Return to BahaiPrayers.net
Facebook
என் இறைவா, உமது நித்தியம் என்னும் இனிய நறுமணமிகு நீரோடையிலிருந்து என்னைப் பருகச் செய்வீராக. என் நம்பிக்கையே, உமது மெய்நிலை என்னும் விருட்சத்தின் கனிகளைச் சுவைத்திட எனக்கு உதவுவீராக; எந்தன் பேரொளியே! உந்தன் அன்பு என்னும் தெளிவான நீரூற்றிலிருந்து என்னை அருந்திடச் செய்வீராக. எந்தன் பிரகாசமே! உமது நித்திய அருள்பாலிப்பு என்னும் நிழலின்கீழ் என்னை வசித்திடச் செய்வீராக. எந்தன் நேசரே! உமது அருகாமை என்னும் பசும்புல்வெளிகளில், உமது முன்னிலையில், என்னை நடமாடச் செய்வீராக. எனதாவலே! உமது கருணை என்னும் அரியாசனத்தின் வலப்பக்கத்தில் என்னை அமரச் செய்வீராக. எந்தன் குறிக்கோளே! உமது மணங்கமழ் மகிழ்ச்சி என்னும் இளங்காற்றுகளில் ஒன்றினை என்மீது வீசிடச் செய்வீராக. எந்தன் வழிப்பாட்டிற்குரியவரே! உமது மெய்ம்மை என்னும் சுவர்க்கத்தின் உச்சங்களினுள் என்னைப் பிரவேசிக்கச் செய்வீராக. பிரகாசமிக்கவரே! என்னை உமது ஒருமைத் தன்மை என்னும் புறாவின் கீதங்களைச் செவிமடுக்கச் செய்வீராக. எந்தன் அருளாளரே! உமது ஆற்றல், வல்லமை என்னும் உயிர்ப்புச் சக்தியின் மூலம் என்னைத் துரிதப்படுத்துவீராக. எந்தன் ஆதரவாளரே! உமது அன்பு என்னும் உயிர்ப்புச் சக்தியினில் என்னை உறுதியுடன் இருக்கச் செய்வீராக. என்னை ஆக்கியோனே! உமது நல்விருப்பம் என்னும் பாதையில் என் காலடிகளை வலுப்படுத்துவீராக. என்பால் கருணையுடையவரே! உந்தன் இறவாமை என்னும் பூங்காவினில், உமது வதனத்தின் முன், என்னை என்றென்றும் உறைந்திடச் செய்வீராக. என்னை உடைமையாகக் கொண்டுள்ளவரே, உமது மகிமை என்னும் இருக்கையின் மீது என்னை நிலைபெறச் செய்வீராக. என்னைத் துரிதப்படுத்துபவரே! உமது அன்புப் பரிவு என்னும் விண்ணுலகின்பால் என்னை உயர்த்துவீராக; என்னை ஈர்ப்பவரே! உமது வழிக்காட்டல் என்னும் பகல் நட்சத்திரத்தின்பால் என்னை வழிநடத்துவீராக! எனது மூலமுதலும் அதிவுயர் விருப்பமும் ஆனவரே! உமது கண்களுக்குப்-புலனாகா ஆவியின் வெளிப்பாடுகளுக்கு முன்னால் என்னைப் பிரசன்னமாகிட அழைப்பாணை விடுப்பீராக. என் இறைவனானவரே, நீர் வெளிப்படுத்தவிருக்கும் உமது அழகு என்னும் நறுமணத்தின் சாரத்தின்பால் என்னைத் திரும்பி வந்திடச் செய்வீராக!
தான் விரும்பியதைச் செய்யும் ஆற்றலுடையவர் நீரே ஆவீர். மெய்யாகவே, நீரே அதி மேன்மைமிக்கவர், ஒளிமயமானவர், அதி உயர்வானவர்.
- Bahá'u'lláh