Return to BahaiPrayers.net
Facebook
என் கடவுளே, நான் பணிவாகச் சிரந்தாழ்த்தியும், உமது கட்டளைகள் முன் என்னைத் தாழ்த்திக்கொண்டும், உமது மாட்சிமைக்கு அடிபணிந்தும், உமது அரசாட்சி வலிமையின்பால் நடுக்கமுற்றும், உமது கடுங்கோபத்திலிருந்து விரைந்தோடியும், உமது கிருபைக்காக மன்றாடியும், உமது மன்னிப்பைச் சார்ந்தும், உமது சீற்றத்தின் முன் பயபக்தியால் நடுங்கியும் இருக்கின்ற என்னை நீர் காண்கின்றீர்.
உந்தன் அன்பர்களை உமது இராஜ்யங்கள் தோறும் ஒளிக்கதிர்களாக ஆக்கியும்; உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள், உமது திருவார்த்தையை மேன்மையுறச் செய்திட உதவிட வேண்டும் என, துடித்திடும் இதயத்தோடும், வழிந்திடும் கண்ணீரோடும், ஏங்கும் ஓர் ஆன்மாவோடும், மற்றும் எல்லாப் பொருள்களிலிருந்தும் முற்றிலும் பற்றறுத்தும், உம்மை நான் இறைஞ்சுகிறேன். அதனால், அவர்களின் முகங்கள் அழகாகவும், பேரொளியால் பிரகாசம் அடைவதோடு, அவர்களின் இதயங்கள் மர்மங்களால் நிரப்பப்பட்டு, ஒவ்வோர் ஆன்மாவும் அதன் பாவச் சுமையை இறக்கிவிடவும் கூடுமாக. ஆதலால், வெட்கக்கேடான, இழிவான தீயச் செயல்களைப் புரிபவனுமாகிய, ஆக்கிரமிப்-பாளனிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பீராக.
என் பிரபுவே, மெய்யாகவே உமது நேசர்கள் தாகமுற்றிருக்கின்றனர்; அவர்களை அருட்கொடை, கிருபை எனும் நல்லூற்றுக்கு வழிநடத்திச் செல்வீராக. மெய்யாகவே, அவர்கள் பசித்துள்ளனர்; உமது விண்ணுலக விருந்தை அவர்களுக்காக கீழே அனுப்பிடுவீராக. மெய்யாகவே அவர்கள் நிர்வாணமாக இருக்கின்றனர்; அவர்களைக் கற்றல், அறிவு எனும் ஆடைகளைக் கொண்டு அணிவிப்பீராக.
என் பிரபுவே, அவர்கள் வீரர்கள் ஆவர்; அவர்களைப் போர்க்களத்திற்கு வழிநடத்திச் செல்வீராக. அவர்கள் வழிகாட்டுபவர்கள் ஆவர்; அவர்களை வாதங்களோடும் ஆதாரங்களோடும் பேசிடச் செய்வீராக. அவர்கள் பணிபுரியும் ஊழியர்கள் ஆவர்; மெய்யுறுதி எனும் மதுரசத்தால் நிரம்பி வழிந்திடும் கோப்பையைப் பகிர்ந்து கொள்ள அவர்களை இயலச் செய்வீராக. என் கடவுளே, வளமான பூங்காக்களில் உல்லாசமாகப் பாடித்திரியும் பறவைகளாக அவர்களை ஆக்கிடுவீராக; காடுகளுள் பதுங்கியிருக்கும் சிங்கங்களாகவும், பரந்த ஆழ்கடலினுள் மூழ்கிடும் திமிங்கிலங்களாகவும் அவர்களை ஆக்கிடுவீராக.
மெய்யாகவே பொங்கிவழியும் கிருபையுடையவர் நீரே ஆவீர். வல்லவரும், சக்திமிக்கவரும், என்றும் வாரி வழங்குபவருமான இறைவன், உம்மைத் தவிர வேறெவருமிலர்.
- `Abdu'l-Bahá