Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, உந்தன் நாட்டில் நீர் மூட்டியுள்ள தீ யாதென்று நான் அறியேன். அதன் பேரொளியை என்றுமே பூமியால் மறைத்திடவே இயலாது; அதன் தீச்சுடரை நீரினாலும் அணைத்திட இயலாது. உலக மக்கள் அனைவரும் அதன் ஆற்றலை எதிர்த்திட சக்தியற்று உள்ளனர். அதன் அருகில் நெருங்கி, அதன் கர்ஜனையைச் செவிமடுத்தோனின் புனிதத்தன்மை மகத்தானதாகும்.
என் கடவுளே, உந்தன் பலப்படுத்தும் கிருபையின் வாயிலாகச், சிலரை, அதனை நெருங்கிச் செல்ல நீர் இயலச் செய்துள்ளீர்; அதே வேளையில், உமது நாள்களில் அவர்களது கரங்கள் ஆற்றிய காரியங்களின் காரணமாக மற்றவர்களை அதனை நெருங்குவதிலிருந்து நீர் தடுத்து வைத்துள்ளீர். எவரொருவர் அதனை நோக்கி விரைந்து சென்று, அதனை அடைந்துள்ளாரோ, அவர் உமது அழகினைக் கண்ணுற வேண்டும் எனும் ஆவலின் காரணமாக, உந்தன் பாதையில் தன் உயிரை அர்ப்பணித்தும், உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்து, உம்மிடமே விண்ணுயர்ந்துள்ளார்.
என் பிரபுவே, படைப்புலகில் சுடர்வீசி சீறிடும் இந்தத் தீயின் பெயரால், உந்தன் மாட்சிமை எனும் அரியாசனத்தின் முன் தோன்றுவதிலிருந்து என்னைத் தடுத்தும், உமது வாசலின் கதவருகில் நிற்பதிலிருந்து என்னைத் தடுத்திடும் திரைகளைக் கிழித்தெறிந்திடும்படி நான் உம்மை மன்றாடுகின்றேன்.
என் பிரபுவே, உமது திருநூலில் நீர் கீழே அனுப்பியுள்ள ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் எனக்காக விதித்தருள்வீராக; மேலும் உமது கருணை எனும் பாதுகாப்பிலிருந்து, என்னை வெகுதூரம் விலகி நிற்காதிருக்கச் செய்வீராக.
நீர் விரும்பியவாறு செய்வதற்குச் சக்திமிக்கவர் நீரே ஆவீர். மெய்யாகவே, நீரே சர்வ சக்திமிக்கவர், அதி தாராளமானவர்.
- Bahá'u'lláh