The Universal House of Justice
Ridván 2016
To the Bahá’ís of the World
Dearly loved Friends,
அடுத்த உலகத் திட்டத்திற்கான முன்னேற்பாடுகளின் காலகட்டம், திருவிழாக்களுக்கேல்லாம் அரசனாக விளங்கிடும் விழாவின் வருகையோடு, முடிவடைகின்றது: ஒரு புதிய ஐந்து ஆண்டுக்குத் தங்களின் துணிவு, உறுதிப்பாடு, வளங்கள் ஆகியற்றினை அர்ப்பணித்திட, இப்போது நாங்கள் கடவுளின் அன்பர்களுக்கு அழைப்பாணை விடுக்கின்றோம்.
பஹாவுல்லாவின் விசுவாசப் படைப்பிரிவு தயார் நிலையில் உள்ளது. அண்மைய மாதங்களில் உலக முழுவதும் நிகழ்ந்துள்ள ஸ்தாபனக் கூட்டங்கள், இந்த வலிமைமிக்க பெருந்திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனும் ஆர்வமிகு சைகைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பி வந்துள்ளன. ஆலோசகர்களின் மாநாட்டிற்கு அனுப்பப்பட்ட செய்தியில் உள்ளடங்கியிருந்த அத்தியாவசிய அம்சங்கள் ஏற்கனவே தீர்க்கமான செயல் திட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட வீரதீர முயற்சிகள், சமூகத்தை வடிவமைத்து, வளர்ச்சியைப் பேணுவதற்குரிய ஓரளவு நிரூபிக்கப்பட்ட திறனை அதற்குத் தந்துள்ளதோடு, இத் தருணத்திற்காக அதனைத் திடப்படுத்தியுமுள்ளதுகுறிப்பாக, கடந்த இரண்டு தசாப்தங்களாக நாம் ஏக்கங்கொண்டிருந்த திறமையின் அதிகரிப்பு குறிப்பிடத்தக்க அளவில் துரிதமாக்கப்பட்டுள்ளது.
இக்காலக்கட்டத்தின் போது, பரிணாம வளர்ச்சியுறும், செயல்பாட்டிற்கான ஒரு கட்டமைப்பானது, அவசியமான திறன்களை நண்பர்கள் படிப்படியாகப் பேணி, சீர்படுத்தவும் செய்துள்ளது; இது முதலில் சாதாரண சேவைச் செயல்களை மேற்கொள்ளச் செய்து, மேலும் நுட்பமான செயல் வடிவங்களுக்குக் கொண்டு சென்று, அதன் விளைவாக இன்னும் பல்கூட்டுத் திறன்கள் மேம்படுத்தப்படுவதையும் கோருகின்றது. இவ்வழியாக, மனிதவள மேம்பாட்டுக்கும், சமூக கட்டமைப்புக்குமான ஒரு முறைமையான செயல்முறை, ஆயிரக்கணக்கான கிளஸ்டர்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது – மேலும், அவற்றில் எண்ணற்ற கிளஸ்டர்களில், அச்செயல்முறை மிகச் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தனித்தனியே, தனியொரு நம்பிக்கையாளரின் மீதோ சமூகத்தின் மீதோ, அல்லது சமய ஸ்தாபனங்களின் மீதோ உன்னிப்பான கவனம் செலுத்தப்படவில்லை; புதிய உலக அமைப்புமுறையின் பரிணாம வளர்ச்சியிலுள்ள மூன்று இணைப்பிரியா முடியாத பங்கேற்பாளர்களுமே, தெய்வீகத் திட்டத்தின் மடிப்பவிழ்வின் மூலம் விடுவிக்கப்பட்டுள்ள ஆன்மீக சக்திகளால் தூண்டல் அளிக்கப்படுகின்றன. அவற்றின் வளர்ச்சிக்கான அடையாளங்கள் மென்மேலும் தெளிவாகக் காணப்படுகின்றன: பஹாவுல்லாவின் வாழ்வு குறித்த நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளுதலிலும், அவரது திருவெளிப்பாடு, ஒப்பற்ற திருவொப்பந்தம் ஆகியவற்றின் தாத்பர்யங்களைப் பற்றி விவாதித்தலிலும் கணக்கிலடங்கா நம்பிக்கையாளர்கள் பெற்றுள்ள உறுதியான நம்பிக்கையில்; இதன் விளைவாக அதிகரித்துவரும் பெருந்திரளான ஆன்மாக்கள், அவரது சமயத்தின்பால் கவரப்பட்டு, அவரது ஒன்றிணைக்கும் அகநோக்கினைச் சாதிப்பதற்குப் பங்களிப்பதில்; நடத்தையைத் தன்மைமாற்றம் அடையச் செய்வதற்கும், சமூக வாழ்வை வடிவமைக்கக்கூடியதற்குமான ஒரு செயல்முறையில் அவர்களின் அனுபவத்தைச் சொல்திறமிக்க வகையில் வருணிக்கக்கூடிய, சமூகத்தின் அடித்தட்டிலுள்ள பஹாய்களும், அவர்தம் நண்பர்களினுடைய திறனில்; பஹாய் ஸ்தாபனங்கள், முகவாண்மைகள் ஆகியவற்றின் அங்கத்தினர்களாக, ஒரு நாட்டின் குறிப்பிடத்தக்க பெரும் எண்ணிக்கையிலான பழங்குடி மக்கள், தங்கள் சமூகங்களின் காரியங்களை வழிநடத்துவதில்; சமயத்தின் முன்னேற்றத்தைப் பேணுவதற்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும் நிதிக்கு, நம்பத்தக்க, தாராளமாக, மற்றும் தியாகவுணர்வோடு வழங்குவதில்; சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளை ஆதரிப்பதில் தனிநபரின் முயற்சிகளிலும், கூட்டு செயல்களிலும் என்றுமே கண்டிராத மலர்ச்சியில்; இப்பணிக்கு மகத்தான வீரியத்தைச் செலுத்திடும் இளம் பருவத்தின் பிரதானக் கட்டத்திலுள்ள எண்ணற்ற சுயநலமற்ற ஆன்மாக்களின் உற்சாகத்திலும், குறிப்பாக, இளைய தலைமுறையினரின் ஆன்மீகக் கல்வியளித்தலைப் பராமரித்து வருவதில்; வழக்கமான வழிபாட்டுக் கூட்டங்களின் மூலமாகச், சமூகத்தின் இறைவழிபாட்டுத் தன்மையை மேம்படுத்துவதில்; பஹாய் நிர்வாகமுறையின் எல்லா நிலைகளிலும் திறனாற்றலினை அதிகரிப்பதில்; ஸ்தாபனங்கள், முகவாண்மைகள், மற்றும் தனிநபர்கள் ஆகியோரிடையே செயல்முறை அடிப்படையில் சிந்திப்பதிலும், அவ்வப்போதுள்ள மெய்மையினைக் கண்ணுற்று, அவர்கள் வாழும் இடங்களிலுள்ள வளங்களை மதிப்பிட்டு, அவற்றின் அடிப்படையில் திட்டங்களைத் தீட்டுவதில்; உள்ளுணர்வான கற்றல் நிலையைப் பேணி, கற்றல், கலந்தாலோசித்தல், செயல்படுதல் மற்றும் பிரதிபலித்தல் எனும் இப்போது நன்கு பழகிப்போன இயக்காற்றலில்; சமூக செயல்களின் மூலம் போதனைகளுக்கு எவ்வாறு நல்விளைவை ஏற்படுத்துவது என்பது குறித்து அதிகரித்துவரும் மதிப்புயர்வில், சமுதாயத்தில் நிலவும் சொல்லாடல்களில், பஹாய் கண்ணோட்டத்தை வழங்குவதற்குப் பெருகிடும் வாய்ப்புகளை