Return to BahaiPrayers.net
Facebook
வடகிழக்கு மாநிலங்களிலுள்ள பஹாய்களுக்காக வெளிப்படுத்தப்பட்டது
கீழ்க் காணப்படும் பணிவான வேண்டுதல் போதகர்களாலும் நண்பர்களாலும் தினசரி வாசிக்கப்பட வேண்டும்.
கருணைமிக்கப் பிரபுவே! வழிகாட்டுதலெனும் நெடுஞ்சாலையை எங்களுக்குக் காட்டியமைக்கும், இராஜ்யத்தின் கதவுகளைத் திறந்தமைக்கும், மெய்ம்மைச் சூரியனின் வாயிலாக உம்மை அவதரித்துக் கொண்டதற்கும் நீர் போற்றப்படுவீராக. பார்வையற்றோருக்கு நீர் கண்கள் தந்துள்ளீர்; செவியற்றோருக்கு நீர் செவிப்புலனை வளங்கியுள்ளீர்; இறந்தோரைத் நீர் உயிர்பித்துள்ளீர்; ஏழையை நீர் செல்வந்தனாக்கியுள்ளீர்; வழி தவறியோருக்கு நீர் வழிகாட்டியுள்ளீர்; தாகம் கொண்டவர்களை வழிகாட்டுதல் எனும் ஊற்றுக்கு நீர் வழிகாட்டியுள்ளீர்; தாகம் கொண்ட மீனை மெய்மை என்னும் சமுத்திரத்தை அடைந்திடச் செய்துள்ளீர்; உலாவும் பறவைகளைத் உமது தயை எனும் ரோஜா வனத்திற்கு வரவேற்றுள்ளீர்.
சக்திவாய்ந்தவரே! நாங்கள் உமது சேவகர்களும் எளியோர்களும் ஆவோம்; நாங்கள் தூர விலகி இருந்து உமது அண்மையை நாடுகிறோம், உமது ஊற்றின் நீருக்காகத் தாகம் கொண்டுள்ளோம், நோயுற்று உமது குணப்படுத்துதலுக்காக ஆவல்கொண்டுமுள்ளோம். உமது பாதையில் நாங்கள் நடந்து செல்கின்றோம், உமது நறுமணத்தைப் பரப்பி, அதனால் எல்லா ஆன்மாக்களும்: “இறைவா, நேர்வழியை நோக்கி எங்களுக்கு வழிகாட்டுவீராக” எனும் கூக்குரலை எழுப்பிடக் கூடும் என்பதைவிட எங்களுக்கு வேறெந்த ஆவலும் இல்லை. ஒளியைக் காண்பதற்காக அவர்களின் கண்கள் திறக்கப்படுமாக, அறிவின்மை எனும் இருளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்- படுவார்களாக. உமது வழிகாட்டுதலெனும் ஒளியைச் சுற்றி அவர்கள் ஒன்றுகூடுவார்களாக. தனக்கென பங்கு இல்லாத ஒவ்வொருவரும் ஒரு பங்கினைப் பெறுவாராக. இல்லாதார் உமது இரகசியங்களைப் பாதுகாப்போராவார்களாக.
சர்வவல்லமை பொருந்தியவரே! மன்னித்-தருளும் பார்வையைக் கொண்டு எங்களை நோக்கிடுவீராக. தெய்வீக உறுதிப்படுத்தலை எங்களுக்கு அளிப்பீராக. பரிசுத்த ஆவியின் சுவாசங்களை எங்கள் மீது பொழிவீராக. அதனால் உமது சேவையில் நாங்கள் உதவப்பட்டும், உமது வழிகாட்டுதலெனும் ஒளியைக் கொண்டு பிரகாசமான நட்சத்திரங்களைப் போன்று, இந்த நகரங்களில் நாங்கள் பிரகாசிகக்கூடும்.
மெய்யாகவே, சக்திவாய்ந்தவரும், வலிமை-யுள்ளவரும், ஞானியும், கண்ணுறுபவரும் நீரே ஆவீர்.
- `Abdu'l-Bahá