Return to BahaiPrayers.net
Facebook
உபரிநாள்கள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இறுதி நாள்களில் தொடங்கி மார்ச் மாதம் ஆரம்ப நாள்கள் வரை நீடிக்கும். உண்ணா நோன்பினை மேற்கொள்வதற்கு ஒருவர் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் நாள்களாகவும் உபசரித்தல், தர்ம காரியங்கள் செய்தல், பரிசுகள் வழங்குதல் போன்றவற்றிற்கு உகந்த நாள்களாகவும் இவை இருக்க வேண்டும்.
என் கடவுளே, எந்தன் தீச் சுடரே, எந்தன் ஒளியே! நாமங்களுக்கெல்லாம் மன்னரே, நீர், அய்யாம்-இ-ஹா என்று உமது திருநூலில் பெயரிட்டுள்ள உபரி நாள்கள் ஆரம்பமாகிவிட்டன, என் பிரபுவே, உமது படைப்பின் இராஜ்யத்திலுள்ள யாவரையும் கடைப்பிடிக்குமாறு, நீர், உமது அதி மேன்மைப்படுத்தப்பட்ட எழுதுகோலைக் கொண்டு கட்டளையிட்டுள்ள உண்ணா நோன்பு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. என் பிரபுவே, இந் நாள்களின் பெயராலும், உமது கட்டளைகள் என்னும் கயிற்றினைப் பற்றி, உமது நீதி என்னும் வாசகங்களை அனுசரித்திடுவோர் அனைவரின் பெயராலும், உமது அரசவை என்னும் வட்டாரத்திற்குள் ஒவ்வோர் ஆன்மாவிற்கும் ஓர் இடத்தை நியமித்து, உமது வதனத்தினின்று வெளிப்பட்டிடும் ஒளியின் பிரகாசங்கள் என்னும் ஆசனத்தின் அருகே, அவர்களுக்கு, ஓர் இருக்கையும் வழங்கி அருளுமாறு, நான் உம்மை மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன்.
என் பிரபுவே, உமது திருநூலில் நீர் வழங்கிய வற்றிலிருந்து, எவ்விதத் தூய்மையற்ற ஆசைகளும், தங்களைத் தடைசெய்ய விட்டிராதவர்கள் இவர்களே. அவர்கள், உமது சயத்தின்முன் தலை வணங்கியுள்ளனர்; உம்மிலிருந்தே உதிக்கவல்ல மனவுறுதியுடன், உமது திருநூலை ஏற்றனர், அதனுள், நீர், அவர்கள்பால் ஆணையிட்டுள்ளவற்றைக் கடைப்பிடித்து உம்மால் விதிக்கப்பட்டுள்ளவற்றையே தேர்ந்தெடுத்துப் பின்பற்ற முடிவுசெய்துள்ளனர்.
என் பிரபுவே, எங்ஙனம் இவர்கள், உமது திருநூலில் நீர் வெளியிட்டுள்ளவற்றினை அங்கீகரித்தும், ஒப்புக்கொண்டும் உள்ளனர் என்பதைப் பார்க்கின்றீர். என் பிரபுவே, உமது அருள்மிகு கரங்களிலிருந்து அவர்களுக்கு, உமது நித்தியம் என்னும் நீரினைப் பருக வழங்குவீராக. ஆகவே, நீர், உமது முன்னிலை என்னும் சமுத்திரத்தில் தன்னை மூழ்க வைத்துக் கொண்டுள்ளவருக்கெனவும், உமது சந்திப்பு என்னும் நனிசிறந்த திராட்சை ரசத்தினை அடைந்துள்ளவருக்கெனவும், விதிக்கப்பட்டுள்ள கைம் மாறினை அவர்களுக்கும் எழுதி வைப்பீராக.
மன்னருக்கெல்லாம் மன்னரே, நசுக்கப்பட்டோருக்கு இரங்குபவரே, இம்மையிலும் மறுமையிலும் உள்ள நன்மைகள் அனைத்தையும் அவர்களுக்கு அளிக்குமாறு உம்மை வேண்டிக்கொள்கிறேன். மேலும், உமது படைப்பினங்கள் எதுவுமே கண்டிராதவற்றினை, அவர்களுக்கென எழுதி வைப்பதோடு, உம்மைச் சுற்றி வலம் வந்துள்ளோரையும், உமது உலகங்களின் ஒவ்வோர் உலகிலும், உமது அரியாசனத்தைச் சுற்றி நடமாடுபவர்களின் எண்ணிக்கையில் இவர்களையும் சேர்த்துக் கொள்வீராக.
உண்மையாகவே, எல்லாம் வல்லவரும், சர்வ ஞானியும், அனைத்தும் அறிவிக்கப்பட்டவரும் நீரே ஆவீர்.
- Bahá'u'lláh