Return to BahaiPrayers.net
Facebook
பிரபுவே எனதாண்டவரே, புகழொளி உமக்கே உரியதாகுக! மனிதர்கள் அனைவரையும் உண்ணா நோன்பைக் கடைபிடிக்கும்படி நீர் கட்டளையிட்டுள்ள நாள்கள் இவையே; இதன் மூலம், தங்கள் ஆன்மாக்களை அவர்கள் தூய்மைப்படுத்தி, உம்மைத் தவிர மற்றனைத்திலிருந்தும் பற்றறுத்திடக் கூடும்; மேலும், உமது மாட்சிமை எனும் அரசவைக்குத் தகுதியுடையதானதும், உமது ஒருமையெனும் வெளிப்பாட்டின் பீடத்திற்கு ஏற்புடையதானதும் அவர்களின் இதயங்களிலிருந்து மேலுயர்ந்திடக் கூடும். என் பிரபுவே, இவ்வுண்ணா நோன்பு உயிர்தரும் நீரைக் கொண்ட ஆறாகி, அதற்கு நீர் வழங்கியுள்ள நற்பண்பை அது வெளிப்படுத்திட அருள்புரிந்திடுவீராக. சர்வ பேரொளிமிக்க உந்தன் திருநாமத்தின்பால் திரும்புவதிலிருந்து அவர்களை உலகின் தீமைகள் தடுத்திட தவறிட, உமது அரசாட்சி, சக்தி, மாட்சிமை, புகழொளி ஆகியவற்றினை நீர் வழங்கியுள்ள, உமது அவதாரமானவரின் வருகையோடு இணையாக வந்த உமது அதி ஒளிமிக்க அடையாளங்களை மறுத்துள்ளோரின் கூச்சல், அமளி ஆகியவற்றால் சற்றும் அசையாதிருந்திட உமது ஊழியர்களின் உள்ளங்களை அதனைக் கொண்டு தூய்மைப்- படுத்திடுவீராக. உந்தன் அழைப்பைச் செவிமடுத்தவுடன், உந்தன் கருணையின்பால் விரைந்துள்ள அவர்களை, இவ்வுலகின் மாற்றங்களோ, வாய்ப்புகளோ, அல்லது எவ்வித மனித வரம்புகளோ உம்மை அணுகுவதிலிருந்து தடுக்கப்படாதிருக்கின்ற ஊழியர்கள் இவர்களே.
என் கடவுளே, உமது ஒற்றுமைக்குச் சாட்சியமளிப்பவனும், உமது ஒருமையை ஒப்புக்கொள்பவனும், உமது மாட்சிமையின் வெளிப்பாடுகள் முன் பணிவுடன் சிரந்தாழ்த்து- பவனும், உமது மேன்மையான மகிமை ஒளியினுடைய பிரகாசத்தைக் கீழ்நோக்கிய வதனத்துடன் கண்டுணர்ந்தவனும் நானேயாவேன். உமது மாட்சிமை, வலிமை ஆகியவற்றின் சக்தி மூலமாக நீர் மனிதர்களின் கண்களுக்கு வெளிப்படுத்தியுள்ள, உமக்கே உரிய இயல்பை அறிந்திட நீர் என்னை இயலச் செய்தபின், உம்மீது நான் நம்பிக்கை கொண்டவனாவேன். அனைத்திலிருந்தும் முழுமையாகப் பற்றறுத்துக்-கொண்டும், உமது வெகுமதிகள், தயைகள் ஆகியவற்றின் கயிற்றை உறுதியாகப் பற்றிக்-கொண்டும், அவர்பால் நான் திரும்பியுள்ளேன்.
