Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, நீர் போற்றப்படுவீராக! உந்தன் அரியாசனத்தின் பகலூற்றானவரையும், உமது கிருபையின் உதயபீடமானவரையும், உந்தன் சமயத்தின் களஞ்சியமானவரையும் அடியேன் அறிந்திடும்படி செய்தமைக்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமது அருகில் உள்ளோரின் வதனங்களை வெண்ணிறமாக மாற்றியும், உம் மீது பக்திகொண்டோரின் இதயங்கள் உம்மை நோக்கிச் சிறகடித்துச் சென்றிடவும் செய்திட்ட, உமது திருநாமத்தின் வாயிலாக நான் உம்மிடம் மன்றாடுகிறேன்; அதனால் நான், எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும், உந்தன் கயிற்றை இறுகப் பற்றிக்கொண்டு, உம்மைத் தவிர, எவரொருவரிடமும் உள்ள பற்றுகள் எல்லா-வற்றையும் துறந்து, உந்தன் திருவெளிப்பாட்டின் தொடுவானத்தை நோக்கி, எனது கண்களைச் செலுத்தி, உமது நிருபங்களில் நீர் எனக்கு ஆணையிட்டுள்ளவற்றை நிறைவேற்றிடக் கூடும்.
என் பிரபுவே, எனது அக, புற உயிருரு இரண்டையும் உந்தன் தயை மற்றும் உந்தன் அன்புக் கருணை எனும் வஸ்திரத்தைக் கொண்டு அணிவிப்பீராக. பின்னர், உமக்கு அருவருக்கத்தக்க எதனிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாக வைப்பீராக; மேலும், என்னையும் எனது உடன்பிறப்புக்களையும் உமக்குக் கீழ்ப்படியவும், என்னுள் தீய அல்லது இழிவான ஆசைகளைத் தூண்டிடும் எதனையும், வெறுத்தொதுக்கக் கருணைகூர்ந்து உதவிடுவீராக.
மெய்யாகவே, மனுக்குலம் அனைத்திற்கும் பிரபுவானவரும், இம்மை, மறுமை ஆகியவற்றின் உடைமையாளரும் நீரே ஆவீர். எல்லாம் அறிந்தவரும், சர்வ விவேகியுமான உம்மைத் தவிர இறைவன் வேறிலர்.
- Bahá'u'lláh