Return to BahaiPrayers.net   Facebook

அதி தொன்மையும், அதி மேன்மையும் வாய்ந்த இறைவனின் பெயரால்.

உண்மையாகவே, நேர்மையாளரின் இதயங்கள், பிரிவெனும் நெருப்பினில் எரிக்கப்படுகின்றன: உலகங்களின் நேசரே! உமது வதனத்தின் பளிச்சிடும் ஒளி எங்கே?

உமதருகில் உள்ளோர் அழிவெனும் இருளில் கைவிடப்பட்டுள்ளனர்: உலகங்களின் ஆவலே! மீண்டும் ஐக்கியமாதல் என்னும் உமது அதிகாலை எங்கே?

உமது தேர்ந்தெடுக்கப்பட்டோரின் உடல்கள் தொலைவிலுள்ள மணல் வெளியில் துடித்துக் கொண்டிருக்கின்றன: உலகங்களை மயக்குபவரே! உமது முன்னிலை என்னும் சமுத்திரம் எங்கே?

உமது அருள், உதாரகுணம், என்னும் விண்ணுலகை நோக்கி ஏங்கும் கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன: உலகங்களுக்குப் பதிலளிப்பவரே! உமது அருட்கொடை என்னும் மழை எங்கே?

சமய நம்பிக்கையற்றோர், எல்லாத் திசைகளிலிருந்தும், கொடுமை புரிய எழுந்துள்ளனர்: உலகங்களை வென்றவரே!

உமது ஆணையிடும் எழுதுகோலின் நிர்ப்பந்திக்கும் சக்தி எங்கே?

ஒவ்வொரு திசையிலும், நாய்களின் குரைப்பு உரக்க ஒலிக்கின்றது: உலகங்களைத் தண்டிப்பவரே! உமது வலிமையெனும் கானகத்தின் சிங்கம் எங்கே?

மனித இனம் முழுமையையும் குளிர் பற்றிக் கொண்டுள்ளது: உலகங்களின் நெருப்பே! உமது அன்பின் வெம்மை எங்கே?

பேரிடர், அதன் உச்சத்தை அடைந்துவிட்டது: உலகங்களின் மீட்பாளரே, உமது பரிபாலிப்பெனும் அடையாளங்கள் எங்கே?

பெரும்பான்மை மனிதர்களை இருள் சூழ்ந்து கொண்டுள்ளது: உலகங்களின் பொலிவே, உமது பிரகாசத்தின் துலக்கம் எங்கே?

வன்மம் புரிவதில் மனிதர்களின் கழுத்துகள் நீட்டப் பட்டுள்ளன: உலகங்களை அழிப்பவரே, உமது பழி வாங்கிடும் வாள்கள் எங்கே?

இழிவு அதி பாதாளத்தை அடைந்து விட்டது: உலகங்களின் ஒளியே! உமது ஒளியின் சின்னங்கள் எங்கே?

கருணை உருவாகிய உமது நாமத்தை வெளிப்படுத்துபவரைக் கவலைகள் துயருறச் செய்துள்ளன; உலகங்களின் பெருமகிழ்ச்சியே! உமது வெளிப்பாடு என்னும் பகலூற்றின் உவகை எங்கே?

உலக மக்கள் அனைவரையும் மனவேதனை பாதித்துள்ளது; உலகங்களின் உவகையே! உமது மகிழ்ச்சியெனும் விருதுக்கொடிகள் எங்கே?

உமது அடையாளங்களின் உதயபீடம் தீய தூண்டுதல்களினால் மறைக்கப்பட்டுள்ளதை நீர் பார்க்கின்றீர்; உலகங்களின் சக்தியே! உமது வலிமையெனும் விரல்கள் எங்கே?

மனிதர் அனைவரையும் கடுந்தாகம் ஆட்கொண்டுள்ளது. உலகங்களின் கருணையே! உமது வள்ளன்மை என்னும் நதி எங்கே?

