Return   Facebook   Zip File

Arabic

1

ஆவியின் புத்திரனே!

எனது முதல் அறிவுரை இதுவே: தூய்மையும், அன்பும், பிரகாசமும் நிறைந்த உள்ளத்தினைக் கொண்டிருப்பாயாக. அதனால் தொன்மையும் அழியாத் தன்மையும் வாய்ந்த, என்றும் நிலையான இராஜ்யம் உனக்கே உரியதாகட்டும்.

2

ஆவியின் புத்திரனே!

எனது பார்வையில் யாவற்றுக்கும் மேலாக அதி நேசிக்கத் தகுந்தது நீதியே; நீ என்னை விரும்பினால் அதனை விட்டு அப்பால் திரும்பிடாதே; அதனைப் புறக்கணிக்கவும் செய்யாதே; அதனால் யான் உன்னில் நம்பிக்கை வைக்கக்கூடும். அதன் துணையைக் கொண்டு, மற்றவர்களின் கண்களைக் கொண்டல்லாது, உனது சொந்தக் கண்களைக் கொண்டே காணலாம், உனது அண்டையரின் அறிவின் மூலமல்லாது உனது சொந்த அறிவின் மூலமாகவே அறியலாம். இதனை உனது உள்ளத்தினில் சிந்தித்துப்பார்; அது உனக்கு எத்துணைப் பொருத்தமானது! மெய்யாகவே, நீதியே யான் உனக்கு வழங்கியுள்ள பரிசு; அதுவே எனது அன்புக் கருணையின் அடையாளமுமாகும். ஆகவே அதனை உனது கண் முன் வைப்பாயாக.

3

மனிதனின் புத்திரனே!

நினைவுக்கெட்டாத எனது நிலையிலும், எனது சாராம்சம் எனும் புராதன நித்தியத்திலும் மறைந்திருக்கும் யான், உன்பால் எனக்குள்ள அன்பினை உணர்ந்தேன், ஆகவே உன்னைப் படைத்தேன்; எனது உருவத்தை உன்னில் செதுக்கியுள்ளேன்; எனது அழகையும் உனக்கு வெளிப்படுத்தினேன். .

4

மனிதனின் புத்திரனே!

யான் உன் படைப்பினை விரும்பினேன்; ஆகவே உன்னைப் படைத்தேன். ஆகையால் நீ என்னை நேசிப்பாயாக; அதனால் யான் உனக்குப் பெயரையும் சூட்டி, உனது ஆன்மாவையும் உயிர் ஆவியினால் நிரப்பக்கூடும்.

.

5

உயிருருவின் புத்திரனே!

என்னை நேசிப்பாயாக, அதனால் யான் உன்னை நேசிக்க இயலும். நீ என்னை நேசிக்காவிடில் எனதன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது. ஊழியனே, இதனை நீ அறிவாயாக.

6

உயிருருவின் புத்திரனே!

எனதன்பே உனது சுவர்க்கம்; என்னுடன் ஐக்கியமாதலே உனது தெய்வீக இல்லம்; அதனுள் பிரவேசி; தாமதிக்காதே. எனது மேலுலக இராஜ்யத்திலும் எனது மேன்மைமிகு அரசிலும் உனக்கென விதிக்கப்பட்டுள்ளது இதுவே.

7

மனிதனின் புத்திரனே!

நீ என்னை நேசித்தால், உன்னிடமிருந்து அப்பால் திரும்புவாயாக; நீ என் விருப்பத்தை வேண்டினால் உன் சொந்த விருப்பத்தினைப் பொருட்படுத்தாதே; அதனால் நீ என்னில் மரித்து, யான் என்றென்றும் உன்னுள் வாழக்கூடும். .

8

ஆவியின் புத்திரனே!

நீ உன்னையே துறந்து என்பால் திரும்பும் வரை, உனக்கு அமைதி கிடையாது; யான் தனியனாகவும், இருப்பனவற்றிற்கெல்லாம் மேலாகவும் நேசிக்கப் படுவதையே விரும்புவதனால், உனது சொந்தப் பெயரிலல்லாது எனது பெயரில் பெருமை கொள்வதுவும், உன்னிலல்லாது என்னில் நம்பிக்கை வைப்பதுவுமே உனக்குப் பொருத்தமாகும்.

9

உயிருருவின் புத்திரனே!

எனதன்பே எனது அரண்; அதனுள் நுழைபவன் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்றான்; அப்பால் திரும்புகின்றவன் நிச்சயமாக வழி தவறிப்போய் உயிரிழப்பான்.

10

சொல்லின் மைந்தனே!

நீயே எனது அரண்; அதனுள் நுழைவாயாக, அதனால் நீ பாதுகாப்பாக இருக்கலாம். எனது அன்பு உன்னுள் இருக்கின்றது, அதனை அறிவாயாக; அதனால் நீ என்னை உனது அருகிலேயே காணலாம். .

11

உயிருருவின் புத்திரனே!

நீயே எனது தீபம், எனது ஒளி உன்னுள் இருக்கின்றது. அதிலிருந்து உனது ஒளியைப் பெற்றுக்கொள், என்னைத் தவிர வேறெவரையும் தேடாதே. ஏனெனில், யான் உன்னைச் செல்வந்தனாகப் படைத்து எனது சலுகையையும் உன்மீது தாராளமாகப் பொழிந்துள்ளேன்.

12

உயிருருவின் புத்திரனே!

சக்தியெனும் கரங்களினால் உன்னை ஆக்கினேன்; வலுவென்னும் விரல்களினால் உன்னைப் படைத்தேன்; எனது ஒளியின் சாரத்தினையும் உன்னுள் வைத்துள்ளேன். அதனில் மன நிறைவு பெற்று, வேறெதனையும் தேடாதே; ஏனெனில், என் வேலை பூரணமானது; என் கட்டளையும் கட்டுப்படுத்தக் கூடியது. அதனை எதிர்த்துக் கேட்காதே; அதன்பால் சந்தேகமும் கொள்ளாதே. .

13

ஆவியின் புத்திரனே!

உன்னைச் செல்வந்தனாகப் படைத்தேன்; நீ ஏன் உன்னை ஏழ்மை நிலைக்குத் தாழ்த்திக் கொள்கின்றாய்? உன்னை உயர் பண்பினனாய்ப் படைத்தேன்; நீ ஏன் உன்னை இழிவுபடுத்திக் கொள்கின்றாய்? அறிவின் சாரத்திலிருந்து உனக்கு உயிர்த்தன்மை அளித்தேன், எதனால் நீ என்னைத் தவிர வேறொருவரிடம் இருந்து மெய்யறிவு தேடுகின்றாய்? அன்பு என்னும் களிமண்ணிலிருந்து நான் உன்னை ஆக்கினேன், எங்ஙனம் நீ வேறொருவருடன் ஈடுபாடு கொள்கின்றாய்? உனது பார்வையை உன்னுள் செலுத்துவாயாக; அதனால், வலிமையுடையவனாய், சக்திமிக்கவனாய், சுயஜீவியாய் யான் உன்னுள் நின்று கொண்டிருப்பதைக் கண்டிடக் கூடும்.

14

மனிதனின் புத்திரனே!

நீயே எனது அரசு, எனது அரசு அழியாதது; எதனால் நீ உனது அழிவுக்கு அஞ்சுகின்றாய்? நீயே எனது ஒளி, எனது ஒளி என்றுமே அணைத்திட இயலாதது; நீ ஏன் அணைதலுக்கு அஞ்சுகின்றாய்? நீயே எனது ஜோதி, எனது ஜோதி மங்காதது; நீயே எனது அங்கி, அது என்றுமே நைந்து போகாது. எனவே நீ என்னிடம் கொண்டுள்ள அன்பினில் உய்வாயாக; அதனால் நீ, ஒளி என்னும் இராஜ்யத்தில், என்னைக் கண்டிடக் கூடும்.

15

சொல்லின் மைந்தனே!

உனது முகத்தை எனது வதனத்தின்பால் திருப்பி, என்னைத் தவிர மற்றதனைத்தையும் துறப்பாயாக. ஏனெனில் எனது மாட்சிமை நீடிக்கக் கூடியது; எனது அரசும் அழியாதது. நீ என்னையன்றி வேறொன்றைத் தேடுவாயாகில், ஆம், நீ பிரபஞ்சத்தையே நித்தியம் அலசிடினும், உனது தேடுதல் வீணே.

16

ஒளியின் புத்திரனே!

என்னைத் தவிர மற்றதனைத்தையும் மறந்து, எனது ஆவியுடன் தொடர்பு கொண்டிடு. இதுவே எனது கட்டளையின் சாரம்; ஆகவே, அதன்பால் திரும்பிடு.

17

மனிதனின் புத்திரனே!

என்னிடம் மனநிறைவு கொள்; வேறெந்த துணைவனையும் நாடாதே. ஏனெனில் ,என்னைத் தவிர வேறெவருமே உனக்குத் திருப்தி அளிக்கவியலாது.

18

ஆவியின் புத்திரனே!

யாம் உனக்காக விரும்பாததை நீ எம்மிடம் கோராதே; அன்றியும், யாம் உன் பொருட்டு விதித்துள்ளதனைக் கொண்டு மனநிறைவு பெறுவாயாக. ஏனெனில், நீ அதனில் திருப்தி கொள்வாயாகில், அதுவே உனக்கு நன்மை பயக்கவல்லது.

19

வியத்தகு பார்வையின் மைந்தனே!

நீ எனது அன்பனாயிருப்பாய் என்பதற்காக எனது சொந்த ஆவியினையே உன்னுள் ஊதியுள்ளேன்; எதனால் நீ என்னைக் கைவிட்டுப் பிறிதொரு நேசரை நாடியுள்ளாய்?

20

ஆவியின் புத்திரனே!

எனக்கு உன்மீதுள்ள உரிமையோ அதிகம்; அது மறக்கப்படவியலாது. உனக்கு யான் அளித்துள்ள அருளோ ஏராளம்; அது மறைக்கப் படவியலாது. எனதன்பு உன்னுள் தன் இல்லத்தை அமைத்துக் கொண்டுள்ளது; அது மறைக்கப்படவியலாது. எனது ஒளி உனக்குத் தெளிவானது; அதனை மங்கச் செய்ய இயலாது.

21

மனிதனின் புத்திரனே!

பிரகாசமிகு பேரொளி என்னும் விருட்சத்தின்மீது தேர்வுசெய்யப்பட்ட கனிகளை யான் உனக்காகத் தொங்கவிட்டுள்ளேன்; எதனால் நீ அப்பால் திரும்பி, தரக் குறைவானவற்றில் மனநிறைவு அடைந்துள்ளாய்? மேலுலக இராஜ்யத்தினில் உனக்கு எது நன்மை பயக்கவல்லதோ அதன்பால் திரும்புவாயாக.

22

ஆவியின் புத்திரனே!

யான் உன்னை உயர் பண்பினனாய்ப் படைத்துள்ளேன், இருந்தும் நீயே உன்னைத் தாழ்த்திக் கொண்டுள்ளாய். எதற்காக நீ படைக்கப்பட்டாயோ அதன்பால் உயர்வாயாக.

23

அதீதரின் மைந்தனே!

யான் உன்னை நித்தியத்தின்பால் அழைக்கின்றேன்; இருந்தும் நீ அழியக் கூடியதனையே நாடுகின்றாய். எனது விருப்பத்தினைப் புறக்கணித்து, உனது சொந்த விருப்பத்தினை நாடச் செய்ததுதான் யாதோ?

24

மனிதனின் புத்திரனே!

உன் வரம்புகளை மீறாதே; உன் நிலைக்குப் பொருந்தாதவற்றைக் கோராதே. வலிமையும் சக்தியுமுடைய உனது பிரபுவின் திருவதனத்தின் முன் பணிந்து வணங்குவாயாக. .

25

ஆவியின் புத்திரனே!

ஏழையினிடத்தில் தற்பெருமை கொள்ளாதே; ஏனெனில், யான் அவனைத் தனது பாதையில் வழிநடத்துகின்றேன்; அப்பொழுது உன்னைக் கொடிய அவல நிலையில் கண்ணுற்று என்றென்றும் குழப்பத்தில் ஆழ்த்திடுவேன்.

26

உயிருருவின் புத்திரனே!

எங்ஙனம் நீ உனது சொந்தக் குறைகளை மறந்து, மற்றோரின் குறைகளிலேயே ஈடுபாடு கொள்கின்றாய்? எவனொருவன் அவ்வாறு செய்கின்றானோ அவன் எனது பழிப்புக்கு ஆளாகின்றான். .

27

மனிதனின் புத்திரனே!

நீயே ஒரு பாவியாய் இருக்கும்போது மற்றவரின் பாவங்களை மூச்சு விடாதே. இக் கட்டளையை மீறினால் நீ பழிப்புக்கு ஆளாவாய்; இதற்கு யாமே சாட்சியம் கூறுகின்றோம்.

28

ஆவியின் புத்திரனே!

உண்மையாகவே இதனை நீ அறிவாயாக: மனிதர்களை நீதியுடன் நடக்கும்படி கட்டளையிட்டுத் தானே அநீதி இழைக்கின்றவர், என் பெயரைக் கொண்டிருந்த போதிலும், அவர் என்னைச் சார்ந்தவரல்லர்.

29

உயிருருவின் புத்திரனே!

உன் மீதே நீ சார்த்திக் கொள்ளாததை வேறெந்த ஆன்மாவின் மீதும் சார்த்திடாதே; நீ செய்யாத ஒன்றினைச் செய்தேன் எனக் கூறாதே. இதுவே உனக்கு எனது கட்டளை, அதனைக் கடைப்பிடிப்பாயாக.

30

மனிதனின் புத்திரனே!

எனது ஊழியன் உன்னிடம் எதுவும் கோரினால், கொடுக்க மறுக்காதே; ஏனெனில் அவன் முகமே என் முகம்; ஆகவே என் முன்னிலையில் நாணிடுவாயாக.

31

உயிருருவின் புத்திரனே!

மொத்தக் கணக்குப் பார்க்க அழைக்கப்படுவதற்கு முன், நீ, உனது ஒவ்வொரு நாளையச் செயலையும் கணக்கிட்டுக் கொள்வாயாக; ஏனெனில், மரணம், முன்னறிவிப்பு எதுவுமின்றி உன்னைத் தாக்கும், அப்பொழுது, நீ, உன் செயல்களுக்குக் காரணம் கூற அழைக்கப்படுவாய்.

32

அதீதரின் மைந்தனே!

மரணத்தை உனக்கு மகிழ்ச்சியின் தூதனாக ஆக்கியுள்ளேன். நீ ஏன் வருந்துகிறாய்? ஒளியின் பிரகாசத்தினை உன்மீது விழுமாறு செய்துள்ளேன். அதிலிருந்து நீ ஏன் உன்னைத் திரையிட்டு மறைத்துக் கொள்கின்றாய்?

33

ஆவியின் புத்திரனே!

ஒளி என்னும் மகிழ்ச்சி மிகு நற்செய்தியுடன் உன்னை வரவேற்கின்றேன்; மகிழ்வுறுவாயாக! தெய்வீக அரசவையின்பால் உன்னை அழைக்கின்றேன்; அதனுள் வசிப்பாயாக; அதனால் நீ நிலையான அமைதியுடன் என்றென்றும் வாழக் கூடும்.

34

ஆவியின் புத்திரனே!

புனிதத்தன்மையெனும்ஆவி,மீண்டும்ஒன்றிணைதல் எனும் உவகையூட்டும் நற்செய்தியினை உன்பால் கொண்டு வருகின்றது; எதற்காக நீ வருந்துகின்றாய்? சக்தியெனும் ஆவி உன்னை இறைவனது சமயத்தில் உறுதிப்படுத்துகின்றது;எதனால்நீஉன்னைத்திரையிட்டு மறைத்துக் கொள்கின்றாய்? அவரது வதனத்தின் ஒளி உன்னை நடத்திச் செல்கின்றது; நீ தவறான வழியில் செல்வதெங்ஙனம்?

35

மனிதனின் புத்திரனே!

நீ என்னிடமிருந்து தொலைவில் இருக்கின்றாய் என்பதற்காகவல்லாது, வேறெதற்காகவும் வருந்தாதே. என்னை நெருங்கி என்பால் வந்துகொண்டிருக் கின்றாய் என்பதனால் அல்லாது வேறெதனிலும் மகிழ்ச்சியுறாதே.

36

மனிதனின் புத்திரனே!

உனது உள்ள உவகையில் பூரிப்படைவாயாக; அதனால் நீ, என்னைச் சந்திக்க அருகதை பெற்று, எனது அழகையும் பிரதிபலிக்கக்கூடும்.

37

மனிதனின் புத்திரனே!

எனது அழகிய அங்கியினை உன் மீதிருந்து அகற்றிடாதே; வியத்தகு நீரூற்றிலிருந்து உனது பங்கினைப் பறிகொடுத்திடாதே; அவ்வாறாயின் நீ என்றென்றும் தாகமுற நேர்ந்திடும்.

38

உயிருருவின் புத்திரனே!

என்மீதுள்ளஅன்பின்பொருட்டுஎனதுவிதிகளின்படி நடப்பாயாக; என் விருப்பத்தை வேண்டினால், நீ எதனை விரும்புகின்றாயோ அதனை நிராகரிப்பாயாக.

39

மனிதனின் புத்திரனே!

எனது அழகினை நேசித்தால் என் கட்டளைகளைப் புறக்கணிக்காதே, எனது நல்விருப்பத்தினை அடைய விரும்பினால் எனது அறிவுரைகளை மறந்திடாதே.

40

மனிதனின் புத்திரனே!

எல்லையிலா பரவெளியினில் விரைந்து சென்று, விண்ணுலகின் பரப்பினையே கடந்திடினும், எமது கட்டளைகளுக்கு அடிபணிதலிலும், எமது வதனத்தின் முன்னால் பணிவிலுமல்லாது வேறெதனிலும் நீ அமைதி காண இயலாது.

41

மனிதனின் புத்திரனே!

எனது சமயத்தை மேன்மைப்படுத்துவாயாக; அதனால் யான் எனது பெருமையின் மறைபொருள்களை உன்பால் வெளிப்படுத்திடக் கூடும்; நித்தியம் என்னும் ஒளியினைக் கொண்டு உன்னைப் பிரகாசிக்கச் செய்யக் கூடும்.

42

மனிதனின் புத்திரனே!

என்முன் பணிவு காட்டுவாயாக; அதனால் யான் கருணை கூர்ந்து உன்பால் வருகை தரக்கூடும். எனது சமயத்தின் வெற்றிக்காக எழுவாயாக; அதனால் நீ இவ்வுலகில் இருக்கும் பொழுதே வெற்றியைப் பெறக் கூடும்.

43

உயிருருவின் புத்திரனே!

எனது பூமியில் என்னை எடுத்தியம்புவாயாக; அதனால் எனது சுவர்க்கத்தில் யான் உன்னை நினைவிற் கொள்ளக் கூடும்; அவ்வண்ணமே எனது கண்களும் உனது கண்களும் ஆறுதல் பெறும்.

44

அரியாசனத்தின் மைந்தனே!

எனது கேட்குந்திறனே உனது கேட்குந்திறன்; அதனைக் கொண்டே நீ செவிமடுப்பாயாக. எனது காணுந்திறனே உனது காணுந்திறன்; அதனைக் கொண்டே கண்ணுறுவாயாக; அதனால் நீ, உனது ஆன்மாவின்உள்ளார்ந்தநிலையில்எனதுமேன்மைமிக்க புனிதத் தன்மைக்குச் சாட்சியம் அளிக்கக் கூடும்; யானும் என்னுள் உனக்காக ஓர் உயரிய நிலைக்குச் சாட்சியம் அளித்திடக் கூடும்.

45

உயிருருவின் புத்திரனே!

எனது விருப்பத்தில் மனநிறைவு பெற்று, யான் இடும் ஆணைக்காக நன்றி செலுத்தி, எனது பாதையில் ஓர் உயிர்த்தியாகிக்கான மரணத்தை நாடுவாயாக; அதனால் நீ, மாட்சிமையெனும் விதானத்தின்கீழ் பேரொளி என்னும் கூடாரத்திற்குப் பின்னால் எம்முடன் ஓய்வு பெறக்கூடும்.

46

மனிதனின் புத்திரனே!

ஆழ்ந்து சிந்தித்துப் பார். உனது படுக்கையிலேயே உயிர் விடுவதுதான் உன் விருப்பமா, அல்லது, உனது உயிரூட்டும் இரத்தத்தினைத் தரையில் சிந்தி, எனது பாதையில் உயிர்த் தியாகியாகி, அதன் மூலம், அதி மேன்மைமிகு சுவர்க்கத்தினில் எனது கட்டளைகளைப் பிரதிபலிப்பவனாகவும், என் ஒளியினை வெளிப்படுத்துபவனாகவும் ஆகிட விரும்புகின்றாயா? ஊழியனே, சரியாகச் சீர்தூக்கிப் பார்! .

47

மனிதனின் புத்திரனே!

எனது அழகின் மீது ஆணை! எனது பார்வையில், உனது இரத்தத்தினால் உன் முடியினைக் கறைப்படுத்துதல், பிரபஞ்சத்தையும் இரு உலகங்களின் ஒளியையும் படைத்தலைவிட உயர்வானதாகும். ஊழியனே, இதனை அடைய முயல்வாயாக!

48

மனிதனின் புத்திரனே!

ஒவ்வொன்றிற்கும் ஓர் அடையாளம் உண்டு. அன்பிற்கு அடையாளம் எனது கட்டளையின் கீழ் மன உறுதியும் எனது சோதனைகளின் கீழ் பொறுமையுமே ஆகும்.

49

மனிதனின் புத்திரனே!

புரட்சி செய்பவன் மன்னிப்புக்கு ஏங்குவது போலவும், பாவி இரக்கத்துக்கு ஏங்குவது போலவும் உண்மை அன்பன் கொடுந் துன்பத்துக்கு ஏங்குவான். .

50

மனிதனின் புத்திரனே!

எனது பாதையில் உனக்கு இன்னல்கள் நேராவிடில், எங்ஙனம் நீ எனது விருப்பத்தில் மனநிறைவு பெற்றோரின் வழியில் நடக்க இயலும்? என்னைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவலில் உன்னைச் சோதனைகள் பாதிக்காவிடில், நீ, எனது அழகின்மீதுள்ள உனது அன்பின் ஒளியினை அடைவது எங்ஙனம்?

51

மனிதனின் புத்திரனே!

எனது பேரிடரே எனது அருள்பாலிப்பு; வெளித்தோற்றத்திற்கு அது தீயும் வஞ்சந் தீர்த்தலும் ஆகும்; ஆனால் உள்ளூர அது ஒளியும் கருணையும் ஆகும். அதன்பால் விரைந்திடுவாயாக, அதனால் நீ ஒரு நித்திய ஒளியாகவும், அழிவற்ற ஆவியாகவும் ஆகக்கூடும். இதுவே உனக்கு எனது கட்டளை; அதனை நீ கடைப்பிடிப்பாயாக.

52

மனிதனின் புத்திரனே!

உனக்குச் செல்வம் வந்திடின், களிப்புறாதே; உனக்குத் தாழ்வு வந்திடின், துயருறாதே; ஏனெனில் அவ்விரண்டுமே மறைந்து இல்லாது போய்விடும். .

53

உயிருருவின் புத்திரனே! உன்னை வறுமை விஞ்சிடின், வருந்தாதே; ஏனெனில், உரிய வேளையில் செல்வத்திற்கதிபதி உன்பால் வருகை தருவார். தாழ்வுக்கு அஞ்சாதே; ஏனெனில் ஒரு நாள் பெருமை உன்னைச் சார்ந்திடும்.

54

உயிருருவின் புத்திரனே!

உனது இதயம் இந் நித்திய, அழிவற்ற அரசினையும்; இத் தொன்மை வாய்ந்த, என்றும் நிலையான வாழ்வினையும் விரும்பிடுமாயின், இவ்வநித்திய, விரைந்தோடிடும் அரசினைத் துறப்பாயாக.

55

உயிருருவின் புத்திரனே!

இவ்வுலகக் காரியங்களிலேயே ஈடுபட்டிராதே; ஏனெனில் யாம் தீயைக் கொண்டு தங்கத்தைச் சோதிப்போம், தங்கத்தைக் கொண்டு எமது ஊழியர்களைச் சோதிப்போம்.

56

மனிதனின் புத்திரனே!

நீ தங்கத்தை விரும்புகின்றாய்; நான், அதிலிருந்து உனது விடுதலையை வேண்டுகின்றேன். அதன் உடைமையில் நீ உன்னைச் செல்வந்தனாகக் கருதிக் கொள்கின்றாய்; ஆனால் நான், அதிலிருந்து உனது தூய்மையையே செல்வமாகக் காண்கின்றேன். எனது உயிரின்மீது ஆணை! இதுவோ என் அறிவு, அதுவோ உன் கனவு; எங்ஙனம் என் வழி உன் வழியுடன் ஒத்திருக்க இயலும்.

57

மனிதனின் புத்திரனே!

என் செல்வத்தை எனது ஏழைகளுக்கு வழங்கிடு; அதனால் நீ விண்ணுலகில், மங்காத, பிரகாசமான பண்ட சாலைகளிலிருந்தும், அழிவற்றப் பேரொளி என்னும் செல்வக் களஞ்சியங்களிலிருந்தும் பெற்றிடக் கூடும். ஆனால், எனது ஆவியின் மீது ஆணை! நீ எனது கண்ணைக் கொண்டு பார்ப்பாயாகில், உனது ஆன்மாவையே தியாகம் செய்தல், அதைவிட மகிமை பொருந்திய ஒன்றாகும்.

58

மனிதனின் புத்திரனே!

உயிருருவின் ஆலயமே எனது அரியாசனம்; அதனை யாவற்றிலிருந்தும் தூய்மைப்படுத்துவாயாக; அதனால் அங்கு யாம் நிலைபெறக் கூடும், அங்கு யாம் வசிக்கக் கூடும்.

59

உயிருருவின் புத்திரனே!

உனது உள்ளமே எனது இல்லம்; எனது வருகைக்காக அதனைப் புனிதப்படுத்துவாயாக. உனது ஆன்மாவே எனது வெளிப்படுத்துதலின் இடம்; எனது அவதரிப்புக்காக அதனைத் தூய்மைப்படுத்துவாயாக. .

60

மனிதனின் புத்திரனே!

உனது கரத்தினை என் நெஞ்சத்தினுள் வைப்பாயாக; அதனால், யான், பிரகாசமாகவும் ஒளிமயமாகவும் உனக்கு மேல் உயரக் கூடும். .

61

மனிதனின் புத்திரனே!

என் சுவர்க்கத்தின்பால் உயர்வாயாக; அதனால் என்னுடன் மீண்டும் ஒன்றிணைதல் என்னும் இன்பத்தைப் பெறக் கூடும்; அழிவற்ற ஒளி என்னும் கிண்ணத்திலிருந்து ஒப்பற்ற மதுரசத்தினைப் பருகக்கூடும்.

62

மனிதனின் புத்திரனே!

நீ, உனது கனவுகளிலும் வீண் கற்பனைகளிலும் ஈடுபட்டிருந்த பொழுது, நாள்கள் பல உன்னைக் கடந்து சென்றன. எவ்வளவு கால ந்தான் நீ உனது படுக்கையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கப் போகின்றாய்? உறக்கத்திலிருந்து உனது தலையை நிமிர்த்துவாயாக; ஏனெனில் சூரியன் நேர் உச்சி வானத்தை அடைந்து விட்டது; அது, ஒருவேளை, உன்மீது அழகெனும் ஒளியினைப் பாய்ச்சிடக் கூடும்.

63

மனிதனின் புத்திரனே!

புனித மலையின் தொடுவானத்தினின்று, ஒளி, உன் மீது பிரகாசித்துள்ளது; மெய்யறிவெனும் ஞான ஒளியும் உன் இதயமெனும் ஸைனாயில் மூச்சு விட்டிருக்கின்றது. ஆகவே பயனற்ற கனவுகள் என்னும் திரைகளிலிருந்து உன்னை விடுவித்துக்கொண்டு, எனது அரசவையினுள் பிரவேசிப்பாயாக; அதனால் நீ, நித்திய வாழ்விற்குத் தகுதியடைந்து, என்னைச் சந்திக்கும் அருகதையைப் பெறக்கூடும். அவ்வண்ணம், மரணமோ சோர்வோ துன்பமோ உன்னைப் பாதிக்காதிருக்கக் கூடும்.

64

மனிதனின் புத்திரனே!

எனது நித்தியமே எனது படைப்பு, அதனை யான் உனக்காகவே படைத்துள்ளேன். அதனை உனது ஆலயத்தின் ஆடையாக்கிக் கொள்வாயாக. என் ஒருமையே எனது கைவேலை; அதனை யான் உனக்காகவே ஆக்கியுள்ளேன்; அதனைக் கொண்டு உன்னை அணிவிப்பாயாக; அதனால் நீ நித்தியமும் எனது அழிவில்லா திருவுருவின் வெளிப்படுத்துதல் ஆகக்கூடும்.

65

மனிதனின் புத்திரனே!

எனது மாட்சிமை உனக்கு எந்தன் அன்பளிப்பு; என் மகிமை உன்பால் எனது கருணையின் அடையாளம். எனக்குஏற்புடையதுஎதுவெனஎவருமேபுரிந்துகொள்ள முடியாது; அதனை ஒருவராலும் விவரிக்கவும் இயலாது. மெய்யாகவே, யான், எனது ஊழியர்களின்பால் எனது அன்புப் பரிவின் அடையாளமாகவும், எனது மக்களின்பால் எனது கருணையின் அடையாளமாகவும், அதனை எனது மறைவாயுள்ள களஞ்சியங்களிலும் எனது கட்டளை என்னும் கருவூலங்களிலும் பாதுகாப்பாக வைத்துள்ளேன்.

66

தெய்வீகமான, கண்ணுக்குப் புலனாகா சாராம்சத்தின் குழந்தைகளே!

என்னை நேசிப்பதிலிருந்து நீங்கள் தடுக்கப் படுவீர்; ஆன்மாக்கள் என்னைக் குறிப்பிடும்போது, பெரிதும் கலக்கமடையும். ஏனெனில், மனங்கள் என்னைப் புரிந்து கொள்ளவியலாது; உள்ளங்களும் என்னை உள்ளடக்கவியலாது.

67

அழகின் மைந்தனே!

எனது ஆவியின் மீதும் எனது தயையின் மீதும் ஆணை! எனது கருணையின் மீதும் எனது அழகின் மீதும் ஆணை! எனது வலிமை என்னும் நாவினால் யான் உன்பால் வெளிப்படுத்தியுள்ளவை அனைத்தும், எனது சக்தி என்னும் எழுதுகோலினால் உனக்கு யான் எழுதி வைத்துள்ளவை யாவும், உனது புரிந்துகொள்ளும் திறனுக்குட்பட்டவையே அல்லாது, எனது நிலைக்கோ எனது குரலின் இன்னிசைக்கோ உட்பட்டவை அல்ல.

68

மனிதர்களின் குழந்தைகளே!

எதனால், யாம், உங்களனைவரையும் ஒரே மண்ணிலிருந்து ஆக்கினோம் என்று உங்களுக்குத் தெரியாதா? ஒருவர், தன்னை மற்றவருக்கு மேலாக உயர்மதிப்பிடக் கூடாது என்பதற்காகத்தான். நீங்கள் எவ்விதம் படைக்கப்பட்டீர்கள் என்பதை எல்லா வேளைகளிலும் உங்கள் உள்ளங்களில் சிந்தியுங்கள். உங்கள் அனைவரையும் யாம் ஒரே பொருளிலிருந்து ஆக்கியிருப்பதனால் நீங்கள் அனைவரும் ஒரே ஆன்மாவைப் போல் இருக்க வேண்டும்; அதே பாதங்களைக் கொண்டே நடக்க வேண்டும்; அதே வாயினால் உணவருந்தி ஒரே நிலத்தில் வசிக்க வேண்டும்; அதனால் உங்களின் உயிருருவின் உள்ளார்ந்த நிலையிலிருந்து, உங்களது செயல், நடத்தை ஆகியவை வாயிலாக, ஒருமைத் தன்மையின் அடையாளங்களும் பற்றின்மையின் சாராம்சமும் வெளிப்படுத்தப்படக்கூடும். ஒளியின் படையினரே, இவ்வாறானதுதான் உங்களுக்கு எனது அறிவுரை! இவ்வறிவுரையினைப் பின்பற்றுவீராக; அதனால் நீங்கள் வியத்தகு புகழொளி என்னும் விருட்சத்திலிருந்து புனிதத் தன்மையெனும் கனியினைப் பெற்றிடக் கூடும்.

69

ஆவியின் புத்திரர்களே!

நீங்கள்தாம் எனது கருவூலம்; ஏனெனில் உங்களுள்தாம் எனது மர்மங்கள் என்னும் முத்துக்களையும், எனது அறிவு என்னும் மாணிக்கங்களையும் பாதுகாப்பாக வைத்துள்ளேன். எனது ஊழியர்களின் மத்தியில் உள்ள அயலாரிடமிருந்தும் எனது மக்கள் மத்தியில் உள்ள இறைபக்தி அற்றோரிடமிருந்தும் அவற்றைப் பாதுகாப்பீராக.

70

தனது மெய்ப்பொருள் என்னும்

இராஜ்யத்தினில் தனது சொந்த உட்பொருளைச் சார்ந்து நின்றவரின் மைந்தனே! தெய்வீகம் என்னும் நறுமணங்கள் அனைத்தையும் நான் உன்மீது வீசச் செய்துள்ளேன் என்பதையும், எனது திருமொழியினை உனக்கு முழுமையாக வெளிப்படுத்தியுள்ளேன் என்பதையும், உன் மூலம் எனது வள்ளன்மையைப் பூரணமடையச் செய்து, நான் எனக்காக விரும்பியுள்ளதனையே உனக்காகவும் விரும்பியுள்ளேன் என்பதையும் நீ அறிவாயாக. ஆகவே என் விருப்பத்தினில் மனநிறைவு பெற்று என்னிடம் நன்றி உடையவனாய் இருப்பாயாக.

71

மனிதனின் புத்திரனே!

யாம் உன்பால் வெளிப்படுத்தியுள்ள யாவற்றையும் ஒளி என்னும் மையைக் கொண்டு உனது ஆவி என்னும் தகட்டின் மீது பொறித்து வைப்பாயாக. இது உனது சக்திக்கு உட்பட்டதாய் இல்லை எனில் உனது உள்ளத்தின் சாரத்தினை உனது மை ஆக்கிக்கொள். இதனையும் நீ செய்திட இயலாதாயின், எனது பாதையில் சிந்தப்பட்ட அச் சிவப்பு மையைக் கொண்டு எழுதிடு. உண்மையாகவே மற்றதனைத்தையும் விட இதுவே எனக்கு இனிமையானது; ஏனெனில் அதன் ஒளி என்றென்றும் நீடிக்கக் கூடியது.

Persian

1

அறிய மனமும் கேட்கச் செவியும்

கொண்டுள்ள மனிதர்களே! நேசரின் முதல் அழைப்பு இதுவே: மறைªபாருளான இராப்பாடியே! ஆன்மீக ரோஜாத் தோட்டத்திலல்லாது வேறெங்கும் வாழாதே. அன்பிற்கே ஸாலமனானவரின்* தூதுவனே! நல்லன்புக்குரியவரின் ஷீபாவில்** அல்லாது வேறெங்கும் நிழல் தேடாதே; என்றும் இறவா பீனிக்ஸே! விசுவாசமெனும் மலையின் மீதல்லாது வேறெங்கும் வாழாதே. உனது ஆன்மாவெனும் இறக்கையின் மீது, முடிவில்லா இராஜ்ஜியத்தை நோக்கிப் பறந்து, உனது இலட்சியத்தை அடைய முனைவாயாயின், அதனில்தான் உள்ளது உனது உறைவிடம்.

*சாலமன்: பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்ரேல் நாட்டு மன்னர். அவர் விவேகத்துடன் அரசாட்சி புரிந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் காலத்தில் விஞ்ஞானமும் கலைகளும் மனித இனங்களிடையே பிரபலப் படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. (‘கிதீபீu’றீ-ஙிணீலீஊ வீஸீ லிஷீஸீபீஷீஸீ. ஜீ. 42)

**ஷீபா: ஸாலமன் என்னும் மன்னர் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த ஒரு ராணி. அவர் சாலமனைச் சென்று சந்தித்ததாகக் கூறப்படுகின்றது. ஒரு வீட்டையோ குடியிருப்பிடத்தையோ குறிப்பதற்கு ஷீபா என்ற வார்த்தையைச் சின்னமாக உபயோகிப்பதும் உண்டு.

பீனிக்ஸ்: பண்டைய காலத்தில் எகிப்து நாட்டின் புராணக் கதைகளில் வரும் ஒரு மாயப் பறவை. இப்பறவை 500 ஆண்டுகள் உயிர் வாழும். பின்னர் அது தன்னைத் தானே எரித்துக் கொண்டு உயிர் துறக்கும். பின்பு அதன் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர் பெற்றெழும்.

2

ஆவியின் புத்திரனே!

பறவை அதன் கூட்டைத் தேடுகின்றது; இராப்பாடியோ, ரோஜாவின் கவர்ச்சியைத் தேடுகின்றது; அவ்வேளை மனிதர்களின் உள்ளங்கள் என்னும் அப் பறவைகளோ, மாயை என்னும் புழுதியில் மன நிறைவு பெற்று, அவற்றின் நித்திய கூட்டிற்கப்பால் வெகுதூரம்சென்றுவிட்டுள்ளன.அவற்றின்பார்வையைக் கவனமின்மை என்னும் சகதியின்பால் திருப்பி, தெய்வீக முன்னிலை என்னும் ஒளியை இழந்து நிற்கின்றன. அந்தோ! என்னே விந்தை, என்னே பரிதாபம்; அவர்கள், ஒரு சாதாரண, அற்ப நிறைக் கிண்ணத்திற்காக, அதி உயர்வானவரின் அலைபொங்கும் கடல்களிலிருந்து அப்பால் திரும்பி, பிரகாசமிகு தொடுவானத்தை விட்டு வெகு தொலைவில் இருந்துவிட்டனர்.

3

நண்பனே!

உனது உள்ளமெனும் பூங்காவில் அன்பெனும் ரோஜாவைத் தவிர வேறெதனையும் பயிரிடாதே. அன்பு, ஆவல் என்னும் இராப் பாடியிலிருந்து உனது பிடியைத் தளர்த்தி விடாதே. நேர்மையாளரின் நட்பைப் பாதுகாத்து, இறை பக்தியற்றோருடன் தோழமையைத் தவிர்ப்பாயாக. .

4

நீதியின் மைந்தனே!

அன்பர் ஒருவருக்குத் தனது நேசரின் இடத்திற்கல்லாது வேறெங்குச் செல்ல முடியும்? தேடும் எவர் ஒருவர் தனது உள்ளத்தின் ஆவலுக்கப்பால் எங்ஙனம் அமைதி காண இயலும்? உண்மை அன்பருக்கு ஒன்றிணைதலே உயிர், பிரிவே மரணம். அவரது நெஞ்சம் பொறுமையற்றிருக்கின்றது; அவரது உள்ளத்தில் அமைதி இல்லை. அவர் தன் நேசரின் இருப்பிடத்தின்பால் விரையும் பொருட்டு எண்ணற்ற உயிர்களையும் துறப்பார்.

5

புழுதியின் மைந்தனே!

மெய்யாகவே யான் உன்னிடம் கூறுகின்றேன்: வீண் வாதத்தில் ஈடுபடுபவனும் தனது சகோதரனுக்கு மேல் தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பவனும் 35

மனிதர்களிடையே மிகவும் அசட்டையானவன். கூறுவாயாக, சகோதரர்களே! சொற்களன்றி செயல்களே உங்களின் அணிகலனாகட்டும்.

6

மண்ணின் மைந்தனே!

மெய்யாகவே, உள்ளத்தினில் மிகச் சிறிதளவு பொறாமையேனும் எஞ்சி இருக்குமாயின், அது, எனது நித்திய அரசினை அடையவோ, எனது தூய்மை என்னும் இராஜ்ஜியத்தினின்று வெளிவரும் இனிய மூச்சின் நறுமணத்தினை உள்ளிழுத்திடவோ இயலாது என்பதை அறிவாயாக.

7

அன்பின் மைந்தனே!

உயர்விலுள்ள ஒளிமிகு உச்சத்திலிருந்தும் அன்பெனும் விண்ணுலக விருட்சத்திலிருந்தும் ஒரே அடி தொலைவில்தான் இருக்கின்றாய். ஓரடி எடுத்து வைத்து, அடுத்த அடியில் நீ அழிவில்லா அரசின்பால் முன்னேறி, நித்திய ஆலயத்தினுள் பிரவேசிப்பாயாக. எனவே, ஒளி என்னும் எழுதுகோலினால் வெளிப்படுத்தப் பட்டதன்பால் செவி சாய்ப்பாயாக.

8

பேரொளியின் மைந்தனே!

புனிதத் தன்மை என்னும் பாதையினில் விரைந்திடு; என்னுடன் தொடர்புறவு என்னும் சுவர்க்கத்தினுள் பிரவேசித்திடு. ஆவி என்னும் மெருகினைக் கொண்டு உனது உள்ளத்தைத் தூய்மைப் படுத்தி, அதி உயரிய அரசவையின்பால் விரைவாயாக. .

9

விரைந்தோடிடும் நிழலுருவமே!

ஐயப்பாடெனும் தாழ்வான நிலைகளைக் கடந்து, உறுதிப் பாடெனும் உயர்வான உச்சங்களை நோக்கி மேலெழுவாயாக. மெய்ம்மைக் கண்ணைத் திறப்பாயாக; அதனால் நீ முகத்திரையற்ற அழகினைக் கண்ணுற்று: படைப்போர் அனைவரிடையே அதி உயர்வான, வணங்குதற்குரிய பிரபுவே! என வியப்புக் குரல் எழுப்பக்கூடும்!

10

ஆவலின் மைந்தனே!

இதன்பால் செவி சாய்ப்பாயாக: அநித்திய கண் நித்திய அழகினை அறிந்து கொள்ளவே முடியாது; உயிரற்ற உள்ளம் வாடிய மலரிலல்லாது வேறெதனிலும் இன்பமடையவே இயலாது. ஏனெனில், ரகம் ரகத்தை நாடி, அதன் இனத்தின் தோழமையிலேயே மகிழ்வுறும்.

11

புழுதியின் மைந்தனே!

உனது கண்களை மூடிக்கொள்; அதனால் நீ எனதழகினைக் கண்ணுறலாம்; உனது காதுகளை அடைத்துக்கொள்; அதனால் எனது குரலின் இனிய கீதத்தினைச் செவிமடுக்கலாம்; கற்றவை அனைத்தினின்றும் உன்னை வெறுமையாக்கிக் கொள்; அதனால் நீ எனது அறிவிலிருந்து பங்கு பெறலாம்; செல்வங்களிலிருந்து உன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்; அதனால் நீ எனது நிலையான செல்வக் கடலிலிருந்து ஒரு நிரந்தரப் பங்கைப் பெறக்கூடும். எனது அழகின்பால் அல்லாது மற்றதனைத்தினின்றும் உனது கண்களை மூடிக்கொள்; எனது திருமொழியின்பால் அன்றி மற்றனைத்தின்பாலிருந்தும் உனது காதுகளை மூடிக்கொள்; எனது அறிவைத் தவிர மற்றெல்லா அறிவினின்றும் உன்னை வெறுமையாக்கிக் கொள்; அதனால், நீ, தெளிவான பார்வையுடனும், தூய உள்ளத்துடனும், கவனமிக்கச் செவிகளுடனும், எனது தெய்வீகமெனும் அரசவையினுள் பிரவேசிக்கக் கூடும். .

12

இரு பார்வைகளைக் கொண்டுள்ள மனிதனே!

ஒரு கண்ணை மூடி மற்றதைத் திறப்பாயாக. இவ்வுலகும் அதனுள் இருக்கும் அனைத்தின் பாலும் ஒன்றை மூடிடு; மற்றதை நேசரின் திருத்தூய்மைமிகு அழகின்பால் திறந்திடு.

13

எனது குழந்தைகளே!

எங்கே, நீ, வான்புறாவின் இன்னிசையின் இழப்புக்கு ஆளாகி, முழு இழப்பெனும் இருளில் மீண்டும் மூழ்கி, ரோஜாவின் அழகினைக் கண்ணுறாது, நீருக்கும் களிமண்ணுக்கும் திரும்பிடுவாயோ என அஞ்சுகின்றேன்.

14

அன்பர்களே!

நிச்சயம் அழியக் கூடிய அழகிற்காக நித்திய அழகினைத் துறந்திடாதீர்; புழுதி என்னும் இவ்வநித்திய உலகின்மீது பாசங் கொண்டிடாதீர்.

15

ஆவியின் புத்திரனே!

தெய்வீக இராப்பாடி உள்ளார்ந்த மர்மங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்திடாத காலம் வருகின்றது; அப்பொழுது நீங்கள் அனைவரும் விண்ணுலகக் கீதத்தினையும் உயர்விலுள்ள குரலினையும் இழந்திடப் போகின்றீர்.

16

கவனமின்மையின் சாரமே!

எண்ணற்ற மர்ம மொழிகள் ஒரே உரையினில் மொழியப்பெறுகின்றன; எண்ணற்ற மறை புதிர்கள் ஒரே கீதத்தினில் வெளிப்படுகின்றன; இருந்தும், அந்தோ, கேட்கச் செவியுமில்லை, புரிந்திட உள்ளமும் இல்லை.

17

தோழர்களே!

இடமில்லாதவரின்முன் திறக்கப்பட்டுள்ள நுழைவாயில்கள் அகலமாய் உள்ளன; அன்புக்குப் பாத்திரமானவரின் உறைவிடமோ நேசர்களின் இரத்தத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, இருந்தும், சிலரைத் தவிர மற்றனைவரும் இத் தெய்வீக நகரினை இழந்துள்ளனர்; அவ்வொரு சிலரிலும், தூய உள்ளமும் புனித ஆன்மாவும் கொண்டுள்ளோரின் எண்ணிக்கை மிகக் குறைவே.

18

அதி உயரிய விண்ணுலகில் வசிப்போரே!

திருத்தூய்மை என்னும் பிரதேசங்களுள், தெய்வீக விண்ணுலகின் அருகில், புதியதோர் பூங்கா தோன்றியுள்ளதென்றும், உயர்விலுள்ள இராஜ்ஜியவாசிகளும், மேன்மைமிகு சுவர்க்கத்தில் வாழும் சிரஞ்சீவிகளும் அதனைச் சுற்றி வலம் வருகின்றனர் என்றும் வாக்குறுதிப் பெற்ற குழந்தைகளிடம் பிரகடனம் செய்வீராக. ஆதலின், அந்நிலையை அடைய முயற்சி செய்வீராக; அதனால், நீங்கள், அதன் காற்று மலர்களிலிருந்து அன்பின் மர்மத்தினை வெளிப்படுத்தி, அதன் நித்திய கனிகளிலிருந்து தெய்வீக, முழுநிறைவான விவேகத்தினை அறிந்திடக் கூடும். அதனுள் நுழைந்து உய்வோரின் கண்கள் ஆறுதல் பெறுமாக!

19

எனது நண்பர்களே!

புனிதமான, அருள் நிறைந்த, தூய்மைமிக்க அச்சூழ்நிலையில், ஒளிமயமான சுவர்க்கத்தினில் நடப்பட்டிருக்கும் உயிர் விருட்சத்தின் நிழலின் கீழ், எனது முன்னிலையில், நீங்கள் யாவரும் கூடியிருந்த அவ்வுண்மையான, பிரகாசமிகு அதிகாலை வேளையை மறந்து விட்டீர்களா? வியப்புற்று, நீங்கள், யான் மொழிந்திட்ட இம்மூன்று அதி புனித சொற்களைச் செவிமடுத்தீர்: நண்பர்களே! என் விருப்பத்தைத் தவிர உங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்காதீர், யான் உங்களுக்காக விரும்பாததை நீங்கள் என்றுமே விரும்பாதீர்; உலக ஆசைகளினாலும் இச்சைகளினாலும் கறைப்படுத்தப்பட்ட, உயிரற்ற உள்ளங்களோடு, என்னை அணுகாதீர். நீங்கள், உங்கள் ஆன்மாக்களைப் புனிதப்படுத்துவீராயின், தற்போது அவ்விடத்தையும் அச்சூழ்நிலையையும் மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர இயலும்; அப்பொழுது எனது கூற்றின் உண்மை உங்கள் அனைவருக்கும் தெளிவாகும்.

சுவர்க்கத்தின் ஐந்தாம் நிருபத்தின் அதி திவ்விய எட்டாம் வரியில், அவர் திருவாய் மலர்கின்றார்:

20

கவனமின்மை என்னும் மஞ்சத்தின் மீது மாண்டவர்களைப் போல் கிடப்போரே! காலங்கள் கடந்து விட்டன, உங்களின் அரிய வாழ்நாள்களோ அவற்றின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றன; இருந்தும் உங்களிடமிருந்து தூய்மை என்னும் மூச்சு ஒன்றுமே எனது புனித அரசவையினை வந்தடையவில்லை. தவறான நம்பிக்கை என்னும் மாக்கடலில் மூழ்கிக் கிடந்த போதும் நாவளவில் ஒரே மெய்ப் பொருளானவரின் சமயத்தில் நம்பிக்கைக் கொண்டிருப்பதாகக் கூறிக் கொள்கின்றீர். எவரிடம் நான் அருவருப்புக் கொள்கின்றேனோ அவரிடத்தில் நீங்கள் அன்பு கொண்டிருக்கின்றீர்; எனது பகைவனை நண்பனாக்கிக் கொண்டிருக்கின்றீர். இருந்தும், வையமும் அதிலுள்ள அனைத்தும் உங்களை வெறுத்து ஒதுக்குகின்றன என்பதைக் கூட கவனியாது, நீங்கள், எனது உலகின்மீது நடமாடுகின்றீர். நீங்கள், உங்கள் கண்களைத் திறப்பீராயின், உண்மையிலேயே, இவ்வின்பத்திற்குப் பதிலாக எண்ணற்றத் துன்பங்களைத் தேர்ந்தெடுப்பீர்; இவ்வாழ்க்கையை விட, இறப்பதே நன்றென எண்ணுவீர்.

21

அசையும் புழுதியின் உருவமே!

யான் உன்னுடன் தொடர்பை விரும்புகின்றேன்; ஆனால் நீயோ என்னில் நம்பிக்கை வைக்க மறுக்கின்றாய். உனது புரட்சி என்னும் வாள் உனது நம்பிக்கை என்னும் விருட்சத்தை வீழ்த்தி விட்டுள்ளது. எப்பொழுதும் யான் உனதருகே இருக்கின்றேன், இருந்தும் நீ என்னிடமிருந்து வெகு தொலைவில் இருக்கின்றாய். அழிவில்லா மேன்மையினை யான் உனக்காகத் தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆயினும் நீயோ எல்லையற்ற அவமானத்தை உனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளாய். இன்னும் நேரம் இருக்கும் பொழுதே திரும்பி வந்துவிடு, உனது வாய்ப்பை இழந்து விடாதே.

22

ஆவலின் புத்திரனே!

கற்றோரும் விவேகிகளும் வெகுபல ஆண்டுகளாக ஒளிமயமானவரின் முன்னிலையை அடைய முயற்சி செய்தும், தோல்வியுற்றுள்ளனர்; அவரைத் தேடுவதில் தங்களின் வாழ்நாளைச் செலவிட்டுள்ளனர்; இருந்தும் அவரது வதனத்தின் அழகினைக் கண்ணுறவில்லை. நீயோ ஒரு சிறிதளவு முயற்சியுமின்றி உனது குறிக்கோளை அடைந்து விட்டாய்; தேடுதலின்றியே நீ, நாடும் பொருளைப் பெற்றுவிட்டாய். இருந்தும் நீ, தானெனும் அங்கியினால் உன்னை மறைத்துக் கொண்டிருந்தமையால் உனது கண்கள் அன்புக்குரியவரின் அழகினைக் கண்ணுறவோ, உனது கரங்கள் அவரது மேலங்கியின் விளிம்பினைத் தொட்டிடவோ இயலாது போய்விட்டது. கண்ணுடையோனே, கண்ணுற்று வியப்புறுவாயாக. .

23

அன்பெனும் மாநகரின் வாசிகளே!

அழிவற்ற மெழுகுவத்தியினைக் கொடுங் காற்று தாக்குகின்றது; விண்ணுலக இளைஞனின் அழகு தூசிப் படலத்தின் இருளினால் மறைக்கப் பட்டிருக்கின்றது. அன்பெனும் மன்னர்களுள் முதல்வர் கொடுங்கோன்மையாளரினால் தவறிழைக்கப் படுகின்றார், புனிதமெனும் புறா, ஆந்தைகளின் கூர்நகங்களில் சிறைப்பட்டுக் கிடக்கின்றது. ஒளியெனும் கூடாரத்தின் வாசிகளும் வான்படையினரும் அழுது புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் நீங்களோ கவனமின்மையெனும் பிரதேசத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கின்றீர்; உங்களை நீங்கள் உண்மையான நண்பர்களெனவும் உயர்வாகக் கருதிக் கொள்கின்றீர். எத்துணை அற்பமானது உங்களின் கற்பனைகள்!

24

அறிவிலிகளாய் இருந்தும், விவேகிகளெனப் பெயர் பெற்றோரே!

உள்ளூர ஓநாய்களாய் இருந்தும், எதனால் நீங்கள், இடையர் வேடம் தரித்து, எனது மந்தையின் மீது கண்ணோட்டம் இடுகின்றீர்? வைகறைக்குமுன் தோன்றி, ஒளி வீசிடும் பிரகாசமிக்க நட்சத்திரங்களைப் போல் தோன்றிடினும், உண்மையில், நீங்கள், எனது மாநகரின் பிரயாணிகளை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்பவர்களே.

25

தோற்றத்தில் நீதிமானாய் அகத்தே கயவனாய் உள்ளவனே!

நீ, தூய, ஆனால், கசப்பான நீரைப் போன்றவனே; வெளித் தோற்றத்திற்கு தெளிவான பளிங்கைப் போல் இருப்பினும், அது, தெய்வீக ஆய்வாளரினால் பரிசோதிக்கப்படுகையில், ஒரு துளி கூட ஏற்கப் படுவதில்லை. ஆம், கதிரவனின் ஒளிக் கதிர், புழுதியின் மீதும் கண்ணாடியின் மீதும் சமமாக விழுகின்றது, ஆனால், பிரதிபலிப்பில் அவை விண்மீனுக்கும் மண்தரைக்குமிடையே உள்ள வேறுபாடுடையன: அதோடல்ல, அவற்றின் வேறுபாடோ அளவிடற்கரியதாகும்!

26

சொல்லளவில் எனது நண்பனே!

சற்று சிந்தித்துப் பார். நண்பனும் பகைவனும் ஒரே உள்ளத்தில் தங்கியிருப்பதை நீ எப்போதாவது கேட்டிருக்கின்றாயா? ஆகவே, அயலானை அப்புறப் படுத்து; அதனால் நண்பன் தனது இல்லத்தில் பிரவேசித்திடக் கூடும்.

27

புழுதியின் மைந்தனே!

எனது அழகுக்கும் மகிமைக்கும் உறைவிடமாக்கி யுள்ள மனிதனின் இதயத்தைத் தவிர, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தையும் நான் உனக்காகவே நியமித்துள்ளேன்;இருந்தும்நீ,எனதுஇல்லத்தை,எனது உறைவிடத்தை, என்னைத் தவிர வேறொருவனுக்குக் கொடுத்துள்ளாய்; எனது புனிதத் தன்மையின் அவதாரமானவர் தனது சொந்த உறைவிடத்தைத் தேடி வரும்பொழுதெல்லாம், அவர் அங்கோர் அயலானைக் கண்டார்; வீடற்று, பின், தனது நேசரின் சரணாலயத்தை நோக்கி விரைந்திட்டார். இருப்பினும், யான் உனது இரகசியத்தை மறைத்துள்ளேன்; உனது அவமானத்தை விரும்பவில்லை.

28

ஆவலின் சாரமே!

பல வைகறையின் பொழுது நான் இடமின்மை என்னும் இராஜ்ஜியத்திலிருந்து உனது இருப்பிடத்தை நோக்கித் திரும்பினேன்; அப்பொழுது, உன்னை, வசதியான மஞ்சத்தின்மீது, என்னுடனல்லாது வேறொருவருடன் ஈடுபட்டிருப்பதைக் கண்ணுற்றேன். உடனே, ஆவியின் மின்னிடு வேகத்தில், யான், தெய்வீகப் புகழொளியெனும் இராச்சியத்திற்குத் திரும்பிச் சென்றுவிட்டேன்; எனது மேலுலகிலுள்ள அவ்வோய்விடங்களில், புனிதர் கூட்டத்தினரிடம், அதனைக் குறித்து மூச்சு விடவில்லை. .

29

வள்ளன்மையின் மைந்தனே!

வெறுமை என்னும் கழிவுப் பொருள்களினின்று, எனது கட்டளை என்னும் களிமண்ணைக் கொண்டு, உன்னைத் தோற்றுவித்தேன்; உனது பயிற்சிக்காக, உளதாம்பொருளின் ஒவ்வோர் அணுவையும், அனைத்துப் படைப்புப் பொருள்களின் சாரத்தையும் நியமித்துள்ளேன். அவ்வண்ணமே, நீ உனது தாயின் கருப்பையிலிருந்து வெளிவருவதற்கு முன்பே, உனக்காக அன்னையின் இரண்டு மார்புகளில் பாலையும், உன்னைக் கண்காணிக்கக் கண்களையும், உன்னிடம் அன்பு காட்ட உள்ளத்தினையும் நியமித்தேன். எனது அன்புப் பரிவினால் உன்னை எனது கருணையின் நிழலின்கீழ் பேணி வளர்த்தேன்; எனது அருள், தயை என்னும் சாரத்தினைக் கொண்டு உன்னைப் பாதுகாத்தேன். இவை அனைத்திலும் எனது குறிக்கோள், நீ, எனது நிலையான இராச்சியத்தை அடைந்து, கண்களுக்குப் புலனாகா எனது அருள்பாலிப்புகளைப் பெற்றிடத் தகுதி பெற வேண்டும் என்பதுதான். இருந்தும், நீ, கவனமில்லாதிருந்தாய்; முழு வளர்ச்சியடைந்தவுடன், எனது வள்ளன்மைகள் அனைத்தையும் புறக்கணித்தாய்; உனது வீண் கற்பனைகளில் ஈடுபட்டு, நண்பனின் திருவாசலை விட்டகன்று, முழுமையான மறதி நிலையில், எனது பகைவனின் அரசவையில் சென்று தங்கிடும் அளவுக்குப் போய்விட்டாய்.

30

உலக வாழ்வின் அடிமையே!

பல நாள், வைகறையில், எனது அன்புப் பரிவெனும் மென்காற்று உன்மீது வீசிடுங்கால், நீயோ கவனமின்மை என்னும் படுக்கையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டது. உனது அவல நிலைக்காக வருந்தி தான் வந்தவிடத்திற்கே திரும்பிச் சென்று விட்டது.

31

மண்ணுலகின் மைந்தனே!

நீ என்னை அடைய விரும்பினால் என்னைத் தவிர வேறெவரையும் தேடாதே; எனது அழகைக் கண்ணுற விரும்பினால், உலகின்பாலும், அதனுள்ளிருக்கும் அனைத்தின்பாலும், உனது கண்களை மூடிக்கொள்; ஏனெனில், எனது விருப்பமும், என்னையல்லாது வேறொருவரின் விருப்பமும், நெருப்பும் நீரும் போன்று ஒரே உள்ளத்தில் குடியிருக்க இயலாது.

32

நட்பைப் பெற்ற அந்நியனே!

உனது உள்ளமெனும் மெழுகுவத்தி எனது சக்தி என்னும் கையினால் ஏற்றப்பட்டுள்ளது; தன்னலம், மனவெழுச்சி ஆகிய எதிர்க் காற்றுகளைக் கொண்டு அதனை அணைத்து விடாதே. உனது நோய்களை எல்லாம் தீர்க்கவல்லது எனது நினைவே; அதனை மறந்து விடாதே. எனது அன்பைச் செல்வமாகக் கொண்டு, அதனை உனது கண்பார்வையாகவும் உயிராகவும் பேணுவாயாக. .

33

எனது சகோதரனே!

எனது இனிமைமிகு நாவின் இதமான வார்த்தைகளைச் செவிமடுப்பாயாக; எனது சர்க்கரைச் சிந்தும் இதழ்களினின்று தோன்றும் மர்மமான புனிதத்தன்மை என்னும் ஓடையிலிருந்து பருகுவாயாக. எனது தெய்வீக விவேகமெனும் விதைகளை உனது தூய உள்ளமெனும் நிலத்தினில் ஊன்றுவாயாக; அவற்றுக்கு உறுதிப்பாடு என்னும் நீரைப் பாய்ச்சுவாயாக; அதனால் எனது அறிவு, விவேகம் என்னும் செந்நீல மலர்கள், மெருகுடனும் பசுமையாகவும், உனது உள்ளமெனும் நகரினில் மலர்ந்திடுமாக.

34

எனது சுவர்க்கத்தின் வாசிகளே!

சுவர்க்கமெனும் தெய்வீகப் பூங்காவில், அன்புப் பரிவு என்னும் கைகளினால், உனது அன்பு, நட்பு, என்னும் மரத்தினை நட்டு, அதன்மீது எனது மென்மைமிகு அருளின் பொழிவைக் கொண்டு நீர் பாய்ச்சியுள்ளேன்; இப்பொழுது, அது காய்க்கும் காலம் வந்து விட்டதால், அது பாதுகாக்கப் படுவதற்காகவும், அது, ஆவல், மனவெழுச்சி ஆகிய தீச்சுடரினால் சுட்டெரிக்கப் படாமல் இருப்பதற்காகவும், கடுமுயற்சி செய்யுங்கள்.

35

எனது நண்பர்களே!

பிழை என்னும் விளக்கினை அணைத்து, உங்களின் உள்ளங்ளில் நிலையான தெய்வீக வழிகாட்டுதல் என்னும் பந்தத்தினை ஏற்றுவீராக. ஏனெனில், இன்னும் சிறிது காலத்தில், மனித இனத்தின் ஆய்வாளர்கள், வழிபடுதற்குரியவரின் புனித முன்னிலையில், தூய்மைமிகு ஒழுக்கப் பண்பினையும், கறைபடியா தெய்வத்தன்மை வாய்ந்த செயலையுந் தவிர மற்றெதனையும் ஏற்க மாட்டார். .

36

புழுதியின் மைந்தனே!

கோப்பை ஏந்தி வருபவர், எவ்வாறு, தேடுபவரைக் காணும் வரை அதனை வழங்க முன்வரமாட்டாரோ, எவ்வாறு, அன்பர் ஒருவர் தன் நேசரின் அழகினை நோக்கிடும்வரை, தனது இதயத்தின் ஆழத்திலிருந்து குரலெழுப்ப மாட்டாரோ, அவ்வாறே விவேகிகள், கேட்க ஒருவர் கிடைத்தாலன்றி, பேசமாட்டார். எனவே, விவேகம், அறிவு என்னும் விதைகளை இதயத்தின் தூய்மை மிக்க நிலத்தினில் ஊன்றி, தெய்வீக விவேகமெனும் செந்நிற மலர், சதுப்பு நிலத்திலும் களிமண்ணிலும் அல்லாது, இதயத்தினில் உதித்திடும் வரை, அதனை மறைத்து வைப்பாயாக.

திருநிருபத்தின் முதல் வரியில் குறிக்கப் பட்டும் எழுதி வைக்கப்பட்டும், இறைவனின் திருக்கூடாரம் என்னும் புகழரணில் மறைத்து வைக்கப்பட்டும் உள்ளன: .

37

எனது ஊழியனே!

அழியக் கூடிய ஒன்றிற்காக நிலையான இராஜ்யத்தையே கைவிடாதே, உலகியல் ஆசைக்காகத் தெய்வீக அரசுரிமையையே வீசி எறிந்திடாதே. இதுவே, கருணைமிக்கோனின் எழுதுகோல் என்னும் கிணற்றூற்றிலிருந்து பெருக்கெடுத்து வந்துள்ள நித்திய வாழ்வெனும் நதி; பருகிடுவோருக்கு அது மிகவும் நன்று.

