்திற்கும் உயிர்மூச்சாகும்.

தெய்வீக விவேகம் என்னும் கடல்களும் தெய்வீக வெளியிடுகையும் கருணைமயமான மூச்சினின்று வெளித் தோன்றிய தென்றலிலிருந்து உருவானவையாகும்.

புரிந்திடும் ஆற்றல் உடைய மனிதர்களே, இயன்றளவு பருகிட விரைந்திடுவீராக! இறைவனின் கட்டளைகளை மீறி, அவற்றிலிருந்து பின்வாங்குவதன் மூலம் அவரது ஒப்பந்தத்தின் வரம்பை மீறிய இவர்கள், சகலத்தையும் கொண்டுள்ள, அதி உயர்வான ஆண்டவனின் பார்வையில், கடுந் தவறிழைத்தோர் ஆவர்.

வையத்தின் மக்களே! எமது ஊழியர்களின் மத்தியில் எமது கட்டளைகளே எமது அன்புமிகு அருள்பாலிப்புகள் என்னும் ஒளி விளக்குகள் என்பதையும் படைப்புலகின்பால் எமது கருணைக்குத் திறவுகோல் என்பதையும் நிச்சயமாக அறிந்திடுவீராக.

இவ்வாறுதான் அது வெளிப்பாட்டின் தேவரான, உங்களது தேவரின் விருப்பம் என்னும சுவர்க்கத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருணைமயமானவரின் உதடுகள் விரும்பி உதிர்த்திட்ட சொற்களின் இனிமையினைச் சுவைத்திடும் எந்தவொரு மனிதனும், தான் உலகப் பொக்கிஷங்கள் அனைத்தையுமே கொண்டிருந்தபோதிலும், அவரது வள்ளன்மைமிகு ஆதரவு, அன்புக் கருணை என்னும் பகலூற்றின் மேல் பிரகாசிக்கும் அவரது கட்டளைகளில் ஒன்றையாவது மெய்ப்பிக்கும் பொருட்டு அவை அனைத்தையும் துறப்பான்.

கூறுங்கள்! எமது சட்டங்களிலிருந்து எமது அங்கியின் இனிய நறுமணம் நுகரப் படும்; அவற்றின் உதவியைக் கொண்டு அதிவுயரிய சிகரங்களின்மீது வெற்றிக் கொடிகள் நாட்டப்படும்.

எமது சக்தி என்னும் நா சர்வ வல்லமைப் பெற்றுள்ள எமது ஒளி என்னும் சுவர்க்கத்திலிருந்து எமது படைப்பை நோக்கி இச் சொற்களை இயம்புகின்றது: “எமது அழகின் மீதுள்ள அன்பின் பொருட்டு எமது கட்டளைகளைக் கடைப்பிடிப்பாயாக.

” எந்தவொரு நாவுமே வருணிக்க இயலாத தெய்வீக, நறுமணம் மிக்க இச் சொற்களிலிருந்து தனது அதி அன்புக்குரியவரின் நறுமணத்தினை நுகர்ந்திட்ட அன்பன் மகிழ்வெய்துவான்.

எமது உயிரின்மீது ஆணை! எமது அருள்மிகு கடாட்சம் என்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்மை என்னும் மதுரசத்தினைப் பருகிட்ட ஒருவன் எமது படைப்பு என்னும் பகலூற்றின்மேல் பிரகாசிக்கும் எமது கட்டளைகளை வலம் வருவான்.

யாம் உங்களுக்கு வெளிப்படுத்துயுள்ளது ஒரு வெறும் சட்டத் தொகுப்பு என்று எண்ணிடாதீர்.

மாறாக, சக்தி, வலு என்னும் விரல்களைக் கொண்டு நனிசிறந்த மதுரசத்தினை வெளிக்கொணர்ந்துள்ளோம்.

வெளிப்படுத்துதல் என்னும் எழுதுகோல் இதனை வெளிப்படுத்தியுள்ளதே இதற்குச் சாட்சியம் பகர்கின்றது.

அக நோக்குடைய மனிதர்களே, இதனைத் தியானிப்பீராக! எமது வெளியிடுகை என்னும் சுவர்க்கத்தில் சூரியனைப் போன்று எமது சட்டங்கள் உதிக்கின்ற பொழுதெல்லாம், ஒவ்வொரு சமயம் என்னும் சுவர்க்கத்தினையும் எமது ஆணை பிளவுறச் செய்யக் கூடியதாயினும் அவை அனைவராலும் விசுவாசத்துடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

அவர் விரும்பியதை அவர் செய்வார்.

அவர் தேர்ந்தெடுப்பார், அவரது தேர்வை எவரும் தட்டிக் கேட்கலாகாது.

அதி அன்புக்குரியவர் எதனையெல்லாம் விதிக்கின்றாரோ அவை, மெய்யாகவே, நேசிக்கத் தகுந்தவையாகும்.

இதற்குப் படைப்பிற்கெல்லாம் பிரபுவான அவரே சாட்சி பகர்கின்றார்.

கருணை மயமானவரின் நறுமணத்தினை நுகர்ந்து இவ் வெளியிடுகையின் தோற்றுவாயைக் கண்டு கொள்ளும் ஒருவன் இச் சட்டங்களின் மெய்ம்மையினை மனிதர்களிடையே நிலைநாட்ட வேண்டும் என்பதன் பொருட்டுத் தனது கண்களைக்கொண்டே பகைவர்களின் ஈட்டிகளை வரவேற்பான்.

அதன்பால் திரும்பி அவரது முடிவான கட்டளைகளின் பொருளினை ஒருவன் புரிந்து கொண்டால் அது அவனுக்கு நன்று.

CLVI

நித்திய மெய்ம்மையாகிய அவர் பேரொளி என்னும் பகலூற்றிலிருந்து, பஹாவின் மக்களின் திசையில் தனது பார்வையைச் செலுத்தி இத்திருச்சொற்களை மொழிகின்றார்: “மனிதர்களின் குழந்தைகளது நலனையும் அமைதியையும் தழைக்கச் செய்வதில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீராக.