அவரது உண்மையையும், அவருக்கென கீழே அனுப்பப்பட்டுள்ள அனைத்து அற்புத சட்டங்கள், கட்டளைகள் ஆகியவற்றின் உண்மையையும் நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். உமது அன்பிற்-காகவும், உமது ஆணையை நிறைவேற்றிடவும் நான் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்தும், உமது வாழ்த்தை என் நாவினால் உச்சரித்துக்கொண்டும், உமது அகமகிழ்விற்கு ஏற்பவும் என் நோன்பைத் துறந்துள்ளேன். என் பிரபுவே, பகல் வேளையில் உண்ணா நோன்பிருந்தும், இரவு நேரத்தில் உமது வதனத்தின் முன் சிரம்தாழ்பணிந்தும், மேலும், உமது உண்மையை மறுத்தும், உமது அடையாளங்களை நிராகரித்தும், உமது சான்றுகளை நம்ப மறுத்தும், உமது சொற்களின் உண்மையைத் திரித்துக் கூறுவோருள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டுக் கொண்டுவிடாதீர்.
என் பிரபுவே, உமது கண்களைக் கொண்டே உம்மைக் கண்டுகொள்ள, எனது கண்களையும் உம்மை நாடிவந்துள்ள அனைவரின் கண்களையும் திறந்திடுவீராக.
உமது கட்டளைக்கிணங்க நீர் தேர்வுச் செய்துள்ளவரும், உமது உயிரினங்கள் அனைத்திற்கும் மேலாக உமது சலுகைகளுக்காக நீர் தனித்து ஒதுக்கியுள்ளவரும், உமது அரசாட்சியை நீர் வழங்கிட விரும்பியவரும், மற்றும், நீர் விசேஷமாக ஆதரித்தும், உமது மக்களுக்கான செய்தியை ஒப்படைத்துமுள்ளவருமான அவரிடம், நீர் கீழே அனுப்பியுள்ள திருநூலில் நீர் எங்களுக்கு வழங்கியுள்ள உமது ஆணை இதுவே ஆகும்.
ஆகவே, என் கடவுளே, அருள்கூர்ந்து நாங்கள் அவரைக் கண்துடுணர்ந்திட எங்களை இயலச் செய்தமைக்காகவும், அவரிடம் கீழே அனுப்பப்பட்டுள்ள எதனையும் ஒப்புக்கொள்ளவும், உமது நூல்களிலும், நிருபங்களிலும் நீர் வாக்களித்துள்ளவரின் முன்னிலையை அடைந்திடுகின்ற பெருமையை எங்களுக்கு வழங்கியுள்ளமைக்காகவும், நீர் போற்றுதலுக்-குரியவரே.
ஆகையால், என் கடவுளே, உம்மை நோக்கித் திரும்பிய முகத்துடன், உமது அருள்மிகு வள்ளன்மை மற்றும் பெருந்தன்மை எனும் கயிற்றினை உறுதியாகப் பற்றிக்கொண்டும், உமது மென்கருணை, தாராளத் தயை ஆகியவற்றின் நுனியை நான் இறுகப் பற்றிக்-கொண்டிருப்பதையும் நீர் காண்கின்றீர்.
உமது அரசவையின் சூழிடங்களை நோக்கியும், உமது முன்னிலை எனும் சரணாலயத்தை நோக்கித் திரும்பியும், உம் மீதுள்ள அன்பினால் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்துமுள்ள உமது ஊழியர்களுக்கு நீர் விதித்துள்ளதை அடைந்திட வேண்டும் எனும் எனது நம்பிக்கையை அழித்திடாதீர் என நான் உம்மிடம் மன்றாடுகிறேன்.
என் கடவுளே, என்னிலிருந்து வெளிப்படுகின்ற எதுவுமே உமது மாட்சிமைக்குச் சற்றும் பொருத்தமில்லாததாகவும், உமது அரசாட்சிக்கு தகுதியற்றதாகவும் உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன்.
