Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே, என் இறைவா! நீர் போற்றப்படுவீராக. உமது அருள்பாலிப்புகளின் திசையிலல்லாது வேறெங்கும் திரும்பாதிருக்குமாறும் உமது தீர்க்கமான கட்டளைக்கும் மாற்றவியலா நோக்கத்திற்கும் ஏற்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ள உமது தெளிவான நூலில் நீர் கட்டளையிட்டுள்ளதையன்றி வேறெதனையும் கடைப் பிடிக்காதிருக்குமாறே நான் உமது ஊழியர்களை அழைத்தேன் என்பதனை நீர் பார்க்கின்றீர்; அறிகின்றீர்.
என் இறைவா, உம்மால் அனுமதிக்கப்பட்டாலன்றி நான் எதனையும் கூறவியலாது; உமது ஒப்புதலைப் பெறும்வரை நான் எத் திசையிலும் நகரவியலாது. என்னை உருவாக்கி, உமது வலிமையின் சக்தியினால் உமது சமயத்தை வெளிப்படுத்திட எனக்கு அருளினைப் பொழிந்த எந்தன் இறைவன் நீரே ஆவீர். நான் ஆளாக்கப்பட்ட இன்னல்கள் அத்தகையதானதன் காரணத்தினால் உம்மைப் புகழ்வதிலிருந்தும் உமது ஒளியின் மகிமையை மிகைப்படுத்துவதிலிருந்தும் எனது நா தடுக்கப்பட்டுள்ளது.
என் இறைவா, உமது கட்டளையின் வழியாகவும் உமது இறைமையின் ஆற்றல் வழியாகவும் நீர் எனக்கு நியமித்தவைக்காகப் புகழெல்லாம் உமக்கே உரியதாகட்டும். என்னையும் என்னை நேசிப்போரையும் உந்தன்பால் எங்களது அன்பில் வலுவுடையோராக்கி, உமது சமயத்தில் எங்களைத் திடப்பற்று உடையவர்களாக இருக்கச் செய்வீராக. என் இறைவா! உமது வலிமையின் மீது ஆணை! உமது ஊழியனின் அவமானம் அவனை உம்மிடமிருந்து திரையிட்டு மறைத்ததுபோல் ஆகிவிடும்; உம்மை அறிந்து கொள்வதே அவனுக்குப் புகழாகும். உந்தன் திருநாமத்தின் சக்தி என் கவசமாகும் போது யாதொரு தீங்கும் என்னைத் தாகவியலாது. உமதன்பு என்னுள்ளத்தில் குடி கொள்ளும்போது, இவ்வுலகின் அணைத்து இன்னல்களும் என்னை ஒரு போதும் கலக்கமடியச் செய்யாது.
ஆகவே, என் பிரபுவே, எது என்னையும் எனது அன்புக்குரியவர்களையும் உமது உண்மையினை மறுத்துள்ளோர், உமது அடையாளங்களை நம்பிட மறுத்தோர் ஆகியோரின் விஷமத்திலிருந்து காத்தருளுமோ அதனை அனுப்பிடுவீராக.
மெய்யாகவே, நீரே ஒளிமயமானவர், அதி வள்ளன்மை மிகுந்தவர்!
- Bahá'u'lláh