Return to BahaiPrayers.net
Facebook
விஞ்சிடும் மாட்சிமைக்கான பிரபுவும், சகல கவர்ச்சிமிக்கவருமான கடவுளின் பெயரால். ஆட்சியதிகாரத்தின் மூலத்தைத் தனது கைக்குள் வைத்திருக்கும் பிரபு, புனிதப்படுத்தப்படுவாராக. “ஆகு” என்றதும் யாவும் உருவாகிடுகின்ற, தமது கட்டளையிடும் வார்த்தையைக் கொண்டு தாம் விரும்பிய அனைத்தையும் அவர் படைக்கின்றார். இதுவரை அதிகாரத்தின் சக்தி அவருடையதாகவே இருந்துவந்துள்ளது, இதற்குப் பிறகும் அது அவருடையதாகவே இருந்துவரும். தமது கட்டளையின் சக்தி வாயிலாக, தாம் விரும்பிய எவரையும் அவர் வெற்றிப்பெறச் செய்வார், உண்மையாகவே, அவரே சக்திமிக்கவரும், சர்வ வல்லவரும் ஆவார்.
திருவெளிப்பாடு, படைப்பு மற்றும் அவற்றுக்கு இடையேயுள்ள இராஜ்யங்களின் எல்லா மேன்மையும் மாட்சிமையும் அவருக்கே உரியதாகும். மெய்யாகவே, அவரே ஆற்றல்மிக்கவர், சர்வ ஒளிமயமானவர். நித்திய காலம் முதல் வெல்லமுடியாத பலத்திற்கு அவரே தோற்றுவாயாக இருந்துள்ளார், என்றென்றும் இருந்தும் வருவார். உண்மையில், அவரே வலிமைக்கும் சக்திக்குமான பிரபு. விண்ணும், மண்ணும், அவற்றுக்கு இடையேயுள்ள அனைத்து இராஜ்யங்களும் கடவுளுக்கே உரியவையாகும்; அவரது சக்தி, அனைத்திலும் உயர்வானதாகும். பூமி, சொர்க்கம், மற்றும் அவற்றுக்கு இடையேயுள்ள அனைத்துச் செல்வங்களும் அவருடையவையே; அவரது பாதுகாப்பு அனைத்துப் பொருள்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணுலகங்களும் மண்ணுலகும், அவற்றுக்கு இடையேயுமுள்ள அனைத்திற்கும் படைப்பாளர் அவரே; உண்மையாகவே, அவரே அனைத்துப் பொருள்களுக்கும் ஒரு சாட்சியாவார். விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும், அவற்றுக்கு இடையேயுமுள்ள அனைத்திலும் வசிக்கும் யாவற்றுக்கும் தீர்ப்பளிக்கும் பிரபு அவரே ஆவார்; உண்மையாகவே, தீர்ப்பளிப்பதில் இறைவன் துரிதமானவர். விண்ணுலகங்களிலும் மண்ணுலகிலும், அவற்றுக்கு இடையேயுமுள்ள அனைத்திற்கும் பங்கிடும் அளவினை அவர் அமைத்திடுவார். மெய்யாகவே, அவரே அதிவுயரிய பாதுகாபாளர். விண்ணுக்கும் மண்ணுக்கும், அவற்றுக்கு இடையேயுமுள்ள அனைத்திற்குமான திறவுகோல்களை அவர் தமது பிடிக்குள் வைத்துள்ளார். தமது கட்டளை எனும் சக்தியின் வாயிலாகத், தாம் விரும்பியதற்கு ஏற்றவாறு அவர் பரிசுகளை வழங்கிடுவார். உண்மையில், அவரது கிருபை அனைத்தையும் சூழ்ந்துள்ளது; அவரே சகலமும் அறிந்தவர்.
கூறுவீராக: எனக்கு நிறைவளிப்பவர் கடவுளே ஆவார்; பொருள்கள் அனைத்தின் இராஜ்யங்களையும் தமது பிடிக்குள் வைத்திருப்பவர் அவரேயாவார். விண்ணிலும் மண்ணிலும், அவற்றுக்கு இடையேயுமுள்ள அவரது சேனைகளின் சக்தி வாயிலாக, தமது ஊழியர்களுள் தாம் விரும்பிய எவரையும் அவர் உண்மையாகவே பாதுகாத்திடுவார். உண்மை-யாகவே, பொருள்கள் அனைத்தையும் கண்காணிப்பவர் கடவுளேயாவார்.
பிரபுவே, அளவிடற்கரிய உயர்நிலையில் நீர் இருக்கின்றீர்! எங்களுக்கு முன்னேயும், பின்னேயும், எங்கள் தலைகளுக்கு மேலேயும், எங்கள் வலப்புறத்திலும், இடப்புறத்திலும், எங்கள் பாதங்களுக்குக் கீழேயும், மற்றும் நாங்கள் எதிர்கொள்ளும் எல்லாப்பக்கங்களிலும் இருப்பவற்றிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பீராக. மெய்யாகவே, எல்லாப் பொருள்களின் மீதும் நீர் வழங்கிடும் பாதுகாப்பு தவறாததாகும்.
பாதுகாப்புக்கான இந்தப் பிரார்த்தனையின் அசல், பாப் பெருமானாரின் சொந்த கையெழுத்தில், ஐந்து முனைக் கொண்ட நட்சத்திர வடிவில் எழுதப்பட்டுள்ளது.
- The Báb