இருந்தும், உமது அதிசிறந்த பட்டங்களின் மகிமை வழியாக, இத்திருவெளிப்பாட்டில், உமது பிரகாசமிகு நாமத்தின் வாயிலாக, நீர் உமது அழகைப் படைப்பினங்கள் அனைத்திற்கும் வெளிப்படுத்தியுள்ள, உமது திருநாமத்தின் பேரில், உமது விருப்பம் எனும் வலக் கரத்திலிருந்து வழிந்திடும், உமது கருணை எனும் மதுரசத்தையும், உமது தயை எனும் தூய பானத்தையும் என்னைப் பருகிடச் செய்திடுவீராக; அதனால் எனது பார்வையை நான் உம்மீது நிலைப்படுத்தி, இவ்வுலகமும், அதில் படைக்கப்பட்ட யாவும், நீர் படைக்க விரும்பிடாத விரைந்தோடிடும் ஒரு நாளைப் போன்று என் முன்னே தோன்றிடுமளவுக்கு, உம்மைத் தவிர மற்றனைதிளிருந்தும் பற்றறுத்திருக்கக் கூடும்.
என் கடவுளே, எங்கள் அத்துமீறல்களின் கேடு விளைவிக்கும் விருப்பங்களிலிருந்து எங்களைச் சுத்தப்படுத்தக் கூடியவற்றை உமது விருப்பம் எனும் சுவர்க்கத்திலிருந்தும், உமது கருணை எனும் மேகங்களிலிருந்தும் பொழிந்திடச் செய்திடுமாறு நான் உம்மிடம் மேலும் கெஞ்சிக் கேட்கின்றேன். நீரே உம்மைக் கருணைக் கடவுள் என அழைத்துக் கொண்டவரே! மெய்யாகவே, அதி சக்திமிக்கவரும், சர்வ புகழொளிமிக்கவரும், நலன் பயக்குபவரும் நீரே ஆவீர்.
என் பிரபுவே, உம்மை நோக்கித் திரும்பியுள்ளவனைப் புறக்கணித்திடாதீர், அல்லாமலும் உம்மை அணுகியுள்ளவனை உமது அரசவையிலிருந்து வெகுதூரம் விலக்கிடாதீர். உமது அருளையும் தயைகளையும் நாடி தனது கரங்களை ஏக்கத்தோடு ஏந்திடும் இவ்வேண்டுவோனின் எதிர்ப்பார்ப்புகளைச் சிதைத்துவிடாதீர். உமது நேர்மையான ஊழியர்களை உமது மென்கருணை, அன்புப்பரிவு ஆகிய அற்புதங்களை அடைவதை இழக்கச் செய்திடாதீர்.
என் பிரபுவே, நீரே மன்னிப்பவரும் அதி கொடையாளியும் ஆவீர்! நீர் விரும்பியவாறு செய்திடுவதற்குச் சக்திப்படைத்தவர் நீரே. உமது வல்லமையின் வெளிப்பாடுகள் முன் உம்மைத் தவிர மற்றனைத்தும் வலிமையற்றதாகும்; உமது செல்வத்தின் அடையாளங்களுக்கு எதிரே யாவும் கதியற்றும், யாவற்றுக்கும் மேலான உமது அரசாட்சியின் வெளிப்பாடுகளோடு ஒப்பிடுகையில், யாவும் நிலையற்றவையாகவும், உமது வலிமையின் அடையாளங்கள், சின்னங்கள் ஆகியவற்றோடு நேருக்குநேர் எதிர்படும் போது, யாவும் வலிமை அனைத்தையும் இழந்ததாகவும் இருக்கின்றன.
என் பிரபுவே, நான் விரைந்து ஓடுவதற்கு உம்மையன்றி அடைக்கலம் வேறென்ன இருகின்றது? மேலும் நான் விரைந்து சென்றடைந்திடகூடிய புகலிடம் எங்குகுள்ளது? அல்லாமலும், உமது வலிமையின் சக்தியே எனக்குச் சாட்சியாகின்றது! உம்மையன்றி பாதுகாப்பவர் வேறிலர்; விரைந்தோடுவதற்கு உம்மையன்றி வேறிடம் இல்லை; நாடி வருவதற்கு உம்மையன்றி வேறு தஞ்சமும் கிடையாது.
