Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே! என் கடவுளே! உமது கருணைகள் அனைத்தும் இந்த ஆன்மாக்களின் மீது இறங்கட்டும் என நான் உம்மை வேண்டி உமது வாசலின் முன் மன்றாடுகிறேன். உமது தயையையும் உமது உண்மையையும் அவர்களுக்கெனச் சிறப்பாக வழங்கிடுவீராக.
பிரபுவே! இதயங்களை ஒன்றுபடுத்தி, இணைத்திடுவீராக; எல்லா ஆன்மாக்களையும் இசைவாக இணைத்திடுவீராக; மேலும் உமது புனிதம், ஒருமை ஆகிய அடையாளங்களைக் கொண்டு, ஆன்மாக்களை மகிழ்ச்சி பெறச் செய்திடுவீராக. பிரபுவே! உமது ஒருமைத்தன்மை எனும் ஒளியைக் கொண்டு அவர்களின் வதனங்களைப் பிரகாசிக்கச் செய்திடுவீராக. உமது இராஜ்யத்தின் சேவையில் உமது ஊழியர்களை முன்னேற்பாடுடன் இருக்கச் செய்திடுவீராக.
பிரபுவே, முடிவில்லாதா இரக்கத்திற்குரியவரே! மன்னிப்புக்கும் பிழை பொறுத்தலுக்குமான பிரபுவே! எங்களின் பாவங்களை மன்னித்து, எங்களின் குறைகளைப் பொறுத்தருள்வீராக; உமது கருணை எனும் இராஜ்யத்தை நோக்கி எங்களைத் திரும்பிடச் செய்திடுவீராக; உமது வலிமை, சக்தி எனும் இராஜ்யத்தை மன்றாடி, உமது நினைவாலயத்தின் முன் பணிவாகவும், உமது அடையாளங்கள் எனும் மகிமையின் முன் கீழ்ப்படிபவர்களாகவும் இருந்திடச் செய்திடுவீராக.
இறைவனான பிரபுவே! எங்களைக் கடலின் அலைகளைப் போலவும், தோட்டத்தின் மலர்களைப் போலவும், உமது அன்பெனும் அருட்கொடைகளின் வாயிலாக ஒன்றாகவும், இணக்கமாகவும் இருந்திடச் செய்திடுவீராக. பிரபுவே, உமது ஒருமை எனும் அடையாளங்களின் வாயிலாக நெஞ்சங்களைப் விரிவானதாக ஆக்கிடுவீராக; ஒரே உயரிய மகிமையிலிருந்து பிரகாசித்திடும் விண்மீன்கள் போன்றும், உமது வாழ்வெனும் விருட்சத்தின் மீது வளர்ந்திடும் பூரண கனிகள் போன்றும் மனுக்குலம் முழுவதையும் ஆக்கிடுவீராக.
மெய்யாகவே, வல்லவரும், சுய ஜீவியரும், வழங்குபவரும், மன்னிப்பவரும், பிழை- பொறுப்பவரும், எங்கும் வியாபித்துள்ளவரும், ஒரே படைப்பாளரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá