Return to BahaiPrayers.net
Facebook
எனதாண்டவரே, என் பிரபுவே! நான் உமது ஊழியனும், உமது ஊழியனின் மைந்தனுமாவேன். உமது விருப்பம் என்னும் பகலூற்றிலிருந்து உமது ஒருமைத் தன்மையெனும் பகல் நட்சத்திரம் தோன்றி, உமது கட்டளை என்னும் திருநூலில் விதிக்கப்பட்டுள்ளவற்றிற்கு இணங்க சர்வலோகத்தின் மீதும் தனது பிரகாசத்தினைப் பாய்ச்சிடும் இவ்வதிகாலையில் நான் என் துயிலிடம் விட்டு எழுந்துள்ளேன்.
என் இறைவா, நாங்கள் உமது அறிவொளியின் பிரகாசங்களைக் கண்ணுற விழிப்புற்றமைக்காக நீர் போற்றப்படுவீராக. ஆகவே, என் பிரபுவே, உம் ஒருவரைத் தவிர மற்றெல்லாவற்றையும் தவிர்க்கவும், உம் ஒருவரைத் தவிர மற்றெல்லாப் பற்றுகளையும் துறப்பதற்கும் உதவுபவை எவையோ அவற்றை எங்கள்பால் அனுப்பி அருள்வீராக.
மேலும் எனக்கும் எனதன்புக்குப் பாத்திரமான-வர்களுக்கும், ஆண் பெண் அனைவரும் அடங்கிய எனது சுற்றத்தார்களுக்கும், இம்மையிலும் மறுமையிலும் நன்மை தரக்கூடியவற்றை எழுதி அருள்வீராக. படைப்பு முழுமையின் அன்புக்குப் பாத்திரமான இறைவா, பிரபஞ்சம் அனைத்தின் ஆவலே, உமது தவறாத பாதுகாப்பின் மூலமாக மனிதர்களின் மனதில் ஓசை எழுப்பும் தீய ஓசையாளனின் வெளிப்படுத்துதல்களாக நீர் ஆக்கியுள்-ளோரிடமிருந்து எங்களைப் பாதுகாப்பீராக. உமது விருப்பத்தினைச் சாதிக்க வல்லவர் நீரே. மெய்யாகவே, நீரே எல்லாம் வல்லவர், ஆபத்தில் உதவுபவர், சுயஜீவியானவர்.
பிரபுவே, எனது ஆண்டவரே, எவரை உமது அதி உயரிய பட்டங்களுக்கெல்லாம் மேலாக வைத்து, எவர் மூலமாகத் தெய்வீகத் தன்மையுடை-யோரையும் தீயோரையும் பிரித்து, நீர் அன்பு கொண்டு விரும்பியதனைச் செய்திடக் கருணை கூர்ந்து உதவியுள்ளீரோ அவரை ஆசீர்வதிப்பீராக. இறைவா, மேலும் உமது சொற்கள், உமது எழுத்துகள் ஆகியோரையும், உந்தன்பால் பார்வையைச் செலுத்தி, உமது வதனத்தின் பால் முகத்தைத் திருப்பி, உமது அறைகூவலைச் செவிமடுத்-தோரையும் ஆசீர்வதிப்பீராக.
உண்மையாகவே, நீரே எல்லா மனிதர்களுக்கும் பிரபுவும் அரசனும் ஆகி, அனைத்துப் பொருள்களின் மீது சக்தியும் கொண்டுள்ளவர்.
- Bahá'u'lláh