38

ஆவியின் புத்திரனே!

உனது கூண்டை உடைத்துக் கொண்டு, அன்பெனும் பீனிக்ஸ்ஸைப் போல், தெய்வீகம் எனும் வானில் உயரப் பறப்பாயாக. உன்னையே நீ துறந்து, பின், கருணை என்னும் ஆவியினால் நிரப்பப் பட்டு, தெய்வீகத் தூய்மை என்னும் இராச்சியத்தினில் உறைவாயாக.

39

புழிதியின் சந்ததியே!

விரைந்தோடிடும் ஒரு நாளைய சுகத்தினில் மனநிறைவு பெற்று, அதனால், நீ, என்றும் நிலையான ஓய்வைப் பெறுவதிலிருந்து உன்னையே தடுத்துக் கொள்ளாதே. நித்திய பேரின்பமெனும் பூங்காவினை அநித்திய உலகெனும் இக் குப்பை மேட்டுடன் பண்டமாற்று செய்திடாதே. உனது சிறையினின்று மேலெழுந்து, உயர்விலுள்ள பேரொளி மிகும் பசும்புல் நிலத்தை நோக்கி உயர்வாயாக; இறப்புக்குரிய உனது கூட்டிலிருந்து இடமின்மை என்னும் சுவர்க்கத்தை நோக்கிப் பறப்பாயாக.

40

எனது ஊழியனே!

இவ்வுலகப் பற்றெனும் விலங்குகளிலிருந்து உன்னைக் கட்டறுத்துக் கொண்டு தானெனுஞ் சிறையிலிருந்து உனது ஆன்மாவை விடுவிப்பாயாக. இவ்வாய்ப்பினைப் பற்றிக்கொள்; ஏனெனில், அது, என்றுமே உன்னிடம் திரும்பி வராது.

41

எனது பணிப்பெண்ணின் மைந்தனே!

அழிவற்ற அரசினைப் பார்ப்பாயாகில், விரைந்தோடிடும் இவ்வுலகை விட்டே போய்விட முயற்சிப்பாய். ஆனால், உன்னிடமிருந்து ஒன்றை மறைத்து மற்றொன்றை வெளிப்படுத்துவதன் மர்மத்தினைத் தூய உள்ளங் கொண்டோரைத் தவிர வேறெவராலும் புரிந்திட இயலாது.

42

எனது ஊழியனே!

உனது உள்ளத்தினைக் குரோதமெனும் மாசிலிருந்து தூய்மைப்படுத்திப், பொறாமையற்ற நிலையில், புனிதத் தன்மை என்னும் தெய்வீக அரசவையினுள் பிரவேசிப்பாயாக.

43

எனது நண்பர்களே!

நேசரின் நல்விருப்பத்திற் கேற்ப நடந்திடுவீராக; அவரது படைப்பினங்களின் மகிழ்ச்சியில்தான் அவரின் மகிழ்ச்சி உள்ளதென்பதை அறிவீராக. இதன் பொருள்: எந்த ஒரு மனிதனும் தனது நண்பனின் விருப்பமின்றி அவனது இல்லத்தினில் பிரவேசிக்கலாகாது; அன்றியும், அவனது செல்வத்தைக் கைப்பற்றவும் கூடாது; தனது நண்பனின் விருப்பத்தை விடத் தன் விருப்பத்தையே நாடலாகாது; மேலும், எவ்வகையிலும், அவனுக்கு மேலாக முன்மதிப்பைத் தேடலாகாது. நுண்ணறிவுடையோரே, இதனைச் சிந்தியுங்கள்!

44

எனது அரியாசனத்தின் தோழனே!

தீயதைச் செவிமடுக்காதே, தீயதைக் கண்ணுறாதே, உன்னை இழிவுபடுத்திக் கொள்ளாதே; பெருமூச்சு விடவோ, கண்ணீர் வடிக்கவோ செய்யாதே. தீயதைப் பேசாதே, அதனால், உன்னிடம் அது பேசப் படுவதை நீ, கேட்கத் தேவையிராது; மற்றவரின் குறைகளைப் பெரிது படுத்தாதே; அதனால் உனது குறைகள் பெரிதாகத் தோன்றாதிருக்கக் கூடும்; எவ்வொருவரின் தாழ்வையும் விரும்பாதே; அதனால் உனது தாழ்வு அம்பலமாகாதிருக்கும். எனவே, கறையற்ற மனதுடன், களங்கமற்ற உள்ளத்துடன், தூய சிந்தனையுடன், உனது இயல்பு புனிதமாக்கப் பட்டுக், கண நேரத்திற்குக் குறைவான காலமேயுள்ள உனது வாழ்நாள்களைக் கழிப்பாயாக; அதனால், நீ, சுதந்திரமாகவும் மனநிறைவுடனும், இவ்வநித்திய கூட்டினை அப்பால் வைத்து, மறைபொருளான சுவர்க்கத்தை நாடிச் சென்று, நிலையான இராச்சியத்தினில் என்றென்றும் வாழக்கூடும்.

45

அந்தோ! அந்தோ! உலகியல் ஆசையின் நேசர்களே!

நீங்கள், மின்னல் வேகத்தில் அன்புக்குரியவரைக் கடந்து சென்று, உங்கள் உள்ளங்களைத் தீய கற்பனைகளில் நிலைக்க விட்டுள்ளீர். உங்களின் வீண் கற்பனைக்கு முன்னால் முழங் கால் மண்டியிட்டு அதனையே உண்மை எனக் கூறுகின்றீர். உங்கள் பார்வையை முள்ளின்பால் செலுத்தி, அதனை மலர் என்றழைக்கின்றீர். தூய மூச்சு ஒன்று கூட நீங்கள் விட்டதில்லை; அதோடல்லாது, உங்கள் உள்ளமெனும் புல்வெளிகளிலிருந்து பற்றின்மையெனும் தென்றல் வீசியதும் கிடையாது. அன்புக்குரியவரின் அன்பான அறிவுரைகளைக் காற்றில் பறக்க விட்டு, உங்கள் உள்ளங்கள் என்னும் ஏடுகளிலிருந்து அவற்றை அடியோடு அழித்து விட்டு, நீங்கள், மாக்களைப் போல் நடமாடி, ஆசை, உணர்ச்சி என்னும் புல்தரையினில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளீர்.

46

சேவைப் பாதையில் எனது சகோதரர்களே!

அன்புக்குரியவரின் நாமத்தை உச்சரிப்பதைப் புறக்கணித்து, நீங்கள், அவரது புனித முன்னிலையி-லிருந்து நெடுந்தொலைவில் இருந்திட்டதன் காரணந்தான் யாது? ஒப்பற்ற காட்சிமாடத்தினுள் ஒளி என்னும் அரியாசனத்தின் மீது அழகின் சாரம் அமர்த்தப் பட்டிருக்கும் வேளை, நீங்களோ, வீண் வாதத்தில் ஈடுபட்டிருக்கின்றீர். புனிதமெனும் இனிய நறுமணம் வீசுகின்றது; வள்ளன்மையெனும் மென்காற்று மிதந்து வருகின்றது; இருந்தும் நீங்கள் அனைவரும் கடும் மனவேதனையிலாழ்ந்து, அதனை இழந்து விட்டிருக்கின்றீர். உங்கள் நிலையும், உங்கள் வழியில் நடந்து உங்கள் அடிச் சுவடுகளைப் பின்பற்றுவோரின் நிலையும், அந்தோ, பரிதாபத்திற்குரியது!

47

ஆவலின் குழந்தைகளே!

தற்பெருமை என்னும் உடையினை அப்பால் வைத்து, இறுமாப்பு என்னும் ஆடையினைக் களைந்திடுங்கள்.

செந்நிற நிருபத்தின் அதி திவ்விய வரி மூன்றாவதனில், கண்ணுக்குப் புலப்படாதவரின் எழுதுகோலினால் ஆணையிடப்பட்டு, எழுதிப் பதிவு செய்யப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது இதுவே:

48

சகோதரர்களே!

ஒருவரோடொருவர் பொறுமையாய் இருங்கள்; இழிநிலைப் பொருளினில் பாசம் வைக்காதீர். உங்களின் உயர்வில் பெருமையடையாதீர்; தாழ்விலும் வெட்கமுறாதீர். எனது அழகின் மீது ஆணை! பொருள் அனைத்தையும் யான் புழுதியிலிருந்தே ஆக்கினேன்; புழுதிக்கே யான் அவற்றைத் திருப்பி அனுப்புவேன்.

49

புழுதியின் குழந்தைகளே!

ஏழைகளின் நடுநிசிப் பெருமூச்சினைக் குறித்துச் செல்வந்தர்களிடம் எடுத்துக் கூறுங்கள்; இல்லையெனில், கவனமின்மை அவர்களை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று, செல்வமெனும் விருட்சத்தினை அவர்களிடமிருந்து பறித்திடப் போகின்றது. அளிப்பதுவும் தாராளமாய் இருப்பதுவும் எனது பண்புகளாகும்; எனது பண்புகளினால் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஒருவன் நன்மை பெறுவான். .

50

உணர்ச்சியின் சாராம்சமே!

பேராசைகள் அனைத்தையும் அப்பால் வைத்துவிட்டு, மனநிறைவைத் தேடு; ஏனெனில் பேராசையுடையோர் எப்போதுமே இழப்புக்கு ஆளாகியுள்ளனர்; மனநிறைவுடையோரோ எப்போதும் நேசிக்கப்பட்டும் புகழப்பட்டும் வந்திருக்கின்றனர்.

51

எனது பணிப்பெண்ணின் மைந்தனே!

ஏழ்மையில் குழம்பாதே, செல்வத்தில் நம்பிக்கை வைக்காதே, ஏனெனில் ஏழ்மையைச் செல்வம் தொடரும், செல்வத்தை ஏழ்மைத் தொடரும். மேலும், இறைவனிலல்லாது மற்றதனைத்திலும் ஏழையாயிருத்தல் ஒரு வியத்தகு பரிசு; அதனை அற்பமென எண்ணிடாதே, ஏனெனில், இறுதியில் அது உன்னை இறைவனில் செல்வந்தனாக்கும்; அங்ஙனம், “மெய்யாகவே, நீங்கள்தாம் ஏழைகள்,” என்ற கூற்றின் பொருளை நீ புரிந்து கொள்வதோடு, “இறைவனே சகலத்தையும் கொண்டுள்ளவர்” என்னும் புனித மொழி, உண்மை விடிவெள்ளியைப் போன்று, அன்பரது இதயத்தின் அடிவானத்தில் மகிமைமிகு பிரகாசத்துடன் தோன்றிச் செல்வமெனும் அரியணையின் மீது பாதுகாப்பாய் அமர்ந்திடும்.

52

கவனமின்மை, மனவெழுச்சி ஆகியவற்றின்

குழந்தைகளே! என் பகைவனை என் இல்லத்தில் நுழைய

அனுமதித்து, என் நண்பனை வெளியேற்றியுள்ளீர், ஏனெனில், உங்களின் உள்ளந்தனில் என்னையல்லாது வேறொருவரைக் கோயில் கொள்ளச் செய்துள்ளீர். நேசரின் திருமொழிக்குச் செவிசாய்த்து அவரது சுவர்க்கத்தின்பால் திரும்புவீராக. உலகியல் நண்பர்கள், தங்களின் சொந்த நலனையே நாடி, ஒருவர் மற்றவருடன் அன்புகொள்வது போல் தோன்றுவர்; ஆனால் மெய்யன்பரோ, உங்கள் பொருட்டே உங்களை நேசிக்கின்றார்; உண்மையில் உங்களுக்கு வழி காட்டுவதற்காக அவர், எண்ணற்ற வேதனைகளுக்கு ஆளானார். அத்தகைய நேசரிடம் விசுவாசமில்லாது இருந்திடாதீர்; மாறாக, அவர்பால் விரையுங்கள்.அத்தகையதுதான்நாமங்களுக்கெல்லாம் அதிபதியானவரின் எழுதுகோலெனும் அடிவானத்தில் உதித்துள்ள மெய்ம்மை, விசுவாசம் என்னும் திருச் சொல்லின் விடிவெள்ளி. உங்கள் காதுகளைத் திறப்பீராக; அதனால், நீங்கள், ஆபத்தில் உதவுபவரும் சுயஜீவியானவருமான இறைவனின் திருமொழியினைச் செவிமடுக்கக் கூடும்.

53

அழிந்திடுஞ் செல்வத்தில் உங்களைப் பெருமை படுத்திக் கொள்வோரே!