உங்கள் மனங்களையும் மனவுறுதியையும் உலக மக்களுக்குக் கல்வி புகட்டுவதில் முழுமையாக ஈடுபடுத்துங்கள்; அதனால் அதனைப் பிளவுறச் செய்திருக்கும் கருத்து வேற்றுமைகள் அதிவுயரிய நாமத்தின் சக்தியின் மூலம் துடைத்தொழிக்கப்படக் கூடும்; மனிதர் யாவரும் ஒரே ஒழுங்கை நிலை நாட்டுபவர்களாகவும் ஒரே மாநகரின் வாசிகளாகவும் ஆகக்கூடும்.

உங்களின் இதயங்களை ஒளி பெறச்செய்து புனிதப்படுத்திக் கொள்வீராக; வெறுப்பு எனும் முட்களினாலோ பகைமை எனும் நெருஞ்சி முட்களினாலோ அவற்றைக் களங்கப்படுத்திக் கொள்ளாதீர்.

நீங்கள் வாழும் உலகம் ஒன்றே; ஒரே விருப்பத்தின் வழியே படைக்கப்பட்டுள்ளீர்.

எவரொருவர் மனிதர் யாவருடனும் பேரன்புடனும் அதி நேசத்துடனும் பழகுகின்றாரோ அவர் ஆசீர்வதிக்கப்படுவார்.

CLVII

எவர் எமது சமயத்தைப் போதிக்கும் நோக்கத்துடன் தங்களின் நாட்டைத் துறந்தனரோ, அவர்களை - விசுவாசமிக்க ஆவியானது அதன் சக்தியின் மூலம் வலுப்படுத்திடும்.

எல்லாம் வல்லவரான, சர்வ விவேகியான அவரால் கட்டளையிட்டதற்கேற்ப, தேர்ந்தெடுக்கப் பட்ட தேவ கணங்களின் சைனியம் ஒன்று அவர்களைத் தொடர்ந்து செல்லும்.

எல்லாம் வல்லவருக்குச் சேவைச்செய்யும் கௌரவத்தை அடைந்திடும் ஒருவருக்குக் காத்திருக்கும் அருட்பேறுதான் எத்துணை மகத்தானது! எனது உயிரின்மீது ஆணை! சக்திமயமான, அதி ஆற்றல்மிக்க இறைவனால் விதிக்கப்பட்ட செயல்களைத்தவிர வேறெந்தச் செயலுமே, அது எத்துணை மேன்மையானதாயினும், அதனுடன் ஒப்பிடப்பட இயலாது.

அத்தகைய சேவையானது, உண்மையாகவே, நற்செயல்களுக்கெல்லாம் இளவரசனும், ஒவ்வொரு நற்செயலுக்கும் ஆபரணமும் ஆகும்.

அவ்வாறுதான், மாட்சிமைமிகு வெளிப்படுத்துபவரான, நாள்களுக்கெல்லாம் புராதனமான அவரால் விதிக்கப்பட்டுள்ளது.

யாரொருவர், எமது சமயத்தைப் போதிக்க எழுகின்றாரோ, அவர், உலகியல் பொருள்கள் அனைத்தினின்றும் பற்றறுத்துக் கொண்டு, எல்லா வேளைகளிலும், எமது சமயத்தின் வெற்றியையே அவரது அதிமுக்கிய குறிக்கோளாகக் கருதவேண்டும்.

மெய்யாகவே, இதுவே, இறைவனால் தமது பாதுகாக்கப்பட்ட நிருபத்தினில் கட்டளையிடப்பட்டுள்ளது.

அவர், தனது பிரபுவின் சமயத்திற்காகத் தனது இல்லம் நீங்க உறுதி எடுக்கும் பொழுது, இறைவனிலேயே தனது முழுநம்பிக்கையையும் வைக்கவேண்டும்; தனது பிரயாணத்துக்கு நல்லேற்பாடாக, அவர் நல்லொழுக்கம் என்னும் உடையினால் தன்னை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறுதான், எல்லாம் வல்ல, எல்லாப் போற்றுதலுக்குமுரிய இறைவனால் கட்டடளையிடப் பட்டுள்ளது.

அவர் இறைவன்பால் அன்பு என்னும் நெருப்பினால் தூண்டப்படுவாராயின், படைப்புப் பொருள் அனைத்தையும் துறப்பாராயின், அவர் கூறிடும் வார்த்தைகள் அவற்றைக் கேட்போரை எழுச்சியுறச் செய்திடும்.

மெய்யாகவே, உங்களின் பிரபுவே சர்வமும் அறிந்தவர், அனைத்தும் அறிவிக்கப் பட்டவர்.

எமது குரலைக் கேட்டு எமது அழைப்பைப் பொருட்படுத்தியவர் மகிழ்ச்சியடைவார்.

அவர், உண்மையாகவே, எமதருகில் கொண்டுவரப் பட்டோரில் சேர்க்கப் படுவார்.

CLVIII

தமது சமயத்தைப் போதிக்க வேண்டியதை, இறைவன், ஒவ்வொருவருக்கும் கடமையாக விதித்துள்ளார்.

யார் இக் கடமையினை நிறைவேற்ற எழுகின்றாரோ, அவர், அவரது சமயத்தைப் பிரகடனஞ் செய்வதற்கு முன்பாக, தன்னை நேர்மைமிக்க, போற்றத்தக்க நடத்தை என்னும் ஆபரணத்தினால் அலங்கரித்துக்கொள்ள வேண்டும்; அதனால், அவரது வார்த்தைகள், தனது அழைப்பினை ஏற்குந் திறனுடையோரின் உள்ளங்களை ஈர்த்திடக் கூடும்.

அவ்வாறில்லையெனில், அவர், கேட்போரினுள் தாக்கத்தை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கையைக் கொண்டிட இயலாது.

