Return to BahaiPrayers.net
Facebook
ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது
கடவுளே! என் கடவுளே! எல்லாப் பிரதேசங்களையும் காரிருள் சூழ்ந்திருப்பதை நீர் காண்கின்றீர், எல்லா நாடுகளும் உடன்பாடின்மை என்னும் தீப்பிழம்பினால் பற்றி எரிகின்றன; பூமியின் கிழக்கிலும் அதன் மேற்கிலும் போர், படுகொலை என்னும் தீ கொழுந்து விட்டு எரிகின்றது. இரத்தம் சிந்தப்படுகின்றது, பிணங்கள் எங்கும் பரவிக் கிடக்கின்றன, தலைகள் துண்டிக்கப்பட்டுப் போர்க்கள மண்ணில் வீழ்கின்றன.
பிரபுவே! அறியாமையில் இருக்கும் இவர்கள்மீது இரக்கங் காட்டுவீராக, மன்னிப்பு, பிழை பொறுத்தல் என்னும் கண்ணால் அவர்களை நோக்குவீராக. இத்தீயினை அணைத்திடுவீராக; அதனால் தொடுவானத்தை மூடி மறைத்துள்ள இருண்ட மேகங்கள் கலைக்கப்படக்கூடும், மெய்ம்மைக் கதிரவன் இணக்கம் எனும் ஒளிக் கதிர்களைக் கொண்டு பிரகாசித்திடக் கூடும், இக்கடும் இருள் அகற்றப்பட்டு தேசங்கள் எல்லாம் சமாதான ஒளிகளால் பிரகாசிக்கக் கூடும்.
பிரபுவே! கடும் வெறுப்பு, பகைமை என்னும் கடலின் ஆழத்திலிருந்து அவர்களை மீட்டு, இவ்வூடுருவ இயலா இருளிலிருந்து அவர்களை விடுவிப்பீராக; அவர்களது இதயங்களை ஒன்றுபடுத்தி, அவர்களின் கண்களைச் சமாதானம், இணக்கம் என்னும் ஒளியினைக் கொண்டு பிரகாசிக்கச் செய்வீராக. போர், இரத்தம் சிந்தல் எனும் ஆழத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றி, பிழையெனும் இருளிலிருந்து அவர்களை விழித்தெழச் செய்வீராக. அவர்களது கண்களிலிருக்கும் திரையை அகற்றி, வழிகாட்டுதல் என்னும் ஒளியினால் அவர்களின் இதயங்களைத் தெளிவுப்படுத்துவீராக. உமது மென்கருணை, இரக்கம் ஆகியவற்றின் மூலம் அவர்களை நடத்தி, வலியவர்களின் அவயவங்களை நடுக்கமுறச் செய்திடும் உமது நீதி, உக்கிரம் ஆகியவற்றின்வழி அவர்களை நடத்தாதிருப்பீராக.
பிரபுவே! மெய்யாகவே போர்கள் நீடித்துள்ளன, மனவேதனைகளும் கவலைகளும் பெரிதும் அதிகரித்துள்ளன, ஒவ்வொரு வளமான பிரதேசமும் பாழ்படுத்தப்பட்டுக் கிடக்கின்றது.
பிரபுவே! நெஞ்சங்கள் துயருற்றிருக்கின்றன; ஆன்மாக்கள் கடும் மனவேதனையில் இருக்கின்றன. இப்பரிதாபத்திற்குரிய ஆன்மாக்களின் மீது கருணை காட்டுவீராக; அவர்களை உமது ஆசைகளின் தகாத செயல்களுக்கு விட்டு விடாதீர்!
பிரபுவே! அவர்களின் முகங்கள் வழிகாட்டுதல் எனும் ஒளிக் கதிர்களினால் பிரகாசமடைந்து, உலகப் பற்றினைத் துறந்து, உமது நினைவையும், புகழையும் எடுத்தியம்பி, இப்புனித நறுமணத்தினை உமது தேசங்கள் முழுவதிலும் பரவச் செய்திடும் பணிவான, கீழ்ப்படியுந் தன்மையுடைய ஆன்மாக்களை மனித இனத்தின் மத்தியில் அனுப்பியருள்வீராக.
பிரபுவே! உமது அன்பின் அதிவலிமைமிகு அடையாளத்தின் மூலமாக அவர்களின் முதுகினை வலுப்பெறச் செய்வீராக; அவர்களது இடைகளை உறுதியடையச் செய்து அவர்களின் நெஞ்சங்களைப் பரவசம் அடையச் செய்வீராக.
பிரபுவே! மெய்யாகவே, அவர்கள் பலவீனர்கள், நீரே சக்திமிக்கவர், வல்லவர்; அவர்கள் ஆற்றலற்றவர்கள், உதவுபவரும், கருணை-மிக்கவரும் நீரே.
பிரபுவே! கிளர்ச்சி என்னும் சமுத்திரம் பொங்கி யெழுகின்றது, எல்லாப் பிரதேசங்களையும் தழுவியுள்ள உமது எல்லையற்ற அருளின்றி இச்சூறாவளிகள் தணிக்கப்பட மாட்டா!
பிரபுவே! மெய்யாகவே இம்மனிதர்கள் வெறியுணர்ச்சி என்னும் பாதாளத்தில் கிடக்கின்றனர், உமது எல்லையற்ற வள்ளன்-மையைத் தவிர வேறெதுவுமே அவர்களைக் காப்பாற்ற இயலாது.
பிரபுவே! துர் ஆசைகள் என்னும் இருளை அகற்றி, நாடுகள் அனைத்தையும் விரைவிலேயே ஒளி பெறச் செய்திடக் கூடிய உமது அன்பெனும் தீபத்தினால், இதயங்களைப் பிரகாசிக்கச் செய்வீராக. மேலும், உமது அழகின் மீதான அன்பின் பொருட்டும், உமது நறுமணங்களைப் பரப்புவதற்காகவும் உமது போதனைகளைப் பிரகடனம் செய்வதற்காகவும், தங்கள் தாய் நாடுகளையும், குடும்பங்களையும், குழந்தை- களையும் விட்டு, அயல்நாடுகளுக்குப் பயணம் செய்திடும் அந்நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துவீராக.
தனிமையில் நீர் அவர்களுக்குத் தோழனாகவும், முன்பின் அறியா நிலங்களில் அவர்களின் உதவியாளராகவும், அவர்களின் துக்கத்தைப் போக்குபவராகவும், அவர்களின் பேரிடரில் ஆறுதல் அளிப்பவராகவும் ஆவீராக. அவர்களின் தாகத்திற்குப் புத்துயிரளிக்கும் ஒரு மிடறு நீராகவும், அவர்களின் பிணிகளைக் குணப்படுத்துபவராகவும், அவர்களின் இதயங்களின் பேரார்வ வெந்தனலுக்கு நோயகற்றும் களிம்பாகவும் ஆவீராக.
மெய்யாகவே, நீரே அதி தாராள குணமுடையவர், மிகுதியான அருளுக்குப் பிரபுவானவர், மேலும், நீரே இரக்கமிக்கவர், கருணையாளர்.
- `Abdu'l-Bahá