தேடுபவனுக்கும் தனது ஆவலுக்கும் இடையேயும், அன்பனுக்கும் தனது நேசருக்கும் இடையேயும் செல்வம், உண்மையிலேயே, ஒரு வலிமிகு தடை என்பதை நீங்கள் அறிவீராக; தனவந்தர்கள், சிலரைத் தவிர, மற்றோர், எவ்விதத்திலும் அவரது முன்னிலை என்னும் அரசவையை அடையவோ, மன நிறைவு, கீழ்ப்படிதல் எனும் மாநகரில் பிரவேசிக்கவோ இயலாது. ஒருவர், செல்வந்தராயிருந்தும், தான் நித்திய இராஜ்யத்தினில் பிரவேசிப்பதில் இருந்தோ, நிலையான அரசினை அடைவதிலிருந்தோ, தனது செல்வங்களால் தடுக்கப் படாது இருப்பாராயின், அது அவருக்கு மிகவும் நன்று. அதி உயரிய நாமத்தின்மீது ஆணை! உலக மக்களைச் சூரியன் ஒளிபெறச் செய்வதுபோல் ஒரு செல்வந்தரின் பெருஞ்சிறப்பு விண்ணுலக வாசிகளை ஒளிபெறச் செய்திடும்!

54

உலகின் தனவந்தர்களே!

உங்கள் மத்தியில் உள்ள வறியோர்கள் எனது பொறுப்பு; எனது பொறுப்பைப் பாதுகாப்பதுடன், உங்களின் சொந்த இன்பநலத்தில் மட்டுமே கருத்தாய் இருந்திடாதீர்.

55

மனவெழுச்சியின் மைந்தனே!

செல்வங்களெனும் களங்கத்திலிருந்து உன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, முழு நிறைவான மனவமைதியுடன், ஏழ்மையெனும் இராஜ்யத்தை நோக்கி முன்னேறுவாயாக; அதனால், நீ, பற்றின்மை என்னும் கிணற்றூற்றிலிருந்து நித்திய வாழ்வெனும் மதுரசத்தினைப் பருகக் கூடும்.

56

எனது மைந்தனே!

இறைப் பற்றில்லாதோரின் தோழமை துயரை அதிகரிக்கின்றது, எனினும், நேர்மையாளரின் தோழமையோ உள்ளத்தின் கறையைப் போக்குகின்றது. இறைவனின் தொடர்பை விரும்பும் ஒருவன், அவரது நேசரின் தோழமையை அணுகட்டும்; இறைவனின் திருமொழியைச் செவிமடுக்க விரும்பும் ஒருவன், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டோரின் திருச் சொற்களுக்குச் செவிசாய்க்கட்டும்.

57

புழுதியின் மைந்தனே!

கவனமாயிரு! இறைப் பற்றற்றோருடன் செல்லாதே; அவர்களின் தோழமையையும் நாடாதே, ஏனெனில், அவ்வித நட்பு, உள்ளத்தின் ஒளியை நரகத்தின் நெருப்பாக மாற்றி விடும்.

58

எனது பணிப்பெண்ணின் மைந்தனே!

புனித ஆவியின் அருளை வேண்டினால், நேர்மையாளருடன் தோழமைக் கொள்வாயாக; ஏனெனில், அவர், சிரஞ்சீவியான கோப்பை ஏந்தியின் கரங்களிலுள்ள நித்திய வாழ்வெனும் கோப்பையினின்று பருகியுள்ளார்; அது உண்மை விடிவெள்ளியைப் போல், மாண்டோரின் உள்ளங்களை உயிர்ப்பித்து ஒளிபெறச் செய்யும். .

59

அக்கறையற்றோரே!

இதயங்களின் இரகசியங்கள் மறைக்கப் பட்டுள்ளனவென்று எண்ணிடாதீர்; இல்லை, அவை, தெளிவான எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, புனித முன்னிலையில், வெளிப்படையாகப் புலனாகின்றன என்பதை, நீங்கள், நிச்சயமாக அறிவீராக.

60

நண்பர்களே!

மெய்யாகவே நான் கூறுகின்றேன்; எவற்றையெல்லாம் நீங்கள் உங்கள் உள்ளங்களில் மறைத்து வைத்திருக்கின்றீரோ அவை, எனக்குப் பட்டப் பகல்போல் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாயுள்ளன. ஆனால், அவை மறைக்கப் பட்டிருக்கின்றன என்றால், அது எனது அருள், தயை ஆகியவையினால் அல்லாது உங்களின் தகுதிக்கேற்பவல்ல.

61

மனிதனின் புத்திரனே!

எனது கருணை என்னும் ஆழங்காணவியலாத மாக்கடலிலிருந்து ஒரு பனித்துளி அளவு யான் உலக மக்களின் மீது பொழிந்துள்ளேன்; இருந்தும், அதன்பால் திரும்புகின்றவர் ஒருவரைக் கூட யான் கண்டிலேன்; ஏனெனில், ஒவ்வொருவரும் ஒற்றுமையெனும் தெய்வீக மதுரசத்தினின்று அப்பால் திரும்பி, துர்நாற்றமிக்க மண்டியை நாடி, அநித்திய கோப்பையில் மனநிறைவு பெற்று, நிலையான அழகெனும் கிண்ணத்தை அப்பால் வைத்து விட்டுள்ளனர். அவர் எதனில் மனநிறைவு கொண்டுள்ளாரோ அது மிகவும் கீழ்த்தரமானது.

62

புழுதியின் மைந்தனே!

அழிவற்ற நேசரின் இணையற்ற மதுரசத்திலிருந்து உனது கண்களை அப்பால் திருப்பி, அவற்றை, அருவருப்பான, நிலையற்ற அடி மண்டியின்மீது செலுத்திடாதே. தெய்வீகக் கோப்பை ஏந்தியின் கரங்களிலிருந்து நித்திய வாழ்வெனும் கிண்ணத்தைப் பெற்றுக் கொள்; அதனால், விவேகமனைத்தும் உனதாகக் கூடும்; கண்ணுக்குப் புலனாகா இராஜ்யத்திலிருந்து அழைப்பு விடுத்திடும் மறைபொருளான குரலினையும் செவிமடுக்கக் கூடும். தாழ்வான நோக்கமுடையோரே, உரக்கக் குரலெழுப்புவீராக! எதனால் நீங்கள் எனது புனித, நித்திய, மதுரசத்திலிரந்து அப்பால் திரும்பி, நிலையற்ற நீரின்பால் திரும்பியுள்ளீர்?

63

உலகின் மக்களே!

மெய்யாகவே, எதிர்பாராத பேரிடர் ஒன்று உங்களைப் பின் தொடர்கின்றது என்பதையும், கொடூரமான தண்டனை உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது என்பதையும் அறிவீராக. நீங்கள் ஆற்றிய குற்றச் செயல்கள் எல்லாம் எனது பார்வையிலிருந்து மறைக்கப் பட்டுவிட்டனவென்று எண்ணாதீர். எனது அழகின் மீது ஆணை! எனது எழுதுகோல், உங்கள் செயல்கள் அனைத்தையும், பச்சை மாணிக்கத் தகடுகளின் மீது, தெளிவான எழுத்துக்களினால் பொறித்து வைத்துள்ளது.

64

உலகில் கொடுமை இழைப்போரே!

கொடுங்கோன்மையிலிருந்து உங்களின் கைகளைப் பின்வாங்கச் செய்வீராக; ஏனெனில், நான், எந்த ஒரு மனிதனின் அநீதியையும் மன்னிப்பதில்லை என எனக்கே நான் வாக்களித்துள்ளேன். இதுவே யான் பாதுகாப்பான நிருபத்தினில், மாற்றத்திற்கு இடமில்லாது விதித்து, எனது பேரொளி என்னும் முத்திரையைக் கொண்டு முத்திரையிட்டுள்ள ஒப்பந்தம்.

65

கிளர்ச்சியாளர்களே!

எனது பொறுமை உங்களைத் துணிவு கொள்ளச் செய்துள்ளது; எனது நெடுநாளைய துன்பங்கள் உங்களைக் கவனமற்றோராக்கி விட்டுள்ளன; அதனால், நீங்கள், மனவெழுச்சி என்னும் அடங்காத போர்க்குதிரையினை அழிவுக்குக் கொண்டு செல்லும் ஆபத்தான வழிகளில் செல்லத் தூண்டிவிட்டுள்ளீர். நான் கவனமற்றவர் என்றோ, தெரியாது இருந்து விட்டேன் என்றோ, நீங்கள் எண்ணிக் கொண்டீரா?

66

குடிபெயர்வோரே!

என்னை உச்சரிப்பதற்கெனவே நாவினை அமைத்துள்ளேன்; அவதூறினால் அதனைக் கறைப் படுத்திடாதீர். தான் எனுந் தீ உங்களை வென்றிடுமாயின், எனது உயிரினங்களின் குறைகளையல்லாது உங்களின் குறைகளையே நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்; ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை அறிந்து கொள்வதைவிடத் தன்னைத்தானே நன்கு அறிந்திருக்கின்றீர்.

67

கற்பனையின் குழந்தைகளே!

மெய்யாகவே, ஒளிமயமான விடிவெள்ளி, நித்திய தெய்வீகமெனும் தொடுவானத்தில் தோன்றிடும் பொழுது, கொடிய இரகசியங்களும், இரவின் இருளில் ஆற்றிட்டச் செயல்களும், வெளிக் கொணரப்பட்டு உலக மக்களின்முன் வெளிப்படையாகக் காட்டப்படும் என்பதை அறிவீராக.

68

புழுதியில் விளைந்திடும் களையே!

உனது கறைபடிந்த இக்கரங்கள், எதனால், முதலில் உனது சொந்த ஆடையினைத் தொடுவதில்லை; எதனால் நீ, ஆசை, மனவெழுச்சி ஆகியவற்றினால் கறைப்படுத்தப் பட்ட உள்ளத்துடன் என்னுடன் தொடர்புறவு கொள்ளவும், எனது தெய்வீக இராஜ்யத்தினுள் பிரவேசிக்கவும் முயல்கின்றாய்? நீ எதனை விரும்புகின்றாயோ அதிலிருந்து வெகு தூரத்தில் இருக்கின்றாய்.

69

ஆதாமின் குழந்தைகளே!

புனித சொற்களும் தூய நற்செயல்களும் தெய்வீகப் பேரொளி என்னும் விண்ணுலகின்பால் உயர்ந்திடும். முயற்சியுங்கள்; அதனால், உங்கள் செயல்கள், தானெனுந் தன்மை, போலித்தனம் ஆகிய புழுதியிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டுப், பேரொளி என்னும் அரசவையினில் ஒப்புதல் பெறக் கூடும்; ஏனெனில் விரைவிலேயே, மனித இனத்தின் ஆய்வாளர்கள், நேசரின் முன்னிலையில், மனிதர்களின் பூரணமான நல்லொழுக்கங்கள், கறையற்ற தூயச் செயல்கள் ஆகியவற்றைத் தவிர மற்றெதனையும் அங்கீகரித்திடார். இதுவே தெய்வீக விருப்பம் என்னும் அடிவானத்தில் தோன்றியுள்ள விவேகம் என்னும் பகல் நட்சத்திரமும், தெய்வீக இரகசியமும் ஆகும். அதன்பால் திரும்புவோர் ஆசி பெற்றோராவர்.

70

உலகப்பற்றின் மைந்தனே!

நீ அதனை அடையக் கூடுமாயின், உயிருருவின் இராஜ்யம் மகிழ்ச்சிமிக்கதாகும்; அநித்திய உலகினைக் கடந்து நீ, அப்பால் செல்வாயாகில், நித்திய இராஜ்யம் வெகு உன்னதமானதாகும். இவ்வானுலக இளைஞரின் கரங்களினின்று, மறைபொருளான கிண்ணத்திலிருந்து பருகுவாயாகில், அத் தெய்வீகப் பரவசம் இனிமையானதாகும். நீ, இந்நிலையை அடையக் கூடுமாயின், அழிவு, மரணம் ஆகியவற்றிலிருந்தும் கடும் உழைப்பிலிருந்தும் பாபத்திலிருந்தும் விடுதலை பெறுவாய்.

71

எனது நண்பர்களே!

சமான்* என்னும் திருத்தளத்தினுள் நிறுவப் பட்டுள்ள பரான்** என்னும் மலையின் மீது நீங்கள் என்னுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள். மேலுலகக் கூட்டத்தினரையும் நித்தியமெனும் மாநகரின் வாசிகளையும் யான் இதற்குச் சாட்சியாகக் கொண்டுள்ளேன்; இருந்தும், இப்பொழுது, அவ்வொப்பந்தத்தில் விசுவாசம் கொண்டோர் எவரையும் யான் காண்கிலேன். நிச்சயமாக, செருக்கும் புரட்சியும் அதனை அவர்களின் உள்ளங்களில் இருந்து உருத்தெரியாது துடைத்தழித்து விட்டுள்ளன. இதனைத் தெரிந்திருந்தும், யான், காத்திருந்தேன்; அதனைப் பகிரங்கப்படுத்தவில்லை. .

