Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே! எனதான்மாவின் வேதனையைத் தணியச் செய்திடுவதற்கு உம்மைத் தவிர வேறெவருமிலர்; என் கடவுளே, நீரே எனது அதியுயரிய ஆவலாவீர். உம்மோடும், உம்மை நேசிப்போரோடும் அல்லாது வேறெவருடனும் என் இதயம் பிணைக்கப் பட்டிருக்கவில்லை. எனது வாழ்வு, மரணம், ஆகிய இரண்டும் உமக்காகவே என நான் உண்மையாகச் சத்தியம் செய்கிறேன். மெய்யாகவே ஒப்பற்றவரும், பங்காளியாய் இல்லாதவரும் நீரே ஆவீர்.
என் பிரபுவே, உம்மிடமிருந்து என்னை நானே ஒதுக்கிக் கொண்டமைக்காக என்னை மன்னித்திடுமாறு நான் உம்மிடம் இறைஞ்சுகிறேன். உமது பேரொளி, மாட்சிமை ஆகியவற்றின் பேரில், நான் உம்மைப் பொருத்தமுற அறிந்திடவும், வழிபடவும் தவறியுள்ளேன்; ஆனால், நீரோ என்னை உம்மைப் பற்றி அறிந்திடச் செய்தும், உமது ஸ்தானத்திற்குத் தகுந்தவாறு என்னை நினைவு கூர்ந்துமுள்ளீர்.
என் பிரபுவே, எனது தவறுகள், தப்பிதங்கள் ஆகியவற்றுக்காக என்னை உமது கட்டுக்குள் வைப்பீரானால், கடுந்துயரம் என்னைச் சூழ்ந்து கொள்ளும். உம்மைத் தவிர உதவிபுரிபவர் வேறெவரையும் நான் அறிந்திலேன். நான் விரைந்தொடிட உம்மைத் தவிர வேறு புகலிடம் இல்லை. உமது அனுமதியின்றி, உமது உயிரினங்கள் எவற்றுக்கும் உம்மிடம் பரிந்துரை செய்வதற்குத் துணிவில்லை. உமது அரசவையின் முன், உமது அன்பினை நான் இறுகப் பற்றிக்கொண்டுள்ளேன்; மேலும், உமது கட்டளைப் படி, உமது மகிமைக்குப் பொருந்தியவாறு நான் உம்மிடம் மிகுந்த முனைப்போடு பிராத்திக்கின்றேன். நீர் எனக்கு வாக்களித்துள்ளது போல, என் அழைப்புக்குச் செவிசாய்த்திடுமாறு நான் உம்மிடம் மன்றாடுகிறேன். மெய்யாகவே நீரே கடவுள்; உம்மைத் தவிர வேறு கடவுள் இலர்.
நீர் அனைத்துப் படைப்புப் பொருள்களிடமிருந்து தன்னந்தனியாகவும், எவ்வித உதவியின்றியும் இருக்கின்றீர். உமது அன்புக்குரியவர்களின் பக்தி உமக்குப் பலன் தரப்போவதில்லை; அன்றியும், நம்பிக்கையற்றோரின் தீயச் செயல்களும் உமக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. மெய்யாகவே உமது வாக்குறுதியிலிருந்து என்றுமே தவறிடாதவரான நீரே என் கடவுள் ஆவீர்.
என் கடவுளே! உமது தயையின் அடையாளங்கள் பேரில், உமது புனித முன்னிலை எனும் விழுமிய சிகரங்களை நெருங்கிட என்னை இயலச் செய்வீராக; உம்மைத் தவிர எளிதில் கண்டுணர முடியாத மற்றெல்லா மறைமுகமான குறிப்புகளை நோக்கி நான் சாயாதிருக்குமாறு என்னைப் பாதுகாத்திடுவீராக. என் கடவுளே, உமக்கு ஏற்புடையதும், உமக்கு மகிழ்வைத் தரக்கூடியது-மானதை நோக்கிச் செல்ல என் கால்களுக்கு வழிகாட்டிடுவீராக. உமது வலிமையைக் கொண்டு, உமது சினம், தண்டித்தல் ஆகியவற்றின் ஆவேசத்திலிருந்து என்னைப் பாதுகாத்து, நீர் விரும்பாத உறைவிடங்களுக்குள் நுழைவதிலிருந்து என்னைத் தடுத்திடுவீராக.
- The Báb