CLIX

மனிதரின் அற்பப் புத்தியை எண்ணிப் பாருங்கள்.

தங்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடியதனைக் கோருகின்றனர்; தங்களுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய பொருளினை அப்பால் வீசுகின்றனர்.

மெய்யாகவே, அவர்களே வெகுதூரம் வழிதவறிப் போனவர்கள்.

மனிதர் சிலர் எல்லைகடந்த சுதந்திரத்தை விரும்பி, அதனில் பெருமையும் அடைவதை யாம் காண்கின்றோம்.

அத்தகைய மனிதர்கள் அறியாமையின் ஆழத்தில் கிடக்கின்றனர்.

எல்லைகடந்த சுதந்திரம், இறுதியில், துரோகச் செயலுக்கே கொண்டு செல்லும்; அத் தீயினை யாருமே தணிக்க இயலாது.

இவ்வாறுதான் சர்வஞானியான கணிப்போன் உங்களை எச்சரிக்கின்றார்.

தன்னிச்சை, மற்றும் அதன் சின்னம் ஆகியவற்றின் உருவம், மிருகமே.

மனிதனென்பவனுக்குப் பொருத்தமானது, சொந்த அறியாமையிலிருந்து தங்களைக் காப்பாற்றக் கூடியதும் விஷமம் செய்வோரின் தீங்கிலிருந்து தங்களைப் பாதுகாக்கக் கூடியதுமான கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படுதலேயாகும்.

எல்லைமீறிய சுதந்திரம் மனிதனை நல்லொழுக்கத்தின் வரம்புகளை மீறவும், தனது ஸ்தானத்தின் கௌரவத்துக்கு ஒவ்வாத முறையில் நடக்கவுஞ் செய்திடும்.

அது அவனைப் படுமோசமான இழிவு நிலைக்கும் கொடுமைச் செயலுக்கும் தாழ்த்துகின்றது.

மனிதர்களை ஆட்டிடையனின் பாதுகாப்புத் தேவைப்படும் ஒரு செம்மறியாட்டு மந்தையாகக் கருதுங்கள்; மெய்யாகவே, இதுதான் உண்மை, நிச்சயமான உண்மை.

சில சூழ்நிலைகளில் யாம் சுதந்திரத்தை அனுமதிக்கின்றோம்; மற்றவற்றில் அதனை அனுமதிக்க மறுக்கின்றோம்.

மெய்யாகவே, யாமே சகலமும் அறிந்தவர்.

கூறுவீராக: நீங்கள் அறிந்திராவிடிலும், எமது கட்டளைகளைக் கடைப்பிடித்தலில்தான் மனிதனின் உண்மையான சுதந்திரம் அடங்கியுள்ளது.

வெளிப்படுத்துதல் என்னும் சுவர்க்கத்தினின்று யாம் அனுப்பி வைத்துள்ளவற்றை மனிதர்கள் கடைப் பிடிப்பராயின், அவர்கள் நிச்சயமாக, உண்மைச் சுதந்திரத்தைப் பெற்றிடுவர்.

படைப்புப் பொருள் அனைத்தையும் சூழ்ந்துள்ள தனது விருப்பம் என்னும் சுவர்க்கத்திலிருந்து இறைவன் அனுப்பி வைத்துள்ளவற்றின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளும் மனிதன் மகிழ்ச்சியுறுவான்.

கூறுவீராக: உங்களுக்குப் பயன்தரும் சுதந்திரம் நித்திய மெய்ம்மையாகிய இறைவனிடத்தில் முழுதும் கீழ்ப்படிதலில் அல்லாது வேறெதனிலுமே கிடைக்க முடியாது.

யார் அதன் இனிமையினைச் சுவைத்துள்ளாரோ, அவர் அதனை மண்ணுலகனைத்துடனும் விண்ணுலகத்துடனும் பண்டமாற்றுச் செய்திட சம்மதிக்க மாட்டார்.

CLX

இந்நாளில், யாரொருவர், அவரை, மனிதர்கள் ஒப்பிட்டுள்ள எல்லா ஒப்புவமைகளுக்கும், ஒத்த தன்மைகளுக்கும், மேலாகவும் அளவிடற்கரிய உயரியநிலையிலும் இருக்கின்றார் எனக் கருதுகின்றாரோ, அவரே இறைவனின் ஒருமைத்தன்மையில் உண்மையான நம்பிக்கையாளர்.

யார் இவ் வொப்புவமைகளையும் ஒத்த தன்மைகளையும் இறைவனையே குறிக்கின்றனவென்று தவறாகக் கருதுகின்றாரோ, அவர், கடுந்தவரிழைத்தவர் ஆவார்.

ஒரு கைவினைஞருக்கும் அவரது கைத்தொழில் பொருளுக்கும் இடையேயும், ஓவியருக்கும் அவரது ஓவியத்திற்குமிடையேயும் உள்ள தொடர்பை எண்ணிப் பாருங்கள்.

அவர்கள் படைத்துள்ள பொருள்களும் அவர்களும் ஒன்றே என உறுதியாய்க் கூறுவது பொருத்தமா? உயர்விலுள்ள அரியாசனத்திற்கும் கீழேயுள்ள மண்ணுலகத்திற்கும் பிரபுவாகிய அவர் சாட்சியாக! அவற்றின் ஆக்கியோனின் மேம்பாட்டையும் முழு நிறைவு நிலையையும் பிரகடனஞ் செய்கின்றன என்பதற்கு அத்தாட்சிகளாகவல்லாது அவற்றை வேறெந்த கோணத்திலுமே கருதிட இயலாது.

ஷெய்க்கே, இறைவனின் விருப்பத்திற்காக உமது விருப்பத்தைத் துறந்துள்ளவரே! தன்னையே அர்ப்பணித்தல், இறைவனுடன் நிரந்தர ஒன்றிணைதல் என்பதன் பொருள், மனிதர்கள் தங்களின் விருப்பத்தை இறைவனின் விருப்பத்துடன் இரண்டறக் கலந்திடுவதோடு, தங்களின் ஆசைகளை அவரது நோக்கத்தின்முன் முற்றிலும் ஒன்றுமில்லாமையாகக் கருதவேண்டும்.

எவையெல்லாம் படைப்பவர் தனது உயிரினங்களைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிடுகின்றாரோ, அவற்றை, அவர்கள் முன்னெழுந்து, தளரா ஊக்கத்துடனும், பூரண மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும், பூர்த்திசெய்ய வேண்டும்.

எவ்வகையிலும் அவர்கள், தங்களின் கற்பனையைத் தங்களின் நுண்ணறிவாற்றலை ஒளியிழக்கச் செய்ய அனுமதிக்கலாகாது; அன்றியும், தங்களின் சுய கற்பனைகளையும் நித்தியமானவரின் குரல் எனக்கருதலாகாது.

உண்ணா நோன்புக்கான பிரார்த்தனையில் யாம் இதனை வெளிப்படுத்தியுள்ளோம்: “உமது திருவாயினின்று உமது திருவிருப்பம் அவர்களை நோக்கி இச்சொற்களை வெளிப்படுத்துமாயின் “மனிதர்களே, எனது அழகின் பொருட்டு உண்ணா நோன்பினைக் கடைப்பிடியுங்கள்; அதற்குக் காலவரையறை எதுவும் நிச்சயிக்காதீர்,” உமது பேரொளியின் மாட்சிமையின்மீது நான் ஆணையிடுகின்றேன், அவர்கள் ஒவ்வொருவரும் அதனை விசுவாசத்துடன் கடைப்பிடிப்பர்; சட்டத்தை மீறுகின்றவற்றைத் தவிர்த்திடுவர்; தங்களின் ஆன்மாக்களை உம்பால் தியாகஞ் செய்திடும் வரை அவ்வாறே தொடர்ந்தும் செய்திடுவர்.

” இதனில்தான், ஒருவர் தன் விருப்பத்தினை இறைவனின் விருப்பத்திற்கு முழுதாக அர்ப்பணித்தல் என்பது அடங்கியிருக்கின்றது.

இதனைக் குறித்துத் தியானியுங்கள்; அதனால், நீங்கள், மனித இனம் முழுவதன் பிரபுவானவரின் திருமொழியின் மூலம் பொங்கி வழிந்திடும் நித்திய வாழ்வெனும் நீரினைப்பருகி, ஒரே மெய்க்கடவுளாகியவர் என்றென்றும் தனது உயிரினங்களுக்கு மேலாக அளவிடற்கரிய உயர்வில் இருக்கின்றார் என்பதற்கு சாட்சியம் அளிக்கக்கூடும்.

அவர், மெய்யாகவே, ஒப்பற்றவர், என்றும் நிலைத்திருப்பவர், சகலத்தையும் அறிந்தவர், சர்வ விவேகி.

முழுமையான அர்ப்பணித்தல் என்னும் ஸ்தானம் மற்ற ஸ்தானம் ஒவ்வொன்றையும் விட உயர்ந்த நிலையில் இருக்கின்றது, அவ்வாறே என்றென்றும் இருந்து வரும்.

இறைவனின் விருப்பத்திற்கு உங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டியது உங்களுக்குக் கடமையாகின்றது.

எவையெல்லாம் அவரது நிருபங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளனவோ அவை அவரது விருப்பத்தின் பிரதிபலிப்பேயாகும்.

உங்களின் அர்ப்பணம் அத்துணைப் பூரணமானதாய் இருக்கவேண்டும், அதனால், உங்கள் உள்ளங்களின் உலகியல் ஆசைகளின் சுவடுகள் ஒவ்வொன்றும் கழுவப்படும்.

இதுதான் உண்மை ஒருமைத்தன்மை என்பதன் பொருள்.

இவ்வழியில் உறுதியுடன் இருப்பதற்கும், உலகின் மக்களை அவர்பால் வழிகாட்டிட உங்களுக்கு உதவுவதற்கும் தெளிவானவரும் மாட்சிமைமிகு ஆட்சியாளருமான அவரிடம் மன்றாடுங்கள்; அவர், தனிச்சிறப்பு வாய்ந்த உடையினில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்; அவர், தெய்வீகமான, பிரத்தியேகமான போதனையைத் திருவாய் மொழிந்துள்ளார்.

இதுவே நம்பிக்கையின் சாராம்சமும் பற்றுறுதியும் ஆகும்.

தங்களின் கற்பனைகள் உருவாக்கியுள்ள விக்கிரகத்தை வணங்கி, அதனையே உள்ளார்ந்த மெய்ம்மை என்றும் கூறுவோர், உண்மையிலேயே சமய நம்பிக்கையற்றோரின் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவர்.

இதற்குக் கருணைமயமானவரே தனது நிருபங்களில் சாட்சி பகர்ந்துள்ளார்.

மெய்யாகவே, சர்வ ஞானியும் சர்வ விவேகியும் அவரே.

CLXI

உங்களின் முயற்சிக்கான இடைத்துணியை வரிந்து கட்டிக்கொள்ளுங்கள்; அதனால் ஒருவேளை, நீங்கள் உங்களின் அண்டையரை அதி கருணைமிக்க இறைவனின் சட்டத்தின்பால் வழிகாட்டக்கூடும்.

அத்தகையச் செயல், மெய்யாகவே, அனைத்தையும் கொண்டுள்ள, அதி மேன்மையான இறைவனின் பார்வையில் மற்றெல்லாச் செயல்களையும் விஞ்சிடுகின்றது.

உலகப்பொருள் எதுவுமே உங்களை உங்களின் கடமையைச் செய்வதைத்தடுக்கச் சக்தியற்றுப்போகுமளவு இருக்கவேண்டும் இறைவனது சமயத்தின்பால் உங்களின் பற்றுறுதி.