*சமான்: தெய்வீக உலகங்களுக்கு முடிவே கிடையாதெனினும் பொதுவாக அவை நான்கு எனக் கூறுவது வழக்கம். அவற்றில் முதலாவது சமான் (காலங்களால் ஆன உலகம்) என்பதாகும். இது ஊழ்வினை அல்லது விதியைக் குறிக்கும்.இது முதலும் முடிவும் உடையது... (ஙிணீலீஊ’u’றீறீஊலீ, ஜிலீமீ ஷிமீஸ்மீஸீ க்ஷிணீறீறீமீஹ்s, ஜீ. 25)

**பரான்: அரேபியாவிலுள்ள ஒரு மலை. பரானின் வனாந்திரப் பகுதி ஜோர்டானின் மறுபகுதியில் உள்ளது. பரான் மலை பைபிலிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. பரான் பஹாவுல்லாவின் ஒப்பந்தத்தைக் குறிப்பிடுகிறது என அப்துல்-பஹா கூறுகின்றார்.

(கிபீவீதீ ஜிணீலீமீக்ஷீக்ஷ்ணீபீமீலீ, “ஜிலீமீ சிஷீஸ்மீஸீணீஸீt ஷீயீ ஙிணீலீஊ’u’றீறீஊலீ” ஜீ. 408).

72

எனது ஊழியனே!

நீ, மென்மையாகச் செப்பனிடப்பட்டு, அதன் உறையின் இருளில் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள வாளைப் போன்றவன். அதன் மதிப்பு கைவினைஞனின் அறிவுக்கும் புலப்படாததாகும். ஆகவே , பற்று, ஆவல் ஆகியவற்றின் உறையினின்று வெளிவருவாயாக; அதனால், உனது மதிப்புப் பிரகாசமடைந்து, உலகனைத்திற்கும் தெளிவாக வெளிப்படுத்தப்படக் கூடும்.

73

எனது நண்பனே!

நீயே எனது புனிதத் தன்மையெனும் விண்ணுலகங்களுக்குப் பகல் நட்சத்திரம்; உலகின் தூய்மைக்கேடு உனது பிரகாசத்தினை மங்கச் செய்திடாது பார்த்துக்கொள். கவனமின்மை என்னும் திரையினைக் கிழித்தெறிவாயாக; அதனால் நீ, மேகங்களுக்குப் பின்னால் இருந்து, பிரகாசத்துடன் வெளிவந்து, எல்லாப் பொருள்களுக்கும் உயிர் என்னும் ஆடையினை அணிவிக்கக் கூடும்.

74

தற்பெருமையின் குழந்தைகளே!

விரைந்தோடிடும் ஓர் அரசுக்காக எனது அழிவில்லா இராஜ்யத்தினைக் கைவிட்டு, இவ்வுலகின் பகட்டான பணியாடையினால் உங்களை அலங்கரித்துக் கொண்டீர்; அதனில் தற்பெருமையும் அடைந்தீர். எனது அழகின் மீது ஆணை! நான் அனைவரையும் ஒரே நிற மண் போர்வையின் கீழ் ஒன்றுதிரட்டி, எனக்குச் சொந்தமானதைத் தேர்ந்தெடுப்போரைத் தவிர, மற்ற வெவ்வேறான நிறங்களனைத்தையும் துடைத்தழித்திடுவேன்; அதன் பொருள்: சகல நிறங்களிலிருந்தும் தூய்மைப்படுத்துதலாகும். .

75

அக்கறையின்மையின் குழந்தைகளே!

அநித்திய இராஜ்யத்தின் மீது உங்களின் பாசங்களை வைத்திடாதீர்; அதனில் மகிழ்வுறவும் செய்யாதீர். மரணம் என்னும் வேடன் திடீரென அதனை மண்ணில் வீழ்த்திடும் வரை, எச்சரிக்கை இன்றி, முழு நம்பிக்கையுடன், கிளையின் மீது பாடிடும் பறவையைப் போன்றவர்கள் நீங்கள்; இன்னிசையும், அமைப்பும், நிறமும், அறிகுறி எதுவுமே விடாது மறைந்து போகின்றன. ஆகையால், ஆவலின் அடிமைகளே, கவனங் கொள்வீராக!

76

எனது பணிப் பெண்ணின் மைந்தனே!

எப்பொழுதுமே வழிகாட்டுதல் சொற்களின் மூலமாகவே கொடுக்கப்பட்டு வந்துள்ளது; இப்பொழுதோ, அது, செயலின் மூலமாகக் கொடுக்கப் படுகின்றது. ஒவ்வொருவரும், தூய்மைமிகு, தெய்வீகச் செயலையே வெளிப்படுத்த வேண்டும், ஏனெனில் சொற்கள் எல்லாருக்கும் பொதுச் சொத்து; ஆனால் இதுபோன்ற செயல்களோ எமது நேசர்களுக்கு மட்டுமே உரியவையாகும். உங்களின் செயல்களின் மூலமாக உங்களை மேம்படுத்திக் காட்டுவதற்கு மனத்தாலும் ஆன்மாவினாலும் கடுமுயற்சி செய்யுங்கள். இவ்வாறாகத்தான் யாம் உங்களுக்கு இத்தெய்வீக, பிரகாசமிக்க நிருபத்தினில், அறிவுரை பகர்கின்றோம். .

77

நீதியின் மைந்தனே!

அழிவற்ற மெய்யுருவானவரின் அழகு, இராக்காலங்களில், விசுவாசம் என்னும் மரகத உச்சத்திலிருந்து வெளிவந்து, ஸட்ராத்-உல்முந்தஹாவைச்* சென்றடைந்தார்; அவரின் புலம்பல் அந்தளவு இருந்ததால், மேலுலகக் கூட்டத்தினரும் வானுலக வாசிகளும், அவர் புலம்பலைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறினர். அதன்பேரில், அக் கதறலும் அழுகையும் எதற்காக? என கேட்கப்பட்டது. அவர் பதிலளித்தார்: கட்டளையிடப்பட்டதற்கேற்ப நான், விசுவாசமெனும் மலையின்மீது எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன்; இருந்தும், உலகில் வாழும் அவர்களிடமிருந்து, மெய்ப்பற்றெனும் நறுமணத்தினை முகர்ந்தேனில்லை. பின்னர், திரும்பி வருமாறு ஆணையிடப்பட்டது; அப்பொழுது யான் பார்த்தது, அந்தோ! சில தெய்வீகப் புறாக்கள், உலக நாய்களின் பிடியில் சிக்கிச் சோர்வுற்றுக் கிடந்தன. அதன் விளைவாக, விண்ணுலகக் கன்னி, மறைபொருளான தெய்வீக மாளிகையினின்று, முகத்திரையை விலக்கிக் கொண்டு, ஒளிமயமாக விரைந்து வெளிப்பட்டு, அவர்களின் பெயர்கள் யாவை என வினவினாள்; ஒரே ஒரு பெயரைத் தவிர மற்றவையெல்லாம் கூறப்பட்டன. பிறகு, தூண்டப்பட்டபொழுது, அதன் முதல் எழுத்து உச்சரிக்கப்பட்டது; உடனே, தெய்வீக மண்டபத்தின் வாசிகள் தங்களின் ஒளிமயமான உறைவிடத்தை விட்டு வேகமாய் வெளிவந்தனர். அதன் இரண்டாம் எழுத்து உச்சரிக்கப்படும்பொழுது, அவர்கள் அனைவரும், ஒருங்கே, மண்ணில் சாய்ந்தனர். அக் கணம், அதி உள்ளார்ந்த புனித ஸ்தலத்தினின்று இவ்வாறு குரல் கேட்டது: “போதும், அவ்வளவு தூரம், அதற்கு மேல் வேண்டாம்.” அவர்கள் செய்ததற்கும் இப்பொழுது செய்வதற்கும், யாம், மெய்யாகவே, சாட்சியம் அளிக்கின்றோம்.

*ஸட்ராத்-உல்-முந்தஹா -(அரபு மொழி) -“கடந்து சென்றிடவியலா விருட்சம்” எனப் பொருள்படும். பழங் காலத்தில் அரேபிய தேசத்தில் சாலையின் வரம்பை, அல்லது இறுதிக் கட்டத்தைக் குறிப்பதற்காக நடப் படும் மரம். பஹாய் சமய வாசகங்களில் இது பஹாவுல்லாவைக் குறிப்பதாகும். இறைவனைத் தேடி அலைவோர் சென்றடையும் இலக்கு பஹாவுல்லாவே.

78

எனது பணிப்பெண்ணின் மைந்தனே!

இரக்கமுடையோனின் நாவினின்றுப் பீ றிட்டெழும் தெய்வீக மறைபொருள் என்னும் நீரோடையிலிருந்து பருகி, தெய்வீக உரை என்னும் பகல் நட்சத்திரத்தினது விவேகத்தின் திரை விலக்கப்பட்ட பிரகாசத்தினைக் கண்ணுறுவாயாக. தெய்வீக விவேகமெனும் எனது விதைகளை இதயமெனும் தூய்மையான நிலத்தில் ஊன்றி, அவற்றுக்கு மெய்யுறுதி என்னும் நீரைப் பாய்ச்சுவாயாக; அதனால், உள்ளமெனும் புனித மாநகரிலிருந்து அறிவு, விவேகம் எனும் செந்நீல நிற மலர்கள் செழிப்பாகவும், பசுமையாகவும் தோன்றிடக் கூடும். .

79

ஆவலின் புத்திரனே!

எவ்வளவு காலந்தான், நீ, ஆவல் என்னும் வானில் பறக்கப் போகின்றாய்? நீ, சாத்தானுக்குரிய* பயனற்ற கற்பனை உலகிற்கல்லாது, தெய்வீக மர்மம் எனும் இராஜ்யத்தை நோக்கிப் பறப்பதற்காத்தான் உனக்கு இறக்கைகளைக் கொடுத்துள்ளேன். நீ, எனது கருநிறக் கூந்தலை வாருவதற்காகத்தான் நான் உனக்குச் சீப்பையும் கொடுத்திருக்கின்றேனே அல்லாது எனது குரல்வளையை அறுப்பதற்காக அல்ல.

*சாத்தான்: பேய்-இறைவனுக்கு எதிராக இயங்கிடும் தீய சக்தி. மனித மனதினில் தீய சக்தியின் தூண்டுதலைச் சாத்தான் எனக் கூறுவது வழக்கம்.

80

எனது ஊழியர்களே!

நீங்கள் எனது தோட்டத்தின் மரங்கள்; நீங்கள் நேர்த்தியான, வியத்தகு கனிகளைக் கொடுக்க வேண்டும்; அதனால் நீங்களும் மற்றவர்களும் அதிலிருந்து பலன் பெறக் கூடும். எனவே, அனைவரும் கைத்தொழில்களிலும், வாழ்க்கைத் தொழில்களிலும் ஈடுபடவேண்டியது கடமையாகின்றது; அறிவாற்றலுடைய மனிதர்களே! அதனில்தான் செல்வத்தின் இரகசியம் அடங்கியிருக்கின்றது! பலன், வழிவகைகளையே சார்ந்திருக்கின்றது; இறைவனின் அருளே உங்களுக்குப் போதுமானது. கனி கொடுக்காத மரங்கள் தீக்குத்தான் உபயோமாகி வந்திருக்கின்றன; என்றென்றும் அவ்வாறே இருந்தும் வரும். .

81

எனது ஊழியனே!

மண்ணுலகில், மனிதர்களுள் கனி கொடுக்காதவர்கள்தாம் மிகக் கீழ்த்தரமானவர்கள். அப்படிப் பட்டவர்கள், மெய்யாகவே, மாண்டவர்களாகக் கணிக்கப் படுவர்; இல்லை , இறைவனின் பார்வையில் சோம்பியிருப்போரையும் பயனற்றோரையும் விட இறந்தோரே மேல். .

82

எனது ஊழியனே!

வாழ்க்கைத் தொழிலின் மூலம் ஜீவியம் தேடி,

உலகங்களுக்கெல்லாம் பிரபுவாகிய இறைவன்பால் கொண்ட அன்பின் பொருட்டு, அதனைத், தங்களுக்காகவும் தங்களின் உறவினருக்கும் செலவு செய்பவர்கள் மனிதர்களுள் மிகச் சிறந்தவர்கள். .

இதற்குமுன், மொழி என்னும் திரையின்கீழ் மறைக்கப்பட்டிருந்த மறைபொருளான வியத்தகு மணமகள், இப்பொழுது, இறைவனின் அருளினாலும் அவரது தெய்வீகத் தயையினாலும், நேசரது அழகினால் பரப்பப்படும் பிரகாசமிகு ஒளியைப் போன்று, தெளிவாக வெளிப்பட்டுள்ளாள். தயை முழுமை பெற்றுவிட்டது; வாதம் முடிவு பெற்று விட்டது; ஆதாரம் பூர்த்தியடைந்துவிட்டது; சான்று ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கின்றேன்! இப்பொழுது, பற்றின்மை என்னும் பாதையில் உங்களது முயற்சிகள் வெளிப்படுத்தப் போகின்றவை யாவை என தெளிவாகட்டும். இவ்வாறாகத்தான் உங்கள்பாலும், விண்ணிலும் மண்ணிலும் உள்ளோரின்பாலும், தெய்வீகத் தயை முழுமையாக உறுதிபடுத்தப்பட்டிருக்கின்றது. உலகங்களுக்கெல்லாம் அதிபதியாகிய இறைவனுக்கே புகழ் அனைத்தும் உரியதாகட்டும்..

Bahá'u'lláh

Windows / Mac