மனித இனம் முழுவதையும் பேராசை அடிமைப் படுத்தியுள்ளது; உலகங்களின் பிரபுவே! உமது பற்றின்மையின் திருவுருவம் எங்கே?

இத்தவறிழைக்கப்பட்டோன் நாடு கடத்தப்பட்டுத் தனியனாய் இருப்பதை நீர் காண்கின்றீர்; உலகங்களின் அரசரே! உமது ஆணையெனும் சுவர்க்கத்தின் சேனைகள் எங்கே?

நான், அந்நிய நிலந்தனில் ஆதரவற்றவனாய்க் கைவிடப்பட்டுள்ளேன்; உலகங்களின் நம்பிக்கையே! உமது விசுவாசத்தின் சின்னங்கள் எங்கே ?

மனிதர்கள் அனைவரையும் மரணவேதனைகள் பற்றிக்கொண்டுள்ளன; உலகங்களின் உயிரே! உமது நித்திய வாழ்வெனும் சமுத்திரத்தின் அலையெழுச்சி எங்கே?

சாத்தானின் குசுகுசுப்புகள் ஒவ்வொரு சிருஷ்டிக்கும் ஓதப்பட்டுள்ளன; உலகங்களின் ஒளியே! உமது நெருப்பெனும் எரி நட்சத்திரம் எங்கே?

உணர்ச்சிப் போதை மனித இனத்தின் பெரும்பான்மையினரை நெறி தவறச் செய்துள்ளது; உலகங்களின் ஆவலே! தூய்மை என்னும் பகலூற்று எங்கே?

நீர், இத்தீங்கிழைக்கப்பட்டோன், ஸிரியாவின் மக்கள் மத்தியில் கொடுங்கோன்மை என்னும் திரையினில் மறைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கின்றீர்; உலகங்களின் ஒளியே! உமது உதய ஒளியின் பிரகாசம் எங்கே?

நான் பேசுவதிலிருந்து தடைசெய்யப்-பட்டிருப்பதை நீர் காண்கின்றீர்; உலகங்களின் இராப்பாடியே! பின், உமது இன்னிசைகள் உதயமாவது எங்கே?

மக்களில் பெரும்பான்மையினர் கற்பனை-களிலும், வீண் கனவுகளிலும், மூழ்கிக் கிடக்கின்றனர்; உலகங்களின் உறுதிமொழியே! உமது உறுதியினை விளக்குபவர்கள் எங்கே?

துன்பக் கடலினில் பஹா அமிழ்ந்து கிடக்கின்றார்; உலகங்களின் இரட்சகரே! உமது இரட்சிப்பு என்னும் கலம் எங்கே?

நீர், உமது திருவாக்கு எனும் பகலூற்றினைப் படைப்பின் இருளில் காண்கின்றீர். உலகங்களுக்கு ஒளி கொடுப்பவரே! உமது அருள் என்னும் சுவர்க்கத்தின் சூரியன் எங்கே?

உண்மை, தூய்மை, விசுவாசம், கௌரவம் எனும் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன; உலகங்களை இயக்குபவரே! உமது பழி தீர்க்கும் உக்கிரத்தின் அடையாளங்கள் எங்கே?

உம் சார்பாக எவராவது போராடுவதையோ, உமது அன்பின் பாதையில் எவராவது அவருக்கு நேர்ந்தவற்றைச் சிந்திப்பதையோ உம்மால் காண முடிகின்றதா? உலகங்களின் நேசரே, எனது எழுதுகோல் இப்பொழுது அசைவிழந்துள்ளது.

தெய்வீக விருட்சம் எனும் மரத்தின் கிளைகள், வேகமாய்த் தாக்கிடும் விதி என்னும் புயலினால் முறிந்து கிடக்கின்றன: உலகங்களின் வீரரே! உமது பரிபாலிப்பெனும் விருதுக்கொடி எங்கே?

இவ் வதனம், அவதூறு எனும் புழுதியில் மறைக்கப்பட்டிருக்கின்றது: உலகங்களின் கருணையே! உமது இரக்கம் என்னும் தென்றல் எங்கே?

