The Universal House of Justice
Ridván 2022
To the Bahá’ís of the World
Dearly loved Friends,
அப்துல்-பஹா விண்ணேற்றத்தின் நூற்றாண்டு நினைவேந்தலைக் குறிப்பதற்கும் புனித நிலத்தில் அவருக்கு மரியாதை செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு விசேஷ நிகழ்வில் பங்கு பெறுவதற்காகப் பிரதிநிதிகளை அனுப்புதல் உட்பட, உலகெங்கிலும் உள்ள நண்பர்களின் முயற்சிகளால் தனிச்சிறப்புற்ற தயாரிப்பும் பிரதிபலிப்பும், அத்துடன் பெரும் உழைப்பும் நிறைந்த ஒரு வருடகாலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த முயல்வுகளின் மூலம், அப்துல்-பஹாவின் வாழ்க்கை வழங்கியுள்ள உத்வேகம், பஹாய்கள் மட்டுமின்றி, எண்ணற்ற ஆன்மாக்களினால் உணரப்பட்டது. மனித குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்குமான அவரது அக்கறை, அவரது போதித்தல் பணி, கல்வி மற்றும் சமூக நல்வாழ்விற்கான நடவடிக்கைகளை அவர் ஊக்குவித்தது, கிழக்கிலும் மேற்கிலும் சொல்லாடல்களுக்கான அவரது ஆழ்ந்த பங்களிப்புகள், வழிபாட்டு இல்லங்களின் நிர்மாணிப்புத் திட்டங்களை அவர் உளமாற ஊக்குவித்தது, பஹாய் நிர்வாகத்தின் ஆரம்ப முறைகளை அவர் வடிவமைத்தது, சமூக வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை அவர் பேணியது—அவரது வாழ்க்கையின் இந்த நிரப்பமளிக்கும் (complementary) அம்சங்கள் யாவும் கடவுளுக்கும் மானிடத்திற்கும் சேவை செய்தலில் அவரது நிலையான மற்றும் பூரணமான அர்ப்பணத்தின் பிரதிபலிப்பாக இருந்தன. தார்மீக அதிகாரம், ஆன்மீக அகப்பார்வை ஆகியவற்றின் ஓர் விண்ணுயர்ந்த ஆளுமையாக இருப்பதற்கும் அப்பாற்பட்டு, பஹாவுல்லாவினால் விடுவிக்கப்பட்ட ஆற்றல்கள் உலகின் மீது தாக்கம் செலுத்துவதற்கான ஒரு தூய வாய்க்காலாகவும் அப்துல்-பஹா விளங்கினார். சமயம் பெற்றுள்ள சமுதாய நிர்மாணிப்புச் சக்தியைப் புரிந்துகொள்வதற்கு அப்துல்-பஹாவின் பணிக்காலத்தின் சாதனைகள், அவரது எழுதுகோலிலிந்து அயராமல் வழிந்து வந்த வழிகாட்டலின் தன்மைமாற்றும் விளைவுகள் ஆகியவற்றுக்கும் அப்பால் ஒருவர் வேறு எதையும் பார்க்க வேண்டியதில்லை. எங்களின் கடந்த ரித்வான் செய்தியில் ஆய்வு செய்யப்பட்ட—இன்றைய பஹாய் சமூகத்தினால் அடையப்பட்டுள்ள—பல அற்புதமான முன்னேற்றங்கள், அப்துல்-பஹாவின் செயல்கள், தீர்மானங்கள், வழிகாட்டல்கள் ஆகியவற்றில் அவற்றின் தோற்றத்தைக் காண்கின்றன.
