Return to BahaiPrayers.net
Facebook
கடவுளே எங்கள் பிரபுவே! உமக்கு ஒவ்வாததாயிருக்கின்ற எதனிலிருந்தும், உமது கிருபையைக் கொண்டு எங்களைப் பாதுகாப்பீராக; நீர் நன்கு ஏற்கின்றவற்றை எங்களுக்குத் தந்தருள்வீராக. உமது அருட்கொடைகளிலிருந்து எங்களுக்கு அதிகமாக வழங்கி, எங்களை ஆசீர்வதிப்பீராக. நாங்கள் செய்துள்ள காரியங்களுக்காக எங்களை மன்னிப்பீராக, எங்கள் பாவங்களைக் கழுவிடுவீராக, உமது கருணைமிகு மன்னிக்கும் தன்மையைக் கொண்டு எங்களை மன்னிப்பீராக.
உமது அன்புமிகு திருவருளானது, விண்ணிலும் மண்ணிலும் உள்ள படைப்புப் பொருள்கள் அனைத்தையும் சூழ்ந்துள்ளது; மேலும் உமது மன்னிக்கும் தன்மை, படைப்பு முழுவதையும் விஞ்சியுள்ளது. இறையாண்மை உமக்கே உரியது; படைப்பு, திருவெளிப்பாடு ஆகிய இராஜ்யங்கள், உமது அதிகாரத்திற்கு உட்பட்டவை; உம்மால் படைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களையும் நீர் வலக் கரத்தில் பிடித்துக்கொண்டுள்ளீர்; நிர்ணயிக்கப்பட்ட அளவுகளின் படி மன்னிப்பானது உமது பிடிக்குள் அடங்கியுள்ளது. நீர் விரும்பியவாறு உமது ஊழியர்களுள் எவர் ஒருவரையும் நீர் மன்னித்தருள்வீர். மெய்யாகவே, என்றும் மன்னிப்பவரும், சர்வ அன்பானவரும் நீரே ஆவீர். உமது அறிவிலிருந்து எதுவும் தப்பிவிடுவதில்லை; மேலும் உம்மிடமிருந்து மறைந்துள்ளவை எதுவுமே இல்லை.
கடவுளே எங்கள் பிரபுவே! உமது வல்லமையின் சக்தியைக் கொண்டு எங்களைப் பாதுகாப்பீராக; அற்புதமாகப், பொங்கி எழும் உமது சமுத்திரத்திற்குள், எங்களை நுழைந்திடும்படி செய்து, உமக்குப் பொருத்தமானவற்றை எங்களுக்குத் தந்தருள்வீராக.
இறைமைமிக்க ஆட்சியாளரும், வலியதைச் செய்பவரும், மென்மையானவரும், அதி அன்பானவரும் நீரே ஆவீர்.
- The Báb