தூய்மை எனும் அங்கி, வஞ்சக மனிதர்களால் கறைப்படுத்தப்பட்டுள்ளது: உலகங்களின் அலங்கரிப்பாளரே! உமது புனிதத்தன்மை எனும் ஆடை எங்கே?

மனிதனின் கரங்கள் ஆற்றியவற்றினால் கருணை என்னும் கடல் அசைவற்றிருக்கின்றது: உலகங்களின் ஆவலே! உமது வள்ளன்மை எனும் அலைகள் எங்கே?

உமது பகைவர்களின் கொடுங்கோன்மையினால் தெய்வீக முன்னிலைக்கு வழிகாட்டிடும் கதவு பூட்டப்பட்டுள்ளது: உலகங்களைத் திறப்பவரே! உமது அருள்பாலிப்பு என்னும் திறவுகோல் எங்கே?

துரோகம் என்னும் நச்சுக் காற்றினால் இலைகள் மஞ்சளாகி விட்டுள்ளன: உலகங்களுக்கு வழங்குபவரே! உமது அருட்கொடை எனும் மேகங்களின் அடை மழை எங்கே?

பாவம் என்னும் தூசியினால் பிரபஞ்சமே இருளடைந்துள்ளது; உலகங்களின் மன்னிப்பாளரே! உமது மன்னிப்பு எனும் தென்றல் எங்கே?

இவ்விளைஞன், தன்னந் தனியனாய் இப்பாழ் நிலத்தில் இருக்கின்றான். உலகங்களின் கொடையாளியே! உமது வானுலகக் கிருபை என்னும் மழை எங்கே?

அதி மேன்மையான எழுதுகோலே, நித்திய இராஜ்யத்தினில், யாம், உமது அதி இனிய அழைப்பினைச் செவிமடுத்தோம்: உலகங்களால் தவறிழைக்கப்பட்டோனே! உன்னதத்தின் நா மொழிவதன்பால் செவி சாய்ப்பீராக.

உலகங்களின் விளக்கவுரையாளரே! குளிர் என்ற ஒன்றில்லை எனில், எங்ஙனம் உமது வார்த்தைகள் எனும் வெப்பம் நிலைபெற்றிட இயலும்?

உலகங்களின் ஒளியே! பேராபத்து என்பது இல்லையெனில், எங்ஙனம் உமது பொறுமை என்னும் சூரியன் பிரகாசிக்க இயலும்?

உலகங்களின் பொறுமையே! கொடியவர்களின் காரணமாகத் துயருற வேண்டாம். சகித்துக் கொள்வதற்கும், பொறுத்துக் கொள்வதற்குமே நீர் படைக்கப்பட்டீர்.

உலகங்களின் அன்பே! ஒப்பந்தம் எனும் அடிவானத்தில் உமது உதயமும், இறைவன்பால் உமது ஏக்கமும், சூழ்ச்சிக்காரர்கள் மத்தியில் எத்துணை இனிமை மிக்கதாய் இருந்தது.

உலகங்களின் பரவசமே! உம் மூலம்தான் சுதந்திரம் எனும் கொடி, அதி உயரமான சிகரங்களின் உச்சியில் ஊன்றப்பட்டது, அருட்கொடை எனும் கடல் பொங்கி எழுந்தது.

உலகங்களால் நாடு கடத்தப்பட்டவரே, பொறுமையாய் இருப்பீராக. உமது தனிமையினால்தான், ஒருமைத் தன்மை என்னும் சூரியன் பிரகாசித்தது. உமது நாடு கடத்தலினால்தான், ஒற்றுமை எனும் பூமி அலங்கரிக்கப்பட்டது.

உலகங்களின் பெருமையே, இழிவை, மகிமையின் ஆடையாகவும், துன்பத்தை, உமது நெற்றியின் ஆபரணமாகவும், ஆக்கியுள்ளோம்.

உலகங்களின் பாபங்களை மறைப்பவரே, இதயங்கள், வெறுப்பினால் நிரப்பப்பட்டுள்ளன, அதனைக் கவனியாதிருப்பதே உமக்குப் பொருத்தமாகும்.