என் பிரபுவே, உமது நினைவும் போற்றுதலும் எனும் தெய்வீக இனிமையை என்னைச் சுவைத்திடச் செய்திடுவீராக. உமது வலிமையின் மீது ஆணையாக! அதன் இனிமையைச் சுவைத்தவர் எவராயினும், இவ்வுலகமும், அதிலுள்ள அனைத்தின் மீதான பற்றுகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்வார்; உம்மைத் தவிர வேறெவரின் நினைவிலிருந்தும் தூய்மைப்படுத்திக் கொண்டு, உந்தன்பால் தன் முகத்தை திருப்பிடுவார்.
ஆதலால், என் கடவுளே, உமது அற்புத நினைவினால் எனதான்மாவை உற்சாகம் பெறச் செய்திடுவீராக; அதனால் நான் உமது நாமத்தை மகிமைப்படுத்தக் கூடும். உமது வார்த்தைகளை வாசித்து, நீர் விதித்துள்ளபடி, அதனுள் அடங்கியுள்ள உமது மறைவான பரிசுகளையும், உமது உயிரினங்களின் ஆன்மாக்களையும் உமது ஊழியர்களின் உள்ளங்களையும் உயிர்ப்-பித்திடவல்ல அவ்வார்த்தைகளைக் கண்டறிய தவறிய ஒருவனாக என்னைக் கணக்கிட்டுவிடாதீர்.
என் பிரபுவே, உமது நாள்களில் மிதந்து சென்றிடும் இனிய நறுமணங்களினால் கிளர்ச்சியுறச் செய்ததன் விளைவாக, உமது உயிர்களை உமக்காக அர்ப்பணித்தும், உமது அழகினைக் கண்ணுறுவதற்கான அவர்களின் ஆவலினாலும், உமது முன்னிலையை அடைய வேண்டும் எனும் அவர்களின் ஏக்கத்தினாலும், தங்களின் மரணமேடைக்கு விரைந்தும் உள்ளவர்களுள் ஒருவனாக என்னைக் கருதப்படச் செய்திடுவீராக. அவ்வாறு செல்கையில், “எங்கு செல்கிறாய்?” என யாராயினும் அவர்களிடம் வினவினால், “சகலத்தையும் கொண்டுள்ளவரும், ஆபத்தில் உதவுபவரும், சுயஜீவியருமான இறைவனை நோக்கிச் செல்கிறோம்” என அவர்கள் கூறிடுவர்.
உம்மிடமிருந்து அப்பால் திரும்பியோரும், உம்மிடம் இறுமாப்புடன் நடந்துகொண்டோரும் புரிந்திட்ட அத்துமீறல்கள், உம்மீது அன்பு செலுத்துவதிலிருந்தும், உம்மை நோக்கி அவர்களின் முகங்களைத் திருப்புவதிலிருந்தும், உமது கருணையின் திசையை நோக்கித் திரும்புவதிலிருந்தும் அவர்களைத் தடுத்திட இயலவில்லை.
விண்ணுலகத் திருக்கூட்டத்தினரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும், நித்திய நகர-வாசிகளால் மகிமைப்படுத்தப்பட்டவர்களும், அதற்கும் அப்பால், உமது அதிவுயரிய எழுதுகோல் அவர்களின் நெற்றியில், “பஹாவின் மக்கள் இவர்களே! வழிகாட்டல் எனும் ஒளியின் சுடர்கள் இவர்கள் மூலமாகவே பொழியப்பட்டுள்ளன”, என பொறிக்கப்பட்டோரும் இவர்களேயாவர். இவ்வாறாகவே, உமது கட்டளைக்கு இணங்கவும், உமது திருவிருப்பத்திற்கேற்பவும்், உமது மாற்றவியலாத ஆணை எனும் நிருபத்தில் விதிக்கப்பட்டுள்ளது.