உலகத்தின் சக்திகள் உங்களுக்கு எதிராக ஒன்று பட்டபோதும், மனிதரனைவருமே உங்களுடன் வாதிட்டபோதும், நீங்கள் அதிர்ச்சியடையலாகாது.

தெய்வீக வழிகாட்டுதல் என்னும் வைகறையைத் தோன்றச்செய்தவரின் செய்தியினை ஏந்திச் செல்லுகையில் கட்டுக்கடங்காத காற்றைப்போல் ஆவீராக.

எவ்வாறு, காற்று, இறைவனின் கட்டளைக்கேற்ப, உலகத்தின் எல்லாப் பகுதிகளின்மீதும், - அவை உயிரினத்தைக் கொண்டவையோ, தரிசாகக் கிடப்பவையோ, - வீசுகின்றது என்பதைக் கவனியுங்கள்.

பாழாவதன் காட்சியோ, செல்வச்செழிப்பின் ஆதாரங்களோ, அதனை வேதனையடையவோ, மனநிறைவுப் பெறவோ செய்திட இயலாது.

தனது படைப்போனின் கட்டளைக்கிணங்க, அது, எல்லாத் திசையிலும் வீசிடும்.

அவ்வாறே இருக்க வேண்டும் ஒரே மெய்க்கடவுளின் நேசர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும்.

தனது சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் தனது பார்வையைப் பதிப்பதுவும் அதனைப் பரப்புவதற்காகக் கடுமையாய் உழைப்பதுவும் அவருக்குப் பொருத்தமானது.

முழுதும் இறைவனின் பொருட்டே அவரது சமயத்தைப் பிரகடனம் செய்யவேண்டும்; பின், அதே எழுச்சிமிக்க மனோநிலையில் தனது வார்த்தைகள் கேட்போரின் மனதில் ஏற்படுத்தும் விளைவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

யார் ஒருவர் ஏற்று நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர், தனது பிரதிபலனைப் பெறுவார்; அதிலிருந்து அப்பால் திரும்புகின்றவர், தனது சொந்தத் தண்டனையையே பெற்றிடுவார்.

ஈராக்கிலிருந்து புறப்படுவதற்கு முந்தைய தினம், யாம், விசுவாசிகளை இருள் பிரதேசத்தின் பறவைகளின் வருகையைக் குறித்து எச்சரித்துள்ளோம்.

அண்மையில் கேட்டது போன்று, சில குறிப்பிட்ட நாடுகளில், அண்டங்காக்கையின் கரையும் குரலொலி கேட்கப்படும் என்பதில் எவ்வித ஐயமுமே இருக்க முடியாது.

என்ன நேரிட்டபோதிலும், ஒரே மெய்க்கடவுளிடம் புகலிடம் தேடுங்கள்; அதனால், அவர், உங்களை நயவஞ்சகனின் சூழ்ச்சிகளிலிருந்து காப்பாற்றக் கூடும்.

மெய்யாகவே, யான் கூறுகின்றேன், இவ்வலிமைமிகு வெளிப்பாட்டில், கடந்தகால சகாப்தங்கள் அனைத்தும் அவற்றின் அதிவுயரிய, இறுதியான முழுமையைப் பெற்றுள்ளன.

இவ்வாறுதான், சகலமுமறிந்த, சர்வ விவேகியான, உங்களின் பிரபுவானவர் அறிவுரை பகர்கின்றார்.

உலகங்களுக்கெல்லாம் பிரபுவாகிய இறைவனுக்கே புகழெல்லாம் உரியதாகுக.

CLXII

கருணைமயமானவர், மனிதனுக்குக் கற்பனைத் திறன் வழங்கி இருக்கின்றார்; அவனுக்குக் கேட்குந்திறனும் அருளியுள்ளார்.

சிலர் அவனை “சிற்றுலகம்“ என வருணித்துள்ளனர்; ஆனால், உண்மையில், அவன் “பெருவுலகம்“ எனக் கருதப்பட வேண்டும்.

மனித ஸ்தானத்தின் இயல்பான ஆற்றல்கள், உலகில் அவனது முழு அளவு ஊழ்வினை, அவனது மெய்ம்மையின் உள்ளார்ந்த சிறப்பு ஆகிய அனைத்துமே இறைவனால் வாக்களிக்கப் பட்ட இந்நாளில் வெளிப்படுத்தப் பட்டாகவேண்டும்.

அதி உயர்வானவரின் எழுதுகோலானவர், தனது அன்புக்குரியவர்களை, எல்லா வேளைகளிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும், மகிழ்ச்சியுடனும் இன்கனிவுடனும், தன்னை நினைவுகூர்ந்து, தனது வழியில் நடக்குமாறு அறிவுரை பகர்ந்துள்ளார்.

யாரை இவ்வுலகின் மாற்றங்கள், தற்செயல் நிகழ்வுகள் ஆகியவை, இறைவனின் ஒருமைத்தன்மை என்னும் பகல் நட்சத்திரத்தினை அறிந்து கொள்வதிலிருந்து தடுத்திடாதிருக்கின்றனவோ, யார் சுயஜீவியானவரின் முத்திரையிடப்பட்ட மதுரசத்தினை, அசைக்கவியலாத மனவுறுதியுடன் அருந்தியுள்ளாரோ, அது அவருக்கு மிக்கநன்று.

அத்தகைய மனிதர், சர்வலோகங்களின் பிரபுவான இறைவனின் திருநூலில், சுவர்க்கவாசிகளின் எண்ணிக்கையில் சேர்க்கப் படுவார்.

