Return to BahaiPrayers.net
Facebook
அன்புமிக்கப் பிரபுவே! நெஞ்சார நேசிக்கப்பட்ட இப்பணிப்பெண்ணானவள் உந்தன்பால் ஈர்க்கப்பட்டு, ஆழ்ந்த சிந்தனை, அறிவுக்கூர்மை ஆகியவற்றின் மூலமாக உமது முன்னிலையை அடைந்து உமது இராஜ்யத்தில் பிரவேசிக்க பேராவல் கொண்டுள்ளாள். கலங்கிய கண்களுடன் அவள் உமது மர்மங்கள் என்னும் இராஜ்யத்தின்மீது தனது பார்வையைப் பதித்திட்டாள். அவள் உம்முடன் ஆழ்ந்து உறவாடுவதில் பல இரவுகளைக் கழித்தாள், பல நாள்கள் அவள் உமது உள்ளர்ந்த நினைவிலே வாழ்ந்தாள். ஒவ்வொரு காலையும் உம்மிடமே கவனம் செலுத்தினாள், ஒவ்வொரு மாலையும் உந்தன் மீதே தனது சிந்தனையை மையப்படுத்தினாள். பாடிடும் ஓர் இராப்பாடியைப் போல் அவள் உமது புனித வாசகங்களை ஓதினாள், ஒரு கண்ணாடியைப் போன்று உமது ஒளியைப் பிரதிபலித்தாள்.
பாவங்களை மன்னிப்பவரே! விழிப்படைந்திட்ட இவ்வான்மா உமது இராஜ்யத்தில் நுழைவதற்கு வழி திறந்து, உமது கரத்தினால் பயிற்சியளிக்கப்பட்ட இப்பறவைதனை உமது நித்திய ரோஜாத் தோட்டத்தினில் உயரப் பறக்க உதவிடுவீராக. உமது அண்மையை அடையவேண்டும் என்ற ஆவலினால் ஆர்வக்கனல் கொண்டுள்ளாள்; உமது முன்னிலையை அடைவதற்கு அவளுக்கு உதவுவீராக. உம்மிடமிருந்து பிரிந்ததால் அவள் குழப்பமும் துயரமும் உற்றிருக்கின்றாள்; உமது தெய்வீக மாளிகையினுள் அவளை நுழைய அனுமதிப்பீராக.
பிரபுவே! நாங்கள் பாவிகள்; ஆனால், நீரோ மன்னிப்பவர். நாங்கள் குறைபாடுகள் என்னும் சமுத்திரத்தில் அமிழ்ந்துள்ளோம், ஆனால், நீரே மன்னிப்பவர், அன்புள்ளவர். எங்களின் பாவங்களை மன்னித்து உமது அபரிமிதமான அருளினைக் கொண்டு எங்களை ஆசீர்வதிப்பீராக. உமது வதனத்தைக் கண்ணுறும் சலுகையை வழங்கி, மகிழ்ச்சி, பேரானந்தம் என்னும் கிண்ணத்தினை எங்களுக்கு அருள்வீராக. நாங்களே எங்களின் சொந்த பழிச்செயலின் கைதிகள், நீரோ வள்ளன்மைமிகு சலுகைகளுக்கு அரசனானவர். நாங்கள் அநீதி என்னும் கடலினுள் அமிழ்ந்து கிடப்பவர்கள், நீரோ, எல்லையிலா கருணையின் பிரபு. நீரே வழங்குபவர், ஒளிமயமானவர், நித்தியமானவர், வள்ளன்மை மிக்கவர்; அருளாளரும், கருணைமயமானவரும், எல்லாம் வல்லவரும், வெகுமதிகள் வழங்குபவரும், பாவங்களை மன்னிப்பவரும் நீரே. மெய்யாகவே, எங்களின் குறைகளை மன்னிப்பவரும், பிரபுகளுக்கெல்லாம் பிரபுவானவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá