The Universal House of Justice
Ridván 2024
To the Bahá’ís of the World
Dearly loved Friends,
பேராற்றல் வாய்ந்த ஒன்பது ஆண்டு பெருமுயற்சியில் இரண்டு ஆண்டுகள் விரைவாகக் கடந்துவிட்டன. கடவுளின் நண்பர்கள் இப்பெருந்திட்டத்தின் குறிக்கோள்களைத் திடமாக இதயத்தில் உள்வாங்கிக் கொண்டுள்ளனர். பஹாய் உலகம் முழுவதும் சமூக நிர்மாணிப்பு செயல்முறையை மேலும் விரிவுபடுத்தவும் ஆழமான சமுதாய தன்மைமாற்றத்தை ஏற்படுத்தவும் என்ன தேவை என்பது குறித்த புரிதலின் ஆழம் அதிகரித்துள்ளது. ஆனாலும், கடந்திடும் ஒவ்வொரு நாளிலும், உலகின் நிலைமை மிகவும் நம்பிக்கையின்மைக்கு ஆளாவதையும், அதன் பிளவுகள் மேலும் கடுமையாவதையும் நாம் காண்கின்றோம். சமுதாயங்களுக்குள்ளும் நாடுகளுக்கு இடையிலும் அதிகரித்து வரும் பதட்டங்கள் மக்களையும் இடங்களையும் எண்ணற்ற வழிகளில் பாதிக்கின்றன.
இது ஒவ்வொரு மனசாட்சி மிக்க ஆன்மாவிடமிருந்தும் ஒரு பதிலிறுப்பைக் கோருகின்றது. அதிபெரும் நாமத்தின் சமூகம் சமுதாயத்தின் போராட்டங்களினால் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது என்பதை நாம் நன்கறிவோம். ஆயினும், அது இந்தப் போராட்டங்களினால் பாதிக்கப்பட்டாலும், அவற்றால் அது குழப்பம் அடைவதில்லை; அது மானிடத்தின் துன்பங்களால் கவலையுற்றாலும், அவற்றால் அது முடங்கிவிடுவதில்லை. விரக்திக்குப் பதிலாக ஆர்வநம்பிக்கையையும், முரண்பாட்டிற்குப் பதிலாக ஒற்றுமையையும் வழங்கிடும் சமூகங்களை நிர்மாணிப்பதற்கான நிலையான முயற்சியை இதயபூர்வமான அக்கறை தூண்டிட வேண்டும்.
ஷோகி எஃபென்டி, “மனித விவகாரங்களில் படிப்படியான சீர்குலைவை” ஏற்படுத்தும் ஒரு செயல்முறை, மற்றோர் செயல்முறையான ஒருங்கிணைக்கும் செயல்முறைக்கு இணைவாக நிகழ்கின்றது எனவும், இந்த ஒருங்கிணைக்கும் செயல்முறையின் மூலம் சமுதாயத்தின் "இறுதிப் புகலிடமாக" விளங்கும் "மானிட இரட்சிப்பு என்னும் (மரக்)கலம்" கட்டமைக்கப்பட்டு வருகின்றது எனவும் தெளிவாக விவரித்துள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் மண்டலத்திலும், அமைதியை உண்மையாகக் கடைப்பிடிப்போர் இந்தப் புகலிடத்தை நிர்மாணிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். கடவுள் அன்பினால் தூண்டப்பட்டுள்ள ஓர் இதயம், புதிய நண்பர்களுக்காக தனது இல்லத்தைத் திறந்திடும் ஒரு குடும்பம், ஒரு சமுதாயப் பிரச்சினைக்குத் தீர்வு காண பஹாவுல்லாவின் போதனைகளைப் பயன்படுத்திடும் உடனுழைப்பாளர்கள், பரஸ்பர ஆதரவு குறித்த ஒரு கலாச்சாரத்தை வலுப்படுத்தும் ஒரு சமூகம், தனது சொந்த ஆன்மீக மற்றும் லௌகீக மேம்பாட்டிற்கு அவசியமான செயல்பாடுகளை ஆரம்பிக்கவும் நிலைநிறுத்தவும் கற்றுவரும் ஓர் அண்டைப்புறம் அல்லது கிராமம், ஒரு புதிய ஆன்மீக சபையின் தோற்றத்தினால் ஆசீர்வதிக்கப்படும் ஓர் உள்ளூர் ஆகியவற்றைப் போன்ற ஒவ்வோர் விவர அறிக்கையிலும் நாங்கள் இதைக் காண்கின்றோம்.
பெருந்திட்டத்தின் வழிமுறைகளும் கருவிகளும் ஒவ்வோர் ஆன்மாவையும் இந்த நாளில் மானிடத்திற்குத் தேவையானவற்றில் ஒரு பங்கை வழங்கிட அனுமதிக்கின்றன. இத்தருணத்தின் நோய்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணத்தை வழங்குவதற்கு மாறாக, பெருந்திட்டத்தின் அமலாக்கமே, ஒவ்வொரு சமுதாயத்திலும், பல தலைமுறைகளாக மடிப்பவிழவிருக்கும், நீண்டகால ஆக்ககரமான செயல்முறைகளை இயக்கம் காண செய்வதற்கான வழிவகையாகும். இவை யாவும் ஓர் அவரசமான தவிர்க்கவியலா முடிவைச் சுட்டிக்காட்டுகின்றன: இப்பணியின் வெற்றிக்குத் தங்கள் நேரம், தங்கள் சக்தி, தங்கள் கவனக்குவிப்பு ஆகியவற்றை அர்ப்பணிப்போரின் எண்ணிக்கையில் ஒரு தொடர்ச்சியானதும் விரைவானதுமான அதிகரிப்பு இருக்க வேண்டும்.
மனிதகுல ஒருமை குறித்த பஹாவுல்லாவின் கோட்பாட்டைத் தவிர, இவ்வுலகமானது அதன் பல்வேறு கூறுகள் அனைத்தையும் ஒற்றுமைப்படுத்துவதற்கு ஒரு போதுமான பரந்த தொலைநோக்கை வேறெங்குதான் காண முடியும்? அந்தத் தொலைநோக்கை வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடிப்படையில் அமைந்த ஓர் ஒழுங்கமைப்பாக நிலைமாற்றுவதன் மூலம் அன்றி, உலகம் தன்னைப் பிளவுபடுத்தும் சமூகப் பிரிவினைகளை வேறு எவ்வாறுதான் குணப்படுத்த முடியும்? உலக மக்கள் ஒரு புதிய வாழ்க்கை முறையை, நீடித்த அமைதிக்கான பாதையைக் காண்பதற்கான புரையூட்டியாக வேறு யார்தான் இருக்க முடியும்? ஆதலால், நட்பு, பொதுவான முயற்சி, பகிரப்பட்ட சேவை, கூட்டுக் கற்றல் மற்றும் ஒன்றாக முன்னேறுதல் என்னும் கரத்தை அனைவருக்கும் நீட்டுங்கள்.
எந்தவொரு சமுதாயத்திலும் அதன் இளைஞர்கள் பஹாவுல்லாவின் தொலைநோக்கின்பால் விழிப்படைந்து பெருந்திட்டத்தின் முன்னணியாளர்களாக மாறுவதன் மூலம் எவ்வளவு துடிப்பும் வலிமையும் உருவாக்கப்படுகிறது என்பதை நாங்கள் அறிவோம். எனவே, எத்துனை அளப்பரிய கருணையுடனும், தைரியத்துடனும், கடவுளின் மீது முழுமையான நம்பிக்கையுடனும் பஹாய் இளைஞர்கள் தங்கள் சகாக்களைச் சென்றடைந்து அவர்களை இந்தப் பணிக்குள் கொண்டு வர உறுதியேற்க வேண்டும்! எல்லாரும் விரைந்து எழுந்திட வேண்டும் ஆனால் இளைஞர்கள் உயரப் பறந்திட வேண்டும்.
இந்த நேரத்தின் அவசரநிலை, சேவையினால் ஏற்படும் விசேட மகிழ்ச்சியை மறைத்திடக்கூடாது. சேவைக்கான அறைகூவல், ஓர் உற்சாகமூட்டும், யாவற்றையும் தழுவிடும் அழைப்பாணையாகும். அது ஒவ்வொரு விசுவாசமிக்க ஆன்மாவையும் அழைக்கின்றது, கவலைகள், கடப்பாடுகள் என்னும் சுமைகளைத் தாங்குவோரையும் சேர்த்து. அந்த விசுவாசமான ஆன்மாவின் எல்லா வகையான ஈடுபாடுகளிலும், ஓர் ஆழப் பதிந்துள்ள பக்தியும், மற்றவர்களின் நல்வாழ்வுக்கான வாழ்நாள் முழுதுமான அக்கறையும் காணப்படும். இத்தகைய பண்புகள் பன்முகமான தேவைகள் நிறைந்த வாழ்க்கைக்கு ஒத்திசைவைக் கொடுக்கின்றன. எந்த ஓர் உத்வேகம் பெற்ற இதயத்திற்கும், ஆன்மீக ஊட்டம் தேவைப்படும் ஒரு சமுதாயத்தைக் கவனிப்பதற்காகத் தனது ஆன்மீக சகோதரிகளுடனும் சகோதரர்களுடன் செலவழிக்கும் நேரமே மிகவும் இனிமையான நேரமாகும்.
புனித சன்னதிகளில், நிரம்பி வழியும் இதயங்களுடன், உங்களை உருவாக்கி, அவரது வழிகளில் உங்களைப் பயிற்றுவித்ததற்காக நாங்கள் பஹாவுல்லாவுக்கு நன்றி செலுத்தி, அவரது ஆசீர்வாதத்தை உங்களுக்கு அனுப்புமாறு அவரை வேண்டுகின்றோம்.
- The Universal House of Justice