CLXIII

இவ்வுலகை ஓர் ஆபரணத்தினால் அலங்கரித்து, உலகச் சக்தி எதுவுமே, அதன் படை எத்துணை வலிமைமிக்கதாய் இருந்திடினும், அதன் செல்வங்கள் எத்துணை அதிகமானதாய் இருந்திடினும், அதன் தாக்கம் எத்துணை ஆழமிக்கதாய் இருந்திடினும், அவை எதுவுமே பறித்திடவியலாத ஓர் ஆடையினை அதற்கு அணிவித்துள்ள இறைவனாகிய அவருக்கே போற்றுதலெல்லாம் உரியதாகட்டும்.

கூறுவீராக: ஆற்றல் அனைத்தின் சாராம்சமே இறைவனுடையதாகும்; அவரே படைப்பிற்கெல்லாம் அதி உயரிய குறிக்கோளாகும்.

மாட்சிமை அனைத்தின் தோற்றிடம் இறைவனுடையதே; அவரே, விண்ணுலகங்கள், மண்ணுலகம் ஆகியனவற்றில் இருக்கும் அனைத்தின் வழிபடுதலின் குறிக்கோள் அவரே.

புழுதியாகிய இவ்வுலகினைத் தோற்றிடமாக்கிக் கொண்டுள்ள சக்திகள் அனைத்துமே, அவற்றின் இயல்பின்படி, முக்கியமாகக் கருதப்படத் தகுதியற்றவை.

கூறுவீராக: இப்பறவைகளின் உயிரைப் பேணிவளர்க்கும் நீரூற்றுகள் இவ்வுலகைச் சார்ந்தவையல்ல.

அவற்றின் தோற்றுவாய் மானிடரின் உணருந்திறனுக்கப்பாலும், ஆற்றலெல்லைக்கும் அறிவெல்லைக்கும் அப்பாலும் உயரியநிலையில் உள்ளது.

இறைவனின் தூய வெண்மை நிறக் கரங்கள் ஏற்றியுள்ள தீபத்தினை அணைக்கவல்லவர் யாருளர்? அதி சக்திவாய்ந்த, அனைத்தையும் நிர்பந்திக்கவல்ல, சர்வ வல்லவரான உங்களின் பிரபுவினால் தூண்டப்பட்ட நெருப்பினைத் தணிப்பதற்கான சக்தியுடையவர் எங்கே இருக்கின்றார்? உடன்பாடின்மை என்னும் ஒளிப்பிழம்பினை அணைத்து விட்டுள்ளது தெய்வீக சக்தி என்னும் கரம்தான்.

தான் விரும்பியதைச் சாதிக்கும் சக்திமிக்கவர் அவரே.

அவர் திருவாய் மொழிகின்றார்: ஆகுக; அது உருவாகின்றது.

கூறுவீராக: எனது தேர்ந்தெடுக்கப்பட்டோரின் அடித்தளத்தின் அஸ்திவாரத்தின் கற்பாறைப் போன்ற உறுதிப்பாட்டினை உலகின் கடும் புயற்காற்றுகளும் சுழற்காற்றுகளும், அதன் மனிதர்களும், அசைவுறச் செய்யவே முடியாது.

அருள்மிகு கடவுளே! நித்திய மெய்ம்மையாகிய அவரது நேசர்களை அடிமைப் படுத்திடவும் சிறையிலிடவும் இம் மனிதர்களைத் தூண்டியது எதுவாயிருக்கக் கூடும்?.

இருப்பினும், விசுவாசிகள், ஒளி என்னும் பகலூற்றிலிருந்து, நீதி என்னும் பகல் நட்சத்திரம், அதன் முழு ஒளியுடன் பிரகாசிப்பதைக் கண்ணுறும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

அவ்வாறுதான் இத் துயர்மிகு சிறையினில் இருக்கும் ஆன்மாக்கள் அனைவரின் பிரபுவானவர் உங்களுக்கு அறிவிக்கின்றார்.

CLXIV

மானிட சமுதாயத்தின் உறுப்பினர்களே! யாருமே துண்டிக்க இயலாத கயிற்றினை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்.

இது, உண்மையாகவே, உங்களின் வாழ்நாள் முழுவதும் உங்களுக்குப் பயனளிக்கக் கூடியது; ஏனெனில், அதன் வலிமை எல்லா உலகங்களின் பிரபுவாகிய இறைவனுடையது.

நீதியையும் நேர்மையையும் பற்றிக் கொள்ளுங்கள்; இறைவனிடம் நம்பிக்கை இழந்தும், கற்றோரின் ஆபரணத்தைக் கொண்டு தங்களின் தலைகளை அழகுபடுத்திக் கொண்டும், விவேகத்தின் ஊற்றாகிய அவருக்கு மரணதண்டனை விதித்துமுள்ள அறிவிலிகளின் குசுகுசுப்புகளிலிருந்து அப்பால் திரும்பிடுங்கள்.

எனது நாமம் அவர்களை உயரிய தரத்திற்கு முன்னேற்றியுள்ளது; இருந்தும், நான் என்னை அவர்களின் பார்வைக்கு வெளிப்படுத்தியவுடனே, அவர்கள், தெளிவான அநீதியுடன், எனக்கு மரணதண்டனை விதித்தனர்.

இவ்வாறுதான் எமது எழுதுகோல், உண்மையை வெளிப்படுத்தியுள்ளது; இருந்தும், மனிதர்கள் கவனமின்மையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

யாரொருவர் நீதியைப் பற்றிக்கொள்கின்றாரோ, அவர், எத்தகைய சூழ்நிலையிலும், மிதவாதத்தின் வரம்பை மீறவே மாட்டார்.

சகலத்தையும் காண்பவரான அவர், தனது வழிகாட்டுதலின்வழி, யாவற்றிலும் உண்மையைக் காண்பார்.

கலைகள், அறிவியல்கள் ஆகியவற்றைக் கற்றறிந்த விரிவுரையாளர்களால் அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்ளப் பட்ட நாகரிகங்கள், மிதவாதத்தின் எல்லைகளை மீற அனுமதிக்கப்படுமாயின், அது, மனிதருக்கு மிகுந்த தீமையை விளைவித்திடும்.

