Return to BahaiPrayers.net
Facebook
பிரார்த்தனைகளைச் செவிமடுத்திடும், பிரார்த்தனைகளுக்குப் பதிலளித்திடும் கடவுள் அவரே!
இறையன்பரே, உலகுக்கு ஒளி வழங்குபவரே, உமது மேன்மையினால்! பிரிவெனும் தீப்பிழம்புகள் என்னை இரையாக்கிக் கொண்டன; எனது வழிதவறல், என்னுள்ளே எனது இதயத்தை உருகச் செய்துள்ளது. உலகின் ஆவலும், மனுக்குலத்தின் நல்லன்பருமானவரே, உமது அகத்தூண்டல் எனும் இளந்தென்றல் எனது ஆன்மாவை ஊக்குவித்தும், உமது அற்புத குரலோசை, எனது செவிகளை அடைந்திடவும், உமது நாமங்கள், உம்முடையத் தன்மைகள், ஆகியவற்றின் அவதரிப்புகளில் வெளிப்படுத்தப்பட்ட உமது அடையாளங்களையும் உமது ஒளியையும் எனது கண்கள் கண்ணுற்றிடவும் அருளுமாறு, உமது அதிவுயரிய நாமத்தினால், அனைத்துப் பொருள்களையும் உமது பிடிக்குள் வைத்திருப்பவரான உம்மை நான் வேண்டிக் கேட்கிறேன்.
பிரபுவே, எனதாண்டவரே, உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்ததன் காரணத்தால், உந்தன் ஆதரவைப் பெற்றவர்களால் சிந்தப்படும் கண்ணீரையும், உந்தன் புனித அரசவையிலிருந்து வெகுதூரத்தில் இருப்பதனால் ஏற்படுகின்ற, உமது பக்திக்கொண்டோரின் அச்சங்களையும் நீர் காண்கின்றீர். புலனாகும், புலனாகா அனைத்துப் பொருள்களையும் அசையச் செய்திடும் உமது சக்தியினால்! உலகிலுள்ள துஷ்டர்கள், கொடுமையாளர்கள் ஆகியோரின் கரங்களால் விசுவாசிகளுக்கு நேர்ந்துள்ளவற்றுக்காக, உமது அன்புக்குரியவர்கள் இரத்தக் கண்ணீர் சிந்துவது அவர்களின் கடமையாகும். என் கடவுளே, இறை பக்தியற்றோர் உமது நகரங்களையும், உமது சாம்ராஜ்யங்களையும் எவ்வாறு சூழ்ந்துள்ளனர் என்பதை நீர் காண்கின்றீர்! உமது தூதர்கள், உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோர், மற்றும் உமது ஊழியர்களின் மத்தியில், உந்தன் தெய்வீக ஒற்றுமை எனும் விருதுக்கொடியை ஊன்றியவர் ஆகியோரை, உமது அருட்கொடையைக் கொண்டு அவர்களைப் பாதுகாக்குமாறு, நான் உம்மை வேண்டிக் கேட்கிறேன். மெய்யாகவே, கருணை மிக்கவரும், அதிதாராளமானவரும் நீரே ஆவீர்.
மேலும், உமது கிருபை எனும் இனிய பொழிவுகள், உமது தயை எனும் சமுத்திரத்தின் பெரும் அலைகள் ஆகியவற்றின் பெயராலும், அவர்களின் கண்களுக்கு ஆறுதல் தரக்கூடியவற்றையும், அவர்களின் இதயங்களுக்கு அமைதியைத் தரக்கூடியவற்றையும் விதித்- தருளுமாறு நான் மீண்டும் உம்மை வேண்டிக் கேட்கிறேன். பிரபுவே! மண்டியிட்டு வணங்குபவன் எழுந்து, உமக்குச் சேவையாற்றிட ஏங்குவதையும்; மாண்டோர், உமது தயை எனும் சமுத்திரத்திலிருந்து நித்திய வாழ்வுக்காகவும், உமது செல்வம் எனும் வானங்களில் உயரப் பறப்பதற்காகவும் குரல் எழுப்புவதையும்; அயலான், உமது கிருபை எனும் விதானத்தின் கீழ் அவனது புகழொளி எனும் புகலிடத்திற்காக ஏங்குவதையும்; தேடுபவன், உமது கருணையினால், உந்தன் அருட்கொடை எனும் வாசலை நோக்கி விரைவதையும்; பாவிகள், மன்னிப்பு, பிழைபொறுத்தல் எனும் சமுத்திரத்தை நோக்கித் திரும்புவதையும் நீர் காண்கின்றீர்.
மனிதர்கள் இதயங்களில் போற்றப்படுபவரே, உமது அரசாட்சியினால்! உமது புனித விருப்பம், மகிழ்ச்சி ஆகியவை என்னுள்ளே ஆட்சி செய்து, உமது நித்தியக் கட்டளை எனும் எழுதுகோல் எனக்காக விதித்துள்ளவற்றுக்குப் பொருந்திய-வாறு என்னை இயக்கிடக் கூடும் என்பதற்காக, எனது சொந்த விருப்பம், ஆசை ஆகியவற்றைக் கைவிட்டு விலகி, உந்தன்பால் நான் திரும்பியுள்ளேன். பிரபுவே, ஆதரவற்றிருந்தாலும், இவ்வூழியன் உமது சக்தி எனும் விண்கோளத்தை நோக்கித் திரும்பியுள்ளான்; தாழ்த்தப்-பட்டிருந்தாலும், புகழொளி எனும் பகலூற்றை நோக்கி விரைந்துள்ளான்; ஏழ்மையில் இருந்தாலும், உந்தன் கிருபை எனும் சமுத்திரத்திற்காக ஏங்கியுள்ளான். உமது தயை, அருட்கொடை ஆகியவற்றினால், அவனைத் துரத்திவிடாதீர் என நான் மன்றாடுகிறேன்.
மெய்யாகவே, சர்வ வல்லவரும், மன்னிப்பவரும், இரக்கமுடையவரும் நீரே ஆவீர்.
- Bahá'u'lláh