உலகங்களின் பலிப்பொருளானவரே! வாள்கள் பளிச்சிடும்போது முன்னோக்கிச் செல்வீராக! கணைகள் பாய்ந்திடும் போது, முன்னேறிச் செல்வீராக!

உலகங்களின் புலம்பலைத் தூண்டியவரே, நீர் அழுகின்றீரா, அல்லது நானே அழுவதா? மாறாக, உமது ஆதரவாளர்களின் எண்ணிக்கைக் குறைவிற்காக யாம் கண்ணீர் விடுவதா.

கனலொளிமயமான நேசரே; மெய்யாகவே, யாம், உமது அழைப்பினைச் செவிமடுத்தோம்; இப்பொழுது, பஹாவின் வதனம் கடுந் துன்பமெனும் வெப்பத்தினாலும், உமது ஒளிர்ந்திடும் வார்த்தை எனும் நெருப்பினாலும், பிரகாசிக்கின்றது; மேலும், உலகங்களின் ஆணையாளரே! உமது சித்தத்திற்கிணங்க, இவன், விசுவாசத்துடன், உமது பலிபீடத்தை நோக்கி எழுந்துள்ளான்.

அலி அக்பரே, அதிலிருந்து நீ, எமது பணிவென்னும் நறுமணத்தை நுகரவும், எல்லா உலகங்களின் வழிபாட்டுக்குரியவரான இறைவனது பாதையில் எம்மைச் சுற்றி வளைத்துக் கொண்டுள்ளவற்றைத் தெரிந்து கொள்ளவும் இயலும்.

ஊழியர்கள் யாவரும் இதனை வாசிக்கவும், ஆழ்ந்து சிந்திக்கவும் செய்வராயின், அவர்களின் நாளங்களில் தூண்டப்படும் நெருப்பானது உலகங்களையே பற்றி எரியச் செய்திடும்.

 


English  
ភាសាខ្មែរ  
አማርኛ.  
Afrikaans  
Alaska Native  
American Indian  
Azərbaycan  
Bahasa Indonesia  
Bahasa Malaysia  
Bidayuh  
Bosanski  
Canadian Indigenous  
Català  
Cebuano  
Česky  
Chamorro  
Chichewa  
Corsica  
Cymraeg  
Daga  
Dansk  
Deutsch  
Dzongkha  
Eesti  
Español  
Esperanto  
Euskara  
Fiji  
Filipino  
Føroyar  
Français  
Frysk  
Hausa  
Hawaiian  
Hiri Motu  
Hrvatski  
Irish  
Íslenska  
Italiano  
Kabyle  
Kalaallisut  
Kiribati  
Kiswahili  
Kreyol Ayisyen  
Kuanua  
Kube  
Latviešu  
Lëtzebuergesch  
Lietuvių  
Luganda  
Magyar  
Malagasy  
Malti  
Māori  
Marshallese  
Melpa  
Montenegrin  
Nalik  
Namibia  
Nederlands  
Norsk  
Papiamentu  
Polski  
Português (BR)  
România  
Sámi  
Samoan  
Sarawak  
Sesotho  
Shqip  
Slovenščina  
Slovensky  
Sranan Tongo  
Srpski српски  
Suomi  
Svenska  
Tetum  
Tiếng Việt  
Tok Pisin  
Tongan  
Türkçe  
Türkmençe  
Tuvalu  
Vanuatu  
ελληνικά  
Беларускі  
български  
Кыргыз  
Монгол хэл  
Русский  
Тоҷикӣ  
Україна  
հայերեն  
اُردُو  
العربية  
فارسی  
नेपाली  
मराठी  
हिंदी  
বাংলা  
ગુજરાતી  
ଓଡ଼ିଆ  
தமிழ்  
తెలుగు  
ಕನ್ನಡ  
മലയാളം  
ภาษาไทย  
ພາສາລາວ  
한국어  
日本語  
简体中文  
繁體中文  
Windows / Mac