ஆதலால், அதன் பூரண உதாரண புருஷருக்கான பஹாய் சமூகத்தின் கூட்டுப் புகழுரை, மேன்மேலும் அதிக அளவில் சமயத்தின் சமுதாய நிர்மாணிப்பு சக்தியின் விடுவிப்பின் மீது கூர்கவனம் செலுத்துகின்ற ஒரு மகத்தான பணியின் ஆரம்பத்திற்கான முன்னுரையாக அமைவது எவ்வளவு பொருத்தமானது. ஒன்பது ஆண்டுத் திட்டத்தின் வரம்பிற்குள் வரும் நடவடிக்கைத் துறைகளும் தற்போதைய பெருந்திட்ட வரிசைகளும் இந்தப் பிரதான குறிக்கோளின் நிறைவேற்றத்தை நோக்கியே வழிநடத்தப்படுகின்றன. அதுவே, இந்த மகத்தான ஆன்மீக மாமுயற்சியின் ஆரம்பத்தைக் குறிக்கும் உலகளாவிய நிலையில் நடைபெறும் 10,000-க்கும் அதிகமான மாநாடுகளின் கூர்கவனமும் ஆகும். முன் கண்டிராத எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை வரவேற்கும் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த மாநாடுகள், பஹாய்களை மட்டுமின்றி ஒற்றுமையைப் பேணவும் உலகைச் சீர்த்திருத்துவதற்குமான அதே ஆவலை அவர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ள மானிடத்தின் பிற நலம்-விரும்பிகளையும் ஒன்றுதிரட்டிடும். அவர்களின் மனவுறுதியும் வலுவான நோக்கமும் ஏற்கனவே நிகழ்ந்துள்ள ஒன்றுகூடல்களில் உருவாக்கப்பட்ட உத்வேகத்தில் பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஒன்றுகூடல்களில், அவர்கள் பங்களித்துள்ள இயலாற்றல்மிக்க கலந்தாலோசனைகளால் மட்டுமின்றி அந்த மகிழ்ச்சி பொங்கும் நிகழ்வுகளில் ஆராயப்பட்ட கூட்டுத் தொலைநோக்கினாலும் அவர்கள் உயிர்பூட்டப்பட்டுள்ளனர். எதிர்வரும் மாதங்களும் வருடங்களும் என்ன கொண்டுவரவிருக்கின்றன என்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றோம்.
ஆலோசகர்கள் மாநாட்டுக்கு 30 டிசம்பர் 2021 என தேதியிட்ட செய்தியை நாங்கள் வழங்கியதிலிருந்து, தேசிய ஆன்மீக சபைகளும் மண்டல பஹாய் பேரவைகளும் ஒன்பது ஆண்டுத் திட்டத்தின் போது தங்கள் அதிகாரத்தின் கீழ் வரும் கிளஸ்டர்களில் வளர்ச்சி செயல்முறையைத் தீவிரப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆர்வத்துடன் மதிப்பீடு செய்து வருகின்றன. காலப்போக்கில் அடையப்படும் முன்னேற்றத்தை மதிப்பிடும் நோக்கத்திற்காக, பெருந்திட்டம் நான்கு மற்றும் ஐந்து ஆண்டுகள் கொண்ட இரண்டு கட்டங்களில் மடிப்பவிழக் காண்பது உதவியாக இருக்கும் என நாங்கள் கருதுவதுடன், தேசிய ஆன்மீக சபைகள், ரித்வான் 2026-க்குள்ளும் பின்னர் ரித்வான 2031-க்குள்ளும் தாங்கள் காண விரும்பும் மேம்பாடுகளைப் பரிசீலிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது கிளஸ்டர்களின் எல்லைகளை மறு மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியிருந்ததுடன், இந்த சரிபடுத்தல்களின் விளைவாக உலகின் மொத்த கிளஸ்டர்களின் எண்ணிக்கையில் கால் பங்கு அதிகரிப்பு கண்டு இப்போது 22,000-ற்கும் அதிகமாக உள்ளது. பெறப்பட்டுள்ள முன் மதிப்பீடுகளை வைத்துப் பார்க்கும்போது இப்பெருந்திட்டத்தின் இறுதிக்குள் இந்த கிளஸ்டர்களில் 14,000-த்தில் ஏதாவது அளவிலான மேம்பாட்டில் ஒரு வளர்ச்சித் திட்டம் நடைமுறையில் இருக்கும் என மதிப்பிடப்படுகின்றது. அதே காலகட்டத்தில், அந்தக் கிளஸ்டர்களுக்கிடையில், தீவிரமானவை என கருதப்படக்கூடிய வளர்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை 11,000-மாக உயரும் என மதிப்பிடப்படுகின்றது. இவற்றில், மூன்றாவது மைல்கல் கடக்கப்பட்டுள்ள கிளஸ்டர்களின் எண்ணிக்கை வருடம் 2031-க்குள் 5000-க்கும் அதிகமாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கேள்விக்கிடமின்றி, இத்தகைய மேம்பாடுகளை அடைவதானது, பெருந்திட்டத்தின் கால அளவு முழுவதிலும் மகத்தான முயற்சியைக் கோரும். இருப்பினும் இவை யாவற்றையும், முயல வேண்டிய மதிப்புமிகு பேராவல்களாக நாங்கள் காண்கின்றோம். ஏனெனில், அவை கைக்கெட்டும் தூரத்தில் உள்ள இலட்சியமிகு ஆனால் மிக முக்கியமான மதிப்பீடுகளைப் பிரதிநிதிக்கின்றன.
இது தெளிவுறுத்துகிறது. அவற்றின் நடவடிக்கைகள் விரைவாக பன்மடங்காகி, ஒரு விரிவான மற்றும் வளரும் எண்ணிக்கையிலான சகோதர ஆன்மாக்களை அரவணைத்து வரும் நிர்வாக ஸ்தாபனங்களும் முகவாண்மைகளும், ஒரு சமூகத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கான அதிகரித்த திறனாற்றலை வழங்கிடக்கூடிய ஒரு குறிப்பிடத்தகும் அளவு பரிணாம வளர்ச்சியை அடையாதிருப்பின், இத்தகைய குறிக்கோள்கள் நடைமுறை நிலையில் கருதப்பட முடியாது. கற்றலுக்கான – செயல்பட, பிரதிபலிக்க, அகப்பார்வைகளைக் கிரகிக்க, மற்றும் பிற இடங்களில் வெளிப்படும் அகப்பார்வைகளை ஈர்த்துக்கொள்ள – ஓர் ஆவல், சமூகத்தின் அடித்தட்டு வரை விரிவடைந்து, எல்லா மட்டங்களிலும் பராமரிக்கப்படாது இருப்பின், இத்தகைய வளர்ச்சிக்கு பேராவல் கொள்வதற்கான சாத்தியமில்லை. போதனை பணிக்கும் மனிதவள உருவாக்கத்திற்குமான ஒரு முறைமையான அணுகுமுறை அதிகரிக்கும் அளவில் பஹாய் உலகில் வெளிப்படாது இருப்பின், இத்தகைய கணிப்புகளால் தாத்பரிக்கப்படும் முயற்சியானது, அரிதான சாத்தியம் கொண்டதாகவே இருந்திடும். இவையனைத்தும் பஹாய் சமூகம் அதன் சொந்த அடையாளம் மற்றும் நோக்கம் பற்றிய விழிப்புணர்வுக்கு ஒரு முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. சமூக நிர்மாணிப்புச் செயல்முறையில் வெளிநோக்குடன் பார்வையுடனான உறுதிப்பாடு, பற்பல இடங்களில் ஒரு நிலைப்படுத்தப்பட்ட கலாச்சார அம்சமாகியுள்ளது; அதிகரிக்கும் எண்ணிக்கையிலான சமூகங்களில், பஹாய் சமூகத்தின் உறுப்பியத்திற்கும் அப்பால், சமுதாயத்தில் உள்ளார்ந்துள்ள பெரும் பெரும் அளவு குழுக்களின் ஆன்மீக மற்றும் லௌகீக மேம்பாட்டிற்கு ஓர் உண்மையான பொறுப்புணர்வாக அது இப்போது மலர்ச்சியடைந்துள்ளது. சமுதாய நடவடிக்கையில் ஈடுபடல், சமுதாயத்தில் பரவலாக இருக்கும் சொல்லாடல்களுக்குப் பங்களித்தல் ஆகியன குறித்த நண்பர்களின் முயற்சிகள் ஒரே உலகளாவிய மாமுயல்வாக இணைந்துள்ளன. அம்முயற்சிகள் நடவடிக்கைக்கான ஒரு பொது கட்டமைப்பினால் பிணைக்கப்பட்டுள்ளதுடன் மானிடமானது ஆன்மீகக் கோட்பாடுகளின் அஸ்திவாரத்தில் தனது விவகாரங்களை ஸ்தாபித்திட உதவுவதில் கவனம் செலுத்துகின்றன. நிர்வாக ஒழுங்கமைப்புமுறையின் ஆரம்பத்திற்கு நூறு வருடங்களுக்குப் பிறகு இந்தக் கட்டத்தை அடைந்திருக்கும் -- நாங்கள் விவரித்துள்ள -- மேம்பாடுகளின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்படலாகாது. பஹாய் உலகம் தனது பெருமுயற்சிகளை, சமயத்தின் சமுதாய நிர்மாணிப்புச் சக்தியினுடைய விடுவிப்பின் அடிப்படையில் கண்ணுறுவதைச் சாத்தியமாக்கும் கடந்த இரண்டு தசாப்தங்களாக நிகழ்ந்துள்ள அசாதாரன திறனாற்றல் அதிகரிப்பினால், கடவுள் சமயமானது அதன் உருவாக்கக் காலத்தின் ஆறாவது சகாப்தத்திற்குள் பிரவேசித்துள்ளது என்பதற்கான மறுக்கவியலா அத்தாட்சிகளை நாம் காண்கின்றோம். கடந்த ரித்வானின் போது, மெய்நம்பிக்கையினால் தூண்டப்பட்டும் தங்கள் சமூகங்களுக்குச் சேவை செய்வதற்குத் தேவையான திறன்கள், திறமைகள் ஆகியவற்றை அடைந்துமுள்ள, பஹாய் நடவடிக்கைகளில் பங்கு பெறும் விரிவான எண்ணிக்கையிலானோர் குறித்த பரவலான இயல்நிகழ்வானது மாஸ்டர் அவர்களின் தெய்வீகத் திட்டத்தின் மூன்றாவது சகாப்தம் ஆரம்பித்துவிட்டது என்பதை சமிக்ஞை செய்கிறது என அறிவித்திருந்தோம்; இவ்வாறாக, ஒரு வருட திட்டமானது, அதன் தொடக்கத்திலும் இப்போது அதன் முடிவிலும் விசுவாசிகள் கூட்டத்தினால் அடையப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க முன்னேற்றங்களின் ஒரு தொகுப்பைக் குறிக்கின்றது. ஒரு புதிய மற்றும் மாபெரும் நடவடிக்கையின் நுழைவாயிலில் நிற்கும், இந்த ஐக்கியப்பட்ட நம்பிக்கையாளர் குழு, அதற்கு முன்னால் பரவலாகத் திறந்திருக்கும் சாத்தியங்களை பற்றிக்கொள்ள தயாராக இருக்கின்றது.
கண்ட ரீதியான வழிபாட்டு இல்லங்களில் கடைசியான இல்லத்தின் கட்டுமானமும் தேசிய மற்றும் உள்ளூர் மட்டங்களில் வழிபாட்டு இல்லங்களை நிர்மாணிப்பதற்கான திட்டங்களின் ஆரம்பமும் தற்போது முடிவிற்கு வரும் சகாப்தத்தின் ஒரு முக்கிய அம்சமாக, இருக்கின்றது. பஹாய் உலகம் முழுவதும் மாஷ்ரிஃகுல்-அஸ்கார் குறித்த கருத்தாக்கம் பற்றியும் அது உருவகப்படுத்தும் வழிபாடு மற்றும் சேவையின் சங்கமம் பற்றியும் பஹாய்களால் நிறையவே கற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உருவாக்கக் காலத்தின் ஆறாவது சகாப்தத்தின் போது, பக்தி வாழ்க்கையும்—அது துண்டிவிடக்கூடிய சேவையும்--செழித்தோங்கும் ஒரு சமூகத்தில் ஏற்படும் அபிவிருத்தியிலிருந்து வெளிவரும் ஒரு பாதை பற்றி மேலும் அதிகமாக கற்றுக்கொள்ளப்படும். பல்வேறு தேசிய ஆன்மீக சபைகளுடன் கலந்தாலோசனைகள் ஆரம்பித்துள்ளன; இவை தொடரும் அதே வேளை, வரும் வருடங்களில் எவ்விடங்களிலெல்லாம் பஹாய் வழிபாட்டு இல்லங்கள் நிர்மாணிக்கப்படக்கூடும் என்பது குறித்து நாங்கள் அவ்வப்போது அறிவிப்புகள் செய்வோம்.
அதிபெரும் நாமத்தின் சமூகம் நாளுக்கு நாள் வலிமையடைந்து வருவதைக் காண்பதில் எங்களுள் ஏற்படும் மகிழ்ச்சியானது, அவலத்தையும் அவநம்பிக்கைமிகு துன்பத்தையும் உருவாக்கும் சூழ்நிலைகளின் நிலைத்தன்மை மற்றும் மோதல்களினால்--குறிப்பாக, மக்கள் மீதான கொடூரங்களைச் சுமத்தும் அதே வேளை, சர்வதேச விவகாரங்களை சீர்குலைத்துள்ள அழிவுகரமான சக்திகளின் மீட்சியை அவதானிப்பதில்--எங்களில் ஏற்படும் ஆழ்ந்த துக்கத்தினால் தணிக்கப்படுகின்றது. பலவகையான சூழல்களில், பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர்கள், தங்களின் சொந்த இக்கட்டான சூழ்நிலைகள் இருப்பினும், தங்களைச் சுற்றியுள்ளோருக்கு நிவாரணமும் ஆதரவும் நல்குதவற்கான கடப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்பதை பஹாய் சமூகங்கள் பலமுறை வெளிப்படுத்தியுள்ளன என்பதை நாங்கள் நன்கறிவோம், அதனால் உறுதியும் அடைகின்றோம். ஆனால் மானிடம் ஒட்டுமொத்தமாக தனது விவகாரங்களை நீதி, உண்மை ஆகியவற்றின் அடித்தலங்களில் அமைத்துக்கொள்ள முயலாத வரை, அது, அந்தோ, நெருக்கடிக்குப் பின் நெருக்கடியாக தள்ளாடிக்கொண்டே சென்றிடும். சமீபத்தில் ஐரோப்பாவில் மூண்டுள்ள போர், எதிர்காலத்திற்கு எதாவது பாடத்தை வழங்க வேண்டுமானால், அப்போரானது உலகம் அடையவேண்டிய உண்மையான மற்றும் நிலையான அமைதிக்கான பாதை குறித்த ஓர் அவசர நினைவூட்டலாக இருக்கவேண்டும். பஹாவுல்லாவினால் தெளிவுடன் உரைக்கப்பட்ட கோட்பாடுகளும், கடந்தகால மற்றும் தற்கால ஆட்சியாளர்களின் மீது அவர் சுமத்திய கடுமையான பொறுப்புகளும் அவை முதன்முதலில் பஹாவுல்லாவின் எழுதுகோலினால் பதிவுசெய்யப்பட்டதைவிட இன்று மேலும் அதிக முக்கியத்துவமும் இன்றியமையாமையும் உடையதாக இருக்கின்றன. பஹாய்களைப் பொறுத்த வரை, மகாதிட்டத்தின் தவிர்க்கவியலா முன்னேற்றமானது, தன்னுடன் பெருஞ்சோதனையும் பேரெழுச்சிகளையும் கொண்டு வரும், ஆனால் இறுதியில் மானிடத்தை நீதி, அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கி உந்தித்தள்ளும் இந்த சூழலில்தான் நம்பிக்கையாளர்கள் தற்போது பிரதானமாக ஈடுபட்டு வரும் கடவுளின் குறுந்திட்டம் மடிப்பவிழும். இன்றைய சமுதாயத்தின் இயல்பிழந்த செயல்பாடு, சமயத்தின் சமுதாய நிர்மாணிப்பு சக்தியின் விடுவிப்பை பேரதிகமாகத் தெளிவாக்கி, அவசரமாக்குகின்றது. ஆனால் இப்போதைக்கு, கொந்தளிப்புகளும் தொந்தரவுகளும் தொடர்ந்து உலகைப் பீடித்தே வரும் என நாம் நம்பித்தான் ஆகவேண்டும்; கடவுளின் குழந்தைகள் அனைவரும் குழப்பங்களிலிருந்தும் கடுமையான துன்பங்களிலிருந்தும் நிவாரணம் பெறுவதற்காக நாம் வழங்கிடும் ஒவ்வொரு பேரார்வமிகு பிரார்த்தனையும், அமைதியின் கோமகனுடைய சமயத்திற்கு நாம் வழங்கிவரும் பெரிதும் தேவைப்படும் சேவையின் வெற்றிக்கு வழங்கிடும் அதே அளவான பேரார்வமிகு பிரார்த்தனையுடன் இணைசேர்ந்திருக்கின்றது என்பதை நீங்கள் மதித்துணர்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
பெருந்திட்டத்தின் நடவடிக்கைகள் உந்துவேகம் அடைந்து வரும் ஒவ்வொரு கிளஸ்டரிலும் 30 டிசம்பர் 2021 செய்தியில் வர்ணிக்கப்பட்ட உன்னத பண்புக்கூறுகளுடைய சமூகங்களின் அபிவிருத்தியை நாங்கள் காண்கின்றோம். சமுதாயங்கள் பல்வேறு வகையான மனவழுத்தங்களை அனுபவிக்கும் போது, அப்ஹா திருவழகின் நம்பிக்கையாளர்கள் தங்களின் மீள்ச்சித்திறம் மற்றும் பகுத்தறிதல் பண்புகளுக்காகவும் அவர்கள் நடத்தையின் செம்மையான தரத்திற்காகவும் கோட்பாடுகளைப் பற்றிக்கொள்வதிலும் மற்றும் ஒற்றுமையை நாடுவதில் அவர்கள் வெளிப்படுத்தும் கருணை, பற்றின்மை, பொறுமை ஆகியவற்றுக்காகவும் அவர்கள் மேன்மேலும் தனித்துவம் பெறவேண்டும்; பலமுறை, தீவிர சிரமங்கள் மிக்க காலத்தின் போது நம்பிக்கையாளர்கள் வெளிப்படுத்திய தனித்துவமான பண்புக்கூறுகளும் மனப்பான்மைகளும்--விளக்கத்திற்காகவும் அறிவுரைக்காகவும் ஆதரவுக்காகவும், குறிப்பாக சமுதாயத்தின் வாழ்க்கை இன்னல்களாலும் எதிர்ப்பாரா இடையூறுகளாலும் அமைதிகுலைவிற்கு ஆளாகும் போது—பஹாய்களின்பால் மக்களை திரும்பச் செய்துள்ளன. இந்த அவதானிப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில், உலகில் செயல்பட்டு வரும் சிதைவுச் சக்திகளின் விளைவுகளை பஹாய் சமூகமும் அனுபவிக்கின்றது என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். மேலும், கடவுளின் திருவாக்கை ஊக்குவிக்கும் நண்பர்களின் முயற்சிகள் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கின்றதோ, அந்த அளவுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து, விரைவாகவோ தாமதமாகவோ, அவர்கள் சந்திக்கும் எதிர்மாறான ஆற்றல்களின் சக்தியும் இருக்கும். நிச்சயமாக வரக்கூடிய சோதனைகளுக்கு எதிராக, அவர்கள் தங்களின் மனங்களையும் ஆன்மாக்களையும் பலப்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, அவை அவர்களின் பெருமுயல்வுகளின் நெறிமையை கெடுத்திடக் கூடாது. ஆனால், இனிவரும் காலங்களில் எவ்வித புயல்கள் தோன்றிடினும் சமயமெனும் கலம் அவை அனைத்திற்கும் சமசக்தி வாய்ந்ததாக இருந்திடும். அதன் பயணத்தின் அடுத்தடுத்த கட்டங்கள், அது வானிலைகளைச் சமாளித்தும், கடலலைகளின் மீது கடந்து செல்வதையும் கண்டுள்ளன. இப்பொழுது அது ஒரு புதிய தொடுவானத்தை நோக்கிச் செல்கின்றது. எல்லாம் வல்லவரின் உறுதிப்பாடுகளே அதன் பாய்களை நிரப்பும் காற்று வீச்சாக இருந்து அக்கலத்தை அதன் குறியிலக்கை நோக்கி உந்தித்தள்ளுகின்றது. திருவொப்பந்தமே அதன் துருவ நட்சத்திரமாக இருந்து, அந்தப் புனிதக் கலத்தை அதன் உறுதியானதும் நிச்சயமானதுமான செல்திசையில் செலுத்துகின்றது. விண்ணுலக சைனியங்கள் அவற்றில் பயணிக்கும் அனைவருக்கும் ஆசிகளைப் பொழிந்திடுமாக.
- The Universal House of Justice