அவ்வாறுதான், சகலமும் அறிந்தவரான அவர் உங்களை எச்சரிக்கின்றார்.

நாகரிகம், அளவு என்னும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப் பட்டிருக்கும் போது நன்மை விளைவிப்பதுபோல், அது மட்டுமீறிப் போகுமாயின், அளவற்ற தீமையின் தோற்றத்திற்கு மூலகாரணமாகிவிடும்.

மனிதர்களே, இதனைத் தியானிப்பீராக; தவறு என்னும் வனாந்தரத்தில் குழப்பமடைந்து அலைந்து திரிகின்றோரில் சேர்ந்திடாதீர்.

தீச் சுவாலை மாநகரங்களை அழித்திடும் நாள், மேன்மையின் நா: “இராஜ்ஜியம் எல்லாம் வல்ல, போற்றுதல் அனைத்திற்குமுரிய இறைவனுடையதே!” எனப் பிரகடனம் செய்திடும் நாள், நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

மற்றப் பொருள்கள் அனைத்துமே அதே மிதவாதக் கொள்கைக்கு உட்பட்டதாகும்.

இவ்வியத்தகு நிருபத்தினில் உங்களை நினைவுகூர்ந்திட்ட உங்களின் பிரபுவுக்கு நன்றி கூறுவீராக.

பேரொளிமிக்க அரியாசனத்தின் பிரபுவாகிய இறைவனுக்கே போற்றுதல் அனைத்தும் உரியதாகட்டும்.

எந்த மனிதனாவது, அதி உயர்வானவரின் எழுதுகோலானவர் வெளிப்படுத்தியவற்றைத் தங்களின் உள்ளத்தில் தியானித்து, அதன் இனிமையினைச் சுவைத்திடுவானாயின், அவன், நிச்சயமாகத் தனது சொந்த ஆசைகளிலிருந்து வெறுமையாக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு, தன்னை எல்லாம் வல்லவரின் விருப்பத்திற்கு முழுதும் அடிபணிபவனாகக் காண்பான்.

இந்நாளில், அச்சங்கொண்டோர், தங்களின் நம்பிக்கையை மூடிமறைக்கும் நடத்தையை யாம் அனுமதிக்கமுடியாது; அதே வேளையில், சமயத்தை ஏற்றுக்கொண்ட நம்பிக்கையாளர் இச்சமயத்தின்பால் தனது விசுவாசத்தை ஆரவாரத்துடன் வலியுறுத்துவதையும் அனுமதிக்க முடியாது.

இருவருமே விவேகத்தைக் கடைப்பிடித்து, தளரா ஊக்கத்துடன், சமயத்திற்குச் சேவையாற்றக் கடுமுயற்சி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும், இத் தவறிழைக்கப் பட்டோனின் நடத்தையைக் குறித்துத் தியானிக்கட்டும்.

இவ்வெளிப்பாட்டின் தோற்றத்திலிருந்து இந் நாள்வரை, யாம், எமது பகைவர்களிடமிருந்து எம்மை மறைத்துக் கொள்வைதையும், எமது நண்பர்களிடமிருந்து விலகியிருப்பதையும் மறுத்துள்ளோம்.

எண்ணற்ற துன்பங்களினாலும் பேரிடர்களினாலும் சூழப்பட்டிருந்த போதும், யாம், வலுவான நம்பிக்கையுடன், உலக மக்களைப் பேரொளி என்னும் பகலூற்றின்பால் அழைத்துள்ளோம்.

அதி உயர்வானவரின் எழுதுகோலானவர், இது சம்பந்தமாக, அவர் அனுபவித்திட்ட துன்பங்களை எடுத்துரைக்க விரும்பவில்லை.

அவற்றை வெளியிடுவது, நிச்சயமாக, இறைவனின் ஒருமைத்தன்மையை ஆதரித்து, அவரது சமயத்தின்பால் விசுவாசங் கொண்டுள்ள நம்பிக்கையாளரிடையே விரும்பத் தகுந்தோரைத் துயரத்தில் ஆழ்த்திடும்.

அவர், மெய்யாகவே, உண்மையே உரைக்கின்றார்; அவர் சகலத்தையும் செவிமடுப்பவர்; சகலமும் அறிந்தவர்.

எமது வாழ்க்கையில், பெரும்பகுதியை, எமது பகைவர்கள் மத்தியிலேயே கழித்திட்டோம்.

இப்பொழுதும் யாம், பாம்புகளின் புற்றிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றதைப் பாருங்கள்.

இப்புனித ஸ்தலம் எல்லாத் திருமறைகளிலும் குறிப்பிடப்பட்டும் போற்றப்பட்டும் உள்ளது.

அதனில்தான் இறைவனின் தீர்க்கதரிசிகளும் அவரால் தேர்ந்தெடுக்கப் பட்டோரும் தோன்றியுள்ளனர்.

இதுவே இறைவனின் தூதர்கள் அனைவரும் அலைந்து திரிந்துள்ள பாழ்நிலம்; அதிலிருந்துதான்; “என் இறைவா, இதோ நான் இருக்கிறேன், இதோ நான் இருக்கிறேன் என்னும் குரல் எழுப்பப் பட்டுள்ளது.

இதுவே வாக்களிக்கப்பட்ட தேசம்; இதனில்தான் இறைவனின் வெளிப்பாடாகிய அவர் தோன்றிட விதிக்கப்பட்டுள்ளது.

இதுவே, இறைவனது தேடவியலா கட்டளை என்னும் பள்ளத்தாக்கு, தூய வெண்ணிற ஸ்தலம், மங்காத பிரகாசமிக்க தேசம்.

எவையெல்லாம் இந்நாளில் நிகழ்ந்துள்ளனவோ, அவை, கடந்தகால திருமறைகளில் முன்கூறப்பட்டுள்ளன.