ஆதலால், என் கடவுளே, அவர்களின் மேன்மையையும், வாழும்போதோ மறைவுக்குப் பிறகோ, அவர்களை வலம் வந்தோரின் மேன்மையையும் பறைசாற்றுவீராக. உமது உயிரினங்களுள், நேர்மையானோருக்கு நீர் விதித்துள்ளவற்றை அவர்களுக்கும் வழங்கிடு-வீராக. யாவற்றையும் செய்திடவல்லவர் நீரே ஆவீர். சர்வ சக்திமிக்கவரும், ஆபத்தில் உதவுபவரும், சர்வ வல்லவரும், அதி வள்ளன்மை மிக்கவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.
என் பிரபுவே, இந்த உண்ணா நோன்போடு, எங்களின் உண்ணா நோன்புகளை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திடாதீர்; அல்லது, இந்த ஒப்பந்தத்துடன் நீர் செய்துள்ள ஒப்பந்தங்களையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திடாதீர். எங்களின் தீய, இழிவான ஆசைகளுக்கு அடிமைப்பட்டதனால், நாங்கள் செய்திடத் தவறிய அனைத்திற்குமாக, உம்மீதுள்ள அன்பிற்காகவும், உமது மகிழ்ச்சிக்காகவும், நாங்கள் செய்துள்ள அனைத்தையும் ஏற்றுக்கொள்வீராக. எனவே, உமது அன்பையும் உமது நல்விருப்பத்-தையும் உறுதியாகப் பற்றிக்கொண்டிட எங்களை இயலச் செய்வீராக; மற்றும் உம்மையும், உமது பிரகாசமிகு அடையாளங்களையும் மறுத்துள்-ளோரின் விஷமங்களிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பீராக. உண்மையாகவே, இவ்வுலகு, மறுவுலகு ஆகியவற்றுக்கான பிரபு நீரே ஆவீர். மேன்மையானவரும், அதி உயர்வானவருமான கடவுள் உம்மைத் தவிர வேறிலர்.
பிரபுவே எனதாண்டவரே, பிரதான புள்ளியும், தெய்வீக மர்மமும், காணவியலாத சாரமும், தெய்வீகத்தின் பகலூற்றும், உமது இறைமையின் அவதாரமானவரும், எவர் மூலமாகக் கடந்தகால அறிவனைத்தும், எதிர்கால அறிவனைத்தும் தெளிவாக்கப்பட்டதோ, எவர் மூலமாக உமது மறைக்கப்பட்ட விவேகம் எனும் முத்துகள் வெளிப்படுத்தப்பட்டதோடு, அரும்பொருளாக மதிக்கப்பட்ட உமது நாமத்தின் மர்மம் வெளிப்படுத்தப்பட்டனவோ, எவர் மூலமாக ‘ஆ’ எனும் அட்சரமும் ‘கு’ எனும் அட்சரமும் இணைக்கப்பட்டு, ஒன்றுசேர்க்கப்பட்டனவோ, எவர் மூலமாக, உமது மாட்சிமை, உமது அரசாட்சி, மற்றும் உமது வல்லமை ஆகியவை அறிவிக்கப்பட்டனவோ, எவர் மூலமாக உமது வார்த்தைகள் கீழே அனுப்பப்பட்டும், உமது கட்டளைகள் தெளிவாக வெளியிடப்பட்டும், உமது அடையாளங்கள் எங்கும் பரவச்செய்யப்பட்டும், உமது திருவாக்கு ஸ்தாபிக்கப்பட்டனவோ, எவர் மூலமாக உமது தேர்தெடுக்கப்பட்டோரின் இதயங்கள் திறந்து காட்டப்பட்டும், விண்ணிலும் மண்ணிலுமுள்ள யாவும் ஒன்றுசேர்க்கப் பட்டனவோ, நீர் உமது நாமங்கள் எனும் இராஜ்யத்தில் அலி முஹம்மது என்றும், உமது மாற்றவியலா ஆணை எனும் நிருபங்களில் ஆவிகளுக்கெல்லாம் ஆவியானவர் என்றும், நீர் அழைத்துள்ளீரோ, எவருக்கு உமது சொந்த பட்டப் பெயரையே வழங்கியுள்ளீரோ, எவரது நாமத்திடமே, உமது கட்டளைக்கிணங்கவும், உமது வல்லமையின் சக்தி வாயிலாகவும், மற்றெல்லா நாமங்களும் திரும்பிட செய்யப்பட்டனவோ, எவருள் உமது பண்புகள், பட்டப் பெயர்கள் அனைத்தையும் அவற்றின் இறுதி நிறைவைப் பெறச் செய்துள்ளீரோ, அவரை மகிமைப்படுத்துவீராக. உமது புலனாகாத உலகிலும், உமது புனித நகரங்களிலும் உள்ள உமது மாசில்லா கூடாரங்களுக்குள் மறைந்து கிடக்கும் நாமங்களும் அவருக்கே உரியவையாகும்.
