Return to BahaiPrayers.net
Facebook
கிருபையாளரும், சர்வ வல்லவரும் அவரே! கடவுளே, என் கடவுளே! உமது அழைப்புக்குரல் என்னைக் கவர்ந்துள்ளது; உமது பேரொளி எனும் எழுதுகோலின் குரல் என்னைத் தட்டியெழுப்பியுள்ளது. உமது புனித சொற்கள் எனும் ஓடை என்னை மெய்ம்மறக்கச் செய்துள்ளது; உமது அகத் தூண்டல் எனும் மதுரசம் என்னைப் பரவசப்படுத்தியுள்ளது. பிரபுவே, உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் நான் பற்றறுத்தும், உமது அருட்கொடை எனும் கயிற்றினைப் பற்றிக்கொண்டும், உமது கிருபை எனும் அற்புதங்களுக்காக ஏங்குவதையும் நீர் காண்கின்றீர். உமது அன்புக் கருணை எனும் நித்தியப் பேரலைகளினாலும், உமது கனிவான பாதுகாப்பு, தயை எனும் பிரகாசமான ஒளிகளினாலும், உந்தன்பால் என்னை நெருங்கச் செய்யக்கூடியவற்றையும், உமது செல்வத்தில் என்னைச் செல்வந்தராக ஆக்கக்கூடியவற்றையும் எனக்கு அருளுமாறு நான் உம்மை வேண்டுகிறேன். எனது நா, எனது எழுதுகோல், எனது முழு உயிருரு ஆகிய அனைத்தும், உமது சக்தி, உமது வலிமை, உமது கிருபை, உமது அருட்கொடை ஆகியவற்றுக்கும், நீரே கடவுள் எனவும், சக்தி-மிக்கவரும், வல்லவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர் என்பதற்கும் சாட்சியம் பகர்கின்றன.
என் கடவுளே, இத்தருணம், எனது ஆதரவற்ற நிலைக்கும், உமது அரசாட்சிக்கும், எனது வலுவற்ற நிலைக்கும் உமது சக்திக்கும் நான் சாட்சியம் பகர்கின்றேன். எவை எனக்கு நன்மை தரக்-கூடியவை, அல்லது தீமை தரக்கூடியவை என்பதை என்னால் அறிந்திட இயலவில்லை. மெய்யாகவே, சர்வமும் அறிந்தவரும், சர்வ விவேகியும் நீரே ஆவீர். பிரபுவே, எனதாண்டவரே, உமது நித்திய ஆணையைக் கொண்டு, என்னை மனநிறைவு அடையச் செய்யக் கூடியவற்றையும், உமது எல்லா உலகங்களிலும் என்னைச் செழிப்படையச் செய்யக்கூடியவற்றையும் எனக்காக ஆணையிடுவீராக. உண்மையாகவே, கருணை-மிக்கவரும், வள்ளன்மைமிக்கவரும் நீரே ஆவீர்.
பிரபுவே, உமது செல்வம் எனும் சமுத்திரத்திலிருந்தும், உமது கருணை எனும் சொர்க்கத்திலிருந்தும் என்னைத் துரத்திவிடாதீர்; இம்மையிலும் மறுமையிலும் உள்ள நன்மைகளை எனக்கு விதித்திடுவீராக; மெய்யாகவே அதி உயர்வில் அமைக்கப்பட்டுள்ள, கருணை எனும் இருக்கைக்குப் பிரபு நீரே ஆவீர்; ஏகமானவரும், சர்வமும் அறிந்தவரும், சர்வ விவேகியுமான உம்மைத் தவிர, வேறு கடவுள் இலர்.
- Bahá'u'lláh