நாடி, அவற்றைப் பற்றிக்கொள்வதில்; சமயத்தினுள் உள்ளியல்பாக வீற்றிருக்கும் சமுதாய கட்டுமான சக்தியை, அதன் எல்லா முயற்சிகளிலும் வெளிப்படுத்துவதன் மூலம், தெய்வீக நாகரிகத்தின் வருகையை விரைவுபடுத்தி வரும் ஓர் உலகளாவிய சமூகத்தின் விழிப்புணர்வில்; மெய்யாகவே, உள்ளார்ந்த தன்மைமாற்றத்தைப் பேணுவதற்கும், ஒற்றுமை வட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், சேவைக் களத்தில் பிறரோடு உடனுழைப்பதற்கும் மற்றும், ஜனத்திரள்கள் தங்களின் சொந்த ஆன்மீக, சமுதாய, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு உதவுவதுமான, அவர்களின் முயற்சிகள் குறித்த நண்பர்களின் அதிகரித்திடும் விழிப்புணர்விலும் -- மற்றும், இம்முயற்சிகள் யாவற்றின் வழியாக உலகின் சீர்திருத்தத்தைக் கொண்டுவருதல் ஆகியவையே உண்மையில் சமயத்தின் நோக்கத்தையே வெளிப்படுத்துகின்றன.
எந்தவொரு தனி அளவுகோலும் பஹாய் சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை அளந்திட முடியாதபோதிலும், உலகெங்கும் ஒரு வளர்ச்சித் திட்டம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கிளஸ்டர்களின் எண்ணிக்கையிலிருந்து அதிகமாகவே நாம் யூகித்திடலாம். அப்ஹா திருவழகரினால் வழங்கப்பட்ட கொடைகளுக்கு நன்றிசெலுத்தி, அக்கிலஸ்டர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டியுள்ளது என்பதை நாங்கள் உறுதிபடுத்துகின்றோம். இத்தகையதொரு பரந்த அஸ்திவாரம், பஹாய் உலகம் எதிர்நோக்கும் பணியை மேற்கொள்வதற்கான ஒரு முன்தேவையாகும் -- அஃது ஒவ்வொரு கிலஸ்டரிலும் ஆரம்பித்துள்ள வளர்ச்சிக்கான செயல்முறையைப் பலப்படுத்தி, வளமான சமூக வாழ்வுமுறையை மேலும் விரிவுபடுத்துகின்றது. தேவைப்படும் கடும் முயற்சி மிகக் கடினமானதாகும். ஆனால், அதன் விளைவு மிகக் குறிப்பிடத்தக்கதாக ஆவதற்கும், ஒரு திருப்பமாக ஆவதற்குங் கூட சாத்தியங்களைக் கொண்டுள்ளது. சிறு காலடிகள், அவை இடைவிடாமலும், விரைவாகவும் இருக்குமேயானால், நெடுந்தொலைவை கடந்த ஒன்றாகிடும். ஆரம்பக்கட்டத்தில், ஒரு கிலஸ்டரில் அடையப்பட வேண்டிய மேம்பாட்டின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் -- உதாரணமாக, எதிர்வரும் முதலாவது இரட்டை இருநூறாம் ஆண்டுவிழாவிற்கு, முன்பான ஆறு சுழல்வட்டங்களில் — முழு ஐந்தாண்டுகளுக்குமான இலக்கைக் கைக்கெட்டுந் தூரத்திற்குக் கொண்டுவருவதற்கு நண்பர்கள் நிறையவே பணியாற்றிட வேண்டும். ஒவ்வொரு சுழல்வட்டத்திலும், முன்னோக்கிச் செல்வதற்கான, விரைந்தோடும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன; அத்தகைய விலைமதிப்பற்ற வாய்ப்புகள் திரும்பி வாரா.
அந்தோ, வெளி சமூகத்தில், தொடர்ந்து புரையோடி வரும் ஆன்மப்பிணியின் அறிகுறிகள் பன்மடங்காகியும், மோசமடைந்தும் வருகின்றன. உண்மையான பரிகாரம் இல்லாததால் உலக மக்கள், ஒரு போலி நம்பிக்கையிலிருந்து, மற்றொரு போலி நம்பிக்கைக்கு இங்கும் அங்குமாகத் திரும்பிடுகையில், நித்திய கடவுளின் மொழியோடு இதயங்களை இணைக்கும் ஒரு கருவியை நீங்கள் கூட்டாக நுணுக்கமாக்கி வருவது, எத்துனை கருத்தைக் கவர்தாக இருக்கின்றது. எங்கும் மென்மேலும் தீவிரத்துடன் வளர்ந்துவரும் மாற்றமுடியாத கருத்துகள் மற்றும் எதிர்மாறான நலன்கள் எனும் வெறுப்பூட்டும் கூச்சல்களுக்கிடையே, ஒற்றுமைக்குப் புகலிடங்களாக விளங்கும் சமூகங்களை நிர்மாணித்திடும் நோக்கோடு, மக்களை ஒன்றுதிரட்டுவதில் நீங்கள் செலுத்துகின்ற கவனம், எத்துனை ஈர்ப்பாக இருக்கின்றது. உலகின் தப்பெண்ணங்களும், பகைமைகளும் உங்களை மனமுடையச் செய்வதற்குப் பதிலாக, உங்களைச் சுற்றிலுமுள்ள ஆன்மாக்களுக்கு நீங்கள் மட்டுமே வழங்கிடக்கூடிய குணப்படுத்தும் அஞ்சனம், அவர்களுக்கு எத்துனை அவசரமாகத் தேவைப்படுகின்றது என்பதை நினைவூட்டட்டுமாக.
தொடர்ச்சியான ஐந்தாண்டுத் திட்டத்தொடர்களுள் இதுவே இறுதித் திட்டமாகும்அதன் முடிவில், தெய்வீகத் திட்டத்தின் பரிணாம வளர்ச்சியின் ஒரு புதிய கட்டம் திறக்கப்படும்; அது பஹாய் யுகத்தின் மூன்றாம் நூற்றாண்டை நோக்கி பஹாவுல்லாவின் சமூகத்தை முன்னோக்கிச் செலுத்திடும். வரவிருக்கும் மேலும் வன்மையான பணிகளுக்கான தீவிர முன்னேற்பாடுகளை, அடுத்த சில ஆண்டுகளின் வாக்குறுதியாக ஒவ்வொரு நாட்டிலுமுள்ள கடவுளின் நண்பர்கள் பாராட்டட்டுமாக. தற்போதைய திட்டத்தின் பரந்த நோக்கமானது, ஒவ்வொரு தனிநபரையும், அவரது பங்கு எத்துனை எளிமையானதாக இருப்பினும், இந்தப் பணியை அவர் ஆதரிக்க இயன்றதாக்குகின்றது. உலகங்களின் பேரன்புக்குரிய அவரை ஆராதனை செய்திடும் பெருமதிப்புக்குரிய சக-ஊழியர்களே, தெய்வீக திட்டத்தை அதன் அடுத்த இன்றியமையாத கட்டத்திற்கு முன்னேற்றிட, நீங்கள் கற்றவை அனைத்தையும், கடவுளால் வழங்கப்பட்டு, நீங்கள் பெற்றிருக்கும், சக்தி மற்றும் செயல்திறன் ஒவ்வொன்றையும் அமுலாக்குவதில், அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். தெய்வீக உதவிக்கான உங்களின் சொந்த ஆர்வமிக்க வேண்டுதல்களோடு, சகலத்தையும் தழுவிடும் இச்சமயத்திற்காக உழைத்திடும் அனைவரின் சார்பாக, நாங்கள் எங்களின் வேண்டுதல்களையும் புனித நினைவாலயங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
- The Universal House of Justice