மேலும், அவர் மீதும், அவரது அடையாளங்களின் மீதும் நம்பிக்கை வைத்தும், அவர்பால் திரும்பியோரையும், அவரது பின்னாளைய அவதாரமான — அவர் தமது நிருபங்களிலும், தமது நூல்களிலும், தமது திருமறைகளிலும் குறிப்பிட்டுள்ள அவதாரத்தின் மீது நம்பிக்கை வைத்தும், அவர் மீது பொழிந்துள்ள அற்புத வசனங்கள் மீதும், இரத்தினம் போன்ற சொற்களின் மீதும் நம்பிக்கை வைத்தோரை மிகைப்- படுத்துவீராக. அவர் தமது சொந்த திருவொப்பந்தத்தை நிறுவுவதற்கு முன்பாக, நீர் ஒரு திருவொப்பந்தத்தை ஸ்தாபிக்கும்படி கட்டளையிட்ட திரு அவதாரமானவர் இவரேயாவார்.
அவரது புகழையே பாயான் திருநூல் போற்றியுள்ளது. அதில், அவரது சிறப்பு புகழ்ந்துரைக்கப்பட்டும், அவரது உண்மை உறுதிசெய்யப்பட்டும், அவரது இறையாண்மை பிரகடனப்படுத்தப்பட்டும், அவரது சமயம் முழு நிறைவாக்கப்பட்டுள்ளது. உலகங்களின் பிரபுவும், உம்மை அறிந்த அனைவரின் ஆவலாகவும் இருப்பவரே! அவர்பால் திரும்பி, அவர் கட்டளையிட்டுள்ளவற்றை நிறைவேற்றிய மனிதன் ஆசி பெறுவானாக!
என் கடவுளே, அவரைக் கண்டுணர்ந்து, அன்பு செலுத்திட எங்களுக்கு உதவியமைக்காக நீர் போற்றப்படுவீராக. ஆதாலால், அவராலும், உமது தெய்வீகத்தின் பகலூற்றுகளாக இருப்ப-வர்களாலும், உமது இறைமையின் அவதாரங்களாலும், உமது வெளிப்பாட்டின் கருவூலங்களாலும், உமது அகத்தூன்டலின் களஞ்சியங்களாலும், அவருக்குச் சேவையாற்றவும், கீழ்ப்படியவும் எங்களை இயலச் செய்தும், அவரது சமயத்தின் உதவியாளர்களாக ஆகிடவும், அவரது எதிரிகளை சிதறியோடச் செய்திடுபவர்களாக ஆகிடவும் எங்களுக்கு சக்தி அளிக்குமாறு நான் உம்மை மன்றாடுகிறேன். நீர் விரும்பிய அனைத்தையும் செய்திடவல்லவர் நீரே. சர்வ வல்லவரும், சர்வ புகழொளிமிக்கவரும், மனிதர் எல்லாரும் உதவிக்காக நாடுகின்ற கடவுள் உம்மையன்றி வெறிளர்.
- Bahá'u'lláh