இருப்பினும், இதே திருமறைகள், இந்நாட்டில் வசிப்போரை ஒருமுகமாகக் கண்டித்துள்ளன.

ஒரு காலத்தில், அவர்கள், “விரியன் பாம்பின் தலைமுறையினர்” என அவமதிப்புக் குறி வழங்கப்பட்டிருந்தனர்.

“விரியன் பாம்பின் தலைமுறையினரினால்” சூழப்பட்டிருக்கும் இவ்வேளையில், இத்தவறிழைக்கப் பட்டோன், உரத்தக்குரலில், மனிதரனைவரையும், உலகின் இறுதி ஆவலாகிய, உச்சமும் பேரொளியும் என்னும் பகலூற்றும் ஆகிய தம்பால்அழைப்பதைப் பாருங்கள்.

பேச்சு என்னும் இராஜ்யத்தின் பிரபுவாகிய அவரது குரலினைச் செவிமடுத்திட்ட ஒருவர் மகிழ்வெய்துவார்.

அவரது உண்மையிலிருந்து வழிதவறிய கவனமற்ற ஒருவர் கடுந் துயரத்துக்காளாவார்.

CLXV

ஒவ்வொரு கேட்கும் செவியும், எல்லா வேளைகளிலும், எல்லாத் திசைகளிலிருந்தும், தூய்மையாகவும் கறைபடியாமலும் இருந்து, இப்புனித வாசகங்களை மொழிந்திடும் இக்குரலினைச் செவிமடுக்க வேண்டும்: “மெய்யாகவே யாம் இறைவனுடையவரே, அவரிடமே திரும்பிச் சென்றிடுவோம்.

” மனிதனின் பௌதிக மரணத்தின் மர்மமும் அவனது திரும்பிவருதலும் பகிரங்கப் படுத்தப் படவில்லை; இன்னும் அது படிக்கப்பெறாமலேயே இருந்து வருகின்றது.

இறைவனின் நேர்மைத் தன்மை சாட்சியாக! அவை வெளிப்படுத்தப் படுமாயின், அவை, அந்தளவு அச்சத்தைத் தோற்றுவிக்கும்; அதனால், சிலர் மரணமுறுவர்; மற்றவர்களோ, மரணத்திற்கு ஆசைப்படுமளவு மகிழ்ச்சியினால் நிரப்பப்பட்டு, இடையறா பேராவலுடன், ஒரே மெய்க் கடவுளை - அவரது ஒளி மேன்மைப்படுத்தப்படுமாக - தங்களின் முடிவைத் துரிதப்படுத்துமாறு மன்றாடுவர்.

ஒவ்வொரு நம்பிக்கை மிக்க நம்பிக்கையாளருக்கும் மரணம் உண்மையான வாழ்வு என்னும் கிண்ணத்தை வழங்கிடும்.

அது மகிழ்ச்சி அளிக்கின்றது; இன்பத்தை ஏந்தி வருகின்றது.

அது நித்திய வாழ்வு என்னும் அன்பளிப்பினை வழங்கிடுகின்றது.

மனிதனின் உலக வாழ்க்கை என்னும் கனியைச் சுவைத்திட்டோர், ஒரே மெய்க்கடவுளை - அவரது ஒளி மேன்மைப்படுத்தப்படுமாக - அறிந்திட்டோரைப் பொருத்த வரையில், அவர்களின் மகிமை யாம் விவரிக்கவியலாத ஒன்று.

எல்லா உலகங்களுக்கும் பிரபுவான இறைவனிடம் மட்டுமே அவ்வறிவு உள்ளது.

CLXVI

எவனொருவன் ஆயிரம் ஆண்டுகள் முழுமையாகக் கழிவதற்கு முன் இறைவனிடமிருந்து நேரடியான ஒரு வெளிப்பாட்டிற்கு உரிமை கோருகின்றானோ அத்தகைய மனிதன் நிச்சயமாகப் பொய்யுரைக்கும் போலியாவான்.

அத்தகைய உரிமைக்கோரலிலிருந்து பின்வாங்கி அதனை மறுதலித்திட அவனுக்கு உதவி புரியுமாறு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அவன், தனது செயலுக்கு வருந்துவானாயின் சந்தேகமின்றி இறைவன் அவனை மன்னிப்பார்.

ஆனால் அவன் தனது தவறில் பிடிவாதமாக இருந்திடுவானாயின் இறைவன் அவனை இரக்கமின்றி நடத்தக்கூடிய ஒருவரை நிச்சயமாக அனுப்பி வைப்பார்.

உண்மையாகவே, தண்டிப்பதில் இறைவன் அதி உக்கிரமானவர்! இவ் வாசகத்தினை ஒருவன் அதன் வெளிப்படையான பொருளை விடுத்து வேறு அர்த்தங்கொள்வானாயின், அவன் படைப்புப் பொருள்கள் அனைத்தையும் சூழ்ந்துள்ள இறைவனின் திருஆவியையும், கருணையையும் இழந்தவனாவான்.

இறைவனுக்கு அஞ்சு; உனது வீண் கற்பனைகளைப் பின்பற்றாதே.

மாறாக, சர்வ வல்லவரான, சர்வ விவேகியான உனது பிரபுவின் கட்டளையைப் பின்பற்று.

இன்னும் சிறிது காலத்திற்குள் பெரும்பாலான நாடுகளில் எதிர்ப்புக் கூக்குரல்கள் எழுப்பப்படும்.

எமது மக்களே, அவற்றை வெறுத்து ஒதுக்குங்கள்.

நியாயமற்றோரையும் தீய உள்ளத்தோரையும் பின்பற்றாதீர்.

ஈராக்கிலும் பின்பு மர்மமிக்க நாட்டிலும் யாம் வசித்தபோது, அதற்குப்பின் இப்பொழுது இப்பிரகாசமிகு தலத்திலிருந்தும் இதனைக் குறித்துத்தான் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளோம்.

Bahá'u'lláh

Windows / Mac