Return to BahaiPrayers.net
Facebook
குறிப்பு: இறைவனின் அன்பர்கள் யாவரும்... அவர்களது அன்பளிப்பு எத்துணை எளிமையானதாய் இருப்பினும், (அவர்கள்) முடிந்தளவு நிதி அளிக்க வேண்டும். கடவுள், எந்த ஓர் ஆன்மாவின் மீதும் அதன் தாங்கிடும் சக்திக்கு மேலாக பளுவைச் சுமத்தமாட்டார். இந் நன்கொடைகள் எல்லா நிலையங்- களிலிருந்தும், எல்லா நம்பிக்கையாளர்களிடம் இருந்தும் வர வேண்டும்.. .. .. இறைவனின் நேசர்களே! இந் நன்கொடைகளுக்கு ஈடாக உங்களின் விவசாயம், உங்களின் தொழில், உங்கள் வியாபாரம் ஆகிய யாவும் பன்மடங்கு நன் பரிசுகளாலும் அருள்பாலிப்புகளாலும் அதிகரிப்புகளினாலும் ஆசீர்வதிக்கப்-படும் என்பதை நீங்கள் உறுதியாக நம்புவீராக; எவரொருவர், ஒரு நற்செயல் புரிய முன்வருகின்றாரோ அவர் பத்து மடங்காகச் சன்மானம் பெறுவார். அவரது பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவழிப்பவர்களை ஜீவனுள்ள பிரபுவானவர் மிகுதியாக உறுதிப்படுத்துவார் என்பதில் ஐயமில்லை.
கடவுளே, என் கடவுளே! உமது உண்மை அன்பர்களின் நெற்றிகளை ஒளிரச் செய்வீராக; நிச்சயமான வெற்றி என்னும் வான்படைகளைக் கொண்டு அவர்களுக்கு ஆதரவளிப்பீராக. உமது நேர்வழியில் அவர்களின் கால்களை உறுதிப்படுத்துவீராக. உமது ஆதி அருட் கொடையிலிருந்து அவர்கள் முன் உமது ஆசி என்னும் வாயிலைத் திறப்பீராக; ஏனெனில் நீர் அவர்களுக்கு வழங்கியவற்றை அவர்கள் உமது பாதையிலேயே, உமது சமயத்தைப் பாதுகாப்பதிலும், உமது நினைவில் தங்களின் நம்பிக்கையை வைப்பதிலும், உம் மீதான அன்புக்காக அவர்களின் இதயங்களை அர்ப்பணிப்பதிலும், உமது அழகின்பாலுள்ள பக்திப் பரவசத்தால் அவர்களுக்கென்று எதையுமே வைத்துக் கொள்ளாமல் உம்மை மகிழ்விக்கும் வழி வகைகளைத் தேடுவதிலுமே செலவழிக்கின்றனர்.
என் பிரபுவே! ஒரு தாராளமான பங்கினையும், விதிக்கப்பட்ட பிரதிபலன்களையும், நிச்சயமான சன்மானங்களையும் அவர்களுக்கென நியமிப்பீராக.
மெய்யாகவே, பராமரிப்பவரும், உதவுபவரும், தாராளமானவரும், வள்ளன்மை மிக்கவரும், என்றென்றும் வழங்குபவரும் நீரே.
- `Abdu'l-Bahá