Return to BahaiPrayers.net
Facebook
வழங்குபவரே! மேற்கிலுள்ள அன்பர்களின் மீதான பரிசுத்த ஆவியின் இனிய நறுமணங்களை நீர் சுவாசித்துள்ளீர்; தெய்வீக வழிகாட்டல் எனும் ஒளியைக் கொண்டு, மேற்கின் வானத்தை நீர் ஒளிரச் செய்துள்ளீர். முன்பு தொலைவில் இருந்தவர்களை, நீர் உம்மை நெருங்கி அணுகிட செய்துள்ளீர்; அந்நியர்களை அன்பான நண்பர்களாக நீர் ஆக்கியுள்ளீர்; உறங்கியோரை நீர் விழிப்புறச் செய்துள்ளீர்; அலட்சியமானோரை நீர் அக்கறைகொள்ளச் செய்துள்ளீர்.
வழங்குபவரே! இந்த உன்னதமான அன்பர்களை உமது நல்விருப்பத்தை வென்றிட நீர் உதவிடுவீராக; அந்நியர், நண்பர் ஆகியவரின் நலனைச் சமமாகவே விரும்புவோராக அவர்களை ஆக்கிடுவீராக. என்றென்றும் நிலைத்திருக்கவல்ல உலகுக்குள் அவர்களைக் கொண்டுவருவீராக; விண்ணுலகக் கிருபையிலிருந்து ஒரு பகுதியை அவர்களுக்கு வழங்கிடுவீராக; இறைவன்பால் நேர்மை மிகுந்த உண்மையான பஹாய்களாக அவர்களை ஆக்கிடுவீராக; வெளித்தோற்ற சாயல்களிலிருந்து அவர்களைக் காப்பற்றி, உண்மையின் மீது அவர்களை உறுதியாக நிலைக்கச் செய்வீராக. இறை இராஜ்யத்தின் அடையாளங்களும், சின்னங்களுமாக அவர்களை ஆக்கிடுவீராக; இந்த நரக வாழ்வின் தொடுவானங்களின் மேலிருந்து அவர்களை ஒளிரும் விண்மீன்களாக ஆக்கிடுவீராக. அவர்களை மனுக்குலத்தின் சுகமாகவும், ஆறுதலாகவும் ஆக்கிடுவீராக; உலக அமைதிக்கான ஊழியர்களாகவும் ஆக்கிடுவீராக. உமது ஆலோசனை எனும் மதுரசத்தைக் கொண்டு அவர்களை மதிமயங்கச் செய்வீராக; மேலும், உமது கட்டளைகள் எனும் பாதையில் அவர்கள் அனைவரும் அடியெடுத்து வைப்பதற்கு அருள்வீராக.
வழங்கிடுபவரே! கிழக்கிலும் மேற்கிலுமுள்ள அன்பர்கள் நெருக்கமாகத் தழுவியிருப்பதைக் காண்பதும்; மனித சமுதாயத்தின் அங்கத்தினர்கள் அனைவரும், தனித்தனியான துளிகள் ஒரு பெருங்கடலில் ஒன்று சேர்வது போன்று, ஒரே மாபெரும் கூட்டத்தில் அன்பாகக் கூடியிருப்பதைக் கண்ணுறுவதும், ஒரே ரோஜா தோட்டத்திலுள்ள பறவைகளாக அவர்கள் அனைவரையும் கண்ணுறுவதும், ஒரே சமுத்திரத்தின் முத்துக்களாகவும், ஒரே மரத்தின் இலைகளாகவும், ஒரே கதிரவனின் ஒளிக்கதிர்களாகவும் கண்ணுறு-வதுமே, உமது தலைவாசலில் பணிபுரியும் இவ்வூழியனின் ஆழ்ந்த விருப்பமாகும்.
வல்லவரும், சக்திமிக்கவரும் நீரே ஆவீர்; வலிமைமிகு கடவுளும், சர்வ சக்திமிக்கவரும், சகலத்தையும் கண்ணுறுபவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá