Return to BahaiPrayers.net
Facebook
கருணைமிக்கப் பிரபுவே! பற்றின்மை எனும் தொடுவானத்திலிருந்து, ஒளிவீசும் நிலவைப்போன்று, இதயம், ஆன்மா ஆகிய இராஜ்யங்களில் கதிரொளியை வீசி, படைப்புலகின் பண்புகளிலிருந்து தங்களையே அகற்றிக்-கொண்டு, இறவாமை எனும் இராஜ்யத்திற்குள் விரைந்து சென்றிடும் ஆன்மாக்களை நீர் அவதரிக்கச் செய்துள்ளீர். அவர்கள் ஒப்புவமை இல்லாத மலர்ச்சியையும் அழகையும் பெறக்கூடிய அளவிற்கு, உமது அன்புக் கருணை எனும் சமுத்திரத்திலிருந்து ஒரு துளியைக் கொண்டு, அவர்களின் இதயங்கள் எனும் பூங்காவைப் பலமுறை ஈரமாக்கியுள்ளீர். உமது தெய்வீக ஒற்றுமையின் புனித நறுமணம் திசையெங்கும் பரவி, அதன் இனிய மணங்களை உலகமுழுவதன் மீதும் சிந்தச்செய்து, உலகின் பிரதேசங்களை வாசனையால் நிரப்பியுள்ளது.
ஆதலால், புனிதமெனும் உயிருருவே, சுதந்திரமாகவும் தூய்மையாகவும் ஆனபின்பு, ஜீவ உலகினை ஒரு புதிய ஆடையைக் கொண்டும், ஓர் அற்புத மேலங்கியைக் கொண்டும் அலங்கரித்து, உம்மைத் தவிர வேறெவரையும் நாடாதிருக்கும், உமது நல்விருப்பம் எனும் பாதையைத் தவிர வேறெந்தப் பாதையிலும் நடந்திடாதிருக்கும், உமது சமயத்தின் மர்மங்களையல்லாது வேறெதனையும் பேசிடாதிருக்கும், பரிசுத்தமான ஜீவியர்களைப் போன்ற ஆன்மாக்களைத் தோன்றிடச் செய்திடுவீராக.
கருணைமிக்கப் பிரபுவே! புனிதமானோரின் அதிவுயரிய ஆவலாக இருப்பதை இந்த இளைஞன் அடையக்கூடுமாறு விதித்தருள்வீராக. உமது பலம்பொருந்திய கிருபையின் சிறகுகளை—பற்றின்மை மற்றும் தெய்வீக உதவி எனும் சிறகுகளை — அவனுக்குத் தந்தருள்வீராக. அதனால் அவன் உமது மென்கருணை எனும் காற்று மண்டலத்தில் உயரப் பறக்கக்கூடும்; உமது விண்ணுலக அருட்கொடைகளையும் பருகிடக்-கூடும்; தெய்வீக வழிகாட்டல் எனும் ஓர் அடையாளமாகவும், விண்ணுலகப் படையின் ஒரு விருதுக்கொடியாகவும் ஆகிடக்கூடும். ஆற்றல்-மிக்கவரும், சக்திமிக்கவரும், காண்பவரும், செவிமடுப்பவரும் நீரேயாவீர்.
- `Abdu'l-Bahá