Return to BahaiPrayers.net
Facebook
“பஹாய் திருமணம் என்பது இரு தரப்பினரிடையே உள்ள இணக்கமும் மனப்பூர்வமான பாசமும் ஆகும். இருப்பினும், அவர்கள் மிகுந்த கவனத்தை கையாண்டு ஒருவர் மற்றவரின் குணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நித்திய பந்தமானது ஓர் உறுதியான ஒப்பந்தத்தினால் பாதுகாக்கப்பட வேண்டும்; இதன் நோக்கமானது, நல்லிணக்கம், தோழமை, ஒற்றுமை, மற்றும் நித்திய வாழ்வை அடைவதுமே ஆகும்.”
— அப்துல்-பஹா
கித்தாப்-இ-அக்டாஸில் குறிப்பிடப்பட்டுள்ள திருமண பிரமாணம் இதுவே:
“மெய்யாகவே, நாமெல்லாரும் ஆண்டவனின் விருப்பத்திற்கு அடிபணிந்திடுவோம்.”
இவ் வசனத்தை மணமகனும் மணமகளும் உள்ளூர் ஆன்மீகச்சபையின் ஏற்புடைய குறைந்தபட்சம் இரு சாட்சிகள் முன்னிலையில் தனித்தனியாகக் கூற வேண்டும்.
வழங்குபவரும் வள்ளன்மை மிக்கவரும் அவரே!
தொன்மையான, என்றும் நிலையான, மாறாத, நித்தியமான இறைவன் போற்றப்படுவாராக! ஏகனானவரும், தனியரானவரும், கட்டுப்படுத்தப்-படாதவரும், மேன்மையானவரும் தாமே என்பதற்கு அவரே தமது மெய்ம்மையில் சாட்சியம் கூறுகின்றார். அவரின் ஒருமைத் தன்மையை ஏற்று, அவரின் ஏகத்துவத்தை ஒப்புக்கொண்டு, அவரையன்றிக் கடவுள் வேறிலர் என்பதற்கு மெய்யாகவே நாங்கள் சாட்சியம் கூறுகின்றோம். தம்மைத் தவிர மற்றவரின் குறிப்பிடுதல்- களிலிருந்தும் தம்மைத் தவிர வேறு வருணனைகளிலிருந்தும் புனிதமாக்கப்பட்டு, அணுகவியலா உச்சங்களில், தமது உயர்வின் சிகரங்களில், என்றுமே அவர் வாழ்ந்து வந்துள்ளார்.
மனிதர்களுக்கு அருளையும் அன்புதவியையும் வழங்கிடவும் உலகினை ஒழுங்குபடுத்திடவும் அவர் ஆவலுற்றபோது அனுஷ்டானங்களை வெளிப்படுத்தி, சட்டங்களையும் உருவாக்கினார்; அவற்றுள் திருமணத்திற்கான சட்டத்தினையும் நிறுவினார், அதனை நல் வாழ்விற்கும் விமோசனத்திற்கும் ஓர் அரணாக்கி, அதனைப் புனிதம் என்னும் வானிலிருந்து நமக்காக அனுப்பப்பட்ட அவரது அதி புனித நூலில் விதித்துள்ளார். அவர் மொழிகின்றார்; அவரது புகழ் உயர்வானதாகும்: “மனிதர்களே, திருமணம் செய்து கொள்வீராக, அதனால் எமது ஊழியர்கள் மத்தியில் எந்தன் நாமத்தை நினைவு கூர்ந்திடும் ஒருவர் உங்களிடமிருந்து தோன்றிடக் கூடும்; இது உங்களுக்கான எமது கட்டளைகளில் ஒன்றாகும்; உங்களுக்கு உதவியாக அதற்குக் கீழ்ப்படியுங்கள்.”
- Bahá'u'lláh